இன்று இணையத்தைத் திறந்தால் எட்டுத்திசையும் ஒலிக்கும் பெயர், எலான் மஸ்க். அதிரடிகளுக்குச் சொந்தக்காரர். சமீபத்தில் அவருடைய அதிரடிகளில் ஒன்று, ட்விட்டரை கைப்பற்றப்போவதாக அவர் அறிவித்தது.
எலான் மஸ்க் ட்விட்டரைக் கைப்பற்றினால், அந்த நிறுவனம் அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறும் என அதை உருவாக்கிய ஜேக் டோர்ஸி ட்வீட் செய்கிறார். எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவது அந்த நிறுவனத்தின் இருண்ட காலத்தின் தொடக்கம் என அந்நிறுவனத்தின் தற்போதைய தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் பதறுகிறார். என்னதான் நடக்கிறது? ஒருபக்கம் எலான் மஸ்கிற்கு இத்தனை ஆதரவு, மறுபக்கம் எலான் மஸ்கிற்கு ஏன் இத்தனை எதிர்ப்புகள்?
2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், எலான் மஸ்க் ‘டோஜி’ என்ற ஒற்றை வார்த்தையை ட்வீட் செய்தார். இதைத் தொடர்ந்து கிரிப்டோ கரன்சிகளில் ஒன்றான ‘டோஜி காயினின்’ மதிப்பு பத்து நிமிடங்களிற்குள் பதினைந்து சதவிகிதம் உயர்ந்தது.
2022-ஆம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி ட்விட்டரில் ‘எடிட் பட்டன்’ வேண்டுமா என்று அவர் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தினார். அதே வாரத்தில் ட்விட்டர் எடிட் பட்டனை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்தது.
உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், பிற தொழிலதிபர்களைப்போல தானுண்டு, தன் தொழிலுண்டு, அதில் வரும் லாபமுண்டு என இருக்கமாட்டார். அவருடைய ட்விட்டர் பக்கத்தை எடுத்துப் பார்த்தால் அதில் கிண்டலும், கேலியுமாகத்தான் இருக்கும். பெரிய நிறுவனங்களின் செயல்பாடுகளை, முக்கிய ஆளுமைகளின் நடவடிக்கைகளை, அரசியல் சூழல்களைத் தன் சுடும் சொற்களால் அவ்வப்போது கடுமையாக விமர்சித்து வருவார். மற்றொரு பக்கம் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட தன் சொந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்துப் பெருமை பேசிக்கொண்டிருப்பார்.
இந்த ஆண்டின் கணக்குப்படி, எலான் மஸ்கின் நிகர மதிப்பு சுமார் 22,210 கோடி அமெரிக்க டாலர்கள். இந்திய ரூபாயின் மதிப்பில் நீங்களே எத்தனை கோடி என எண்ணிப் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் பணம் மட்டும் அவரது அடையாளம் அல்ல.
உண்மையில் எலான் மஸ்க் யார்? அவருடைய நோக்கம்தான் என்ன? அவருடைய வார்த்தைகளுக்கு ஏன் அத்தனை மதிப்பிருக்கிறது? அவரைக் கண்டால் பிற தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் ஏன் பதறுகின்றனர்?
எலான் மஸ்க்கைப்பற்றி சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால் அவர் அமெரிக்க இளைஞர்களின் கனவு நாயகன். தொட்டதெல்லாம் வெற்றி என்ற வார்த்தைக்குச் சொந்தக்காரர். பே-பால், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், போரிங் கம்பெனி, ஹைப்பர்லூப், ஓப்பன் ஏஐ, சோலார் சிட்டி, சிகா ஃபேக்டரி ஆகிய நிறுவனங்களை வளர்த்தெடுத்தவர்.
எலான் மஸ்க்கைப்பற்றிய முழுமையான சித்திரத்தைப் பெறுவதற்கு நாம் அவரது அலுவலகத்திற்குள் நுழைய வேண்டும். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் புறநகர் பகுதியில் இருக்கிறது அவரது கனவுகளை மெய்ப்பிக்கும் இடமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமையகம்.
அலுவலகத்திற்குள் நுழையும் அனைவருக்கும் காணக்கிடைப்பது, மஸ்கின் அறைக்கு வெளியே உள்ள சுவரில் மாட்டப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான இரண்டு புகைப்படங்கள்தான். அவரது கனவு, லட்சியம், தத்துவம், வாழ்வின் நோக்கம் என அனைத்தும் அந்த இரண்டு புகைப்படங்களுக்குள் காணக் கிடைக்கும் காட்சிகளுக்குள் அடங்கும்.
இரண்டு புகைப்படங்களில் இடது புறத்தில் இருப்பது செவ்வாய் கிரகம். உருண்டையாக சிவப்பு நிறம் கொண்ட வெறுமையடைந்த காலி பந்துபோல தோன்றம் கொண்ட செவ்வாய் கிரகம். இருண்ட வெளிக்கு இடையே பூமியில் இருந்து சுமார் 24.3 கோடி கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஆரவாரமற்ற, அமைதி கொண்ட வெற்றுக் கிரகம்.
இன்னும் சொல்லப்போனால் உயிர்கள் இல்லாத செவ்வாய் கிரகம். மனிதர்கள் வாழத் தகுதியற்ற செவ்வாய் கிரகம். அந்தக் கிரகத்தில் இருப்பது இரும்புத் துகள்களை அடித்தளமாகக் கொண்ட சிவப்பு நிற நிலப்பரப்பும், கரியமில வாயும், நைட்ரஜனும், ஆர்கனும், எரிமலைகளும், பள்ளத்தாக்குகளும்தான்.
செவ்வாய் கிரகத்தில் முன்னொரு காலத்தில் நதிகள் ஓடியதற்கான தடயங்கள் கிடைக்கின்றன. ஆனால் அதன் தட்பவெப்ப நிலை கடந்த காலத்திலும், எதிர்காலத்திலும் உயிர்கள் தோன்றுவதற்குச் சாத்தியமே இல்லாத சூழலையே கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உறைந்த நிலையில் உள்ள தூசுகளும், மெல்லிய மேகங்களும்தான் இப்போது அங்கு விரவி இருக்கின்றன. இந்தச் செவ்வாய் கிரகத்தைத்தான் எலான் மஸ்க் தன் அறைக்கு வெளியே மாட்டி வைத்திருக்கிறார்.
வலதுபுறத்தில் மாட்டியிருப்பது நீல நிறத்திலான கிரகம். அடர் நீலத்தில் கடல் சூழ்ந்த, பச்சைப் பசேலான நிலப்பரப்புகளைக் கொண்ட கிரகம். பல்வேறு உயிர்கள் தோன்றி வாழ்க்கை என்ற இயக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கிரகம். மனிதர்களும் வாழத் தகுதியானக் கிரகம். ஆனால் அது பூமியல்ல. நம்முடைய அண்டை கிரகமான செவ்வாய்தான்.
இது எலான் மஸ்கின் கற்பனையில் உதித்த செவ்வாய் கிரகம். பூமியில் இருந்து மனிதர்கள் குடியேறிய செவ்வாய் கிரகம். சிவப்பு நிறப் பந்தாக உயிர்கள் வாழத் தகுதியற்ற செவ்வாய் கிரகத்தை, உயிர்கள் கோலோச்சும் கிரகமாக மாற்ற வேண்டும் என்பதே எலான் மஸ்கின் விருப்பம். அதைக் குறிப்பதே அவரது அலுவலகத்தில் மாட்டப்பட்டிருக்கும் இரண்டு புகைப்படங்கள். அதைச் செய்துவிட வேண்டும் என்பதைத்தான் மஸ்க் தன் வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டுள்ளார்.
மனித இனம் பூமியை விட்டு வெளியேறி செவ்வாய் கிரகத்தில் குடியேற வேண்டும். மனிதர்களை வான் குடியேற்றவாதிகளாக மாற்ற வேண்டும். நிலத்தில் பயணிப்பது போல, நீரில் பயணிப்பது போல, வானில் பயணிப்பது போல, அண்ட வெளியிலும் பயணம் செய்து, கிரகம் விட்டு கிரகம் சென்று வசிக்கும் ஆற்றல் படைத்த இனமாக மனித இனம் மாற வேண்டும். இதுதான் எலான் மஸ்கின் குறிக்கோள். ஏன் இவற்றை எல்லாம் செய்ய வேண்டும்?
ஒருவேளை பூமியில் அசம்பாவிதம் எதுவும் நடந்துவிட்டால்? நாம் இதற்குமுன் கண்டிராத மிகப்பெரிய எரிக்கற்கள் பூமியின் மேல் விழுந்து ஒட்டுமொத்த உயிரினமும் அழிந்துவிட்டால்? கொரோனாவைவிட பல மடங்கு வீரியமுள்ள நோய் ஒன்று பரவி கோடிக்கணக்கான மக்களை ஒரே நொடியில் கொன்றொழித்துவிட்டால்? மனிதர்கள் செய்யும் தவறினால் பூமியின் வெப்பம் உயர்ந்து இந்தப் பூமி உயிர்கள் வாழும் தகுதியை இழந்த இடமாகிவிட்டால்?
இவையெல்லாம் நடந்து முடிந்த பிறகு, சிந்தித்து என்ன செய்வது? எதற்கும் தயாராக இருக்க வேண்டும் அல்லவா? மனித இனம் பாதுகாப்பாக இருக்க மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே செவ்வாய் கிரகத்தில் மனிதக் குடியேற்றம் என்ற லட்சியத்தை எலான் மஸ்க் தன் வாழ்நாள் நோக்கமாக வைத்துள்ளார்.
இதைப் பற்றி எலான் மஸ்கே தன் வார்த்தைகளில் விவரிக்கும்போது, ‘நான் மனித இனத்தின் பிரகாசமான எதிர்காலத்தைப்பற்றிச் சிந்தித்தபடியே மரணிக்க விரும்புகிறேன். மனிதர்கள் நிலையான ஆற்றலைப் பெறுவதற்கானத் தீர்வை மட்டும் கண்டடைந்துவிட்டால், நாம் கிரகங்களிடையே பயணிக்கும், வசிக்கும், சுயநிறைவு பெற்ற நாகரீகத்தை அடைந்த இனத்தைச் சேர்ந்தவர்களாகிவிடுவோம். இதன்மூலம் பூமிக்கு எதுவும் அசம்பாவிதம் நேர்ந்தால், பரிணாம வளர்ச்சியில் மலர்ந்த, மனித சுய உணர்வு (Human Consiousness) என்ற அற்புதத்தை அழியும் ஆபத்தில் இருந்து காப்பாற்றி விடலாம். அதை விடச் சிறந்த ஒன்றாக எது இருக்க முடியும்?’ என்கிறார்.
இது கேட்பதற்குக் கேலியாக இருக்கலாம். விளையாட்டாக இருக்கலாம். அபத்தமாகவும் தோன்றலாம். லட்சியம் என்றால் அது கொஞ்சமேனும் யதார்த்தத்தின் பக்கத்தில் இருக்க வேண்டாமா என்று கேட்கலாம். ஆனால் இதுதான் எலான் மஸ்க். இத்தகைய அடைய முடியாத கனவுகளைக் காண்பதால்தான் அவர் எலான் மஸ்க்காக இருக்கிறார்.
தொழில் செய்து பொருளீட்டுவது மட்டும் அவர் குறிக்கோள் இல்லை. இதை அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைக் கூர்ந்துக் கவனித்தாலே தெரிந்துவிடும். அதற்காக பணம் சம்பாதிப்பதை முற்றும் துறந்த துறவி என்றெல்லாம் எலான் மஸ்க்கை நினைக்க வேண்டாம். உலகைக் காப்பாற்றும் செயல்பாடுகளையே தனது வியாபாரமாக்கி அதன் மூலம் பணம் ஈட்ட முயல்பவராக எலான் மஸ்க் இருக்கிறார்.
இதுதான் எலான் மஸ்க்குக்கும் பிறருக்கும் உள்ள வேறுபாடு. மனித இனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும், மனித இனத்தை மேலும் மேன்மையடையச் செய்ய வேண்டும். மனிதனை இந்தப் பிரபஞ்சத்தின் மிகச் சிறந்த இனமாக மாற்ற வேண்டும். அதன்மூலம் நானும் உலகப் பணக்காரர்களில் ஒருவராகத் திகழ வேண்டும். இத்தகைய உயரிய நோக்கத்தையே தனது லட்சியமாகக் கொண்டு பயணிப்பவர்தான் எலான் மஸ்க்.
இத்தகைய சிந்தனைதான் அவரை வாழ்க்கையில் பல்வேறு அபாயங்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. துணிச்சலான சாகசங்களை நிகழ்த்த வைத்திருக்கிறது. அவற்றில் போராடி வெற்றி பெறவும் வைத்திருக்கிறது. அமெரிக்காவின் தொழில்நுட்ப நகரம் என அழைக்கப்படும் சிலிகான் வேலியில் பல வித்தகர்களே வழிபடும் நபராக எலான் மஸ்க் இருக்கிறார். இன்று உலகையே தன் உள்ளங்கைக்குள் வைத்திருக்கும் கூகுள் என்ற தளத்தைக் கண்டுபிடித்த லேரி பேஜ், தன்னைப் பின்பற்றும் லட்சக்கணக்கான இளம் தொழில்வல்லுநர்களிடம் சொல்வது ஒன்றைத்தான்.
‘எலானைப்போல இருங்கள்!’
(தொடரும்)
செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதற்கு வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை.
ஏனென்றால் பூமியே மனித இனம் வாழ்வதற்கு கடவுளால் கொடுக்கப்பட்டுள்ளது.
Good Introduction….