இந்தியாவில் சாதியும் மதமும் உணவும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. ஒருவரின் உணவுப்பழக்கத்தை வைத்து அவருடைய சாதியை அடையாளப்படுத்துவது, கிண்டல் செய்வது, மலினமாக எண்ணுவது, அருவருப்புடன் பார்ப்பது, பாரபட்சத்துடன் அணுகுவது போன்றவை சமூகத்தில் இயல்பாக உள்ளன. உணவுப் பழக்கம் என்பது இனக்குழுக்களின் வரலாற்று பின்னணி சார்ந்தது. ஒரு நிலப்பிரதேசத்தின் தன்மை முதற்கொண்டு பல்வேறு காரணிகள் உணவுப் பழக்கத்தைத் தீர்மானிக்கின்றன. தாவரங்கள் வளர்வதற்கு போதிய சூழல் இல்லாத பனிப்பிரதேசங்களில் விலங்குகளின் இறைச்சிதான் பிரதான உணவாக இருக்க முடியும்.
ஒவ்வொரு சமூகத்துடைய உணவுப்பழக்கத்தின் பின்னாலும் இப்படி பல்வேறு கலாசாரக் காரணிகள் இருக்கின்றன. மேலும் ஒருவரின் உணவுப்பழக்கம் என்பது அவருடைய தனிப்பட்ட உரிமையும் கூட. ஆனால் சில உணவுப்பழக்கங்களை பொதுவில் அத்தனை எளிதில் சொல்லி விட முடியாது. ‘மாட்டுக்கறி சாப்பிடுகிறேன்’ என்று ஒருவர் சொன்னால் அவருடைய சாதியை ஆராய்ந்து அருவருப்புடன் பார்க்கும் மேட்டிமைக்குணம் பலரிடமும் இருக்கிறது. மாட்டுக் கறி வைத்திருந்த காரணத்தினாலேயே ஒருவர் அடித்துக் கொல்லப்படும் அளவுக்கு மத அரசியல் நோய் இந்தியாவில் முற்றியுள்ளது.
மாட்டுக்கறியைப் போலவேதான் பன்றிக்கறியும். மலம் தின்று வளரும் ஒரு பிராணியை மனிதனால் எப்படி தின்ன முடியும் என்கிற அருவருப்புடன் பார்க்கிறவர்கள், சாதியக் கண்ணோட்டத்துடன் வெறுக்கிறவர்கள் அதிகம். பன்றி என்பதே ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஒரு குறியீடுதான்.
சேத்துமான் – படமாக்கப்பட்ட பெருமாள் முருகனின் சிறுகதைகள்
2022-ல் வெளியான ‘சேத்துமான்’ என்கிற திரைப்படம், ரகசியமாகப் பன்றிக்கறி சாப்பிட விரும்புகிற ஒரு பண்ணாடியின் வழியாக ஒரு நிலப்பிரதேசத்தின் சாதிய ஒடுக்குமுறையையும் பாரபட்சக் கொடுமையையும் மிக இயல்பான திரைமொழியில் பதிவு செய்துள்ளது.
எழுத்தாளர் பெருமாள்முருகனின் ‘வறுகறி’ மற்றும் ‘மாப்பு குடுக்கோணுஞ் சாமீ’ ஆகிய இரண்டு சிறுகதைகளை அடிப்படையாக வைத்து இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குநரின் வேண்டுகோளுக்கு இணங்க பெருமாள் முருகனே திரைக்கதையையும் எழுதியுள்ளார். இதுவரை தமிழ் சினிமாவில் மிகைப்படுத்தப்பட்ட தொனியில் ஒலித்துக் கொண்டிருந்த கொங்குப் பிரதேசத்தின் வட்டார மொழி, இந்தப் படத்தில் மிக இயல்பாக ஒலிக்கிறது. அந்தப் பிரதேசத்தின் கலாசாரக் கூறுகள் யதார்த்தமான காட்சிகளின் வழியாகப் பதிவாகியுள்ளன.
நடிப்பு முதற்கொண்டு தொழில்நுட்ப பயன்பாடு வரை எந்தவொரு இடத்திலும் மிகையே இல்லை என்பதுதான் இந்தப் படத்தின் தனித்துவம். ‘சேத்துமான்’ திரைப்பட இயக்குநர் தமிழ், அதற்கு முன்பாக சில வணிகத் திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். அந்தப் பாதையில் முன்னகர்வதற்கு பல சிரமங்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தான் எடுக்க விரும்புகிற சினிமா இதுவல்ல என்கிற எண்ணம் ஒரு கட்டத்தில் அவருக்குத் தோன்றுகிறது. அந்த எண்ணத்தை அவருக்குள் விதைத்தது, ‘ ஒழிவுதிவசத்தே களி’ என்கிற மலையாளத் திரைப்படம். குறைந்த பட்ஜெட்டில், இயல்பான தொனியில் ஓர் ஆழமான சமூகப் பிரச்னையைத் தன்னால் சொல்ல முடியும் என்கிற நம்பிக்கையை அந்தப் படம் அவருக்குள் தோற்றுவித்தது.
எளிமையான திரைமொழியில் கவனம் ஈர்க்கும் காட்சிகள்
இரானிய திரைப்படங்களின் எளிமையோடும் அழகியலோடும் தன்னுடைய திரைப்படத்தை உருவாக்கிய விரும்பிய தமிழ், இலக்கிய எழுத்தைத் திரைப்படமாக்கலாம் என்கிற விருப்பத்தோடு தேடிய வேட்டையில் பெருமாள்முருகனின் சிறுகதைகள் கிடைத்தன. குறிப்பாக ‘வறுகறி’ சிறுகதையின் கடைசி வரி அவரை ரொம்பவும் பாதித்தது; தான் அனுபவித்த உணர்வை சினிமாவின் மூலமாக கடத்த முடியும் என்கிற நம்பிக்கையையும் அது ஏற்படுத்தியது.
‘சேத்துமான்’ படத்தை, குறைந்த பட்ஜெட்டுக்குள் தயாரிப்பதற்காகப் பல இடங்களில் அலைந்த இயக்குநர், ஒரு கட்டத்தில் அதன் சாத்தியமின்மையை உணர்ந்து சொந்தமாகத் தயாரிப்பதற்கு முயற்சி செய்தார். சினிமா காமிராவை வாடகைக்கு எடுப்பதற்கே அவரிடம் நிதி போதாது என்கிற யதார்த்தம் அப்போதுதான் அவருக்கு உறைத்தது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கருத்தியல் தொடர்பான திரைப்படங்களை இயக்குவதிலும் தயாரிப்பதிலும் ஆர்வமுள்ள இயக்குநர் பா.ரஞ்சித்தை இயக்குநர் தமிழ் அணுகுகிறார். உடனே ஒப்புதல் கிடைக்கிறது. ‘நீலம்’ புரொடெக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தத் திரைப்படம், கொரானோ காலத்து சிரமங்களில் திரையரங்குகளில் வெளியாக முடியாத நிலையில் ஓடிடி பிளாட்ஃபார்மில் வெளியானது. பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இந்தத் திரைப்படம், விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாராட்டுதலையும் பெற்றது.
மாட்டுக்கறியைப் பொதுவில் சொல்ல முடியாதவர்கள் ‘பெரிய ஆட்டுக்கறி’ என்கிற ரகசிய குறியீட்டுப் பெயரில் சொல்கிற நடைமுறைப் பழக்கம் இருக்கிறது. அதைப் போலவே பன்றியை ‘சேத்துமான்’ என்று கொங்கு பிரதேசத்தில் குறிப்பிடுவதாக சொல்கிறார்கள். ‘சேற்றில் உள்ள மான்’ என்று பொருள்.
தாத்தா பூச்சியப்பனும் பேரன் குமரேசனும்
பூச்சியப்பன் என்கிற பெரியவர், தனது பேரன் குமரேசனுடன் ஊரைவிட்டுத் தள்ளி ஒதுக்குப்புறமாக வாழ்ந்து வருகிறார். கூடவே ஓர் ஆட்டுக்குட்டி. தனது பேரன் கல்வி கற்று பெரிய ஆளாக வர வேண்டும் என்கிற கனவு அவருக்குள் நிரம்பி வழிகிறது. சிரமம் பார்க்காமல் அவனைத் தோளில் தூக்கிவைத்துக்கொண்டு நீண்ட தூரம் நடந்து பள்ளிக்கூடத்தில் விட்டு அழைத்துச் செல்வதை அன்றாட வழக்கமாக வைத்திருக்கிறார். கூடை முடைந்து பிழைப்பு நடத்தும் பூச்சியப்பன், அந்தச் சுமையோடு பேரனையும் மகிழ்ச்சியோடு தோளில் தாங்குகிறார்.
சிறுவன் குமரேசனின் பெற்றோர், அதாவது பூச்சியப்பனின் மகனும் மருமகளும் என்னவானார்கள்? இறந்துவிட்டார்கள். அது இயற்கையான மரணமில்லை. கொல்லப்பட்டார்கள். ஊருக்குள் நாலைந்து மாடுகள் அடுத்தடுத்து இறந்து போகின்றன. இறந்த மாடுகளை முற்பட்ட சமூகத்தினர் பூச்சியப்பனின் சமூகத்திடம் ஒப்படைக்கிறார்கள். தோலுக்குக் காசு தர வேண்டும் என்கிற நிபந்தனையுடன். இவர்கள் அந்த மாடுகளைச் சமைத்துச் சாப்பிடும் போது ஊர் மக்களுக்கு ஒரு சந்தேகம் வருகிறது. கறிக்காகத்தான் மாடுகளை மருந்துவைத்து இவர்கள் கொன்றிருப்பார்களோ என்று. பெரிய பெரிய தடிகளைத் தூக்கி எடுத்துக் கொண்டு வந்து இவர்களை பயங்கரமாக தாக்குகிறார்கள். மற்றவர்கள் ஓடி தப்பிப் பிழைக்க, பூச்சியப்பனின் மகன் சண்டையிட்டு இறக்கிறான். அதாவது கொல்லப்படுகிறான். இந்தக் கலவரத்தில் அடிபடும் மருமகளும் ஆண் குழந்தையைப் பெற்றுப்போட்டுவிட்டு இறக்கிறாள். இதுதான் பூச்சியப்பனின் பின்னணி.
பெயருக்கேற்ப வாயில்லா பூச்சியாக வாழ்பவர் பூச்சியப்பன். கூடை வியாபாரத்தை சாமர்த்தியமாக நடத்தத் தெரியாமல், கொடுத்ததை வாங்கிக் கொள்பவர். தனக்குத் தெரிந்த தொழிலை ஏமாற்றாமல் நேர்மையாக நடத்த வேண்டும் என்று இருப்பவர்.
பேரனைத் தூக்கிக்கொண்டு இந்த ஊருக்குள் அநாதரவாக நுழையும்போது வசிக்க இடமும் உணவும் தந்தவர் பண்ணாடி வெள்ளையன். எனவே ஆதாயமே இல்லாவிட்டாலும் வெள்ளையனுக்கு விசுவாசமாகப் பல வேலைகளைச் செய்கிறார். ஏன் பூச்சியப்பா.. இப்படி பிழைக்கத் தெரியாத ஆளா இருக்கற என்று மற்றவர்கள் சொன்னாலும் காதில் வாங்கிக் கொள்வதில்லை. தனது மகனும் மருமகளும் ஆதிக்கச் சக்திகளால் கொல்லப்பட்டதின் காரணமாக பேரனைப் பொத்திப் பொத்தி வளர்க்கிறார். எந்தவொரு வம்புக்கும் செல்வதில்லை. பகையையும் தேடிக் கொள்வதில்லை. இப்படிப்பட்ட பாவப்பட்ட ஆசாமிக்கு வேறு மாதிரியான தீர்ப்பை விதி எழுதி வைக்கிறது. அது விதியல்ல. ஆதிக்கத் திமிர் கொண்டவர்களின் சதி.
கல்வி – ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை விடுவிக்கும் கனவு
தனது பேரனைத் தோளில் தூக்கிக்கொண்டு பூச்சியப்பன் வெயிலில் நடக்கும் காட்சியோடு படம் துவங்குகிறது. ‘என் பொன்னுகுட்டி நல்லா படிக்கணும்.. பெரிய அதிகாரியா வரணும். காரு, பங்களான்னு இருக்கணும்’ என்கிற தன்னுடைய கனவை ஆசை ஆசையாக சொல்கிறார் பூச்சியப்பன். பாசத்தைக் கொட்டித் தன்னை வளர்க்கும் தாத்தாவிடம் பதிலுக்கு பிரியத்தைக் காட்டுகிறான் பேரன்.
பன்றி வளர்க்கும் தொழிலைச் செய்பவர் ரங்கன். தங்களை அடக்கி ஒடுக்க நினைக்கும் ஆதிக்க மனோபாவம் கொண்டவர்களை எதிர்த்துப் பேசும் துணிச்சல் கொண்டவர். தன்னுடைய மகளை டீ, வடை வாங்கி வர அனுப்பும் பள்ளி ஆசிரியரைத் தட்டிக் கேட்கிறார். ‘பேசணும்.. பூச்சியப்பா. நாம பேசினாலே காது கேக்காத மாதிரி இருப்பானுங்க’ என்று பூச்சியப்பனிடம் அவ்வப்போது உபதேசம் செய்கிறார். டீக்கடையில் தங்களுக்கும் கிளாஸில் டீ தரச் சொல்லி அழுத்தம் கொடுக்கிறார் ரங்கன். ஆனால் டீயை அருந்தாமல் பூச்சியப்பன் கீழே வைத்து விட்டு சொல்லும் வசனம் ரசிக்கத்தக்காக இருக்கிறது: ‘இல்ல. அவங்க குடிச்ச கிளாசில குடிக்கணுமான்னு யோசிக்கறேன்’.
மரத்தைக் கூட அல்ல; இரு நிலத்துக்கும் பொதுவான இடத்தில் இருந்த மரத்தின் கிளையை வெட்டியதில் வெள்ளையனுக்கும் அவருடைய பங்காளி சுப்ரமணிக்கும் இடையே சச்சரவு ஏற்படுகிறது. இது நீண்ட காலமாகத் தொடரும் பகை. இந்தப் பஞ்சாயத்துக்கு ஆள் சேர்ப்பதற்காக பூச்சியப்பனையும் காரில் அழைத்துக் கொண்டு செல்லும் வெள்ளையன், தன் பங்காளி குறித்து கோபமாகச் சொல்கிறார். ‘நான் திண்ணையைப் பிடிச்சு நடந்தப்ப… என் —— ப் பிடிச்சு நடந்த பய’.
கலாசார மணம் கமழும் வசனங்கள்
வசனங்களில் இது போல் இயல்பாக வந்து விழும் வசைகள், கலாசார பதிவு நோக்கில் ரசிக்கத்தக்கதாக இருக்கின்றன. இன்னொரு இடத்தில் தன் பங்காளி தனக்குச் செய்து வரும் தொடர்ச்சியான குடைச்சலைப் பற்றி சொல்லும் போது ‘அவன் செஞ்ச கொடுமை இருக்கே.. அது அந்த மூளிஅலங்காரி, நல்லதங்காளுக்கு செஞ்ச கொடுமையவே தோற்கடிச்சிடும்’ என்கிறார் வெள்ளையன். மக்களின் மொழியில் இயல்பாக வெளிப்படும் தொன்மைக் கதையாடல்களின் வாசனையும் மேற்கோள்களும், சிறப்பாக வசனம் எழுதிய பெருமாள்முருகனைப் பாராட்டச் சொல்கின்றன.
மரக்கிளையை வெட்டியது தொடர்பாக நிகழும் பஞ்சாயத்துக் காட்சி சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இயல்பாகப் பேசிக் கொண்டிருக்கும் மனிதர்களையும் ஒரு கட்டத்துக்குப் பிறகு அவர்களுக்குள் நடக்கும் ஆவேசமான மோதல்களையும் பூச்சியப்பன் மௌன சாட்சியாக ஓரமாக நிற்பதையும் காமிரா அற்புதமாக பதிவு செய்திருக்கிறது. பஞ்சாயத்தில் தனக்காக பூச்சியப்பன் சாட்சி சொல்வானா என்று எதிர்பார்க்கிறார் பண்ணாடி வெள்ளையன். மௌனமாக தலையைக் குனிந்து கொள்கிறார் பூச்சியப்பன். அப்போது கூட இருக்கிற ஒருவர் சொல்லும் வசனம் முக்கியமானது. ‘நமக்கு சாட்சி சொன்னான்னு அடிபட்டா கேக்கக்கூட நாதி கிடையாது’. ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் எத்தனை நிராதரவான இடத்தில் நிற்க வைக்கப்படுகிறார்கள் என்பதை இந்த ஒரு வசனமே கச்சிதமாகச் சொல்லிவிடுகிறது. பூச்சியப்பன் சாட்சி சொன்னால் பங்காளி தரப்பால் சாகடிக்கப்படுவார் என்பது மிக இயல்பாக, ஏதோ அதுதான் நடைமுறை என்பது போல இவர்களின் உரையாடலில் வெளிப்படுகிறது.
‘மினிமலிச’ பாணியைப் பயன்படுத்தியிருக்கும் இயக்குநர்
பஞ்சாயத்து முடிந்து பங்காளியைத் தோற்கடித்த அற்பமான திருப்தியோடு தன் நண்பர்களுடன் மது அருந்தியபடி வெள்ளையன் உரையாடும் காட்சியும் நன்றாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. காமிரா நிலையாக நிற்க, தூரத்தில் மனிதர்கள் இயல்பான அசைவுகளில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். வெள்ளையனுக்கு ‘சேத்துமான் கறி’ சாப்பிட வேண்டுமென்கிற ஆசை ஏற்படுகிறது. ஆனால் அது எத்தனை எளிதான விஷயமில்லை ‘பீ திங்கற பன்னிய நீ தின்னுட்டு வந்தா வௌக்குமாறு அடிதான். வூட்டுக்குள்ள சேர்க்க மாட்டேன்’ என்று வெள்ளையனின் மனைவி கடுமையாக எச்சரிக்கிறாள். சாதியத்தை வளர்த்துக் காப்பாற்றுவதில் பெண்களின் பங்கும் எத்தனை முக்கியமானதாக இருக்கிறது என்பதை இது போன்ற காட்சிகள் உணர்த்துகின்றன.
‘நீ ஒரு கூறு சேர்ந்துக்கறியா?’ என்று ஒவ்வொரு நண்பரையும் கேட்கிறார் வெள்ளையன். அவர்களுக்கும் பன்றிக்கறி சாப்பிடுவதில் உள்ளார்ந்த ஆசை இருந்தாலும் மனைவிமார்களின் ஏச்சுகளுக்குப் பயப்படுவதால் ஏதோவொரு காரணம் சொல்லி நழுவுகிறார்கள். அவர்கள் சென்ற பிறகு பின்னால் திட்டுகிறார் வெள்ளையன்.
தாத்தா பூச்சியப்பனுக்கும் பேரன் குமரேசனுக்குமான பாசப்பிணைப்பு பல காட்சிகளில் வெளிப்படுகிறது. பள்ளிக்குப் போக தாமதமாகிவிட்டதால் ‘காக்கா, குருவில்லாம். உன்னை தேடுச்சு’ என்று செல்லமாக எழுப்பும் தாத்தாவிடம் கோபித்துக் கொள்கிறான் பேரன். சிறிது நேரத்திலேயே இணைந்து கொள்கிறான். ‘ஒத்த பையனை வெச்சுட்டு ஏன் மாமா கஷ்டப்படறீங்க. எங்க கிட்ட கொடுத்துடுங்க. ஒரு வாய் கஞ்சி நாங்க ஊத்த மாட்டோமா’ என்று உறவினர்கள் கேட்க, பதிலேதும் சொல்லாமல் விறுவிறுவென்று நடந்து வந்துவிடுகிறார் பூச்சியப்பன். ‘என்னை யார் கிட்டயும் விட்டுடாதீங்க தாத்தா’ என்று குமரேசனும் தாத்தாவை இறுக்கமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான்.
உறைய வைக்கும் கிளைமாக்ஸ் காட்சி
கூத்து பார்க்காமல் திரும்பிய காரணத்தால் சோகம் அடையும் பேரனுக்கு குடிசைக்குள் பூச்சியப்பன் கூத்து நடத்திக் காட்டும் காட்சி அற்புதமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. பன்றிக்கறிக்காகச் சிரமப்பட்டு ஆட்களைத் திரட்டுகிறார் வெள்ளையன். அவருடைய இம்சை தாங்காமல் ஒவ்வொருவரும் சம்மதிக்கிறார்கள். பன்றியைத் தேடுவதிலும் வெள்ளையனின் சாதிய உணர்வும் ஆச்சாரமும் வெளிப்படுகிறது. மலம் தின்னாத, நீரும் சோறும் போட்டு வளர்க்கப்பட்ட ‘சுத்தமான’ பன்றியைத் தேடுகிறார். கூட உதவிக்கு செல்கிறார் பூச்சியப்பன். இது தொடர்பான காட்சிகள் விரிவான காட்சிகளுடன் பதிவாகியிருக்கின்றன.
பன்றி வளர்க்கும் ரங்கனிடம் பண்ணாடி திமிராகப் பேச, அவரும் எதிர்த்துப் பேசுகிறார். பிறகு மெள்ள சமாதானமாகி வீறாப்பு குறையாமல் ரங்கனிடமே பன்றியை விலைக்கு வாங்குகிறார். வீட்டுக்குத் தெரியாமல் வெள்ளையன் அதிகாலையில் கிளம்புவது, ரங்கனின் மூலம் அவருடைய பண்ணைக்கு பன்றி எடுத்து வரப்படுவது, பூச்சியப்பன் சமையலுக்குத் தயாராவது, ரங்கனின் எரிச்சல், ‘எதிர்த்து பேசாதப்பா’ என்கிற பூச்சியப்பனின் சமாதானம், வெள்ளையனின் பொருமல் போன்றவை மிக மிக நிதானமான காட்சிகளின் மூலம் யதார்த்தமான உணர்வுகளின் வழியாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஒரு கூறை விலைக்கு வாங்கிய பங்காளி சுப்ரமணியும் அந்த இடத்துக்கு வருகிறான். வெள்ளையனுக்கு இது எரிச்சலை ஏற்படுத்துகிறது. கசப்புடன் திட்டிக் கொண்டே இருக்கிறார். சமையலைப் போலவே பங்காளிச் சண்டையின் சூடும் மெள்ள மெள்ள ஏறிக்கொண்டே செல்வதை இயக்குநர் தமிழ் படமாக்கியிருக்கும் விதம் அத்தனை அற்புதமாக இருக்கிறது. தாத்தா பூச்சியப்பனுக்கு பேரனும் உதவிக் கொண்டிருக்கிறான். ஒரு கட்டத்தில் வாய்ப்பேச்சில் நிகழ்ந்து கொண்டிருந்த சண்டை கைகலப்பாக மாறுகிறது. மெள்ள மெள்ள பகைமையின் வெப்பம் உயரும் இந்தக் காட்சிக் கோர்வை சிறப்பாகப் பதிவாகியிருக்கிறது.
இறுதியில் என்னவானது?
ஆதிக்கத் திமிரில் பங்காளிகள் மோதிக்கொண்டாலும் கடைசியில் பலியாவதும் பாதிப்பு அடைவதும் ஒடுக்கப்பட்ட மக்களே என்கிற கசப்பான உண்மையைப் பதிவு செய்தபடி படம் நிறைகிறது. விரோதத்துடன் வெறித்தபடி பார்க்கும் குமரேசன், படிப்பைத் தொடர்வானா… அல்லது பகைமையைத் தீர்ப்பதில் இறங்குவானா என்கிற கவலையையும் பதற்றத்தையும் இறுதிக் காட்சி ஏற்படுத்துகிறது.
இயல்பான நடிப்பால் கவரும் நடிகர்கள்
பூச்சியப்பனாக மாணிக்கம். அவர் எந்தவொரு காட்சியிலும் நடிக்கவேயில்லை. இயல்பாக வந்து செல்கிறார். பேசுகிறார். அதுவே சிறந்த நடிப்பாக மாறியிருக்கிறது. ஊர் மக்களால் தன்னுடைய மகன் அடித்துக் கொல்லப்பட்ட துர்சம்பவத்தை வாய் விட்டு ‘கோ’வென்று கதறியபடி நினைவுகூர்வதில் துவங்கி பல காட்சிகளில் மாணிக்கத்தின் பங்களிப்பு இந்தப் படத்துக்கு மிக மிக ஆதாரமானதாக இருக்கிறது. படத்தின் முதுகெலும்பாக விளங்கும் பாத்திரம் பூச்சியப்பன்தான்.
ரங்கனாக அருள்குமாரின் நடிப்பும் அத்தனை சிறப்பாக இருக்கிறது. முதலாளிகளை எதிர்த்துப் பேச முடியாத ஊமையாக பூச்சியப்பன் இருக்கும் போது அதற்கு நேர் எதிராக அவர்களை துணிச்சலாக எதிர்த்துப் பேசுகிறார் ரங்கன். பண்ணாடி வெள்ளையனாக நடித்திருக்கும் பிரசன்னா பாலச்சந்திரனின் நடிப்பும் மிக அருமை. இவரது பாத்திரமும் முக்கிய பங்கை வகிக்கிறது. அவரது நண்பர்களாக வருகிறவர்களும் அத்தனை இயல்பாக நடித்திருக்கிறார்கள். பங்காளி சுப்ரமணியாக சுருளியின் பகைமை வழியும் நடிப்பும் கச்சிதமாக உள்ளது. பேரன் குமரேசனாக அஸ்வின் சிவா நடிப்பில் அசத்தியுள்ளான்.
பிந்து மாலினியின் இசையை பிரத்யேகமாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மண்ணின் அசலான வாசனையோடு பின்னணி இசையையும் பாடல்களையும் உருவாக்கியுள்ளார். பிரதீப் காளிராஜாவின் நேர்த்தியான ஒளிப்பதிவில் சம்பந்தப்பட்ட பிரதேசத்தின் நிலவியல் காட்சிகள், வைட் ஆங்கிள் ஷாட்கள் போன்றவை அற்புதமாகப் பிரகாசிக்கின்றன. டைட்டிலில் வரும் அனிமேஷன் காட்சியும் அது சொல்லும் கதையும் சிறப்பானது. ஒலிப்பதிவும் நன்றாக உள்ளது. பன்றியின் உறுமல் முதற்கொண்டு பல காட்சிகளில் ஒலிக்கும் இயற்கையான சப்தங்கள் காட்சியோடு ஒன்றி சிறப்பான அனுபவத்தைத் தருகின்றன.
ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வலியைச் சொல்லும் திரைப்படம் என்றாலும் மிகையான தொனியை முற்றிலும் தவிர்த்துவிட்டு மிக இயல்பான திரைமொழியைப் பின்பற்றியுள்ளார் இயக்குநர் தமிழ். தலித் திரைப்படங்களின் வரிசையில் இது கவனத்துக்குரிய படைப்பாக நிச்சயம் இருக்கும்.
(தொடர்ந்து பேசுவோம்)