Skip to content
Home » தலித் திரைப்படங்கள் # 27 – கம்மாட்டிப்பாடம்

தலித் திரைப்படங்கள் # 27 – கம்மாட்டிப்பாடம்

கம்மாட்டிப்பாடம்

வரலாறு என்பது எப்போதும் மன்னர்களைப் பற்றியதாக இருந்திருக்கிறது. மேல்தட்டு மக்களுடையதாகவே இருந்திருக்கிறது. ஆலயம், அணைக்கட்டு என்று எந்தவொரு பழங்கால அடையாளத்தைவைத்து வரலாற்றுப் பெருமையைப் பேசும் போதெல்லாம் அதன் உருவாக்கத்தில் தங்களின் உழைப்பையும் குருதியையும் தந்த அடித்தட்டு மக்களைப்பற்றி வரலாறு என்றும் பேசியதில்லை. நவீன காலத்திலும் இதே நிலைமைதான்.

ஒவ்வொரு பெருநகரத்தின் வளர்ச்சிக்கும் பின்னால் ஒடுக்கப்பட்ட மக்களின் உழைப்பும் வியர்வையும் இருக்கிறது. அவர்களின் வசிப்பிடங்களை, வாழ்வாதாரங்களைக் காவு தந்த பிறகு அதன் மீதுதான் பிரம்மாண்டமான கட்டடங்கள் வளர்ந்து நிற்கின்றன. தங்களின் இடத்தையும் இழந்து உழைப்பையும் தந்த அடித்தட்டு மக்கள், சக்கையான குப்பை போல நகரத்துக்கு வெளியே தூக்கி வீசப்படுகிறார்கள்.

காலம் எத்தனை மாறினாலும் நிலைமையில் பெரிதும் மாற்றமில்லாத ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரு துளி வரலாற்றை வன்முறையின் அழகியலுடன் பதிவாக்கியிருக்கும் திரைப்படம்தான் ‘கம்மட்டிபாடம்’. ராஜீவ் ரவியின் இயக்கத்தில் 2016-ல் வெளியான மலையாளத் திரைப்படம். விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற படைப்பு. ‘இந்தியாவில் உருவாக்கப்பட்ட மிகச் சிறந்த கேங்க்ஸ்டர் படங்களில் இதுவும் ஒன்று’ என்று பாராட்டுகிறார் இயக்குநர் அனுராக் காஷ்யப்.

உதிரி மனிதர்களின் குருதி சொட்டும் வாழ்க்கை

கிருஷ்ணனின் பார்வையில் இந்தப் படம் விரிகிறது. கிருஷ்ணன் கத்தியால் குத்தப்பட்டு ஒரு பேருந்தில் ஏறிப் பயணம் செய்கிறான். பாதி மயக்க நிலையில் கம்மட்டிபாடம் தொடர்பான அவனுடைய பழைய நினைவுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. கிருஷ்ணன் சிறுவனாக இருக்கும்போது அவனுடைய குடும்பம் புதிய இடத்துக்கு நகர்கிறது. அங்கு தலித் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர்களான பாலன், கங்கா ஆகியோரின் நட்பு கிருஷ்ணனுக்கு கிடைக்கிறது. மிக நெருக்கமான தோழர்களாக அவர்கள் மாறுகிறார்கள். கங்காவின் முறைப் பெண்ணான அனிதாவை நேசிக்கிறான் கிருஷ்ணன். இருவருக்குமான காதல் ரகசியமாக வளர்கிறது.

பாலனும் அவனுடைய குழுவும் சாராயம் கடத்துவது உள்ளிட்ட சட்ட விரோதமான காரியங்களைச் செய்கிறார்கள். இது தொடர்பாக நிகழும் வன்முறைகளில் பாலன் முன்னின்று ஆவேசமாகச் செயல்படுகிறான். அவனுடைய வன்முறையுணர்வு கிருஷ்ணனுக்குள்ளும் பரவுகிறது. அவனும் ஒரு ரவுடியாக மாறுகிறான். ரியல் எஸ்டேட் மாஃபியாவுக்கு வேலை செய்யும் பாலன், நிலம் வைத்திருப்பவர்களை மிரட்டி அச்சுறுத்தி வெளியேற்றுகிறான். ‘இது நம்மைப் போன்ற ஏழை மக்களின் இருப்பிடம் இல்லையா?’ என்று பாலனின் தாத்தா கெஞ்சுகிறார். இதைத் தடுக்க முடியாமல் மனம் உடைந்து இறக்கிறார்.

தாத்தாவின் மரணம் பாலனின் மனதை மாற்றுகிறது. சொந்த மக்களின் நிலங்களைப் பறித்து முதலாளிகளிடம் ஒப்படைப்பதற்கு உடந்தையாக இருந்துவிட்டோமே என்று வருந்துகிறான். மனம் திருந்தி, புதிய தொழிலை ஆரம்பிக்க நினைக்கும்போது பழைய பகை ஒன்றின் காரணமாகக் கொல்லப்படுகிறான். தனது அண்ணன் பாலனின் கொலைக்கு கிருஷ்ணன்தான் காரணம் என்று கங்கா தவறாக நினைக்கிறான். இருவருக்குள்ளும் விரிசல் ஏற்படுகிறது.

பாலனின் கொலைக்குக் காரணமாக இருந்தவனை கிருஷ்ணன் கொல்ல முயற்சி செய்கிறான். போலீஸ் கிருஷ்ணனைத் தேடுகிறது. அனிதாவை அழைத்துக்கொண்டு எங்காவது செல்ல முயற்சிப்பதற்குள் கைது செய்யப்படுகிறான். சிறைத் தண்டனை முடிந்து கிருஷ்ணன் வெளியே வரும்போது கங்காவுக்கும் அனிதாவுக்கும் திருமணம் நடந்து விட்ட செய்தியை அறிந்து அங்கிருந்து விலகி மும்பைக்குச் சென்று செக்யூரிட்டி ஏஜென்சியில் பாடிகார்டாகப் பணிபுரிகிறான்.

நீண்ட காலம் கழித்து ஒரு நாள் கங்காவிடமிருந்து கைபேசி அழைப்பு வருகிறது. ‘தன்னை யாரோ கொல்ல முயற்சிப்பதாக’ கங்கா சொல்கிறான். அதற்குள் அழைப்பு துண்டிக்கப்படுகிறது. கங்காவைத் தேடி பல வருடங்கள் கழித்து மீண்டும் கம்மட்டிபாடம் வருகிறான் கிருஷ்ணன். கங்காவின் மரணத்துக்கான காரணத்தை தேடிப் பயணம் செய்யும் போதுதான் கத்தியால் குத்தப்படுகிறான். பிறகு என்ன நிகழ்கிறது என்பதுதான் உச்சகட்டக் காட்சி.

முதலாளித்துவத்தின் தந்திரத்துக்குப் பலியாகும் அடித்தட்டு சமூகம்

மேற்பார்வைக்கு கேங்க்ஸ்டர் படம் போலத் தெரிந்தாலும் இந்தப் படத்தின் ஆதாரமான மையம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் துயரம்தான். குற்றச் செயல்களுக்கு தலித் மக்கள் உபயோகப்படுத்தப்படுவதும், அவர்களின் வாழ்வாதாரம் பிடுங்கப்பட்டு அதன் மீது முதலாளித்துவம் பிரம்மாண்டமாக வளர்வதும்தான்.

வசீகரமான திரைக்கதையின் மூலம் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் ராஜீவ் ரவி. காயமுற்றிருக்கும் கிருஷ்ணன், மயக்க நிலையில் தன் பழைய நினைவுகளை மீட்டெடுப்பதின் மூலம் அவனுடைய இளமைப்பருவம் தொடர்பான காட்சிகள் விரிகின்றன. காணாமல் போன கங்காவைத் தேடி கிருஷ்ணன் அலையும் காட்சிகளின் வழியாக இன்னொரு பக்கத் திரை விலகுகிறது. காலம் முன்னும் பின்னுமாக நகரும் நான் லீனியர் திரைக்கதையின் வழியாக எவ்விதக் குழப்பமும் இல்லாமல் சுவாரசியமான காட்சிகளின் வழியாக படத்தை உருவாக்கியுள்ளார் ராஜீவ் ரவி.

மது நீலகண்டனின் நேர்த்தியான ஒளிப்பதிவு, நான்லீனியர் காட்சிகளை சிறப்பாகக் கையாண்டிருக்கும் அஜித்குமாரின் எடிட்டிங் போன்ற தொழில்நுட்ப விஷயங்கள் சிறப்பாக அமைந்திருக்கின்றன. குறிப்பாக ’கே’ (கிருஷ்ண குமார்) அமைத்திருக்கும் பாடல்களும் பின்னணி இசையும் பல இடங்களில் ரகளையாக இருக்கிறது.

பாலன் இயல்பிலேயே வன்முறையுணர்வு பெருகி வழிபவனாக இருக்கிறான். முரட்டுத்தனமாக அடிப்பதின் மூலம் எவரையும் வீழ்த்திவிட முடியும் என்கிற தன்னம்பிக்கையுடன் இருக்கிறான். எனவே முதலாளிமார்கள் இவனை அடியாளாகப் பயன்படுத்தி, காரியம் சாதித்துக் கொள்கிறார்கள். பாலனின் தம்பியான கங்கா மற்றும் இவர்களின் நண்பனான கிருஷ்ணன் என்று சில இளைஞர்கள் இந்த வன்முறையின் பால் ஈர்க்கப்பட்டு குழுவாக மாறுகிறார்கள். ஒருவருக்கொருவர் விசுவாசமாக இயங்குகிறார்கள்.

ஆண்களின் குரூரமான விளையாட்டில் பெண்கள் பகடைக்காயாக இருப்பதின் அவலம் இதிலும் பதிவாகியிருக்கிறது. அனிதாவும் கிருஷ்ணனும் இளமையில் இருந்தே ஒருவர் மீது ஒருவர் நேசத்தைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தன்னுடைய முறைப்பெண், கிருஷ்ணனிடம் பழகுவதை கங்காவால் ஏற்றுக்கொள்ள முடியாமல் ஆட்சேபிக்கிறான். மனம் குமைந்தாலும் நட்பு கருதி கிருஷ்ணன் இந்த விஷயத்தைச் சகித்துக் கொள்கிறான். இப்படிப்பட்ட சங்கடமான சூழலில் கிருஷ்ணன் ஒரு முடிவை எடுப்பதற்குள் நிலைமை கை மீறுகிறது. அனிதாவை கங்கா திருமணம் கொள்கிறான். ஆனால் ஒரு கட்டத்தில், அனிதாவின் வாழ்க்கையைப் பாழ்படுத்திவிட்டதாக உணரும் கங்கா, கிருஷ்ணன்தான் அவளுக்குப் பொருத்தமானவன் என்று முடிவு செய்கிறான். ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்துவிடுகிறது.

சிறந்த நடிகர்களின் அபாரமான கூட்டணி

கிருஷ்ணனாக துல்கர் சல்மான் சிறப்பாக நடித்திருக்கிறார். முன்னணி நடிகராக இருந்தாலும் திரைக்கதையில் தன்னுடைய இடமும் பங்கும் என்ன என்பதை உணர்ந்து அதில் தன்னைப் பொருத்திக் கொண்டிருக்கிறார். நடுத்தர வயதுள்ளவனாக நடிக்கவும் அவர் தயங்கவில்லை. பாலனாக மணிகண்டனும் கங்காவாக விநாயகனும் தங்களின் மிகச் சிறந்த நடிப்பைத் தந்திருக்கிறார்கள். இதில் விநாயகனின் நடிப்பு மிக அபாரமானதாக அமைந்திருக்கிறது. ‘சிறந்த நடிகருக்கான’ மாநில விருதை அவர் பெற்றார். சில வாக்குகள் குறைந்ததால் தேசிய விருதைத் தவறவிட்டதாகச் சொல்கிறார்கள்.

பாலனின் குடும்பத்தில் அனைவருக்குமே முன்னம் பல் துருத்திக்கொண்டு சற்று தூக்கலாக இருக்கும். எனவே இதற்காக செயற்கையான பல்லைப் பயன்படுத்தி நடித்திருக்கிறார்கள். பாலன், கங்கா, கிருஷ்ணன், அனிதா ஆகிய நால்வருக்கும் பொருத்தமான தோற்றத்தில் இருக்கக்கூடிய சிறுவர்களை, இளைஞர்களை அந்தந்தக் காலகட்டத்தின் தொடர்ச்சிக்காகத் தேர்வு செய்திருப்பது அருமை. காட்சிகளின் நம்பகத்தன்மைக்கு இது பெரிதும் உதவியாக இருந்திருக்கிறது.

அது எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நாயகி என்று வந்துவிட்டால் சினிமாவுக்கேற்ற நிறத்துடனும் கவர்ச்சியுடனும் சித்திரிப்பதுதான் வழக்கம். ஆனால் இதில் அனிதா பாத்திரத்துக்கு பொருத்தமான நடிகையைத் தேர்ந்தெடுத்திருப்பது பாராட்டத்தக்கது. மிதமான காதலும் சோகமும் பொங்கும் கண்களோடு ஷான் ரோமி இந்தப் பாத்திரத்தில் திறமையாகப் பொருந்தியுள்ளார். பாலனின் தாத்தாமுதல் பல பாத்திரங்கள் இயல்பாக வந்து போகிறார்கள். காலம் மாறுவதற்கேற்ப அவர்களின் புறத்தோற்றமும் மாறுவதைச் சரியான ஒப்பனையின் வழியாகக் காட்டியிருப்பது சிறப்பு.

பெருநகரங்களின் வளர்ச்சிக்குப் பின்னுள்ள துயரம்

1957-ன் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவிலேயே முதன்முறையாக கம்யூனிஸ்ட் கட்சி அரசு அமைத்தது. நிலச்சீர்த்திருத்தச் சட்டத்தின் வழியாக நிலமற்றவர்களுக்கு, குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கான, விவசாய நிலங்களை ஈ.எம்.எஸ்ஸின் அரசு வழங்கியது. ஆனால் ஒருகட்டத்தில் பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்தி இந்த நிலங்களை முதலாளித்துவ சக்திகள் பறித்துக் கொண்டன. ரியல் எஸ்டேட் வணிகம் படு வேகமாக வளர்ந்தது. உயர்ந்த கட்டடங்களும் வண்ண விளக்குகளுமாகச் சூழல் மாறியது. கொச்சின் என்கிற பிரதேசம் எவ்வாறு கொச்சி என்கிற மெட்ரோ சிட்டியாக உருமாறியது என்கிற வரலாற்றை ‘கம்மட்டிபாடம்’ திரைப்படம் மிகச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறது.

தலித் சமூகத்தினரின் உடமைகள் பறிக்கப்படுதல், அவர்களின் மீது முதலாளித்துவம் நிகழ்த்தும் உழைப்புச் சுரண்டல், அடித்தட்டு மக்களின் உடல் பலத்தை வன்முறைச் செயல்களுக்குப் பயன்படுத்திவிட்டுப் பிறகு அவர்களை வெளியே தூக்கியெறியும் அவலம், அதிலிருந்து விரியும் விழிப்புணர்வு போன்றவற்றைச் சிறப்பான திரைக்கதையின் மூலம் இந்தப் படம் விவரிக்கிறது.

(தொடர்ந்து பேசுவோம்)

பகிர:
சுரேஷ் கண்ணன்

சுரேஷ் கண்ணன்

உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை தொடர்ச்சியாக எழுதி வருபவர். அழகியல் சார்ந்த ரசனையோடு சினிமாவைப் பற்றிய உரையாடலைப் பல ஆண்டுகளாக நிகழ்த்துபவர். குமுதம், தீராநதி, உயிர்மை, காட்சிப்பிழை, அம்ருதா, பேசும் புதியசக்தி போன்ற இதழ்களில் எழுதியிருக்கிறார். விகடன் இணையத்தளத்தில் ‘பிக் பாஸ் நிகழ்ச்சி’ பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *