‘Writing with Fire’ என்பது 2021இல் வெளியான ஓர் ஆவணப்படம். முழுக்க முழுக்க இந்தியத் தயாரிப்பு. ஆஸ்கர் விருதுக்காக இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட பெருமையைக் கொண்டது. பல்வேறு சர்வதேச அரங்குகளில் திரையிடப்பட்டு, பல அங்கீகாரங்களையும் விருதுகளையும் பெற்றது. சுஷ்மித் கோஷ் மற்றும் ரிண்ட்டு தாமஸ் ஆகிய இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர்.
‘செய்தி அலைகள்’ என்று பொருள்படும் ‘Khabar Lahariya’ என்கிற வாராந்திரச் செய்தித்தாள், இந்தி மற்றும் பல உள்ளூர் மொழிகளில் தயாராகிறது. இதன் சிறப்பம்சம் என்னவெனில் ஆசிரியர் முதல் நிருபர் வரை அனைவரும் பெண்களே. அதிலும் தலித் பெண்கள். ஆம், இந்தியாவிலேயே முழுக்க முழுக்க தலித் பெண் பத்திரிகையாளர்களால் நடத்தப்படும் ஒரே பத்திரிகை ‘Khabar Lahariya’.
தலித் பெண்களால் நடத்தப்படும் ஒரே இந்தியப் பத்திரிகை
2002iல் துவங்கப்பட்ட இந்த உள்ளுர் பத்திரிகை, 6000 பிரதிகளையும் 80000 வாசகர்களையும் கொண்டது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பல சிறிய நகரங்கள், கிராம மக்களால் வாசிக்கப்படுகிறது. 2013ஆம் ஆண்டு இந்தப் பத்திரிகை டிஜிட்டல் வடிவத்திற்கு மாறுகிறது. அதுவரை எழுத்துக்களாக இருந்த உள்ளூர் செய்திகள், வீடியோக்களாக மாறி இளைய தலைமுறையை கவர ஆரம்பிக்கின்றன. ஆண்டுக்கு ஆண்டு இதன் பார்வையாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது.
பத்திரிகையில் ஏற்பட்ட டிஜிட்டல் மாற்றத்தை அங்கு பணிபுரியும் பெண்கள் ஆரம்பக்கட்ட தடுமாற்றங்களுடன் எதிர்கொள்ளும் விதம், வீடியோ செய்திகளுக்கேற்ப தங்களை தகவமைத்துக்கொள்ளும் பாணி, ஆண் பத்திரிகையாளர்களுக்கு நிகராக செய்தி சேகரிக்கும் விதம், அவர்களின் குடும்பப் பிரச்சினைகள், பெண்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறை, உத்தரப்பிரதேசத்தில் நிகழும் பாஜகவின் அசுரத்தனமான வளர்ச்சி, மதமும் கடவுளும் இணைந்து மதவெறியாக்கப்படும் பயங்கரம், பசு என்கிற விலங்கு அரசியல் குறியீடாக மாற்றப்படும் விதம் போன்ற பல விஷயங்கள் இந்த ஆவணப்படத்தில் காட்சிகளாக விரிகின்றன.
94 நிமிடங்களுக்கு ஓடும் இந்த ஆவணப்படம், உத்தரப்பிரதேசத்தின் 2016ஆம் ஆண்டின் காலகட்டத்தோடு துவங்குகிறது. மீரா என்கிற சிறப்பு நிருபர், சாதிய வெறியர்களால் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண்ணையும் அவரது கணவரையும் நேர்காணல் செய்கிறார். ‘ஏன் வழக்கைப் பதிவு செய்யவில்லை?’ என்று காவல் நிலையத்திற்குச் சென்று அதிகாரியைக் கேள்வி கேட்கிறார். அரசு இயந்திரம் வழக்கம் போல் திகைத்து பிறகு சம்பிரதாயமான பதிலை கிளிப்பிள்ளைபோல் ஒப்பிக்கிறது.
ஊடகப் பணியில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
இந்தப் பத்திரிகையில் பணிபுரியும் பெரும்பாலான பெண்கள் அடித்தட்டு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். குறைவான கல்வியைக் கொண்டவர்கள். தங்களுக்குத் தரப்பட்ட செல்போனை திகைப்பும் உற்சாகமுமாக தடவிப் பார்க்கிறார்கள். பள்ளி மாணவர்கள் போல ஒருவரையொருவர் சிரிப்பும் புன்னகையுமாக பார்த்துக் கொள்கிறார்கள். மெல்ல மெல்ல வீடியோ எடுக்கவும் செய்தி சேகரிக்கவும் கற்றுக் கொள்கிறார்கள். மலைப்பாங்கான இடங்கள், குண்டும் குழியுமாக நீர் தேங்கியிருக்கும் இடங்கள் போன்றவற்றிற்கு நடந்தே சென்று செய்தி சேகரிக்கிறார்கள்.
நகரத்திலுள்ள பத்திரிகையாளர்களைப் போல இவர்களால் எளிதில் செய்தி சேகரிக்க முடியாது. கல்வியறிவு, பொருளாதாரம் ஆகிய இரண்டையும் முந்திக் கொண்டு நிற்பது சாதியம். முற்பட்ட சாதியினர் வசிக்கும் இடங்களுக்கு இவர்களால் செல்ல முடியாது. மேலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் வசிக்கும் பகுதிகளில் கூட ‘பெண்கள்தானே. இவர்களால் என்ன செய்ய முடியும்?’ என்றே அலட்சியமாக பதில் சொல்கிறார்கள்.
சமூகத்தில் மட்டுமல்ல, சொந்த வீடுகளிலும் கூட இவர்களுக்கு பல எதிர்ப்புகள் வருகின்றன. ‘செய்தியாளர் பணி என்று சொல்லிக் கொண்டு நடு இரவில் கூட எங்கெங்கோ சுற்றி விட்டு வருகிறாய். ஒரு பெண்ணுக்கு இது அழகா?’ என்று ஒரு கணவர் கேள்வி கேட்கிறார். இன்னொரு பெண்ணின் கணவன் குடிக்காக பணத்தைப் பறித்துக் கொண்டு அடிக்கிறான். வீட்டுப் பணிகளையும் செய்து விட்டு ஊடகப் பணியையும் செய்ய வேண்டிய நிலைமை. இப்படியான பல தடைகளையும் மீறி இந்தப் பெண்கள் அற்புதமாக சாதிக்கிறார்கள். தங்களின் பணியை விட்டு வெளியேறுவதில்லை. ஏனெனில் வீட்டை விட்டே வெளியே வருவதற்கே அச்சம் நிலவும் சூழலில், இவர்கள் செய்யும் சாதனை அவர்களுக்கே பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
சட்டவிரோதமாக இயங்கும் சுரங்கங்களுக்குச் செல்கிறார்கள். சுரங்கத் தொழிலில் ஈடுபடுத்தப்படும் ஏழைத் தொழிலாளர்கள் விபத்தில் இறந்து போகும் அவலத்தையும், மிரட்டல்களின் மூலம் அதை மாஃபியா மூடிமறைப்பதையும் காவல்துறை இதற்கு உடந்தையாக இருப்பதைப் பற்றியும் இந்தப் பெண்கள் தங்களின் ஊடகத்தில் அம்பலப்படுத்துகிறார்கள். காசநோய்க்கான மருந்து என்பதையே அதுவரை கண்ணால் பார்த்திருக்காத பகுதிகளுக்குச் சென்று பிரச்னைகளை பதிவு செய்வதின் மூலம் அரசாங்கத்தின் கவனத்திற்குச் சென்று தீர்வுகளைக் கொண்டு வருகிறார்கள். சாலைப் பிரச்சினை, மின்சாரம், ஆணவக் கொலை என்று இவர்கள் செய்தியாக்கும் பல்வேறு உள்ளூர் பிரச்னைகளுக்குத் தீர்வுகள் கிடைக்க ஆரம்பிக்கின்றன.
உத்தரப்பிரதேசத்தின் அரசியல் மாற்றம்
இவர்களின் ஊடக அனுபவத்திற்கு இடையே உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக அடைந்து வரும் அசுரத்தனமான வளர்ச்சியும் பதிவாகிக்கொண்டே போகிறது. ‘ஏழு வயது சிறுமி முதல் எண்பது வயது மூதாட்டி வரை பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகாத பெண்களே இங்கு இல்லாத நிலைமை. இதற்கு பதில் என்ன?’ என்று தேர்தலில் நிற்கும் ஒரு பாஜக வேட்பாளரிடம் கேள்வி கேட்கப்பட, அவர் சில நிமிடங்கள் திகைத்துவிட்டு எதிர்க்கட்சியை கை காட்டிவிட்டு ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு முழு பாதுகாப்பு இருக்கும்’ என்று சம்பிரதாயமான பல்லவியைப் பாடுகிறார்.
2017இல் யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேச முதல்வராக பொறுப்பேற்கும் காட்சிகள் வருகின்றன. தேர்தலுக்கு முந்தைய கூட்டத்தில் மத வன்முறையைத் தூண்டும் வகையில் அப்பட்டமாக பேசும் இவர், இன்னொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ‘நான் வன்முறைக்கு எதிரானவன். எப்படி அதைத் தூண்டுவேன்?’ என்று பூசி மெழுகுகிறார். யோகி ஆதித்யநாத்தால் தோற்றுவிக்கப்பட்ட ‘இந்து யுவ வாகினி’ என்கிற இளைஞர் அமைப்பைச் சேர்ந்த இளைஞனொருவன் கையில் வாளுடன் சாலைகளில் சுற்றுகிறான். ‘ஒரு பசு மாட்டில் அனைத்துத் தெய்வங்களும் அடங்கியுள்ளன. அதை வழிபடுவது அவசியமானது’ என்று பசு அரசியலை நியாயப்படுத்துகிறான். கையில் வாளை உயர்த்தி பெருமிதத்துடன் வீடியோவுக்கு போஸ் தருகிறான். கல்வியறிவு இன்மையும், வேலையில்லாத் திண்டாட்டமும் இளைஞர்கள் தவறான பாதைக்குச் செல்வதற்கான காரணங்களாக இருப்பதை ஊடகப் பெண்கள் பதிவு செய்கிறார்கள்.
மதத்தை முன்னிருத்தி மூர்க்கமாக பயணிக்கும் இந்துத்துவ அரசியலின் வளர்ச்சி, இந்தப் பெண்களுக்கே கவலையையும் பதட்டத்தையும் ஏற்படுத்துகிறது. ‘மிகவும் பின்தங்கிய இடங்களில் பெண்கள் இப்போதுதான் வெளியேவந்து சற்று முன்னேற்றத்தைக் காணத் துவங்கியிருக்கிறார்கள். இத்தகைய அரசியல் சூழல் அதில் பின்னடைவை ஏற்படுத்தி விடும்’ என்பது இவர்களின் நியாயமான பார்வை.
ஊடகப் பணியானது இந்தப் பெண்களுக்குத் தரும் தார்மீக பலத்தையும் வளர்ச்சியையும் இந்த ஆவணப்படம் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறது. இவர்களின் அன்றாட நடவடிக்கைகள் முதல் ஒருவருக்கொருவர் ஆதரவாக நின்று பணிபுரியும் காட்சிகள் இயல்புத்தன்மையுடன் இருக்கின்றன. ஸ்ரீநகர், இலங்கை என்று வெளியுலகை எட்டிப் பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. மீரா தேவி, சுனிதா பிரஜாபதி, ஷியாம்கலி தேவி என்று மூன்று பெண்களின் ஊடக அனுபவம் இதில் பிரதானமாகப் பதிவாகியிருக்கிறது. இதில் மீரா தேவி முன்னணியில் நின்று மற்றவர்களை சிறப்பாக வழிநடத்துகிறார். மெல்ல கற்றுக் கொள்ளும் சுனிதாவின் வளர்ச்சி அபாரமானதாக இருக்கிறது. கைபேசியின் இயக்கத்தை அறிவதில் ஆரம்பத் தடுமாற்றம் கொள்ளும் ஷியாம்கலி, பின்னர் தேர்ச்சி பெற்று ஊடகப்பணியில் மிளர்கிறார்.
சவாலும் ஆபத்தும் நிறைந்த ஊடகப்பணி
தங்களின் பணியிலும் குடும்பத்திலும் இந்தப் பெண்கள் எதிர்கொள்ளும் தடைகளும் பிரச்சினைகளும் எதிர்ப்புகளும் இயல்புத்தன்மையுடன் பதிவாகியிருக்கின்றன. இவர்கள் வெளியிடும் வீடியோக்களுக்கு பாராட்டுக்கள் குவியும் அதே நேரத்தில், கமெண்ட்டுகளில் அவதூறுகளும் வசைகளும் குவிகின்றன. இவர்கள் நடத்தும் காட்சியூடகம், ஆண்டுக்கு ஆண்டு அதிகளவு பார்வையாளர்களை எட்டிக்கு விப்பது தொடர்பான தகவலும் இடையில் வருகிறது.
2014க்குப் பின்னர் ஏறத்தாழ 40 பத்திரிகையாளர் கொல்லப்பட்டிருப்பதையும், ஊடகப் பணி என்பது இந்தியா போன்ற பிரதேசங்களில் எப்படி சவால் நிறைந்ததாகவும் ஆபத்து மிகுந்ததாகவும் இருக்கிறது என்கிற தகவலும் டைட்டிலில் வருகிறது. மதவெறியர்களால் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டதையும் இந்தப் பெண்கள் இணையத்தில் சிறப்புச் செய்தியாக்குகிறார்கள்.
சாதியம், பாலினம், பொருளாதாரம், குடும்பம், ஆணாதிக்கம் போன்று பல தடைகளைத் தாண்டி ஊடகப்பணியில் இந்தப் பெண்கள் முன்னேறும் காட்சிகள், காண்பதற்கு மனவெழுச்சியைத் தருவதாக இருக்கின்றன. ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து கிளம்பி தானும் முன்னேறி, சமூகத்திலும் மாற்றம் ஏற்படுத்தும் இந்த சிங்கப் பெண்களின் பயணத்தைப் பதிவு செய்திருக்கும் இந்த ஆவணப்படம், தலித் படைப்புகளின் வரிசையில் ஒரு முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது.
(தொடர்ந்து பேசுவோம்)