‘இப்பல்லாம் யாருங்க சாதி பாக்கறா?’ – அறியாமையாலோ பாசாங்குடனோ நடைமுறையில் கேட்கப்படும் இந்தக் கேள்வி எத்தனை அபத்தமானது அல்லது அயோக்கியத்தனமானது என்பதை ‘India Untouched: Stories of a People Apart’ என்கிற ஆவணப்படம் முகத்தில் அறைந்தது போல் சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் நடைமுறையில் பின்பற்றப்படும் சாதியப் பாரபட்சங்களையும் தீண்டாமைக் கொடுமைகளையும் வீடியோ காட்சிகள், உரையாடல்கள், வாக்குமூலங்கள் போன்றவற்றின் வழியாக இது பதிவு செய்திருக்கிறது. கே.ஸ்டாலின் இயக்கி, 2007-ல் வெளியான இந்த ஆவணப்படம் சர்வதேச அளவில் எண்ணற்ற விருதுகளைப் பெற்றுள்ளது.
ஒவ்வொரு மனிதனும் சக மனிதனைவிட ஓரங்குலம் தான் உயர்ந்தவன் என்று காட்டிக்கொள்ளவே துடிக்கிறான். இந்த ஆதிக்க மனோபாவம்தான் இனம், மதம், சாதி, நிறம், வர்க்கம் என்று பல்வேறு வகையில் உலகமெங்கிலும் வெளிப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை சாதியும் மதமும்தான் பிரிவினைக்கான பிரதானமான ஊற்றுக்கண். அப்பட்டமாகவும் மறைமுகமாகவும் தன்னிச்சையாகவும் சாதிய உணர்வு பெரும்பாலோரிடம் வெளிப்படுவதை இந்த ஆவணப்படம் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறது.
முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தங்களின் சாதிய உணர்வைப் பெருமிதமாக வெளிப்படுத்தும் போது ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் தாழ்வுணர்வுடன் உரையாடுகிறார்கள். சொற்ப அளவிலான சதவீதத்தினருக்கு மட்டுமே இது பற்றிய விழிப்புணர்வும் சமூகக் கோபமும் இருக்கிறது.
பிஞ்சிலேயே நஞ்சாக ஊட்டப்படும் சாதி
வடமாநிலத்தில் உள்ள ஒரு கிராமம். சிரிப்பும் கும்மாளமுமாக அந்தச் சிறுவர்கள் கூட்டமாக நிற்கிறார்கள். கேமராவைப் பார்த்து தங்களுக்குள் சிரித்துக் கொள்கிறார்கள். ஒவ்வொருவரின் சாதி பற்றி கேட்கப்படுகிறது. ‘நீ இவனுடைய வீட்டுக்குச் செல்வாயா.. தண்ணீர் அருந்துவாயா?’ என்கிற கேள்வியை முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனிடம் கேட்கும் போது, அவன் வெட்கப்பட்டுக் கொண்டே ‘செல்ல மாட்டேன். தீட்டாகிவிடும்’ என்று சிரித்துக் கொண்டே சொல்கிறான். ‘இதெல்லாம் உங்களுக்கு யார் சொல்லித் தந்தது?’ என்னும் போது ‘எங்களுக்கு சின்ன வயசிலேயே தெரியும்’ என்று கோரஸாக சொல்கிறார்கள். ‘அவங்க எங்க வீட்டுக்கெல்லாம் வரமாட்டாங்க’ என்று ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் சிரித்துக் கொண்டே சொன்னாலும் அவனுடைய கண்களில் வலி தெரிகிறது.
ஒருவரின் தோள் மீது ஒருவர் கைபோட்டுக் கொண்டிருந்தாலும் இளம் வயதிலேயே நஞ்சாக அவர்களுக்குள் ஊட்டப்பட்டிருக்கும் சாதியம் தன்னிச்சையாக அவர்களைப் பிரித்து வைத்திருக்கிறது. களங்கமற்ற சிரிப்புடன் அவர்கள் இதை வெளிப்படுத்தும் போது பரிதாபமாக இருக்கிறது.
மதுரை நகரின் தெருவொன்றில் காமிரா நுழைகிறது. சாலையில் சென்று கொண்டிருக்கும் சிலர், ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் செருப்பைக் கையில் எடுத்துக் கொண்டு நடக்கிறார்கள். வண்டியில் பயணித்தால் அந்த இடம் வந்ததும் இறங்கி தள்ளிச் செல்கிறார்கள். இதை அவர்கள் இயல்பாகச் செய்யும்போது பல ஆண்டுகளாக பழகியிருந்த விஷயம் போல இருக்கிறது. ஓர் அந்நியருக்கு இந்தக் காட்சி வியப்பாகத்தான் இருக்கும். இதைப்போல தேநீர்க்கடையில் முற்பட்ட சமூகத்தினருக்கு எவர்சில்வர் கிளாஸிலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு கண்ணாடி கிளாஸிலும் தேநீர் தரப்படுகிறது.
‘அது அப்படித்தாங்க. இங்க இதான் நடைமுறை’ என்கிறான் ஓர் இளைஞன். குஜராத்தில் மக்கள் கூட்டாகப் பயணிக்கும் வண்டியில் குறிப்பிட்ட சமூகத்தினரை ஏற்றமாட்டார்கள். எனவே அவர்கள் பல கிலோ மீட்டர்கள் நடந்துதான் சென்றாக வேண்டும். வண்டியில் அவர்களை ஏற்றினால் முற்பட்ட சமூகத்தினர் வண்டியில் ஏறுவதைப் புறக்கணித்துவிடுவார்கள். இதுவும் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் வழக்கம்.
‘இதெல்லாம் கர்மா. முன்னமே எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. முன்ஜென்ம வினையை அனுபவிச்சுதான் ஆகணும். மனுதர்மத்துல இதெல்லாம் முன்னமே தெளிவா சொல்லப்பட்டிருக்கு. விமானத்துல போய் பைலட் சீட்ல உக்கார முடியுமா? இதுவும் அப்படித்தான். சூத்திரர்கள் இந்தந்த வேலைகளைத்தான் செய்யணும். அதையெல்லாம் மாத்த முடியாது. மாத்தவும் கூடாது’ – சட்டையணியாமல் கண்ணாடி அணிந்த ஒரு வயதான பிராமணர் இதை தீர்மானமான குரலில் சொல்கிறார்.
அடுத்த காட்சியில் ரிசர்வேஷன் பிரச்னையைப் பற்றி மாணவர்கள் பேசுகிறார்கள். ‘எங்களை சாதியாகப் பிரிக்காதீங்க.. ஒரே மாதிரி நடத்துங்க. எதுக்கு அவங்களுக்கு மட்டும் தனிச்சலுகை?’ என்று முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கேட்கும்போதே இடஒதுக்கீட்டின் அடிப்படை மற்றும் அவசியம் பற்றி அவர்களுக்குப் புரியவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது.
கல்விக்கூடங்களில் உள்ள தீண்டாமை
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிப்படிப்பைத் தொடராமல் போவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதில் ஒரு முக்கியமான காரணம் பள்ளியில் காட்டப்படும் பாரபட்சம்தான். ஆம், பள்ளிக்கூடத்தில் உள்ள கழிவறையைச் சுத்தம் செய்வதற்கு, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களைத்தான் தேர்ந்தெடுத்து வலுக்கட்டாயமாக வேலை வாங்குகிறார்கள். கழிவறை மட்டுமல்ல, பள்ளிக்கூடத்தை பெருக்குவது, சமையல் பணிகளில் உதவுவது, பாத்திரங்கள் கழுவுவது போன்ற பணிகளுக்கல்லாம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளைப் பயன்படுத்துகிறார்கள். ‘நாங்கதான் மலம் அள்ளுகிற வேலையைச் செய்யறோம். எங்க பிள்ளைகள் அந்தக் கஷ்டமெல்லாம் படவேண்டாம்ன்னுதான் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பறோம்.. அங்கயும் அதே வேலை கொடுத்தா எப்படி? பசங்க ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு சொல்லுதுங்க’ என்று கொதிப்பும் ஆவேசமுமாக இவர்களின் பெற்றோர்கள் சொல்கிறார்கள்.
‘பள்ளியில் வழங்கும் சத்துணவைச் சாப்பிடமாட்டேன்’ என்று ஒரு ஏழை மாணவன் கலங்கலான முகத்துடன் சொல்கிறான். காரணம் என்னவெனில் இவனுடன் அமர்ந்து சாப்பிட எந்தவொரு சக மாணவனும் தயாராக இல்லை. காரணம் சாதியம். ‘அப்படி ஒரு சாப்பாட்டை சாப்பிடக்கூடாதுன்னு வீட்டுக்கு வந்துடுவேன்… இல்லைன்னா.. பட்டினி கிடப்பேன்’ என்கிறான். சாதியம் விதம்விதமான பிரச்னைகளைத் தோற்றுவித்துக் கொண்டே இருக்கிறது.
‘எவ்ள படிச்சாலும் கோர்ட்ல பியூன் வேலை செய்யறவன்.. பியூன்தான். அவனால ஒருநாளும் ஜட்ஜ் ஆக முடியாது.. அந்த சாதியில யாராவது படிச்சிருக்காங்களா.. கேட்டுப் பாருங்க..’ அதே பிராமண வயோதிகர் வெடிச் சிரிப்புடன் சொல்கிறார். அவர் சொல்வதைப் பொய்யாக்கும் வகையில் அடுத்த காட்சியில் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி படித்துக் கொண்டிருக்கும் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவி பேசுகிறார். ஆனால் அங்கும் பிரச்னை. உயர்கல்விக்கூடங்களிலும் சாதியப் பிரச்னைகள் இருக்கின்றன. எனில் நாம் கற்ற கல்வி நமக்கு என்னதான் தந்திருக்கிறது என்று வியப்பாக இருக்கிறது.
‘என்னோட ஃபிரெண்டு ஒரு பையன் கூட பழகிட்டு இருந்தா. இவளோட சாதி பத்தி தெரிஞ்சவுடனே அந்தப் பையன் பிரிஞ்சு போயிட்டான்’ என்கிறார் அந்த மாணவி. காதலிலும் சாதியத் தேர்வுகள் கச்சிதமாக இயங்குகின்றன.
நீர், நிலம் என்று எதிலும் நிறைந்திருக்கும் சாதியம்
கிணற்றில் நீர் எடுப்பதற்கு ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு பல கிராமங்களில் தடை உள்ளது. முற்பட்ட சமூகத்தினர் வந்து நீர் எடுத்து ஊற்றும்வரை காத்திருக்க வேண்டும். நிலம், நீர் மட்டுமல்ல கடவுளும் கூட அந்தச் சமூகத்தின் மக்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. ‘அது அவங்களோட கோயில். எங்களை உள்ளே விட மாட்டாங்க’ என்று இன்னொரு கிராமத்தில் உள்ள பெண்கள் மிக இயல்பாகச் சொல்கிறார்கள் ‘சாதி என்பது உடலுக்கு.. ஆன்மாவுக்கு சாதியில்லை’ என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார், ஓர் இந்துச் சாமியார்.
பொருளாதார ரீதியாகவும் சாதியம் விளையாடுகிறது. ஒரு குறிப்பிட்ட தொகைக்கு ஒப்புக்கொண்டு இயந்திரத்தை வாங்குகிறார் ஒருவர். ஆனால் அடுத்த தவணையில் அந்தத் தொகை பல மடங்காக கூட்டிச் சொல்லப்படுகிறது. அந்தத் தொகையை அவர் தந்துதான் ஆக வேண்டும் அல்லது இயந்திரத்தை ஒப்படைத்து விட்டு ஊரை விட்டுச் செல்ல வேண்டும். எங்கு சென்றும் இதை முறையிட முடியாது. அவரது உயிருக்குத்தான் ஆபத்து ஏற்படும். காரணம் இயந்திரத்தை வாங்கியவர், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். விற்றவர் முற்பட்ட சாதியைச் சேர்ந்தவர்.
‘நாங்க வந்தா அவங்க எழுந்து நின்னுதான் ஆகணும்.. இல்லைன்னா.. தகுந்த பாடத்தைக் கத்துக்குவாங்க’ – மீசையைத் தடவிக் கொண்டே பெருமிதத்துடன் சொல்கிறார் ஒரு பெரியவர். தான் பின்பற்றுவது தீண்டாமை என்றோ, சமூகக்குற்றம் என்கிற பிரக்ஞையோ அவரிடம் துளியும் இல்லை. மாறாக ‘இதுதானே. நிதர்சனம்.. என்ன புதுசா சொல்றீங்க?’ என்கிற சிரிப்புத்தான் வெளிப்படுகிறது. அவர்கள் வீட்டின் குழந்தைகளும் இதே உணர்வை இயல்பாக வெளிப்படுத்துகிறார்கள்.
‘நான்தான் இந்த ஊரு ராணி’ என்று ஒரு சிறுமி உரத்த குரலில் சொல்லி சிரிக்கிறாள். ஒரு விழாவில் மற்ற சமூகத்தினருடன் அமர்ந்து ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டதால் ஒரு முதியவருக்கு அடியும் உதையும் கிடைக்கிறது. அது மட்டுமல்லாமல் அபராதத் தொகையாக இருபதாயிரம் ரூபாயைக் கட்டச் சொல்கிறார்கள். ‘வேறு வழி… கட்டிட்டேன்… இந்த ஊர்ல இருந்தாகணுமே’ என்று கண்கலங்கச் சொல்கிறார் அந்த முதியவர்.
‘அவங்க போலீஸுக்கெல்லாம் போக முடியாது. அப்படியே போனாலும் போலீஸு எங்களுக்குத்தான் முதலில் போன் செய்யும்’ என்று சிரித்தபடியே சொல்கிறார் இன்னொரு பெரியவர். குழந்தைக்கு பெயர் வைப்பதிலும் சாதி இருக்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தின் நடைமுறையில் என்ன பெயர் இருக்கிறதோ அதைத்தான் வைத்ததாக வேண்டும். நவீன அடையாளத்தோடு பெயர் வைத்தால் அதற்கான எதிர்விளைவைச் சந்தித்தாக வேண்டும். முற்போக்கு இயக்கங்களிலும் இடதுசாரி இயக்கங்களிலும் கூட சாதியவுணர்வு மறைமுகமாக இயங்குகிறது என்பதுதான் கூடுதலான வெட்கக்கேடு.
மாற்றப்பட வேண்டிய இளம் மனங்கள்
இந்து மதத்துக்குள் தீண்டாமையும் சாதிய ஒடுக்குமுறையும் இருக்கிற காரணத்தினால் கிறிஸ்துவ மதத்துக்குச் சென்றால் ‘விடாது கருப்பு’ மாதிரி அங்கேயும் இதே சாதியம் ஒட்டிக் கொண்டு கூடவே பயணிக்கிறது. இதன் விளைவு தனித்தனியான சர்ச்சுகள், மயானங்கள் உருவாகின்றன. இதே நிலைமைதான் இசுலாமிய மதத்திலும். ‘மதத்தலைவர்கள் கூட உயர்சாதியினராகவே இருக்கிறார்கள். எங்களுக்கு அங்கு இடமில்லை’ என்று குமுறுகிறார் மதம் மாறிய ஒருவர்.
முற்பட்ட சமூகத்தினர் அதிகமாக வசிக்கும் இடத்தில், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் நிலமோ, வீடோ வாங்க முடியாது என்பது இன்னொரு வகையான தீண்டாமைக் கொடுமை. தாழ்த்தப்பட்ட சமூகம் என்கிற காரணத்தினாலேயே தனிப்பட்ட நபர்களின் மீது பாலியல் பலாத்காரங்களும் வன்முறைகளும் மிக எளிதாக நிகழ்கின்றன. இத்தகைய சம்பவங்களை வெளியிலும் சொல்ல முடியாது. நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர், தாழ்த்தப்பட்டவரின் வீட்டில் நீரோ, தேநீரோ அருந்துவதில்லை. ‘இந்தாங்க.. குடிச்சுதான் பாருங்களேன்’ என்று அவருக்கு முன்னால் தேநீர்க் கோப்பை நீட்டப்பட்டாலும் சிரித்துக் கொண்டே மறுத்துவிடுகிறார்.
ஆவணப்படத்தை உருவாக்குகிறவர்கள், தங்களின் முயற்சியால் கிணற்றில் இருந்து நீர் எடுப்பதற்கு தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்களுக்கு உதவுகிறார்கள். ‘இதுவரைக்கும் நாங்களா தண்ணி எடுத்ததில்லையே. பயமா இருக்கே’ என்று அந்தப் பெண்கள் தயங்குகிறார்கள். பிறகு ஆசையும் உற்சாகமுமாக நீர் எடுக்கிறார்கள். சுற்றியும் பயத்துடன் பார்க்கிறார்கள். குடத்தை சுமந்து செல்லும் பெண்ணிடம் ‘நீயாகவே கிணற்றில் இருந்து நீர் எடுத்த அனுபவம் எப்படியிருந்தது?’ என்று கேட்கும் போது ‘நன்றாக இருந்தது’ என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார். அதுவரை வாழ்நாளில் அவர் அனுபவிக்காத உணர்வு அது.
ஆவணப்படத்தின் ஆரம்பத்தில் காட்டப்பட்ட அதே சிறுவர்களை மறுபடியும் காமிரா காண்பிக்கிறது. ‘உன் நண்பன் வீட்டு நீர்தானே. குடித்தால் என்னவாகி விடும். குடி பார்க்கலாம்’ என்று ஒரு நீர்க்கோப்பை சிறுவனிடம் நீட்டப்பட, வெட்கமும் சிரிப்புமாக அவன் மறுக்கிறான். பிறகு மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்ட பிறகு. ஒரு சவாலான உணர்வுடன் நீரை வாங்கிக் குடித்து விட்டு புன்னகைக்கிறான். குறைந்தபட்சம் இளம் மனங்களிலாவது சாதிய உணர்வுகள் அழிக்கப்பட வேண்டும் என்கிற நேர்மறையான செய்தியோடு இந்த ஆவணப்படம் நிறைகிறது. இவற்றைத் தாண்டி பல செய்திகள் இதில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
மறுபடியும் அதேதான். ‘இப்பல்லாம் யாரு சாதி பார்க்கறா?’ என்கிற கேள்விக்கு மிக அழுத்தமான, கசப்பான விடையை நடைமுறை ஆதாரங்களுடன் இந்த ஆவணப்படம் தந்திருக்கிறது.
(தொடர்ந்து பேசுவோம்)