Skip to content
Home » எலான் மஸ்க் #13 – எக்ஸ் டாட் காம்

எலான் மஸ்க் #13 – எக்ஸ் டாட் காம்

எக்ஸ் டாட் காம்

இன்று பெட்டிக்கடையில் ஒரு குச்சி மிட்டாய் வாங்கினால்கூட பணம் கொடுப்பதற்கு கூகுள் பே இருக்கிறதா என்றுதான் கேட்கிறோம். இணையம் சார்ந்த நிதிப் பரிவர்த்தனை அந்த அளவிற்கு உலகம் முழுவதும் இன்று வியாபித்திருக்கிறது. டிஜிட்டல் கட்டமைப்பில் வங்கி சார்ந்த சேவைகள் முழுக்க முழுக்க இணையத்தை நம்பியே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

ஒரு மணி நேரம் இணையம் வேலை செய்யவில்லை என்றால்கூட முடிந்தது கதை. அந்த நாளில் ஏற்படும் பொருளாதார பாதிப்பும் நேர விரயமும் நாம் கற்பனை செய்வதைவிட அதீதமான சிரமத்தைப் பொதுமக்களுக்கு ஏற்படுத்துகின்றன. இத்தகைய இணையம் சார்ந்த நிதிப் பரிவர்த்தனைகளைக் கட்டமைத்த முன்னோடிகளில் ஒருவராக மஸ்க்கும் வரலாற்றில் இடம்பெறுகிறார்.

ஜிப்2 இணையதளத்தின் விற்பனை எலான் மஸ்க்கிற்குப் பெரும் உத்வேகத்தை அளித்திருந்தது. அந்தச் சமயத்தில் பலரது கனவாக இருந்த சிலிகான் பள்ளத்தாக்கின் செல்வந்தர்களின் பட்டியலில் மஸ்க்கும் இணைந்திருந்தார். இதில் அவருக்கு ஏக சந்தோஷம். தன்னால் எதையும் செய்து முடிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கை அவரை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது.

கிடைத்த 22 மில்லியன் டாலரில் விலை மதிப்பு வாய்ந்த கார்கள், ஆடம்பர வாழ்க்கை எனச் செலவழித்துக்கொண்டிருந்த அவருக்குள் அடுத்தது என்ன என்ற கேள்வி உதிக்கத் தொடங்கியது. கடந்தமுறை செய்த தவறுகளை இந்தமுறை செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதேபோல் போனமுறை போல முதலீட்டாளர்களைத் தேடி அலையும் சிரமமெல்லாம் இந்த முறை இருக்காது. ஒரு சிறந்த திட்டம் இருந்தால் போதும். முதலீடுகளைப் பிடித்து ஒரு புதிய தொழிலைத் தொடங்கிவிடலாம். ஆனால் எந்தத் தொழில் தொடங்குவது என்பதுதான் அவருக்குக் கேள்வியாக இருந்தது.

வழக்கம்போல தனக்குத் தெரிந்த இணையத் தொழில்நுட்பம் சார்ந்த தொழிலைத்தான் தொடங்கவேண்டும் என்று அவர் நினைத்தார். ஆனால் இந்த முறை ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது எல்லாம் பத்தாது. ஒரே உலுக்கில் மொத்த மாங்காய்களையும் அள்ளிவிடவேண்டும். கொத்துக் கொத்தாகப் பணம் புழங்கும் ஒரு துறையை எடுத்து அதை இணையம் சார்ந்தத் தொழிலாகக் கட்டமைக்க வேண்டும். அப்படியொரு துறையையும் தொழிலையும் தேர்ந்தெடுக்கவேண்டும்! எதைத் தேர்ந்தெடுப்பது?

அப்போதைய பணம் கொழிக்கும் துறை என்றால் மென்பொருள், கணினி சார்ந்த தொழில்தான். ஆனால் அதை ஏற்கெனவே செய்துவிட்டோம். இந்தமுறை வேறு ஏதாவது ஒன்றை முயற்சித்துப் பார்த்துவிட வேண்டும். வெளியே எதையும் தேடிக்கொண்டிருப்பது சரிப்பட்டு வராது. பணத்தையே அடிப்படையாகக் கொண்டு இயங்கும் துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என நினைத்தார். அதுதான் வங்கித்துறை.

‘வங்கித்துறையை எடுத்து அதில் மக்களுக்கு இருக்கும் சிரமங்களை இணையத்தின் உதவி கொண்டு நிரப்ப வேண்டும். தீர்ந்தது விஷயம். இதுதான் நான் செய்யப்போகும் தொழில்!’ என முடிவெடுத்தார். அவர் வங்கித்துறையைத் தேர்வு செய்வதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. அது வங்கிகளிடையே அப்போது நிலவி வந்த ஒருவித பிற்போக்கு மனப்பான்மை.

எலான் மஸ்க்கும் கிம்பல் மஸ்க்கும் கனடாவிற்கு வந்த புதிதில் பீட்டர் நிக்கல்சன் என்பவருக்கு போன் செய்து பேசி, நேரில் சென்று சந்தித்தார்கள் என முன்பே பார்த்தோம் இல்லையா? அந்த பீட்டர் நிக்கல்சன், தான் நிர்வாகியாகப் பணிபுரியும் நோவா ஸ்காடியா வங்கியில், மஸ்க்கை உதவியாளராகப் பகுதி நேரமாக சேர்த்திருந்த நேரம். அவர் பணியாற்றி வந்த வங்கி மூன்றாம் உலக நாடுகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் அளித்து வந்த கடன் கணக்குகளைக் கையாண்டு வந்தது. அந்தக் கணக்கு வழக்குகளைப் பார்த்தபோதுதான் மஸ்க்கிற்கு அதில் ஒரு வணிக வாய்ப்பு இருப்பது புலப்பட்டது.

அமெரிக்க நிதி நிறுவனங்கள் தென் அமெரிக்க நாடுகளான பிரேசில் மற்றும் அர்ஜெண்டினாவுக்கு சில அரசியல் காரணங்களுக்காகக் கடன்களை வழங்கி வந்தன. அந்தக் கடன்கள் ‘பிரேடி பாண்ட்’ (Brady Bond) எனப்படும் கடன் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்தன. இந்தக் கடன் பத்திரங்களை 50 செண்டுகள்வரை விற்கலாம் என அமெரிக்க அரசு நிர்ணயித்திருந்தது.

ஆனால் இந்தப் பத்திரங்கள் வெறும் 25 செண்டுக்கு மட்டுமே விற்கப்பட்டு வந்தன. ஓர் இடைத்தரகராக இந்தப் பத்திரங்களை 25 செண்ட் மதிப்புக்கு மொத்தமாக வாங்கி, அவற்றை 50 செண்டுக்கு விற்றால் பத்திரத்திற்கு 25 செண்ட் லாபம் பார்க்கலாம் என்பதுதான் மஸ்க்கின் கணக்கு. 10 மில்லியன் டாலர்கள் தொகை வரை 25 செண்ட் மதிப்புக்கு இந்தப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் மஸ்க் தெரிந்துகொண்டார்.

இதுதான் பணத்தை எளிமையாக உருவாக்கும் வாய்ப்பு எனப் புரிந்துகொண்ட மஸ்க், நேராக தனது மேலாளரிடம் சென்று தனது திட்டத்தைக் கூறினார். இந்தத் திட்டத்தில் தயக்கம் காட்டிய அவருடைய மேலாளர், இதுகுறித்து விரிவான அறிக்கை ஒன்றைத் தயார் செய்து கொடுக்கச் சொன்னார். அதையும் மஸ்க் தயார் செய்து தரவே, அதைப் படித்துக்கூட பார்க்காத வங்கித் தலைமைச் செயலதிகாரி அந்தத் திட்டத்தை நிராகரித்துவிட்டார். மஸ்க் எவ்வளவோ முயற்சி செய்தும் அவர் செவி சாய்க்கவில்லை. ஏற்கெனவே பிரேசில், அர்ஜெண்டினாவுக்கு கடன் வழங்கும் விவகாரத்தில் நமது வங்கி நிறைய இழப்பைச் சந்தித்துள்ளது. இனிமேலும் இந்த விவகாரத்தில் ரிஸ்க் எடுக்க முடியாது என கறாராகச் சொல்லிவிட்டார்.

இங்குதான் அமெரிக்க வங்கிகளின் மனநிலை குறித்த ஓர் உண்மையை மஸ்க் அறிந்துகொண்டார். அமெரிக்க வங்கிகள் யாராவது ஒருவர் செய்வதைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுகின்றன. அது நல்லதாக இருந்தாலும் சரி, நஷ்டத்தை ஏற்படுத்தினாலும் சரி. புதிய திட்டங்களை முயற்சி செய்து பார்ப்பதை அவை விரும்பவில்லை. இது குறித்து மஸ்க் கூறும்போது, ‘ஒரு வங்கி மாடியில் இருந்து குதித்தால் மற்ற வங்கிகளும் மாடியில் இருந்து குதிக்கும். யாராவது தங்கக் காசுகளை கொண்டு வந்து மலை அளவு குவித்து வைத்திருந்தாலும், யாராவது ஒருவர் எடுக்கும்வரை மற்ற வங்கிகள் அவற்றை எடுக்காமல் நின்று வேடிக்கை பார்க்கும்!’ எனக் குறிப்பிடுவார்.

இதே மனநிலைதான் இணையம் சார்ந்த வங்கிச் சேவைகள் வழங்குவது குறித்த செயல்பாடுகளின்போதும் வங்கிகளிடையே இருந்தது. வங்கிச் சேவையை இணையத்தில் கொண்டுவரத் திட்டமிட்ட மஸ்க், நிதி நிறுவனங்கள் இணையத்தில் இயங்க வேண்டிய அவசியம் குறித்து சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள், முதலீட்டாளர்களிடம் உரையாற்றினார்.

அதில், வளர்ந்து வரும் இணைய சூழலில் நிதிப் பரிவர்த்தனை மற்றும் வங்கி அமைப்பு இணையத்தைச் சார்ந்து இருப்பது தவிர்க்க முடியாததாக இருக்கும் என அறிவுறுத்தினார். ஆனால் அங்கிருந்தவர்கள் மஸ்க்கின் கருத்துக்கு எதிராகப் பேசி, அவருடைய தன்னம்பிக்கையைக் குலைக்கும் வேலையில் ஈடுபட்டனர். வங்கிச் சேவையை இணையத்தில் கொண்டு வருவது கடினம், இணையம் பாதுகாப்பு இல்லாதது. வாடிக்கையாளர்கள் இணையத்தில் வங்கிச் சேவையை தொடர முன் வர மாட்டார்கள் எனப் பல்வேறு கருத்துக்களைக் கூறி மறுத்து வந்தனர்.

ஆனாலும் மஸ்க் விடுவதாக இல்லை, நிதித்துறை நிச்சயம் பெரிய மாற்றத்தைச் சந்திக்க வேண்டியது இருக்கும், அவற்றைச் சிறிய முதலீடு மூலமாக நாமே செய்துவிட முடியும். வங்கியை இணையத்திற்குக் கொண்டு வர மிகப்பெரிய கட்டமைப்பு எல்லாம் தேவையில்லை எனக் கூறினார்.

ஆனால் மஸ்க்கின் கருத்து உதாசீனம் செய்யப்பட்டது. மக்கள் ஆன்லைனில் புத்தகத்தை வாங்குவதற்காக தங்களுடைய கிரெடிட் கார்ட் எண்களை இணையத்தில் பதிவிடுவதற்குத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் வங்கிக் கணக்கு விவரங்களை இணையத்தில் வெளியிடுவதற்குத் தயாராக இல்லை. இனியும் வங்கிச் சேவையை இணையத்தில் கொண்டுவருவது எப்படி என வெட்டியாகப் பேசிக்கொண்டு இருப்பதைத் தவிர, வேறு வேலை இருந்தால் போய் பாருங்கள் எனக் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

ஆனால் மஸ்க் கேட்பதாக இல்லை. அவருக்கு, தான் இறங்கும் தொழிலில் முழு நம்பிக்கை இருந்தது. நான் செய்வதைத்தான் செய்வேன் எனக்கூறி, முழு நேரச் சேவையை வழங்கும் நிதி நிறுவனத்தை ஆன்லைனில் தொடங்குவது என்ற முடிவுக்கு வந்தார். இந்த நிறுவனத்தில் ஆன்லைன் மூலமே சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு உள்ளிட்டவற்றை ஆரம்பிக்கலாம். இதைத்தவிர தரகு சேவை, காப்பீடு உள்ளிட்டவையும் இதில் வழங்கப்படும். இதைத்தான் நான் செய்யப்போகிறேன் என வெளிப்படையாக அறிவித்தார்.

ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. மஸ்க் கூறும் இந்தச் சேவைகளை வழங்குவதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவது எளிதாகத்தான் இருந்தது. ஆனால் அதற்கான ஒழுங்குமுறையை வடிவமைப்பதுதான் கடினமாக இருந்தது. சாதாரண வங்கிகளுக்கே வழிகாட்டு நெறிமுறைகள், ஒழுங்குமுறைகள் என ஏகப்பட்ட சட்டச் சிக்கல் இருக்கும்போது, இணையத்தில் உருவாக்கப்படும் ஒரு நிதி நிறுவனத்திற்கு அரசு ஒப்புதலுடன் ஓர் ஒழுங்குமுறையை நிர்ணயிப்பது பெரும் சவாலாக இருந்தது.

இது ஜிப்2 போல பீட்சா சாப்பிட விரும்புபவர்களுக்கு அவர் செல்லும் இடத்திற்கு வழிகாட்டுவது போல எளிதான விஷயமல்ல. மக்களின் நிதியைக் கையாள வேண்டும். இன்றைய அதிநவீனத் தொழில்நுட்பச் சூழலிலேயே மக்களின் பணம் எளிதாகத் திருடப்படும்போது, கையாடல் செய்யப்படும்போது இணையம் பொதுமக்களின் புழக்கத்திற்கு வந்து சில ஆண்டுகளில் மக்களின் நிதியைக் கையாள்வது மிகக் கடினம். இணையத்தில் எப்படிப்பட்ட மோசடி நடக்கும் என்பதே கணிக்க முடியாத சூழலில், யார் மக்களின் நிதிக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் தர முடியும்? அவ்வாறு பாதுகாப்பை வழங்குவது தவறும்பட்சத்தில் சந்திக்கும் விளைவுகளும் கடுமையானதாக இருக்கும் அல்லவா?

ஆனாலும் எலான் மஸ்க் இதைப்பற்றியெல்லாம் சிந்தித்துக் கவலைப்படுபவர் இல்லை. யாரும் செய்ய முடியாததை, செய்திராததை நிகழ்த்துவதுதான் தன்னுடைய சிறப்பு என்றே நம்புபவர். ஆன்லைன் நிதி தொழிலிலும் ஓர் ஆட்டம் ஆடிப் பார்த்துவிட முடிவு செய்தார்.

அது ஜிப்2 விற்கப்படும் நிலை. மஸ்க், அந்த நிறுவனத்தில் உள்ள சிறந்த பொறியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தன்னுடைய புதிய நிறுவனத்திற்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். கனடாவில், தான் இண்டர்ன்ஷிப் செய்த நிறுவனத்தின் ஊழியர்களிடம் ஒரு வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி வைத்திருந்தார். 1999ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜிப்2 நிறுவனத்தை விற்பதற்கு முடிவு செய்யப்பட்டது. மார்ச் மாதம் மஸ்க் இணைய நிதி நிறுவனத்தைத் தொடங்கினார். அதை விளம்பரப்படுத்துவதற்கு ஏதுவாக ஆபாச இணையதளத்தின் பெயரிலேயே எக்ஸ்.காம் (X.com) என்ற பெயரில் அதைத் தொடங்கினார்.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *