Skip to content
Home » தலித் திரைப்படங்கள் # 31 – ‘Jhund’

தலித் திரைப்படங்கள் # 31 – ‘Jhund’

Jhund

ஃபண்ட்ரி, சைராட் போன்ற முக்கியமான தலித் திரைப்படங்களை மராத்தி மொழியில் இயக்கிய நாகராஜ் மஞ்சுளே, அமிதாப்பச்சனை பிரதான பாத்திரமாகக் கொண்டு முதன்முதலாக இயக்கிய இந்தித் திரைப்படம் ‘ஜுண்ட்’ (Jhund), 2022இல் வெளியானது. ‘மந்தை’ என்பது இந்தத் தலைப்பின் பொருள். அரசியல்சரித்தன்மையுடனான மொழியில் சொன்னால் ‘அமைப்பு சாராத குழு’ எனலாம்.

சேரியில் உள்ள இளைஞர்களைப் பொதுச்சமூகம் எவ்வாறு பார்க்கிறது? திருடர்களாக, பொறுக்கிகளாக, சமூக விரோதிகளாக, சிறையில் அடைக்கப்பட வேண்டியவர்களாக, சமூகத்துக்கு வேண்டாதவர்களாகத்தான் எப்போதும் அணுகப்படுகிறார்கள். சந்தேகத்துடனும் எரிச்சலுடனும் அச்சத்துடனும்தான் சேரி இளைஞர்களை மையச்சமூகம் அணுகுகிறது. காவல்துறையும் அவர்களைக் குற்றவாளிகளாகவே எப்போதும் சந்தேகத்துடன் பார்க்கிறது. அவர்களை வைத்தே குற்றங்களை வளர்க்கிறது. அந்தச் சூழலில் இருந்து வெளியேறவும் பெரும்பாலும் அனுமதிப்பதில்லை.

அடித்தட்டு மக்களில் கணிசமான சதவீதத்தினர் தங்களின் சொந்த உழைப்பால் வாழ்கின்றனர். ஆனால் குறைந்த சதவீதத்தில் உள்ளவர்கள் செயயும் குற்றச் செயல்களின் காரணமாக, விளிம்பு நிலைச்சமூகத்தினரையே ஒட்டுமொத்தமாக முத்திரை குத்தி சமூகத்திலிருந்து விலக்கி வைப்பதுதான் நெடுங்காலமாக நடைமுறையில் இருக்கிறது. அவர்கள் ஏன் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை சமூகவியல் கண்ணோட்டத்துடன் அணுகும் கரிசனமோ, பொறுமையோ, பரந்து பட்ட பார்வையோ பொதுச்சமூகத்துக்கு இருப்பதில்லை. சமூகத்தின் மீது அக்கறையுள்ள படைப்பாளிகளும், கலைஞர்களும், அறிவுஜீவிகளும்தான் இதைச் செய்ய வேண்டியிருக்கிறது.

இந்த நோக்கில் நாகராஜ் மஞ்சுளேவை மிகச் சிறந்த திரைப்படைப்பாளியாக பார்க்கலாம். அவருடைய முதல் இரண்டு திரைப்படங்களும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரச்னைகளை ஆழமாகவும் கலைநயத்துடனும் பதிவு செய்திருந்தன. இந்த வரிசையில் ‘ஜுண்ட்’ ஒரு முக்கியமான திரைப்படம்.

நாக்பூரைச் சேர்ந்த விஜய் பார்சே ஒரு சமூக சேவகர். கல்லூரியில் உடற்பயிற்சி ஆசிரியராகப் பணிபுரிகிறார். கால்பந்து விளையாட்டில் திறமையுள்ள சேரி இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்தி, அணியாக ஒருங்கிணைத்து சிறந்த ஆட்டக்காரர்களாக மாற்றினார். ‘Slum Soccer Organisation’ என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். இதன் மூலம் அந்த இளைஞர்களின் வாழ்க்கைச் சூழல் மாறியது. விஜய் பார்சேவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாகியிருக்கிறது. விஜய் பார்சேவின் பாத்திரத்தில் அமிதாப்பச்சன் நடித்துள்ளார்.

அடையாளம் காணப்படாத விளிம்புநிலைச்சமூகத்தின் திறமைகள்

விஜய் ஒரு கல்லூரியில் பணியாற்றும் உடற்பயிற்சி ஆசிரியர். அடித்தட்டு மக்களுக்கு இலவச கல்வி உள்ளிட்ட பல சமூகச் சேவைகளைத் தன்னுடைய சொந்தப் பணத்தைச் செலவழித்துச் செய்கிறார். தான் வசிக்கும் பகுதியின் பக்கத்து சேரியில் உள்ள இளைஞர்கள் குற்றச் செயல்களிலும் வன்முறைச் சம்பவங்களிலும் ஈடுபடுவதைக் கவலையுடன் கவனிக்கிறார். சிறுவர்கள் கூட மது, போதை உள்ளிட்ட தீயபழக்கங்களுக்கு ஆளாகியிருக்கின்றனர். அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக விஜய் கையில் எடுக்கும் ஆயுதம் கால்பந்து. ஆம், அந்த இளைஞர்களுக்கு கால்பந்து விளையாடுவதில் உள்ள தன்னிச்சையான திறமையைக் கவனிக்கும் விஜய், அதில் ஆர்வத்தை உண்டாக்குவதின் மூலம் அவர்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைப்பதில் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றியடைகிறார்.

உள்ளூர் போட்டி முதல் சர்வதேச அளவிலான போட்டி வரை அந்த இளைஞர்களை அழைத்துச் செல்லும் விஜய்யின் பாதை அத்தனை எளிதானதாக இல்லை. இதற்காக அவர் பல நடைமுறைச் சிரமங்களையும் போராட்டங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ‘ஜுண்ட்’ திரைப்படம் இந்தப் பயணத்தை ஜனரஞ்சகமாகவும் அழுத்தமாகவும் பதிவாக்கியிருக்கிறது.

ஆசிரியர் விஜய் பாத்திரத்தை அமிதாப்பச்சன் ஏற்றதற்காகவும் திறம்பட நடித்ததற்காகவும் நிச்சயம் பாராட்டலாம். அம்பேத்கர் படத்தை சினிமாவில் காட்டுவதையே தவிர்த்த காலக்கட்டத்தை தலித் சினிமாக்கள் வெற்றிகரமாக முறியடித்திருக்கின்றன. தலித் சமூகத்தைச் சார்ந்த பாத்திரத்தில் நடிப்பதை பெரும்பாலான முன்னணி ஹீரோக்கள் தவிர்த்தே வந்திருக்கிறார்கள். இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும்கூட இதற்குத் தயாராக இருந்ததில்லை. சமூகத்தில் நிலவிய அதே தீண்டாமையை திரையுலகமும் அப்படியே பிரதிபலித்தது. இப்படியொரு சூழலை நாகராஜ் மஞ்சுளே போன்ற இயக்குநர்கள் மாற்றியமைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் ஒரு காட்சியில் அம்பேத்கர் படத்தை அமிதாப்பச்சன் வணங்குவது போல் வருவது பாராட்டத்தக்கது.

நகரத்துக்கும் சேரிக்கும் இடையேயுள்ள பிரம்மாண்ட சுவர்

சேரியில் வாழும் இளைஞர்களின் வாழ்க்கைச் சூழலை விவரிக்கும் காட்சிகளோடு இந்தப் படம் துவங்குகிறது. ஓடும் ரயிலில் ஏறி நிலக்கரி திருடுதல், செல்போன், நகைகளை பறித்தல் போன்ற சமூகவிரோத செயல்களில் அவர்கள் மிக இயல்பாக ஈடுபடுகிறார்கள். அவர்களைக் கவலையுடன் கவனிக்கும் விஜய், அவர்களிடம் தன்னிச்சையாக உள்ள கால்பந்து விளையாட்டுத் திறமையைப் பார்க்கிறார். ‘தினமும் கால்பந்து விளையாடினால் பணம் தருவேன்’ என்று விநோதமான நிபந்தனையை முன்வைத்து அவர்களின் ஆவலைத் தூண்டுகிறார்.

ஆரம்பத்தில் பணத்துக்காக விளையாடும் இளைஞர்களுக்கு ஒரு கட்டத்தில் அந்த விளையாட்டின் மீது தானாக ஆர்வம் உருவாகிறது. அவர்களின் திறமையை ஒழுங்குப்படுத்தும் விஜய், போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்குவிக்கிறார். இதன் மூலம் அவர்களின் வாழ்க்கை முறை மாறுகிறது. வன்முறை, தீயபழக்கம் போன்றவற்றை மெள்ள மெள்ள உதறி ஆட்டத்தில் கவனம் செலுத்துகிறார்கள். சர்வதேச அளவில் நிகழும் கால்பந்து போட்டிக்காக அவர்கள் கம்பீரமாகச் செல்வதோடு படம் நிறைகிறது.

விளிம்புநிலைச் சமூகத்தின் இளைஞர்களுக்கு மற்றவர்களைப் போலவே அசாதாரணமான திறமைகளும் பிரத்யேகமான ஆர்வங்களும் இருக்கின்றன. ஆனால் அவற்றை வளர்த்தெடுக்கவோ, ஊக்கப்படுத்துவோ எவருமில்லை என்பதுதான் நடைமுறைத் துயரம். அவர்கள் வாழும் சூழலும் மையச் சமூகத்தின் நிராகரிப்பும் அவர்களை வளர விடுவதில்லை. எனவே மிக இயல்பாக அவர்கள் வன்முறையின் பாதைக்குச் செல்கிறார்கள். பொதுச்சமூகத்துக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு பெரிய தடைச்சுவர் இருக்கிறது.

அதை உடைக்கவோ புரிந்து கொள்ளவோ முயலாமல், அடித்தட்டு மக்கள் என்றாலே திருடர்கள், வன்முறையாளர்கள், ஒழுங்கில்லாதவர்கள் என்று வெறுப்புடன் புகார் சொல்வது முறையற்றது. மாறாக அவர்களின் திறமைகளை வளர்த்தெடுத்து மையச்சமூகத்துடன் இணைவதற்கான சூழலை அமைக்க வேண்டும் என்கிற கருத்தை இந்தத் திரைப்படம் மிக சுவாரசியமான காட்சிகளின் மூலம் பதிவு செய்திருக்கிறது.

‘இந்தியான்னா என்ன?’ – படத்தில் பேசப்படும் தேசிய அரசியல்

வன்முறையில் ஈடுபடும் சிறுவர்கள் மட்டும் என்றில்லாமல் அடித்தட்டு சமூகத்தில் வாழும் பல்வேறு தரப்பு மக்களின் பிரச்னைகளையும் துண்டு துண்டுக் காட்சிகளின் மூலம் இந்தப் படம் உரையாடியிருக்கிறது. குடும்ப வன்முறை காரணமாகக் கொடுமைப்படுத்தப்படும் ஓர் இஸ்லாமியப் பெண், தனது மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கணவரைப் பிரிந்து செல்கிறார். கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் பணிபுரிவதின் மூலம் தன் வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்கிறார். அவரிடமுள்ள விளையாட்டுத் திறமையை அடையாளங்காணும் விஜய் ஊக்கப்படுத்தி முன்னேற வைக்கிறார். தொலைக்காட்சியில் தன் மனைவியைப் பார்க்கும் அந்தக் கணவர் மனம் மாறுவதும் மனைவியின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிப்பவராக ஆவதும் நெகிழ்ச்சிக்குரிய காட்சிகளாக இருக்கின்றன.

தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்யும் ஓர் இளைஞனிடமுள்ள ‘கோல் கீ்ப்பிங்’ திறமை அடையாளம் காணப்படும்போது அவனது வாழ்க்கையும் தலைகீழாக மாறுகிறது. கால்பந்து விளையாட்டில் ஆர்வமுள்ள, செக்யூரிட்டியாகப் பணிபுரியும் வடகிழக்கு மாநில இளைஞனையும் தன்னுடைய குழுவில் இணைத்துக் கொள்கிறார் விஜய். இப்படியாக விளிம்புநிலையில் உள்ள, புறக்கணிப்புக்கு ஆளாகும் பல நபர்களின் திறமை அடையாளம் காணப்படுகிறது.

ஒவ்வொரு இளைஞனும் தன்னுடைய பின்னணி குறித்து விளக்கும் காட்சி உணர்ச்சிகரமானது. ‘இப்படில்லாம் யாரும் எங்களை உக்கார வெச்சுக் கேட்டதே இல்ல’ என்று ஒவ்வொருவரும் தங்களின் பின்னணி பற்றி சொல்கிறார்கள். அவை ஏறத்தாழ ஒன்று போலவே இருக்கின்றன. ‘பாஞ்சோ’ என்னும் இசைக்கருவியை வாசிப்பதில் ஓர் இளைஞனுக்கு திறமை இருக்கிறது. ‘சாரே ஜஹான் சே அச்சா’ பாடலை அவன் வாசிப்பதில் ஒரு அவல நகைச்சுவை ஒலிக்கிறது. ஆனால் இதே இளைஞன்தான் ஓடும் ரயிலில் ஏறி நிலக்கரி திருடும் போது கீழே விழுந்து பரிதாபமாக இறந்து போகிறான்.

மையக்கதையின் ஊடாக இடையில் வரும் காட்சிகளும் வசனங்களும் தேசியத்தின் மீதான விமர்சனங்களாக அமைந்திருக்கின்றன. ‘சர்வதேச விளையாட்டு’ பற்றிய பேச்சு வரும் போது ஒரு சிறுவன் அதைப் பற்றி கேள்வி கேட்கிறான். ‘இந்தியாவுக்கு வெளில உள்ள நாடுகள்’ என்று பதில் வந்ததும், அடுத்து அவன் இயல்பாகக் கேட்பது ‘இந்தியான்னா என்ன?‘

கால்பந்து விளையாட்டில் திறமையுள்ள ஓர் இளம்பெண்ணை அடையாளம் காண்கிறார் விஜய். வெளிநாட்டில் நிகழும் போட்டிக்குச் செல்ல அவளுக்கு பாஸ்போர்ட் வேண்டும். ஆனால், ஒரு சிறிய கிராமத்தில் வாழும் அவளிடம் எந்தவொரு ஆவணங்களும் இல்லை. இதற்காக அந்த தந்தையும் மகளும் அலையும் காட்சிகள் ஒரு தனியான குறும்படம் போல இருக்கிறது. ‘நீங்க இங்கதான் வாழறீங்களா என்பது பற்றி இந்த தேசத்துக்கு எந்த அக்கறையும் கிடையாது. ஆனா இருக்கறதுக்கும் செத்ததுக்கும் நாமளேதான் ப்ரூப் தரணும்’ என்று இவர்களுக்கு வழிகாட்டும் ஒருவர் சொல்வது உறைப்பான வசனம்.

எளிமையின் அழகியலைத் தவற விட்டதா ‘ஜுண்ட்’?

குற்றச் செயல்களில் இருந்து விலகி நல்ல பாதைக்கு இளைஞர்கள் திரும்பினாலும் இந்தச் சமூகம் அதற்கு அனுமதிப்பதில்லை. பழைய குற்றங்களின் நிழல் அவர்களைத் திருந்தவிடாமல் துரத்திக் கொண்டேயிருக்கிறது. கால்பந்து விளையாட்டில் சிறப்பாகச் செயல்படும் ஓர் இளைஞனுக்கு பாஸ்போர்ட் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. ‘ஏன்… வெளிநாட்டுல போய் யாரையாவது குத்தப் போறியா?’ என்று காவல்துறையினர் அந்த இளைஞனை அடித்துத் துரத்துகிறார்கள். பாஸ்போர்ட் வேண்டி உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்கிறார் விஜய். ‘இது போன்ற குற்றவாளிகளை வெளிநாட்டுக்கு அனுப்புவது ஆபத்தானது’ என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாட, அதற்குப் பதில் சொல்லும் விதமாக விஜய் பேசும் நீண்ட ஆவேசமான வசனம் நாடகத்தனமானது என்றாலும் அதுதான் இந்தப் படத்தின் மையம்.

நாகராஜ் மஞ்சுளேவின் ‘ஃபண்ட்ரி’ திரைப்படமானது எளிமையின் அழகியலையும் ஆழமான அரசியலையும் கொண்டதாக இருந்தது. அடுத்து வெளிவந்த ‘சைராட்’டில் ஜனரஞ்சக அம்சங்கள் கூடியிருந்தாலும் கலங்கடிக்கும் உச்சக்காட்சி மூலம் படத்தின் மையம் வலுவாக உணர்த்தப்பட்டது. ‘ஜுண்ட்’ திரைப்படத்திலும் ஜனரஞ்சக அம்சங்கள் கணிசமாக உள்ளன. அமிதாப்பச்சன் என்னும் பிரபலமான பிம்பத்தின் மூலம் இந்தப் படத்தில் பேசப்படும் அரசியல் பரவலான கவனத்துக்கு உள்ளானது. அரசியலை ஜனரஞ்சமாகப் பேசுவது ஒரு சிறந்த பாணி என்றாலும் சம்பந்தப்பட்ட படைப்பு நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொள்வதும் அவசியமானது.

விளிம்புநிலைச் சமூகத்தின் இளைஞர்களின் திறமைகளைச் சரியாக இனம்கண்டு வளர்த்தெடுத்தால் அவர்களும் மையச்சமூகத்துக்குள் வந்து இணைவார்கள் என்கிற செய்தி ‘ஜுண்ட்’ திரைப்படத்தில் சரியாக சொல்லப்பட்டிருந்தது. என்றாலும் ஒரு வழக்கமான ‘ஸ்போர்ட்ஸ் டிராமா’ பாணியில் இயங்குவதால் மிகவும் எளிதில் யூகிக்கக்கூடிய திரைக்கதையாக அமைந்து விட்டதை இந்தப் படத்தின் பலவீனம் எனலாம். மிக நேர்த்தியான ஒளிப்பதிவு, ரகளையான டிரோன் ஷாட்கள், அட்டகாசமான இசை போன்ற நுட்ப சமாச்சாரங்கள் சிறப்பாக இருந்தாலும் ‘ஃபண்ட்ரி’ திரைப்படத்தின் எளிமையையும் ஆழத்தையும் நாகராஜ் மஞ்சுளே எங்கேயோ தவறவிட்டிருப்பது துரதிர்ஷ்டம்.

(தொடர்ந்து பேசுவோம்)

பகிர:
சுரேஷ் கண்ணன்

சுரேஷ் கண்ணன்

உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை தொடர்ச்சியாக எழுதி வருபவர். அழகியல் சார்ந்த ரசனையோடு சினிமாவைப் பற்றிய உரையாடலைப் பல ஆண்டுகளாக நிகழ்த்துபவர். குமுதம், தீராநதி, உயிர்மை, காட்சிப்பிழை, அம்ருதா, பேசும் புதியசக்தி போன்ற இதழ்களில் எழுதியிருக்கிறார். விகடன் இணையத்தளத்தில் ‘பிக் பாஸ் நிகழ்ச்சி’ பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *