ஜிப்2 வின் சுருக்கம் இதுதான். இணையம் வளர்ந்துகொண்டு இருக்கிறது. ஆனால் வெகு சில நிறுவனங்கள் மட்டுமே இணையத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளன. பெரும்பாலான குறு, சிறு நிறுவனங்களுக்கு இணையம் பற்றி போதுமான விழிப்புணர்வு இல்லை. இணையம் எப்படித் தங்கள் தொழிலுக்கு உதவும் என்பது குறித்துத் தெரியவில்லை. அப்படித் தெரிந்திருந்தாலும், எப்படித் தங்கள் நிறுவனத்திற்கு ஓர் இணையதளத்தைத் தொடங்குவது, இணையத்தில் எப்படிக் கால்தடம் பதிப்பது போன்ற விஷயங்களில் பரிச்சயம் இல்லை.
அவ்வாறு தடுமாறும் நிறுவனங்களுக்கு நாம் உதவி செய்தால் என்ன என்று மஸ்க் சிந்தித்தார். எதிர்காலத்தில் பெரிய வாய்ப்புகளை அள்ளித்தரும் இணையத்தில் ஊரில் உள்ள அனைத்துத் தொழில்களையும் நாம் ஏன் கால்பதிக்க வைக்கக்கூடாது? அதையே ஏன் ஒரு தொழிலாகச் செய்யக்கூடாது என யோசித்தார். இதற்காகத்தான் ஜிப்2வை நிறுவினார். அதற்காக எல்லோ பேஜஸ்ஸின் அதே செயல் திட்டத்தையே எடுத்து தனது ஸ்டைலில் வடிவமைக்கத் தொடங்கினார்.
ஜிப்2 இணையதளத்திற்குச் சென்றால் அதில் பதிவு செய்திருக்கும் நிறுவனங்கள், கடைகள், தொழில்கள் பற்றிய அனைத்துத் தகவல்களும் கிடைக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் அந்தத் தொழில் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் எப்படிச் செல்ல வேண்டும் என்ற ஜிபிஎஸ் வழிகாட்டியும் அதில் இருக்க வேண்டும். ஜிப்2வின் சிறப்பம்சமே இந்த ஜிபிஎஸ் வழிகாட்டிதான். அதற்குமுன் எந்தச் சேவையிலும் வழங்கப்படாத அம்சம் அது. ஒருவேளை எல்லோ பேஜஸ் இணையதளத்தைத் தொடங்கினாலும் மக்கள் ஜிப்2வை பயன்படுத்துவதற்கு இந்த ஜிபிஎஸ் வழிகாட்டிதான் காரணமாக இருக்க வேண்டும் என நினைத்தார். மஸ்க்கின் அந்த ஐடியாதான் இன்றைய ஜஸ்ட் டயல், யெல்ப், கூகுள் மேப் போன்றவற்றுக்கான தொடக்கம்.
இதற்கு மஸ்க் கூறும் எடுத்துக்காட்டு மிகச் சுலபமானது. தன் வாடிக்கையாளரின் வாழ்க்கைத் தரத்தை எப்படி எளிதாக்க வேண்டும் என விளக்கக்கூடிய வகையில் ஒரு தொழில் இருக்கவேண்டும். இன்றையச் சூழலில் கூகுள் மேப்பில் அடித்தளமே அதுதான். ஒருவர் பீட்சா சாப்பிட வேண்டும் என்று விரும்பினால், நல்ல பீட்சா எங்கு கிடைக்கும் என்று நாம் சொன்னால் மட்டும் பத்தாது. அதற்கு எப்படிச் செல்ல வேண்டும் என்ற வழியையும் நாம் காட்ட வேண்டும். ஒரு நிறுவனம் தன் வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் சேவையை விடக் கூடுதலாக ஒன்றைக் கொடுத்தால்தான் அவரது விசுவாசம் நமக்குக் கிடைக்கும் என மஸ்க் கூறுகிறார்.
இதை நடைமுறைப்படுத்துவதற்காக மஸ்க் சகோதரர்கள் உணவகங்கள், துணிக்கடைகள், சலூன் கடைக்காரர்கள் என ஓர் இடம் விடாமல் அணுகினர். சின்னச் சின்னத் தொழில்களையும்கூடத் தங்கள் வாடிக்கையாளர்களாக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினர்.
ஒருவழியாக இருபதுக்கு முப்பது அடி அளவில் ஸ்டூடியோ அப்பார்ட்மெண்ட் ஒன்றில் ஜிப்2 நிறுவனம் தொடங்கப்பட்டது. மஸ்க் சகோதர்களின் வீடு, அலுவலகம் இரண்டுமே அந்த அறைதான். மூன்றாவது மாடியில் இருந்த அந்த அலுவலகத்திற்குச் செல்ல லிஃப்ட் கிடையாது. தனிக் கழிப்பறை கிடையாது. மூன்று மாடிக்கும் சேர்த்து பொதுவான ஒரு கழிப்பறைதான். அதைத்தான் அவர்கள் பயன்படுத்த வேண்டும். இணையம் சார்ந்த தொழிலை அவர்கள் தொடங்கி இருந்தாலும் இணையத் தொடர்புக்கு வேண்டிய கேபிளை மாடிக்குக் கொண்டு வரக்கூட வசதி கிடையாது. இதற்காக இணையத்திற்கான கேபிளை மாடியில் இருந்து ஓட்டைப்போட்டுக் கீழே தொங்கவிட்டு, அதைக் கீழே இருந்த இணைய சேவை நிலையத்தில் இணைக்க வேண்டும். இவ்வாறு ஒரு மோசமான இடத்தில்தான் ஜிப்2 தொடங்கப்பட்டது.
ஆரம்ப கால ஜிப்2 வில் இரண்டே ஊழியர்கள்தான். மஸ்க்கும், அவரது சகோதரர் கிம்பலும். மஸ்க் கம்ப்யூட்டர் கோடிங் உள்ளிட்ட தொழில்நுட்பப் பிரிவை எடுத்துக்கொண்டார். அவரது சகோதரர் கிம்பல், நிறுவனம் நிறுவனமாக ஏறி இறங்கி வாடிக்கையாளரைப் பிடிக்கும் பணியைச் செய்யத் தொடங்கினார். இந்த நிறுவனத்தைத் தொடங்குவதற்கு அவர்களது தந்தை எரோல் மஸ்க் 28,000 டாலர் தொகையை அளித்திருந்தார்.
ஆனால் அந்தப் பணம் கொஞ்ச நாட்கள் கூட கைகளில் நிற்கவில்லை. அறை வாடகை, கணினிகள், மென்பொருள்கள் வாங்கியது மற்றும் ஏனைய செலவுகளுக்கே பணம் காணாமல் போனது. ஆரம்பத்தில் உட்காருவதற்கு நாற்காலிகள்கூட அந்த அலுவலகத்தில் கிடையாது. தரையில் அமர்வதற்காக கம்பளம் ஒன்றை வாங்கி வந்து விரித்து அதில் அமர்ந்து மஸ்க் சகோதரர்கள் பணியாற்றினர்.
இதற்கெல்லாம் அவர்கள் சோர்ந்துவிடவில்லை. ஓர் உறுதியான திட்டத்துடன் தொடங்கியதால் எத்தனைக் கடினமான புறச்சூழல் இருந்தாலும் நாம் நினைத்த கருத்திற்குச் செயல்வடிவம் கொடுத்துவிட வேண்டும் என்று முழுமூச்சுடன் செயலாற்றினர்.
இணையத்தையும், தகவல் யுகத்தையும் மனதில் வைத்திருந்து ஜிப்2 தொடங்கப்பட்டாலும், வாடிக்கையாளர்களைப் பிடிப்பதற்கு ஒவ்வொரு இடமாக, நிறுவனம், நிறுவனமாகச் செல்ல வேண்டியது இருந்தது. இன்னும் சொல்லப்போனால் வாடிக்கையாளரைப் பிடித்து, அவர்களிடம் இருந்து கிடைக்கும் தொகையில்தான் ஜிப்2 இணையதளத்தையே பயனுக்குக் கொண்டுவரும் நிலையில் அவர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் செய்வது இதுவரை கேள்விப்படாத தொழில் என்பதால் நிறுவனங்கள் மஸ்க்கின் ஜிப்2வுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள தயங்கின. அதனால் அவர்களது நிறுவனம் ஓரிரு மாதங்களுக்கு தொடங்கிய நிலையிலேயே இருந்தது.
ஒரு நிறுவனம் வளர வேண்டும் என்றால் அதிகம் வாடிக்கையாளர்கள் வர வேண்டும். வாடிக்கையாளர்கள் வர வேண்டும் என்றால், நம்முடைய சேவை என்ன என்பதை அவர்களுக்குச் சரியாகப் புரிய வைத்து அழைத்து வரும் ஆட்கள் வேண்டும். அதற்காகப் புதிய விற்பனையாளர்களை பணி அமர்த்த வேண்டும் என்ற முடிவுக்கு மஸ்க் சகோதர்கள் வந்தனர். அப்படியாக அவர்கள் முதலில் பணிக்கு அமர்த்தியர்களில் ஒருவர்தான் ஜெஃப் ஹெய்ல்மேன்.
ஜெஃப் ஹெய்ல்மேன் இருபது வயது இளைஞர். தனக்கு வாழ்க்கையில் என்ன வேண்டும் என்ற தேடலில் இருந்தவர் ஜிப்2 வில் வேலைக்குச் சேர்ந்தார். ஜெஃப் ஹெய்ல்மேன் பணியில் சேர்ந்தது ஒரு சுவாரஸ்யமான சம்பவம். ஒருநாள் இரவு ஜெஃப் ஹெய்ல்மென் டிவி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அதில் வந்த விளம்பரத்தில் டாட் காம் என்று ஏதோ ஒரு இணைய முகவரி எழுதப்பட்டிருந்தது. அது என்ன என்று தன் தந்தையிடம் கேட்க, அவர் தெரியாது எனக் கூறவே, இணையம் என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரு சில வாரம் சுற்றினார். சிலரைச் சந்தித்துப் பேசியதில் அவருக்கு இணையம் குறித்த அடிப்படை புரிதல் கிடைத்தது. பின் ஒரு செய்தித்தாளில் ஜிப்2 நிறுவனத்தில் இணைய விற்பனையாளர் என்ற பணி இருப்பதாக விளம்பரத்தைப் பார்த்தார். நேராக அதில் சென்று சேர்ந்துவிட்டார்.
ஆரம்ப நாட்களில் மஸ்க் அலுவலகத்தை விட்டு வெளியே செல்வதே கிடையாது. ஜிப்2 ஊழியர்கள் காலையில் ஏழு, எட்டு மணிக்கு வேலைக்கு வரும்போது மஸ்க் தனது கணினிக்குப் பக்கத்திலேயே தூங்கிக்கொண்டிருப்பார். அவர்கள் வந்து எழுப்பியவுடன் மீண்டும் பணியைத் தொடங்கிவிடுவார். அலுவலகத்திற்கு முதலில் வரும் பணியாளர்கள் தன்னை எழுப்பி விட வேண்டும் என்று எழுதாத சட்டத்தையே மஸ்க் வைத்திருந்தார்.
இவ்வாறு இரவு பகலாக எலான் மஸ்க் கோடிங் எழுத, ஹெய்ல்மேனும், கிம்பலும் வாடிக்கையாளர்களைப் பிடிக்கச் சென்றுவிடுவர். ஆனால் ஒருமுறை கூட இருவரும் வாடிக்கையாளருடன் வந்தது கிடையாது. ஒவ்வொருமுறையும் மாலை அலுவலகத்திற்கு வரும் ஹெய்ல்மேனிடம் இன்றைக்கு ஏதாவது நல்ல செய்தி இருக்கிறதா என மஸ்க் கேட்பார். ஆனால் ஒருநாளும் நல்ல செய்தி வந்தது கிடையாது. வாடிக்கையாளரைப் பிடிக்கச் செல்லும்போது சில கடைக்காரர்கள் ஹெய்ல்மேனை வெளியே தள்ளிக் கதவை அடைக்கும் நிலைக்கெல்லாம் சென்றிருக்கிறது. இத்தனை இன்னல்களைச் சந்தித்தும் அவர்கள் தங்கள் பணியை நிறுத்தவில்லை. தொடர்ந்து உழைத்துகொண்டே வந்தனர்.
மஸ்க் தனது கோடிங் திறன் மூலம் ஜிப்2 தளத்தில் ஏகப்பட்ட முன்னேற்றங்களைச் செய்திருந்தார். கருத்து வடிவத்தில் இருந்து உண்மையில் சேவை வழங்கும் அளவுக்கு ஜிப்2 இணையதளம் மாற்றம் அடைந்திருந்தது. ஜிப்2 நிறுவனத்திற்கு வரும் முதலீட்டாளர்களை எப்படியாவது கவர வேண்டும் என்பதற்காக தனது கணினிக்கு ஒரு தோற்றம் எல்லாம் உருவாக்கி, காட்சிப்பொருள்போல எலான் மஸ்க் வைத்திருந்தார்.
வரும் முதலீட்டாளர்கள் பார்த்தவுடனேயே இது ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் எனக் கருதி விடவேண்டும் என அவர் நினைத்தார். ஆரம்ப காலகட்டத்தில் மஸ்க் சோர்வடையாமல் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தார். அந்தக் காலக்கட்டத்தில் தனக்கிருந்த மனநிலை குறித்து மஸ்க் கூறும்போது, ‘நான் ஒரு சாமுராய். எனது மனநிலையும், எண்ண ஓட்டமும் சாமுராயைப் போன்றவை. நான் எனது முயற்சிகளுக்காக உயிரையே விடுவேனே ஒழிய ஒருபோதும் பயந்து சரணடைய மாட்டேன்’எனக் குறிப்பிடுகிறார்.
மஸ்க்கின் இந்த தீராத முயற்சிக்குப் பலன் கிரைக் மோஹ்ர் என்ற ஆரம்பக்காலப் பணியாளர் ஒருவர் மூலம் வந்தது. கிரைக் ரியல் எஸ்டேட் விற்பனையில் இருந்தவர். இணையம் சார்ந்த தொழிலுக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக அந்தத் தொழிலை விட்டுவிட்டு ஜிப்2வில் இணைந்தவர். அவருக்கு இருந்த அனுபவத்தின் மூலம் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விளம்பரத்திற்காக அதிகம் செலவழிக்கின்றன என்பதை அறிந்து வைத்திருந்தார்.
அதனால் டொயோட்டோ நிறுவனத்தை அணுகி, அந்த நிறுவனம் குறித்தத் தகவல்களை இணையத்தில் கொண்டுவந்தால் எவ்வளவு பலனளிக்கும் என்று விளக்கினார். மேலும் ஜிப்2 தளத்தில் இணைவதற்கு நிறுவனங்களிடையே அதிக போட்டி இருப்பதாகவும், அதில் டொயோட்டோ இணைவதற்கான ஒரு வாய்ப்பை தான் வழங்குவதாகவும் கதையெல்லாம் அளந்துவிட்டார்.
இதைக் கேட்ட டொயோட்டோ நிறுவனம் உண்மையில் இறங்கிவந்துவிட்டது, ஆனால் ஒப்பந்தம் செய்வதற்கு முன் ஜிப்2 இணையதளத்தைப் பார்க்க வேண்டும் என விரும்பியது. கிரைக், கணினியை ஆன் செய்து ஜிப்2 இணையதளத்திற்குள் சென்று, அவர்களுக்குக் காட்ட முயன்றபோது இணையதளம் கோளாறு செய்யத் தொடங்கியது. மிகத் தாமதமாக லோட் ஆகித்தான் உள்ளே சென்றது. எல்லாம் கூடி வரும் நேரத்தில் இப்படியொரு தடங்கலா என கிரைக் நினைத்தார். ஆனாலும் அவர் விடவில்லை. நிறுவனங்களுக்கு ஜிப்2வின் எதிர்கால தேவை குறித்தும், இணையத்தின் ஆற்றல் குறித்தும் பல்வேறு விதமாக விளக்கிப் பேசினார். ஒருவழியாக அவர் முடித்து அலுவலகம் திரும்பியபோது வழக்கம்போல் எலான் மஸ்க் கீபோர்டில் டைப் செய்துகொண்டிருந்தார்.
கிரைக் அவர்களிடம் சென்று தான் வாங்கி வந்த 900 டாலர் காசோலையைக் காட்டி, இந்தப் பணத்தை என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டார். அதுவரை டைப் அடித்துகொண்டிருந்த மஸ்க் அப்போதுதான் நிமிர்ந்து கிரைக்கைப் பார்த்தார். அவரது கையில் உண்மையிலேயே காசோலை இருந்தது. ஒரு நிமிடம் மஸ்க் கலங்கி நின்றார். அத்தனை நாட்கள் முயற்சிக்குப் பிறகு அப்போதுதான் முதல் நம்பிக்கைக் கீற்று மெலிதாக ஒளிரத் தொடங்கி இருந்தது. அவரிடம் வந்த மஸ்க், ‘வாய்ப்பே இல்லை. உண்மையிலேயே நமக்கு பணம் கிடைத்துவிட்டதா?’ எனக் கேட்டார். ஆம் என்று கிரைக் தலையசைத்தார்.
அங்கிருந்து ஜிப்2வின் வளர்ச்சி தொடங்கியது.
(தொடரும்)