வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படும் ஒரு நபர், நீதிமன்றத்துக்கு உள்ளேயே படுகொலை செய்யப்படுகிறார். கொலை என்றால் சாதாரண கொலை அல்ல. அவரது ஆண் உறுப்பு உட்பட உடலின் பல அங்கங்கள் துண்டு துண்டாக வெட்டி எறியப்படுகின்றன. 72 வெட்டுக் காயங்கள் இருந்ததாக போஸ்ட்மார்ட்டம் செய்த மருத்துவர் பிறகு கூறுகிறார். இது ஒரு குரூரமான படுகொலை. இன்னமும் ஆச்சரியம் காத்திருக்கிறது
இதைச் செய்தது சம்பந்தப்பட்டவரின் எதிரிகளோ கூலிப்படையினரோ அல்ல. 200 பெண்கள். ஆம், ஏறத்தாழ 200 தலித் பெண்கள் நீதிமன்றத்துக்குள் புகுந்து அந்த ஆசாமியை துண்டுத் துண்டாக வெட்டி, தங்களின் ஆவேசத்தைத் தணித்துக்கொண்டார்கள். இந்த சம்பவம் ஏன் நடந்தது?… இதன் பின்னணி என்ன?.. நாக்பூரில் அக்கு யாதவ் என்கிற, நீண்டகால குற்றப் பின்னணியைக் கொண்ட ஒரு நபர் இதே போல் நீதிமன்றத்துக்குள் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு ‘200 Halla Ho’ என்கிற இந்த இந்தித் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்துக்குள் ஒரு சமூகத் தண்டனை
இந்தப் படுகொலைச் சம்பவம் ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. கொலை செய்த பெண்களில் ஒருவரைக்கூட அடையாளம் காண முடியவில்லை. அனைவரும் சேலையால் முகத்தை மூடிக்கொண்டிருந்தார்கள். ஒரு சாட்சியமும் இல்லை. நீதிமன்றத்துக்குள்ளேயே கொலை நடப்பதால் காவல்துறைக்கு பெரிய சவாலாக மட்டுமல்லாமல், மானப் பிரச்னையாகவும் மாறுகிறது. எனவே இந்த வழக்கை விரைவில் முடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று அனைத்து பெண்களையும் வீட்டுக்கு வெளியே வரச் சொல்லி மிரட்டி அதில் ஐந்து பெண்களை மட்டும் தற்செயலாகத் தேர்வு கைது செய்து காவல் நிலையத்தில் அடித்து கொடுமைப்படுத்துகிறார்கள்.
எவ்வித சாட்சியமும் இல்லாமல் உத்தேசமாகக் கைது செய்யப்பட்டிருக்கும் ஐந்து தலித் பெண்மணிகளையும் வெளியே கொண்டு வரப் போராடுகிறாள், அதே பகுதியைச் சேர்ந்த ஆஷா என்கிற இளம்பெண். அவளும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவள். ஆனால் காவல், நீதி என்னும் பெரிய நிறுவனங்களோடு மோதுவது அத்தனை எளிதான காரியமாக இல்லை.
அரசியல் காரணங்களால், இந்தச் சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் உண்மை அறியும் குழு ஒன்று அமைக்கப்படுகிறது. அதன் தலைவராக விட்டல் நியமிக்கப்படுகிறார். விட்டல் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். ஆனால் தன்னை தலித் என்று அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாதவர். நீதித்துறையை மிகவும் மதிக்கிறவர். நேர்மையான நீதிபதியாகப் பணிபுரிந்தவர். சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு நீதியை நிலை நாட்ட முடியும் என்கிற ஆழமான நம்பிக்கையைக் கொண்டவர்.
சட்டமா சமூகநீதியா… எது முக்கியம்?
உண்மை அறியும் குழுவுக்கு விட்டலைத் தலைவராக நியமிப்பது காவல்துறைக்குத் தலைவலியாக மாறுகிறது. ‘சட்டப் புத்தகங்களில் ஒரு நடைமுறை இருக்கிறது. அதற்கு வெளியே ஒரு நடைமுறை இருக்கிறது அவர் சட்டப்புத்தகத்தைத்தான் பின்பற்றுவார்’ என்று ஒரு காவல் அதிகாரி அலுத்துக் கொள்கிறார். தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக ‘நான் ஒரு தலித் என்பதால் தேர்வு செய்தீர்களா?’ என்று விட்டல் கேட்க, பெண் உரிமை கமிஷனைச் சேர்ந்தவர் சங்கடத்துடன் தலையைக் குனிகிறார்.
உண்மை அறியும் குழுவைச் சேர்ந்த இதர உறுப்பினர்கள், முன் தீர்மானக் கருத்துகளுடன் தங்களுக்குள் மோதிக் கொள்ளும்போது. ‘உண்மையின் மீது பல தூசுகள் மூடி இருக்கும். சாதி, மதம், பாலினம், அந்தஸ்து என்று எந்த ஒரு முன் முடிவுகளும் இல்லாமல் அவற்றைக் களைந்து உண்மையைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யவேண்டும்’ என்று ஒரு நல்ல தலைவராக அவர்களுக்கு அறிவுறுத்துகிறார் விட்டல். இந்தக் குழுவின் அறிக்கை வருவதற்குள் அவசரம் அவசரமாக விசாரணையை முடிக்கிறது காவல்துறை. ஐந்து பெண்களுக்கும் ஆயுள் தண்டனை கிடைக்கிறது. இந்தத் தீர்ப்பு வி்ட்டலின் மனதைப் பாதிக்கிறது. குறிப்பாக தண்டனை பெற்றிருக்கும் ஒரு முதிய பெண்மணியின் முகம் அவரது தாயாரை நினைவுப்படுத்துகிறது.
ஆஷா, விட்டலை வந்து சந்திக்கும் காட்சி முக்கியமானது. ‘நீங்களே ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும்…’ என்று ஆஷா பேச ஆரம்பிக்க, ‘சமூகம் பற்றியெல்லாம் என்னிடம் பேசக்கூடாது. நான் நீதியை மட்டுமே நம்புகிறவன். அதில் சாதியையோ மதத்தையோ கலக்கக்கூடாது’ என்று ஆஷாவைத் தொடர விடாமல் தடுக்கிறார் விட்டல்.
சற்று தயங்கிய பிறகு ஆஷா ஆவேசத்துடன் பேசுகிறாள்: ‘நான் தலித் சமூகத்தில் பிறந்தவள். நான் ஏன் சாதியைப் பற்றிப் பேசக்கூடாது .மளிகை கடையில்கூட அனைவரும் சென்ற பிறகு, காக்க வைத்துத்தான் எங்களுக்குப் பொருட்கள் தருகிறார்கள். தலித் சமூகம் என்பதால்தான் மிக எளிதாகவும் இயல்பாகவும் காவல்துறை எங்கள் மீது அடக்குமுறையை நிகழ்த்துகிறது. இப்படி எங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரும் எங்களின் சாதியை அனுதினமும் நினைவுபடுத்திக்கொண்டிருக்கும்போது எப்படி அதைப்பற்றி பேசாமல் இருக்க முடியும்?’ என்று ஆஷா வெடிக்கிறாள்.
கொலையின் பின்னணி
ஐந்து பெண்களுக்குத் தண்டனை கிடைத்த விஷயத்தை தலித் தலைவர்கள்கூட மேலோட்டமாகவும் தேர்தல் காலத்து ஆதாயத்துடனும் மட்டுமே பார்க்கிறார்கள். யாருக்காகப் பாடுபடுவதாக அவர்கள் மேடையில் பீற்றிக்கொள்கிறார்களோ அதற்கான உண்மையான சேவைகளில் ஈடுபடுவதில்லை. கட்சிகளுடன் பேரம் பேசுவதும் அதிகாரத்தை நோக்கி முன்னேறுவதும் மட்டுமே அவர்களின் மெயின் அஜெண்டாவாக இருக்கிறது. இப்படிப் போலியாக இயங்கும் சில தலைவர்களை இந்தத் திரைப்படம் அம்பலப்படுத்தியிருக்கிறது.
தலித் மக்கள் தொடர்பான ஒரு சம்பவத்தை சமூகவியல் கோணத்தில் அணுகாமல், சட்டப்புத்தகம், நீதி என்று இயந்திரத்தனமான பார்வையில் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த விட்டலின் மனதை ஆஷாவின் கேள்வியும் ஃபிளாஷ்பேக் காட்சிகளும் மாற்றுகின்றன. அதுவரை சஸ்பென்ஸாக வைக்கப்பட்டிருந்த கொலைக்கான பின்னணிக் காரணம், காட்சிகளாக விரிகின்றன.
நீதிமன்றத்துக்குள் கொலை செய்யப்பட்டவனின் பெயர் பாலி சவுத்ரி. அரசியல் பின்னணியைக் கொண்ட ரவுடியான அவன், தன்னுடைய ஆட்களுடன் தலித் பெண்கள் மீது தொடர்ச்சியான பாலியல் வன்முறைகளைச் செய்து வருகிறான். காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற ஒரு பெண்ணை, பொதுவெளியிலேயே வன்புணர்வு செய்து குரூரமாகக் குத்திக் கொல்கிறான். இதைக் காட்டி மற்றவர்களையும் அச்சுறுத்துகிறான். கண்ணில் படுகிற எந்தவொரு தலித் பெண்ணையும் இழுத்துச் செல்வது அவனது வழக்கமாக இருக்கிறது. அந்தப் பகுதி மக்களுக்கு ஒரு கெட்டகனவாக இருக்கிறான் பாலி. கடந்த பத்து ஆண்டுகளாக அச்சத்தில் உறைந்திருக்கும் மக்களை ஆஷாவின் வரவுதான் தட்டியெழுப்பி, துணிச்சலை அளிக்கிறது.
நம்பிக்கையின் துளிதான் வாழ்க்கையின் எரிபொருள்
ஐந்து பெண்களுக்கும் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கிறார், ஆஷாவின் நண்பரான உமேஷ். முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞனாக இருந்தாலும் ஆஷாவைத் திருமணம் செய்து கொள்ள விரும்பும் வழக்கறிஞர்தான் உமேஷ். உயர்நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு செல்லக்கூடாது என்பதால் எதிர்தரப்பினர் உமேஷைக் கொன்றுவிட்டு தற்கொலை என்பது போல் சித்திரிக்கிறார்கள். காவல்துறையும் இதை மௌனமாக வேடிக்கை பார்க்கிறது.
வேறு வழக்கறிஞர் எவரும் இந்த வழக்கை எடுத்துக்கொள்ள முன்வருவதில்லை. மேலும் இதற்குச் செலவு செய்ய ஆஷாவிடம் நிதிவசதியும் இல்லை. தன்னுடைய விசாரணையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு துளி நன்மை கூட நேரவில்லையே என்கிற குற்றவுணர்வில் இருக்கும் விட்டல், தானே களத்தில் இறங்குகிறார். இந்த வழக்கை வாதாட முன்வருகிறார்.
நீதிமன்றத்தில் விட்டல் வாதாடும் காட்சி சிறப்பானது. ‘கடுமையான இருள் சூழ்ந்து இருந்தாலும் ஒரு வெளிச்சக்கீற்றுதான் எந்த ஒரு நபருக்கும் நம்பிக்கையை அளிக்கக் கூடியது ஆனால் இந்த நீதிமன்றமே அவர்களைக் கைவிட்டுவிட்டது. தலித் சமூகத்தினர் மீது நிகழும் வன்முறைக் கொடுமைகளை அன்றாடம் செய்திகளில் வாசித்து காலை காபியோடு அவற்றை எளிதாகக் கடந்துவிடுகிறோம் அந்த அமைதிதான் என்னை மிகவும் தொந்தரவு செய்கிறது’ என்று இவர் தன் வாதத்தை முன்வைப்பது அற்புதமாக இருக்கிறது.
குற்றத்தை ஒப்புக் கொள்ளும் 200 பெண்கள்
விட்டலே களத்தில் இறங்கி பல தரவுகளைச் சேகரிக்கிறார். பல வருடங்களாகப் பாலியல் குற்றங்களில் பாலி சௌத்ரி ஈடுபட்டு வந்தாலும் அச்சம் காரணமாகவே மக்கள் காவல் நிலையத்திற்குச் செல்வதில்லை. மேலும் காவல்துறையும் பாலியின் குற்றங்களுக்கு துணையாக இருக்கிறது. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்டில் அடிப்படையான தரவுகளில் ஒன்றாக ‘பிளட் ரிப்போர்ட்’ இல்லை. காவல் அதிகாரியும் அரசாங்க மருத்துவரும் சேர்ந்து மூடி மறைத்துவிடுகிறார்கள். இந்த உண்மைகளையெல்லாம் நீதிபதியின் பார்வைக்குக் கொண்டு வரும் விட்டல், ‘பாலி ஏன் நீதிமன்றத்துக்குள் கொலை செய்யப்பட்டான்?’ என்பதற்கான பின்னணியையும் விளக்குகிறார்.
வன்முறைக்கு பதில் வன்முறைதான் தீர்வு என்கிற செய்தியை படம் சொல்லவில்லை. ‘பாலி சௌத்ரியைக் கொன்றவர்கள் இப்போது நீதிமன்றத்துக்குள் வருவார்கள்’ என்று நீதிபதி முன்பாக விட்டல் சொன்னவுடன, ‘நான்தான் அவனைக் கொன்றேன்’ என்கிற ஆவேசமான குரலுடன் பல பெண்கள் நீதிமன்ற அறைக்குள் குவிவது உணர்ச்சிகரமான காட்சி. ‘மதம் உள்ளிட்ட எதையும் தாண்டி சட்டம் மேலானது’ என்கிற வாக்கியத்துடன் படம் நிறைகிறது.
ஓய்வு பெற்ற நீதிபதி விட்டலாக, அமோல் பலேகரின் நடிப்பு அற்புதமாக இருக்கிறது. தலித் என்பதைவிடவும் நீதிபதி என்கிற அடையாளத்துக்கே முன்னுரிமை தருகிறார் விட்டல். ஆனால் சட்டத்தையும் சாட்சியங்களையும் மட்டும் வைத்துக்கொண்டு அடித்தட்டு மக்களின் மீதான வழக்குகளை அணுக முடியாது என்பதை பிறகு உணர்கிறார். அம்பேத்கர் படத்துக்கு முன்பாக இவர் நெகிழ்ந்து பேசும் காட்சி சிறப்பானது. ஆஷாவாக ‘சய்ராத்’ படத்தின் நாயகி ரிங்க்கு ராஜகுருவின் நடிப்பும் குறிப்பிடத்தகுந்ததாக இருக்கிறது. ரவுடியின் மீதுள்ள அச்சத்தினால் ஊர் மக்கள் மௌனமாக இருக்கும்போது முதன் முதலில் போராட்டக் குரலை எழுப்பி, அவர்களுக்கு துணிச்சலை ஏற்படுத்தும் பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
தலித் மக்களின் மீதான வன்முறை என்றால் சட்டம், நீதி, பொதுச்சமூகம் என்று அனைத்துமே அலட்சியமான மனோபாவத்துடனும் இயங்கும் மெத்தனத்தை இந்தத் திரைப்படம் வலுவாகச் சுட்டிக்காட்டுகிறது.
(தொடர்ந்து பேசுவோம்)