24, மார்ச் 2020. கோவிட் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வந்ததன் காரணமாக தேசிய அளவிலான லாக்டவுனை மத்திய அரசு அறிவித்தது. முதலில் 21 நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட இந்த முடக்கம், தொற்று கட்டுக்குள் அடங்காததால் மேலும் நீட்டிக்கப்பட்டது.
இதனால் நாடு முழுக்க மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மக்கள் வீட்டை விட்டு வெளியில் வராமலிருக்கும்படி அறிவுறுத்தப்பட்டார்கள். மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. புதிய நோயாளிகளுக்கு இடம் கிடைக்கவில்லை. பொதுப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. தனியார் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அத்தியாவசிய சேவைகளுக்காக மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. காவல்துறையின் கண்காணிப்பு கடுமையாக இருந்தது.
பதற்றமான சூழல் காரணமாக, நகரத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த அடித்தட்டுத் தொழிலாளிகள், தங்களது குடும்பத்துடன் சொந்த ஊருக்குத் திரும்ப ஆரம்பித்தார்கள். ரயில், பஸ் என்று எந்தவொரு பொதுப் போக்குவரத்தும் இல்லாததால் பல கிலோ மீட்டர்களுக்கு கால்நடையாகவே பயணிக்கத் துவங்கினார்கள். பசி, சோர்வு, விபத்து உள்ளிட்ட காரணங்களால் வழியிலேயே பல மரணங்கள் நிகழ்ந்தன. பலர் கைது செய்யப்பட்டார்கள். தொற்று பரவும் அச்சம் காரணமாக மாநில, மாவட்ட எல்லைகள் மூடப்பட்டன. தங்களின் சொந்த ஊருக்குக் கிளம்பிய மக்கள், வழியில் மாட்டிக்கொண்டு அவதிப்பட்டார்கள். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, மக்கள் மிக அதிகமாக இடம்பெயர்ந்த சம்பவமாக இந்தச் சூழல் கருதப்படுகிறது.
இந்தப் பின்னணிக் காட்சிகளுடன் ‘Bheed’ (பெருந்திரள் – கூட்டம்) என்கிற இந்தித் திரைப்படம் இயங்குகிறது. கோவிட் தொற்று தேசம் முழுக்க ஏற்படுத்திய பதற்றம்தான் இந்தப் படத்தின் பின்னணி. எனினும் மிக மிக நெருக்கடியான சூழலில்கூட சாதிய, மத உணர்வுகள் நெகிழ்வடையாதவாறு சாதி என்னும் அமைப்பு இந்தியாவுக்குள் கெட்டி தட்டிப் போயிருக்கும் அவலத்தையும் இந்தத் திரைப்படம் சித்திரிக்கிறது.
சாதிய அவமதிப்புகள் – நிரந்தரமாகப் பதிந்திருக்கும் உளவியல் அச்சம்
இன்ஸ்பெக்டர் சூர்யகுமார். இளம் காவல் அதிகாரி. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர். காவல் துறையில் பணிகிடைத்தாலும் கூட இளம் வயதில் சந்தித்த சாதிய அவமதிப்புகள் அவருடைய ஆழ்மனதில் உறைந்திருக்கின்றன. இன்னமும் துரத்துகின்றன. அத்தகைய சூழலைச் சந்திக்க நேரும்போதெல்லாம் பதற்றமடைந்து திகைத்து நின்று விடுகிறார். பணியிடத்தில் நிகழக்கூடிய அவமதிப்பின் காரணமாக, தன்னுடைய குடும்பப் பெயரை அவர் வெளிப்படுத்துவதில்லை.
முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ரேணு என்கிற பெண்ணை சூர்யா காதலிக்கிறார். அவளுடைய தந்தையைச் சந்தித்து பெண் கேட்க சூர்யாவுக்கு மிகவும் தயக்கமாக இருக்கிறது. ஒரு தனிமையான சூழலில் சூர்யாவும் ரேணுவும் பாலுறவு கொள்ள ஆரம்பிக்கிறார்கள். ஆரம்பக் கட்டத்திலேயே சூர்யா உறைந்து செயலிழந்துவிடுகிறான். முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களைத் தொடுவதுகூட ‘தீட்டு’ என்று வளர்க்கப்பட்ட அவனால், அந்தச் சமூகத்தைச் சேர்ந்த ரேணுவுடன் சகஜமாகப் புழங்க முடியவில்லை. ரேணுதான் அவனுக்கு நம்பிக்கையூட்ட வேண்டியிருக்கிறது.
இப்படியொரு சூழலில்தான் லாக்டவுன் அறிவிக்கப்படுகிறது. மாவட்ட எல்லையில் உள்ள ஒரு காவல் மையத்தை நிர்வகிக்கும் தலைமைப் பொறுப்பு கிடைப்பதால் சூர்யா மகிழ்ச்சியடைகிறார். அவருடைய மனத்தடையிலிருந்து நகர்ந்து ஒரு துளி முன்னேறும் வாய்ப்பு அது. ஆனால் அந்தப் பொறுப்பில் பல சிக்கல்கள் நிகழ்கின்றன. அவற்றை சூர்யா எவ்வாறாக எதிர்கொள்கிறார் என்று இதன் திரைக்கதை விரிகிறது.
பல்வேறு மனிதர்கள் – ஒரே பிரச்சினை
‘If you know your history, then you would know where you coming from’ என்கிற பாப் மார்லியின் மேற்கோளுடன் இந்தத் திரைப்படம் துவங்குகிறது. இடம்பெயரும் மக்கள் பயணக்களைப்பில் ரயில் தண்டவாளத்தில் அயர்ந்து உறங்குகிறார்கள். லாக்டவுன் காரணமாக ரயில் வராது என்கிற நம்பிக்கையில். ஆனால் ரயில் வருகிறது. இப்படியொரு அவலமான காட்சியுடன் படம் ஆரம்பிக்கிறது.
சூர்யா பாதுகாத்து நிற்கும் எல்லையின் அருகே ஒரு மக்கள் திரள் வருகிறது. பல்வேறு தரப்பட்ட மக்கள் அதில் இருக்கிறார்கள். குடிகாரத் தகப்பனைக் காப்பாற்றி சைக்கிளில் சுமந்து வரும் மகள், வாட்ச்மேன்களாக பணியாற்றுபவர்களின் குடும்பங்கள், பிரச்னை தரும் கணவருக்கு முன்பாகத் தன் மகளை அழைத்து வரக் கிளம்பும் ஒரு பணக்கார தாய், அமைச்சரின் உறவினர், கிடைத்த வாகனத்தில் ஏறி சொந்த ஊருக்குச் செல்லத் துடிககும் ஏராளமான எளிய மக்கள், அந்த எல்லையைக் கடக்கத் தவிக்கிறர்கள். அங்கிருந்து சிறிது பயணத்தில் தங்களின் இருப்பிடத்தை அவர்களால் அடைந்துவிட முடியும். ஆனால் அரசாங்கத்தின் இரும்பு விதிகள் அவர்களை அங்கேயே தடுத்து நிறுத்துகின்றன.
அமைச்சரின் உறவினர் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்த முயற்சி செய்கிறார். பணக்காரத் தாய் எப்படியாவது குறுக்கு வழியில் சென்றுவிட முடியாதா என்று துடிக்கிறார். வாட்ச்மேன்களின் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் பசியால் கதறி அழுகின்றன. பெண்கள் மறைவிடங்களைத் தேடி அலைகிறார்கள். கான்கிரீட் கலவை இயந்திரத்துக்குள் பதுங்கிக்கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிலர் எல்லையைக் கடக்க முயன்று போலீஸாரிடம் பிடிபடுகிறார்கள்.
இரும்புத்தனமான விதிகளுடன் இயங்கும் அரசாங்கம்
தனக்குத் தரப்பட்ட கடமையைச் சரியாக நடைமுறைப்படுத்த எண்ணுகிறார் சூர்யா. அதேநேரத்தில் காவல்துறையின் மூர்க்கமான அடக்குமுறைகளைப் பின்பற்றுவதில் அவருக்கு நம்பிக்கையில்லை. அடித்தட்டிலிருந்து வந்திருப்பதால் இந்தச் சூழலை கரிசனத்துடன் அணுக முயற்சிக்கிறார். எல்லையைக் கடந்து ஊருக்குள் செல்லத் துடிக்கும் அனைவரையும் முதலில் அமைதிப்படுத்தி அமர வைக்கிறார்.
அந்தச் சூழலைப் பார்த்தால் இந்தியாவின் ஒரு துண்டுச் சித்திரம் போவே இருக்கிறது. சாதி, வர்க்கம், அதிகாரம் என்று பல்வேறு தரப்பு மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரே பிரச்னைதான். கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசாங்கம், மக்களுக்கான பிரச்னைகளைத் தீர்ப்பதில் போதிய அக்கறை காட்டுவதில்லை. சூர்யாவின் மேலதிகாரி ‘நிலைமை கட்டுக்குள் இருக்கிறதா?’ என்று மட்டும்தான் விசாரிக்கிறாரே தவிர, அதற்கான வசதிகளைச் செய்து தருவதில்லை. இருக்கின்ற காவல்துறையினரை வைத்து சமாளிக்க வேண்டிய நிலைமை.
வாகனத்தில் உள்ள குழந்தைகள் பசியால் அழுவதால், பக்கத்து வாகனத்திலுள்ள இஸ்லாமியர்கள் கருணையுடன் உணவு அளிக்க முன் வருகிறார்கள். ஆனால் சாதிய வெறி கொண்ட பல்ராம் திரிவேதி, ஆவேசத்துடன் அந்த உணவை திருப்பித் தருகிறார். கண்ணுக்கு எதிரே உயிர்கள் பறிபோய்க் கொண்டிருக்கும் சூழலில்கூட தங்களின் சாதி, மத உணர்வுகளைக் கைவிடப் பலர் தயாராக இருப்பதில்லை. இஸ்லாமியர்களால்தான் தொற்று பரவுகிறது என்கிற வாட்சப் வதந்தி காரணமாக கோபம் அவர்களின் மீது திரும்பும் அவலமும் நடக்கிறது.
அதிகாரத்தைக் கழற்றிவிட்டுப் பார்ப்பதுதான் நீதி
கொந்தளிப்பான இந்தச் சூழலை மிகத் திறமையாகக் கையாள்கிறார் சூர்யா. இந்த இடத்துக்குப் பக்கத்தில் ஓர் ஆடம்பரமான புதிய வணிகக்கூடம் இருக்கிறது. ஒரு பக்கம் மக்கள் பசியால் வாடிக் கொண்டிருக்க, அருகில் உள்ள கட்டடத்தில் ஏராளமான உணவுப் பொருட்கள் இருக்கின்றன. இதுவும் இந்தியாவின் வர்க்கப் பிரச்னையைப் பிரதிபலிக்கும் காட்சியாக இருக்கிறது.
சூர்யாவை ஆவேசமாக அணுகும் பல்ராம் திரிவேதி, ‘ஒரு மணி நேரம் தருகிறேன். அங்கிருக்கும் உணவுப் பொருட்களை எடுக்க அனுமதியுங்கள். இல்லையென்றால் நாங்கள் உள்ளே புக வேண்டியிருக்கும்‘ என்று எச்சரிக்கிறார். ‘அப்படியெல்லாம் நீங்கள் சட்டத்தை மீற முடியாது’ என்று அவரை பதிலுக்கு எச்சரிக்கிறார் சூர்யா.
அதுவரை இன்ஸ்பெக்டர் சூர்யாவைத் தனது சமூகத்தைச் சேர்ந்தவர் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பல்ராம், குடும்பப் பெயரை வைத்து ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்த அடுத்த கணமே ‘உன்னோட யூனிபார்முக்காகப் பார்க்கிறேன். உன்னை மாதிரி ஆளுங்கள்லாம் எங்களைத் தடுக்கப் பார்க்கறீங்களா?’ என்று சூர்யாவை ஆவேசமாகத் தள்ளி விட்டு துப்பாக்கியைப் பறித்துக்கொண்டு மாலுக்குள் ஓடுகிறார். சாதிய அவமதிப்பை எதிர்கொண்டவுடன் வழக்கம் போல் திகைத்து நின்றுவிடுகிறார் சூர்யா.
அதுவரை சற்று யதார்த்தமாக பயணித்துக் கொண்டிருந்த திரைப்படம், பல்ராம் துப்பாக்கியுடன் சென்றவுடன் நாடகத்தனமானதாக மாறிவிடுகிறது. பல்ராமை ‘நக்சல்’ என்கிற முத்திரையுடன் சுட்டுக்கொன்றுவிடத் துடிக்கிறது காவல்துறை. ஆனால் உணவுக்காக போராடிய மனிதரை சூர்யா அவ்வாறு நினைப்பதில்லை. சாதிய நோக்கில் தன்னை அவமதித்தவர் என்றாலும் அவர் உயிர் தப்புவதற்கு உதவுகிறார். ‘குற்றவாளியை தப்பிக்க விட்டுவிட்டாயே… ஹீரோத்தனம் செய்கிறாயா?’ என்று சூர்யாவின் மேலதிகாரி கோபமாக கேட்கிறார்.
‘உங்களிடம் உள்ள அதிகாரத்தை எல்லாம் நீக்கிவிட்டு யோசித்துப் பாருங்கள். அதுதான் நீதி. உண்மையில் நீங்கள்தான் முதலில் ஹீரோவாக மாறி இருக்க வேண்டும்’ என்று சூர்யா சொல்லும் பதில் முக்கியமானது.
ராஜ்குமார், பங்கஜ் கபூரின் சிறந்த நடிப்பு
சூர்யாவாக ராஜ்குமார் அற்புதமாக நடித்துள்ளார். சாதிய அவமதிப்பை எதிர்கொள்ளும்போது திகைத்து நின்றுவிடுவதும் பிறகு அதிலிருந்து தார்மிக ஆவேசத்துடன் முன்னகர்வதும் என்று பல காட்சிகளில் தனது பங்களிப்பைச் சிறப்பாகத் தந்துள்ளார். பலராம் திரிவேதியாக, பங்கஜ் கபூரின் நடிப்பும் குறிப்பிடத்தக்கது. முழுத் திரைப்படமும் கறுப்பு வெள்ளையில் படமாக்கப்பட்டுள்ளது. காத்திருக்கும் மக்களின் பல்வேறு துயர முக பாவங்களை ஒளிப்பதிவாளர் சௌமிக் முகர்ஜி அற்புதமாகப் பதிவு செய்துள்ளார்.
ஆர்டிகள் 15, முல்க் போன்ற திரைப்படங்களை இயக்கிய அனுபவ் சின்ஹா இந்தப் படத்தை இயக்கி உள்ளார். ‘லாக் டவுன் முடிந்தவுடன் இவர்கள் மீண்டும் நகரத்துக்கு வருவார்களா?’ என்று ஒருவர் சந்தேகம் எழுப்ப ‘நிச்சயம் வருவார்கள்.. அவர்களுக்கு வேறு வழியில்லை’ என்று இன்னொருவர் சொல்லும் பதில் அவர்களின் நிராதரவான நிலையை அழுத்தமாக எடுத்துக்காட்டுகிறது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கல்வி கற்று முன்னேறினாலும் சாதியம் அவர்களைத் தொடர்ந்து துரத்திக் கொண்டே இருக்கிறது; அவர்களின் ஆழ்மனதில் இது சார்ந்த உளவியல் அச்சம் நிரந்தரமாகப் பதிந்துள்ளது. இவற்றை இந்தத் திரைப்படம் மிக வலிமையாகப் பதிவு செய்துள்ளது.
(தொடர்ந்து பேசுவோம்)