Skip to content
Home » தலித் திரைப்படங்கள் # 23 – மாடத்தி

தலித் திரைப்படங்கள் # 23 – மாடத்தி

மாடத்தி

‘இந்தியத் துணைக்கண்டமானது பல்லாயிரக்கணக்கான துணை தெய்வங்களின் நிலம்; இந்த தெய்வங்களில் பலவற்றின் பின்னால் அநீதியின் கதை உள்ளது’ என்கிற வரியுடன் இந்தத் திரைப்படம் துவங்குகிறது. தேவதைக் கதைகளை ‘Fairy Tale’ என்பார்கள். ஆனால் இந்தப் படத்தின் உபதலைப்பு ‘An unfairy tale’ என்பதாக இருக்கிறது.

வன்கொடுமையாலோ, அநீதியாலோ கொல்லப்பட்ட இளம்பெண்களை சிறுதெய்வமாக்கி வழிபடுவதென்பது இந்திய மரபில் மட்டுமல்ல, உலகமெங்கிலும் வழக்கில் உள்ளது. இது சார்ந்த தொன்மக் கதைகளும் வழிபாட்டுச் சடங்குகளும் கணிசமாக உள்ளன. அப்படியொரு சிறுதெய்வத்தின் கதைதான் ‘மாடத்தி’. பல ஆவணப் படங்களை இயக்கி சர்வதேச அரங்குகளில் சிறந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ள லீனா மணிமேகலை இயக்கியிருக்கும் தமிழ்த் திரைப்படம். கிரெளட் ஃபண்டிங் முறையில் பல நடைமுறைச் சிரமங்களை எதிர்கொண்டு உருவான ‘மாடத்தி’ திரைப்படம் விமர்சனரீதியாக நிறைய பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

ஒடுக்கப்பட்ட சமூகமே, இன்னொரு சமூகத்தை ஒடுக்கும் அவலம்

முற்பட்ட சாதிகளால் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகும் பட்டியலின சமூகத்தைப் பற்றி அறிந்திருக்கிறோம். ஆனால் அத்தகைய ஒடுக்கப்பட்ட சமூகமே ஒதுக்கி வைக்கிற, விளிம்பு நிலையின் கடைசிப்படியில் இருக்கிற சமூகத்தைப் பற்றி அறிந்திருக்கிறோமா? தீண்டாமைக்குள்ளே இருக்கிற இன்னொரு தீண்டாமையின் கொடுமை இது.

இப்படியாக இரட்டைத் தீண்டாமையை அனுபவிக்கும் சமூகங்களுள் ஒன்று ‘புதிரை வண்ணார்’. இந்த சமூகத்தின் மக்கள் தென்தமிழகத்தில் அதிகம் வாழ்கிறார்கள். இவர்களை நேரில் கண்டு உரையாடி களஆய்வுக்குப் பிறகு திரைக்கதையை எழுதியிருக்கிறார் லீனா. யவனிகா ஸ்ரீராமும் ரஃபிக் இஸ்மாயிலும் திரைக்கதை உருவாக்கத்துக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.

தானே ஒரு அடிமைச் சமூகமாக இருந்தாலும், சாதியத்தின் வலிகளை நன்கு அறிந்திருந்தாலும் தனக்கும் கீழே ஒரு சமூகத்தை ஒதுக்கி வைப்பது மனித மனோபாவத்தின் கொடூரமான விந்தைகளுள் ஒன்று. தலித் மக்களின் துணிகளைத் துவைப்பது, சவரம் செய்வது, தீட்டுத் துணிகளை சுத்தம் செய்வது, சாவுச் சடங்குகளை மேற்கொள்வது போன்றவை புதிரை வண்ணார் சமூகத்தினருக்கு விதிக்கப்பட்ட பணிகள். இதற்கென்று சம்பளம் எதுவும் கிடையாது. தலித் மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்கள் தரும் பழைய உணவுகளை வாங்கி உண்ண வேண்டும். இவர்கள் பகலில் நடமாட முடியாது. ‘காணக்கூடாத சாதி’ என்று அழைக்கப்படுகிற இவர்கள் இரவு நேரத்தில் மட்டும்தான் நடமாட முடியும். பனையோலையைப் பின்னால் கட்டிக்கொண்டு வருகிற வழக்கமும் உண்டு.

தலித் மக்கள் நூறு குடும்பம் இருக்கிற இடத்தில் இவர்கள் ஒன்றிரண்டு குடும்பங்களாக அமர்த்தப்படுவார்கள். சூன்யம் வைப்பது உள்ளிட்ட மந்திர தந்திரங்களையும் இவர்கள் செய்வதுண்டு. இந்த சமூகத்தின் பெண்கள், ‘மேல் சாதியினரால்’ தொடர்ச்சியான பாலியல் வன்முறைகளுக்கு ஆளாவதால் பெண் குழந்தைகள் பிறந்தவுடன் கொல்லப்படுவதுண்டு அல்லது மறைத்து வளர்க்கப்பட்டு மிகச் சிறிய வயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்படுவதுண்டு.

இப்படியாக ஒடுக்கப்பட்ட சமூகத்தாலேயே ஒடுக்கப்பட்டு சாதியக் கொடுமையை அனுபவிக்கும் ‘புதிரை வண்ணார்’ சமூகத்தினரின் வாழ்வியல் அவலத்தைத் திரையில் பதிவு செய்திருக்கிறார் லீனா மணிமேகலை.

ஓவியங்களின் பின்னணியில் விரியும் மாடத்தியின் கதை

சமீபத்தில் மணம் புரிந்த ஒரு புதிய தம்பதியினர் அதற்குண்டான கிளுகிளுப்புடன் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் காட்சியோடு படம் துவங்குகிறது. மாடத்தி கோயிலுக்கு அவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். திடீரென்று வழியில் ஏற்படும் மாதவிடாய் காரணமாக பெண்ணுக்குத் துணி தேவைப்படுகிறது. அருகிலிருக்கும் குடிசையொன்றை நோக்கிச் செல்லும் கணவன் நெடும் நேரமாகியும் திரும்புவதில்லை. பதற்றமாகும் பெண், குடிசைக்குள் சென்று பார்க்கிறாள். அங்கு நிறைய ஓவியங்கள் இருக்கின்றன. அங்கிருக்கும் ஒரு சிறுவன், ஓவியங்களுக்குப் பின்னிருக்கும் கதையை விளக்க ஆரம்பிக்கிறான். இப்படியாக ஒரு தொன்மக்கதையை நாம் அறிந்துகொள்ளும் பாணியில் விரிகிறது ‘மாடத்தி’யின் கதை.

ஆற்றுக்கு அருகில் இருக்கிற ஒரு பிரதேசம். புதிரை வண்ணார் சமூகத்தின் குடும்பம் ஊரை விட்டுத் தள்ளி வாழ்கிறது. சுடலை, வேணி என்கிற தம்பதியினருக்கு யோசனா என்கிற மகள். பகல் நேரத்தில் யார் கண்ணிலும் படக்கூடாது என்கிற கட்டுப்பாட்டைத் தாண்டி காடு, மேடு, ஆறு என்று வனதேவதை போல சுதந்தரமாகச் சுற்றுகிறாள், யோசனா. இதற்காக தாயின் திட்டுகளையும் சூடுகளையும் அடிக்கடி பெறுகிறாள். அவளுக்கு ஆதரவாக இருப்பது பாட்டிதான். தாய் திட்டும்போதெல்லாம் பாட்டியிடம் தஞ்சம் அடைகிறாள் யோசனா.

காட்டில் சுற்றித் திரியும்போது ஆற்றில் குளிக்கும் ஓர் இளைஞனைக் கண்டு ஈர்ப்பு கொள்கிறாள். அவனிடமிருந்து வழி தவறிவிடும் ஒரு கழுதைக்குட்டியை செல்லமாகப் பராமரித்து பத்திரமாகத் திருப்பிக்கொடுக்கிறாள். இளைஞனின் சட்டையைத் திருடி அணிந்துகொள்வதில் இன்பம் காண்கிறாள். ஊருக்குள் அம்மன் கோயில் திறப்பு விழா நடக்கிறது. அதைக் காணும் ஆசையில் ஒளிந்து ஒளிந்து நடக்கிறாள் யோசனா. குடி போதையில் இருக்கும் நான்கைந்து இளைஞர்கள், அவளை இருட்டில் தள்ளி ஒருவர் பின்னர் ஒருவராகச் சென்று வன்புணர்வு கொள்கிறார்கள். இதில் யோசனாவின் மனத்துக்குள் ரகசியமான பிரியத்தைச் சம்பாதித்திருக்கும் இளைஞனும் அடக்கம்.

‘நெருப்பை வயித்துல சுமந்துட்டிருக்கேனே’ என்று ஒவ்வொரு கணமும் பயந்தபடியே வாழும் தாயின் அச்சம் உண்மையாகி விடுகிறது. சிதைந்து கிடக்கும் தன் மகளின் உடலைப் பார்த்துக் கதறியழுகிறாள். அப்போதும் ஊர் மக்கள் சாதியைச் சொல்லி இவர்களைத் திட்டுகிறார்கள். வயிற்றெரிச்சலோடு அவர்கள் மீது மண்ணைத் தூற்றி சாபம் விடுகிறாள் வேணி. ஆத்திரம் கொள்ளும் இளைஞர்கள் இவர்கள் மீது கல்லெறிகிறார்கள். கனத்த துயரத்துடன் யோசனாவின் உடலைத் தூக்கிக் கொண்டு அந்தக் குடும்பம் நடக்க, பின்னால் கழுதையும் செல்கிறது.

புது மணப்பெண்ணுக்கு சிறுவன் விவரிக்கும் கதை முடிவுக்கு வருகிறது. அந்த ஓவியத்தில் உள்ளவர்கள் அனைவரும் கண்ணிழந்தவர்களாக இருக்கிறார்கள். ‘கண்டாலே தீட்டு என்று தன்னை ஒதுக்கிய ஊர் மக்களின் கண்களை மாடத்தி பறித்துக் கொண்டாள்’ என்று சொல்கிறான் சிறுவன். யோசனா என்கிற அந்தச் சிறுமிதான்  ‘மாடத்தி’ என்கிற சிறுதெய்வமாக ஆகியிருக்கிறாள். ஓவியத்தை நெருங்கிப் பார்க்கும் மணப்பெண் திகைப்படைகிறாள். கணவனின் உருவமும் அதில் இருக்கிறது. புல்வெளியின் நடுவே ஒரு பழைய சிற்பம் போல யோசனா நிற்கும் காட்சியுடன் படம் நிறைகிறது.

நேர்த்தியான சினிமாவைத் தந்திருக்கும் லீனா மணிமேகலை

பெருலாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட வணிகத் திரைப்படங்கள் பெருகிவழியும் சூழலில், மாற்று சினிமாக்களை உருவாக்கும் சுயாதீனப் படைப்பாளிகளால்தான் சினிமா என்னும் கலை இன்னமும் உயிர் வாழ்கிறது. அப்படிப்பட்ட தமிழ்த்திரைப் படைப்பாளிகளில் லீனா மணிமேகலை முன்னணி இடத்தை வகிக்கிறார்.  இதன் சாட்சியமாக ‘மாடத்தி’ திரைப்படத்தைச் சொல்லலாம். தலித் சமூகத்தின் பிரச்னைகளைப் பற்றி தமிழ் சினிமாக்கள் சமீபத்தில்தான் ஆழமாகப் பேசத் துவங்கியிருக்கின்றன. ஆனால் தலித் சமூகத்தாலும் ஒடுக்கப்பட்டு வாழும் விளிம்புநிலைச் சமூகத்தினரைப் பற்றி 2019-ல் ஒரு படைப்பை உருவாக்கியிருக்கும் லீனாவின் தனித்துவம் பாராட்டப்பட வேண்டியது.

லீனா மணிமேகலை

மிக நேர்த்தியான திரைமொழியில் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் லீனா மணிமேகலை. ஒரு தொன்மக்கதையை விவரிக்கத் துவங்கும் ஆரம்பக்காட்சி ஆவலைத் தூண்டுகிறது. தாய்க்கும் மகளுக்கான அன்பை நாடகத்தனமாக மிகையாக்கும் செயற்கையான சித்திரங்கள்தான் நிறைய இருக்கின்றன. ஆனால் இதில் வரும் அம்மா, தன் மகளைப் பெரும்பாலும் ஆத்திரத்துடன் திட்டிக்கொண்டே இருக்கிறாள். அதற்குப் பின்னேயிருப்பதும் அன்புதான். பதின்ம வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் தன் மகள், பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகி விடக்கூடாது என்கிற அச்சம், மூச்சுக்காற்று போல அவளிடம் படர்ந்திருக்கிறது.

வேணியின் இந்த அச்சத்துக்கு நியாயமான காரணமுண்டு. அவளுமே அந்த வன்முறையை அவ்வப்போது எதிர்கொள்கிறவள்தான். அவளது கணவனுக்கு கள் வாங்கிக் கொடுத்து விட்டு, வேணியை முரட்டுத்தனமாக கீழே தள்ளி பாலியல் வன்புணர்வு செய்வதை அந்த ஊரின் ஆண்கள் மிக இயல்பாகச் செய்து விட்டுப் போகிறார்கள். ‘கண்ணால் கூட பார்க்கக்கூடாத சாதி’ என்பது பாலியல் அத்துமீறலில் மட்டும் வழக்கம் போல் காணாமல் போகிறது.

‘ஏம்மா உனக்கு என்னைப் பிடிக்கவேயில்ல?’ என்று பரிதாபத்துடன் கேட்கும் மகளை தாய் அணைத்துக் கொள்வது, யோசனாவுக்கு செல்லம் தரும் மாமியாரை வேணி திட்டுவது, ‘அவளை என்ன பண்றேன் பாரு’ என்று வீறாப்பாகச் சொல்லிவிட்டு தாயின் வீட்டுக்குச்சென்று கறிச்சோறு சாப்பிடும் சுடலையின் பாவனை போன்ற காட்சிகள் மிக இயல்புத்தன்மையுடனும் சுவாரசியாகவும் பதிவாகியிருக்கின்றன.

இயற்கையால் நிரம்பியிருக்கும் யோசனாவின் பிரத்யேக உலகமும், சாதியக் கட்டுப்பாட்டை மீறி சுதந்தரமாகப் பறக்கத் துடிக்கும் அவளது விருப்பமும் அழகியல்தன்மை நிறைந்த காட்சிகளாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. படையலுக்கு வைக்கப்படும் பழங்களை குரங்குகளுடன் யோசனா பகிர்ந்துண்ணும் காட்சி அருமையானது.

பகலில் நடமாடக்கூடாது என்கிற கட்டுப்பாடு காரணமாக, விடிவதற்கு முன் வீடு திரும்பும் அவசரம், பகலில் எவரேனும் எதிர்பட்டு விட்டால் அருகிலுள்ள புதரில் மறைய வேண்டிய அவலம், எதிர்கொள்ள நேரும் சாதிய வசைகள் என்று புதிரை வண்ணார் சமூகத்தின் வாழ்வியல் துயரங்கள் அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் இயல்பாகப் பதிவாகியிருக்கின்றன.

விளிம்புநிலையின் கடைசிப்படிகளின் சாதியத் துயரம்

இளைஞர்களுக்கிடையே உள்ள நட்பு, விரிசல், இணைப்பு, அவர்களின் பாலியல் கிளுகிளுப்பான தொடர்பான உரையாடல்கள், சைகைள் போன்றவை தொடர்பான காட்சிகள் யதார்த்தத்துக்கு மிக நெருக்கமாக உருவாக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு இடையே உருவாகும் தகராறு காரணமாக பஞ்சாயத்தில் அபராதம் விதிக்கப்படும் போது ‘அய்யா… தாங்காதுய்யா’ என்று குடும்பத்தோடு பஞ்சாயத்தார் காலில் விழுகிறார்கள். ஆனால் இவர்களே தனக்குக் கீழேயுள்ள சமூகத்தைப் பற்றி ஆதிக்க மனோபாவத்துடன் பேசுகிறார்கள். வன்கொடுமைகளில் ஈடுபடுகிறார்கள்.

அப்பாவிச் சிறுமியான யோசனாவின் உடல், காம இச்சை கொண்ட இளைஞர்களால் சீரழிக்கப்படும் காட்சி மனம் பதைக்க வைக்கும் வகையில் பதிவாகியுள்ளது. வரிசையாக வரும் இளைஞர்களில் தனக்குப் பிரியமானவனும் இருப்பதைக்கண்டு யோசனாவின் கண்கள் திகைக்கும்போது அவளது வலியும் வேதனையும் நமக்குள்ளும் பரவுகிறது.

மாடத்தி

யோசனாவாக அஜ்மினா தனது மிகச் சிறந்த நடிப்பைத் தந்திருக்கிறார். களங்கமற்ற விழிகளின் வழியாக இயற்கையின் அழகை விழுங்க முயலும் தருணங்களில் இவரது வெள்ளந்தியான முகபாவம் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருக்கும் தாய் வேணியாக செம்மலர் அன்னத்தின் பங்களிப்பு அருமையாக இருக்கிறது. பெண் குழந்தைகளைப் பெற்றிருக்கும் ஒவ்வொரு தாயின் பதைபதைப்பையும் உளவியல் அச்சத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். தன்னைச் சீரழித்த ஆணின் மீதுள்ள கோபத்தை துவைக்கும் துணிகளின் மீது இவர் காட்டும் காட்சி ஆங்காரத்துடன் இருக்கிறது.

பொருளாதாரச் சிரமங்களுக்கு இடையில் உருவானாலும், இந்தத் திரைப்படத்தின் உருவாக்கத் தரம் மிக நேர்த்தியாக இருக்கிறது. ஒளிப்பதிவு கனகச்சிதம். கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை கூடுதல் சிறப்பை அளித்திருக்கிறது. ஏறத்தாழ அனைத்து நடிகர்களுமே தங்களின் இயல்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள்.

ஒருபுறம் பெண்களை பல்வேறு வழிகளில் இழிவு செய்து கொண்டு, இன்னொரு பக்கம் அவர்களை தெய்வமாக்கித் தொழும் சமூகத்தின் அபத்தமான முரணை கலையமைதியுடனும் அவசியமான உக்கிரத்துடனும் உரையாடுகிறாள் ‘மாடத்தி’.

(தொடர்ந்து பேசுவோம்)

பகிர:
nv-author-image

சுரேஷ் கண்ணன்

உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை தொடர்ச்சியாக எழுதி வருபவர். அழகியல் சார்ந்த ரசனையோடு சினிமாவைப் பற்றிய உரையாடலைப் பல ஆண்டுகளாக நிகழ்த்துபவர். குமுதம், தீராநதி, உயிர்மை, காட்சிப்பிழை, அம்ருதா, பேசும் புதியசக்தி போன்ற இதழ்களில் எழுதியிருக்கிறார். விகடன் இணையத்தளத்தில் ‘பிக் பாஸ் நிகழ்ச்சி’ பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *