‘நான் மலையை உடைத்துக் கொண்டிருப்பதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தெரியாது, நான் சிற்பம் செய்து கொண்டிருந்தேன் என்று’ என்கிற வரி ஒன்றுண்டு.
கலையை, கலைஞர்களைப் புரிந்து கொள்ளாத சமூகத்தைக் குறிப்பிடும் வரி இது. ஆனால் உண்மையிலேயே மலையை உடைத்து அசாதாரணமான சாதனையைச் செய்த மனிதனைப் பற்றிய திரைப்படம் இது. தன்னந்தனியாக, ஒற்றை ஆளாக, இரவும் பகலுமாக, தொடர்ந்து 22 வருடங்கள் உழைத்து இந்த அரிய பணியைச் செய்து முடித்துள்ளார்.
‘என்னது… மலையை உடைக்கப் போறியா… பைத்தியமா நீ?’ என்று ஆரம்பத்தில் ஊர் மக்கள் பரிகசித்தார்கள். நாட்கள் கடக்க கடக்க ‘இதெல்லாம் ஆகிற காரியமா?’ என்று ஏளனம் அதிகமாகிக் கொண்டே போனது. ஆனால் ஆண்டுகள் பல கடந்தாலும் மனம் தளராமல் உழைத்துக் கொண்டேயிருந்த அந்த மனிதனைப் பார்த்து ஊர் திகைத்தது. ‘மலை மனிதன்’ என்கிற புகழ் அடையாளம் அவருக்கு உருவானது. அவருடைய தளராத உறுதியையும் பொதுநல நோக்கையும் கண்டுகொண்ட ஊர் அவருடன் பிறகு இணைந்து கொண்டது. பின்னர் அவரை மாமனிதராகவே பார்த்தது. ‘தசரத் மான்ஜி’ என்கிற சாதாரண மனிதர், ‘தசரத் பாபா’ என்று பிறகு ஊரால் மதிக்கப்பட்டார்.
பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள சிறிய ஊர் கெலார். இந்தியாவிலேயே மிகவும் பின்தங்கியிருக்கும் பிரதேசம். சுதந்திரம் பெற்று பதினைந்து ஆண்டுகள் ஆகியும் அதன் சுவடு துளிகூட படியாத கிராமம். பள்ளி, மருத்துவமனை, சாலை என்று எந்தவொரு அடிப்படை வசதியும் கிடையாது. அருகிலுள்ள பக்கத்து ஊருக்குச் செல்வதாக இருந்தாலும் 80 கிலோ மீட்டர் சுற்றிச் செல்லவேண்டும். ஊர் மக்களின் பயணத்துக்குப் பெரும்தடையாக இருந்தது ஒரு மலை. குடிநீர் எடுத்து வருவதாக இருந்தாலும்கூட அந்த மலையை ஏறிக் கடந்துதான் ஆக வேண்டும். மலையேறும்போது கால் தவறி கீழே விழுந்து இறந்தவர்கள் பலர்.
இப்படியொரு சூழலில் தசரத் மான்ஜியின் அன்பு மனைவியையும் அந்த மலை பலி வாங்கியது. கணவருக்காக உணவு எடுத்து வந்துகொண்டிருந்த பாகுனியா, மலையில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். மருத்துவமனைக்கு உடனே கொண்டு சென்றிருந்தால் ஒருவேளை அவர் பிழைத்திருப்பார். ஆனால் மலையைச் சுற்றிக்கொண்டு சென்றதால் நேரம் கடந்து போனது. உயிரும் போனது.
இந்தச் சம்பவம் தசரத்தின் மனத்தை மிகவும் பாதித்தது. எனவே மலையை உடைத்துப் பாதையை உருவாக்குவதற்காகத் தன்னந்தனி ஆளாகக் கிளம்பினார். ஒரு சுத்தியலும் உளியும் மட்டுமே அவருக்குத் துணை. வெயில், மழை, காயம், பாம்புக்கடி, தனிப்பட்ட பிரச்னைகள் என்று பல்வேறு தடைகள் வந்தாலும் அதையெல்லாம் சகித்துக் கொண்டு தொடர்ந்து 22 வருடங்களாக அந்த மலையுடன் போராடினார். பிறகு நடந்து முடிந்தது அந்த ஒற்றை மனிதரின் சாதனை. 25 அடி உயரம், 30 அடி அகலம், 360 அடி நீளத்துக்கு ஒரு பாதையை உருவாக்கினார். வெடிமருந்தும், இயந்திரங்களும், பலநூறு ஆட்களும் கொண்டு செய்ய வேண்டிய ஒரு பிரம்மாண்டமான பணியை தனியாளாக நின்று செய்ததுதான், தசரத் மான்ஜியின் சாதனை.
மலையை உடைத்த மாமனிதன்
2015-ல் வெளியான ‘Manjhi – The Mountain Man’ என்கிற திரைப்படம், தசரத் மான்ஜியின் சாதனையை, வாழ்க்கையைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒரு மனிதன், ஊர் நலனுக்காக மிக உயர்ந்ததொரு சாதனையைச் செய்துமுடித்தான். ஊர் மக்களைப் போலவே இந்த தேசமும் மான்ஜியின் உழைப்பைத் தாமதமாகவே கண்டுகொண்டது. பிறகு அங்கீரித்தது. அவருடைய உருவம் இந்தியத் தபால்தலையில் இடம்பெற்றது.
ரத்தம் படிந்த ஆடைகளுடன் ஒரு மனிதன் ஆங்காரமாக நின்று கொண்டிருக்கும் காட்சியோடு இந்தப் படம் துவங்குகிறது. மலையைப் பார்த்து அவன் கோபமாக கத்துகிறான். ‘மிகப் பிரம்மாண்டமாக நின்று கொண்டிருக்கிறோம் என்கிற அகங்காரமா உனக்கு… அதில் உனக்குப் பெருமையா… அதை தூள் தூளாக உடைத்துக் காட்டுகிறேன் பார்… என் வாழ்க்கையையே அழித்துவிட்டாயே’ என்று ஆத்திரத்துடன் மலையின் மீது கற்களை எறிகிறவன், பிறகு சுயபச்சாதாபத்தில் அழத் துவங்குகிறான்.
யார் அந்த மனிதன்? எதற்காக மலையுடன் நின்று மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறான்? தசரத் மான்ஜி என்கிற அந்த நபரின் வாழ்க்கை, பின்னணிக் காட்சிகளாக விரிகிறது.
இந்தியாவிலேயே பின்தங்கியிருக்கும் ஒரு பிரதேசத்தில், சாதிய அமைப்பின் கடைசிப் படிக்கட்டில் இருக்கிற முசாஹர் என்கிற ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் தசரத் மான்ஜி. நிலவுடைமையாளர்களாலும் முற்பட்ட சாதியினராலும் அந்தச் சமூகம் பல்வேறு இன்னல்களையும் அவமதிப்புகளையும் அடைகிறது. முதலாளியிடம் வாங்கிய கடனுக்காகத் தன் மகனையும் கொத்தடிமையாக்க முடிவு செய்கிறார், தசரத்தின் தந்தை. அதை ஏற்க முடியாமல் ஊரை விட்டு ஓடிவிடும் தசரத், எங்கெங்கோ திரிந்து நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்து சில வருடங்கள் கழித்து ஊர் திரும்புகிறார். ஆனால் பழமைவாதம் துளியும் மாறாமல் ஊர் அப்படியே இருக்கிறது.
இளம் வயதிலேயே தனக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண்ணைச் சந்திக்கிறார். தசரத்துக்குள் காதல் பெருகுகிறது. ஆனால் ‘எந்தவொரு சரியான வேலையும் இல்லாமல் இருக்கிறவனுடன் என் பெண்ணை அனுப்ப மாட்டேன்’ என்று பெண்ணின் தந்தை சொல்கிறார். இன்னொரு திருமணம் நடத்தவும் முடிவு செய்கிறார். வெகுண்டெழும் தசரத் வீட்டுக்குள் புகுந்து தன் மனைவியைத் தூக்கிச் செல்கிறார். பாகுனியாவுக்கும் தசரத்துடன் செல்வதுதான் விருப்பம். அவர்களின் இல்லற வாழ்க்கை துவங்குகிறது. காதல் மனைவியின் மீது உயிரையே வைத்திருக்கிறார் தசரத். தனக்கு கிடைத்த அரிய பரிசாக எண்ணி உருகுகிறார்.
காதலும் காமமுமாக அவர்களின் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்று கொண்டிருக்கிறது. இரண்டாவது குழந்தையைச் சுமந்து கொண்டிருக்கிறாள் பாகுனியா. விவசாயக் கூலியாகச் சென்றிருக்கும் கணவனுக்காக உணவைச் சுமந்து கொண்டு மலையைக் கடக்க முயற்சி செய்கிறாள். கால் சறுக்கி கீழே விழுந்து படுகாயம் அடைகிறாள். உரிய நேரத்தில் மருத்துவம் கிடைக்காமல் இறக்கிறாள்.
காதல் மனைவியின் மரணம் தசரத்தை உலுக்கிப் போடுகிறது. தன்னுடைய வாழ்க்கையே உடைந்து நொறுங்கிப் போனதாக உணரும் தசரத், இனி அந்த ஊரில் வேறு எவருக்கும் இப்படியொரு மரணம் நிகழக்கூடாது என்று உறுதியேற்கிறார். தன்னந்தனியாக நின்று மலையை உடைக்கத் துவங்குகிறார். ஒரு வரலாற்று சாதனையை தன்னந்தனியாக செய்து முடிக்கிறார். பிறகு வரலாறாகவே ஆகிறார்.
தசரத் மான்ஜியாக வாழ்ந்த நவாசுத்தீன் சித்திகி
‘கதாபாத்திரமாகவே வாழ்ந்தார்’ என்று ஒரு நடிகரின் சிறப்பை சம்பிரதாயமான வார்த்தைகளில் சொல்வார்கள். ஆனால் தசரத் மான்ஜியாக நடித்திருக்கும் நவாசுத்தீன் சித்திகியின் பங்களிப்பை உண்மையாகவே அப்படிச் சொல்லலாம். மனிதர் கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்.
சிவப்பு நிற பேண்ட், மஞ்சள் நிற சட்டை, கூலிங்கிளாஸூடனும் வாய் நிறைய சிரிப்புடனும் ஊருக்குள் கெத்தாக நுழைவது, இளம் வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்ட மனைவியை தற்செயலாகப் பார்த்து, யாரென்றே தெரியாமல் காதல் வசப்படுவது, நிலவுடைமையாளரிடம் சென்று ‘எப்படியிருக்கீங்க..?’ என்று விசாரித்து அவரது மகனைக் கட்டியணைத்துக்கொள்வது, தசரத்தின் பின்னணியை அறிந்தவுடன் அவர்கள் போட்டு மிதிக்க ‘தீண்டாமையை ஒழிச்சாச்சு… யாரை வேணா யாரும் தொடலாம்ன்னு அரசாங்கம் சொல்லுச்சே’ என்று பரிதாபமாக முனகுவது… என்று ஒரு அப்பாவியான கிராமத்து இளைஞரின் சித்திரத்தை தனது அற்புதமான நடிப்பின் வழியாக வழங்கியுள்ளார் நவாசுத்தீன் சித்திகி.
தசரத்தின் காதல் மனைவி பாகுனியாவாக ராதிகா ஆப்தே அருமையாக நடித்துள்ளார். இருவருக்குமான காதலும் ஊடலும் ரசனையான காட்சிகளாகப் பதிவாகியுள்ளன. மனைவியை இழந்த துயரத்தை ஜீரணிக்க முடியாமல் தசரத் தடுமாறுகிறார். ஓ….வென்று அழுகிறார். அவருடைய துயரம் பார்வையாளர்களுக்கும் கடத்தப்படும் வகையில் இவர்களின் காதல் வாழ்க்கை தொடர்பான காட்சிகள் இயல்புத்தன்மையுடன் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன.
சுத்தியலும் உளியுமாகக் கிளம்பும் தசரத்தின் உருவம் ஆண்டுக்கு ஆண்டு மாறிக் கொண்டே போகிறது. நீண்ட தலைமுடியும் தாடியுமாக தொடர்ந்து கல்லை உடைத்துக் கொண்டே இருக்கிறார். காலகட்டம் மாறுவதற்கேற்ப நவாசுத்தீன் சித்திகியின் உடல்மொழியும் நடிப்பும் அதற்கேற்ப மாறிக் கொண்டேயிருக்கிறது. ‘மலையை உடைக்கறேன்னு உயிரைத்தான் விடப் போறான்… இவன் நிச்சயம் பைத்தியம்தான்…’ என்று ஊர் மக்கள் கிண்டல் செய்தாலும் தசரத்தின் மனவுறுதிக்குத் துணையாக நிற்பது காதல் மனைவியின் நினைவுகள்தான். ஆம், அவளுக்கு வாங்கித்தந்த ஒற்றைக் கொலுசின் சத்தம்தான் அவனுடைய வாழ்க்கையின் ஓசையாக இருக்கிறது.
மலையுடன் நிகழும் சண்டையும் சமாதானமும்
வறட்சி காரணமாக ஒட்டுமொத்த ஊரே கிளம்பினாலும், தன் பணியைவிட்டு விலகாமல் இருக்கிறான் தசரத். வெயில் மண்டையைப் பிளக்க, ஒரு சொட்டு நீர்கூட கிடைக்காமல் தவிக்கும் தசரத், பாறைக்கு அடியில் இருக்கும் ஊற்றை தற்செயலாகக் கண்டெடுப்பது, பாம்புக்கடியின் விஷம் ஏறாமல் இருப்பதற்காக கால் கட்டை விரலை உளியால் துண்டித்துக் கொள்வது, பெய்யும் பெருமழையில் மனைவியுடன் இருப்பதாகக் கற்பனை செய்வது போன்ற காட்சிகள் அற்புதமாகப் பதிவாகியுள்ளன.
மலையுடன் கோபித்துக்கொண்டு அதனுடன் ஒரு நெடும் போரைத் துவங்கும் தசரத், ஒரு கட்டத்தில் மலையின் நண்பனாக மாறுவதும், அதைத் தொட்டுக் கும்பிடுவதும், ‘இன்னிக்கு விடுமுறை. உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன்’ என்று சிரிப்புடன் சொல்வதும் சிறப்பான காட்சிகள்.
தேர்தல் பிரச்சாரத்துக்காக இந்திரா காந்தி வருவது, கூட்டத்தைப் பிளந்து கொண்டு தன்னுடைய கோரிக்கையை தசரத் சொல்வது, மலைப்பாதைக்காக அரசாங்கம் ஒதுக்கும் பணத்தை முதலாளியின் மகன் கையாடல் செய்வது, அதைப்பற்றி விசாரிப்பதற்காக தசரத் டெல்லிக்கு நடந்தே செல்வது, எமர்ஜென்சி சூழலில் தசரத்தின் குரல் யாருக்கும் கேட்காமல்போவது தொடர்பான காட்சிகள் இயல்புத்தன்மையுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஹாலிவுட் திரைப்படங்களின் தரத்துக்கு நிகராக இந்தப் படத்தை இயக்கியுள்ளார் கேத்தன் மேத்தா. 1960 காலகட்டத்து பிஹார் கிராமத்தின் பின்னணி முதல் 1981 வரையிலான காட்சிகளின் பின்னணி சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. சந்தேஷ் சாண்டில்யாவின் பின்னணி இசையும் பாடல்களும் படத்துக்கு உயிரோட்டத்தைத் தந்திருக்கின்றன. ராஜீவ் ஜெயினின் ஒளிப்பதிவு மிக நேர்த்தியாக அமைந்திருக்கிறது.
தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்து, ஊர் நலனுக்காக ஒரு மலைப்பான பணியைத் தன்னந்தனி ஆளாகச் செய்து முடித்து, மக்களின் மனத்தில் மிக உயரத்துக்குச் சென்று நிரந்தரமாக வாழும் ஒரு மனிதரின் கதை இது.
(தொடர்ந்து பேசுவோம்)