Skip to content
Home » எலான் மஸ்க் #11 – ஓர் ஆளுமையின் உருவாக்கம்

எலான் மஸ்க் #11 – ஓர் ஆளுமையின் உருவாக்கம்

ஓர் ஆளுமையின் உருவாக்கம்

ஜிப்2 நிறுவனத்தின் தொடக்கம் சற்றுக் கடினமானதாக இருந்தாலும், ஒரே ஆண்டில் அதன் வளர்ச்சி அபரிமிதமாக மாறியது. முதல் வாடிக்கையாளரைப் பிடிப்பது மட்டுமே அவர்களுக்குச் சவாலாக இருந்தது. அதன்பின் ஜிப்2வின் செயல்பாடு காட்டுத்தீ போல பரவ, வாடிக்கையாளர்கள் வந்து குவியத் தொடங்கினர். பெரிய பெரிய நிறுவனங்கள் ஜிப்2வின் வாடிக்கையாளர்களாக இணைந்தன.

மஸ்க்கின் வேலைப்பளு அதிகரிக்கத் தொடங்கியது. அதையும் அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். மஸ்க் சகோதரர்கள் நாளடைவில் ஜிப்2வில் பணியாற்ற நிறைய ஊழியர்களை நியமிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். மஸ்க் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஒவ்வொருவரையும் அறிந்து வைத்திருந்தார். அவர்களது திறனை மதித்து அவர்களுக்கான வெகுமதியை கேட்கும் முன்னரே அளித்தார். ஜிப்2வின் வளர்ச்சிக்கு ஏற்ப முதலீட்டாளர்களும் மஸ்க் சகோதரர்களைத் தேடி வரத் தொடங்கினர்.

ஜிப்2வின் ஆரம்ப கால முதலீட்டாளர்களில் மிகவும் முக்கியமான, அதேசமயம் நெருக்கமான ஒரு நபர் கனடாவைச் சேர்ந்த கிரெக் கொரி. ஜிப்2 தொடங்கிய ஒரு வருடத்தில் அவர் அந்நிறுவனத்தின் துணை நிறுவனராக இணைந்தார். கிரெக் கொரி மஸ்க் குடும்பத்தின் நண்பர். மஸ்க்கின் தொழில் ஆர்வத்தையும், அறிவியல் மற்றும் கணினி ஞானத்தையும் கண்டு வியந்த அவர், ஜிப்2வில் முதலீடு செய்ய முன்வந்தார். இத்தனைக்கும் மற்ற முதலீட்டாளர்களைப்போல ஜிப்2வின் வளர்ச்சிக்குப் பிறகு வந்தவர் அல்ல இவர். ஜிப்2 தொடங்கப்பட்டபோதே மஸ்க் சகோதரர்களை நம்பி முதலீடு செய்தவர்.

33 வயதான கொரி, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர். கணினி மற்றும் இணையம் சம்பந்தமான தொழில்கள் வளர்ந்து வருவதை அறிந்த அவர், தகவல் தொழில்நுட்பத் துறையிலும் கால்பதிக்க விரும்பினார். அப்போதுதான் மஸ்க் சகோதரர்கள் கனடாவிற்குச் சென்று அவரிடம் தங்கள் தொழில் யோசனைகளைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர். ஏதோ விளையாட்டாக இருவரும் பேசுவதாக நினைத்த அவர், அவர்களுக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கினார்.

திடீரென்று ஒருநாள் தொழில் தொடங்க அமெரிக்கா செல்ல இருப்பதாக மஸ்க் சகோதரரகள் வீட்டில் வந்து நின்றபோது, குளியல் உடையில் இருந்த கொரி சற்றும் தாமதிக்காமல் உள்ளே சென்று 6000 டாலர் தொகையை எடுத்து வந்து நீட்டினார். ஓராண்டில் ஜிப்2 வளரத்தொடங்கியவுடன் அமெரிக்கா கிளம்பி வந்த அவர், துணை நிறுவனர் என்ற பதவியுடன் ஜிப்2வில் இணைந்துகொண்டார்.

எலான் மஸ்க் தன்னுடைய வாழ்வில் ஆசானாக ஏற்றுக்கொண்ட ஒரு சில பேரில் கிரெக் முதலிடம் வகிக்கிறார். ஜிப்2 வளர்ச்சி கண்டிருந்த சமயம், அந்நிறுவனத்தை எந்தத் திசையில் எடுத்துச் செல்வது என்று திணறிய மஸ்க் சகோதரர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக கிரெக் இருந்தார். ஜிப்2 வில் தொடங்கி மஸ்க்கின் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் என அத்தனை நிறுவனங்களிலும் முதலில் வந்து முதலீடு செய்தவர் கிரெக்.

யார் சொல்பேச்சையும் கேட்காத மஸ்க், கிரெக்கின் சொல்லுக்கு மட்டுமே கட்டுப்பட்டார். கடினமான சமயங்களில், முடிவெடுக்க முடியாமல் திணறும்போதெல்லாம் கிரெக் தாமாக வந்து மஸ்க்கிற்கு ஆலோசனை வழங்குவார். மஸ்க் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டபோது (உண்மையிலேயே அடிதடி சண்டை) அவர்களுக்கு அறிவுரை கூறி விலக்கிவிட்டவர் கிரெக்.

மஸ்க்கின் வளர்ச்சியை அருகில் இருந்து பார்த்து அதிகம் பெருமைப்பட்டவர் அவர். 2012ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு கிரெக் மறைந்தபோது அவருடைய பெரும்பாலான முதலீடுகள் மஸ்க்கின் நிறுவனங்களிலேயே இருந்தது. கிரெக்கின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட மஸ்க் சகோதரர்கள், ‘இந்த உலகில் நாங்கள் யாருக்கேனும் கடமைப்பட்டிருக்கிறோம் என்றால் அது கிரெக் அவர்களுக்குத்தான்’ என வெளிப்படையாகவே அறிவித்தனர்.

இவ்வாறு முதலீட்டாளர்கள் மஸ்க்கை நம்பி பல ஆயிரம் டாலர்களை முதலீடு செய்ய முன் வந்தனர். ஜிப்2வைக் கண்டு வாடிக்கையாளர்கள் மட்டுமல்ல போட்டி நிறுவனங்களும் கூட வியந்தன. தொடர்ச்சியாக சிறிய, சிறிய வெற்றிகளைப் பெற்று வந்த ஜிப்2வை ராக்கெட்டில் வைத்து அழைத்துச் செல்வதுபோல வந்தது ஒரு நிறுவனம்.

1996ம் ஆண்டு மோர் டேவிடோவ் என்ற வென்சூர் கேப்பிடலிஸ்ட் நிறுவனம் மஸ்க்கின் நிறுவனத்தில் 3 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய முன்வந்தது. (உண்மையில் அவ்வளவு பெரிய தொகை கிடைக்கும் என மஸ்க் சகோதரர்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. உண்மையில் அவர்கள் கேட்டது வெறும் 10,000 டாலர்கள்தான். ஆனால் ஜிப்2 நிறுவனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த மோர் டேவிடோவ் நிறுவனம் 3 மில்லியன் டாலர்களுக்கு ஒப்பந்தம் செய்தது. இன்னும் சொல்லப்போனால் ஸ்டீவ் ஜூர்வெட்சன் என்ற முதலீட்டாளர் இந்த ஒப்பந்தம் பற்றிப் பேசும்போது, 3 மில்லியன் டாலர் என்பதே குறைந்த தொகைதான் எனக் குறிப்பிடுகிறார். ஜிப்2வின் செயல்திட்டத்திற்கு இதைவிடப் பெரிய தொகை கூடக் கிடைத்திருக்கும். ஆனால் ஆரம்ப காலத்தில் மஸ்க் சகோதரர்களுக்குச் சந்தை குறித்தப் புரிதல் இல்லாததால் இதையே பெரும் தொகையாகக் கருதி ஒப்புதல் அளித்துவிட்டதாகக் கூறுகிறார்.)

மோர் டேவிடோவ்வின் முதலீட்டிற்குப் பின் ஜிப்2வின் தோற்றமே மாறத்தொடங்கியது. அதுவரை குளோபல் லிங்க் என்று இருந்த நிறுவனத்தின் பெயர் ஜிப்2 என அதிகாரப்பூர்வமாக மாறியது. பழைய கட்டடத்தில் இருந்து அலுவலகம் மாற்றப்பட்டு பல தளங்களை உள்ளடக்கிய பெரிய கட்டடத்திற்குக் குடிபெயர்ந்தது. அமெரிக்காவின் சிறந்த பொறியாளர்கள் ஜிப்2வில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். முக்கியமாக ஜிப்2வின் ஆரம்ப கால சேவை ‘பே ஏரியா’ எனப்படும் பகுதிக்குள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 3 மில்லியன் முதலீடு கிடைத்தவுடன் தங்களது சேவையை தேசிய அளவில் கொண்டு செல்வதற்கு மஸ்க் சகோதரர்கள் திட்டமிட்டனர்.

அதேபோல வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கான ஜிப்2வின் அணுகுமுறையும் மாறியது. அதுவரை விற்பனையாளர்களைக் கொண்டு அலுவலகம், அலுவலகமாக ஏறி இறங்கி வாடிக்கையாளரைப் பிடிக்கும் நடவடிக்கையே பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் முதலீட்டிற்குப் பின் மென்பொருள் தொகுப்பு ஒன்றை உருவாக்கிச் செய்தித்தாள் நிறுவனங்களிடம் அளிக்கப்பட்டது.

செய்தித்தாள் நிறுவனங்கள் தங்களுடைய விளம்பரதாரர்களின் தகவல்களை அந்த மென்பொருள் மூலம் இணையத்தில் பதிவேற்றம் செய்தன. அவர்களையும் தொடர்புகொண்டு ஜிப்2 வாடிக்கையாளர்களாக மாற்றியது. இவ்வாறு ஜிப்2விற்குப் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கத் தொடங்கினர். இதன்மூலம் அப்போது இணையம் குறித்த அறிதலே இல்லாமல் இருந்த பல நிறுவனங்கள் எளிதாக இணையதளத்தில் இணைய முடிந்தது. இவ்வாறு ஜிப்2 நிறுவனம் வளர்ச்சி என்ற நிலையில் இருந்து அசுர வளர்ச்சி என்ற நிலையை எட்டியது. ஆனால் இதே நேரத்தில்தான் மஸ்க்கின் வாழ்வில் சோதனை காலக்கட்டமும் தொடங்கியது.

ஜிப்2வின் வளர்ச்சி எந்த அளவிற்கு வேகமாக இருந்ததோ அதே அளவிற்கு அந்நிறுவனத்தின் கட்டுப்பாடு மஸ்க்கின் பிடியில் இருந்து நழுவத் தொடங்கியது. ஜிப்2வில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் மஸ்க்கை அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பதவியில் இருந்து நீக்க முடிவு செய்தனர். எலான் மஸ்க் சிறந்த தொழில்நுட்ப வல்லுநராக இருக்கலாம், ஆனால் அவருக்கு நிர்வாகத்திறமை கிடையாது. அதுமட்டுமில்லாமல் அவருக்குத் தொழில் அனுபவமும் இல்லாததால் நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி அவரால் சாத்தியமாகாது எனக் கருதினர். அதனால் அவரைத் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாக மட்டுமே செயல்பட அனுமதித்தனர். ஜிப்2வின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக ரிச்சர்ட் சோர்கின் என்பவர் நியமிக்கப்பட்டார். இது மஸ்க்கிற்குக் கடும் கோபத்தை வரவழைத்தது.

சோர்கின் இதற்கு முன் இணையதளம் சார்ந்த பல நிறுவனங்களை வழி நடத்தி இருந்தார். அதனால் ஜிப்2 என்ற நிறுவனமும் அவருக்குப் பத்தோடு பதினொன்றாக இருந்தது. ஆனால் மஸ்க்கிற்கு அப்படி இல்லை. ஜிப்2 நிறுவனத்தையும், அதன் திட்டத்தையும் கருத்து வடிவில் இருந்து உருவாக்கிச் செயல்வடிவம் கொடுத்தவர் அவர். தற்போது தான் தொடங்கிய நிறுவனத்திலேயே ஊதியம் வாங்கும் தொழிலாளியாக மாற்றப்பட்டது அவருக்கு வேதனையை அளித்தது. அதேபோல் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாக செயல்படுவதிலும் அவருக்குச் சிக்கல் இருந்தது.

புதிதாகப் பணி அமர்த்தப்பட்ட மென்பொருள் பொறியாளர்கள் ஜிப்2வின் மென்பொருள் வடிவத்தையே மாற்றினர். மஸ்க் என்னதான் சிறந்த புரோகிராமராக இருந்தாலும், அவர் சுயம்பாக அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவர். அவருக்கு ஒழுங்குமுறைப்பட்ட கல்வி கணினித் துறையில் கிடையாது. இதனால் கடினமான கோடிங்கை கொண்டு அவர் ஜிப்2 இணையதளத்தைக் கட்டமைத்திருந்தார்.

ஆனால் புதிதாக வந்த நபர்கள் கணினி, மென்பொருள் துறையில் நிபுணர்கள். அவர்கள் மஸ்க்கை விடத் திறமையான புரோகிராமர்களாக இருந்தனர். மஸ்க் பக்கம் பக்கமாக எழுதிய கோடிங் அனைத்தையும் அவர்கள் ஒரே இரவில் முழுவதுமாக மாற்றி எழுதினர். ஓரிரு வரியில் புதிய கோடிங்கை எழுதி, ஜிப்2 செயல்படும் முறையையே மாற்றினர். அவர்கள் கொண்டு வந்த மாற்றம் ஜிப்2 மென்பொருளை எளிய வடிவிலும், சுலபமாகவும் பயன்படுத்த உதவியது.

அதேபோல் புதிய பொறியாளர்கள் யதார்த்தமான இலக்குகளை நிர்ணயித்துச் செயல்பட்டனர். அதற்கு முன் மஸ்க்கிற்கு ஒரு விஷயம் தேவை என்றால் ஒரே இரவில் கொண்டு வர வேண்டும் என ஊழியர்களுக்குக் கெடு நிர்ணயிப்பார். ஆனால் புதிய பொறியியலாளர்கள் அவர் நிர்ணயிக்கும் இலக்குகளைப் பின்பற்ற மறுத்தனர். இப்படியாகக் கொஞ்சம் கொஞ்சமாக நிர்வாகம் சம்பந்தப்பட்ட பொறுப்புகளிலும், தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட மாற்றத்தில் இருந்தும் மஸ்க் விலக்கப்பட்டார்.

இது மஸ்க்கின் தன்னம்பிக்கையை வெகுவாகக் குலைத்துப் போட்டது. தான் ஒரு மென்பொருள் நிபுணரும் அல்ல, சிறந்த நிர்வாகியும் அல்ல என்ற தாழ்வு மனப்பான்மை அவரை வாட்டத் தொடங்கியது. மஸ்க் சந்தித்த சோதனைகள் குறித்து அவருடைய நண்பரும், ஜிப்2வின் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றிய ஜிம் ஆப்ம்ரஸ், ‘மோர் டேவிடோவுடனான முதலீட்டு ஒப்பந்தம்தான் மஸ்க் செய்த வரலாற்றுப் பிழை’ என வெளிப்படையாகப் பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்தார்.

ஆனால் என்னதான் பின்னடைவுகளைச் சந்தித்தாலும், கடினமான காலக்கட்டம்தான் வலுவான மனிதர்களை உருவாக்கும் என்ற வாக்கியத்தை மெய்ப்பிப்பதுபோல, ஜிப்2வில் மஸ்க் சந்தித்த கஷ்டங்கள்தான் அவரைப் புதிய மனிதராக உருமாற்றியது. மஸ்க், தன்னிடம் இல்லை எனக் கருதிய நிர்வாகத் திறனை வளர்த்தெடுக்கும் வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார். ஒரு சிறந்த தொழில் வல்லுநர் ஆக வேண்டும் என்ற சிந்தனையிலேயே பணிகளைச் செய்துவந்தார்.

அதுவரை விரும்பியதை செய்துகொண்டு, தான்தோன்றித்தனமாக இருந்த அவர், முதன்முதலில் ஒழுக்கமாகக் கட்டுப்பாடுகளுடன் செயலாற்றத் தொடங்கினார். எதற்கெடுத்தாலும் ஆவேசப்படுவதை நிறுத்திவிட்டு பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் கடைபிடித்தார். இது அவருக்குப் புதிய தன்னம்பிக்கையை வளர்த்தெடுத்தது.

ஒரு விஷயத்தை நினைத்தவுடன் அடைய முடியாது. எந்த ஒரு சிறந்த விஷயத்தையும் அடைவதற்குக் காலம் எடுக்கும். காலம் கனியும் வரை பொறுமையாக, கவனம் சிதறாமல் காத்திருக்க வேண்டும் என்று புரிந்துகொண்டார். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டார். வீண் கோபம், பயம் உள்ளிட்ட உணர்ச்சிகளைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்.

தன்னுடைய இயல்பான பண்புகளையும், நடத்தைகளையும் மாற்றி, புதிய அணுகுமுறைகளைக் கைக்கொள்ளத் தொடங்கினார். இந்தச் சமயத்தில் எலான் மஸ்க்கைக் காண அவருடைய பள்ளிக்கால நண்பர்களில் ஒருவரான டெரன்ஸ் பெனி என்பவர் அமெரிக்காவிற்கு வந்திருந்தார். அவர் மஸ்க்கை சந்தித்தபோது அசந்துபோய்விட்டார். பள்ளியில் யாருடனும் பேசாமல் கூச்ச சுபாவத்துடன் ஒதுங்கி இருந்த, எதற்கெடுத்தாலும் பயந்துகொண்டிருந்த விநோதச் சிறுவனா இது என ஆச்சரியப்பட்டார்.

மஸ்க் உறுதியான, தன்னம்பிக்கை நிறைந்த, கட்டுக்கோப்பான மனிதனாக மாறி இருப்பது அவருக்கு ஆச்சரியத்தை அளித்தது. தன்னை யாரும் எதுவும் சொல்லிவிடக்கூடாது என ஆழ்மனதில் அச்சம் கொண்டிருந்த மஸ்க், தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களை ஆக்கப்பூர்வமாக அணுகப் பழகி இருந்தார். அதேபோல் மற்றவர்களை கண்மூடித்தனமாக விமர்சிப்பதையும் நிறுத்தி இருந்தார்.

மஸ்க்கின் புதிய அணுகுமுறை பலரையும் ஈர்த்தது. ஜிப்2வில் ஏற்பட்டுள்ள ஆக்கப்பூர்வமான மாற்றங்களை அவர் அகங்காரத்தைத் துறந்து, மனப்பூர்வமாக ஏற்றார். தான் தலைமைத் தாங்கும் தொழில்நுட்பக் குழுவினரை அரவணைத்து ஓரணியாக இயங்கத் தொடங்கினார். அதேபோல் முதலீட்டாளர்களையும் சந்தித்து ஜிப்2வின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து உரையாடினார். அவருடைய பேச்சில் கவரப்பட்ட முதலீட்டாளர்கள் மஸ்க்கிற்கும், அவருடைய சகோதரருக்கும் உலகைச் சுற்றிப் பார்க்க விசாக்களை ஏற்பாடு செய்து கொடுத்தனர். புதிய கார்களை வாங்கிக்கொள்வதற்கு 30,000 டாலர் காசோலையை வழங்கினர்.

நாட்கள் செல்லச்செல்ல ஜிப்2 மேன்மேலும் வளர்ந்து சென்றது. தி நியூ யார்க் டைம்ஸ், ஹெர்ஸ்ட் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பிரபல ஊடகங்கள் ஜிப்2வின் சேவையில் இணைந்தன. ஊடகங்களைத் தொடர்ந்து மோட்டார் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், பொழுதுபோக்குத் தொழிலில் ஈடுபட்டிருந்த நிறுவனங்கள் ஜிப்2 மூலம் இணையத்தில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டன. சில நிறுவனங்கள் 50 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்து ஜிப்2வின் வாடிக்கையாளர்களாக மாறின. ஒரு கட்டத்தில் ஜிப்2 அலுவலகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, ஊழியர்கள், அலுவலகத்தில் உள்ள பெண்கள் கழிப்பறையின் வாசலில் கூட மேஜை அமைத்துப் பணியாற்றும் நிலைக்குச் சென்றனர்.

ஆனால் ஜிப்2வின் அசுரத்தனமான வளர்ச்சி அதன் இலக்குகளை மாற்றத் தொடங்கியது. ஜிப்2வைத் தொடங்கியபோது, இணையத்தின் வளர்ச்சி எளிய மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதைத்தான் எலான் மஸ்க் தனது நோக்கமாக வைத்திருந்தார். யார் விரும்பினாலும் ஜிப்2வை அணுகி ஒரு இணையதளத்தைத் தொடங்கலாம் என்ற லட்சியத்தைத்தான் அவர் முன்வைத்தார். ஆனால் சோர்க்கினின் தலைமையில் ஜிப்2வின் செயல்பாடு மஸ்க்கின் கனவுக்கு எதிர்த்திசையில் செல்லத் தொடங்கியது. ஜிப்2 நிர்வாகம் ஊடகங்களில் இருந்து வரும் பணத்தில் கவனம் செலுத்தி, எளிய வாடிக்கையாளர்களைப் பற்றி கவலைப்படுவதை மறந்தது. இது மஸ்க்கிற்கு ஆத்திரத்தை மூட்டியது. ஜிப்2, ஊடகங்களின் அடிமையைப்போல செயல்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

மீண்டும் எப்படியாவது தலைமைப் பொறுப்பை அடைந்துவிட வேண்டும் எனத் துடித்தார். இதற்காக தனி அணியைத் திரட்டி அவர் குரல் கொடுக்கத் தொடங்கி இருந்தார். அப்போதுதான் தலையில் இடி விழுவதைப் போன்ற செய்தி ஒன்று அவரை வந்தடைந்தது. அதாவது ஜிப்2 முதலீட்டாளர்களின் கூட்டமைப்பு, அந்நிறுவனத்தை, அதன் போட்டி நிறுவனமான சிட்டி செர்ச் நிறுவனத்திடம் விற்க முடிவு செய்திருந்தது.

(தொடரும்)

படம்: முதலீட்டாளர் கிரெக் கொரி (Gregory Kouri)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *