Skip to content
Home » எலான் மஸ்க் #6 – காதல் மன்னன்

எலான் மஸ்க் #6 – காதல் மன்னன்

காதல் மன்னன்

எலான் மஸ்க் என்றவுடன் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், விண்வெளி, அதிரடி நடவடிக்கைகள், அசாத்திய சாதனைகள் ஆகியவைதான் சட்டென்று நம் நினைவுக்கு வரும். ஆனால் எலான் மஸ்கிற்கு இன்னொரு முகம் இருக்கிறது. அதுதான் காதல் முகம். எலான் மஸ்க் என்ற நபரை ஒரு காதல் வட்டத்துக்குள் வைத்துச் சிந்திப்பதற்கு எவருக்குமே சிரமமாகத்தான் இருக்கும். கொஞ்சம் சிரிப்பாகவும் இருக்கலாம்.

பொதுவாக நாம் குடும்ப வாழ்வையும் லட்சியங்களையும் தனித்தனியாகப் பார்க்கின்றோம். லட்சிய வாழ்வில் இருப்பவர்களுக்குக் காதல், திருமணம், குடும்பம் ஆகியவற்றில் எல்லாம் கவனம் செலுத்துவதற்கு எங்கே நேரம் இருக்கப்போகிறது என நினைக்கிறோம். ஆனால் அது தவறு. எலான் மஸ்கைப் பொருத்தவரை தொல்காப்பியம் கூறும் களவு, கற்பு ஆகிய இரு வாழ்க்கை நெறிகளிலும் கெட்டிக்காரர்தான்.

எத்தனை வேலை இருந்தாலும் மஸ்க் தனது குழந்தைகளுடன் மட்டும் நேரம் செலவிடுவதை நிறுத்த மாட்டார். வாரம் தவறாமல் வெள்ளிக்கிழமைகளில் மஸ்க் தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஏதாவதொரு அமெரிக்க நகரத்திற்குப் பறந்துவிடுவார். இரண்டு நாட்கள் மற்ற அனைத்தையும் மறந்துவிட்டு முழு நேரத்தையும் குழந்தைகளுடன் செலவிடுவார். ஞாயிற்றுக்கிழமை மாலை மீண்டும் தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று விட்டுவிடுவார். பின் ஏதாவது ஒரு விடுதியில் அறை எடுத்து இரவு தங்கிவிட்டு திங்கள் காலை கிளம்பி லாஸ் ஏஞ்சலஸ் நகரத்திற்குச் சென்று, தனது ஸ்பேஸ் எக்ஸ் அலுவலகத்தில் ஆஜராகிவிடுவார்.

இன்றைய நிலவரப்படி எலான் மஸ்க்கின் குழந்தைகளின் எண்ணிக்கை ஒன்பது. இது இப்போதைய தகவல். கடந்த வருடம் அவருடைய நியூரா லிங்க் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணுடன் ஏற்பட்ட உறவால் எலான் மஸ்கிற்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தைகளின் பெயரில் மாற்றம் செய்வதற்காக சமீபத்தில் அவர் நீதிமன்றத்தை நாடியபோதுதான் விஷயம் வெளியே கசிந்திருக்கிறது.

இதையடுத்து அவர் ட்விட்டரில் பதிவிட்ட பதிவுதான் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. அந்தப் பதிவு இதுதான். ’இந்த உலகில் பிறப்பு விகிதம் அதிவேகமாக வீழ்ந்து வருகிறது. இதன்மூலம் மிகப்பெரிய ஆபத்தைச் சமூகம் சந்திக்க இருக்கிறது. குறையும் மக்கள் தொகையைச் சரிசெய்வதற்கு நான் என்னால் முடிந்ததைச் செய்கிறேன்.’

எலான் மஸ்க் கல்லூரியில் இணைந்தது பற்றிப் பார்த்துக்கொண்டிருந்த நாம் இப்போது ஏன் அவரது தனிப்பட்ட, அந்தரங்க, காதல் வாழ்க்கைக்குள் சென்றிருக்கிறோம்? அதற்குக் காரணம் இருக்கிறது.

எலான் மஸ்க் கல்லூரியில் இணைவதற்காக கனடாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் விண்ணப்பித்திருந்தார் என்று பார்த்தோம் அல்லவா? அவர் திறமைக்கு எந்தக் கல்லூரியாவது இடம் தரமுடியாது எனக் கூறுமா? ஆனால் அவர் இரண்டு பல்கலைக்கழகங்களுக்குத்தான் முன்னுரிமை வழங்கினார்.

ஒன்று வாட்டர்லூ பல்கலைக்கழகம். மற்றொன்று கிங்ஸ்டனில் அமைந்துள்ள குயின் பல்கலைக்கழகம். இவற்றைத் தேர்ந்தெடுக்கக் காரணம் இந்த இரண்டும் அமெரிக்க-கனடா எல்லையையொட்டிய பகுதிகளில் அமைந்திருந்ததுதான். இரண்டு பல்கலைக்கழகங்களில் இருந்தும் அவருக்கு அனுமதிக் கடிதம் கிடைத்தது. இருந்தாலும் அவர் தேர்வு செய்தது குயின் பல்கலைக்கழகத்தைத்தான். அதற்குக் காரணம் பெண்கள்.

இதை அவரே ஒருமுறை பேட்டியில் கூறியிருக்கிறார். எலான் மஸ்கிற்கு அறிவியல் மீதுதான் ஆர்வம் அதிகம் இருந்தது. அதனால் பொறியியல் படிப்புதான் அவரது முதல் தேர்வாக இருந்தது. அவர் பார்த்து வைத்திருந்த பல்கலைக்கழகங்களில், சிறந்த பொறியியல் படிப்பு வாட்டர்லூ பல்கலைக் கழகத்தில்தான் இருந்தது. குயின் பல்கலைக்கழகமோ பொருளாதாரப் படிப்புக்குப் பெயர் போனது. அமெரிக்க எல்லையின் பக்கத்தில் இருக்கிறதே என்பதற்காகத்தான் அவர் குயின் பல்கலைக்கழகத்தையும் மனதில் வைத்திருந்தார்.

எலான் மஸ்க் பொறியியல் படிப்பு பற்றி விசாரிப்பதற்காக வாட்டர்லூ பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். அங்கே அவர் சந்தித்த மாணவர்களில் பெரும்பாலானோர் ஆண்களாகவே இருந்தனர். சரி, குயின் பல்கலைக்கழகத்திற்கும் ஒருமுறை சென்றுவரலாம் என்று நினைத்துதான் அங்கே அவர் சென்றார். அதன் பெயரைப்போலவே அங்கு அழகிய பெண்கள் நிரம்பி இருந்தனராம். வறண்ட பாலைவனத்தில் பொறியியல் படிப்பதற்குப் பதில், பூங்காவனத்தில் பொருளாதாரம் படிக்கிறேன் என குயின் பல்கலைக்கழகத்தில் இணைந்துவிட்டார்.

பல்கலைக்கழக வாழ்க்கை புதுவித அனுபவத்தை மஸ்கிற்குத் தந்தது. முதலில் பல்வேறு தரப்பட்ட கலாசாரப் பின்னணி கொண்ட மாணவர்களுடன் பழகுவதற்கான வாய்ப்பை அவருக்கு அளித்தது. இரண்டாவது, தனது சகோதரியைத் தவிர வேறு பெண்களுடன் பெரிதும் பேசியிராத மஸ்கிற்கு பெண்களுடன் பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது. குறிப்பாக அங்கிருந்த ஒரு மாணவி மஸ்க்கின் மனதில் குடிக்கொண்டு, அவரை இரவு பகலாகத் தூங்க விடாமல் காதலில் தவிக்கச் செய்தார்.

ஜஸ்டீன் வில்சன். எலான் மஸ்க் பயிலும் குயின் பல்கலைக்கழகத்தில் இணைந்த முதலாமாண்டு மாணவி. ஜஸ்டீனின் பழுப்பு நிறக் கூந்தலும், உயர்ந்த உருவமும், அவரிடம் தெரிந்த கவர்ச்சியும் எலான் மஸ்கிற்குக் கண்டவுடனேயே காதலை ஏற்படுத்தியது. ஜஸ்டீனின் அழகால் அவர் ஈர்க்கப்பட்டார். மயக்கம் கொண்டவரைப் போலத் திரிந்தார். ஆனால் ஜஸ்டீனோ எலான் மஸ்க்கின் குணநலன்களுக்கு எதிர் துருவத்தைக் கொண்டவர்.

ஜஸ்டீனுக்கு மஸ்க் போன்ற சாதுவான பையன்களைப் பிடிக்காது. ஊதாரித்தனம் செய்யும் பையன்கள்தான் அவரது விருப்பம். குறிப்பாக வயதில் மூத்த ஆண்களையே ஜஸ்டீன் விரும்பினார். அவர் கல்லூரியில் இணைவதற்கு முன்பே வயதான ஆண் ஒருவரை விரும்பி, அவருடன் சில காலம் காதல் வாழ்க்கை வாழ்ந்துவிட்டு, பின் கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்தார். அதனால் அவருக்கு மீண்டும் காதலில் விருப்பமில்லை. குறிப்பாக எலான் மஸ்க் போன்ற ஒருவரைக் காதலிப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஆனாலும் மஸ்க், ஜஸ்டீனை தனது காதல் வலைக்குள் விழ வைத்தார்.

எலான் மஸ்க்கும் அதற்கு முன் காதலித்தது இல்லை. ஆனால் ஜஸ்டீன் மீது அவருக்குத் தீராத காதல் உண்டானது. நாளுக்கு நாள் அது பெரும் தவிப்பாக மாறியது. எப்படியாவது ஜஸ்டீனைக் கவர்ந்துவிடவேண்டும் என நினைத்தார். அதற்கான வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார்.

அவருடைய ஆராய்ச்சி ஞானம் காதலிலும் வேலை செய்யத் தொடங்கியது. எடுத்தவுடனேயே ஜஸ்டீனிடம் சென்று தன் காதலைச் சொல்லிவிடவில்லை மஸ்க். வழக்கமாக ஒரு வியாபாரி சந்தையில் இறங்குவதற்கு முன் என்ன செய்வாரோ அதையேதான் அவரும் செய்தார். ஒரு வியாபாரி தன்னிடம் இருக்கும் பொருள்களை விற்பதற்கு முன் தனது வாடிக்கையாளரைப் பற்றி தெரிந்துக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடுவான் இல்லையா? அதேபோல மஸ்க்கும் தன் காதலை ஜஸ்டீனிடம் வெளிப்படுத்துவதற்கு முன் அவரைப் பற்றி அறிந்துக்கொள்ளும் ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கினார்.

ஜஸ்டீனின் பின்னணி என்ன என்பதைத் தேடத் தொடங்கினார். ஜஸ்டீனின் குடும்பம் எப்படிப்பட்டது? மொத்தம் எத்தனை பேர் இருக்கிறார்கள்? ஜஸ்டீனுக்கு என்ன பிடிக்கும்? என்ன பிடிக்காது? அவர் வழக்கமாக எங்கே செல்வார்? என்ன சாப்பிடுவார்? அவர் இதற்குமுன் யாரையாவது காதலித்திருக்கிறாரா? ஜஸ்டீனுக்கு எந்தெந்தச் செயல்களில் எல்லாம் ஈடுபாடு அதிகம்? இப்படி அனைத்தையும் தெரிந்துகொண்டார்.

பல்கலைக்கழகத்திலேயே நிறைய இளைஞர்கள் ஜஸ்டீனின் பின்னால் சுற்றி, அவரைக் கவர முயற்சி செய்து தோல்வி அடைந்திருக்கின்றனர் என்பதையும் அறிந்துகொண்டார். ஆனாலும் அவர் உறுதியை விடவில்லை. இறுதியில் தனது ஆய்வை முடித்துவிட்டு, புதிய செயல்திட்டம் ஒன்றை உருவாக்கி அதைச் செயல்படுத்தத் தொடங்கினார்.

ஜஸ்டீனுக்கு பார்ட்டிக்குச் செல்வது என்றால் விருப்பம், வார இறுதியில் தவறாமல் ஏதாவது ஒரு பார்ட்டிக்குச் சென்றுவிடுவார் என மஸ்க் தெரிந்து வைத்திருந்தார். இதை வைத்து தன்னை முதலில் அறிமுகம் செய்துகொள்ளலாம் என முடிவு செய்தார். அதற்காக அவர் பார்ட்டிக்கெல்லாம் செல்லவில்லை. ஜஸ்டீன் தங்கியிருக்கும் அறைக்கே நேராகச் சென்றுவிட்டார். அந்த அறையின் பக்கத்திலேயே உலாவிக்கொண்டிருந்தார். ஜஸ்டீன் அறையில் இருந்து வெளியே வரும்போது, எதேச்சையாகச் செல்வதுபோல அவர் மீது நேராகச் சென்று மோதினார். தடுமாறிய ஜஸ்டீனை தன் கரங்களால் பிடித்தார். பிறகு அவரது முகத்தைப் பார்த்து, ‘ஹாய் ஜஸ்டீன்! என்னை நினைவு இருக்கிறதா? நாம் ஒரு பார்ட்டியில் சந்தித்திருக்கிறோமே’ எனப் பேசத் தொடங்கினார்.

ஜஸ்டினுக்கு மஸ்க் யாரென்றே தெரியவில்லை. ஆனால் அடிக்கடி பார்ட்டிக்குச் செல்வதால் உண்மையிலேயே மஸ்கைச் சந்தித்திருப்போமோ என்ற சந்தேகத்தில் பேசத்தொடங்கினார். இதை மஸ்க் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். இருவரும் பார்ட்டியில் பேசியதாக சிலவற்றை அடித்துவிட்டார். அவர் ஜஸ்டீன் குறித்து செய்த ஆய்வு இதற்கு உதவியாக இருந்தது.

தன்னைப்பற்றி இத்தனை தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறான் என்றால் உண்மையிலேயே சந்தித்துப் பேசி இருக்கிறோம்போல என எண்ணி ஜஸ்டீனும் மஸ்கை நம்பத் தொடங்கினார். முடிந்தது கதை. அடுத்த வாரமே மஸ்க், ஜஸ்டீனை டேட்டிங்கிற்கு அழைத்துச் செல்வதற்கான சம்மதத்தைப் பெற்றுவிட்டார். இந்தச் சம்பவங்கள் அனைத்தும் நடந்தது ஜஸ்டீன் பல்கலைக்கழகத்தில் இணைந்த ஒரே வாரத்தில்.

பல்கலைக்கழக காலக்கட்டத்தில் மஸ்க்-ஜஸ்டீனுக்கு இடையே இருந்த காதல் வாழ்க்கை சுவாரஸ்யமானது. ஒருமுறை மஸ்க்கும் ஜஸ்டீனும் வெளியே செல்வதற்குத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஜஸ்டீன் வரவில்லை. உடனே அவரைத் தேடிக்கொண்டு ஜஸ்டீனின் அறைக்குச் சென்ற மஸ்க், அங்கே கதவில் தனக்காக எழுதி ஒட்டப்பட்டிருந்த வார்த்தைகளைக் கண்டார்.

அதில், தான் நண்பர்களுடன் தேர்வுக்குப் படிக்கச் செல்வதால், வேறொரு நாள் வெளியே செல்லலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்த மஸ்கிற்கு ஏமாற்றம். ஆனாலும் அவர் விடவில்லை. ஜஸ்டீனின் தோழியைக் கண்டுபிடித்து, அவர் எங்கே வழக்கமாகப் படிப்பதற்குச் செல்வார் என்று தெரிந்துகொண்டார். பின் அந்த இடத்தில் ஜஸ்டீனுக்குப் பிடித்த இரண்டு சாக்லேட் சிப் ஐஸ்கிரீமுடன் காட்சி தந்தார். இதைப் பார்த்த ஜஸ்டீன் அசந்தே போய்விட்டார். உண்மையில் ஜஸ்டீனுக்கு என்ன ஐஸ்கிரீம் பிடிக்கும் என்பதைக்கூட சற்றுமுன் அவருடைய தோழியிடம் பேசித்தான் மஸ்க் தெரிந்துகொண்டிருந்தார்.

அதேபோல ஜஸ்டீனுக்கு இலக்கியப் புத்தகங்கள்மீதும் விருப்பம் என்று மஸ்க்கிற்குத் தெரியவந்தது. குறிப்பாகக் காதல் இலக்கியங்கள் என்றால் உயிரையே விடுவார் எனத் தெரிந்துகொண்டார். அந்தமுறை ஜஸ்டீனை சந்திக்கச் சென்ற மஸ்க், கையில் ரோஜாப் பூங்கொத்துடன், கலீல் கிப்ரான் எழுதிய ‘தீர்க்கதரிசி’ என்ற நூலையும் வாங்கிச் சென்றிருந்தார். அதில் தன்னுடைய சில காதல் வார்த்தைகளையும் சேர்த்து கிறுக்கிக் கொடுத்தார். அந்த நொடிதான். ஜஸ்டீன் எலான் மஸ்க் மீது காதலில் விழுந்தார். இதுகுறித்து ஜஸ்டீன் கூறுவது ஒற்றை வார்த்தையைத்தான், ‘அவர் (எலான்) தன் காதலால் உங்களை நிலைதடுமாற வைத்துவிடுவார்!’

பொதுவாக மேலை நாடுகளில் இருக்கும் பெண்கள், தங்களுக்குப் பள்ளி, கல்லூரி நாட்களில் ஏற்படும் காதலைத் திருமணம்வரை எடுத்துச் செல்வதற்கெல்லாம் திட்டமிடமாட்டார்கள். ஆனால் ஜஸ்டீனுக்கு மஸ்க்கின்மீது ஏற்பட்ட காதல், திருமணத்தில் சென்றுதான் முடிந்தது. ஆம், கல்லூரியில் சந்தித்த ஜஸ்டீன்தான் எலான் மஸ்க்கின் முதல் மனைவி. மஸ்க், கல்லூரி நாட்களில் அமெரிக்கா சென்றவுடன் இருவரும் சந்தித்துக்கொள்ளாத நாட்களில்கூட தொலைதூரக் காதலாக அந்த அன்பு தொடர்ந்தது.

மஸ்க்கின் வாழ்க்கையில் பெரும்பாலான பகுதி ஜஸ்டீனுடையது. மஸ்க்கின் வாழ்க்கையில் பல இக்கட்டான சூழ்நிலைகளிலும் உடன் இருந்தவர் ஜன்ஸ்டீன்தான். அவர் உச்சத்தில் இருந்தபோதும், தவறி விழுந்தபோதும் தன் அன்புக் கரங்களால் ஆரத்தழுவியவர். எலான் மஸ்க் என்ற இளைஞன் தொழில் வாழ்க்கையில் பலமுறை ஏமாற்றப்பட்டு, அவநம்பிக்கையின் விளிம்பிற்குச் சென்றபோது நல்ல துணையாக இருந்து அவருக்கு நம்பிக்கையூட்டியவர் ஜஸ்டீன்.

இன்று நாம் காணும் எலான் மஸ்க் என்ற ஆளுமையின் உருவாக்கத்தில் பெரும்பங்கு ஜஸ்டீனுக்கும் உண்டு. ஜஸ்டீன், மஸ்க்குடன் சேர்ந்து ஆறு குழந்தைகளைப் பெற்றுக்கொண்டார். இத்தகைய காதல் மனைவியை மஸ்க் ஏன் பிரிந்தார்? இருவருக்கும் என்ன பிரச்னை? அதைத் தெரிந்துகொள்வதற்கு முன் நாம் மீண்டும் மஸ்க்கின் பல்கலைக்கழக நாட்களுக்குச் சென்றுவிட்டு வந்துவிடுவோம்.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *