தென் ஆப்ரிக்காவில் வெளியாகும் கணினி மாத இதழொன்று 1984ஆம் ஆண்டு ‘பிளாஸ்டார்’ என்ற வீடியோ கேமை வெளியிட்டது. அத்துடன் அந்த வீடியோ கேம் பற்றிய சிறிய குறிப்பும் வெளியாகியிருந்தது. ‘வேற்றுக்கிரக ஏலியன்கள் ஹைட்ரஜன் குண்டுகள் மற்றும் ஸ்டேடஸ் பீம் மெஷின் எனப்படும் லேசர் ஆயுதங்களை உள்ளடக்கிய விண்கலன்கள் மூலம் நம் பூமியைத் தாக்க வருகின்றனர். நாம் அவர்களைத் தோற்கடித்துப் பூமியைக் காப்பாற்ற வேண்டும்.’ இதுதான் அந்தக் குறிப்பு.
அதே காலகட்டத்தில் வெளியான மற்ற வீடியோ கேம்களோடு ஒப்பிடும்போதும் பிளாஸ்டார் அப்படியொன்றும் சிறப்பானது எல்லாம் கிடையாது. சிறப்பு என்னவென்றல் அந்த கேமை உருவாக்கியது 12 வயதுச் சிறுவன் என்பதுதான். பெயர் எலான் ரீவ் மஸ்க். இன்று மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் குடியேற்ற வேண்டும் என்று மஸ்க் தனது மனதில் உருவாக்கி வைத்திருக்கும் லட்சியக் குறிக்கோளுக்கு அந்த வீடியோ கேம்தான் தொடக்கப்புள்ளி என்று சொல்லலாம்.
எலான் மஸ்க் என்ற அந்தச் சிறுவன், உலகில் உள்ள நல்லது, கெட்டது அனைத்தையும் காமிக்ஸ் புத்தகங்கள் மூலமே அறிந்துகொள்ளத் தொடங்கினான். அவன் வயதையொட்டிய சிறுவர்கள் தெருக்களில் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தபோது, அவன் மட்டும் தனது வீட்டின் பூட்டிய அறையில் காமிக்ஸ் புத்தகங்களுடன் நாட்களை செலவிட்டுக்கொண்டிருந்தான்.
படிப்பதோடு நில்லாமல் தான் படிக்கும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களாகவே தன்னை விதவிதமாகக் கற்பனை செய்துகொண்டான் மஸ்க். சூப்பர் ஹீரோக்கள் உலகைக் காப்பாற்றுவதுபோல, தானும் மனிதர்களைக் காப்பாற்ற வேண்டும்; மனிதர்கள் வாழும் பூமியைக் காப்பாற்றவேண்டும் என விரும்பினான்.
அந்த வயதில் அனைத்துக் குழந்தைகளும் இப்படித்தான் தங்களை பாவித்துக்கொள்வார்கள் என்றாலும், மற்ற குழந்தைகள் வளர்ந்தவுடன் கற்பனை உலகிலிருந்து நிஜ உலகுக்குத் திரும்பிவிடுவார்கள். எலானோ கற்பனைக்கும் நிஜத்திற்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான்.
எலான் மஸ்க் உலகைக் காப்பாற்றும் சூப்பர் ஹீரோவாக மாறவேண்டும் என்று விரும்பியதற்கு முக்கியக் காரணம் அவன் வளர்ந்த இடமும் காலக்கட்டமும்தான். 1971-ம் வருடம் தென் ஆப்பிரிக்காவின் தலைநகரங்களில் ஒன்றான பிரிட்டோரியா நகரத்தில்தான் மஸ்க் பிறந்தான். தென் ஆப்ரிக்காவின் ஜோஹன்ஸ்பெர்க்கில் இருந்து ஒரு மணி நேரம் பயணம் செய்தால் மஸ்க் பிறந்த இடத்தை அடைந்துவிடலாம். ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் மஸ்க் வளர்ந்த இடம் ஒன்றும் சொர்க்க பூமியாக இருக்கவில்லை.
மஸ்க் வளர்ந்த காலக்கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா முழுவதுமே ஒருவிதக் கொந்தளிப்பு நிலையில் இருந்தது. அந்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இனவெறியும் தீண்டாமையும் துளிர்விட்டு எரிந்துகொண்டிருந்தது. வெள்ளையின அரசாங்கம் கருப்பின மக்களை மிருகத்தைவிட மோசமாக ஒடுக்கிக்கொண்டிருந்தது. ஆங்காங்கே நடைபெற்ற கலவரங்களால், கருப்பின மக்களின் ரத்தம் சாலைகளில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியது.
அரசின் இனவெறிக்கொள்கைக்கு எதிராக கருப்பினத்தவர்கள் போராடிக்கொண்டிருந்தனர். எங்கு பார்த்தாலும் பதற்றமும் வன்முறையுமே சூழ்ந்திருந்தது. அப்போது மஸ்குக்கு நான்கு வயதுதான் இருக்கும். வெள்ளையின மக்கள் மட்டுமே பேசிய ஆபிரிக்கான்ஸ் மொழியை (ஆபிரிக்கான மொழி என்றும் அழைக்கப்படுகிறது) கருப்பின மக்களின்மீது திணிப்பதற்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்ட கருப்பின மாணவர்கள் ஊர்வலம் சென்றனர்.
அவர்களைக் கலைந்து போகச் சொன்ன காவல்துறை, எதிர்த்து நின்ற மாணவர்களைச் சுட்டுப்பொசுக்கியது. இந்தக் கோரத் தாண்டவத்தில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியாகினர். நாடே ரத்தக்களறியாக இருந்தது. இன்றும் வரலாற்றில் ‘சொவேட்டோ எழுச்சி’ என நிறைவுக்கூறப்படும் இந்தச் சம்பவமும், அதைத் தொடர்ந்து நடந்த அரசியல் மாற்றங்களும் எலானுக்கு சிறுவயதிலேயே இரண்டு வகை எண்ணங்களை மனத்தில் உருவாக்கி இருந்தது.
ஒன்று, பரிணாம வளர்ச்சியின் உயர்ந்த வடிவமான மனிதர்கள் இனம், நிறம் போன்ற அற்பக் காரணங்களுக்காக அடித்துக்கொள்வதை விட்டுவிட்டு அறிவார்ந்த சமூகத்தை கட்டமைக்கும் குறிக்கோளை நோக்கி நகர வேண்டும். மற்றொன்று இத்தகைய சூழல் நிரம்பி இருக்கும் தென் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிவிட வேண்டும். வெளியேறி எங்கு செல்வது? வேறு எங்கே, அமெரிக்காதான்.
இன்று போல் அன்றைய இளைஞர்களுக்கும் கனவு தேசமாக அமெரிக்காதான் இருந்தது. மஸ்கின் தந்தை ஒரு பொறியாளர். செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர். அதனால் அவர் அடிக்கடி பணி நிமித்தமாக வெளிநாடுகளுக்குச் செல்வார். அவர் செல்லும்போது தனது மகன்களையும் கூட்டிச் செல்வார். அவர்கள் சென்ற நாடுகளிலேயே அதிக வளம் மிக்க நாடாக எலான் மஸ்கிற்குத் தோன்றியது அமெரிக்காதான்.
வளரும் பருவத்தில் அவர்கள் கண்ட அமெரிக்கா கனவுகளின் தேசமாக இருந்தது. லட்சியங்களை மெய்ப்பிக்கும் இடமாக, வாய்ப்புகளை வழங்கும் இடமாக அமெரிக்கா தெரிந்தது. இதனால் அப்போதே அமெரிக்காவுக்குச் சென்று நிரந்தரமாகக் குடியேறிவிட வேண்டும் என்ற எண்ணம் மஸ்கின் மனத்தில் ஆழமாகக் குடி கொண்டுவிட்டது. அது மட்டுமில்லாமல் மஸ்க் அமெரிக்கா செல்ல விரும்பியதற்கு மற்றொரு காரணம் அவன் தனது வாழ்க்கையில் ஆதர்ச நாயகனாகக் கருதிவரும் அவனது தாத்தா வாழ்ந்த இடத்தைப் பார்ப்பதுதான்.
அமெரிக்கா ஒன்றும் மஸ்கின் குடும்பத்திற்குப் புதிதானது அல்ல. மஸ்கின் மூதாதையர்கள் அமெரிக்காவில் வாழ்ந்தவர்கள்தான். ஸ்விஸ் – ஜெர்மன் இனப் பெயரைக் கொண்டிருந்த ஹால்டிமென் என்பவர்கள்தான் மஸ்கின் தாய்வழி மூதாதையர்கள். ஹால்டிமென்கள் அமெரிக்க உள்நாட்டு யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது ஐரோப்பாவில் இருந்து கிளம்பி அமெரிக்கா சென்றவர்கள். நியூ யார்க், இல்லினாய்ஸ், மினசோட்டா ஆகிய பகுதிகளில் வாழ்ந்தவர்கள்.
ஜான் எலான் ஹால்டிமென் என்ற எலான் மஸ்கின் கொள்ளுத் தாத்தாதான் அவர்கள் வம்சாவழிகளிலேயே முதன்முதலாக அமெரிக்காவில் குடியேறியவர். மஸ்கிற்கு ‘எலான்’ என்ற பெயர் அவரது கொள்ளுத்தாத்தா ஜான் எலான் ஹால்டிமென்னிடம் இருந்துதான் வந்தது. ஜான் ஹால்டிமென்னுக்குப் பிறந்த குழந்தைகளில் ஒருவர்தான் ஜோசுவா நார்மன் ஹால்டிமென். இவர்தான் மஸ்கின் தாத்தா. மஸ்கின் ஆதர்ச நாயகனும் இவர்தான்.
நார்மன் ஹால்டிமென் ஒரு தன்னிறைவான மனிதர். அவருக்கு ஏழு வயது இருக்கும்போதே தந்தை இறந்துவிட்டார். அதன்பின் குடும்பப் பொறுப்பு நார்மனின் தலையில் விழுந்தது. நார்மன் ஹால்டிமென் கிடைக்கும் வேலைகளை எல்லாம் செய்து வந்தார். அந்தப் பகுதி கொஞ்சம் வனங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. ஹால்டிமென் காட்டிற்குச் சென்று அங்கு உலவும் குதிரைகளைப் பழக்கி அவற்றை விவசாயிகளிடம் விற்பார். ஊரில் நடக்கும் குத்துச்சண்டை, மல்யுத்தப் போட்டிகளில் கலந்துகொள்வார். விவசாயம் பார்த்தார். அங்கிருந்த ஒரு கல்லூரியில் சேர்ந்து ‘கைரோப்ராக்டிக்ஸ்’ எனப்படும் வர்மமுறை மருத்துவத்தைக் கற்றுக்கொண்டு எலும்பு -நரம்பு பிரச்னைகளுக்குச் சிகிச்சைகளும் அளித்துவந்தார்.
இவ்வாறு பல தொழில்களைச் செய்த ஹால்டிமென் ஐந்தாயிரம் ஏக்கர் நிலத்திற்கும் மேல் சம்பாதித்து அந்தப் பகுதியில் செல்வந்தராக உயர்ந்தவர். ஆனால் 1930-ல் வந்த பெரும் மந்த நிலை அவரை மீண்டும் வறுமை நிலைக்குத் தள்ளியது. வங்கி அவரது நிலங்களை ஜப்தி செய்தது. சம்பாதித்த அனைத்தையும் இழந்தார்.
இருந்தாலும் ஹால்டிமென் அதற்கெல்லாம் கவலைப்படுபவர் இல்லை. சொத்துக்கள் அனைத்தையும் இழந்தபின் அவர் நாடோடி வாழ்வின் மேல் விருப்பம் கொண்டார். மீண்டும் பல இடங்களுக்குச் சென்று கிடைக்கும் பணிகளைச் செய்து, இடையில் தான் கற்ற மருத்துவத்தையும் பார்த்துகொண்டு வாழ்ந்து வந்தார். 1948-ம் வருடம், அவர் கனடாவிற்குச் சென்றபோது அங்கு நடனப் பள்ளி இயக்குநராக இருந்த ஜோசப்பின் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு கேய், மேய் என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். இவர்களில் மேய்தான் எலான் மஸ்கின் தாயார்.
ஹால்டிமேனுக்கு இவர்களைத் தவிர ஸ்காட் என்ற ஒரு மகனும், ஒரு மகளும் இருந்தனர். இத்தனை குழந்தைகளை வைத்துக்கொண்டும் ஹால்டிமேனுக்கு ஊர் சுற்றும் ஆசை விடுவதாக இல்லை. அவர் சிவப்பு நிறத்தில், ஒற்றை இயந்திரம் மட்டும் கொண்ட சிறிய விமானம் ஒன்றை விலைக்கு வாங்கினார். அதில் தனது குடும்பத்தை அழைத்துக்கொண்டு வாராவாரம் எங்காவது சுற்றுலா சென்றுவிடுவார். இப்படியே அவர் வட அமெரிக்கா முழுவதையும் பறந்தே சுற்றி இருக்கிறார். இந்த அனுபவங்களை ஹால்டிமேனின் மனைவி ஜோசப்பைன், ‘The Flying Haldemans: Pity the Poor Private Pilot’ என்ற புத்தகமாக எழுதி வெளியிட்டு இருக்கிறார்.
1950-ம் வருடம் ஹால்டிமேனுக்கு ஒரு சிக்கல் வந்தது. ஹால்டிமேன் கெட்டப்பழக்கங்கள் எதுவும் இல்லாதவர். புகை, மது உள்ளிட்ட எந்த போதைப் பழக்கமும் இல்லாதவர். கோகோ கோலாவைக்கூட தனது குழந்தைகள் குடிப்பதை அனுமதிக்க மாட்டார். ஆனால் அமெரிக்க அரசாங்கமும் கனடா அரசாங்கமும் அந்நாட்டு மக்களுக்கு மதுவையும், புகையையும் பயன்படுத்தச் சொல்லி விளம்பரங்கள் மூலம் ஊக்கப்படுத்தியது. கொஞ்சம் அரசியலில் ஆர்வம் இருந்த ஹால்டிமென் இவற்றை எதிர்த்து கேள்வி கேட்டார்.
பலன், அவருக்கு அரசாங்கம் பல்வேறு வழிகளில் குடைச்சல் கொடுக்கத் தொடங்கியது. இதனால் ஆத்திரமடைந்த ஹால்டிமென் அனைத்தையும் உதறிவிட்டு வேறு இடத்திற்குப் புலம் பெயர முடிவு செய்தார். அவருடைய சாகச மனோபாவம் அதற்கான உந்து சக்தியை வழங்கியது. தன்னுடைய வீடு, தோட்டம், தனது மனைவியின் நடனப்பள்ளி உள்ளிட்ட அனைத்துச் சொத்துக்களையும் விற்றவர், தனது சிறிய விமானத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, தனது குடும்பத்தினருடன் கப்பலில் வேறு ஒரு தேசம் நோக்கிப் புறப்பட்டார்.
அவர் இதற்கு முன் செல்லாத தேசம் அது. அங்கு எத்தகைய சூழல் இருக்கும், அந்தத் தேசத்து மனிதர்கள் பேசும் மொழி என்ன? எதுவும் தெரியாது! காசு, பணம் இல்லாமல் இவ்வளவு பெரிய குடும்பத்தை வைத்துக்கொண்டு அந்தப் புதிய நிலத்தில் வாழ்ந்துவிட முடியுமா என்பதைப் பற்றியும்கூட அவர் கவலைப்படவில்லை. தன்மீது உள்ள நம்பிக்கையில், புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்காக அவர் சென்றடைந்த இடம்தான் தென் ஆப்ரிக்கா.
தென் ஆப்ரிக்காவில் பிரிட்டோரியாவுக்கு வந்த அவர், நகரத்தில் இருந்து சற்றுத் தள்ளி இருந்த பகுதியில், சிறிய வீடு ஒன்றில் குடியேறினார். அங்கு தனது மருத்துவத் தொழிலைத் தொடங்கினார். தென் ஆப்ரிக்கா வந்தாலும், அவரது ஊர் சுற்றும் விருப்பம் மட்டும் நிற்கவில்லை. ஹால்டிமெனும் அவரது மனைவியும் தங்களுடைய சிறிய விமானத்தில் 22,000 மைல் தொலைவிற்குப் பயணம் செய்து ஸ்காட்லாந்து, நார்வே ஆகிய நாடுகளுக்குச் சென்றனர். பின் ஆஸ்திரேலியாவைத் தொட்டுவிட்டு, 30,000 மைல் பயணம் செய்து மீண்டும் தென் ஆப்ரிக்கா திரும்பினர். ஆப்ரிக்காமுதல் ஆஸ்திரேலியாவரை சிறிய வகை விமானத்தில் பயணம் செய்த தம்பதி என்ற தலைப்பில், அவர்களைக் குறித்த செய்தி பிரிட்டோரியாவின் அனைத்து செய்தித் தாள்களிலும் இடம்பெற்றிருந்தது. அதனாலேயே அவர்கள் அந்தப் பகுதியில் பிரபலமானவர்களாக இருந்தனர்.
இத்தனைக்கும் ஹால்டிமென் குடும்பத்தினருக்கு விமான ஓட்டுநர் உரிமம்கூட கிடையாது. அதற்காக அவர்கள் பலமுறை விமான அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டு, அபராதம் செலுத்தி இருக்கின்றனர். அதேபோல அவர்கள் முறையாக விமானம் ஓட்டவும் கற்றுக்கொள்ளவில்லை. அவர்களிடம் விமானிகள் பயன்படுத்தும் பாதுகாப்புக் கருவிகளும் கிடையாது. ஆனாலும் அவர்கள் தங்களது பறக்கும் பயணத்தை விட்டபாடில்லை. தரைவழி வரைபடத்தை வைத்துக்கொண்டு அந்தக் குடும்பம் தேசம் தேசமாகப் பயணித்தது. விமானம் பழுதடைந்துவிட்டால் அதைச் சரி செய்துவிடும் அனைத்து நுட்பங்களையும் ஹால்டிமேன் அனுபவத்தின் மூலமாகவே கற்றுத் தேர்ந்திருந்தார்.
(எலான் மஸ்கிற்குத் தன் தாத்தா பயணம் செய்த சிவப்பு நிற சிறிய விமானத்தின் மேல் தீராத காதல் இருந்தது. வளர்ந்து செல்வந்தர் ஆனவுடன் முதல் வேலையாகத் தனது தாத்தா பயன்படுத்திய சிவப்பு நிற விமானத்தை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று தேடி அலைந்தார். ஆனால் அவரால் அதைக் கண்டறியமுடியவில்லை.)
ஹால்டிமேன் குடும்பத்தினர் செய்யும் பயணம் எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு ஓர் உதாரணம் இது. அவர்கள் ஒருமுறை சிறிய டிரக்கில் பயணம் செய்தபோது, அந்த வாகனம் காட்டில் ஒரு மரத்தில் மோதி, ரேடியேட்டர் பழுதடைந்தது. சுற்றிலும் காடு. மனிதர்களைத் தொடர்புகொள்வதற்கு ஒரு வழியும் கிடையாது. திரும்பிச் செல்லவும் வழியில்லை. வெகுதூரம் வந்தாகிவிட்டது. ஆனாலும் அந்தக் குடும்பம் கொஞ்சம்கூட அசரவில்லை.
ஹால்டிமேன் தனது டிரக்கைப் பழுதுபார்க்கும் வரை அந்தக் குடும்பம் மூன்று நாட்கள் அந்தக் காட்டிற்குள்தான் தங்கி இருந்தது. உணவுக்குச் சிறிய மிருகங்கங்களை வேட்டையாடி உண்டனர். இரவில் ஏதோ சுற்றுலா வந்ததுபோல் தீ மூட்டி வைத்துவிட்டு கதைகளைப் பேசி நேரத்தைக் கழித்தனர். சிறுத்தை, கழுதைப்புலி உள்ளிட்ட காட்டு விலங்குகள் அவர்கள் இருந்த பகுதியை இரவு நேரத்தில் சுற்றிவரும். ஆனாலும் அந்தக் குடும்பம் பயப்படவில்லை. அந்தப் பயணத்தின்போது சிங்கம் ஒன்று அவர்களுக்கு மிக அருகில், மூன்று அடி தூரத்திற்கு வந்தது. நார்மன் ஹால்டிமேன் சற்றும் அசராமல் கையில் இருந்த விளக்கு ஒன்றை எடுத்து சிங்கத்தை விரட்டினார்.
ஹால்டிமென் தம்பதியினர் தங்களது குழந்தைகளை வளர்த்த விதமே அந்தக் காலக்கட்டத்திற்குப் புதிதாகத்தான் இருந்தது. அவர்கள் தங்கள் குழந்தைகளை அடித்ததே இல்லை. எந்த நேரத்திலும் தண்டித்தது இல்லை. குழந்தைகள் ஒவ்வொருவரும் அவர்கள் தங்கள் சொந்த உள்ளுணர்வின் மூலமே சரியான நடத்தையைப் பெறுவார்கள் என நம்பினார். பெற்றோர்கள் விமானத்தில் எங்காவது பயணம் சென்றிருக்கும்போது குழந்தைகள் வீட்டிலேயே தனியாக நாட்கணக்கில் இருந்திருக்கின்றனர். ஹால்டிமேன் தனது பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கச் சென்றதைத் தவிர ஒருமுறைகூட பள்ளிக்கூட வாசலைத் தொட்டதில்லை.
அவர் குழந்தைகளுக்குத் தன்னுடைய வாழ்க்கையையே முன்னுதாரணமாக வைத்து பல பாடங்களைச் சொல்லித்தந்தார். ‘உங்களால் எதையும் சாதிக்க முடியும். வாழ்வில் நாம் சந்திக்கும் தடைகள் அனைத்தும் தாற்காலிகமானவை. ஒரு திட்டத்தை எத்தனைமுறை வேண்டுமானாலும் பரிசீலனை செய்யலாம். ஆனால் செயலில் இறங்கிய பிறகு, இலக்கு ஒன்றை மட்டும்தான் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்’ என்பதை அவர் தனது குழந்தைகளுக்கு உணர்த்தி இருந்தார். இதை எலான் மஸ்கின் தாய் மாமனான ஸ்காட் ஹால்டிமேன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
இத்தனை சாகசங்களையும் செய்த ஹால்டிமேன் 1974-ம் வருடம், தனது எழுபத்தியிரண்டாவது வயதில், தன்னுடைய விமானத்தில் பயணம் செய்தபோது ஒரு சிறிய விபத்தில் சிக்கி, படுகாயம் அடைந்து, பிறகு இறந்துபோனார். அப்போது எலான் மஸ்க்கிற்கு இரண்டோ அல்லது மூன்றோதான் வயது இருந்திருக்கும்.
தந்தையிடம் இருந்து வாழ்க்கைப் பாடங்களை கற்றுக்கொண்ட எலான் மஸ்கின் தாயார், தனது குழந்தைகளையும் அவர் காட்டிய வழியிலேயே வளர்த்தார். அவர் எலான் மஸ்க்கை ஒருமுறைகூட கண்டித்ததில்லை. கட்டுப்படுத்தியதும் இல்லை. எலான் மஸ்க் சிறுவயதில் தனது தாத்தாவைப் பற்றிய கதைகளைத்தான் கேட்டு வளர்ந்தார். அவர் செய்த சாகசங்கள் இளம் வயது மஸ்கிற்கு வாழ்வின் மீதான அச்சத்தை விலக்கியது. எதையும் மோதிப் பார்த்துவிட வேண்டும் என்ற அசாதாரண துணிச்சலைக் கொடுத்தது. அந்தத் துணிச்சலான மனநிலைதான் பின்னாட்களில், அவர் வளர்ந்து தொழிலதிபரான போது அதுவரை யாரும் செய்யத் துணியாத காரியங்களை எல்லாம் செய்யத் தூண்டியது. கிடைத்த பணத்தையெல்லாம் இழந்துவிடுவோம் என்று கொஞ்சமும் அச்சப்படாமல் முன்பின் செய்திராத தொழில்களில் எல்லாம் முதலீடு செய்யும் தைரியத்தைக் கொடுத்தது. எலான் மஸ்கை சக தொழிலதிபர்களே மெச்சும் ஆளுமையாக உயரப் பறக்கவைத்தது.
(தொடரும்)