Skip to content
Home » எலான் மஸ்க் #3 – தனிமை எனும் வளையம்

எலான் மஸ்க் #3 – தனிமை எனும் வளையம்

எலான், டோஸ்கா, கிம்பல்

எலான் மஸ்கின் தாயாரான மே (Maye Musk) அவரது தந்தை நார்மன் ஹால்டிமென்னின் நேரடி அரவணைப்பில் வளர்ந்தவர் என்பதால் சுதந்தரமானவராக இருந்தார். 11 வயது இருக்கும்போது மே அவரது வீட்டின் அருகிலேயே இருந்த ஓர் இளைஞன்மீது காதல் வயப்பட்டார். அந்த இளைஞன் படிப்பில் கெட்டி, புத்திசாலி. மே அவனை விரும்பியவதற்கு இதுவும் ஒரு காரணம். அவனுக்கும் மே மீது ஈர்ப்பு இருந்தது. இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசி வந்தனர்.

பதின் பருவத்தில் துளிர்த்த காதல் கல்லூரிவரை வளர்ந்தது. பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மே திருமணம் செய்துகொண்ட அந்த இளைஞன்தான் எரோல் மஸ்க். எலான் மஸ்கின் தந்தை.

மேயின் உயரமும் அழகான தோற்றமும் அவரை மாடலிங் துறையை நோக்கிச் செலுத்தியது. பின் அவர் கல்லூரியில் சேர்ந்து உணவியல் நிபுணராக (டயடீஷியன்) பணியாற்றத் தொடங்கினார். எரோல் மஸ்க் பொறியாளர் ஆனார். இயந்திரம் மற்றும் மின் பொறியியல் நிபுணராக இருந்தார். அவர்கள் வாழ்ந்த பகுதியில் மிகப்பெரிய கட்டடங்கள், குடியிருப்புகள், விமானப் படைத்தளம் உள்ளிட்ட பல கட்டமைப்புப் பணிகளில் அவர் பணியாற்றியவர் என்பதால் எரோல் மஸ்கிடம் செல்வம் வேண்டிய அளவுக்கும் அதிகமாகவே இருந்தது.

அந்தத் தம்பதி தேனிலவுக்குச் சென்றிருந்தபோது மே கர்ப்பம் தரித்து, 1971 ஆம் வருடம் எலான் மஸ்க் பிறந்தார். அவரைத் தொடர்ந்து கிம்பல் என்ற மகனும், டோஸ்கா என்ற மகளும் பிறந்தனர்.

மே, எரோல் இருவரும் காதலித்துத் திருமணம் செய்திருந்தாலும், திருமணத்திற்குப் பிறகான வாழ்க்கை கசக்கவே செய்தது. குழந்தைகள் வளரும் பருவத்தில் இருந்தபோதே இருவரும் விவாகரத்துப் பெற்றனர். குழந்தைகள் தாயிடம் வளர்ந்தனர்.

குழந்தைகளில் படுச்சுட்டி என்றால் அது எலான்தான். எலான் சிறுவயதில் துறுதுறுவென இருப்பான். அனைத்து விஷயங்களிலும் அவனுக்கு ஆர்வம் இருந்தது. தான் காணும் எல்லாவற்றைப் பற்றியும் கேள்வி எழுப்புவான். ஒரு விஷயத்தை மற்ற குழந்தைகளைவிட வேகமாக கற்றுக்கொள்ளும் திறன் எலானிடம் இருந்தது.

இதனால் அவன் தனது வயதையொட்டிய குழந்தைகளைவிட அதிகமாகவே சிந்தித்தான். இதுவே அவனை மற்ற குழந்தைகளிடம் இருந்து விலகவும் வைத்தது. மற்ற குழந்தைகள் எலானுடன் விளையாடுவதற்குப் பயந்தனர். சில சமயங்களில் எலான் ஒருவித கனவு நிலைக்குச் சென்றுவிடுவான். யார் என்ன பேசினாலும் அவன் காதில் விழாது. அவனுடைய பெற்றோர் எலானுக்குக் கேட்கும் திறனில் பிரச்னை இருப்பதாகக் கருதி, மருத்துவரிடம் காண்பித்து அறுவை சிகிச்சை செய்தனர். இருப்பினும் அவன் தொடர்ந்து அவ்வாறுதான் இருந்து வந்தான். வளர்ந்த பிறகுதான் அது, பிரச்னை இல்லை, எலானுக்கே உரிய சிறப்பாற்றல் எனத் தெரிய வந்தது.

எலானால் அவ்வாறு கனவு நிலையில் இருக்கும்போது ஒரு விஷயத்தை மனக்கண்ணில் வெகு சிறப்பாகக் காட்சிப்படுத்திப் பார்க்க முடியும். இதனாலேயே அவர் அறிவியலின் கடினமான விஷயங்களைக்கூடக் காட்சிப்படுத்தி எளிதில் புரிந்துகொள்பவராக இருந்தார். ஆனால் சிறுவயதில் விளையாடுவதற்கு அதிகம் நண்பர்கள் இல்லாததால் புத்தக வாசிப்பை நோக்கி அவரது கவனம் சென்றது.

அவர் சிறுவயதில் படித்த புத்தகங்கள் அனைத்தும் சாகசக் கதைகளும் அறிவியல் புனைவுக் கதைகளாகவுமே இருந்தன. மஸ்கின் வாசிப்பு குறித்து அவனது தாயார் மே கூறும்போது, ‘எலான் ஒரு நாளைக்கு பத்து மணிநேரம் வரையெல்லாம்கூட அமர்ந்து புத்தகம் படிப்பான். விடுமுறை என்றால் மஸ்கிற்கு ஏகக் கொண்டாட்டமாக இருக்கும். ஒரு நாளைக்கு இரண்டு புத்தகங்களை எல்லாம் படித்து முடிப்பான். மஸ்கைக் காணவில்லை என்றால் ஏதாவது ஒரு நூலகத்தில்தான் இருப்பான் என்று எளிதாகச் சொல்லிவிடலாம்’ என்கிறார்.

எலான், ஒரு கட்டத்தில் நூலகத்தில் இருக்கும் அனைத்துப் புத்தகங்களையும் படித்துவிட்டு, புதிய புத்தகங்களை வாங்கச் சொல்லி நூலகரை வற்புறுத்தி இருக்கிறார். பின் புனைவு எழுத்துகளைத் தாண்டி ‘என்சைக்ளோபீடியா’ எனப்படும் தகவல் களஞ்சியத்தை வாசிக்கத் தொடங்கினார். அப்போதுதான் அவருக்கு உலகைக் குறித்த பார்வை விரிவடையத் தொடங்கியது.

தான் படிக்கும் அனைத்து விஷயங்களையும் உள்வாங்கி சிந்தித்துக்கொண்டே இருப்பார் எலான். யார் எதைக் குறித்துப் பேசினாலும் போதும், அந்த விஷயம் குறித்த அறிவியல்பூர்வமான விளக்கத்தை மஸ்க் கொடுத்து விடுவார். ஒருமுறை குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போதுகூட நிலவைப் பற்றிய பேச்சு வந்தது. உடனே எலான், நிலவுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் என்ன, நிலவின் எடை என்ன போன்ற விஷயங்களை விளக்கிப் பேசினார். அதனாலேயே மற்றவர்களால் அவர் விநோதச் சிறுவனாக அறியப்பட்டார்.

அப்போது அவருக்கு எட்டு வயது இருக்கும். எலான் மஸ்கும், அவரது சகோதரனின் நண்பர்களும் இருட்டில் விளையாடிக்கொண்டிருந்தனர். அங்கிருந்த ஒரு சிறுவன் இருட்டைப் பார்த்துப் பயந்து நடுங்கினான். அவனிடம் சென்ற மஸ்க், ‘இருட்டு என்பது பயப்படக் கூடியது அல்ல. இருள் என்பது போட்டான்கள் அற்ற நிலை. போட்டான்கள் பற்றாக்குறையைக் கண்டு பயப்படுவது முட்டாள்தனம்’ என விளக்கம் அளித்தார். அதன்பின் அந்தச் சிறுவன் இருளைப் பார்த்து பயந்தானா என்பது தெரியாது, ஆனால் மஸ்கைப் பார்த்து அரண்டுவிட்டான்.

இதுபோல சிறுவர்கள் விளையாட்டாகப் பேசும் வார்த்தைகளை எல்லாம் மஸ்க் திருத்தத் தொடங்கியதுதான் அவர்களுக்கு மஸ்கின்மீது வெறுப்பை ஏற்படுத்தத் தொடங்கியது. சக சிறுவர்கள் மஸ்கிடம் பழகவே தயங்கினர். இதனால் எப்போதும் மஸ்க் தனிமையில் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. பள்ளிக்குச் சென்றால் அங்கிருந்த சிறுவர்கள் மஸ்கின் குணாதிசயத்தைக் கிண்டல் செய்து அவரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் காயப்படுத்தினர். அதுவே அவரை சமூகத்துடன் ஒத்து இயங்காதபடிச் செய்தது.

ஒருமுறை மஸ்க் படித்த பள்ளியில் மாணவர்கள் – ஆசிரியர்களிடையே விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பள்ளிக் குழந்தைகள் சாலையில் செல்லும் விதவிதமான கார்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தனர். எலான் மஸ்கோ கார்களின் தோற்றத்தைப் பற்றிப் பேசாமல், அது இயங்கும் விதம் குறித்துப் பேசத் தொடங்கினார்.

‘நாம் சாலையில் பார்க்கும் வாகனங்கள் இயங்குவதற்கு பயன்படும் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை படிம எரிபொருட்களில் இருந்து கிடைக்கின்றது. பூமியில் வாழும் உயிரினங்கள் சூரிய ஆற்றலைக் கொண்டே இயங்குகின்றன. அவை இறந்தபின் படிமங்கள் ஆகின்றன. அந்தப் படிமங்கள் வேதியல் மாற்றம் அடைந்து எரிபொருள்களாக நமக்குக் கிடைக்கின்றன. அந்தப் படிமங்களில் இருப்பது வேதியல் மாற்றம் அடைந்த சூரிய ஆற்றல்தான். என்றாவது ஒருநாள் இந்தப் படிமங்கள் தீர்ந்துபோகும் நிலை ஏற்படும். அப்போது வேதியல் மாற்றம் அடைந்த சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவதற்குப் பதில் நேரடியாகவே சூரியனில் இருந்து வரும் ஆற்றலை கொண்டு இயங்கும் வாகனங்களை தயாரித்தால் என்ன?’ என்று ஆசிரியரிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார். ஆசிரியர் மிரண்டுவிட்டார்.

அதேபோல எலான் மஸ்கும், அவரது சகோதரர் கிம்பலும் ஒருமுறை வங்கிகள் குறித்து உரையாடிக்கொண்டிருந்தனர். அப்போது மஸ்க், வீணாகும் காகிதங்களைக் குறைக்க காகிதங்களற்ற வங்கிமுறை வர வேண்டும் எனப் பேசி இருக்கிறார்.

இன்று எலான் மஸ்கின் நிறுவனங்களாக அறியப்படும் சோலார் சிட்டி, டெஸ்லா உள்ளிட்ட வாகனத் தயாரிப்பு, ஆற்றல் நிறுவனங்களுக்கும் அவர் தொடங்கிவிட்டுச் சென்ற பே-பால் என்ற ஆன்லைன் பணப்பரிவர்த்தனை நிறுவனத்திற்குமான கருத்து வடிவம் அவரது பள்ளி நாட்களிலேயே தோன்றியிருக்கிறது என்பதைத்தான் மேலே கூறிய சம்பவங்கள் உணர்த்துகின்றன.

இவ்வாறு வயதைத் தாண்டிய சிந்தனையைக் கொண்ட மஸ்கிற்கு ஆதரவாக இருந்த ஒரே நபர் அவரது சகோதரர் கிம்பல் மஸ்க்தான். அவரும் மஸ்கைப்போலவே சிந்திக்கக்கூடியவர் என்பதால், இருவரும் ஒன்றாகவே இருந்தனர். ஒன்றாகவே சுற்றினர். பல விஷயங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.

தனது பெற்றோர் பிரிந்தவுடன் சில ஆண்டுகள் தாயாருடன் வசித்து வந்த மஸ்க், தந்தையுடன் வசிக்க வேண்டும் என்று விரும்பினார். கூடவே கிம்பலும் வந்தார். இருவரும் சென்று தந்தை எரோல் மஸ்குடன் வசிக்கத் தொடங்கினர். எரோல் மஸ்க் அப்போது வேறு திருமணம் செய்துகொண்டு, இரண்டு குழந்தைகளையும் வளர்த்து வந்தார். அந்தப் புதிய குடும்பத்தினருடனும் மஸ்க் சகோதரர்கள் இயல்பாகவே பழகினர்.

எலான் மஸ்குடைய தந்தை எரோல் மஸ்கும் புத்திசாலி என ஏற்கெனவே பார்த்தோம். அவர் தன் குழந்தைகளிடம் அறிவியல் குறித்த பல விஷயங்களைப் பேசினார். இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள பொருள்கள் இயங்கும் விதத்தைச் சொல்லிக்கொடுத்தார். விடுமுறை நாட்களில் எலானையும், கிம்பலையும் அழைத்துச் சென்று மின்சார வேலைகள், கட்டுமான வேலைகளைக் கற்றுத் தருவார்.

எரோல் மஸ்கிடம் வீட்டில் நிறைய புத்தகங்கள் இருந்தன. அவை அனைத்தையும் எலான் மஸ்க் ஒன்று விடாமல் படித்திருக்கிறார். மேலும் எரோல் மஸ்கிடம் பணமும் அதிகம் இருந்தது. அதனால் அவர் தன் குழந்தைகளைப் பல நாடுகளுக்கும் அழைத்துச் சென்றிருக்கிறார். இருப்பினும் எலான் மஸ்க் தன் தந்தையுடன் வாழ்ந்த நாட்களைக் கசப்பான நாட்களாகவே நினைவு கூறுகிறார்.

(தொடரும்)

 

பகிர:
nv-author-image

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *