2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் எக்ஸ் டாட் காமும், கன்ஃபினிட்டியும் இணைந்தன. எலான் மஸ்க் அந்த ஒன்றிணைந்த நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியானார். இரு நிறுவனங்களும் இணைந்தது தெரிந்ததுமே ஏராளமான நிறுவனங்கள் அவற்றில் முதலீடு செய்ய முன்வந்தன. இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி ஜெர்மன் வங்கி மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து எக்ஸ் டாட் காம் 100 மில்லியன் டாலரைப் பெற்றுக்கொண்டது.
இரு நிறுவனங்களும் இணைந்தது அவற்றில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கும் சற்று ஆசுவாசத்தை அளித்தது. இரு தரப்பினரும் போட்டிப் போட்டுக்கொண்டு பணியாற்றியதில் கடுமையாகச் சோர்வடைந்திருந்தனர். இப்போது அவர்களுக்குக் கொஞ்சம் நிதானிக்க ஓய்வு கிடைத்தது. இருவருடைய அலுவலகங்களும் அருகிலேயே இருந்ததால், சிலர் தங்களுடைய கணினியைத் தூக்கிக்கொண்டு சென்று பிற ஊழியர்களுடன் பணியாற்ற எத்தனித்தனர். இவ்வாறு பணியாளர்களிடையே ஒற்றுமை நிலவினாலும், தலைமையில் இன்னும் மோதல் இருந்துகொண்டுதான் இருந்தது.
முதலில் நிறுவனத்தின் பெயரிலேயே பிரச்னை தொடங்கியது. ஒரு நிறுவனத்தின் பெயர் மக்கள் மனதில் எவ்வாறு பதிவாகிறதோ அதை வைத்துத்தான் பிராண்ட் லாயல்டி எனப்படும் விஸ்வாசம் அந்த நிறுவனத்துடன் மக்களுக்கு ஏற்படும். இன்று நாம் நகலெடுக்கும் பணியை போட்டோ காப்பி என அழைப்பதில்லை, ஒரு நிறுவனத்தின் பெயரைக் கொண்டு ஜெராக்ஸ் என்றுதான் அழைக்கிறோம். அதேபோல வனஸ்பதி என்ற பொருள் நம் நினைவுக்கு வருவதில்லை. பெரும்பாலானோருக்கு டால்டா என்ற ஒரு நிறுவனத்தின் பெயர்தான் வனஸ்பதியின் பெயராக மனதில் பதிந்திருக்கிறது. இந்த எடுத்துக்காட்டே ஒரு பிராண்டின் பெயர் மக்கள் மனதில் பதிய வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
அந்த வகையில் அப்போதைய காலக்கட்டத்தில் ‘எக்ஸ் டாட் காம்’ என்ற பெயரை விட, ‘பேபால்’ என்ற பெயர்தான் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தது. எக்ஸ் டாட் காம் என்பது ஏதோ ஓர் ஆபாச இணையதளத்தின் பெயரைப்போல இருப்பதாக மக்கள் கருதினர். இந்த விவாதம் மோதலாக அலுவலகத்திலும் எழத்தொடங்கியது.
பெரும்பாலான ஊழியர்கள் பேபால் என்ற பெயரையே நிறுவனத்தின் பெயராக மாற்றிவிடலாம் என்று கூறினர். எலான் மஸ்க் விடாப்பிடியாக எக்ஸ் டாட் காம் என்ற பெயர்தான் தான் தொடங்கிய நிறுவனத்தின் பெயராக இருக்க வேண்டும் எனச் சண்டையிட்டு வந்தார். இதுவே அங்கிருந்தவர்களுக்கு மக்ஸ்க்கின் பிடிவாத குணத்தின் மீது எதிர்மறையான கருத்தை உருவாக்கியது.
இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல பிரச்னைகள் எழத்தொடங்கின. நிறுவனத்தின் பெயரைத் தொடர்ந்து, நிறுவனத்தின் தொழில்நுட்பக் கட்டமைப்பை எவ்வாறு வரையறுக்க வேண்டும் என்பது பற்றிய சண்டை மூண்டது. கன்ஃபினிட்டி அணியை வழிநடத்தி வந்த மேக்ஸ் லெவ்சின், எக்ஸ் டாட் காம் நிறுவனத்தின் மென்பொருள் லினக்ஸ்ஸை போன்று ஓபன் சோர்ஸாக (Open Source) இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதாவது எக்ஸ் டாட் காம் மென்பொருளின் உரிமம் அந்த நிறுவனத்திடம்தான் இருக்கும். ஆனால் அதை பயன்படுத்தும் பிற நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றங்களைச் செய்துகொள்ளலாம். இதன்மூலம் அந்த நிறுவனத்தின் தொழில்நுட்பம் பரவலாகும் என்பதுதான் லெவ்சினின் எண்ணம்.
ஆனால் எலான் மஸ்கோ, மைக்ரோ சாஃப்டின் வழிமுறையைப் பின்பற்றினார். எக்ஸ் டாட் காம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தைப் போன்று தரவுகளை மையமாகக் கொண்ட (Data Centred) மென்பொருள் கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதன்மூலம் மக்கள் தங்கள் மென்பொருளை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்ற தரவுகளைச் சேகரித்து அதற்கு ஏற்றாற்போல் தங்கள் சேவையை மேம்படுத்த முடியும் என்பதுதான் மஸ்க்கின் திட்டம்.
இது சாதாரண வாக்குவாதமாக எழுந்து பெரும் கலவரமாகவே நிறுவனத்திற்குள் உருமாறியது. மஸ்க்கின் செயல்பாடுகள் ஒரு சர்வாதிகாரியின் செயலைப்போல இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இதனால் இரு நிறுவனங்களும் இணைந்த இரண்டே மாதத்தில் கன்ஃபினிட்டியை நிறுவிய பீட்டர் தீயல், அந்நிறுவனத்தில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். லெவ்சினோ, நிறுவனத்தில் இருந்து வெளியேறப்போவதாக மிரட்டல் விடுத்தார்.
இது ஒருபக்கம் இருக்க, மற்றொருபுறம் எக்ஸ் டாட் காமின் வாடிக்கையாளர்கள் கட்டுக்கடங்காமல் அதிகரித்ததும் அந்நிறுவனத்திற்குப் பெரிய சிக்கலானது. வாடிக்கையாளர்களின் பயன்பாடு பெருகப் பெருக எக்ஸ் டாட் காம் இணையதளத்தில் தொழில்நுட்பப் பிரச்னைகள் எழத்தொடங்கின. வாரத்திற்கு ஒருமுறை நிறுவனத்தின் இணையதளம் முடங்கிவிடும். அதைச் சரி செய்து பயனுக்குக் கொண்டு வர, மீண்டும் முடங்கும். இதனால் பணப் பரிவர்த்தனை தொடர்பான நடவடிக்கைகளில் பெரிய சிக்கல் ஏற்பட்டது.
இதைச் சரி செய்வதற்கு அந்நிறுவனத்தின் தலைமை, அங்கிருந்த பொறியாளர்களைக் கொண்டு பாதுகாப்பான அமைப்பைக் கொண்ட புதிய இணையதளத்தைக் கட்டமைக்கும் செயல்பாடுகளில் இறங்கியது. இதுவும் சிக்கலாகிப்போனது. எக்ஸ் டாட் காமின் அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் புதிய இணையதளத்தை கட்டமைப்பதில் அதில் கவனம் செலுத்தவே, பழைய இணையதளத்தின் மீதான ஹேக்கர்களின் தாக்குதல் தீவிரமடைந்தது.
எந்த அளவுக்குப் பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்ததோ, அதே அளவுக்கு மோசடியும் அதிகரித்தது. மக்களின் பணம் கொள்ளை போவதற்கு எக்ஸ் டாட் காம் தன் சொந்த நிதியில் இருந்து நிவாரணம் வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இத்துடன் சேர்ந்து எக்ஸ் டாட் காம் ஒப்பந்தமிட்டிருந்த வங்கிகளும், கிரெடிட் கார்ட் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் எக்ஸ் டாட் காமிற்கு வழங்கி வந்த சேவைக் கட்டணங்களை உயர்த்தின. போதாதகுறைக்கு எக்ஸ் டாட் காமிற்குப் போட்டியாக ஆன்லைன் வங்கிச் சேவையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் போட்டி நிறுவனங்களும் முளைக்கத் தொடங்கின.
இத்தனைச் சிக்கல்களும் வந்து மஸ்க்கின் தலையில் விடிந்தது. எல்லாத் தரப்பினரும் எலான் மஸ்க்கையே குற்றம் சாட்டினர். நிலைமை கையை மீறிப் போயிருந்தது. எக்ஸ் டாட் காமிற்கு என ஒருங்கிணைந்த வியாபார அமைப்பு இல்லை. தான் கையாளும் பணத்தை எப்படி லாபகரமாக மாற்ற வேண்டும் என்பதே அந்த நிறுவனத்திற்குத் தெரியவில்லை. இருக்கும் பணத்தை இழந்து நஷ்டத்தைத்தான் அந்த நிறுவனம் விலைக்கு வாங்கிக்கொண்டிருக்கிறது என நிறுவனத்திற்கு உள்ளேயே எதிர்க்குரல்கள் கிளம்பின.
இந்தப் பிரச்னைகள் குறித்துப் பேசுவதை மஸ்க் தவிர்த்து வந்ததும்கூட, அவருக்கு எதிரான விமர்சனங்கள் கடுமையாவதற்குக் காரணமாக அமைந்தது. எக்ஸ் டாட் காம் சந்திக்கும் பிரச்னைகள் குறித்த தெளிவான பார்வையை அவர் நிறுவனத்தின் உறுப்பினர் குழுவிடம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் மஸ்க்கின் முடிவெடுக்கும் திறன் மீது கேள்வி எழுப்புவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து சிலிகான் பள்ளத்தாக்கின் வரலாற்றிலேயே யாரும் கண்டிராத மோசமான சதித்திட்டம் ஒன்று மஸ்க்கிற்கு எதிராக அரங்கேறியது.
அது 2000ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம். எக்ஸ் டாட் காமின் சிறிய அளவிலான பணியாளர்கள் குழு ஒன்று பாலோ ஆல்டோவில் உள்ள மதுபான விடுதியில் நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் கூடியது. அவர்கள் எலான் மஸ்க்கை எப்படி நிறுவனத்தை விட்டு வெளியேற்றலாம் எனத் திட்டம் தீட்டினர்.
அவர்களின் யோசனை இதுதான், மஸ்க்கை உடனேயே நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, அவருக்கு பதில் தனது பதவியை ராஜினாமா செய்திருந்த பீட்டர் தியலை மீண்டும் தலைமைச் செயலதிகாரியாக நியமிக்க வேண்டும். இந்தத் திட்டத்தை நிர்வாகக் குழுவிடம் ரகசியமாகத் தெரிவிக்க வேண்டும். வேறு யாருக்கும் விஷயம் தெரிந்துவிடக்கூடாது. மஸ்க்கின் ஆதரவாளர் ஒருத்தருக்குத் தெரிந்தால்கூட முடிந்தது கதை. அதனால் ரகசியமாக இதனைச் செய்து முடிக்க வேண்டும் என அவர்கள் முடிவெடுத்திருந்தனர்.
ஆனால் மஸ்க்கிற்குத் தெரியாமல் ரகசியமாக இதை எப்படிச் செய்து முடிக்க முடியும்? மஸ்க்கின் ஆதரவாளர்களுக்குத் தெரிவது இருக்கட்டும். இத்தனை பெரிய திட்டத்தைச் செயல்படுத்தும்போது மஸ்க்கிற்கே இது தெரிய வந்துவிடுமே. அதுவும் மற்ற தலைமை அதிகாரிகளைப்போல அல்ல, வீடு என்று ஒன்று இருப்பதையே மறந்து இருபத்தி நான்கு மணி நேரமும் அலுவலகத்திலேயே கிடக்கும் நபர் மஸ்க். அவருக்குத் தெரியாமல் இதைச் செய்து முடிக்க முடியுமா? அதற்கான சூழலும் அமைந்தது.
2000ம் ஆண்டின் ஜனவரி மாதம்தான் எலான் மஸ்க்கிற்கும், அவரது நீண்ட நாள் காதலியான ஜஸ்டினுக்கும் திருமணம் முடிந்திருந்தது. மணம் முடிந்து வெளியே செல்வதற்குக்கூட நேரமில்லாமல் மஸ்க் அலுவலகத்திலேயே கிடந்தார். இதனால் அவருக்கும், ஜஸ்டீனுக்கும் அடிக்கடி சண்டை ஏற்படத் தொடங்கியிருந்தது. அலுவலகம் கிடக்கட்டும், குடும்ப நிலைமையை முதலில் சரி செய்ய வேண்டும் என்று நினைத்த மஸ்க், செப்டம்பர் மாதம் ஜஸ்டீனை தேனிலவுக்கு அழைத்துச் செல்வதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
அதற்காகத்தான் மஸ்க் சில நாட்கள் விடுமுறையில் செல்ல இருந்தார். அதிலும் நிறுவனம் சார்ந்த ஒரு திட்டமும் இருந்தது. எக்ஸ் டாட் காமிற்கு நிதித்திரட்ட சில முதலீட்டாளர்களை அவர் சந்திக்க வேண்டியது இருந்தது. அதற்காக ஆஸ்திரேலியா சென்றுவிட்டு, அப்படியே சிட்னியில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிக்கு ஜஸ்டீனுடன் செல்வதாக திட்டமிருந்தார். அவரது அந்த விடுமுறை நாட்களைத்தான் சதிக்குழு அவருக்கு எதிராகப் பயன்படுத்திக்கொண்டது.
அவர் தேனிலவு செல்வதற்கு விமானம் ஏறியதுதான் தாமதம், எக்ஸ் டாட் காம் ஊழியர்கள் குழு மஸ்க்கிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைத் தயார் செய்து நிர்வாகக் குழு உறுப்பினர்களிடம் அளித்தது. இந்தச் சந்திப்பு இரவு 10:30 மணிக்கு நடைபெற்றது. அந்தச் சமயத்தில் எதேச்சையாக அலுவலகத்திற்குச் சென்ற மஸ்க்கின் நண்பர் அங்கன்பிரான்ட், இந்த நேரத்தில் அத்தனை ஊழியர்கள் கூடியிருப்பதைக் கண்டு திகைத்துவிட்டார்.
எதுவோ தவறாக நடக்கிறது என்பது அவருக்குத் தெரிந்தது. அது என்ன என்பதை அவர் தெரிந்துகொள்வதற்கு முன் காலம் கடந்துவிட்டது. உடனடியாக மஸ்க்கைத் தொடர்புகொள்வதற்குத் தொலைபேசி மூலம் அங்கன்பிராண்ட் அழைத்தார். ஆனால் மஸ்க் விமானத்தில் இருந்ததால் அவரால் தொலைபேசியை எடுக்க முடியவில்லை. மஸ்க்கின் விமானம் ஆஸ்திரேலியாவில் தரையிறங்கிய அதே நேரத்தில், எக்ஸ் டாட் காம் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டு, பீட்டர் தீயல் புதிய தலைமைச் செயலதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
(தொடரும்)