Skip to content
Home » தலித் திரைப்படங்கள் # 22 – அங்கூர்

தலித் திரைப்படங்கள் # 22 – அங்கூர்

அங்கூர்

இந்தியாவில் மாற்றுச் சினிமா இயக்கத்தை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர் ஷியாம் பெனகல். அவர் இயக்கிய முதல் திரைப்படம் ‘அங்கூர்’. அனந்த் நாக், ஷபனா ஆஸ்மி, பிரியா டெண்டுல்கர் ஆகியோர் அறிமுகமான திரைப்படமும் கூட. வணிகச் சினிமாக்களுக்கு மாற்றாக, புதிய அலை திரைப்படங்கள் இந்தியாவில் உதயமாகிக் கொண்டிருப்பதின் முக்கிய அடையாளமாக விளங்கிய ‘அங்கூர்’ திரைப்படம், 1974-ல் வெளியானது.

நிலப்பிரபுத்துவ மனோபாவத்துக்குள் சாதியம், அதிகாரம், ஒடுக்குமுறை, ஆணாதிக்கம், உழைப்புச் சுரண்டல், பெண்ணுடல் மீதான பாலியல் அத்துமீறல் போன்ற அத்தனை அடையாளங்களும் உறைந்துள்ளன. ஒரு நவீன இளைஞனுக்கு சாதி மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும் அவனுக்குள் உறைந்துள்ள ஆதிக்க மனோபாவம் எப்படி தன்னிச்சையாக வெளிப்படுகிறது என்பதை இந்தத் திரைப்படம் நுட்பமாகவும் கலையமைதியுடனும் பதிவு செய்திருக்கிறது.

நிலப்பிரபுத்துவ மனோபாவமும் பெண்ணுடல் மீதான சுரண்டலும் அதுவரை கறுப்பு வெள்ளையாகவே சினிமாக்களில் சித்திரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஒரு கொடுமைக்கார ஜமீன்தாரிடம், அடித்தட்டு மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நிலைமை மிகையுணர்ச்சியுடன் பதிவாகிக் கொண்டிருந்தது. இந்தப் பாணியிலிருந்து முற்றிலும் விலகி இந்த கருப்பொருளுக்குள் மனித உணர்ச்சிகள் எவ்வாறு விலகியும் இயைந்தும் இயங்குகிறது என்பதை ‘அங்கூர்’ திரைப்படம் மிக நுட்பமாகவும் கலைநயத்துடனும் பதிவாக்கியிருக்கிறது.

அங்கூர் – தலித் சினிமாவின் முன்னோடித் திரைப்படம்

கிராமத்தில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் லஷ்மி. அவளுடைய கணவனுக்கு வாய் பேச முடியாது; காதும் கேட்காது. எடுபிடி வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறான். நல்லவன்தான் என்றாலும் குடிதான் அவனுக்கு இருக்கிற பெரிய கெட்ட பழக்கம். குடும்பம் வறுமையில் தள்ளாடிக் கொண்டிருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து குடிக்கும் அவனை, லஷ்மி அவ்வப்போது கடிந்து கொள்கிறாள். லட்சுமிக்குள் இருக்கும் பெரிய மனக்குறை குழந்தை இல்லாததுதான். இதற்காகப் பல வேண்டுதல்களை நிறைவேற்றுகிறாள்.

நிலச்சுவான்தாரின் மகன் சூர்யா. ஹைதராபாத்தில் உள்ள பள்ளியில் படிப்பை முடித்து விட்டு மேற்படிப்பைத் தொடர நினைக்கிறான். கண்டிப்பான தந்தையிடமிருந்து விலகியிருப்பதுதான் அவனுடைய நோக்கமே ஒழிய, படிப்பில் பெரிதாக ஆர்வமில்லை. அவனைச் சரியாகப் புரிந்து வைத்திருக்கும் தந்தை, கிராமத்திலுள்ள நிலங்களைக் கவனித்துக் கொள்வதற்காக அனுப்பிவைக்கிறார். வேண்டாவெறுப்பாக கிராமத்துக்கு வரும் சூர்யா, தனது அதிகாரத்தை நிலைநாட்டத் துவங்கி ஊர் மக்களின் மறைமுக வெறுப்பைச் சம்பாதிக்க ஆரம்பிக்கிறான்.

சூர்யாவின் வீட்டில்தான் லஷ்மி பணிபுரிகிறாள். அவள் மீது மெள்ள ஈர்ப்பு கொள்ள ஆரம்பிக்கிறான் சூர்யா. லஷ்மியின் கணவன் இல்லாத நேரத்தில் அவளை நெருங்கித் தன் விருப்பத்தைத் தெரிவிக்கிறான். முறைப்புடன் அதை மறுத்து விலகுகிறாள் லஷ்மி. மரத்திலிருந்து கள்ளைத் திருடி குடிக்கும்போது லஷ்மியின் கணவன் பிடிபட்டு விடுகிறான். தலையை மொட்டையடித்து கழுதை மேல் ஊர்வலமாகச் செல்லும் தண்டனையை ஊரார் அவனுக்குத் தருகிறார்கள். அவமானமாக உணரும் லஷ்மியின் கணவன், ஊரை விட்டு ஓடி விடுகிறான்.

லஷ்மியின் கணவன் ஊரை விட்டுஓடுவது சூர்யாவுக்கு வசதியாகப் போய்விடுகிறது. தன்னுடைய விருப்பத்தை லஷ்மிக்கு இன்னமும் அழுத்தமாகத் தெரிவிக்கிறான். கணவன் ஓடி விட்டது, குழந்தை இல்லாத நிலை, வருங்காலம் குறித்த அச்சம் ஆகிய குழப்பங்களால் இருக்கும் லஷ்மி, சூர்யாவின் விருப்பத்துக்குத் தன்னிச்சையாக இணங்குகிறாள். இதனால் கர்ப்பமும் அடைகிறாள். அந்தப் பொறுப்பை ஏற்க விரும்பாத சூர்யா, ‘குழந்தையை கலைத்து விடு’ என்கிறான்.

இந்த நிலையில் சூர்யாவின் புது மனைவி கிராமத்து வீட்டுக்குள் வருகிறாள். லஷ்மியின் இருப்பு, ஊராரின் புறணி போன்ற காரணங்களால் லஷ்மியை வெறுக்கிறாள். லஷ்மியை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்து ஒரு கட்டத்தில் வெற்றி பெறுகிறாள். சில மாதங்கள் கழித்து லஷ்மியின் கணவன் எங்கிருந்தோ திரும்பி வருகிறான். குடிப்பழக்கத்தை விட்டு சிறிது பணம் சம்பாதித்திருக்கிறான். லஷ்மி கர்ப்பிணியாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறான். ஆனால் லஷ்மியோ குற்றவுணர்வில் அழுகிறாள். ‘முதலாளியிடம் மீண்டும் வண்டியோட்டும் வேலையைக் கேட்கிறேன்” என்று மனைவியிடம் சொல்லி விட்டு சூர்யாவை நோக்கி வேகமாக வருகிறான், லஷ்மியின் கணவன்.

தனக்கும் லஷ்மிக்கும் உள்ள தொடர்பையொட்டி அவளுடைய கணவன் தன்னை அடிக்கத்தான் வருகிறான் என்று தவறாகப் புரிந்து கொள்ளும் சூர்யா, ஆட்களை வைத்துக் கட்டிப் போட்டு சாட்டையால் அவனைப் பலமாகத் தாக்குகிறான். இதைக் கண்டு பதறியோடி வரும் லஷ்மி, சூர்யாவைக் கண்ணீருடன் சபித்துவிட்டு கணவனைத் தாங்கியபடி திரும்பிச் செல்கிறாள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் ஓர் அடித்தட்டுச் சிறுவன், சூர்யாவின் வீட்டின் மேல் கல்லெறிந்து விட்டு ஓடும் காட்சியோடு படம் நிறைகிறது.

வறுமையும் நிலப்பிரபுத்துவ மனோபாவமும்

இந்தத் திரைப்படத்தில் பிரதான பாத்திரங்களான சூர்யா மற்றும் லஷ்மி ஆகிய இரண்டும் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சூர்யா நகரத்தில் படித்த நவீன இளைஞன். ‘எனக்கு சாதியில் நம்பிக்கையில்லை’ என்று சொல்லும் சூர்யா, வீட்டு வழக்கத்துக்கு மாறாக லஷ்மி தயார் செய்யும் உணவை மறுக்காமல் ஏற்கிறான். பிராமணர் வீட்டில் தயாரிக்கப்படும் உணவு வருவதுதான் அதுவரையான வழக்கம்.

‘சாதியில் நம்பிக்கையில்லை’ என்று சொன்னாலும் ஊறியிருக்கும் நிலப்பிரபுத்துவ மனோபாவம் அவனுடைய உடல்மொழியிலும் செயல்களிலும் பொங்கி வழிந்தபடியே இருக்கிறது. சூர்யாவின் அப்பாவுக்கு இன்னொரு குடும்பம் கிராமத்தில் இருக்கிறது. அவர்களின் வாழ்வாதாரத்துக்காக விவசாய நிலத்தைத் தந்திருக்கிறார். அந்த நிலத்துக்குப் பாயும் நீரைத் தடுத்துவிடுகிறான் சூர்யா. அப்பாவின் மீது அச்சம் இருந்தாலும் அவருடைய இரண்டாவது குடும்பத்தை அடியோடு வெறுக்கிறான்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த லஷ்மி தயாரித்து தரும் உணவை தயக்கமின்றி சூர்யா ஏற்பது, சாதியின் மீதான நம்பிக்கையின்மையினாலா… லஷ்மியின் மீதான காமம் கண்ணை மறைக்கிறதா என்கிற கேள்வியும் எழுகிறது. முறையான திருமணத்தைத் தாண்டி, வேறு பல உறவுகளை வைத்திருப்பது நிலச்சுவான்தார்களின் சமூக அந்தஸ்தாகவே ஒரு காலத்தில் கருதப்பட்டிருக்கிறது. என்றாலும், தன்னுடைய இரண்டாவது குடும்பத்துக்குச் சொத்து தருவதின் மூலம் அதற்கான மறைமுக அங்கீகாரத்தையும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார், சூர்யாவின் அப்பா. ஆனால் சூர்யாவோ லஷ்மியின் மீதான நேசத்தையும் அதன் விளைவையும் பொதுவில் ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை. லஷ்மி கர்ப்பம் என்பதை அறிந்தவுடன் ‘குழந்தையைக் கலைத்து விடு. நீ வெளியில் சொன்னாலும் அந்தப் புகாரை நான் மறுத்து விடுவேன்’ என்று கெஞ்சலும் மிரட்டலுமாகச் சொல்கிறான் சூர்யா.

சிறந்த நடிப்பைத் தந்திருக்கும் அனந்த் நாக் மற்றும் ஷபனா ஆஸ்மி

லஷ்மியின் பாத்திரமும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவள். வரதட்சணை தரமுடியாத காரணத்தால், ஏதோ ஒரு ஆண்மகன் கிடைத்தால் போதும் என்கிற நோக்கில், வாய் பேச முடியாத, காது கேட்காத ஒருவனுக்கு அவளை திருமணம் செய்துவைத்துவிட்டார்கள். அதைக் கூட லஷ்மி அனுசரித்துச் செல்கிறாள். அவளுக்குப் பிரச்னையாக இருப்பது கணவனின் குடிப்பழக்கம்தான்.

லஷ்மியின் வாழ்க்கையில் எத்தனையோ துயரங்கள் இருந்தாலும் அவளின் பெருங்கனவு என்பது தன்னுடைய குழந்தையை கையில் ஏந்துவதுதான். அதற்காக பல வேண்டுதல்களை நிகழ்த்துகிறாள். சூர்யாவின் அணுகலை முதலில் மறுக்கும் லஷ்மி, கணவன் ஊரை விட்டு ஓடிய பிறகு, சூர்யாவை மெள்ள அனுமதிக்கிறாள். குடிமயக்கத்தில் உறங்கும் சூர்யாவின் தலையை குழந்தையைப் போல வருடிக் கொடுக்கிறாள். பிரச்னை என்று வந்தால் கோழையான சூர்யா, தன்னை கை விட்டுவிடுவான் என்பது லஷ்மிக்குத் தெரிந்திருக்கிறது. என்றாலும் அவள் சூர்யாவை அனுமதிப்பது, எதிர்காலம் குறித்த அச்சம் என்பதைவிடவும் குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்குத்தானோ என்றும் தோன்றுகிறது.

சூர்யாவாக அனந்த் நாக் மற்றும் லஷ்மியாக ஷபனா ஆஸ்மியும் தங்களின் சிறந்த நடிப்பைத் தந்திருக்கிறார்கள். தோற்றத்தில் நவீன இளைஞனாக இருந்தாலும் உள்ளுக்குள் பழமைவாதியாகவும் கோழையாகவும் இருக்கும் சித்திரத்தை அனந்த் நாக் திறம்பட வெளிப்படுத்தியிருக்கிறார். லஷ்மியின் கணவனை ஆத்திரத்துடன் அடித்துவிட்டு வீட்டுக்குள் சென்று குற்றவுணர்வில் அழும் காட்சி ஒரு நல்ல உதாரணம்.

முதல் திரைப்படத்திலேயே தான் ஒரு சிறந்த நடிகை என்பதை ஷபனா ஆஸ்மி பதிவு செய்திருக்கிறார். குடும்பத்தின் வறுமை, குடிப்பழக்கமுள்ள கணவனின் மீதான கோபம் மற்றும் சகிப்புத்தன்மை, குழந்தைக்கான வேண்டுதல், சூர்யாவின் அணுகலை மெல்லிய கோபத்துடன் புறக்கணித்தல், நிராதரவான சூழலில் பிறகு அதை ஏற்றுக் கொள்ளுதல், சூர்யாவின் மீது உருவாகும் நேசம் போன்ற உணர்ச்சிகளை அமைதியான நடிப்பின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். சிறந்த நடிகைக்கான தேசிய விருது அவருக்கு இந்தப் படத்தின் மூலம் கிடைத்தது.

லஷ்மியின் பாத்திரத்துக்கு வஹீதா ரஹ்மான், சாரதா போன்ற நடிகைகளைத்தான் இயக்குநர் முதலில் அணுகியிருக்கிறார். அவர்கள் மறுத்துவிடவே, புனே திரைப்படக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து விட்டு வந்திருக்கும் ஷபனா ஆஸ்மியை உதவி இயக்குநர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள். மாடலாக இருக்கும் பெண், ஓர் எளிய கிராமத்துப் பெண்ணின் பாத்திரத்துக்குப் பொருந்துவாரா என்று ஷியாம் பெனகல் ஆரம்பத்தில் தயங்கியிருக்கிறார்.

லஷ்மியின் கணவர் கிஷ்டைய்யாவாக சாது மெஹர் இயல்பாக நடித்திருந்தார். இவருடைய நடிப்புக்காகவும் தேசிய விருது கிடைத்தது. சிறந்த குயவராக இருந்த கிஷ்டைய்யா, மண்பானைகளை விட்டு மக்கள் அலுமினியப் பாத்திரங்களை உபயோகிக்கும் கால மாற்றம் காரணமாக எந்தப் பணிக்கும் பொருத்தமில்லவராக ஆகிப் போகிறார். எளிய குடும்பங்களின் வறுமைக்குக் கால மாற்றமும் ஒரு காரணமாக இருக்கிறது என்பது ஒரு வசனத்தின் மூலம் உணர்த்தப்படுகிறது.

சூர்யாவின் மனைவி சாருவாக பிரியா டெண்டுல்கர். தனது கணவருக்கும் லஷ்மிக்கும் உள்ள உறவைப் பற்றி ஊரார் பேசும் புறணியை அறிந்திருக்கும் சாரு, வீட்டுக்குள் நுழைந்த அடுத்த கணமே லஷ்மியை வெளியேற்றி தனது இருப்பை நிலைநாட்டத் தொடங்கும் பணிகளை மேற்கொள்கிறார். தனது கணவனுடன் உறவு வைத்திருக்கும் லஷ்மியின் மீது வெறுப்பு இருக்கிறது. அதே நேரத்தில் நிராதரவாக இருக்கும் லஷ்மியின் மீது உள்ளூற இரக்கமும் இருக்கிறது.

ஷியாம் பெனகல் – மாற்றுச் சினிமாவின் முன்னோடி

ஹைதராபாத் நகருக்கு அருகேயுள்ள ஒரு கிராமத்தில் இதன் படப்பிடிப்பு நடந்தது. இந்தியும் உருதும் கலந்த தகானி மொழியை நடிகர்கள் பெரும்பாலும் பேசி நடித்தார்கள். படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் கோவிந்த் நிஹ்லானி. வெளிப்புறக் காட்சிகளை அழகியல் உணர்ச்சியுடனும் அரசியல் பொருளுடனும் பதிவு செய்திருக்கிறார். வன்ரஜ் பாட்டியாவின் பின்னணி இசை உறுத்தாமல் அமைதியாக ஒலிக்கிறது.

இந்தியாவின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக ஷியாம் பெனகல், முதல் திரைப்படத்திலேயே தனது வருகையை அழுத்தமாக அறிவித்திருக்கிறார். மாற்றுச் சினிமாவுக்கான சிறந்த உதாரணமாக ‘அங்கூர்’ உருவாக்கப்பட்டிருக்கிறது. பல விருதுகள், அங்கீகாரங்கள், விமர்சன ரீதியான பாராட்டுக்களைத் தாண்டி வணிக ரீதியாகவும் இந்தப் படம் வெற்றி பெற்றது.

அதுவரை சூர்யாவுக்கு உதவிகரமாக இருந்த ஒரு சிறுவன், அப்பாவியான கிஷ்டைய்யா சூர்யாவினால் கொடூரமாக தாக்கப்படுவதைக் கண்டு, சூர்யாவின் வீட்டின் மீது கல்லெறிந்து விட்டு ஓடும் காட்சியுடன் படம் நிறைகிறது. எளிய மக்கள் ஒடுக்குமுறையை எப்போதும் சகித்துக் கொண்டிருக்கமாட்டார்கள் என்கிற அரசியலோடு நிறையும் காட்சி, பிறகு வந்த சில திரைப்படங்களில் பிரதிபலித்திருப்பதைக் காண முடிகிறது. நாகராஜ் மஞ்சுளே இயக்கிய ‘பண்ட்ரி’ திரைப்படத்தின் கடைசிக் காட்சியும் இதே தன்மையைக் கொண்டதுதான்.

நிலப்பிரபுத்துவம், சாதியம், அதிகாரம் போன்றவற்றால் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அனுபவித்து வரும் மௌனத் துயரத்தை கலைநயத்துடன் பதிவு செய்திருக்கும் ‘அங்கூர்’, தலித் திரைப்படங்களின் வரிசையில் ஒரு சிறந்த முன்னோடி படைப்பு.

(தொடர்ந்து பேசுவோம்)

பகிர:
சுரேஷ் கண்ணன்

சுரேஷ் கண்ணன்

உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை தொடர்ச்சியாக எழுதி வருபவர். அழகியல் சார்ந்த ரசனையோடு சினிமாவைப் பற்றிய உரையாடலைப் பல ஆண்டுகளாக நிகழ்த்துபவர். குமுதம், தீராநதி, உயிர்மை, காட்சிப்பிழை, அம்ருதா, பேசும் புதியசக்தி போன்ற இதழ்களில் எழுதியிருக்கிறார். விகடன் இணையத்தளத்தில் ‘பிக் பாஸ் நிகழ்ச்சி’ பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *