Skip to content
Home » தலித் திரைப்படங்கள் # 29 – செந்நாய்

தலித் திரைப்படங்கள் # 29 – செந்நாய்

செந்நாய்

அறிமுக இயக்குநரான ஜெய்குமார் சேதுராமன் உருவாக்கிய ‘செந்நாய்’ திரைப்படம் 2021-ல் வெளியானது. சுயாதீன முயற்சியில் உருவான இந்தப் படைப்பு பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது. உயிரோடு இருக்கும்போது மட்டுமல்ல; இறந்த பிறகும் கூட ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் எதிர்கொள்ளும் சாதியக் கொடுமைகளைப் பற்றி இயல்பான திரைமொழியில் உரையாடியுள்ளது. சுடுகாடுகளில் கூட சாதியப் பிரிவினையும் அது சார்ந்த ஒடுக்குமுறையும் நடைமுறையில் இருக்கும் அவலத்தைப் பற்றி இந்தப் படம் பேசுகிறது.

சினிமாவை விடவும் பயணம் செய்வதில் ஆர்வம் அதிகமுள்ள ஜெய்குமார், ஆப்ரிக்க நாடுகளுக்குப் பயணம் செய்தபோது கிடைத்த அனுபவமே இந்தத் திரைப்படத்தை உருவாக்குவதற்கு உந்துதலாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார். இதை சாதியத் திரைப்படமாகச் சுருக்கிப் பார்ப்பதை விடவும் ‘உளவியல் திரைப்படமாக’ பார்ப்பது அவசியம் என்கிறார்.

ஆதிக்க மனோபாவம்தான் இன்னொரு மனிதனைத் தனக்குக் கீழாக பார்க்கத் தூண்டுகிறது. சாதியமைப்பு இல்லாத நாடுகளிலும் நிறவெறி உள்ளிட்ட வெவ்வேறு வடிவங்களில் மனிதர்களின் மீதான பாரபட்சங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. மாரி செல்வராஜ் இயக்கிய ‘மாமன்னன்’ திரைப்படத்தில் வரும் வில்லன் பாத்திரத்துக்கு சாதியின் மீது நம்பிக்கையில்லை என்றாலும் ஆதிக்க வெறியில் அமைந்த மனோபாவமே அவனை குரூரமாக இயக்குகிறது. அடிப்படையில் இது ஒரு உளவியல் பிரச்னை. பெரியார், அம்பேத்கர் போன்ற ஆளுமைகளை சாதியத் தலைவர்களாகக் குறுக்கிவிடாமல் சமூக விஞ்ஞானிகளாக அணுக வேண்டியதின் அவசியத்தை இயக்குநர் குறிப்பிடுவது முக்கியமான பார்வை.

சுடுகாட்டிலும் சாதிய அரசியல்

செந்நாய் திரைப்படம் நான்லீனியர் காட்சிகளுடன் பயணம் செய்கிறது. முற்போக்கு இயக்கத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள், தெருவோரத்தில் நடக்கவிருக்கும் ஒரு கலைநிகழ்ச்சிக்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். சாதிய வெறி கொண்ட ஒரு முதியவர், உடல்நலம் குன்றி மருத்துவனையில் இருக்கும்போது ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவி அவருக்கு வைத்தியம் பார்க்கிறார். சடலத்தைத் தோளில் சுமந்து கொண்டு தூரத்திலிருக்கும் மயானத்தை நோக்கி ஒருவர் மெள்ள நடந்து செல்லும் காட்சிகள் வருகின்றன. அரசு மருத்துவனையிலிருந்து ஆதரவற்ற பிணங்களை எடுத்துச் சென்று அடக்கம் செய்யும் ஒரு பெண்ணைப் பற்றிய காட்சிகள் நீள்கின்றன. இந்தப் புள்ளிகள் எல்லாம் இணையும் உச்சக்காட்சியில் படம் நிறைகிறது.

ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதிய ‘தகனம்’ என்னும் சிறுகதை, லீலா மணிமேகலை இயக்கிய ‘Goddesses’ என்கிற ஆவணப்படம், அநாதைப் பிணங்களை எடுத்துச் சென்று அடக்கம் செய்யும் பெண்கள் குறித்த செய்திகள் போன்றவையே இந்தத் திரைப்படத்தை எடுப்பதற்குத் தூண்டுதலாக இருந்தன என்று ஒரு நேர்காணலில் சொல்கிறார் இயக்குநர் ஜெய்குமார். நீட் தேர்வு காரணாக மருத்துவக் கனவை எட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்ட அனிதா, ஆணவப்படுகொலை செய்யப்பட்ட இளவரசன் போன்ற சம்பவங்களின் தாக்கமும் இருந்ததாகச் சொல்கிறார். படத்துக்குள் பாத்திரப் பெயர்களாகவும் இவை வருகின்றன.

ஒடுக்கப்பட்ட சாதியைச் சோ்ந்தவர் என்கிற காரணத்தினாலேயே மருத்துவம் பார்க்க மறுத்துவிடும் சாதிய வெறி கொண்ட ஓர் அரசு மருத்துவரைப் பற்றிய காட்சிகள் துவக்கத்தில் வருகின்றன. அவர் தனது தொழில் தர்மத்தை மீறுவது மட்டுமல்லாமல் கூடவே பணிபுரியும் உதவி மருத்துவரை ‘கோட்டால படிச்சு எப்படியோ உள்ளே வந்துடுதுகள்’ என்று சாதிய ரீதியிலான சீண்டல்களால் அவமதித்துக் கொண்டே இருக்கிறார். தூய்மைப் பணியாளர்களையும் இழிவுப்படுத்திப் பேசுகிறார்.

‘ஏன் எங்களைத் தொட்டு மருத்துவம் பார்க்க மறுக்கிறீர்கள். உங்களின் மலங்களை அள்ள மட்டும் நாங்கள் தேவைப்படுகிறோமா?’ என்று அரசு மருத்துவரை எதிர்த்து தார்மீக கோபத்துடன் வெடிக்கும் ஒரு தூய்மைப் பணியாளரின் வேலை பறி போகிறது.

செம்மலர் அன்னம், பவா செல்லத்துரை ஆகியோரின் சிறந்த நடிப்பு

ஆதரவற்ற பிணங்களை எடுத்துச்சென்று அடக்கம் செய்யும் பெண்ணாக செம்மலர் அன்னத்தின் நடிப்பு நன்றாக உள்ளது. மருத்துவமனையிலிருந்து மிக நீண்ட தூரத்தில் இருக்கும் மயானத்தை நோக்கி வண்டியை மூச்சிரைக்கத் தள்ளிச் செல்கிறார். பிணத்தின் நாற்றத்தைச் சகித்துக் கொள்வது உள்ளிட்ட பல நடைமுறைச் சிரமங்கள் இருந்தாலும் இறந்தவர்களுக்காகச் செய்யும் சேவை என்கிற நோக்கில் இந்தப் பணியை ஆத்மார்த்தமாக செய்கிறார். கடமைக்காக பிணத்தை எறிந்துவிடாமல் உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்கிறார்.

கணவர் வேலை தேடி நகரத்துக்குச் சென்றுவிட்டதால் இந்தப் பணியை அன்னம் செய்ய வேண்டியிருக்கிறது. உடல்நலம் குன்றிய நிலையில், தொடர்ந்து இருமிக்கொண்டும் காறித்துப்பிக்கொண்டும் தனது பணியைச் செய்பவராக திறம்பட நடித்திருக்கும் அன்னத்தின் பங்களிப்பு இந்தப் படத்துக்கு முக்கியமானதாக இருக்கிறது.

அன்னத்துக்கு உதவி செய்யும் டேவிட் என்கிற இளைஞனின் பாத்திரமும் குறிப்பிடத்தகுந்தது. ‘நீ ஏன்டா ஸ்கூல்ல படிக்காம ஓடியாந்துட்டு இந்த வேலைக்கு வந்து கஷ்டப்படறே?’ என்று டேவிட்டைக் கேட்கிறாள் அன்னம். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவன் என்பதால் பள்ளியில் கழிப்பறையைக் கழுவச் சொல்கிறார்கள் என்று டேவிட் கூறும் பதில் நடைமுறை அவலத்தைப் பதிவு செய்வதாக இருக்கிறது.  ‘போராடியாவது நீ அங்க இருந்து படிச்சிருக்கணும்டா’ என்று உபதேசிக்கிறாள் அன்னம்.

ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் விடுதலைக்கு கல்வி ஒரு முக்கிய சாதனமாக இருக்கும் என்கிற செய்தி படத்தில் ஆங்காங்கே தொடர்ந்து பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் கல்வி கற்று முன்னேறினாலும்கூட சாதியச் சீண்டல்களை, அவமதிப்புகளைப் பணியிடங்களில் எதிர்கொள்ள வேண்டிய நடைமுறை அவலத்தையும் படம் பதிவு செய்திருக்கிறது. மிரட்டலின் காரணமாக ஓர் ஆணவக் கொலைக்குத் தானும் காரணமாக இருந்ததைச் சொல்லி டேவிட் கதறும் காட்சியும் உருக்கமாக இருக்கிறது. மயானப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைத் துயரங்களை இது தொடர்பான காட்சிகள் வலிமையாக விவரித்திருக்கின்றன.

பல்லுயிர்கள் இணைந்து வாழ வேண்டிய காடு

‘மான்கள் மட்டுமே வாழும் ஒரு காடு விரைவில் அழியும். மாறாக பல்லுயிர்களும் இணைந்து வாழ்வதுதான் ஒரு காட்டின் அடையாளம்’ என்கிற கதை வெவ்வேறு பாத்திரங்களின் வழியாகத் துண்டு துண்டாகச் சொல்லப்படுவது ஜெய்குமாரின் திறமையான இயக்கத்துக்குச் சான்று. காட்சிகளின் பின்னணியில் பெரியார், அம்பேத்கர், லெனின், கார்ல் மார்க்ஸ் போன்ற ஆளுமைகளின் படங்களும் வாசகங்களும் வந்து கொண்டேயிருக்கின்றன. பூஜையில் வைத்து வணங்கப்படும் தாமரை மலர், இன்னொரு இடத்தில் புரட்சி முழக்கம் செய்யும் பார்வையில்லாத இளைஞனின் காலில் மிதிபடுகிறது.

குறியீடுகளின் வழியாக ஒரு காட்சியை உணர்த்துவது இயக்குநரின் திரைமொழிக்குப் பலம் சேர்க்கும் விஷயம்தான் என்றாலும் அவை மிகையாக ஆகிவிடும்போது திகட்டி விடும் அபாயத்தை மட்டுமல்ல; வலிந்து திணிக்கப்படும் இடையூறாகவும் மாறி விடுகிறது. ‘மனு தர்ம’ நூலை மேஜையில் வைத்திருப்பதின் மூலம்தான் ஒருவரை சாதிய வெறியராகக் காட்டவேண்டும் என்கிற அவசியமில்லை. அரசு மருத்துவராக நடித்தவரின் நடிப்பும் உடலமொழியும் செயற்கைத்தனமாக இருந்தது.

பிணத்தைத் தூக்கிக்கொண்டு தனது மகளுடன் மயானத்தை நோக்கி நடந்து செல்பவராக பவா செல்லத்துரை நடித்திருக்கிறார். “நாம ஏன் ஊரைச் சுத்திக்கிட்டு போறோம்?” என்று மகள் கேட்கும்போது பதில் சொல்லாமல் காமிராவை நோக்கி இவர் உமிழும் எச்சில் ஒட்டுமொத்த சமூகத்தின் மீதான விமர்சனமாக அமைகிறது. ‘நகருக்கு இடம் பெயர்வது சாதியக் கொடுமையிலிருந்து தப்பிப்பதற்கான ஓர் உபாயம் என்கிற அர்த்தம் தொனிக்க இவர் மனைவியிடம் விடைபெறும் காட்சி’ சிறப்பான முறையில் படமாக்கப்பட்டுள்ளது.

‘நானொரு பறவை, இவ்வுடல் எனது கூண்டு…

‘கங்கை மணக்குதே… யமுனை மணக்குதே’ என்பதையே தொடர்ந்து அரற்றியபடி உலவிக் கொண்டிருக்கும் ஒரு பித்தனின் நடிப்பும் சிறப்பாக உள்ளது. ‘நான் மட்டும் தீட்டு, நான் தந்த காசு தீட்டில்லையா?’ என்று தேநீர்க் கடைக்காரரை நோக்கி பித்தன் கேட்கும் வசனம் கூர்மையானது. டீக்கடையின் பெயர் ‘தேவர் டீ ஸ்டால்’. அந்தக் கடையின் உரிமையாளர் ஒரு பலகையை அன்னத்திடம் தந்து ‘இதை தலைவர் மயானத்தில மாட்டச் சொன்னாரு’ என்று தருகிறார். ‘மேடை மேலவருக்கே’ என்கிற வாசகம் அதில் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருக்கிறது. சுடுகாட்டிலும் சாதிய அரசியல். முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பிணங்களை மட்டும்தான் மேடையில் வைத்து எரிக்க முடியும்.

ரவீந்திரநாத் குருவின் காமிரா காட்சிகளை மிக நேர்த்தியாக கையகப்படுத்தியிருக்கிறது. மயானத்தின் வெம்மையும் தள்ளுவண்டியில் பிணத்தை நகர்த்திச் செல்லும் அன்னத்தின் வலியும் பார்வையாளனுக்கும் சென்று சேரும்படியாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தருண் சேகரின் பின்னணி இசை அமைதியாகப் பயணித்து, படத்துக்கு உறுதுணையாக நின்றிருக்கிறது. முன்னும் பின்னுமாக நகரும் காட்சிகளைக் குழப்பம் நேரவிடாமல் தொகுத்துள்ளார் அரவிந்த்.

‘நானொரு பறவை, இவ்வுடல் எனது கூண்டு, இதை அடையாளமாக வைத்து விட்டு நான் பறந்து செல்கிறேன்’ என்கிற ரூமியின் வாசகத்துடன் இந்தப் படம் துவங்குகிறது. சாதிய ரீதியிலான அவமதிப்புகள், சீண்டல்கள் போன்வற்றை வெவ்வேறு வடிவங்களில் சுமக்க வேண்டியிருக்கிற ஒடுக்கப்பட்ட சமூகமானது, இறந்த பின்னரும் கூட அதை எதிர்கொள்ள வேண்டியிருக்கிற அவலத்தைப் பற்றி ‘செந்நாய்’ திரைப்படம் பேசியிருக்கிறது. பல்வேறு இனங்களும் கூடி வாழும் பன்மைத்துவம்தான் ஒரு முழுமையான சமூகத்தின் அடையாளம் என்கிற செய்தியை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது. MX PLAYER மற்றும் ZEE5 ஆகிய இணையத் தளங்களில் இந்தத் திரைப்படம் காணக் கிடைக்கிறது.

(தொடர்ந்து பேசுவோம்)

பகிர:
சுரேஷ் கண்ணன்

சுரேஷ் கண்ணன்

உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை தொடர்ச்சியாக எழுதி வருபவர். அழகியல் சார்ந்த ரசனையோடு சினிமாவைப் பற்றிய உரையாடலைப் பல ஆண்டுகளாக நிகழ்த்துபவர். குமுதம், தீராநதி, உயிர்மை, காட்சிப்பிழை, அம்ருதா, பேசும் புதியசக்தி போன்ற இதழ்களில் எழுதியிருக்கிறார். விகடன் இணையத்தளத்தில் ‘பிக் பாஸ் நிகழ்ச்சி’ பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *