ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒரு பெண், தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட பாதிப்பு காரணமாக முட்டி மோதி அதிகாரத்தை அடைந்து ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக ஆனாலும்கூட எத்தகைய எதிர்ப்புகள், தடைகளை எல்லாம் அவர் சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதை ‘Madam Chief Minister’ என்கிற இந்த இந்தித் திரைப்படம் சித்திரித்திருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த மாயாவதியை மெலிதாகப் பிரதிபலிப்பது போல் இதன் பிரதான பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மதமும் அதிகார அரசியலும் பின்னிப் பிணைந்திருக்கும் இந்திய அரசியலின் பல்வேறு நடைமுறை அவலங்களை இந்தத் திரைப்படம் பிரதிபலிக்கிறது. ஆனால் பல காட்சிகளில் இருக்கும் மிகையான நாடகத்தன்மைகள், திரைப்படத்துக்கென்றே உருவாக்கப்பட்ட அபத்தமான திருப்பங்கள் போன்றவை காரணமாக ‘ஒரு கவனிக்கத்தக்க அரசியல் சினிமா’ என்று இதை குறிப்பிட முடியவில்லை.
அடித்தட்டு சமூகத்தில் இருந்து ஒரு முதலமைச்சர்
தாரா ரூப்ராம், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண். இவரது தந்தை, முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சாதி வெறியரால் கொலை செய்யப்படுகிறார். பிறக்கும்போதே ஒரு தடையை எதிர்கொள்கிறாள் தாரா. அம்மாவின் அன்பு மற்றும் பிடிவாதம் காரணமாக பெண் சிசுக்கொலையிலிருந்து தப்பிக்கிறாள்.
கல்லூரியில் இந்திரமணி திரிபாதி என்கிற இளைஞனோடு தாராவுக்குக் காதல் ஏற்படுகிறது. இரண்டு முறை கருவுற்று காதலனின் ஏற்பாடு காரணமாக அது அழிக்கப்படுகிறது. திருமணம் செய்து கொள்ளும்படி தாரா கேட்கும் போது, அவளது சாதியைச் சுட்டிக்காட்டும் காதலன் ‘உன்னை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்? வைப்பாட்டியாக வேண்டுமானால் வைத்துக் கொள்கிறேன்’ என்று சொல்ல தாரா கோபமடைகிறாள். முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இந்திரமணி எம்.எல்.ஏவாக ஆவதற்கு முயன்று கொண்டிருக்கிறான். எனவே அவனுக்கு எதிராகத் தேர்தல் பிரசாரம் செய்கிறாள் தாரா.
இதனால் கோபம் கொள்ளும் இந்திரமணி தனது ஆட்களை வைத்து தாராவை அடித்து, கர்ப்பத்தை கலைக்கச் செய்கிறான். ‘மாஸ்டர்ஜி’ என்று அழைக்கப்படும் ஓர் அரசியல் இயக்கத்தின் தலைவர், வன்முறையிலிருந்து தாராவைக் காப்பாற்றி அடைக்கலம் தருகிறார். அங்கு அரசியல் அரிச்சுவடியைக் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறாள் தாரா. இந்திரமணியை பழிவாங்கத் துடிக்கும் தாராவிடம் ‘நீ தனிப்பட்ட காரணத்துக்காக அரசியலுக்குள் வருகிறாயா… உன்னுடைய சமூகத்துக்கு நல்லது செய்ய வருகிறாயா? இரண்டாவதுதான் நோக்கம் என்றால் வரலாம்’ என்று மாஸ்டர்ஜி கேட்க, தாரா அதற்கு சம்மதிக்கிறாள்.
குருவை மிஞ்சுகிற சிஷ்யை
தேர்தல் காலத்து சமரசங்களுடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ளாமல் தன்னுடைய அரசியல் கட்சியை நேர்மையாக நடத்தி வருகிறார் மாஸ்டர்ஜி. தேர்தலில் தோல்விகள் தொடர்ந்தாலும் அதைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் களத்தில் இறங்கி சேவை செய்வதும்தான் அவரது பிரதான நோக்கமாக இருக்கிறது.
மக்கள் செல்வாக்கையும் மரியாதையையும் உடையவராக இருப்பதால் கூட்டணி அமைக்கக் கட்சிகள் அவரைத் தேடி வருகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் மறுத்து திருப்பியனுப்புகிறார் மாஸ்டர்ஜி. அவரது நிலைப்பாட்டில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த முனைகிறாள் தாரா. குருவை மிஞ்சும் சிஷ்யையாக ‘அதிகாரத்தை அடையாமல் எப்படி மக்களுக்கு எப்படி நல்லது செய்ய முடியும்?’ என்று வாதாடுகிறாள். ஒரு கட்டத்தில் இதை அனுமதிக்கும் மாஸ்டர்ஜி, கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக தாராவை அனுப்புகிறார்.
மதவுணர்வுகளை வைத்து அரசியல் செய்யும் ஒரு கட்சியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடிக்கும் தாரா, ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தை இரண்டு கட்சிகளும் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்பதைப் பரிந்துரைக்கிறாள். தாராவின் புதிய அணுகுமுறையும் வித்தியாசமான தோ்தல் பிரசாரமும் கட்சிக்கு ஒரு புதிய மறுமலர்ச்சியைத் தருகிறது. மக்களும் தாராவின் அதிரடியான பேச்சினால் ஈர்க்கப்படுகிறார்கள். மாஸ்டர்ஜியின் கூட்டணி பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று வெற்றியடைகிறது.
சாதி, பாலினம் ஆகிய இரண்டு காரணங்களால் நிகழும் எதிர்ப்பு
கட்சியிலுள்ள மூத்த தலைவர்களை மீறி தாராவை முதலமைச்சராக்குகிறார் மாஸ்டர்ஜி. ‘பதவியில் இருந்து கொண்டு தவறு செய்தால் நானே உன்னைக் கண்டிப்பேன்’ என்று எச்சரிக்கையுடன் பதவியில் அமரவைக்கிறார். அடித்தட்டு மக்களுக்காகப் பல நல்ல திட்டங்களை செயல்படுத்துகிறாள் தாரா. தடையை மீறி ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை ஆலயத்துக்குள் அழைத்துச் செல்கிறாள். அமைச்சரவைப் பட்டியலை கூட்டணிக் கட்சி தரும் போது அதில் தன்னை ஏமாற்றிய முன்னாள் காதலன் இந்திரமணியின் பெயர் இருப்பதைப் பார்த்து ‘அவர் அமைச்சர் ஆகக்கூடாது’ என்று கறாராக மறுக்கிறாள். ‘தனிப்பட்ட காரணத்துக்காக அரசியலைப் பயன்படுத்த வேண்டாம்’ என்று சொல்லியிருந்தேனே’ என்று மாஸ்டர்ஜி கோபிக்கிறார்.
கூட்டணி கட்சியில் மட்டுமல்லாது சொந்தக் கட்சியில் இருந்தே எதிர்ப்புகளைச் சம்பாதிக்கிறாள் தாரா. தாராவின் அணுகுமுறைகள் சிலவற்றில் அதிருப்தி இருந்தாலும் அவரே முதலமைச்சராகத் தொடர வேண்டும் என்பதை தீர்மானமாகச் சொல்கிறார் மாஸ்டர்ஜி. இதனால் கூட்டணிக் கட்சியினரால் கொலை செய்யப்படுகிறார். தன்னுடைய அரசியல் ஆசான் மற்றும் வழிகாட்டியை இழந்த காரணத்தினால் தாராவின் ஆவேசம் அதிகமாகிறது.
கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களை கடத்திச் சென்று மந்திரிப்பதவி தருவதாகப் பேரம் பேசுகிறாள். இதைக் கேள்விப்பட்டு ஆத்திரப்படும் கூட்டணிக் கட்சியின் தலைவர் தனது அடியாட்களுடன் வர, அங்கு நிகழும் மோதலில் தன்னுடைய உயிரைப் பணயம் வைத்து முதலமைச்சரைக் காப்பாற்றுகிறார், அரசியல் ஆலோசகரான தேனிஷ் கான். எனவே அவரையே திருமணம் செய்து கொள்கிறாள் தாரா.
ரிச்சா மற்றும் சௌரப் சுக்லாவின் அற்புதமான நடிப்பு
முதலமைச்சரின் மீது கொலைத் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கூட்டணித் தலைவர் சிறையில் அடைக்கப்படுகிறார். இதனால் அவரது கட்சியின் உறுப்பினர்கள், தாராவின் கட்சியில் வந்து இணைகிறார்கள். இதனால் தாராவின் அரசியல் பலம் அதிகமாகிறது. தப்பிச் செல்லும் இந்திரமணியை தனது தம்பியின் மூலம் கொலை செய்கிறாள். ஜாமீனில் வெளியே வரும் கூட்டணிக் கட்சித் தலைவர் சி.பி.ஐ. விசாரணையைக் கோருவதால் தாராவின் சி.எம்.பதவிக்கு ஆபத்து வருகிறது. எனவே தனது கணவரை முதலமைச்சராக்குவது என்று முடிவு செய்கிறாள்.
தாராவின் உடல்நிலை திடீரென பலவீனம் அடைகிறது. அவளுடைய உணவில் மெல்லக் கொல்லும் விஷம் கலந்திருப்பதை தாராவின் நம்பிக்கைக்குரிய மருத்துவர் அம்பலப்படுத்துகிறார். இந்தச் சதிக்குப் பின்னால் தன்னுடைய கணவர் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடையும் தாரா, கணவரை நுட்பமாகப் பழி வாங்கிவிட்டு அந்த சென்டிமென்ட்டையே வைத்து தனது பதவியை காப்பாற்றிக் கொள்வதோடு படம் முடிகிறது.
தாராவாக ரிச்சா சதா நடித்திருக்கிறார். ஆஹா ஓஹோவென்று பாராட்ட முடியாவிட்டாலும் குறை சொல்ல முடியாத நடிப்பு. ஒன்றும் அறியாத இளம்பெண்ணாக இருக்கும் போது காட்டும் பிடிவாதம், கோபம், அதிகாரத்துக்குள் நகரும் போது காட்டும் உறுதி, அங்கு தன்னுடைய இருப்பை நிலைநாட்டிக் கொள்வதற்காகச் செய்யும் அரசியல் வியூகங்கள், தந்திரங்கள், அரசியல் மேடையில் மக்களிடம் கவர்ச்சிகரமாகப் பேசுவது, அரசியல் ஆசானுக்கு காட்டும் உண்மையான மரியாதை போன்ற காட்சிகளில் ரிச்சாவின் நடிப்பு நன்றாக இருக்கிறது.
தாராவின் அரசியல் ஆசான் ‘மாஸ்டர்ஜி’யாக நடித்திருக்கும் சௌரப் சுக்லாவின் நடிப்பு அற்புதமாக இருந்தது. ‘அதிகாரம் என்பதின் போதை மிக மிக ஆபத்தானது. அது எந்தவொரு மனிதனையும் சமரசங்களுக்கும் தீயவழிக்கும் நகர்த்திச் செல்லும்’ என்பதில் நம்பிக்கையுள்ளவராக இருக்கிறார். தாராவின் சில அணுகுமுறைகள், தனிப்பட்ட பழிவாங்கும் குணம் போன்றவற்றில் மாறுபட்ட கருத்து இருந்தாலும் தாராவிடமுள்ள அடிப்படையான நேர்மை குறித்து அவருக்கு மதிப்பும் பிரியமும் இருக்கிறது.
‘மெட்ரோவை விடவும் கோயில் முக்கியம்’
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவள் மற்றும் பெண் ஆகிய இரண்டு அடிப்படையான காரணங்களுக்காக அரசியலில் தாரா எதிர்கொள்ளும் தடைகள், அவமதிப்புகள், எதிர்ப்புகள் போன்றவை காட்சிகளில் சித்திரிக்கப்பட்டிருந்தாலும் ஒரு காட்சி கூட அழுத்தமானதாகவோ உணர்வுபூர்வுமானதாகவோ இல்லை. மாறாக நாடகத்தனமான திருப்பங்கள்தான் இருக்கின்றன. தனது பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காகவும், தனிப்பட்ட பழிவாங்குதலுக்காகவும் தாரா எந்த எல்லைக்கும் செல்கிறாள் என்பது போல் பல காட்சிகள் பயணிப்பதால் படம் என்னதான் சொல்ல வருகிறது என்பதில் தெளிவில்லை.
தாராவைப் பதவியில் இருந்து அப்புறப்படுத்துவதற்காக அவரது கட்சியில் இருந்தே சதி நடக்கிறது. ‘அவள் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறாள். மெட்ரோ ரயில் திட்டத்தைக் கூட விரைவில் கொண்டு வரப்போகிறாளாம்’ என்று ஒருவர் சொல்ல ‘இங்கு மெட்ரோ கொண்டு வருபவர்களை விடவும் கோயில் கட்டுபவர்களைத்தான் மக்கள் அதிகமாக நம்புவார்கள்’ என்கிற வசனம், மத அரசியலின் ஆபத்தைச் சுட்டிக்காட்டுகிறது. இது போல் ஆங்காங்கே தெரியும் அரசியல் விமர்சனங்களுக்காக, இந்தத் திரைப்படத்தை ‘தலித் சினிமா’வின் வரிசையில் வைக்கலாம்.
(தொடர்ந்து பேசுவோம்)