Skip to content
Home » எலான் மஸ்க் #14 – நூறு கோடி கனவு

எலான் மஸ்க் #14 – நூறு கோடி கனவு

நூறு கோடி கனவு

எக்ஸ் டாட்காம் தொடங்கப்பட்டபோது எலான் மஸ்க் சிலிகான் பள்ளத்தாக்கின் பிரமுகர்களில் ஒருவராகிப் போயிருந்தார். அவருடைய ஜிப்2வை வாங்குவதற்கு ‘காம்பேக்’ என்ற பெரிய நிறுவனமே முன்வந்தது இதற்கு முக்கியக் காரணம். இரண்டாவது அவர் தன்னைப் புத்திசாலியாகவும் பணக்காரராகவும் விளம்பரப்படுத்திக்கொண்டது.

இன்றும்கூட எலான் மஸ்க் என்றால் விளம்பரப் பிரியர், எப்போதும் ஏதாவது அதிரடியாகப் பேசிக்கொண்டும், செய்துகொண்டும் ஊடகங்களின் கவனத்தைத் தன் பக்கமே வைத்திருக்க விரும்புபவர் எனக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இதையெல்லாம் அவர் வீம்பிற்காகச் செய்வதில்லை. வேண்டுமென்றே செய்கிறார் என்பதுதான் மஸ்க்கின் சிறப்பு.

சந்தைக்கான இலக்கணமே விளம்பரங்கள்தான். உங்களிடம் உலகிலேயே சிறப்பு வாய்ந்த பொருள் இருக்கலாம்; ஆனால், அதைச் சிறப்பாக விளம்பரம் செய்யவில்லை என்றால் அது போணியாகாது. அதேபோல் உங்களிடம் மிக மோசமான பொருள் இருந்தால்கூட அதையும் விளம்பரம் மூலம் விற்றுவிடலாம். விளம்பரம்தான் உங்கள் நிறுவனம், நீங்கள் விற்கும் பொருள், உங்கள் சேவை மக்கள் மனதில் பதிவதற்கு அவசியம் என்பதுதான் தொழில்வல்லுநர்கள் கூறும் தாரக மந்திரம். இதை மஸ்க் நன்கு அறிந்து வைத்திருந்தார்.

ஜிப்2 விற்கப்படுவதற்கு முன் அதன் நிர்வாகம் தன் கையை விட்டுப் போகிறது என்றபோதே அவருக்குப் புரிந்துவிட்டது. ஒரு நிறுவனம் தன் கட்டுப்பாட்டிற்குள் இருக்கலாம், விற்கப்படலாம். அந்த நிறுவனத்தை மட்டும் மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்த்தால் போதாது. தானும் பிரபலமாக வேண்டும். என் நிறுவனத்தை மறப்பவர்கள்கூட என்னைப்பற்றி பேசிக்கொண்டே இருக்கவேண்டும்.

இதில் இரண்டு நன்மைகள் இருக்கின்றன. ஒன்று மக்கள் மத்தியில் என் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் கவனிக்கப்படும். நான் தொடங்கும் ஒரு புதிய நிறுவனம் அவர்களைச் சென்றடைவது எளிதாகும். மற்றொன்று அடுத்தமுறை ஒரு முதலீட்டாளரைச் சந்தித்து நிதி கேட்கும்போது தான் யார் என விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கத் தேவையில்லை. என் பெயரைக் கேட்டவுடனேயே முதலீட்டாளர்கள் பணத்தை வாரி இறைக்கத் தயாராக இருக்க வேண்டும். இதைத்தான் மஸ்க் செய்யத் தொடங்கினார்.

ஜிப்2 வை விற்றவுடன் அதில் கிடைத்த தொகையை வைத்து ‘எக்ஸ் டாட்காம்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கியாகிவிட்டது. இத்தனைக்கும் எக்ஸ் டாட்காம் செயல்படத் தொடங்கவில்லை. ஏன், திட்டம்கூடத் தயாராகவில்லை. வெறும் அலுவலகம் ஒன்றைப் பிடித்து பெயர் மட்டும்தான் வைக்கப்பட்டிருந்தது. அப்போதே அதை விளம்பரப்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு மஸ்க் வந்திருந்தார். இப்போது என்ன செய்யலாம்? இதற்குத்தான் மஸ்க் ஒரு புதிய திட்டத்தை உருவாக்கி இருந்தார்.

ஜிப்2வை விற்று தனக்குக் கிடைத்த தொகையில் ஒரு மில்லியன் டாலருக்கு மெக்லெரன் எஃப்1 எனப்படும் ஆடம்பரமான ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றை வாங்கினார். அது வீட்டிற்கு வந்து டெலிவரி செய்யப்படும் நாளில் காலை 7 மணிக்கெல்லாம் சிஎன்என் தொலைக்காட்சியை அழைத்து அந்த நிகழ்வைப் படம் பிடிக்க வைத்தார். கேமராவில் தன் காதலி ஜஸ்டினை கட்டியணைத்தபடி காட்சியளித்த மஸ்க் ‘உலகிலேயே 62 மெக்லெரன் கார்கள்தான் இருக்கின்றன. அதில் ஒன்று என்னிடம் இருக்கிறது’ என உரக்க அறிவித்தார்.

இதற்கு அடுத்தது மஸ்க் செய்ததுதான் ஒரு சிறந்த விளம்பர நிபுணர்கூட யோசித்தே பார்க்க முடியாத உத்தி. சிஎன்என் கேமராக்களைப் பார்த்துப் பேசிய அவர் ‘இப்போது என்னிடம் உலகிலேயே அதிவேகமான கார் இருக்கிறது. இதற்குப் பிறகு நான் பஹாமாவில் உள்ள ஒரு தீவை விலைக்கு வாங்கப்போகிறேன் என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. நான் அடுத்ததாக புதிய நிறுவனம் ஒன்றை உருவாக்கி வருகிறேன். என்னுடன் வந்து அதைப் பாருங்கள்’ எனக்கூறி எக்ஸ் டாட்காம் அலுவலகத்திற்கு நடந்து சென்றார். கேமராக்கள் மஸ்க்கைப் பின்தொடர்ந்து சென்றன.

எக்ஸ் டாட்காம் நிறுவனத்தின் அலுவலகத்தை, அதன் நோக்கத்தை சிஎன்என் மூலம் உலகிற்கு அறிமுகப்படுத்திய அவர், ‘என்னைப் பார்த்தால் ஒரு வங்கி நிறுவனர்போல உங்களுக்குத் தெரியாது. ஆனால் நான் நினைத்தால் ஒரு சில போன்கள் மூலம் உடனே 50 மில்லியன் டாலர்களைத் திரட்டிவிட முடியும். என்னுடைய எக்ஸ் டாட்காம் லட்சங்களுக்கான கனவு கிடையாது. பல நூறு கோடிகளுக்கான கனவு’ என முடித்தார். இந்தச் சம்பவம் அமெரிக்காவில் ஒளிபரப்பாகி பெரும்பாலான மக்களைச் சென்றடைந்தது.

இன்றும் கூட அவருடைய மெக்லெரன் அறிமுகக் காணொளியின் ஒரு பகுதியை சிஎன்என் யூடியூப் சேனலில் நீங்கள் காணலாம்.

எக்ஸ் டாட்காமைத் தொடங்கவேண்டும் என்று நினைத்தவுடனேயே, தன்னுடைய ஒவ்வொரு நகர்வையும் விவாதமாக்க வேண்டும் என்று மஸ்க் முடிவெடுத்துவிட்டார். மஸ்க் மெக்லெரன் காரைக் கொண்டு வந்து இறக்குவதற்கு முன், அதை அவர் வாங்கப்போகிறார் என்ற செய்திகூட சர்ச்சையாகும் வகையில்தான் ஊடகங்களில் வந்தது. மஸ்க் வாங்கியிருந்த அதே மெக்லெரன் கார் மற்றொரு புகழ்பெற்ற செல்வந்தரான ரால்ஃப் லாரன் என்பவரால் வாங்க இருந்தது. அவர் விசாரித்துவிட்டுப் போயிருந்த காரைத்தான் மஸ்க் உடனடியாக புக் செய்து வாங்கி வந்தார். இதுவே ஊடகங்களில் தீ போல பரவிவிட்டது.

அது மட்டுமல்ல, ஒருவேளை லாரன் போன்ற செல்வந்தர்கள் மெக்லெரன் காரை புக் செய்தால் அதைச் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஞாயிறு விடுமுறையில் இன்பமாக உலா வருவதற்கும்தான் பயன்படுத்தி இருப்பார்கள். ஆனால் மஸ்க் அப்படி இல்லை. சிலிகான் பள்ளத்தாக்கின் மூலை முடுக்கெல்லாம் தனது காரை எடுத்துச் சென்று காட்டினார். எக்ஸ் டாட்காம் அலுவலகம் அமைந்திருந்த தெருவில் இருந்த குப்பை மேடுகளுக்கு இடையே தனது ஆடம்பர காரை நிறுத்தி அதையும் பேசு பொருளாக்கினார்.

ஒருநாள் மெக்லெரன் கார் வைத்திருக்கும் மற்றொரு நபரைத் தேடிக் கண்டுபிடித்து தன்னுடன் போட்டியில் கலந்துகொள்ளத் தயாரா எனச் சவால் விட்டு மின்னஞ்சல் அனுப்பினார். அவர் போட்டிக்கு அழைத்தது ஆரக்கள் நிறுவனத்தின் இணை நிறுவனர், கோடீஸ்வரர் லேரி எலிசனை. லேரி எலிசன் அவருக்குப் பதிலளிக்கும் முன்னரே ஜிம் கிளார்க் என்ற மற்றொரு கோடீஸ்வரர் அவருக்குப் பதிலளித்தார். மெக்லெரன் காரில் என்னால் போட்டிக்கு வர முடியாது. உள்ளூரில் இருக்கும் ஃபெராரி கிளப்பில் இணைந்துவிட்டால் நாம் போட்டியிடலாம் என ஜிம் கிளார்க் கூறினார். உடனே மஸ்க் அந்த கிளப்பிலும் இணைந்துவிட்டார். இவ்வாறு அவர் சிலிகான் பள்ளத்தாக்கின் முக்கிய ஆளுமைகளில் தானும் ஒருவர் என மக்களுக்குத் தெரியப்படுத்திக் கொண்டே இருந்தார்.

மெக்லெரன் காரின் வருகை மட்டுமல்ல, முடிவும் ஒரு விளம்பரமாகத்தான் அமைந்தது. ஒருநாள் முதலீட்டாளர் ஒருவரைச் சந்திக்கும்போது மெக்லெரன் காரை எடுத்துச்சென்ற அவர், தன் நண்பரிடம் சாகசம் செய்வதாகச் சொல்லி காரை சுழற்றிச் சுழற்றி ஓட்டினார். அப்போது அங்கிருந்த மேடையில் கார் ஏறி காற்றில் பறந்தது. பின் கீழே இறங்கும்போது சாலையில் விழுந்த காரின் ஜன்னலும், சக்கரங்களும் துண்டு துண்டாக உடைந்தன.

கார் முழுவதும் சேதமடைந்து உடைந்த பாகங்களாகக் காட்சியளித்தது. பதறியடித்த நண்பர் ஓடிச்சென்று மஸ்க்கைப் பார்த்தார். மஸ்க் கொஞ்சமும் பதறாமல் சிரித்தபடியே காரில் இருந்து வெளியே வந்தார். நல்லவேளை காருக்கு காப்பீடாவது இருக்கிறதே என நண்பர் கூற, ‘நான் இன்னும் காரை காப்பீடு செய்யவே இல்லை’ என மஸ்க் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் கூறிவிட்டு நண்பரின் காரில் ஏறிச் சென்றுவிட்டார்.

அன்று முதல் இன்று வரை ஆங்கில ஊடகங்களில் சர்ச்சையின் ஊற்றாகவும், சாதனைகளின் நாயகனாகவும் தினம் தினம் மஸ்க் இடம்பிடித்து வருகிறார். அவர் அப்போது செய்த விளம்பரங்கள் எக்ஸ் டாட்காமைச் சக தொழிலதிபர்களிடம் கொண்டு சேர்த்தன.

மக்களும் யார் இந்த எலான் மஸ்க்? அவர் தொடங்கிய எக்ஸ் டாட்காம் நிறுவனம் என்ன எனப் பேசத் தொடங்கி இருந்தனர். இதுதான் சமயம் எனக் கருதிய மஸ்க் தன்னுடைய பணக்கார வேடத்தையெல்லாம் ஓரம்கட்டிவிட்டுத் தன்னுடைய நிறுவனத்தின் உண்மையான திட்டம் என்ன என்று மக்களுக்குக் காட்டத் தொடங்கினார்.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *