Skip to content
Home » ஆங்கிலேய அதிகாரத்தின் தொடக்கப் புள்ளி

ஆங்கிலேய அதிகாரத்தின் தொடக்கப் புள்ளி

புனித டேவிட் கோட்டை

கடலூர், தேவனாம்பட்டினம் கோட்டை (புனித டேவிட் கோட்டை)  என்பது பலரும் நினைப்பது போல் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது அல்ல, டச்சுக்காரர்கள் கட்டியது.

இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் தங்களின் வணிகத்தைத் தொடங்கியிருந்த டச்சுக்காரர்கள், வங்காள விரிகுடாவில் நுழையும் எண்ணத்துடன் செஞ்சி அரசர் கிருஷ்ணப்ப நாயக்கரை அணுகினர். 1608 நவம்பர் 30ம்தேதி செஞ்சி நாயக்கரும் இவர்களுக்கு அனுமதி வழங்கினார். அப்போது நாயக்கர் தரப்பில் டச்சுக்காரர்களுக்கு பின்வரும் உறுதி அளிக்கப்பட்டது: தேவனாம்பட்டினத்தில் தங்கி இருக்கும் டச்சுக்காரர்களுக்கு நாங்கள் பாதுகாப்பளிப்போம். அவர்கள் ஒரு நகரத்தை ஏற்படுத்திக்கொள்ள அனுமதிப்போம். போர்ச்சுகீசியர்களை உள்ளே நுழைய அனுமதிக்க மாட்டோம்.

இதனைத் தொடர்ந்து கெடிலம் முகத்துவாரத்தில் எழுந்தது தேவனாம்பட்டினம் கோட்டை. இதில் டச்சுக்காரர்களின் வணிகம் சில ஆண்டுகளே நீடித்தது. கோட்டையைப் பராமரிப்பதில் அதிகரித்துக்கொண்டே போகும் செலவினம், போர்ச்சுகீசியர்களுடான மோதல் உள்ளிட்ட காரணங்களால் தேவனாம்பட்டினம் கோட்டையை விரைவிலேயே காலி செய்தனர் டச்சுக்காரர்கள்.

தேவனாம்பட்டினம் கோட்டை
தேவனாம்பட்டினம் கோட்டை

இதற்கிடையில் 1674இல் செஞ்சி ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பீஜப்பூர் சுல்தான் முகமது கான் தேவனாம்பட்டினத்துக்கு ஆங்கிலேயரை அழைத்தார். இதற்காக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் (மரக்காணம் அருகிலுள்ள) கூனிமேடு 1680 நவம்பரில் வணிகத் தலமாகத் தேர்வு செய்யப்பட்டது.

சுல்தான்கள் ஆட்சியைத் தொடர்ந்து மராத்தியர் கைகளுக்குச் சென்றது செஞ்சி. ஏற்கெனவே பழவேற்காட்டில் டச்சுக்காரர்களாலும் சாந்தோமில் பிரெஞ்சுக்காரர்களாலும் தொல்லைகளுக்கு ஆளாகி இருந்த ஆங்கிலேயர்கள் செஞ்சியின் முந்தைய ஆட்சியாளர் விடுத்திருந்த அழைப்பை இப்போது தூசி தட்டி எடுத்தனர்.

கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்குழு அதிகாரியாக இருந்த (பின்னர் மதராஸ் ஆளுநர்) எலியேகு ஏல் 1681இல் செஞ்சி வந்தார். அப்போதைய அரசர் ஹர்ஜி ராஜாவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, செஞ்சி ஆட்சியாளர் தங்களுக்கு வழங்கவுள்ள இடத்தைப் பார்வையிட அதே ஆண்டு பிப்ரவரியில் வந்த ராபர்ட் பிரிமேன் என்பவர், ஐந்து கஜம் சிவப்பு பட்டுத் துணி, முகம் பார்க்கும் பெரிய கண்ணாடி, சந்தன மரக்கட்டை ஆகியவற்றை செஞ்சி அரசருக்குக் கொடுப்பதற்காக எடுத்து வந்தாராம். அப்போது செஞ்சி தரப்பில் 2 லட்சம் வரை பேரம் பேசப்பட்டது. அதே நேரம் தேவனாம்பட்டினம் கோட்டையை விலைக்கு வாங்க பிரெஞ்சுக்காரர்களும் டச்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களுடன் போட்டி போட்டனர்.

ஆனால் இந்தக் கோட்டையை எப்படியும் வாங்கிவிடுவது என்பதில் ஆங்கிலேயர்கள் உறுதியாக இருந்தனர். இதற்குக் காரணம், ‘புதியகோட்டை கட்டுவதென்றால் இதைவிட மூன்று மடங்கு செலவாகும். மேலும் இந்தக் கோட்டை இரட்டை சுவர்களைக் கொண்டதாக 500 அடி நீளமும் 40 0அடி அகலமும் உள்ளதாக இருப்பதாலும் துணி வியாபாரத்துக்கு உகந்ததாக சிறிய கப்பல்கள் வந்து செல்லக்கூடிய ஆற்று முகத்துவாரத்தைப் பெற்றிருப்பதாலும் இதை விலைக்கு வாங்குவது தங்கள் நலனுக்கு உகந்ததாக ஆங்கிலேயர் கருதினர்’ என்கிறார் செஞ்சியின் வரலாறு நூலாசிரியர் பேராசிரியர் சி.எஸ்.சீனிவாசாச்சாரி.

1689 செப்டெம்பரில் ஹர்ஜி ராஜா இறந்துவிட செஞ்சியின் அரசராக ராஜாராம் பதவியேற்றார். அப்போது கடும் நிதி நெருக்கடியில் இருந்தது செஞ்சி. யார் அதிக விலைக்குக் கேட்கிறார்களோ அவர்களுக்கே தேவனாம்பட்டினம் கோட்டை எனும் முடிவில் இருந்தார் ராஜாராம். இதனைத் தொடர்ந்து ஆங்கிலேயர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை அல்லது பேரத்தில் 40,000க்கு ஒத்துக் கொண்டார் செஞ்சி அரசர். ஆனாலும்கூட அரசர் மற்றும் அதிகாரிகளுக்குக் கூடுதலாக லஞ்சம் தர வேண்டியிருந்தது கம்பெனி. கோட்டையை வசப்படுத்திக்கொள்ள போதுமான பணத்துடன் ஹெட்செல் என்பவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

கோட்டைக்கான எல்லையை வரையறுப்பதில் புதிய நடைமுறை கையாளப்பட்டது. அதாவது, துப்பாக்கியால் சுட வேண்டும். அதன் குண்டு எங்கே போய் விழுகிறதோ அதுதான் கோட்டையின் எல்லை. இதற்காக துப்பாக்கி சுடுவதில் நன்கு தேர்ச்சி பெற்ற ஒருவர் கடலூர் அனுப்பப்பட்டார். இப்போது புதிய நடைமுறை ஒன்றை பிரிட்டிஷார் கையாண்டனர். குண்டு விழுந்த இடத்தில் இருந்து கூடுதலான இடங்களைக் கணக்கில் காட்டினர். இதற்காக அங்கிருந்த செஞ்சி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது. இப்படியாக குண்டு விழுந்து பெறப்பட்ட இடங்கள்தான் இன்றும் கடலூரில் குண்டுசாலை, குண்டு கிராமம் என வழங்கப்படுகின்றன.

கோட்டைக்கான எல்லையை வரையறை செய்த கம்பெனி நிர்வாகம், அந்தப் பகுதியில் வணிகத்தின் ஊடாக தனது ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்டவும் முடிவு செய்தது. இதை ஏற்றுக்கொள்ளவும் செய்தார் செஞ்சி அரசர் ராஜாராம். கிழக்கிந்திய கம்பெனிக்கு அவர் 1690 ஆகஸ்டில் வழங்கிய கிரயப் பத்திரம் இதை உறுதி செய்கிறது.

‘கடவுளின் கருணையினால் செஞ்சியின் அரசராயிருக்கும் ராஜாராம் ஆகிய நான் மதராஸ் கோட்டை மற்றும் சென்னப்பட்டினத்தின் ஆளுநரும் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்குழு தலைவருமாகிய மேன்மை தங்கிய எலிருயேல் அவர்களின் விருப்பப்படியும் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியுடன் நம் நட்புறவு கருதியும் நாம் விற்கும் பகுதிக்கு சரியான பிரதி பிரயோஜனமாக 40,000 சக்கரங்களை (பணத்தை) நம் உத்திரவுப்படி ரகோஜி பந்துலு பெற்றுக் கொண்டதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.’

இப்படியாகத் தொடங்கும் கிரயப் பத்திரம், ‘எங்கள் சார்பாகவும் எங்கள் வாரிசுகள் சார்பாகவும் தேவனாம்பட்டினம் கோட்டை அதிலுள்ள துப்பாக்கிகள் கட்டடங்கள் கோட்டையைச் சுற்றி உள்ள மரங்கள் ஆறுகள் துப்பாக்கி குண்டு விழுந்த இடத்திற்குட்பட்ட பகுதிகள் ஆகியவற்றைக் கிழக்கிந்திய கம்பெனியின் வசம் விட்டுவிட்டோம். இந்தப் பகுதிகளில் கட்டிடங்கள் கட்டிக்கொள்ளவோ தோட்டங்கள் அமைத்துக் கொள்ளவோ விற்கவோ கம்பெனிக்கு உரிமை உண்டு. எங்கள் திவான்களோ சுபேதார்களோ அல்லது மற்ற பணியாளர்களோ கோட்டைப் பகுதியிலோ அதைச் சுற்றியுள்ள இடங்களிலோ பிரவேசித்து கம்பெனியின் அமைதியான வசந்தத்திற்கும் அனுபவத்திற்கும் இடையூறு விளைவிக்க மாட்டார்கள். இந்த கிரய உறுதிப் பத்திரத்தில் கண்ட பகுதிகள் சந்திர சூரியர் உள்ளவரை ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி மற்றும் அதன் ஆளுநர்கள் வசம் இருக்கும்… கம்பெனியின் உரிமையியல், குற்றவியல், ராணுவச் சட்டங்களுக்கு உட்பட்ட பகுதியாக தேவனாம்பட்டினம் இருக்கும்’ என்பதாக முடிகிறது.

இதற்குத்தானே ஆசைப்பட்டது ஆங்கிலேய கம்பெனி! தொடர்ந்து, 1691 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் தேதி மதராஸ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்குழு, கடலூர் புனிதர் டேவிட் கோட்டையின் துணை ஆளுநருக்கு எழுதிய கடிதம் இவ்வாறு சொல்கிறது:

‘சட்டங்கள் இன்றி நீதியோ, அரசோ, வணிகமோ, வாழ்க்கையோ இருக்க முடியாது. சட்டங்கள் இல்லாவிடில் மக்கள் கட்டுப்பாடின்றி அவர்கள் விரும்புவதைச் சொல்வார்கள்; செய்வார்கள்; எடுத்துக் கொள்வார்கள். குறிப்பாக பாதுகாப்பு படையினர் அத்துமீறி நடந்து கொள்வார்கள். சிறப்புரிமை பட்டயம் உறுதி செய்யப்பட்டிருப்பதால் உங்களுடைய அதிகாரம் எங்களுடைய அதிகாரத்தைப் போன்றதே. உள்நாட்டு குடிமக்களிடம் நீதி பரிபாலனம் செய்ய ராஜாராம் நமக்குச் செய்து கொடுத்த கிரய சாசன உறுதிப் பத்திரமே அதிகாரமளிக்கிறது.’

மேற்காணும் கம்பெனியின் ஆட்சிக்குழு கடிதம், ‘ஆங்கிலேயர்கள் நாடு பிடிக்கும் செயலை எவ்வாறு படிப்படியாக அரங்கேற்றினர் என்பதை விளக்குவதாக உள்ளது‘ என்பார் பேராசிரியர் சி.எஸ். சீனிவாசாச்சாரி.

தேவனாம்பட்டினம் கோட்டையில் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை விசாரிக்க ஹெய்ன்ஸ், வாட்ஸ், மேக்குடா நினா ஆகியோர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் வாரத்தில் செவ்வாய், வெள்ளி ஆகிய இரண்டு நாள்களில் காலை 8 மணி முதல் 11 வரை விசாரணை நடத்த பணிக்கப்பட்டனர்.

ஆயுள் தண்டனையைத் தவிர மற்ற தண்டனைகளை வழங்க இவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது. இவர்கள் எந்த மாதிரியான நீதி வழங்கினர் என்பது குறித்த விவரங்கள் நமக்குத் தெரியவில்லை.

இரண்டாவது கர்நாடகப் போருக்குப் பின்னரே (1749-54) சென்னை மாகாணம் முழுமைக்குமான கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி உறுதிபடுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக 1801ல்தான் தென்னாற்காடு மாவட்டம் எனும் நிர்வாக அமைப்பு ஏற்படுகிறது.

ஆனால் அதற்கும் 111 ஆண்டுகளுக்கு முன்னரே உள்ளூர் மக்கள் மீதான தனது அதிகாரத்தை, சட்டத்தின் படியிலான ஆட்சியை கடலூர் தேவனாம்பட்டினத்தில் தொடங்கி விட்டது ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனி.

அப்போதுதான் சோழமண்டலக் கடற்கரையில் ஆங்கிலேயர் தங்கள் வணிகத்தைத் தொடங்கி இருந்தனர் என்பதையும் நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்!

 

பகிர:
கோ. செங்குட்டுவன்

கோ. செங்குட்டுவன்

விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்து வசித்து வருபவர். ஊடகத்துறையில் 20 ஆண்டுகாலம் செய்தியாளராகப் பணியாற்றியவர். கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வரலாற்று அமைப்புகளில் பங்கேற்று இயங்கி வருபவர். 'சமணர் கழுவேற்றம்', 'கூவம் - அடையாறு - பக்கிங்காம்: சென்னையின் நீர்வழித்தடங்கள்' உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தொடர்புக்கு : ko.senguttuvan@gmail.comView Author posts

1 thought on “ஆங்கிலேய அதிகாரத்தின் தொடக்கப் புள்ளி”

  1. அறவாழி கிருபானந்தன்

    ஆறுகள், குளங்கள், கோவில்கள், குடிப்பிறப்புகள், ஆற்றங்கரை நாகரிகம், குலதெய்வ வழிபாடுகள், இரயில்வே துறைகளின் பழங்கால கட்டிடங்கள், இலக்கியங்கள் என்று, விழுப்புரம், கடலூர் என்று உள்ளடக்கிய தென்னாற்காடு மாவட்டத்தின் பல வரலாற்று செய்திகளை அளித்து வருகிறீர்கள். அதைவிட சிறப்பு, போராடி, விழுப்புரம் மாவட்டத்திற்கு அருங்காட்சியகம் அமைத்துக் கொடுத்து உள்ளீர்கள்.

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *