Skip to content
Home » எலான் மஸ்க் #12 – நீக்கப்பட்ட மஸ்க்

எலான் மஸ்க் #12 – நீக்கப்பட்ட மஸ்க்

1998ம் ஆண்டு ஏப்ரல் மாதம். ஜிப்2 நிர்வாகக் குழு, தனது நிறுவனத்தை சிட்டி செர்ச் (City Search) என்ற போட்டி நிறுவனத்திடம் சுமார் 300 மில்லியன் டாலர் தொகைக்கு விற்க முடிவு செய்தது. இதன்படி ஜிப்2 என்ற நிறுவனத்தின் பெயர் ‘சிட்டி செர்ச்’ என்று மாற்றப்படும். இந்த நிறுவனங்களுக்குத் தலைமைச் செயல் அதிகாரியாக ரிச்சர்ட் சோர்கினே தொடருவார் என அறிவிக்கப்பட்டது.

சிட்டி செர்ச் நிறுவனம் அந்நாளில் மிகப்பெரிய இணைய சேவை நிறுவனமாக இருந்தது. அமெரிக்காவின் பல நகரங்கள் குறித்த தரவுகளின் திரட்டை (Directories) அவர்கள் வைத்திருந்தனர். மேலும் அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் அணியும் மிகப்பெரியது. அந்த அணியும், ஜிப்2வின் திறமையான பொறியாளர்களும் இணைந்தால் யாரும் நெருங்கவே முடியாத வளர்ச்சியை அடையலாம் என்பதுதான் அவர்களின் திட்டம். ஆனால் இந்தத் திட்டம் குறித்து மஸ்க்கிடம் பெயருக்குக்கூடத் தெரிவிக்காமல் ரகசியமாக காய்கள் நகர்த்தப்பட்டு, ஒருநாள் அனைத்துப் பத்திரிகைகளிலும் செய்தியாக வெளிவந்தது. விஷயம் தெரிந்த மஸ்க் வெகுண்டெழுந்தார்.

அதுமட்டுமில்லாமல் இந்த இணைப்பு ஜிப்2 பணியாளர்களுக்குப் பணி இழப்பு அபாயத்தையும் ஏற்படுத்தியது. இரு போட்டி நிறுவனங்கள் இணையும்போது, இரு நிறுவனங்களிலும் ஒரே பணியைச் செய்யும் கூடுதல் ஊழியர்களின் பட்டியலைத் தயாரித்து, அதில் யாரை வேலையை விட்டு நீக்கலாம் என நிர்வாகம் திட்டமிட்டு வந்தது. சிட்டி செர்ச்தான் ஜிப்2வை வாங்குகிறது என்பதால் ஜிப்2 ஊழியர்கள்தான் வேலை பறிபோகும் நிலையில் இருந்தனர். இதனால் அவர்கள் ஒன்றிணைந்து தலைமைக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கினர். இரு நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். அந்தக் குழுவுக்கு ஜிப்2வின் நிறுவனர் என்ற பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் தலைமை தாங்கினார்.

அதேசமயம் ஊழியர்களின் மற்றொரு குரல் குழு உருவாகி சோர்க்கினுக்கு ஆதரவாகச் செயல்படத் தொடங்கியது. இவ்வாறு ஜிப்2 ஊழியர்களுக்கு இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையாக நடைபெறவே, இதன் முடிவு மஸ்க்கிற்குச் சாதகமாக வந்தது. சிட்டி செர்ச், ஜிப்2 நிறுவனத்தை இணைக்கும் ஒப்பந்தத்தில் இருந்து பின் வாங்கியது. இது மஸ்க்கிற்குப் பெரும் உத்வேகத்தைக் கொடுத்தது. தனக்குக் கீழ் ஓர் ஆதரவுக் குழு இருப்பதை உறுதி செய்துகொண்ட மஸ்க், உடனடியாக ஜிப்2வின் தலைமைக் குழுவிடம் சென்று சோர்க்கினை தலைமைச் செயல் அதிகாரி பதவியில் இருந்து நீக்கிவிட்டு, தனக்கு அந்தப் பதவியை மீண்டும் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஆனால் மேலிடம் அதற்கு சம்மதிக்கவில்லை.

தொழில்நுட்ப வல்லுநர்கள், ஊழியர்கள் மஸ்க்கின் பக்கம் இருந்தாலும், ஜிப்2 இயக்குநர் குழு உறுப்பினர்கள், சோர்க்கின் பக்கமே நின்றனர். அவர்கள் மஸ்க்கின் நடவடிக்கைகளைக் கண்டித்து அவரை ஜிப்2வின் நிறுவனர் என்ற பதவியில் இருந்து நீக்கினர். இதைத் தொடர்ந்து சோர்க்கினும் தனது தலைமைச் செயல் அதிகாரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, டெரக் பிரெளடியன் என்பவருக்கு வழக்கினார். அதாவது ‘நான்தான் பதவியில் இருப்பேன். அப்படி விலகினாலும் நான் விரும்பும் ஒருவருக்குத்தான் பதவியை வழங்குவேன். நீ தலைக்கீழாக நின்றாலும் தலைமைச் செயல் அதிகாரி பதவி உனக்குக் கிடைக்காது’ எனச் சொல்லாமல் சொன்னார் சோர்க்கின்.

இதைத் தொடர்ந்து தனது பதவி விலகலுக்கும், ஜிப்2 நிறுவனத்திற்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களுக்கும் மஸ்க்கின் மூர்க்கத்தனமான நடத்தையே காரணம் என ஊடகங்களின் மூலம் திட்டமிட்டுப் பிரசாரம் செய்தார். அதற்கு சான்றுக் குழு உறுப்பினர்களின் முடிவும், மஸ்க்கின் பதவி இழப்புமே சாட்சி என வாதாடினார். பதவியில் இருந்து நீக்கப்பட்ட மஸ்க் செய்வதறியாமல் திகைத்திருந்தார்.

ஆனால் சோர்க்கினின் துணையுடன் தலைமைச் செயல் அதிகாரி பதவிக்கு வந்த பிரெளடியன் மஸ்க்குடன் விரோதம் பாராட்டவில்லை. அவர் மஸ்கை நட்பாகவே அணுகினார். ஜிப்2விற்குள் எழுந்துள்ள கூச்சல், குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த அவர், மஸ்கை அழைத்துப் பேசி, யதார்த்தச் சூழலைப் புரிய வைத்தார். ‘நீ தலைமைச் செயல் அதிகாரியாக விரும்புகிறாய் என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் நிலைமை கைமீறிப் போய்விட்டது. இந்த நிறுவனம் வளர்ச்சி காண வேண்டும் என்றால் அதை யாருக்காவது விற்பதைத் தவிர வேறு வழி இல்லை. இது உன்னுடைய முதல் நிறுவனம்தான். யாராவது ஒரு நல்ல முதலீட்டாளரைப் பிடித்து, அவரிடம் இந்த நிறுவனத்தை ஒப்படைத்துவிட்டு நல்ல தொகையைப் பெற்றுக்கொள். அதை முதலீடு செய்து இரண்டாவது, மூன்றாவது, நான்காவது என எத்தனை நிறுவனங்கள் வேண்டுமானாலும் தொடங்கு. உன் விருப்பம்போல் அதை வழிநடத்து’ எனக் கூறினார்.

அந்தச் சூழலில் ஜிப்2வும் மிக இக்கட்டான சூழலில் இருந்தது. உட்கட்சி மோதலால் நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சி அடையத் தொடங்கியிருந்தன. மஸ்க்கோ தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் நிறுவனத்தை வைக்க போராடிக்கொண்டிருந்தார். சாமானியர்களுக்குச் சேவையாற்றுவதற்காகத் தொடங்கப்பட்ட ஜிப்2, அதன் திசையில் இருந்து விலகுவதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால் ப்ரெளடியன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை அவருக்கு எடுத்துக் கூறினார். மஸ்க் கூறுவதுபோல நிறுவனம் செயல்பட வேண்டும் என்றால் நிறைய முதலீடுகள் தேவை. அந்த அளவிற்கு எந்த நிறுவனமும் முதலீடு செய்ய முன்வராது என்பதை அவர் புரிய வைத்தார்.

மேலும் அந்தக் காலகட்டத்தில்தான் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஜாம்பவானான மைக்ரோசாஃப்ட்டும் களத்தில் குதித்திருந்தது. ரியல் எஸ்டேட், மோட்டார் வாகன நிறுவனங்களை இணைத்து ஜிப்2வைப் போலவே வரைபடத்துடன் கூடிய ஆன்லைன் சேவையை உருவாக்கி வந்தது. இது ஜிப்2 பொறியாளர்களை மேலும் கவலையில் ஆழ்த்தியது. பெரும் முதலீடுகளுடன் மைக்ரோசாஃப்ட் போன்ற ஒரு நிறுவனம் போட்டிக்கு வந்தால் தங்கள் எதிர்காலம் என்ன ஆகுமோ என ஜிப்2 ஊழியர்கள் கவலைப்படத் தொடங்கினர். இறுதியாக அனைவரும் மஸ்க்கிடம் சென்று தற்போதிருக்கும் நிலைமையை உணர்த்தவே, நிறுவனத்தை விற்கும் முடிவுக்கு மேலும் முட்டுக்கட்டை போடாமல் மஸ்க் சம்மதித்தார்.

1999 ஆண்டு பிப்ரவரி மாதம் கணினி தயாரிப்பில் முன்னணியில் இருந்த காம்பேக் நிறுவனம் 307 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஜிப்2வை வாங்க முன்வந்தது. ஜிப்2வின் குழு உறுப்பினர்களும், மஸ்க்கும் இந்த ஒப்பந்தத்திற்குச் சம்மதித்தனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் எலான் மஸ்க்கிற்கு 22 மில்லியன் டாலர்களும், கிம்பல் மஸ்க்கிற்கு 15 மில்லியன் டாலர்களும் கிடைத்தது. ஜிப்2வில் முதலீடு செய்திருந்த மோர் டேவிடோவ் நிறுவனம் தாங்கள் முதலீடு செய்ததை விட 20 மடங்கு லாபத்தை இந்த ஒப்பந்தத்தின் மூலம் கைப்பற்றியது.

மேலும் ஜிப்2 ஊழியர்களையும் பணியில் இருந்து நீக்காமல் அவர்களை அப்படியே வைத்துக்கொள்வதாக காம்பேக் உறுதியளித்தது. இறுதியாக ஒப்பந்தம், தான் விரும்பும் விதத்தில் முடிந்ததில் மஸ்க்கிற்குச் சந்தோஷம். ஜிப்2 காம்பேக் கைக்கிற்குச் சென்றவுடனேயே அதில் நீடிக்கும் எண்ணம் மஸ்க் சகோதரர்களுக்கு இல்லை. தங்களுக்குக் கிடைத்தப் பணத்தை வைத்து புதிய தொழிலைத் தொடங்கும் திட்டத்தை அவர்கள் எப்போதோ சிந்திக்கத் தொடங்கி இருந்தனர்.

ஜிப்2வின் குழப்பங்களில் இருந்துதான் மஸ்க் மிக முக்கியமான வணிகப் பாடம் ஒன்றைக் கற்றுக்கொண்டார். அதாவது இனி எந்த நிறுவனத்தைத் தொடங்கினாலும் அதன் கட்டுப்பாடு தன் கையில்தான் இருக்க வேண்டும். தான்தான் அந்த நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாக இருக்க வேண்டும் என உறுதியாக இருந்தார். அந்த நடவடிக்கையைத்தான் அதற்குபின் தான் தொடங்கிய அத்தனை நிறுவனங்களிலும் அவர் பின்பற்றினார்.

மேலும் ஒரு நிறுவனத்தின் தலைவர் ஊழியர்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் ஜிப்2வின் அனுபவம் மஸ்க்கிற்கு உணர்த்தியிருந்தது. ஜிப்2வில் பணியாற்றிய ஊழியர்களுக்குத் தேவையானவற்றை மஸ்க் செய்துகொடுத்தாலும், வேலை வாங்குவதில் அவரிடம் சரியான திட்டமிடல் இல்லாமல் இருந்தது. ஊழியர்களுக்கு ஒரு வேலை ஒதுக்குவார். மறுநாள் அவர்கள் அலுவலகம் வரும்போது அவர்களைக் கேட்காமலேயே வேறு ஒரு வேலைக்கு மாற்றிவிட்டிருப்பார். அதேபோல் ஒருவர் வேலை செய்யவில்லை என்றால் அவரை மோசமாகத் திட்டுவது, ஊழியர்கள் செய்து முடித்திருந்த பணியை அவர்களுக்கு தெரியாமலேயே மாற்றுவது எனப் பல செயல்களைச் செய்து வந்தார். இதுபோன்ற நடவடிக்கைகளை எல்லாம் கைவிட்டு விட வேண்டும் என்பதையும் மஸ்க் புரிந்துகொண்டார்.

இதுகுறித்து அவர் நினைவுகூறும்போது, ‘நான் என்னுடைய பள்ளி, கல்லூரி நாட்களில் ஒரு விளையாட்டு அணிக்குக்கூடத் தலைவனாக இருந்ததில்லை. ஒரு குழு எப்படிச் செயல்படும் என்பது எனக்குச் சுத்தமாக தெரியாது. என்னைப்போலவே அனைவரது நடத்தைகளும் இருக்க வேண்டும், என்னைப்போலவே அனைவரும் சிந்திக்க வேண்டும் என நான் எதிர்பார்த்தேன். ஆனால் அது தவறு என்பதை புரிந்துகொண்டேன். என்னையே ஒரு பிரதி எடுத்து உருவாக்கினாலும் கூட அது என்னைப்போல சிந்திக்கவோ, செயல்படவோ செய்யாது என்பதுதான் உண்மை. ஒருவரிடம் பணியை ஒதுக்கும்முன் அவர் இடத்தில் இருந்து சிந்திக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டேன்’ எனக் கூறினார்.

மஸ்க் சகோதரர்கள் விட்டு வந்த ஜிப்2 நாளடைவில் அதன் செயல்பாட்டையே முழுமையாக மாற்றியது. காம்பேக் நிறுவனம் தனது ஆல்டாவிஸ்டா வெப் தேடல் சேவையை விரிவு செய்ய ஜிப்2வின் வளங்களைப் பயன்படுத்திக்கொண்டது. அதனால் என்ன நோக்கத்திற்காக ஜிப்2 உருவாக்கப்பட்டதோ அந்தச் சேவை மஸ்க் சகோதரர்கள் வெளிவந்தபோதே நின்றுவிட்டது. இது குறித்து நீண்ட நாட்களுக்குப் பிறகு பேட்டியளித்த கிம்பல் மஸ்க், ‘எங்கள் நிறுவனம் விற்கப்பட்டது மகிழ்ச்சிதான். அவர்கள் நாங்கள் விட்டு வந்ததைத் தொடர்வார்கள் என நம்பினோம். ஆனால் அவர்களுக்குத் தொலைநோக்குப் பார்வையும் இல்லை, ஒழுங்கான செயல் திட்டங்களும் இல்லை. எதற்காக ஜிப்2 தொடங்கப்பட்டதோ அந்தக் காரணத்தில் இருந்து விலகி தொலைதூரம் சென்றிருந்தது. இறுதியில் காணாமலேயே போய்விட்டது’ எனத் தெரிவித்தார்.

பல ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்திருந்தாலும் ஜிப்2தான் மஸ்க்கிற்குப் பல பாடங்களைச் சொல்லிக்கொடுத்தது. அவரை இன்று இருக்கும் சிறந்த நிர்வாகியாக உருமாற்றுவதற்கு அடிதளமிட்டது. ஒரு சிறிய யோசனையில் உதித்த கருத்தை ஒரு நிறுவனமாக உருமாற்றி, அவற்றை லாபம் ஈட்டும் சேவையாக மஸ்க்கால் மாற்ற முடிந்தது. ஆனால் அதைச் செய்வதற்கு அவர் கடந்து வந்த பாதை வலி மிகுந்தது.

மஸ்க் ஒரு தலைவனாக தன்னை நிலைநிறுத்த விரும்பினாலும், அவரைச் சுற்றி இருந்தவர்கள் அதை எளிதாகச் செய்யவிடவில்லை. மஸ்க்கால் போராடித்தான் அனைத்தையும் பெற முடிந்தது. பலர் அவரை இறுதிவரை புரிந்துகொள்ளாமலேயே இருந்தனர். ஆனால் மஸ்க்கிற்குத் தன் மீது நம்பிக்கை இருந்தது. கிடைத்திருக்கும் பணத்தை வைத்து அடுத்தது என்ன செய்யப்போகிறோம் என்ற புரிதல் இருந்தது. தன்னை புரிந்துகொள்ளாதவர்களுக்கு தன்னை நிரூபிக்க வேண்டும் என வேகம் கொண்டார். ஆனால் அடுத்ததாக அவர் செல்லப்போகும் பாதை முன்பை விடக் கடினமான முட்களைக் கொண்டிருக்கும் என்பது அவருக்கு அப்போது தெரியாது!

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *