Skip to content
Home » எலான் மஸ்க் #4 – கணினியும் கனடாவும்

எலான் மஸ்க் #4 – கணினியும் கனடாவும்

எலான் மஸ்க்

தன் தந்தையுடனான இளம் வயது காலத்தைக் கசப்பான நாள்கள் என்று எலான் மஸ்க் ஏன் அழைக்கவேண்டும்? காரணம், பணம், அறிவு ஆகியற்றைத் தந்த எரோல் மஸ்க் தன் குழந்தைகளுக்குத் தேவைப்பட்ட அன்பை மட்டும் போதுமான அளவுக்குத் தரவில்லை.

அவர் எப்போதும் பிறரிடம் கடுமையாகவே நடந்துகொண்டார். சுடும் சொற்களை உபயோகப்படுத்தினார். சில நேரங்களில் சிறுவர்கள் என்றுகூடப் பார்க்காமல் எலானையும் கிம்பலையும் நான்கு மணி நேரம், ஐந்து மணி நேரம்கூட அமர வைத்து அறிவுரை கூறுவார். இது அந்தச் சிறுவர்களுக்கு உளவியல் தொந்தரவாக அமைந்தது. இதனாலேயே சிறு வயதில் அனுபவிக்க வேண்டிய மகிழ்ச்சியான தருணங்களை எல்லாம் தான் இழந்ததாக மஸ்க் கருதுகிறார்.

எலான் மஸ்க் தென் ஆப்ரிக்காவில் இருந்து சென்றபிறகு தன் தந்தை எரோல் மஸ்கை ஒருமுறைகூட சந்திக்கவே இல்லை. தனக்குத் திருமணமாகி குழந்தைகள் பிறந்தவுடன்கூட, அவர்களைத் தன் தந்தையைப் பார்க்க அனுமதிக்கவில்லை. தந்தை மீதான அத்தகைய வெறுப்பு அவரது மனதில் குடியேறி இருந்தது.

மஸ்கிற்கு 12 வயது இருக்கும்போது முதன் முதலில் ஜோஹன்ஸ்பெர்க் நகரத்தில் உள்ள ஒரு கடையில் கணினிகளைப் பார்த்தார். அதிலிருந்து அவருக்குக் கணினிகள் மீதான தீராத காதல் தொடங்கிவிட்டது. ஓர் இயந்திரத்தால் நாம் இடும் கட்டளைகள் அனைத்தையும் செய்து முடிக்க முடியும் என்பதே அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்தக் கணினியின் செயல்திறன் குறித்து முழுவதையும் அறிய விரும்பினார்.

தனது தந்தையிடம் அடம்பிடித்து, தான் சேர்த்து வைத்திருந்த சிறு தொகைகளையும் கொடுத்து Commodore VIC-20 என்ற அந்தக் கணினியை வாங்கி வந்தார். 5 கிலோ பைட் அளவு மட்டுமே மெமரி கொண்ட அந்தக் கணினியில் ‘பேசிக்’ என்ற கணினி மொழியைப் பயிலத் தொடங்கினார். கற்றுக் கொள்வதற்கு ஆறுமாதங்கள்வரை எடுக்கும் அந்தக் கணினி மொழி பயிற்சியை மஸ்க் தூக்கம்கூட இல்லாமல் மூன்றே நாட்களில் கற்றுத் தெளிந்தார். அவற்றைக் கொண்டு ஒரு வீடியோ கேமையும் உருவாக்கினார். அதுதான் நாம் முன்பு பார்த்த ‘பிளாஸ்டர்’ என்ற வீடியோ கேம்.

வீடியோ கேம்மீது அவர் கொண்டிருந்த அளப்பறிய காதல் அவரை நுகர்வோராக மட்டும் வைத்திருக்கவில்லை. வீடியோ கேம்களை தயாரித்து விற்கும் வியாபாரியாகவும் மாற்றியது. பிளாஸ்டர் வீடியோ கேமை விற்றதன் மூலம் அவருக்கு 500 டாலர்கள் கிடைத்திருந்தது. அதைக் கொண்டு எலான் மஸ்க், தனது சகோதரர் கிம்பலுடன் இணைந்து ஒரு வீடியோ கேம் விளையாட்டு மையத்தை வீட்டிற்குத் தெரியாமல் தொடங்க நினைத்தார். அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது விஷயம் அவர்களது தந்தைக்குத் தெரிந்துவிட்டது. அந்த லட்சியம் இழுத்து மூடப்பட்டது.

எலான் மஸ்க் பள்ளியிலேயே கணினி மொழிகளான பேசிக், கோபால், பாஸ்கல் ஆகியவற்றைக் கற்றறிந்தார். அவர் அறிவியல், கணினி பாடங்களில் முதல் மாணவனாக இருந்தார். ஆனால், தனக்கு விருப்பமில்லாத பாடங்களில் எல்லாம் தோல்வி அடைந்தார். நான்கு, ஐந்தாம் வகுப்புகளில் மொழிப்பாடங்களில் அவர் பலமுறை தேர்ச்சி பெறாமல் இருந்திருக்கிறார்.

அவர் தனது பள்ளி அனுபவம் குறித்து பின்வருமாறு நினைவு கூர்கிறார். ‘பள்ளி வகுப்புகள் எனக்கு உவப்பாக இருந்ததில்லை. சில பாடங்களை நாம் ஏன் படிக்கிறோம் என்று தெரியாமலேயே படிக்கிறோம். தேர்வு எழுதுகிறோம். தேர்ச்சி பெறுகிறோம். நமக்குத் தகுதி வந்துவிட்டதாக நினைத்து அடுத்த வகுப்புக்குச் செல்கிறோம். இந்தக் கற்றல்முறை ஒரு தொழிற்சாலைபோல இயங்குகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம் இருக்கும். அவற்றை நோக்கி முன்னேறினாலே ஒவ்வொருவரும் வேகமாகவும், சிறப்பாகவும் கற்றுக்கொள்ள முடியும். ஆனால் நமது கல்வி முறை அவ்வாறு அமையவில்லை.

‘நாம் சூத்திரங்களை நினைவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்படுகிறோம். அவ்வாறு செய்யவில்லை என்றால் தண்டிக்கப்படுகிறோம். இதனால் கற்றல் என்பது அர்த்தமே இல்லாமல் இருக்கிறது. பலர் ஏன் கற்கிறோம் என்றே தெரியாமலேயே கற்கின்றனர். அவர்களுக்குத் தாங்கள் படிக்கும் பாடம் எதிர்காலத்தில் எப்படிப் பயன்படும் என்பதே தெரியாது. பள்ளிகள் ஒரு விஷயத்தை சொல்லித்தருவதற்கு முன் அதை ஏன் கற்கவேண்டும் என்பதையும் மாணவர்களுக்கு விளக்க வேண்டும்.

‘எதற்காக நாம் ஒரு பாடத்தைக் கற்கிறோம் என்பது புரிந்தாலே அது கற்றல் முறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நோக்கம் தெரிந்துவிட்டால் அதை நோக்கிச் செயல்படுவது எளிது. ஒரு விளையாட்டைப்போல நாம் பாடத்தைக் கற்கவேண்டும்.

‘பாடம் என்பது ஈடுபாட்டை ஏற்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். நாம் முதலில் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அதன்பின் தீர்வை நோக்கிச் செல்ல வேண்டும். நமது பாடங்கள் மாணவர்களைச் சிந்திக்க விடாமல் தீர்வை மட்டும்தான் சொல்லித்தருகின்றன. அது கற்றலில் குறையைத்தான் ஏற்படுத்தும்.

‘கற்றலைப் பொறுத்தவரை ஒருவர் தேர்ந்தெடுத்த பாதையையே மற்றவர்களும் பின்பற்றிச் செல்கின்றனர். அவ்வாறு செய்யாமல் சுதந்திரமான கற்றல் அணுகுமுறை மாணவர்களுக்கிடையே ஊக்குவிக்கப்படவேண்டும். அதுதான் சிறந்த கல்வி.’

புத்திசாலி மாணவனாக இருந்தாலும், பள்ளிக் கல்விமுறையில் ஈடுபாடு இல்லாத எலான் மஸ்க் வேறோர் உளவியல் சிக்கலுக்குள் தள்ளப்பட்டார். அது அவரைச் சுற்றி நடந்து வந்த சமூக அநீதி. நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல் தென் ஆப்ரிக்காவில் அப்போது நிலவிய இனவெறிப் பிரச்னை அவருக்குள் இருத்தலியல் சிக்கலை உண்டு பண்ணியிருந்தது. தினம் தினம் பார்த்த இனரீதியான வன்முறைக் காட்சிகள் அவருக்கு வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்தது.

இதுவே அவருக்குள் பல கேள்விகளை எழுப்பியது. நாம் ஏன் இந்தப் பூமியில் வாழ வேண்டும்? நமது பிறப்பின் நோக்கம்தான் என்ன? மனிதர்கள் உயர்ந்த சிந்தனையை அடைவது எப்படி? இந்தக் கேள்விகளுக்கான விடையைத் தேடும் நோக்கில் எலான் மஸ்க் பல நூல்களை வாசிக்கத் தொடங்கினார். தத்துவம், மத நூல், இலக்கியம் என ஒன்றுவிடாமல் வாசித்தார். ஆனால் அவர் கண்ட எந்த விளக்கங்களும் அவரைத் திருப்திப்படுத்தவில்லை. அவற்றில் உண்மை இருப்பதாக அவர் நினைக்கவில்லை.

கிடைத்த பதில்கள் அனைத்தும் சமூகத்தைப் பற்றிய எதிர்மறை எண்ணங்களை உருவாக்கக்கூடியவையாக இருந்தன. மனிதர்களின்மீதான நம்பிக்கையை இழக்கச் செய்வதாகவே இருந்தது. இறுதியில் அவருடைய வாழ்வின் நோக்கம் குறித்த தேடலுக்கான விடை, டக்லஸ் ஆடம் என்பவர் எழுதிய The Hitchhiker’s Guide to the Galaxy என்ற அறிவியல் புனைவு நாவலில் கிடைத்தது.

அந்தப் புத்தகத்தில் ஒரு கணினியாக மாறி இருக்கும் பூமியிடம், வாழ்விற்கான அர்த்தம் என்ன என்ற கேள்வி கேட்கப்படும். இதற்குப் பதிலளிக்கும் பூமி, ‘42 என்பதுதான் இந்த வாழ்க்கை, இந்தப் பிரபஞ்சம் மற்றும் அனைத்துத் தேடலுக்குமான விடை. ஆனால் அந்த 42 என்ற விடையைப் புரிந்துகொள்ள நாம் கேட்கவேண்டிய சரியான கேள்வி என்ன என்பதை மனிதர்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும்’ எனக் கூறும்.

இந்த ஒற்றை வாக்கியத்தைத்தான் மஸ்க் தனது வாழ்க்கைக்கான அர்த்தமாக எடுத்துக்கொண்டார். ‘மனிதர்கள் அடைய வேண்டிய ஞானம் என்பது சரியான கேள்விகளைக் கேட்பதற்கான புரிதலை கொண்டிருப்பதுதான். கேள்வி கேட்பதுதான் கடினமான விஷயம். நாம் சரியான கேள்வியை கேட்டுவிட்டால், அதற்கான பதில் எளிமையாகக் கிடைத்துவிடும். மனிதர்கள் அற்ப விஷயங்களுக்காகத் தங்களுக்குள் சண்டையிடுவதை எல்லாம் நிறுத்திவிட்டு, சரியான கேள்வியை கேட்கும் சிந்தனை நிலையை அடைய வேண்டும். அதுவே மனிதர்களை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும். அத்தகைய அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் முயற்சிதான் என்னுடைய பிறப்பிற்கான அர்த்தம். அதில்தான் என் வாழ்நாள் முழுவதையும் செலுத்தப்போகிறேன்’ என்று மஸ்க் வெளிப்படையாகேவே அறிவித்தார். அப்போது அவருக்கு வெறும் பதினான்கு வயதுதான்.

அதன்பின் அவர் வீடியோ கேம்களின் மீதான விருப்பத்தைக் கைவிட்டார். பிரபஞ்சத்தை அறிவதற்கு அறிவியலே சரியான ஆயுதம் என்று புரிந்துகொண்டார். அறிவை விரிவுப்படுத்த தாம் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது என்பதையும் உணர்ந்தார்.

இதற்கிடையிலேயே அவர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறுவது குறித்தும் சிந்தித்துக் கொண்டிருந்தார். தனது லட்சியத்தை நிறைவேற்றும் இடமாக அமெரிக்காதான் இருக்கிறது என்று அவர் கருதினார். பள்ளிப் படிப்பை முடித்தவுடனேயே தென் ஆப்பிரிகாவில் இருந்து வெளியேறி அமெரிக்கா செல்வதற்கான ஆயத்தங்களில் இறங்கினார்.

அப்போது தென் ஆப்பிரிக்காவில் மாறிவந்த அரசியல் சூழலும் அவரை அந்நாட்டை விட்டு விரைவாக வெளியேற நிர்பந்தப்படுத்தியது. ஆனால் நினைத்தவுடன் அமெரிக்காவுக்குச் சென்றுவிட முடியுமா என்ன? அங்கு எங்கே தங்குவது? யாரைத் தொடர்புகொள்வது என எதுவும் அவருக்குப் புரியவில்லை. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் அவருக்கு அந்த யோசனை தோன்றியது.

தென் ஆப்ரிக்காவை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்கிற கட்டாயத்திற்கு எலான் மஸ்க் வந்ததற்கு மூன்று காரணங்கள் இருந்தன. முதலாவது மஸ்க்கின் தனிப்பட்ட குடும்ப வாழ்வும் பள்ளி வாழ்வும் அவரை உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களை அளித்தன. வீட்டில் தந்தையுடன் பிரச்னை, பள்ளியில் பிற மாணவர்கள் மத்தியில் சந்திக்கும் கேலி, கிண்டல் ஆகியவை அவரை உடனே அந்நாட்டிலிருந்து தப்பித்துச் சென்றுவிட வேண்டும் என்ற முடிவுக்கு கொண்டு சென்றன.

இரண்டாவது காரணம் அவரது திறமைக்குத் தீனிபோடும் கல்வி நிலையங்கள் தென் ஆப்ரிக்காவில் இல்லை. பள்ளி முடிந்துவிட்டது. அடுத்தது கல்லூரிக்குள் நுழைய வேண்டும். ஆனால் மஸ்க்கிற்கு இருக்கும் அறிவாற்றலுக்குத் தென் ஆப்பிரிக்க கல்வி நிலையங்களில் அப்போது இருந்த பாடத்திட்டங்கள் பின் தங்கியதாகவே தெரிந்தன. அவரது அறிவியல் மற்றும் கணினித்துறை சார்ந்த ஆர்வம் விரிவடைய வேண்டும் என்றால் அது தென் ஆப்பிரிக்கப் பல்கலைக்கழங்களில் கிடைக்காது என மஸ்க் உறுதியாக நம்பினார்.

அப்போதுதான் உலகம் புதிய கணினி யுகத்தில் நுழைந்துகொண்டிருந்தது. அமெரிக்கா அதில் முன்னோடியாக இருந்தது. குறிப்பாக அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கு தொழில்முனைவோராக உயர விரும்பும் இளைஞர்களுக்குச் சொர்க்க பூமியாகத் தெரிந்தது. புதுப் புதுத் தொழில்நுட்பங்களும், கண்டுபிடிப்புகளும், வியாபார யுக்திகளுடன் இணைந்து செல்வம் கொழிக்கும் இடமாக சிலிகான் வேலி காணப்பட்டது. அந்த நிலத்தில் தினம் தினம் புதிய செல்வந்தர்கள் உருவாகிக்கொண்டு இருந்தனர். எலான் மஸ்க்கும் அந்தப் பட்டியலில் இணைந்துவிட வேண்டும் என விருப்பம் கொண்டார். சிலிகான் வேலியில் ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்துவிட வேண்டும் என்பதுதான் மஸ்க்கின் அப்போதைய கனவாக இருந்தது.

மஸ்க் தென் ஆப்பிரிக்காவில் இருந்து உடனடியாக வெளியேறிவிட வேண்டும் என வேகம் கொண்டதற்கு மூன்றாவது மற்றும் முக்கியக் காரணம், அப்போதைய அரசியல் சூழல். அன்றைய காலக்கட்டத்தில் தென் ஆப்ரிக்காவில் இருந்த ஆண்கள் அனைவரும் கட்டாய ராணுவச் சேவையாற்ற வேண்டும் என்ற உத்தரவு அமலில் இருந்தது. ராணுவத்தில் இணைந்து வன்முறைச் செயல்பாடுகளில் ஈடுபடுவது மஸ்க்கிற்கு உவப்பாக இல்லை. தினம் தினம் சாதாரண வீதிகளில்கூட வன்முறையை அவிழ்த்துவிடும் அரசின் அங்கமாய் இருப்பதைத் தவிர்ப்பதற்கு அமெரிக்காவிற்குத் தப்பிச் செல்வது மட்டுமே அவருக்கு நல்ல யோசனையாக இருந்தது.

இந்த மூன்று காரணங்களுக்காகத்தான் மஸ்க் அமெரிக்கா செல்ல விரும்பினார். ஆனால் அவர் நினைத்ததுபோல அமெரிக்கா செல்வது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. 1990-களில் கூட அமெரிக்காவில் குடியேறுவது சாதாரண விஷயம் கிடையாது. அப்போதுதான் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பலரும் அமெரிக்காவில் குடியேறிக்கொண்டிருந்தனர். இதனால் அந்நாட்டு அரசு குடியேற்றச் சட்டங்களைகடுமையாக்கி இருந்தது. அதனால் எலான் மஸ்க் பல்வேறு முயற்சிகளை எடுத்தும் அவரால் நேரடியாக அமெரிக்காவிற்குள் நுழைய முடியவில்லை. இதையடுத்து வேறு எதுவும் மாற்று வழி இருக்கிறதா என மஸ்க் யோசிக்கத் தொடங்கினார்.

ஒரு வழி கிடைத்தது. மஸ்க்கின் தாய் கனடாவில் பிறந்தவர். அதனால் கனடாவிற்குள் நுழைந்துவிட்டால் அங்கிருந்து அமெரிக்காவிற்குச் சுலபமாகச் சென்றுவிடலாம் என மஸ்க் தீர்மானித்தார். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. மஸ்க்கின் தாய் சிறு வயதிலேயே அந்நாட்டில் இருந்து குடிபெயர்ந்துவிட்டதால் அவருக்கு கனடா நாட்டுக் குடியுரிமை கிடையாது. ஆனாலும் அவரது உறவினர்கள் பலரும் கனடாவில் இருப்பதால் அந்நாட்டுக் குடியுரிமையை எளிதாகப் பெற்றுவிடலாம் என்று நினைத்தார். உடனே தனது தாயை கனடா நாட்டுக் குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்க வைத்தார். அவருடன் தானும் விண்ணப்பித்தார். கனடாவிற்குச் செல்ல வேண்டிய ஆவணங்கள் எல்லாம் கிடைக்க ஒரு வருடம் ஆனது. கைக்கு பாஸ்போர்ட் வந்ததுதான் தாமதம், மஸ்க் உடனே கனடாவிற்கு விமானம் ஏறிவிட்டார்.

(தொடரும்)

பகிர:
nv-author-image

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *