1984-ல் வெளியான Paar (The Crossing), கௌதம் கோஷ் இயக்கிய முதல் இந்தித் திரைப்படம். அதற்கு முன்பாக தெலுங்கில் ஒன்றும், வங்காளத்தில் இரண்டுமாக சில திரைப்படங்களை இயக்கி முடித்திருந்தார் கௌதம். வங்க எழுத்தாளர் சமரேஷ் போஸ் எழுதிய சிறுகதையொன்றை அடிப்படையாகக் கொண்டு ‘Paar’ (அக்கரை) திரைப்படம் உருவாக்கப்பட்டது.
சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதை இந்தப் படம் வென்றது. சிறந்த நடிகர், நடிகைக்கான தேசிய விருது முறையே நஸ்ருதீன் ஷா மற்றும் ஷபனா ஆஸ்மிக்கு கிடைத்தது. சிறந்த திரைக்கதைக்காகவும் சில விருதுகள் கிடைத்தன. சர்வதேச அளவில் இந்தப் படம் கவனிக்கப்பட்டதோடு விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றது.
வாழ்வைக் கடப்பதென்பது எந்தவொரு சராசரி மனிதனுக்கும் மிகப் பெரிய சவால். அதிலும் அடித்தட்டு மக்களுக்குக் கூடுதல் சவால். அதிலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தால் அதுவொரு கடுமையான சவால். அப்படியொரு இளம் தம்பதியினர், தங்களின் ஜீவாதாரப் போராட்டத்துக்காக எதிர்கொள்ளும் வாழ்வின் சவால்களை இந்தத் திரைப்படம் யதார்த்தமான திரைமொழியில் பதிவு செய்திருக்கிறது.
எளிய மக்கள் மீது பாயும் முதலாளித்துவ வன்முறை
எண்பதுகளின் காலகட்டம். பிகாரில் உள்ள கிராமம். எளிய குடிசை. உள்ளே இருள். ஒரு விளக்கு அணையும் தறுவாயில் இருக்கிறது. வீட்டின் தலைவன் மண்ணெண்ணெய் தேடிப் போயிருக்கிறான். அப்படியொரு வஸ்துவைப் பற்றி இப்போதைய நகரத்து தலைமுறை அறிந்திருக்குமா என்று தெரியவில்லை. கெரசின்தான் சமையல் கூடங்களில் பிரதான எரிபொருளாக அப்போது இருந்தது. கிடைப்பதற்கு அரிதான பொருளாகவும் இருந்தது. எங்கிருந்தோ சிறிது மண்ணெண்ணெயை சம்பாதித்து வரும் அவன், தன் மனைவி ரமாவிடம் தந்து விட்டுச் சொல்கிறான். ‘தங்கம் போல ஆயிடுச்சு. பார்த்து செலவு பண்ணு’.
இரவு. கும்மிருட்டு. வெகு தூரத்தில் வாகனங்களின் விளக்குகள் தெரிகின்றன. போலீஸோ? குடிசைவாசிகள் பதறுகிறார்கள். போலீஸ் இல்லை. பண்ணையாரின் ஆட்கள். பண்ணையாரின் இளைய மகன் கையில் துப்பாக்கியுடன் கண்ணில் கொலைவெறியுடன் வருகிறான். பின்னால் அடியாட்கள். குடிசைப்பகுதியின் ஆண்கள் எல்லாம் பதறியடித்துக் கொண்டு ஓடி மறைகிறார்கள்.
நவுராங்கியாவின் குடும்பமும் பதறுகிறது. அவனுடைய தாய் சொல்கிறாள். ‘நீயும் உன் மனைவியும் எப்படியாவது தப்பி விடுங்கள். வயதானவர்களை அவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள்’. வயதான பெற்றோரை விட்டுச் செல்ல நவுராங்கியாவுக்கு விருப்பமே இல்லை. என்றாலும் கர்ப்பமாக இருக்கும் மனைவியுடன் அரைமனதுடன் ஜன்னலின் வழியாக தப்பிச் செல்கிறான்.
அடியாட்கள் அந்தப் பகுதி முழுக்கத் தேடுகிறார்கள். ஆண்கள் தப்பிச் சென்றிருப்பது அவர்களின் கோபத்தைக் கூட்டுகிறது. அந்த ஆத்திரத்தில் கிழவனைச் சுட்டுக் கொல்கிறார்கள். குடிசையைத் தீ வைத்து எரிக்கிறார்கள். பதற்றமும் அச்சமுமாய் கூட்டம் தப்பியோடுகிறது. ‘அய்யோ என் குழந்தையைக் காணவில்லை’ என்று ஒரு தாயின் கூக்குரல். கவனிக்க எவருக்கும் சந்தர்ப்பமில்லை. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கோயிலுக்குள் ஓடி ஒளிகிறார்கள். கொலைகாரர்கள் அங்கும் துரத்தி வருகிறார்கள். துப்பாக்கிகள் இரக்கமில்லாமல் வெடிக்கின்றன. குருதி வழிய ஆட்கள் கீழே சாய்கிறார்கள். எங்கும் மரண ஓலம்.
அரசு இயந்திரத்தின் அலட்சியமும் மெத்தனமும்
மறுநாள் விடிகிறது. இந்திரா காந்தியை நினைவுப்படுத்தும் தோற்றத்தில் ஓர் அரசு நீதிபதி வருகிறார். பின்னால் டிஎஸ்பி வருகிறார். அதற்குப் பின்னால் அமைச்சர் வருகிறார். எரிந்து முடிந்து புகைந்து கொண்டிருக்கும் குடிசைகளையும் பிணங்களையும் பார்வையிடுகிறார்கள். அரசு இயந்திரம் வழக்கமான முறையில் செயல்படுகிறது. ‘தீய சக்திகள் நம்மைப் பிரித்து அழிக்கப் பார்க்கின்றன. நாங்கள் அதை தடுத்து நிறுத்துவோம். எளிய மக்களைப் பாதுகாப்போம். இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி செய்யப்படும்’ என்று இயந்திரத்தனமான குரலில் அமைச்சர் வாக்குறுதியை அள்ளி வீசுகிறார். கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஊடகங்கள் ஒருவிதமாக சொல்ல, நிஜக்கணக்கு வேறொன்றாக இருக்கிறது. இது எப்போதும் நிகழ்வதுதானே.
இந்தக் காட்சியை கௌதம் கோஷ் சித்திரித்திருக்கும் விதம் நமக்கு திகைப்பை ஏற்படுத்துகிறது. எங்குமே வன்முறையை அவர் நேரடியாக காட்டுவதில்லை. அதனாலேயே அதன் பாதிப்பு மனதுக்குள் ஆழமாக ஊடுருவிச் செல்கிறது. கும்மிருட்டில் வாகனங்களின் விளக்குகள் தொலைதூரத்தில் நிதானமாக நகர்வதோடு படம் துவங்குகிறது. டார்ச் லைட் வெளிச்சத்தில் ஆடு, மாடுகள் போல மக்கள் பதறியோடுவது தெரிகிறது. பிறகு குருதி கொப்பளிக்கச் சாய்கிறார்கள். அனைத்துக்குமே இருட்டுதான் சாட்சியாக இருக்கிறது.
எளிய மக்களின் மீது சுமையாக இருக்கும் சாதியும் வர்க்கமும்
எதனால் இந்த கோரமான சம்பவம் நடந்தது? இதன் பின்னணி என்ன? முன்னும் பின்னும் அடுக்கப்பட்ட காட்சிகளின் வழியாக திரைக்கதை பயணிக்கிறது. நாள் முழுவதும் நிலத்தில் கடுமையாக உழைக்கும் மக்களுக்கு பண்ணையார்கள் அவர்களாக பார்த்து தூக்கிப்போடுவது மட்டுமே கூலி என்கிற நிலைமை அதுவரை இருந்தது. அரசாங்கம் இதில் தலையிட்டு குறைந்தபட்சக் கூலியை நிர்ணயிக்கிறது. ஆனால் அதெல்லாம் வெறும் புத்தகத்தில்தான். நிஜத்தில் தருவதற்கு பண்ணையார்கள் சம்மதிப்பதில்லை.
அந்தக் கிராமத்தில் உள்ள பள்ளி ஆசிரியர் ஒரு காந்தியவாதி. எளிய மக்களின் நலன் கருதுபவர். பிராமணர். ‘ஐயா.. எங்களுக்கு வெவரம் போதாது. நீங்க போய் பேசுங்களேன்’ – எளிய மக்கள் வேண்டுகோள் வைப்பதால் பண்ணையாரிடம் சென்று ஆசிரியர் பேசுகிறார். எதிர்பார்த்தபடியே அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிகிறது. ‘ஓய்.. நீர் ஒரு பிராமணர். உமக்கு எதுக்குவோய் இந்த வேலை. அந்த சனங்களுக்காக பரிந்து பேசி தலைவனாயிடலாம்ன்னு பார்க்கறீரா?’ என்று பண்ணையாரின் மகன் கோபமாக பேசுகிறான்.
விவசாயக் கூலிகள் ‘வேலை நிறுத்தம்’ என்னும் ஆயுதத்தைக் கையில் எடுக்கிறார்கள். அது மட்டுமல்ல, அடுத்த உள்ளூர் தேர்தலில் தங்களில் ஒருவனை நிற்க வைத்து ஜெயிக்க வைக்கிறார்கள். அதுவரை பண்ணையார்கள் கைப்பற்றி வைத்திருந்த பெருமை பறிபோகிறது. எளிய மக்களுக்கு போராட்ட உணர்ச்சியை ஊட்டுகிறார் ஆசிரியர்.
‘தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவன் தலைவனா?’ – கொதித்தெழும் பண்ணையாரின் மகன், இதற்கு காரணமாக இருந்த ஆசிரியரை ஜீப் ஏற்றிக் கொல்கிறான். போலீஸ் அதை விபத்து என்று சொல்கிறது. தங்களுக்காக பாடுபட்ட ஆசிரியர், அநியாயமாகக் கொல்லப்பட்டதை அறிந்து கொதித்தெழும் மக்கள் பதிலுக்கு பண்ணையாரின் மகனைக் கொல்கிறார்கள். அதன் முதலாளித்துவ எதிர்வினைதான் மேலே விவரிக்கப்பட்ட கோரச் சம்பவத்தின் பின்னணி.
பண்ணையாரின் மகனைக் கொன்றவர்களில் ஒருவன் நவுராங்கியா. ‘இங்கிருந்தால் உன்னைக் கொன்றுவிடுவார்கள். கர்ப்பமாக இருக்கும் எனக்கும் ஆபத்து ஏற்படும்’ என்று அவனுடைய மனைவி ரமா சொல்கிறாள். ஸ்கூல் மாஸ்டரின் மனைவி உதவி செய்ய அங்கிருந்து இருவரும் தப்பிக்கிறார்கள். இவர்கள் சந்திக்கும் நபரோ ‘கல்கத்தா பெரிய நகரம். அங்கு பிழைக்க நிச்சயம் வழி கிடைக்கும்’ என்று ஒரு முகவரியை எழுதித் தருகிறார்.
பெருநகரத்துக்கு இடம்பெயரும் கிராமம்
ரயில் ஏறுவதற்கு முன் நவுராங்கியாவின் உள்ளுணர்வு எச்சரிக்கிறது. அத்தனை பெரிய நகரத்தைத் தன்னால் எதிர்கொள்ள முடியுமா என்று தயங்குகிறான். ஊரில் நிலைமை சரியாகியிருக்கும் என்கிறான். இறந்தவர்களுக்குக் கிடைக்கும் நிதியுதவி வேறு அவனை இழுக்கிறது. ஆனால் ரமா இதை உறுதியாக மறுக்கிறாள். ‘நிச்சயம் உன்னைக் கொன்று விடுவார்கள். கர்ப்பமாக இருக்கும் எனக்கும் ஆபத்து’ என்கிற அதே பல்லவியை பாடுகிறாள். இப்படியொரு சிக்கலான சூழலில் இரண்டு பேர்களின் முடிவுமே சரி அல்லது தவறு என்பது போலவே இருக்கிறது. ஒரு சில கணங்கள்தான் நம்முடைய வாழ்க்கையை மாற்றிப் போடுகின்றன. மனைவி வற்புறுத்தவே ரயிலில் ஏறி விடுகிறான், நவுராங்கியா.
ஆனால் நவுராங்கியாவின் உள்ளுணர்வு எச்சரித்தது சரி. எந்தவொரு பெருநகரமும் எளிய மக்களை முதலில் மிகவும் அல்லல்பட வைக்கும். அந்த எதிர் நீச்சலில் தப்பிப் பிழைத்தால்தான் நகரம் அவர்களுக்கு அரைமனதுடன் ஒண்டிக் கொள்ள இடம் கொடுக்கும்.
நவுராங்கியாவையும் ரமாவையும் கல்கத்தா என்கிற பெருநகரம் விதம் விதமாகப் பந்தாடுகிறது. ரயிலில், உடன் பயணிக்கிற ஆசாமி, இவர்களிடம் பேச்சுக் கொடுத்து காசு பிடுங்கித் தின்கிறான். சாலையில் படுத்திருக்கும் ரமாவின் காலை ஒரு காமாந்தகன் சுரண்டுகிறான். கையில் இருக்கும் சொற்ப காசு கரைந்து கொண்டே இருக்கிறது. இவர்கள் தேடி வந்த ஆசாமி ஊரில் இருப்பதில்லை. முகவரி விசாரிக்கும் இடத்தின் வீட்டில் ஓரமாக ஒண்டிக் கொள்கிறார்கள். ரமா கர்ப்பிணி என்பதால் முதலில் அனுதாபம் காட்டப்பட்டாலும் அங்கும் புறக்கணிப்பு நிகழ்கிறது.
அங்கிருக்கும் மில்லில் கூலி வேலை கிடைப்பதற்காக நவுராங்கியா போராடுகிறான். கண்டவர் காலிலும் விழுகிறான். அங்கிருப்பவர்களுக்கே வேலை கிடைப்பது சிரமமாக இருக்கும் போது புதியவனுக்கு எங்கே கிடைக்கும்? இருவரும் மழையில் நனைந்து கொண்டிருக்கும் ஒரு கொடுமையான இரவில் நவுராங்கியா முடிவு செய்கிறான். ஊருக்கு திரும்பிப் போவதென்று. ஆனால் அதற்கும் பணம் வேண்டுமே! மிகவும் சிரமப்பட்டு அலைவதில் ஒரு வேலை கிடைக்கிறது. அதைச் செய்தால் ஊருக்குச் செல்ல பணம் கிடைக்கும். ஆனால்?
வாழ்க்கையை எதிர்கொள்ளும் மரணப் போராட்டம்
முப்பது, முப்பத்தைந்து பன்றிகளை நதிக்கு அப்பால் கொண்டு செல்ல வேண்டும். படகில் கொண்டு சென்றால் கூலி அதிகம் என்பதால் இந்த ஏற்பாடு. ஆனால் இது அத்தனை எளிதான பணி இல்லை. இவர்களைப் பணியமர்த்துபவன் கறாராக சொல்கிறான். ‘உன்னால் முடியுமா. ஒரு பன்றி குறைந்தால் கூட உன்னை தொலைத்து விடுவேன்’. வேலையைக் காண்பித்து தந்தவனுக்கு வேறு கமிஷன் தந்தாக வேண்டும்.
நவுராங்கியா கூட்டிக் கழித்துப் பார்க்கிறான். அவனுக்கு வேறு வழியே தெரியவில்லை. துணிச்சலை வரவழைத்துக் கொண்டு சம்மதிக்கிறான். ஆனால் ரமாவோ பயத்தில் அலறுகிறாள். ‘ஐயோ.. இந்த வேலையே வேண்டாம். என் குழந்தை இறந்து விடும்’ என்று கதறுகிறாள். சில வருடங்களுக்கு முன்பு அவர்களின் மகன் கிணற்றில் தவறுதலாக விழுந்து இறந்து விடுவது இன்னமும் ரமாவுக்குள் ஒரு துர்கனவாக இருக்கிறது. வயிற்றுக்குள் இருக்கும் இந்தக் குழந்தையையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
ரமாவை வலுக்கட்டாயமாக கட்டாயப்படுத்தி, அவளுடைய கையில் கம்பைத் திணிக்கும் நவுராங்கியா, பன்றிகளை சிரமப்பட்டு திரட்டி நீருக்குள் இறக்குகிறான். இங்கும் அங்குமாக ஓடும் பன்றிகளை ஒன்று சேர்த்து மேய்த்துச் செல்வது அத்தனை எளிதானதாக இல்லை. கணவனும் மனைவியும் ஓடி ஓடி களைத்து விடுகிறார்கள். ஒருவழியாக நீரில் இறக்கிய பிறகு அந்தப் பயணம் இன்னமும் பயங்கரமானதாக இருக்கிறது. இழுத்துக் கொண்டு ஓடும் நீரை ஒரு பக்கம் சமாளித்துக் கொண்டே, பன்றிகளையும் முன்னகர்த்திச் செல்ல வேண்டும். உயிரைப் பணயம் வைக்கும் பிழைப்பு. கர்ப்பிணியான ரமா சோர்ந்து போக அவளைத் தொடர்ந்து வற்புறுத்துகிறான், நவுராங்கியா.
ஒருவழியாக கரையேறிய பிறகுதான் தெரிகிறது, அவர்கள் பாதி தூரம்தான் கடந்திருக்கிறார்கள். மீண்டும் நீரில் இறங்கி இன்னொரு பாதியைக் கடக்க வேண்டும். ‘நான் செத்தேன். என்னால் முடியாது’ என்று ஏறத்தாழ மூர்ச்சையாகி விழுந்து விடுகிறாள் ரமா. அவளைக் கட்டாயப்படுத்தி எழுந்து நிற்க வைத்து மீண்டும் அந்த கொடூரமான பயணத்தை ஆரம்பிக்கிறான், நவுராங்கியா. அரை மயக்கத்தில் இருக்கும் ரமா, தன் முழு சக்தியையும் திரட்டிக் கொண்டு பின்தொடர்கிறாள்.
கிட்டத்தட்ட ‘வாழ்வா, சாவா’ என்கிற நிலைமையில் இவர்கள் மாட்டிக் கொண்டு தவிக்கும் பேராட்டக்காட்சி சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. படத்தின் தலைப்பை குறியீடாக நியாயப்படுத்துதே இந்தக் காட்சிக் கோர்வைதான். இவர்கள் சிக்கலில் மாட்டிக் கொள்வார்களோ என்று மனம் பதைபதைக்கும் போது இறுதியில் நம்பிக்கையின் வெளிச்சத்தோடு படத்தை நிறைவு செய்கிறார் கௌதம் கோஷ். ‘என் குழந்தை இறந்துவிட்டது. வயிற்றில் அசைவே இல்லை’ என்று அழுது புலம்பும் ரமாவுக்கு ஒரு நம்பிக்கை தரப்படுகிறது. ஏதாவதொரு துரும்பை பற்றிக்கொண்டு நகர்வதுதானே, அடித்தட்டு மக்களின் தலையில் எப்போதும் எழுதப்பட்டிருக்கிறது!
திறமையான நடிப்பும் இயக்கமும்
நவுராங்கியாவாக நஸ்ருதீன் ஷாவும் ரமாவாக ஷபனா ஆஸ்மியும் தங்களின் மிகச் சிறப்பான நடிப்பைத் தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு தேசிய விருது தரப்பட்டது முற்றிலும் நியாயமானது. ஒரு பாவப்பட்ட தம்பதியினரின் உடல்மொழியை பல காட்சிகளில் திறமையாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
படத்தின் டைட்டில் காட்சி, ஆசிரியர் கொல்லப்படுவது, பண்ணையாரின் மகன் இதற்குப் பழிவாங்கப்படுவது, பணி வாய்ப்புக்காக தம்பதியினர் நதிக்கரையில் நீண்ட நேரம் காத்திருப்பது, பெருநகரத்தின் அலைச்சல்கள் என்று பல காட்சிகள் யதார்த்தமான திரைமொழியில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
சாதிய வன்முறைக்குப் பெண்களும் காரணமாக இருக்கிறார்கள். பண்ணையாரின் மகன் கொல்லப்பட்டதை அறிந்து அவனுடைய மனைவி ஆங்காரத்துடனும் அழுகையுடனும் சொல்கிறாள். ‘இதுவே எங்க வீடா இருந்தா, குறைஞ்சது அஞ்சு தலையாவது உருண்டிருக்கும்’ என்று அவள் புலம்புவது, பண்ணையாருக்குள் பழிவாங்கும் எண்ணமாகப் புகுந்து, குடிசைகளை எரிக்க வைக்கிறது. ஆட்களை கொல்ல வைக்கிறது.
ஒருவேளை உணவுக்காக எளிய தம்பதியினர் அல்லாடிக் கொணடிருக்கும் போது, உலகக் கோப்பையை இந்தியா வென்றதற்காக இளைஞர்கள் சிலர் சாலையில் கொண்டாட்ட நடனம் ஆடுவதைக் காட்டுவதன் மூலம் நகரத்துக்கும் கிராமத்துக்கும் உள்ள வர்க்க வேற்றுமையை உணர்த்துகிறார் இயக்குநர். முதல் குழந்தை ஏற்கெனவே இறந்திருக்கும் நிலையில், இரண்டாவது கர்ப்பமும் கலைந்துவிடுமோ என்கிற அச்சத்தில் இருக்கும் ரமாவை வலுக்கட்டாயமாக நீரில் இறக்குகிறான் நவுராங்கியா. அப்போது அவன் சொல்வதைக் கேட்டு ரமா ஒரு கணம் திகைத்து விடுகிறாள்: ‘அந்தப் பன்னி கர்ப்பமா இருக்கு. பார்த்து தள்ளிட்டு வா’.
வேலைக்காக எங்கெங்கோ கெஞ்சுகிறான் நவுராங்கியா. ‘பணம் வேணாம் சார். ஒரு வேலை கொடுங்க’ என்று அவன் எத்தனை கெஞ்சினாலும் யாரும் இரங்குவதில்லை. ‘வந்துட்டானுங்க. ஊர்ல இருந்து ஒரு போர்வையைப் போர்த்திக்கிட்டு’ என்று எரிச்சலைக் கொட்டுகிறார், ஒரு அலுவலர்.
சாதியக் கொடுமை தாங்காமலும், வறுமையில் இருந்து தப்பிக்கவும் வேறு வழியில்லாமல் நகரத்துக்கு இடம் பெயரும் அடித்தட்டு மக்களிடம் கடுமையான வெறுப்பையும் நிராகரிப்பையும்தான் பதிலுக்கு நகரம் காட்டுகிறது. ஒவ்வொரு பெருநகரின் வளர்ச்சிக்குப் பின்னாலும் இவர்களின் உழைப்புதான் இருக்கிறது என்பதை வசதியாக மறந்து விடுகிறது. சாதியும் வர்க்கமும் ஒன்றிணைந்து எளிய மக்களை எப்படியெல்லாம் அல்லல்பட வைக்கிறது என்பதை இந்தத் திரைப்படம் யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறது.
(தொடர்ந்து பேசுவோம்)