‘சாதியை ஒழிக்கவேண்டுமென்றால் அகமண முறையை ஒழிக்க வேண்டும்’ என்றார் அம்பேத்கர். ஒரே குழு அல்லது சாதிக்குள்ளேயே திருமணம் செய்யும் அகமண வழக்கம்தான், சாதி தோன்றுவதற்கும் அது தொடர்ந்து நீடிப்பதற்கும் இறுகி கெட்டி தட்டிப் போயிருப்பதற்கும் காரணம் என்பது அம்பேத்கரின் பார்வை. ‘இந்தியாவில் சாதிகள்’, ‘சாதியை அழித்தல்’ தொடர்பான கட்டுரைகளில் இந்தக் கருத்தை அவர் விரிவான ஆய்வு மற்றும் தரவுகளுடன் எழுதியிருக்கிறார்.
அகமண முறை குறையவேண்டுமென்றால் காதல் திருமணங்கள் நிறைய நடைபெற வேண்டும். அவை சமூகத்தால் இயல்பாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இந்த நோக்கில் நாம் கடந்து வந்திருக்கும் பாதை மிகக் குறைவு. இந்த நவீன நாகரிக காலத்திலும் நமக்குள் புறவயமான மாற்றங்கள் கணிசமாக நிகழந்துள்ளதே தவிர அகவயமான மாற்றங்கள் அதிகம் நிகழவில்லை. நவீனமான ஆடைகளை அணிந்துள்ளோமே தவிர உள்ளுக்குள் பழமைவாதிகளாகவே இருக்கிறோம்.
இன்றைக்கும் கூட காதல் என்பது கெட்ட வார்த்தையாகவும் அதிர்ச்சி தரும் விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. காதல் திருமணங்களுக்கு சாதி, மதம், வர்க்கம், நிறம், தோற்றம், சமூக அந்தஸ்து என்று எத்தனையோ விஷயங்கள் தடைக்கற்களாக இருக்கின்றன. நமக்குள் உறைந்திருக்கும் பழமைவாதம் காரணமாக எத்தனையோ காதல்கள் நிறைவேறாமலேயே மடிந்துபோகின்றன. அல்லது ஆணவக் கொலைகளாக மாறி சாகடிக்கப்படுகின்றன. பல தடைகளுக்குப் பிறகு காதல் திருமணம் செய்தவர்கள், அவர்களின் சுற்றத்தார்களால் நிராகரிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.
காதலுக்குத் தடையாக நிற்கும் சாதியம்
சாதியும் மதமும் காதலுக்கு எதிராக நிற்பதை பல இந்திய சினிமாக்கள் தொடர்ந்து உரையாடி வந்திருக்கின்றன. உண்மையில் பெரும்பாலான திரைப்படங்களின் அடிப்படைக் கச்சாப்பொருளே காதல்தான். இதில் பல படைப்புகள் வணிகநோக்குடன் ஜனரஞ்சக அம்சங்களால் நிறைந்திருந்தாலும், சில திரைப்படங்கள் சமூகத்தின் மீதான உண்மையான கரிசனத்துடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
2018-ல் வெளியான C/o Kancharapalem என்கிற தெலுங்குத் திரைப்படம் வெவ்வேறு வயதுகளில், நிலைகளில் உள்ள நான்கு காதல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றில் இதர காதல்கள் சாதி, மதம் உள்ளிட்ட காரணங்களால் கருகிப் போய் விடுகின்றன. மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு ஒன்று மட்டும் நிறைவேறுகிறது. இந்தப் பயணத்தை மிக மிக இயல்பான தொனியில், யதார்த்தமான மனிதர்களை வைத்து காட்சிப்படுத்தியுள்ளார் அறிமுக இயக்குநரான வெங்கடேஷ் மஹா. பல திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளைப் பெற்றதோடு வணிகரீதியான வெற்றியையும் இந்தப் படம் அடைந்திருக்கிறது.
சினிமாவுக்கோ நடிப்புக்கோ அறிமுகமே இல்லாத எண்பது நடிகர்கள் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். சாதி, மதம் உள்ளிட்ட பல காரணிகள் காதலுக்கு தடையாக நிற்பது மிக நுட்பமாகவும் இயல்பாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு காட்சியிலும் மிகையோ, முகத்தில் அறைந்து செய்தி சொல்லும் ஆவேசமோ இல்லை. இந்த இயல்பான தொனியே இந்தப் படத்துக்கு வசீகரமானதொரு நிறத்தைத் தந்திருக்கிறது.
நான்கு காதல்கள் – தடையாக நிற்கும் சமூகக் கருவிகள்
காதல் ஒன்று: பள்ளிக்கூடத்தில் படிக்கும் சிறார்களின் முதிராத காதல் இது. முதிராதது என்றாலும் அதுவும் காதல்தானே? தன்னுடன் படிக்கும் மாணவியான சுனிதாவின் மீது இனம் புரியாத நேசத்தை வளர்த்துக் கொள்கிறான் சுந்தரம். தன்னுடைய அன்பைச் சொல்வதற்கு மிகவும் தயங்குகிறான். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே களங்கமற்ற நட்பு வளர்கிறது. ஆனால் பழமைவாத மனம் கொண்ட சிறுமியின் தந்தையால் இவர்களுக்குள் பிரிவு நேர்கிறது. மனம் உடைந்து போகும் சுந்தரம் செய்யும் செயல், அவனுடைய குடும்பத்தின் ஆணி வேரையே அசைத்துப் போடுகிறது.
காதல் இரண்டு: அடியாளாக இருக்கும் இளைஞன் ஜோசப். சுயமரியாதையும் துணிச்சலும் கொண்ட பெண் பார்கவி. வழக்கம் போல் இவர்களின் உறவு மோதலில்தான் துவங்குகிறது. ஜோசப்பின் ரவுடித்தனத்தை ஆவேசமாகக் கண்டிக்கிறாள் பார்கவி. ஆனால் ஜோசப்பின் உதவியைப் பெற வேண்டிய சூழல் பார்கவிக்கு ஏற்படுகிறது. இருவருக்குமான நட்பு துவங்கி காதலில் முடிகிறது.
பிராமணப் பெண்ணும் கிறிஸ்துவ இளைஞனும் காதல் கொண்டால் என்னவாகும்? அதேதான். பார்கவி தன்னுடைய காதலில் உறுதியாக நின்றாலும் ‘தற்கொலை செய்வேன்’ என்கிற தந்தையின் உணர்ச்சிகரமான மிரட்டல் காரணமாகத் தன்னுடைய காதலுக்கு தானே சமாதி கட்டுகிறாள். பார்கவிக்காக ரவுடித்தொழிலை விட்டு விட்டுத் திருந்தி வாழ ஆரம்பித்திருக்கும் ஜோசப்புக்குக் கண்ணீர் மட்டுமே துணையாக மாறுகிறது.
காதல் மூன்று: மதுக்கடையில் பணிபுரிபவன் கத்தம். முகத்தை மறைத்தபடி தினமும் மதுவாங்க வரும் ஒரு பெண்ணிடம் அவளுடைய கண்களைப் பார்த்தே காதல் கொள்கிறான். முகமே அறியாத அவளின் மீது காதலை தீவிரமாக வளர்த்துக் கொள்கிறான். தன்னுடைய காதலைப் பரிசுத்தமானதாகவும் புனிதமானதாகவும் கருதுகிறான். தன்னால் காதலிக்கப்பட்டவள், ஒரு பாலியல் தொழிலாளி என்பதை பிறகு அறிந்தாலும் கூட இவனுடைய காதலில் மாற்றமில்லை. இந்தக் காதலை முதலில் மறுக்கிறாள் சலீமா. ஆனால் உடலாக மட்டுமே தன்னைப் பார்க்கும் ஆண்களுக்கு மத்தியில் உள்ளத்தை மட்டும் பார்ப்பவனின் மீது பதிலுக்கு காதல் கொள்கிறாள். இருவரும் மணம் புரிய உத்தேசிக்கிறார்கள். வேறென்ன? அதேதான். மதம் என்கிற காரணி இவர்களின் காதலை மிகக் கொடூரமாக நசுக்கிப் போடுகிறது.
காதல் நான்கு: ஐம்பது வயதைக் கடந்து கொண்டிருப்பவர் ராஜு. இன்னமும் திருமணம் ஆகவில்லை. இதனாலேயே ஊராரின் கிண்டல்களை, மலினமான கேலிகளை தினமும் எதிர்கொள்கிறவர். அரசு அலுவலகத்தில் பியூனாகப் பணிபுரிகிறவர். ராதா என்று ஒரு புதிதான மேலதிகாரி வருகிறார். ஒடிசாவைச் சேர்ந்தவர். ராஜுவின் நல்லியல்புகள், வெள்ளந்தியான தன்மை போன்றவை ராதாவை மிகவும் கவர்கின்றன. கணவனை இழந்த ராதா, தன் திருமண விருப்பத்தை ராஜுவிடம் தெரிவிக்கிறார். முதலில் குழம்பும் ராஜு பிறகு சம்மதிக்கிறார். ‘என்னது, ஐம்பது வயதில் காதல் திருமணமா?’ என்று இதற்கும் பழமைவாத சமூகம் தடையாக நிற்கிறது. பல போராட்டங்களுக்குப் பின்பு இந்தக் காதலால் மட்டுமே இணைய முடிகிறது.
‘நீங்கள் ஏன் இத்தனை வயது வரை திருமணமே செய்து கொள்ளவில்லை?’ – ஊரார் அதுவரை கேட்டு வந்த அதே கேள்வியை ராதாவும் திருமணத்துக்குப் பிறகு இயல்பாக கேட்கிறாள். வழக்கமாக இந்தக் கேள்வி ராஜுவுக்கு எரிச்சலைத்தான் தரும். ஆனால் கேட்பது ஆசை மனைவியாயிற்றே? ராஜு சொல்லும் அந்தப் பதில்தான், நான்கு காதல்களையும் ஒன்றிணைத்து இநதத் திரைப்படத்தை முழுமையாக்குகிறது.
இயல்பான மனிதர்களின் கதையில் உருவான திரைப்படம்
கஞ்சரபாலம் என்பது விசாகப்பட்டினத்திலுள்ள ஒரு பழமையான குடியேற்றப் பிரதேசம். வெவ்வேறு சமூகத்தினர்கள் வாழும் பகுதிகளாக இது பிரிந்திருக்கிறது. தொன்மையின் வாசனை இன்னமும் மாறாமலிருக்கும் இந்த இடத்தின் பின்னணி மற்றும் மனிதர்களைக் கொண்டுதான் இந்தத் திரைப்படம் முழுமையாக உருவாகியிருக்கிறது.
பட்டப்படிப்பைத் தொடர முடியாமல் வேலை தேடுவதற்காக விசாகப்பட்டினம் சென்ற மஹாவுக்கு, காஞ்சரபாலத்தில் சில மாதங்களுக்கு தங்கும்படியான சூழல் நேர்ந்திருக்கிறது. உள்ளூர் மக்களின் கலாசாரம், நடவடிக்கை, உடல்மொழி போன்றவற்றைத் தன்னிச்சையாக அவர் கவனித்துப் பார்த்திருக்கிறார். ஏழு வருடங்கள் கழித்து தன் பழைய நண்பர் ஒருவரைப் பார்ப்பதற்காக மீண்டும் அங்கு சென்ற மஹா, அங்குள்ள மக்களிடம் பேசி சில கதைகளைக் கேட்டறிகிறார். இந்த அனுபவம் ஒரு சினிமாவை உருவாக்கும் எண்ணத்தை அவரிடம் விதைத்திருக்கிறது.
அமெரிக்க வாழ் இந்தியரான பிரவீணா, தயாரிப்புப் பொறுப்பினை உற்சாகமாக ஏற்றுக்கொண்டதால் இந்தத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறுகிறது. சுருக்கமான பட்ஜெட்டில் மஹா திட்டமிட்டாலும், படத்தின் தொழில்நுட்பத் தரம் சிறப்பாக அமைவதற்கான பச்சைக்கொடியை பிரவீணா காட்டியிருக்கிறார். இந்தப் படத்தில் ‘சலீமா’ என்கிற பாலியல் தொழிலாளி பாத்திரத்தையும் பிரவீணா ஏற்றிருக்கிறார். டப்பிங் செய்தால் உள்ளூர் மொழியின் அசலான தன்மை ஒலிக்காது என்பதால் லைவ் சவுண்ட் நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
சினிமா வாசனையே இல்லாத இயல்பான முகங்கள், காட்சிகள், சித்திரிப்புகள்தான் இந்தப் படத்தின் பெரிய பலம் எனலாம். இந்த நான்கு காதல்களில் ராஜு – ராதாவின் நடுத்தர வயதுக் காதல் பயணம் மிக சுவாரசியமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஐம்பது வயதைக் கடந்தும் திருமணம் ஆகாத ராஜு ஊராரின் கேலிக்கு ஆளானாலும் மனிதர்களைத்தான் நம்புகிறார். இவரும் ராதாவும் கோயிலுக்குச் செல்லும் போது ‘உள்ளே வாருங்கள்’ என்று ராதா அழைக்க, ‘எனக்கு கடவுள் நம்பிக்கையில்லை. மாறாக மனிதர்களை நம்புகிறேன். என்னுடைய நல்ல மற்றும் கெட்ட தருணங்களில் துணை நிற்பவர்கள் அவர்களே’ என்று ராஜூ சொல்லும் காட்சி சிறப்பானது.
நடுத்தர வயது மனிதராக ராஜூவின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. ராதாவாக நடித்த பெண்மணியின் நடிப்பு அத்தனை இயல்பாக இருக்கிறது.
சுந்தரத்துக்கும் சுனிதாவுக்கும் இடையிலான பள்ளி வயதுக் காட்சிகளும் மிக சுவாரசியமாக அமைக்கப்பட்டுள்ளன. ஒரு பெண்ணின் கண்களைப் பார்த்து, புனிதமான காதலை வளர்த்துக் கொள்ளும் இளைஞனின் காதல் திகைக்க வைக்கிறது. தந்தையின் உணர்ச்சி சார்ந்த மிரட்டல் காரணமாக, தன் காதலின் மீது மௌனமான தீயை வளர்த்துக் கொள்ளும் பார்கவியின் துயரம் நமக்குள்ளும் பரவுகிறது. ஜோசப்பின் நிலைமையைப் பார்த்து பரிதாபம் ஏற்படுகிறது.
சுந்தரத்தின் தந்தை பொம்மைகள் செய்யும் கலைஞனாக இருக்கிறார். சரியாகப் பேச்சு வராவிட்டாலும் தன்னுடைய தொழிலில் அசாதாரணமான திறமையைக் கொண்டிருக்கிறார். சுயமரியாதையுணர்ச்சியுடன் பணியிடத்தில் இருந்து வெளியேறி, தன் சேமிப்பு அத்தனையையும் பணயம் வைத்து இவர் செய்யும் ஒரு முயற்சி கலைந்துபோனதைக் கண்டு வாய் விட்டு அழுகிறார். இந்தப் பாத்திரத்தில் நடித்த ராம்குமாரின் நடிப்பு அருமையாக இருக்கிறது.
காதல் திருமணங்கள் நிகழாமல் இருப்பதற்கு சாதி, மதம் உள்ளிட்ட சமூகத்தின் பல பழமைவாதக் கருவிகள் எத்தனை பெரிய தடையாக இருக்கின்றன என்பதை இந்தப் படம் மிக நுட்பமாகவும் மெல்லிய நகைச்சுவையுடனும் இயல்பான தொனியிலும் விவரிக்கிறது. அந்த வகையில் ஒரு கவனிக்கத்தக்க ‘சாதியெதிர்ப்புத்’ திரைப்படமாக C/o Kancharapalem-ஐச் சொல்லலாம்.
(தொடர்ந்து பேசுவோம்)