Skip to content
Home » எலான் மஸ்க் #9 – பேராசைகளின் நகரம்

எலான் மஸ்க் #9 – பேராசைகளின் நகரம்

சிலிக்கான் பள்ளத்தாக்கில் முதல் ஐபிஎம் ஆலை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள சான் பிரான்சிஸ்கோ நகரத்தைப் ‘பேராசைகளின் நகரம்’ என்றே சொல்லலாம். அப்பகுதிக்கு வரும் மனிதர்கள் அனைவரும் ஒரே இரவில் பணக்காரனாகிவிட வேண்டும் என்ற கனவுடன்தான் வருவார்கள். அதற்கான சூழலையும் அந்த நகரம் அமைத்துத் தரும்.

1846ஆம் வருடம் முதன் முதலில் கலிபோர்னியா தனி மாகாணமாக அறிவிக்கப்பட்டபோது, சான் பிரான்சிஸ்கோ ஓர் இருண்ட துறைமுக நகரம். அங்கு ஆயிரத்திற்கும் குறைவான மக்களே வசித்து வந்தனர். கப்பலில் பயணிக்கும் மாலுமிகள், மீனவர்கள், திமிங்கல வேட்டைக்காரர்கள் என அவ்வப்போது வந்து செல்லும் தாற்காலிக மனிதர்களையே அந்த ஊர் கொண்டிருந்தது.

ஜனவரி 1848ஆம் ஆண்டு ஜேம்ஸ் மார்ஷல் என்பவர் சியரா நெவேடா மலைகளின் அடிவாரத்தில் முதன்முதலில் தங்கம் இருப்பதைக் கண்டறிந்தார். அவ்வளவுதான்; அங்கு தங்கம் கண்டறியப்பட்ட செய்தி ஒளியை விட வேகமாகப் பரவ, தங்க வேட்டைக்காரர்கள் தங்களது அதிர்ஷ்டத்தைத் தேடி உலகம் முழுவதிலும் இருந்தும் கலிபோர்னியாவுக்குப் படையெடுத்தனர். கிட்டத்தட்ட ஒரே இரவில் அந்த நகரத்தின் முகமே மாறத்தொடங்கியது.

தங்கத்தைத் தேடி வந்த மக்கள் கொட்டகை கட்டிக்கொண்டு குடியேறினர். தடபுடலென கடைகளும், சலூன்களும், மதுபான விடுதிகளும் மழைக்குப்பின் தோன்றும் காளான்களைப் போல முளைத்தன. சூதாட்ட விடுதிகளின் கொண்டாட்டங்களும், இசைக் கச்சேரிகளின் பேரிரைச்சல்களும் நகரம் முழுவதும் பரவின. ஒரே வருடத்தில் அந்த நகரத்தின் மக்கள் தொகை 25,000 ஆக உயர்ந்தது. அதிவேகத்தில் உயரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த முடியாமல் நகர நிர்வாகம் திணறியது. அடுத்த ஒரு சில வருடங்களில் நகரத்தின் மக்கள் தொகை மூன்று லட்சத்தை எட்டி, எல்லைகள் விரிவடையத் தொடங்கின.

இவ்வாறு மனிதர்களின் பேராசையில் உருவாகிய நகரத்தின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள இடம்தான் சான்டா கிளாரா பள்ளத்தாக்கு. இருபது ஆண்டுகளுக்கு முன்புகூட நீங்கள் அமெரிக்காவுக்குச் சென்று கிளாரா பள்ளத்தாக்குக்குச் செல்லவேண்டும் என வழிகேட்டால் உள்ளூர்க்காரர்கள் திரும்பிப் போய்விடு என்றுதான் எச்சரிப்பார்கள். காரணம் மனிதர்கள் வசிக்க முடியாத அளவுக்கு அசுத்தமான பகுதி என்றால் அது சான்டா கிளாரா பள்ளத்தாக்குதான்.

அந்தப் பகுதியில் எங்கு பார்த்தாலும் உடைந்த வீடுகளும், குப்பைக் கூளங்களுமாகத்தான் இருக்கும். வரிசையாகக் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் திடீரென்று ஒருவர் கால் சட்டையைக் கழற்றி மலம் கழிப்பதையும், மதுபான விடுதிகளில் குடித்துவிட்டு போதைத் தலைக்கேறி கிடக்கும் நபர்களிடம் பேரம் பேசிக்கொண்டிருக்கும் விலை மாதர்களையும் நீங்கள் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம்.

அத்தகைய ஓர் இடத்தில்தான் புதிய கலாசார மாற்றத்தை ‘ஐபிஎம்’ என்ற நிறுவனம் விதைத்தது. முதன்முதலில் கால்குலேட்டர்களைத் தயாரிப்பதையே தனது தொழிலாக வைத்திருந்த ஐபிஎம் நிறுவனத்தின் வாரிசான ஷெர்மென் ஃபேர்சைல்ட், விமானங்களில் பயன்படுத்த கேமரா தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கினார். 1950 வரை மின்னணுச் சாதனங்களின் அடிப்படை வஸ்துவான செமிகண்டக்டர்கள் ஜெர்மனியத்தை வைத்தே தயாரிக்கப்பட்டு வந்தன.

ஆனால் ஷெர்மனின் கேமரா தயாரிக்கும் நிறுவனம், தனது ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு ஜெர்மானியத்தை விடப் பல மடங்குத் திறன் வாய்ந்த சிலிகான் தனிமத்தைக் கொண்டு செமி கண்டெக்டர்களைத் தயாரிக்கத் தொடங்கியது. இது மின்னணு உலகில் பெரும் புரட்சியாக வெடித்தது. அவர்களைத் தொடர்ந்து எல்லா நிறுவனங்களும் சிலிகான் சிப்பிற்கு மாறினர்.

சிலிகான் செமி கண்டெக்டர்கள் ஆய்வின்போது ஷெர்மனின் கேமரா தயாரிக்கும் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர்களாகப் பணியாற்றிய கார்டன் மூர் மற்றும் ராபர்ட் நாய்ஸ் என்ற இருவரும் அந்த நிறுவனத்தில் இருந்து வெளிவந்து சொந்தமாக நிறுவனம் தொடங்கி சிலிகான் சில்களை தயாரிக்கத் தொடங்கினர். அந்த நிறுவனம்தான் ‘இன்டெல்’. இப்படியாக மின்னணுத் தொழில்நுட்பங்களைச் சார்ந்து இயங்கும் நிறுவனங்கள் ஒவ்வொன்றாக அங்கு தோன்றவே அந்த நிலப்பரப்புக்கு ‘சிலிகான் பள்ளத்தாக்கு’ எனப் பெயர் வந்தது.

கணினிகள் தயாரிப்பில் பெரிதும் ஈடுபாடு காட்டிய சிலிகான் பள்ளத்தாக்கு, 1990களில் இணையம் சார்ந்த தொழில்நுட்பத்திற்கு மாறத் தொடங்கியது. 1960களில் ராணுவத் தகவல் தொலைத் தொடர்பிற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த இணையம், டிம் பெர்னர்ஸ் லீ என்பவர்மூலம் பொதுவெளிக்கு வந்தது. டிம் பெர்னர்ஸ் லீ இணையத்தையும், ஹைப்பர்டெக்ஸ்ட் என்ற தொழில்நுட்பத்தையும் இணைத்து இன்றைய உலகளாவிய வலைத்தளத்தை (World Wide Web) கொண்டு வந்தார். இந்தத் தொழில்நுட்பத்தைச் சுவீகரித்துக்கொண்ட சிலிகான் பள்ளத்தாக்கு மீண்டும் ஒரு மாற்றத்திற்கு உள்ளாகத் தொடங்கியது.

நாம் ஏற்கெனவே சொன்னதுபோல் சான் பிரான்சிஸ்கோ பேராசைகளின் நகரம் இல்லையா? இணையத் தொழில்நுட்பத்தின் மூலம் திடீர் பணக்காரர்கள் சிலிகான் பள்ளத்தாக்கு முழுவதும் முளைக்கத் தொடங்கினர். யாகூவும், மைக்ரோசாஃப்டும் அந்த நகரத்தின் முடிசூடா அரசர்களாக இருந்தன. இதைப் பார்த்த அன்றைய இளைஞர்கள் தாங்களும் குறுகிய காலத்தில் பணக்காரனாக வேண்டும் என விரும்பி இணையத்தின் பக்கம் தங்கள் பார்வைகளைத் திருப்பினர். இணைய வியாபாரம் என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாகிப் போனது.

செல்வந்தர் ஆக நினைக்கும் ஒருவர் வங்கியில் கடன் வாங்கி, புதிய நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, மக்களுக்குப் பிடிக்கும் பொருளைத் தயாரித்து, விற்று லாபம் ஈட்டுவதற்கெல்லாம் தேவையில்லாமல் போனது. இணையத்தைப் பயன்படுத்தி மக்களுக்குச் சேவையை வழங்கும் வகையில் உங்களிடம் ஒரு ஐடியா இருந்தால் போதும். அதை உரக்கக் கூவி, ஏதோ ஒரு முதலீட்டாளருக்கு அந்த ஐடியா பிடித்துவிட்டால், நீங்கள் தொழில்முனைவோராகி கோடி கோடியாகச் சம்பாதித்துவிடலாம். அப்போதைய சூழலில் அனைவருக்கும் குறைந்த நேரத்தில் அதிகம் பணம் ஈட்டுவதற்கு வழியாக இணையம் இருந்தது.

சிலிகான் பள்ளத்தாக்கில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றுவதற்கும், முதலீட்டாளர்களைப் பிடிப்பதற்கும் இளைஞர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு குவிந்தனர். கிடைக்கும் இடத்தில் சிறிய அறை எடுத்துக்கொண்டு நான்கு, ஐந்து இளைஞர்கள் இரவு பகல் பாராமல் கோடிங் எழுதிக்கொண்டிருப்பர். சிலிகான் பள்ளத்தாக்கு கனவுகளையும், பேராசைகளையும் சுமந்துகொண்டு திரியும் கூட்டத்தின் கூடாரமாக இருந்தது.

இந்தக் காலக்கட்டத்தில்தான் எலான் மஸ்க்கும் சிலிகான் பள்ளத்தாக்கிற்குள் தன் வலது காலை எடுத்து வைக்கிறார். ஆனால் மற்ற இளைஞர்களுக்கும் எலான் மஸ்க்கிற்கும் இருந்தது ஒரே ஒரு வித்தியாசம்தான். மற்ற இளைஞர்களுக்கு பணம் சம்பாதிப்பது மட்டுமே நோக்கமாக இருந்தது. அவர்கள் மாறி வந்த ட்ரெண்டுகளுக்கு ஏற்றாற்போல் தங்கள் ஐடியாக்களையும் மாற்றிக்கொண்டிருந்தனர்.

உதாரணமாக இணைய பிரவுசர் தயாரிப்பு பெரிதாக முதலீட்டை ஈர்க்கும் சேவையாக இருந்ததால் அப்போதைய இளைஞர்கள் தாங்களும் ஒரு பிரவுசரை உருவாக்க வேண்டும் எனப் போட்டியில் ஈடுபட்டனர். ஆனால் எலான் மஸ்கோ நின்று நிதானமாக ஆடுவதற்காக உள்ளே வந்தார். இணையத்தின் முழு ஆற்றலையும் அறிந்துகொண்டு களத்திற்குள் வந்தார்.

கல்லூரி முடித்தவுடன் மஸ்க்கிற்கு உடனே வேலைக்குச் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல் படிக்கும் காலத்தில் அவருக்கு இணையத்தில் அவ்வளவாக ஆர்வம் இருக்கவில்லை. அறிவியலும் பொருளாதாரமும் மட்டுமே அவரது விருப்பமான பாடமாக இருந்தது. குறிப்பாக அல்ட்ரா கெபாசிட்டர்கள் சம்பந்தப்பட்ட ஆய்வுகளில் அவருக்கு ஆர்வம் அதிகம் இருந்தது.

அதனால் கல்லூரி முடித்தவுடன் அடுத்ததாக மூலப்பொருளியலில் (Material Science) முனைவர் பட்டம் பெற வேண்டும் என்ற எண்ணம்தான் மஸ்க்கின் மனதை ஆக்கிரமித்திருந்தது. அதற்கேற்றாற்போல் மேற்படிப்பில் சேர்வதற்காக அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலும் விண்ணப்பித்திருந்தார். அவருக்கு அங்கு இடமும் கிடைத்தது. ஆனால் வகுப்புக்குச் சென்ற அவர், இரண்டே நாட்களில் பல்கலைக்கழகத்தில் இருந்து நின்றுவிட்டார். காரணம் இணையம்.

மஸ்க், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பயிலும்போதே பல்வேறு நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் பயிற்சிக்குச் சென்றுகொண்டிருந்தார். விடுமுறை நாட்களில் காலையில் ஒரு நிறுவனம், மாலை ஒரு நிறுவனம் என்றெல்லாம் ஓய்வில்லாமல் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தார். அவர் மூலப்பொருளியல் படிப்பில் சேர்ந்து அல்ட்ரா கெபாசிட்டர் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று நினைத்ததெல்லாம் கூட பினாக்கிள் என்ற ஆய்வு நிறுவனத்தில் பயிற்சி எடுத்தபோதுதான். ஆனால் திடீரென்று அவருக்கு இணையத்தின் மீது கவனம் சென்றுவிட்டது. காரணம் ஒரு மோசமான விற்பனையாளர்.

மஸ்க் அப்போது ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் பயிற்சிக்குச் சென்றுகொண்டிருந்தார். அந்த நிறுவனத்திற்கு ‘எல்லோ பேஜஸ்’ என்ற நிறுவனத்தின் விற்பனையாளர் ஒருவர் வந்திருந்தார். எல்லோ பேஜஸ் என்றால் பல நிறுவனங்களின் விவரங்கள் அடங்கிய கையேடு புத்தகம். உங்களுக்கு ஒரு சேவையோ, பொருளோ வேண்டும் என்றால் அது தொடர்பான நிறுவனங்கள், கடைகள் என்னென்ன இருக்கிறது, அந்தக் கடைகளின் முகவரி என்ன, அதை எப்படித் தொடர்புகொள்வது போன்ற அனைத்து விவரங்களும் அடங்கியிருக்கும் புத்தகம் அது. எல்லோ பேஜஸ் அப்போது இணையத்திற்கு மாறிக்கொண்டிருந்தது.

எல்லோ பேஜஸ் நிறுவனம் சார்பாக வந்திருந்த விற்பனையாளர், அந்தப் புத்தகத்தில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் தங்கள் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி போன்ற விவரங்களை, இணையப் பட்டியலிலும் பதிவு செய்ய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். ஆனால் அந்த விற்பனையாளருக்கு இணையம் பற்றியோ, இணையத்தில் பதிவு செய்வதன் மூலம் ஒரு நிறுவனத்திற்கு என்ன பயன் என்பது பற்றியோ துளியும் விளக்கம் தரத் தெரியவில்லை. ஏதேதோ உளறிக் கொட்டிக்கொண்டிருந்தார். அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த மஸ்க்கிற்கு எல்லோ பேஜஸ் முன்னெடுத்திருக்கும் திட்டத்தின் எதிர்கால சாத்தியம் என்னவென்பது தெளிவாகப் புரிந்தது. இணையத் தொழில்நுட்பத்தின் அபரிமித வளர்ச்சி எதிர்காலத் தொழில்களை எப்படி மாற்றப்போகிறது என்பதை அவர் உணர்ந்தார்.

வரும் காலத்தில் இணையத்தை சரிவரப் பயன்படுத்திக்கொள்ளாத தொழில்கள் வளர்ச்சி என்பதையே காணப்போவதில்லை என்பது அவருக்கு புரிந்துவிட்டது. தனது முனைவர் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு இணையம் சார்ந்த தொழிலைத் தொடங்க முடிவு செய்தார். உடனே தனது சகோதரர் கிம்பலைத் தொடர்புகொண்டு அவரிடம் தனது திட்டத்தை விளக்கினார். கிம்பலும் சரி வா ஆரம்பிப்போம் எனக் களத்தில் குதித்தார். இப்படியாக மஸ்க்கின் முதல் நிறுவனமான ‘குளோபல் லிங்க் இன்ஃபர்மேஷன் நெட்வொர்க்’, பின்னாளில் ‘ஜிப்2’ என அழைக்கப்பட்ட நிறுவனம் 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ஜிப்2 குறித்துச் சிந்திப்பதற்கு முன் இணையத்தின் தேவையை உணர்ந்த மஸ்க் அப்போது பிரபலமாக இருந்த இணையச் சேவை நிறுவனமான நெட்ஸ்கேப்பில் (Netscape) பணிக்குச் சேர விரும்பி விண்ணப்பித்தார். ஆனால் அவர்கள் அதைக் கண்டுக்கொள்ளவே இல்லை. சரி இனி இது வேலைக்கு ஆகாது என்பதைப் புரிந்துகொண்ட மஸ்க், சுயமாக இணைய நிறுவனத்தைத் தொடங்க முடிவு செய்தார். இதுகுறித்துப் பின்னாளில் மஸ்க் கூறியபோது, ‘அப்போது என்னால் மற்ற நிறுவனங்களில் வேலை வாங்கி இருக்க முடியும். இணையம் சார்ந்த நிறுவனத்தில்தான் எனக்கு வேலை கிடைக்கவில்லை’ என்றார்.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *