Skip to content
Home » தலித் திரைப்படங்கள் # 19 – ‘செளரங்கா’

தலித் திரைப்படங்கள் # 19 – ‘செளரங்கா’

செளரங்கா

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுவனின் வழியாக சாதியத்தின் கொடுமையை பதிவு செய்திருக்கும் மராத்தி மொழித் திரைப்படம் ‘ஃபன்ட்ரி’. அதே பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தித் திரைப்படம் ‘செளரங்கா’ (Chauranga – 2016).

இந்தப் படத்தில் இந்தியக் கிராமங்களில் உறைந்துள்ள சாதியப் படிநிலைகளின்மூலம் நிகழும் அவலங்கள், விளிம்பு நிலையிலுள்ள சிறார்களின் கோணங்களின் வழியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சாதியத்தைப் பற்றி உரையாடும் படம் என்றாலும் எவ்வித செயற்கையான ஆர்ப்பாட்டமும் ஆவேசமும் இன்றிக் கலையமைதியுடன் படைக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநரான பிகாஸ் ரஞ்சன் மிஸ்ரா உருவாக்கியுள்ள இந்தத் திரைப்படம், 16வது மும்பை பிலிம் ஃபெஸ்டிவலில் ‘சிறந்த படத்துக்கான’ விருதைப் பெற்றது. லோகார்னோ ஃபிலிம் நடத்திய திரைக்கதையாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையில் தயாராகி, என்.எஃப்.டி.சியால் தேர்வு செய்யப்பட்டது.

ஒரு முதிராத சிறுவனின் ரகசியக் காதல்

பெயர் அறியாத ஓர் இந்தியக் கிராமம். பெயர் எதுவாக இருந்தால்தான் என்ன? ஏறத்தாழ எல்லா இந்தியக் கிராமங்களும் சாதிய நோக்கில் ஒரே மாதிரிதான் இயங்குகின்றன. தலித் குடும்பத்தைச் சேர்ந்தவன் சந்து. 14 வயது சிறுவன். வறுமை காரணமாக அவனது மூத்த சகோதரனை மட்டும்தான் வெளியூரில் அனுப்பிப் படிக்க வைக்க முடிகிறது. தானும் கல்வி கற்க வேண்டும் என்கிற ஏக்கம் சந்துவுக்கு இருந்தாலும் பன்றியைப் பாதுகாக்கும் வேலைதான் அவனுக்கு நிதர்சனமாக இருக்கிறது.

சந்துவுக்குள் ஒரு ரகசிய உலகமும் கிளர்ச்சியும் இருக்கிறது. அந்தக் கிராமத்தின் செல்வாக்குள்ள பிரமுகரின் பெண்மீது உள்ளூரக் காதலை வளர்த்துக் கொள்கிறான். முற்பட்ட சாதியைச் சேர்ந்த அவள் பள்ளிக்குச் செல்லும் போதெல்லாம் மரத்தில் ஏறி அமர்ந்து அவளை ரகசியமாகப் பார்த்து மகிழ்கிறான். அவனுடைய வறட்சியான உலகத்தில் இது மட்டுமே மகிழ்ச்சியான விஷயமாக இருக்கிறது.

தனது இளைய மகனும் கல்வி கற்க வேண்டும் என்கிற ஆசை அந்த ஏழைத் தாய்க்கு இருக்கிறது. ஒரு பிராமணப் பிரமுகரின் வீட்டில் பணி புரியும் அவள், அவருடைய மிருகத்தனமான உடலிச்சைக்காக தன்னையே தருகிறாள். மூத்த மகனின் கல்விச் செலவையும் இப்படித்தான் அவள் சமாளிக்கிறாள் என்பது தெரிகிறது. விடுமுறையையொட்டி மூத்த மகனான பஜ்ரங்கி கிராமத்துக்கு வருகிறான். தம்பியின் முதிராத காதலை அறிந்து கொள்கிறான். முதலில் கிண்டலடித்தாலும் பிறகு அதற்கு உதவ முன்வருகிறான். இதன் பயங்கரமான எதிர்விளைவுகள் பற்றி அவர்கள் அறிந்திருந்தாலும் விடலை வயதுக்குக்கே உரிய துணிச்சலுடன் செயல்படுகிறார்கள். அண்ணன் எழுதிக் கொடுத்த காதல் கடிதத்தை எடுத்துக் கொண்டு அந்தப் பெண்ணிடம் பதற்றத்துடன் தந்துவிடுகிறான் தம்பி.

இதற்கு இடையில் பிரமுகரின் மிருகத்தனமான உடலுறவைத் தாங்க முடியாமல் தாய் இறந்து போகிறாள். காதல் கடிதம் பிரமுகரின் கண்ணில் தன்னிச்சையாகப் படுகிறது. அந்த ஊரிலேயே எழுதப் படிக்கத் தெரிந்தவன் பஜ்ரங்கி என்பதால் அவனை அழைத்து வந்து காலில் போட்டு மிதிக்கிறார். தப்பியோடும் பஜ்ரங்கியை அவரது ஆட்கள் கொலைவெறியுடன் துரத்துகிறார்கள். மலையுச்சியில் பிடிபடும் அவனைக் கொல்லும் உத்தேசத்துடன் ஒரு பெரிய பாறையைத் தூக்குகிறான் ஒருவன். இவர்களிடம் தானும் பிடிபடாமல் இருக்கக் கடும் வேகத்தில் ஓடி ரயிலில் ஏறி தப்பிக்கிறான், தம்பி சந்து. படம் நிறைகிறது.

என்னது… அவ்வளவுதானா? பிரமுகரின் காம வெறியால் இறந்து போன அம்மாவிற்கு நீதி கிடைத்ததா? அடியாட்களால் பெரிய பையன் கொல்லப்பட்டானா? ரயிலில் தப்பித்த சின்னப் பையன் என்னதான் ஆனான்? எதையுமே சொல்லாமல் படம் முடிந்துவிடுகிறது. யதார்த்தத்தில் நிகழும் சாதியக் கொடுமைகளுக்கெல்லாம் நடைமுறையில் குறைந்தபட்ச நீதியாவது கிடைத்துவிடுகிறதா என்ன?

நடைமுறையில் இயங்கிக் கொண்டேயிருக்கும் சாதியம்

ஃபோர்வெல் போடும் லாரியில் ஏறி கிராமத்துக்குள் வருகிறான் பஜ்ரங்கி. பள்ளி விடுமுறைக் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சி அவனது முகத்தில் தெரிகிறது. ஆனால் அது தற்காலிகமான மகிழ்ச்சிதான். ‘நீ எப்படியடா வண்டியில் ஏறி வரலாம்?’ என்று முற்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் பஜ்ரங்கியை அடிக்கிறார்கள். அவனது டிரங்க் பெட்டியைத் தூக்கி எறிகிறார்கள். படத்தின் ஆரம்பத்திலேயே இப்படியொரு காட்சி வந்துவிடுகிறது. அண்ணன் அடிபடுவதைத் திகைப்புடன் வேடிக்கை பார்க்கிறான் சந்து.

அவர்களில் ஒருவன், சந்துவை அடிக்க வரும் போது திரும்பக் கன்னத்தில் அடித்து விட்டு ஓடி விடுகிறான். அண்ணனிடம் கோழைத்தனம் இருக்க தம்பியிடம் சற்று தன்மான உணர்ச்சி இருக்கிறது. அண்ணனுக்குள் தன்னிச்சையான கோழைத்தனத்தை ஏற்படுத்தியது எது? சாதியம்தான். தன் மீது தவறே இல்லையென்றாலும் சாதியம் தாக்கும் போதெல்லாம் மௌனமான அலறலுடன் சகித்துக் கொள்ளவேண்டும் என்றே ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் காலம் காலமாகப் புகட்டப்பட்டிருக்கிறது.

பிரமுகரைச் சந்திக்க நேரும் போதெல்லாம் “அவருடைய காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குங்கள்’ என்று தன்னுடைய மகன்களுக்கு உபதேசித்துக் கொண்டேயிருப்பாள், தாய். கல்விச் செலவுக்கு அவர் உதவுவார் என்கிற எண்ணம்தான். பஜ்ரங்கி அவருடைய காலில் விழுவதற்காக குனியும் போது, அவனுடைய கை பட்டு விடக்கூடாது என்பதற்காக விலகி நிற்பார், பிரமுகர். இத்தனை ஆச்சாரம் பார்க்கும் அவர், சிறுவர்களின் ஏழைத் தாயை மட்டும் ரகசிய இரவுகளில் ஆவேசமாக தழுவிக் கொள்வார். பிரமுகரிடம் உதவியாளராக வேலை செய்யும் சாதியத் திமிர் கொண்ட இளைஞன் கூட சிறுவர்களை முரட்டுத்தனமாக அடித்து துரத்துவானே ஒழிய, அவர்களின் அம்மாவை காம இச்சையுடன் பார்த்துக் கொண்டேயிருப்பான். உடல் இச்சைக்கு முன்னால் மட்டும் சாதியும் ஆச்சாரமும் காணாமல் போய் விடும் விந்தையை இது தொடர்பான காட்சிகள் பதிவு செய்திருக்கின்றன.

விளையாட்டுப் போக்கில் கோயிலுக்குள் நுழைந்துவிடும் ஒரு தலித் சிறுவனை, முற்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் துரத்திப் பிடிக்கிறார்கள். அவனை கிணற்றுக்குள் தள்ளி விடுவது போல பயமுறுத்துகிறார்கள். ஒரு நிலையில் சிறுவன் கிணற்றுக்குள் விழுந்து விடுகிறான். உதவி ஏதும் செய்ய முன்வராமல் அவர்கள் பயந்து ஓடி விடுகிறார்கள். அதிர்ஷ்டவசமாக சிறுவனின் உயிர் போகாமல் கால் மட்டும் உடைந்துவிடுகிறது. அதைப் பற்றி அலட்டிக் கொள்ளாத பிரமுகர், கிணற்றுக்கு தீட்டு கழிக்கும் சடங்கை மட்டும் செய்யச் சொல்கிறார். கண்ணுக்குத் தெரியாத சாதிக்கு முன்னால் மனித உயிர் எத்தனை மலினமாக பார்க்கப்படுகிறது என்பதற்கான உதாரணக்காட்சி இது.

ஆர்ப்பாட்டம் அல்லாத இயல்பான திரைக்கதை

‘கதையிலிருந்து கதையை வெளியே எடுத்துவிடவேண்டும். அதுதான் நல்ல படைப்பு’ என்பார் எழுத்தாளர் சா. கந்தசாமி. அது போல இந்தத் திரைப்படத்தில் நிதானமாக நகரும் காட்சிகள், எந்தவொரு செய்தியையும் வலிந்து நமக்குள் கடத்தவில்லை. செயற்கைத்தனமாக எதையும் புகட்டவில்லை. தன்னாலேயே நகர்ந்து போகும் காட்சிகளின் மூலம் நாமாகவே சாதியத்தின் கொடுமையை உணர்ந்து கொள்ளும் வகையில் நுட்பமான திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

பிராமணப் பிரமுகராக சஞ்சய் சூரி அற்புதமாக நடித்திருந்தார். சாதியத் திமிர் கொண்டவர் என்பதற்காக இவர் கொடூரமான வில்லன் போல சித்தரிக்கப்படவில்லை. தலித் சிறுவர்களைக் கண்டதும் அருகில் அழைத்து அன்பாக விசாரிக்கிறார். ‘போய் இனிப்பு சாப்பிடுங்கள்’ என்று பாசத்துடன் உபசரிக்கிறார். நீர்க்குழாய் நிறுவப்பட்டதற்காக ஊர் மக்களுக்கு விருந்து அளித்து திரைப்படத்தைக் காண்பிக்கிறார். புறச் செயல்பாடுகளில் ‘பெரிய மனிதராக’ தோற்றமளித்தாலும் அவரது அகம் சாதியத் திமிரும் பெருமிதமும் கொண்டிருப்பதை உணர முடிகிறது.

தாளத்துக்காக நடனமாடும் சுயசாதி இளைஞனை தடுத்து நிறுத்தி ‘தெருவில் ஆடுவதா… உன் வேலை?’ என்று கண்டிக்கும் பிரமுகர், பஜ்ரங்கியை அன்புடன் அழைத்து பாடச் சொல்கிறார். தெருவில் ஆடிப்பாடுவதெல்லாம் குறிப்பிட்ட சமூகத்தினருக்கானது என்று அவருக்குள் இருக்கும் மனப்பதிவு நுட்பமாக உணர்த்தப்படுகிறது.

அண்ணன் பஞ்ரங்கியாக ரித்தி சென், தம்பி சந்துவாக சோஹம் மைத்ரா என்று இரு சிறுவர்கள் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக சன்ட்டுவாக நடித்த சிறுவனின் முகபாவங்கள் அற்புதமாக இருக்கின்றன. நகர்ந்து செல்லும் ரயில் பெட்டிகளை எண்ணுவதில் தன் கல்வியறிவின்மையைக் காட்டும் தம்பியை அண்ணன் கிண்டலடிக்கிறான். ஆனாலும் தம்பியும் கல்வி கற்க வேண்டும் என்கிற செய்தியை மறைமுகமாக உபதேசித்தபடியே இருக்கிறான். தான் விரும்பும் பெண்ணுக்குக் காதல் கடிதம் எழுத விரும்பும் தம்பிக்கு ‘நான்கு நிற மை’ உள்ள பேனாவின் மூலம் கடிதம் எழுதித் தந்து உதவுகிறான்.

பிரமுகரின் கண்பார்வையற்ற தந்தையும் சாதியப் பிடிமானம் கொண்டவராக இருக்கிறார். ஆசையாக வளர்க்கும் ஆட்டுக்கு இரவு நேரத்தில் தட்டுத் தடுமாறிச் சென்று உணவு அளித்து மகிழ்கிறார். உடல்பலம் குன்றி அங்கு ஒடுங்கியிருக்கும் பன்றியைக் கைத்தடியால் ஆத்திரத்துடன் அடித்து காயப்படுத்துகிறார். பன்றி குட்டி போட்டால் தனது வருமானத்துக்கு ஆகுமே என்று எதிர்பார்க்கும் தாய், பன்றி அடிபட்டிருக்கும் செய்தி கேட்டு அழுகிறாள். கண்பார்வையற்ற முதியவரைப் பின்னாலேயே தொடர்ந்து செல்லும் சந்து, அவரை அறைக்குள் வைத்து தாழிட்டு விட்டு கோயிலுக்கு முன்னால் உள்ள நந்தியின் மீது ஏறி அமர்ந்து மகிழ்கிறான்.

மௌனமாக நகரும் காட்சிகளை அடுக்குவதின் மூலம் கிராமங்களில் உறைந்துள்ள சாதியத்தின் கொடூரத்தை உணர்த்தியபடியே செல்கிறார் இயக்குநர் பிகாஸ் ரஞ்சன் மிஸ்ரா. ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு போன்ற தொழில்நுட்பங்கள் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தன்னுடைய அமைதியான குரலின் வழியாக சாதியத்துக்கு எதிரான வலிமையான போர்க்குரலை எழுப்பியிருக்கிறது ‘சௌரங்கா’. இந்தியக் கிராமங்களில், பிராமண – தலித் உறவுகளில் தலித் மக்கள் எவ்வாறெல்லாம் சுரண்டப்படுகிறார்கள் என்பதைக் கலையமைதியுடன் பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படம், தலித் சினிமாக்களின் வரிசையில் ஒரு முக்கியமான ஆவணம்.

(தொடர்ந்து பேசுவோம்)

பகிர:
சுரேஷ் கண்ணன்

சுரேஷ் கண்ணன்

உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை தொடர்ச்சியாக எழுதி வருபவர். அழகியல் சார்ந்த ரசனையோடு சினிமாவைப் பற்றிய உரையாடலைப் பல ஆண்டுகளாக நிகழ்த்துபவர். குமுதம், தீராநதி, உயிர்மை, காட்சிப்பிழை, அம்ருதா, பேசும் புதியசக்தி போன்ற இதழ்களில் எழுதியிருக்கிறார். விகடன் இணையத்தளத்தில் ‘பிக் பாஸ் நிகழ்ச்சி’ பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *