மஸ்க் அமெரிக்கா சென்ற நாட்களில் அவருடைய காதலி ஜஸ்டீன், கனடாவில்தான் இருந்தார். வாரம் ஒருமுறை, மாதம் ஒருமுறை என்று மஸ்க் கனடாவிற்கு வருவார். அப்போது இருவரும் ஒன்றாக நேரம் செலவிடுவர். பிறகு ஓரிரு நாட்களில் மீண்டும் அமெரிக்காவிற்குப் பறந்துவிடுவார். தொலைதூரத்தில் பிரிந்து இருந்தாலும், அவர்கள் காதல் தொடர்ந்து வளர்ந்துகொண்டுதான் இருந்தது.
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளைப் படிப்பதற்காக மஸ்க் தேர்வு செய்தார். ஒன்று அவருக்குப் பிடித்த இயற்பியல் பாடம், மற்றொன்று பொருளாதாரப் பாடம். இந்த இரண்டு பாடங்களை அவர் தேர்வு செய்ததற்கு மிக முக்கியக் காரணம் ஒன்று இருந்தது. அது எலான் மஸ்க்கின் ஆழ்ந்த திட்டமிடுதலைக் காட்டுகிறது.
மஸ்குக்கு குயின் பல்கலைக்கழகத்தைவிட பென்சில்வேனியா பல்கலைக்கழகம் இன்னும் வசதியாக இருந்தது. அங்குள்ள இயற்பியல் மாணவர்களுடன் அவர் சுற்றத் தொடங்கினார். அவரைப் போலவே சிந்திப்பவர்களும் அங்கு இருந்ததால் மஸ்க்கிற்குப் புதிய நண்பர்கள் கிடைக்கத் தொடங்கினர். தன்னைப் போன்று சிந்திப்பவர்களைச் சந்தித்து நிறைய உரையாடினார். அவர்களுடன் தனது பார்வையைப் பகிர்ந்துகொண்டார். புதிய பார்வையைப் பெற்றார்.
நீண்டகாலமாக சூரிய ஆற்றல்மீது மஸ்க்கிற்கு இருந்த விருப்பம் பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்தில் விரிவடைந்தது. 1994ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தன்னுடைய பாடம் சம்பந்தமாக ஓர் ஆய்வுக்கட்டுரையை அவர் தயார் செய்தார். அதன் தலைப்பு ‘சூரிய ஆற்றலின் முக்கியத்துவம்’ என இருந்தது. அந்தத் திட்டத்தை வழக்கம்போல அவருக்கே உரிய நகைச்சுவையுடன் தொடங்கி இருந்தார்.
பிரபல காமிக்ஸ் புத்தகம் ஒன்றில் வரும் ‘சூரியன் நாளை காலை வரும்போது…’ என்ற வாசகத்துடன் ஆரம்பித்த அந்த ஆய்வுக்கட்டுரை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்துப் பேசியது. பெரிய அளவிலான சூரிய ஆற்றலை உருவாக்கும் கட்டுமானங்களின் தேவை மற்றும் அதற்குத் தேவையான மூலப்பொருள்களை மேம்படுத்துவது மூலம் எப்படிச் சூரிய ஆற்றல் தொழில்நுட்பத்தை நிறுவ முடியும் என அந்தத் திட்டத்தில் விவரிக்கப்பட்டிருந்தது.
மஸ்க் மிக ஆழமாகச் சென்று சூரிய மின்கலம் எப்படி வேலை செய்கிறது எனத் தொடங்கி, அவற்றின் செயல்திறனை எப்படிப் பல்வேறு கலவைகள் மூலம் அதிகரிக்கலாம் என்றும் பேசி இருந்தார். அந்தத் திட்டம் நிறைவேறினால் எதிர்காலத்தில் மின்நிலையங்கள் எப்படி இருக்கும் என்று கற்பனையாக ஒரு வரைபடத்தையும் வரைந்திருந்தார். அந்த வரைப்படத்தில் இரண்டு பெரிய சூரிய மின்கலங்கள், சூரியனில் இருந்து ஆற்றலைப் பெற்று எப்படி பூமிக்கு சக்தியளிக்கிறது எனத் தெளிவாக அலகுகளுடன் விவரிக்கப்பட்டிருந்தது. இந்த ஆய்வுத் திட்டத்திற்கு மஸ்க்கிற்கு 98 மதிப்பெண்கள் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர் மேலும் இரண்டு கட்டுரைகளையும் வெளியிட்டார்.
இரண்டாவதாக மஸ்க் எழுதிய ஆய்வுக்கட்டுரை மின்னணுத் தொழில்நுட்பம் பற்றியது. புத்தகங்கள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகளை மின்னணுத் தொழில்நுட்ப உதவியுடன் ஸ்கேன் செய்து, அவற்றுக்கு டிஜிட்டல் குறியீடு ஒன்றைக் கொடுத்து, அனைத்துத் தகவல்களையும் ஒரே தரவுத்தளமாக (Database) சேமித்து வைப்பது எப்படி என அதில் விவரித்திருந்தார். மஸ்க்கின் அன்றைய கனவுதான் இன்று கூகுள் புக்ஸ் மற்றும் கூகுள் ஸ்காலராக (Google Books, Google Scholar) பரிணாமம் அடைந்துள்ளது.
மூன்றாவதாக அவர் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைதான் முக்கியமானது. அது அல்ட்ரா கெபாசிட்டர் (Ultra Capacitor) என்ற நவீன மின் தேக்கிப் பற்றியது. நாற்பது பக்கங்களுக்கு எழுதப்பட்ட அந்தக் கட்டுரையில் மஸ்க், புதுவடிவ ஆற்றல் சேமிப்பு பற்றி விவரித்திருந்தார். பேட்டரி மற்றும் எரிபொருள் மின்கலங்களின் வளர்ச்சிக்குப் பிறகு கணிசமான அளவு மின் ஆற்றலைச் சேமிப்பதற்கான புதிய வழியை அல்ட்ரா கெபாசிட்டர்கள் எப்படி நமக்குக் காட்டுகின்றன, எதிர்காலத்தில் கார்கள், விமானங்கள் மற்றும் ராக்கெட்டுகளுக்குத் தேவையான ஆற்றலைச் சேமிக்கும் கருவியாக அல்ட்ரா கெபாசிட்டர்கள் எவ்வாறு செயல்படப்போகின்றன என்பதைப்பற்றி அதில் விளக்கி இருந்தார்.
மேலும் அல்ட்ரா கெபாசிட்டர்கள் மின்தேக்கிகளின் அடிப்படைப் பண்புகளையும் கொண்டிருப்பதால் அவற்றால் ஒரு பேட்டரியைவிட நூறு மடங்கு வேகமாக ஆற்றலைத் தர முடியும் என்றும், அவற்றை பேட்டரியைவிடக் குறைந்த நேரத்திலேயே ரீசார்ஜ் செய்துவிட முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தற்போதைய ஆற்றல் சேமிப்பு முறைகளுடன் ஒப்பிடும்போது அல்ட்ரா கெபாசிட்டர்களுக்கு ஆகும் செலவு என்ன என்பது குறித்தும் அந்தக் கட்டுரையில் விவரிக்கப்பட்டிருந்தது. அந்த ஆய்வைப் படித்துப் பார்த்த அவரது பேராசிரியர் மஸ்க்கிற்கு 97 மதிப்பெண்கள் வழங்கினார். மேலும் சிறந்த பொருளாதார கோணத்தில் எழுதப்பட்ட ஆழமான ஆய்வு எனவும் குறிப்பிட்டார்.
மஸ்க்கின் பேராசிரியர் குறிப்பிட்டதை நாம் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். அதுவரை வெறும் அறிவியல் ஆய்வாளராகச் சிந்தித்து வந்த மஸ்க் முதன்முதலில் வியாபாரியாகவும் சிந்திக்கத் தொடங்கிய மாற்றத்தைத்தான் அந்த ஆய்வுக் கட்டுரை குறிக்கிறது. அறிவியல் மீது ஆர்வம் கொண்டிருந்த மஸ்க், வணிகப் பார்வையில் அறிவியலைப் பார்க்கத் தொடங்கிய தருணமும் அதுதான். மிகக் கடினமான இயற்பியல் கருத்துக்களை வணிக திட்டமாக மாற்றும் நிபுணராக அவர் உருவாகி வந்தார். நிகழ்ந்து வரும் அறிவியல் மாற்றங்களை லாப நோக்கில் உணரும் சிந்தனை அவருக்கு ஏற்படத் தொடங்கி இருந்தது.
எலான் மஸ்க் ஏன் அறிவியல், பொருளாதாரம் ஆகிய இரண்டு பாடங்களையும் தேர்வு செய்தார் என்பதற்கான பதிலும் இதுதான். பொதுவாக அறிவியல் படிக்கும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான ஏதாவதோர் அறிவியல் துறையைத் தேர்ந்தெடுத்து, அது சார்ந்த ஒரு நிறுவனத்தில் பணிக்கு அமர்ந்துவிடுவார்கள். மஸ்க்கைப் போன்ற நபர்கள் பொறியியலாளராகவோ, விஞ்ஞானியாகவோகூட ஆகியிருக்கலாம்.
ஆனால் மஸ்க் தனது அறிவியல் பார்வையைப் பொருளாதாரத்துடன் இணைத்து லாபம் கொழிக்கும் வியாபாரமாக மாற்ற விரும்பினார். அதைத்தான் அவர் இன்றும் செய்து வருகிறார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் நடவடிக்கை அனைத்திற்குப் பின்னாலும் அறிவியலும் இருக்கிறது, லாபமும் இருக்கிறது. அதைத்தான் மஸ்க் தன்னுடைய அடையாளமாகவும் வெளிப்படுத்தி வருகிறார்.
இப்படியாக மஸ்க்கின் கல்லூரி நாட்கள் சென்றுகொண்டிருந்தபோது, அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி அவருக்குள் எழத்தொடங்கியது. தனது எதிர்காலம் குறித்துத் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினார். அவருக்குச் சிறு வயதில் இருந்தே வீடியோ கேம் மீது ஆர்வம் இருந்தது. ஒரு கேமிங் நிறுவனத்தில் இண்டர்ன்ஷிப் பயிற்சியும் மேற்கொண்டிருந்தார். சிறுவயதில் மிகச் சிறந்த வீடியோ கேமை உருவாக்குவதைத்தான் தனது வாழ்க்கை லட்சியமாகக் கொண்டிருந்தார். ஆனால் கல்லூரி நாட்களில் அவரது முடிவு மாறத்தொடங்கியது.
இது குறித்து மஸ்க் கூறும்போது, ‘எனக்குக் கம்ப்யூட்டர் கேம்கள் என்றால் உண்மையிலேயே பிடிக்கும். ஆனால் நான் மிகச் சிறந்த ஒரு கம்ப்யூட்டர் கேமை உருவாக்கினால்கூட அது இந்த உலகத்தின் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இந்த உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றுதான் என்னுடைய தொழிலாக இருக்க வேண்டும் என்பதை முடிவுசெய்தேன்’ எனக் கூறியுள்ளார்.
வீடியோ கேம் துறை பின் தொடர்ந்து செல்லும் அளவிற்கு உயர்ந்தது இல்லை என அவர் கருதத் தொடங்கியவுடனேயே அதன் மீதான காதலை விட்டொழித்துவிட்டார்.
வீடியோ கேம் இல்லையென்றால் வேறு எந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பது? மஸ்க்கைப் பொறுத்தவரை ஒரு லட்சியம் இருக்கிறது என்றால் அதைப் போகிற போக்கில் தேர்ந்தெடுப்பதற்கும், தீவிரமான நோக்கத்துடன் தேர்ந்தெடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. சிறுவயதிலேயே உலகைக் காப்பாற்றும் கதாநாயகனைப்போலகச் செயல்பட வேண்டும் என்ற அவரது ஆழ்மனது நோக்கம், உலகை மாற்றும் மாபெரும் லட்சியங்களை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை அவரது மனதில் விதைத்தது.
குயின் மற்றும் பெனிசில்வேனியா பல்கலைக்கழகங்களில் இருந்தபோது மூன்று விஷயங்கள்தான் மக்களின் வாழ்க்கையை எதிர்காலத்தில் மாற்றப்போகிறது என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார். ஒன்று இணையம், இரண்டாவது புதுப்பிக்கப்படக்கூடிய ஆற்றல், மூன்றாவது விண்வெளி.
இந்த மூன்று துறைகளிலும் வரும் காலங்களில் குறிப்பிடத்தக்க மாற்றம் வரும் என்றும், சந்தையிலும் இந்தத் துறைகளுக்கான வாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் கருதினார். இந்தத் துறையில் தனது பங்களிப்பைச் செலுத்துவதன் மூலம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்பினார். சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு வியாபாரத்தை மாற்றிக்கொண்டிருக்காமல், துல்லியமான இலக்கை முடிவு செய்து, அதை நோக்கித் தனது வாழ்வைப் படிப்படியாக கட்டமைத்து உயரத்திற்குச் செல்வதுதான் மஸ்க்கின் விருப்பமாக இருந்தது.
கல்லூரி முடிந்தபின், தேர்வு செய்திருந்த மூன்றில் எதை நோக்கிச் செல்வது என்ற கேள்வி மஸ்க்கிடம் எழுந்தது. சூரிய ஆற்றல் குறித்தோ, விண்வெளி குறித்தோ அப்போதைக்கு பெரிய திட்டமிடல் எதுவும் அவரிடம் இல்லை. மேலும் விண்வெளித் துறைகளை அரசாங்கமே கையில் வைத்திருந்தது. சூரிய ஆற்றல் குறித்து சிந்திப்பதற்கான நிறுவனங்களும் அப்போது பெரிதாக இல்லை. அன்றைய சூழலில் அவர் எளிதாக அணுகக்கூடிய துறையாக இருந்தது இணையம்தான்.
அப்போதுதான் அமெரிக்காவின் தொழில்நுட்ப நகரம் என்று அழைக்கப்படும் சிலிகான் பள்ளத்தாக்கில் இணையம் தொடர்பான நிறுவனங்கள் வளரத் தொடங்கியிருந்தன. தொழில் தொடங்க விருப்பமுள்ள ஏராளமான இளைஞர்கள் சிலிகான் பள்ளத்தாக்கில் ஒரு முதலீட்டாளரைக் கண்டுபிடித்து ஒரு மென்பொருளையோ, செயலியையோ தயாரித்து செல்வந்தராகிவிட வேண்டும் என்ற ஆசையில் அலைந்துகொண்டிருந்தனர்.
ஆனால் மஸ்க்கிற்கு அப்போதைக்கு தொழில் தொடங்கும் ஆர்வமெல்லாம் இருக்கவில்லை, சிலிகான் பள்ளத்தாக்கில் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட வேண்டும் என்று முடிவு செய்துதான் களத்திற்கு வந்தார். எதிர்காலத்தில் சிலிகான் பள்ளத்தாக்கு முழுவதுமே அவரைக் கடவுள்போல வழிபடப்போகிறது என்று அவருக்கு அன்று தெரியாது!
(தொடரும்)