Skip to content
Home » எலான் மஸ்க் #15 – புதிதாய் மாற்றுவோம்

எலான் மஸ்க் #15 – புதிதாய் மாற்றுவோம்

புதிதாய் மாற்றுவோம்

‘எலான் மஸ்க் முட்டாளாகத்தான் இருக்க வேண்டும்.’

எக்ஸ் டாட் காம் நிறுவனத்தைத் தொடங்கியபோது பலரும் அவரது காதுபடவே இவ்வாறுதான் பேசினர். அவர்கள் பேசியதற்கு நியாயமான காரணமும் ஒன்று இருந்தது. ஜிப்2வை விற்றுக் கிடைத்த 22 மில்லியன் டாலரில் உலகிலேயே அரிதான மெக்லெரன் காரை ஒரு மில்லியன் டாலருக்கு வாங்கி, அதை ஒரு சில நாட்களிலேயே சுக்குநூறாக உடைத்ததற்காக யாரும் அவரை அப்படிப் பேசவில்லை. மஸ்க் அதைவிட ஆபத்தான ஒன்றைச் செய்திருந்தார். அதாவது தன்னிடம் மீதம் இருந்த தொகையில் வரிகள் போக வெறும் 4 மில்லியன் டாலர்களை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு, 12 மில்லியன் டாலர்களைப் புதிதாகத் தொடங்கியுள்ள, இதற்குமுன் யாரும் செய்யத் துணிந்திராத எக்ஸ் டாட் காமில் முதலீடு செய்திருந்தார்.

இதற்கு சில நடைமுறைக் காரணங்களும் இருந்தன. முதலீட்டாளர்கள் தங்களுக்குக் கிடைக்கும் தொகையை ஓரிரு மாதங்களில் உடனேயே புதிய நிறுவனங்களில் முதலீடு செய்தால் வரிச் சலுகை என்ற நடைமுறை அமெரிக்காவில் இருந்து வந்தது. அதனால்தான் அவர் அந்தத் தொகையை எக்ஸ் டாட்காமில் முதலீடு செய்திருந்தார். இருப்பினும் தனக்கு அப்போதுதான் கிடைத்திருந்த 12 மில்லியன் டாலர் தொகையை எந்த யோசனையும் இல்லாமல் ஆன்லைன் வங்கி என உதவாக்கரை ஐடியாவில் மஸ்க் முதலீடு செய்தது சிலிகான் பள்ளத்தாக்குப் பணக்காரர்களுக்கே சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

90களில் சிலிகான் பணக்காரர்களுக்கு இருந்த பெரிய அனுகூலமே அவர்கள் ஒவ்வொரு முறையும் அத்தனைப் பெரிய தொகையைத் தாங்கள் தொடங்கப்போகும் புதிய நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்பதுதான். அன்றைய காலகட்டத்தில் இணையம் சார்ந்த நிறுவனம் ஒன்றைத் தொடங்கி அதில் லாபம் அடைந்த பலரும், தன்னை நிரூபித்த பலரும், தங்களுக்குக் கிடைத்த பணத்தைப் பத்திரமாக வங்கியிலோ வீட்டில் ஒரு பெட்டியிலோ மூடி வைத்துவிடுவார்கள்.

பின்பு புதிய நிறுவனம் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற ஆசை வந்தால், தனக்குக் கிடைத்த புகழையே சான்றாக வைத்து புதிய நிறுவனத்திற்கான முதலீட்டை மற்றவர்களிடம் இருந்து திரட்டத் தொடங்குவர். அதுதான் அன்றைய நடைமுறையாக இருந்தது. மஸ்க்கிற்கு அப்போது இருந்த புகழிற்கு, ஒரு சொல் சொன்னால் போதும், கோடிகளைக் கொண்டு வந்து கொட்டும் அளவிற்கு முதலீட்டாளர்கள் காத்திருந்தனர். ஆனால் அவர் தன்னுடைய சொந்தப் பணத்தைத்தான் முதலீடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்கு என்ன விலையானாலும் கொடுப்பதற்குத் தயாராக இருந்தார். இன்டெல் போன்ற பெரிய நிறுவனங்கள்தான் இதுபோன்ற துணிச்சலான முதலீடுகளை அப்போது செய்து வந்தன.

மஸ்க்கிற்குப் பெரிய தொகையை முதலீடு செய்வது என்பது அதிசயமாக எல்லாம் தோன்றவில்லை. அவர் ஏற்கெனவே சொன்னதுபோல, ‘மனிதர்கள் இல்லாத தீவை வாங்கி வைத்துக்கொண்டு காதலியுடன் விடுமுறையைக் கழிப்பதில் எல்லாம் எனக்கு சுவாரஸ்யம் கிடையாது. அடுத்ததாக என்னை நிரூபிக்க ஒரு நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறேன். அதன் ஐடியா மீதும், என் மீதும் நம்பிக்கை வைத்துத்தான் இவ்வளவு பெரியத் தொகையை முதலீடு செய்கிறேன். இதற்கான பலனை நான் அடைவேன்’ என உறுதியாக இருந்தார்.

இதுகுறித்து எக்ஸ் டாட் காமின் இணை நிறுவனர்களில் ஒருவராக இருந்த எட் ஹோ (Ed Ho) கூறியபோது, ‘யாருமே செய்ய முன்வராத ஆபத்தான முயற்சியில் மஸ்க் இறங்கினார். அதுபோன்ற ஒரு முயற்சியில் ஈடுபடுவது ஒன்று உங்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுக்கும், அல்லது எல்லாவற்றையும் இழந்துவிட்டு தெருவில் தங்குவதற்கு நேரிடும். ஆனால் மஸ்க்கிற்கு அதுபற்றியெல்லாம் கவலையில்லை. எலான் மஸ்க்கையும், பூமியில் வாழும் சாதாரண மனிதர்களையும் பிரிப்பது அவருடைய சாகச மனநிலைதான். குறுகிய நாட்களில் சாதனைகளைப் படைக்க முடிந்தததற்கு வாழ்க்கையுடன் அவர் நடத்திய சூதாட்டம்தான் காரணம்’ என சுட்டிக்காட்டினார்.

உண்மையில் மஸ்க் நுழைய இருந்தது மிகவும் குழப்பமான ஒரு தொழிலில். உண்மையில் அவருக்கே வங்கித்துறையின் நடைமுறை எல்லாம் பெரிதாகத் தெரியாது. அதைப் பற்றி அவர் கவலைப்படவும் இல்லை. அவர் இண்டர்ன்ஷிப் செய்தபோது கிடைத்த சொற்ப அனுபவத்தில், வங்கி அதிகாரிகள் எல்லாம் வெட்டிச் சம்பளம் வாங்குவதாகக் குற்றம் சொல்லிக்கொண்டு இவ்வளவு பெரிய ரிஸ்கை எடுக்க முன்வந்தார். மஸ்க்கிற்கு அப்போது இருந்த ஆர்வமும், அகங்காரமும் பலரையும் அவர் மீது அச்சம் கொள்ளவைத்து, விலகி ஓட செய்தது. ஆனால் சிலர் அவர் மீது ஈடுபாடு கொண்டு இணைந்து பணியாற்ற முன் வந்தனர். அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் நாம் மேலே பார்த்த எட் ஹோ. ஜிப்2வில் பொறியாளராகப் பணியாற்றியவர். கோடிங் செய்வதிலும், அணியை நிர்வாகம் செய்வதிலும் பெயர் பெற்றவர். அவர் எக்ஸ் டாட்காமில் கொஞ்சம் முதலீடு செய்து பணியாற்றுவதற்கு முன் வந்தார்.

அவரைப்போலவே மேலும் இருவர் வந்தனர். அதில் ஒருவர் நிதித்துறையில் நல்ல அனுபவம் கொண்ட ஹாரிஸ் ஃப்ரிக்கர். இவர் கனடாவைச் சேர்ந்தவர். மஸ்க், நோவா ஸ்காட்டியா வங்கியில் இண்டர்ன்ஷிப் செய்தபோது அவருக்குப் பழக்கம். நல்ல அறிஞர். வங்கித்துறையின் செயல்பாடு மற்றும் நுணுக்கங்களை அறிந்தவர். அவரின் ஞானத்தை எக்ஸ் டாட்காமில் மஸ்க் பயன்படுத்த நினைத்தார். மஸ்க்கை நம்பி களமிறங்கினார் ஹாரிஸ் ஃப்ரிக்கர். கடைசியாக வந்த நபர் கிறிஸ்டோபர் பெயின். இவர் ஃப்ரிக்கரின் நண்பர். கனடாவில் உள்ள நிதி நிறுவனங்களில் பல தொடர்புகளைக் கொண்டவர். ஃப்ரிக்கரை நம்பி இவரும் முதலீடு செய்ய முன்வந்தார். இவர்கள் நான்கு பேரும் இணைந்துதான் எக்ஸ் டாட்காமைத் தொடங்கினர். இதில் அதிகம் முதலீடு செய்தவராக மஸ்க் இருந்தார். மற்ற சிலிகான் பள்ளத்தாக்கு நிறுவனங்களைப்போல வீடு ஒன்றில்தான் எக்ஸ் டாட் காம் நிறுவனம் தொடங்கப்பட்டது. பின் பாலோ ஆல்டோவில் உள்ள பல்கலைக்கழக அவெயின்யூவிற்கு அலுவலகம் மாற்றப்பட்டது.

எக்ஸ் டாட்காமை தொடங்கிய நான்கு பெயருடைய பார்வையும் ஒன்றுபோலவே இருந்தது. அதாவது வங்கித்துறை கால ஓட்டத்திற்கு ஏற்றவாறு தன்னை மேம்படுத்திக்கொள்ளாமல் பின் தங்கி உள்ளது. இன்றைய இணையச் சூழலில் நினைத்த மாத்திரத்தில் எல்லாம் கிடைக்கும்போது வங்கிச் சேவை மட்டும் ஏன் பழங்காலத்து முறையிலேயே இருக்க வேண்டும். மக்கள் நிதி சார்ந்த விஷயங்களுக்கு வங்கிக்குச் சென்று காத்திருக்கக்கூடாது. நினைத்த நேரத்தில் வீட்டில் இருந்தே அவர்களுக்கான சேவையைப் பெற வேண்டும். அந்தச் சேவையை இணையம் வழியாக நாம் வழங்கினால் என்ன? இதுதான் எக்ஸ் டாட் காம் குறித்து நால்வரும் சிந்தித்து வைத்திருந்த செயல்திட்டம்.

இது கேட்பதற்கு நன்றாக இருக்கலாம். நல்ல யோசனையாகத் தோன்றலாம். ஆனால் இதைச் செயல்படுத்துவதற்குச் சிக்கலாக இருந்த ஒரே விஷயம் யதார்த்தம். எலான் மஸ்க்கிற்கு முதலில் வங்கித் துறையில் அனுபவமே கிடையாது. அவர் வங்கி பற்றி தெரிந்துகொள்வதற்காக நிறைய புத்தகங்களை வாங்கி வைத்துக்கொண்டு இரவு பகலாக படித்துக்கொண்டிருந்தார்.

மற்ற உறுப்பினர்களுக்கு நிதித்துறையில் அனுபவம் இருந்தாலும் அமெரிக்காவின் வங்கி ஒழுங்குமுறைச் சட்டதிட்டங்களும், குறிப்பாக ஆன்லைன் சார்ந்து அந்தச் சட்டங்களுக்கு இணங்க ஒரு செயல்பாட்டு முறையை உருவாக்குவது என்பது அவர்களுக்குச் சிக்கலாகவே இருந்தது. இதனால் ஆன்லைன் வங்கி என்ற கருத்து, கற்பனைக் கனியாகவே அவர்களின் எண்ணங்களில் இருந்து வந்தது. நிறுவனம் தொடங்கி ஒன்று, இரண்டு, மூன்று என ஐந்து மாதங்கள் ஓடிவிட்டன. இன்னும் முதற்கட்ட பணிகள் கூடத் தொடங்கப்படாமல் இருந்தது.

இதுவே அங்கு பிரச்னையானது. இதுபோதாது என்று நிறுவனர்கள் நான்கு பேருக்குள்ளும் ஆளுமை மோதல்கள் வேறு ஏற்படத் தொடங்கியது. மஸ்க் சிலிகான் பள்ளத்தாக்கின் புதிய நாயகனாக உதித்து வந்ததும், ஊடகங்கள் அனைத்தும் அவர் மீதே கவனம் செலுத்தியதும் மற்றவர்களுக்கு ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்தியது. குறிப்பாக ஃப்ரிக்கரால் இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வங்கித்துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தில்தான் ஏற்கெனவே தான் இருக்கும் வேலையை விட்டுவிட்டு கனடாவில் இருந்து கிளம்பி ஃப்ரிக்கர் அமெரிக்காவிற்கு வந்தார்.

ஆனால் இங்கு நிலைமை வேறு மாதிரி இருக்கிறது. ஓரிரு மாதங்களில் ஆன்லைன் வங்கி என்ற கனவு வேலைக்கு ஆகாது என தெரிந்தவுடனேயே, சாதாரண வங்கி நடைமுறைகளைப் பின்பற்றி எக்ஸ் டாட்காமை கொண்டு செல்லலாம் என்பதுதான் அவரது நினைப்பாக இருந்தது. இதைப்பற்றி மஸ்க்கிடம் பலமுறை பேசியும் அவர் செவி சாய்க்கவில்லை. போதாத குறைக்கு மஸ்க் தினம் தினம் ஊடகங்களைச் சந்தித்து, ‘நாங்கள் முழு வங்கித்துறையை மாற்றப்போகிறோம். ஆன்லைன் வங்கி வரப்போகிறது. புதிய புரட்சி தொடங்க இருக்கிறது’ என்பது போன்ற வாக்குறுதிகளை அள்ளி வீசினார்.

இது ஃப்ரிக்கருக்கு ஆத்திரத்தை மூட்டியது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஃப்ரிக்கர் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்தார். நேராக மஸ்க்கிடம் சென்றார். ‘நிறுவனத்தைத் தொடங்கி 5 மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் ஒரு வேலையும் தொடங்கவில்லை. ஆனால் நீங்கள் ஊடகத்தில் சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் பூமிக்குக் கொண்டு வருவதாகக் கூறி வாக்குறுதி கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். யதார்த்தம் குறித்த அக்கறை கொஞ்சமாவது உங்களுக்கு இருக்கிறதா?’ எனக் கேட்டுவிட்டார்.

மஸ்க் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ‘நீங்கள் பிற தொழில்களைப்போல இணையத் தொழிலையும் நினைத்துவீட்டிர்கள். இந்த வணிகச் சூழலே வித்தியாசமானது. நீங்கள் அதற்கு ஏற்றாற்போல சிந்தனையை மாற்றப் பழக வேண்டும். பழைய சிந்தனையில் ஊறிப் போயிருப்பதை விட்டுவிட்டு, புதிய உலகை நோக்கி முதலில் வெளியே வாருங்கள்’ எனக் கூறினார்.

மஸ்க் மற்றும் ஃப்ரிக்கருக்கு இடையேயான வாக்குவாதம் கொஞ்ச நாட்களில் மோதலாக உருமாறியது. இறுதியில் அணுகுண்டைப்போல வெடித்து, எக்ஸ் டாட் காம்மின் தலையெழுத்தையே மாற்றும் அளவிற்குச் சென்றது. ஜிப்2வில் நடந்ததுபோலவே ஃப்ரிக்கர் மஸ்க்கிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். ‘மஸ்க்கை தலைமைச் செயல் அதிகாரி பதவியில் இருந்து தூக்கிவிட்டு, என்னை நியமிக்க வேண்டும். இல்லையென்றால் இங்கு இருப்பவர்களை எல்லாம் அழைத்துக்கொண்டு சென்று நான் புதிய நிறுவனத்தைத் தொடங்கிவிடுவேன்’ என மிரட்டத் தொடங்கினார். கடுப்பான மஸ்க், ‘இந்த மிரட்டல் வேலையெல்லாம் என்னிடம் நடக்காது. இப்போதே நடையைக் கட்டுங்கள்’ எனக் கூறிவிட்டார்.

எக்ஸ் டாட் காம் ஊழியர்கள் தன் பக்கம் இருப்பார்கள் என்று நம்பித்தான் மஸ்க் அவ்வாறு பேசி இருந்தார். ஆனால் நடந்தது தலைகீழாக இருந்தது. ஃப்ரிக்கருடன் சேர்ந்து பெயினும், ஹோவும் கூட கிளம்புவதற்குத் தயாராகினர். விஷயம் அறிந்த மஸ்க் தன் நண்பரான ஹோவுடனும் மற்ற முக்கியப் பொறியாளர்களுடனும் பேசி நடந்த விஷயங்களைக் கூறி அவர்களை தன்னுடைய நிறுவனத்திலேயே இருக்கும்படி கேட்டார். ஆனால் அவர்கள் ஏற்கெனவே ஃப்ரிக்கரின் பக்கம் சேர்ந்துவிட்டிருந்தனர்.

ஐந்து மாதங்கள் ஆகியும் ஆரம்பக் கட்டப் பணிகளே முடியாதது அவர்களுக்கு நம்பிக்கையை இழக்கச் செய்தது. இனியும் இங்கிருந்தால் வேலைக்கு ஆகாது எனக் கூறி ஃப்ரிக்கருடன் சேர்ந்து அவர்களும் வெளியேறினர். தன்னுடன் இருப்பார்கள் என்று நினைத்தப் பலரும் நிறுவனத்தில் இருந்து வெளியேறியது மஸ்க்கிற்கு வேதனையையும், ஏமாற்றத்தையும் அளித்தது. என்ன செய்வது என்றே தெரியாமல் இருந்தார். ஆனாலும் சில அடிமட்ட ஊழியர்கள் மஸ்க்கின் மீது நம்பிக்கை கொண்டு அவருடன் இருந்தனர். அவர்கள் மஸ்க்கைச் சந்தித்து எக்ஸ் டாட் காமின் அடுத்தக்கட்ட பணிகள் என்ன எனக் கேட்டது அவருக்குப் புதிய நம்பிக்கையை அளித்தது.

எஞ்சிய ஊழியர்களை அழைத்து மஸ்க் பேசத் தொடங்கினார். ‘இந்த இடத்தில் இருக்கும் லட்சக்கணக்கான சட்டங்கள் எக்ஸ் டாட் காம் என்ற நிறுவனம் உருவாவதை தடுத்துக் கொண்டிருக்கின்றன. நான் நம்பிய பலரும் என்னை விட்டுச் சென்றுவிட்டனர். ஆனால் அதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலையில்லை. நாம் இன்றில் இருந்து பணிகளைத் தொடங்கப்போகிறோம். சென்றவர்களுக்கு பதிலாக சிறந்த நபர்களை பணியில் சேர்ப்போம். எக்ஸ் டாட் காம் உருவாவதைத் தடுக்கும் வங்கி விதிகளைப் புதிதாக மாற்றி எழுதுவோம்’ என சூளுரைத்தார்.

(தொடரும்)

பகிர:
nv-author-image

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *