Skip to content
Home » தலித் திரைப்படங்கள் # 26 – மஸான்

தலித் திரைப்படங்கள் # 26 – மஸான்

மஸான்

காதல் திருமணம், நகரமயமாதல், கல்வி போன்ற சமூக மாற்றங்கள் நிகழ்வது சாதியம் மட்டுப்படுவதற்கான காரணிகளாக இருக்கும் என்பதை ‘Masaan’ என்கிற 2015இல் வெளியான திரைப்படம் நுட்பமாகப் பதிவு செய்துள்ளது. நீரஜ் கெய்வான் இயக்கிய முதல் திரைப்படமான ‘மஸான்’ (மயானம்), சர்வதேச அரங்குகளில் திரையிடப்பட்டுப் பல அங்கீகாரங்களையும் பெற்றுள்ளது.

இந்தியாவின் பழமையான நகரங்களுள் ஒன்றான ‘வாராணசி’யின் பின்னணியில் இந்தத் திரைப்படம் இயங்குகிறது. இறந்தவர்களின் சடலத்தைக் கங்கையின் படித்துறையில் தகனம் செய்தால் மோட்சம் கிட்டும் என்பது இந்துமத நம்பிக்கை. இங்கு வாழும் இரு தனிநபர்களின் உள்ளார்ந்த மரணத்தையும் அதிலிருந்து கிடைக்கும் மீட்சியின் வழியையும் இந்தத் திரைப்படம் குறியீடாக உணர்த்துகிறது. பழமைவாதத்தின் பிடியிலிருந்து இளைய தலைமுறை எவ்வாறு தன்னைத் துண்டித்து விடுதலை செய்துகொள்ளத் துடிக்கிறது என்பது இயல்பாகச் சொல்லப்பட்டுள்ளது.

இரு தனிநபர்களின் வழியாக விரியும் திரைக்கதை

இளைய தலைமுறையைச் சேர்ந்த இரு தனிநபர்களின் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களை அடுத்தடுத்து இணைத்துக் காட்டுவதின் மூலம் இந்தப் படம் நகர்கிறது. முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தேவி, தன் காதலனுடன் ஒரு விடுதியில் பாலுறவு கொள்ளும்போது காவல்துறை உள்ளே நுழைகிறது. அவர்களை அம்பலப்படுத்தப்போவதாக மிரட்டுகிறது. அச்சமடையும் ஆண் கழிவறையில் நுழைந்து தற்கொலை செய்துகொள்கிறான். தேவியை வீடியோ எடுக்கும் காவல்துறை அதிகாரி, அதை வைத்து தேவியின் தந்தையை மிரட்டி பெரும் தொகையைக் கேட்கிறார். தேவியின் தந்தை படித்துறை அருகே கடை வைத்திருக்கும் சாதாரண பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். வறுமையான பின்னணி என்றாலும் குடும்ப கௌரவத்திற்காக வேறு வழியின்றிப் பணம் தரக் கண்ணீருடன் ஒப்புக்கொள்கிறார்.

காதலனின் மரணம், காவலதிகாரியின் பிளாக்மெயில், தந்தையின் உளைச்சல் போன்ற விஷயங்கள் தேவியை மன அழுத்தத்திலும் குற்றவுணர்விலும் ஆழ்த்துகிறது. ‘வீடியோ’ விஷயம் வெளியில் கசிவதால் அது சார்ந்த பாலியல் மிரட்டல்களும் ஏற்படுகின்றன. ரயில்வேயில் கிடைக்கும் தற்காலிகப் பணி தேவிக்கு ஆசுவாசத்தை ஏற்படுத்துகிறது. காவலதிகாரிக்குத் தர வேண்டிய பணத்தைச் சிறுகச் சிறுகத் தந்து முடித்தவுடன் உயர்படிப்பிற்காக நகரத்திற்கு இடம் பெயர்கிறார். படித்துறையில் அமர்ந்து காதலன் தந்த பரிசுப் பொருளை நதியில் போட்டுவிட்டு கண்ணீருடன் அமர்ந்திருக்கிறார்.

இதுவொரு கதை. அதே வாராணசியில் வாழும் இன்னொரு இளைஞனின் கதையும் இணைக்கோடாகப் பயணிக்கிறது.

ஒடுக்கப்பட்ட சமூக இளைஞனின் காதல்

தீபக் குமார் சிவில் எஞ்ஜினியரிங் படிக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞன். படித்துறையில் பிணத்தை எரித்துப் பிழைக்கும் குடும்பத் தொழில். கல்விதான் தன்னை விடுதலை செய்யும் என்பதை உணர்ந்திருக்கும் தீபக் ஆர்வமாகப் படிக்கிறான். ஆனால் அந்த வயதுக்கேயுரிய விஷயம் குறுக்கிடுகிறது. ஷாலு என்கிற பெண்ணைப் பார்த்தவுடன் காதல் கொள்கிறான். சமூகவலைத்தளத்தின் மூலம் அறிமுகம் செய்துகொண்டு பழகத் துவங்குகிறான். அவர்களுக்குள் இயல்பான காதல் நிகழ்கிறது. தன்னுடைய பின்னணி பற்றி முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த காதலியிடம் சொல்லத் தயங்குகிறான்.

மஸான்

தீபக்கின் வசிப்பிடம் பற்றி ஷாலு இயல்பாக விசாரிக்க, அது குறித்த சங்கடத்தில் இருக்கும் தீபக், எரிச்சலுடன் தன் பின்னணி பற்றிச் சொல்லி விலகி விடுகிறான். ‘என்னுடைய குடும்பத்தினர் திருமணத்திற்கு நிச்சயம் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நீ நன்றாகப் படித்து வேலையைத் தேடு. உன்னுடன் வருகிறேன்’ என்று ஷாலு சொன்னதும் படிப்பை ஆர்வத்துடன் தொடர்கிறான். ஷாலுவின் குடும்பம் யாத்திரை செல்லும்போது பேருந்து விபத்துக்குள்ளாகி விடுகிறது. தான் எரிக்க வேண்டிய சடலமாக ஷாலுவின் உடல் இருப்பதைப் பார்த்து தீபக் மனம் உடைந்து போகிறான். ஷாலுவின் நினைவாகவே இருக்கிறான். என்றாலும் தன் குடும்ப நிலைமையை உணர்ந்து மீண்டும் கல்வியில் கவனம் செலுத்திப் பணியில் இணைந்து நகரத்திற்கு இடம் பெயர்கிறான்.

படித்துறையில் தீபக் அமர்ந்திருக்கும்போது அங்கு வரும் ஓர் இளம்பெண் பரிசுப்பொருளை நதியில் இட்டு கண்ணீருடன் இருப்பதைப் பார்த்து தண்ணீர் தருகிறான். இருவரும் திரிவேணி சங்கமத்திற்குப் படகில் உரையாடிக் கொண்டே செல்லும் காட்சியோடு படம் நிறைகிறது.

சிறிய பிரதேசங்களின் கலாச்சாரப் புழுக்கங்கள்

திருமண வயது கொண்ட ஓர் இளம்பெண், தன் காதலனுடன் பரஸ்பரச் சம்மதத்தின் பேரில் பாலுறவு கொள்வதற்குக்கூடச் சுதந்திரம் இல்லாத சூழலையும் அதன் பின்னுள்ள பதற்றத்தையும் ஆரம்பக் காட்சிகள் திறமையாக வெளிப்படுத்துகின்றன. விடுதி அறைக்குள் அத்துமீறி உள்ளே நுழையும் காவல்துறை ஆணை மிரட்டி பெண்ணை வீடியோ எடுத்து அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. ஆண் பயந்து தற்கொலை செய்து கொண்டாலும், இந்தச் சூழலை, தேவி மன உறுதியுடன் எதிர்கொள்கிறாள்.

காவல் துறை அதிகாரியின் மிரட்டல், தந்தையின் துயரம், காதலின் நினைவு போன்ற மன உளைச்சல்களைத் தேவி பொறுமையுடன் சகித்துக்கொள்கிறாள். தான் கற்ற கல்வியின் மூலம் நகரத்திற்கு இடம் பெயர்ந்து ஆசுவாசமடைகிறாள்.

பிராமண சமூகத்தைச் சேர்ந்த காரணத்தால் தன் குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றும் பொருட்டு காவல்துறை அதிகாரியின் மிரட்டலுக்கு அடிபணிந்து விடுகிறார், தேவியின் தந்தை. தன் கடையில் பணிபுரியும் சிறுவனை, அன்பாக நடத்தும் அவர், பண நெருக்கடி காரணமாக அவனை நீச்சல் பந்தயத்தில் ஈடுபடச் சொல்லி அடித்துக் கட்டாயப்படுத்தும் அளவிற்கு மாறி விடுகிறார். நதியில் மூழ்கி உயிராபத்து ஏற்படும் நிலைக்குச் செல்லும் சிறுவனை மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றிவிட்டு கண்ணீர் விடுகிறார். அங்கிருந்து இடம் பெயர முடிவு செய்யும் மகளின் சூழலை ஒரு கட்டத்தில் புரிந்துகொண்டு அதற்கு ஆதரவு தருகிறார். தேவியாக நடித்திருக்கும் ரிச்சா சத்தா மற்றும் அவரது தந்தையாக நடித்திருக்கும் சஞ்சய் மிஷ்ரா ஆகிய இருவரின் பங்களிப்பும் அருமையாக அமைந்துள்ளது.

மஸான்

ஒடுக்கப்பட்ட சமூக இளைஞனாக நடித்திருக்கும் விக்கி கௌஷலின் நடிப்பும் அற்புதம். ‘பிணம் எரிக்கும் இந்தக் குடும்பத் தொழிலில் நீயும் மாட்டிக்கொள்ளாதே. படித்து முன்னேறு’ என்று தன் தந்தை சொல்வதை தீபக் தீவிரமாகப் பின்பற்றுகிறான். தன்னுடைய இருப்பிடம் பற்றிக் காதலி விசாரிக்கும்போது ஏற்படும் பதற்றத்தை வெளிப்படுத்தும் காட்சி சிறப்பாக அமைந்துள்ளது.

முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த காதலியாக ஸ்வேதா திரிபாதியின் நடிப்பும் இயல்பாக அமைந்துள்ளது. ‘உன்னை யாராவது அழ வைத்தால் என்னிடம் சொல். நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொல்லி கவர்வதின் மூலம் தன் காதலை வெளிப்படுத்துகிறான் தீபக். ‘நீ அழ வைத்தால் யாரிடம் சொல்வது?’ என்று ஷாலு அப்போது கேட்கும் கேள்வி முக்கியமானது. ‘அதையும் என்னிடமே சொல். பார்த்துக்கொள்கிறேன்’ என்று தீபக் சமாளித்துப் பதில் சொல்கிறான்.

விட்டு விடுதலையாகத் துடிக்கும் இளைய தலைமுறை

தேவி முற்பட்ட சமூகத்தையும், தீபக் ஒடுக்கப்பட்ட சமூகத்தையும் சேர்ந்தவர்கள்… என்றாலும் ஒருவகையான சமூக ஒற்றுமையைக் கொண்டிருக்கிறார்கள். கலாச்சாரப் புழுக்கமுடைய சிறிய இடங்கள் அவர்களின் விடுதலைக்குக் குறுக்கே நிற்கின்றன. கல்வி, நகரமயமாதல் போன்றவற்றின் மூலம் இளைய தலைமுறை இதற்குத் தீர்வு காண முயல்கிறது. தன்னுடைய சமூகப் பின்னணி பற்றி எரிச்சலும் பதற்றமுமான கலவையுடன் சொல்லிவிட்டு தீபக் விலகிவிட்டாலும் அந்தக் காதலுக்கு ஆதரவு தரும் இளம் பெண்ணாக ஷாலு இருப்பது நெகிழ்ச்சியைத் தருகிறது.

தேவி, தீபக் ஆகிய இந்த இருவரின் பயணங்களும் தனித்தனியே நடந்தாலும் ஆங்காங்கே இணைவதுபோல் எழுதப்பட்டிருக்கும் திரைக்கதை வசீகரமாக இருக்கிறது. காதலியின் நினைவாகத் தன்னிடம் இருக்கும் மோதிரத்தைத் துயரத்துடன் நதியில் எறிந்து விடுகிறான் தீபக். சட்டென்று சுதாரித்து ஆவேசத்துடன் தேடினாலும் அது கிடைப்பதில்லை. அதே சமயத்தில் நீச்சல் பந்தயத்தில் ஈடுபடும் சிறுவனிடம் அந்த மோதிரம் கிடைக்கிறது. அதை விற்றுக் காவல்துறை அதிகாரிக்குத் தர வேண்டிய இறுதித் தவணையைத் தருகிறார், தேவியின் தந்தை.

தேவியும் தீபக்கும் தற்செயலாகச் சந்திக்கும் இறுதிக் காட்சி அருமையானது. காதலனின் நினைவு காரணமாக கண்ணீருடன் அமர்ந்திருக்கும் தேவிக்குக் குடிக்கத் தண்ணீர் தந்து ஆசுவாசப்படுத்துகிறான் தீபக். இருவரும் படகில் ஏறி திரிவேணி சங்கமத்திற்குப் பயணப்படுகிறார்கள். ‘முதல் முறை தனியாகவும் இரண்டாவது முறை ஒரு துணையுடனும் சங்கமத்திற்கு வர வேண்டும் என்று சொல்கிறார்கள்’ என்று தேவியிடம் தீபக் உரையாடலைத் துவங்குகிற காட்சியோடு படம் நிறைகிறது. தங்களின் காதலை இழந்து நிற்கும் அவர்களுக்கு இடையே ஒரு புதிய உறவு உதயமாகக்கூடும் என்கிற நம்பிக்கையை அந்தக் காட்சி தருகிறது.

மஸான்

அவினாஷ் அருணின் ஒளிப்பதிவு தொன்மையான நகரான வாராணசியின் அழகைப் பதிவுசெய்த கையோடு சடலங்கள் எரியூட்டப்படுவதின் வெம்மையையும் நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறது. இந்தியன் ஓஷன் இசைக்குழுவின் பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் சிறப்பிற்குத் துணை நின்றிருக்கின்றன. பழமைவாதத்தின் பிடியிலிருந்து தங்களைத் துண்டித்துக் கொண்டு புதிய விடுதலையை நோக்கி நகர முயல்கிற இளைய தலைமுறையின் உணர்வுகளை இந்தத் திரைப்படத்தின்மூலம் சிறப்பாகக் கடத்தியிருக்கிறார் இயக்குநர் நீரஜ் கெய்வான்.

(தொடர்ந்து பேசுவோம்)

பகிர:
nv-author-image

சுரேஷ் கண்ணன்

உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை தொடர்ச்சியாக எழுதி வருபவர். அழகியல் சார்ந்த ரசனையோடு சினிமாவைப் பற்றிய உரையாடலைப் பல ஆண்டுகளாக நிகழ்த்துபவர். குமுதம், தீராநதி, உயிர்மை, காட்சிப்பிழை, அம்ருதா, பேசும் புதியசக்தி போன்ற இதழ்களில் எழுதியிருக்கிறார். விகடன் இணையத்தளத்தில் ‘பிக் பாஸ் நிகழ்ச்சி’ பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *