நீண்டநாட்களாகப் போராடி மஸ்க் மேற்கொண்டிருந்த தேனிலவுப் பயணம் ஒரே ஒரு போன் காலினால் முடிவுக்கு வந்தது. மஸ்க் ஆஸ்திரேலியாவில் கால் வைத்தவுடனேயே அவருக்கு வந்த போன் கால், அவரது பதவி பறிக்கப்பட்டதாக அலறியது. விஷயம் தெரிந்தவுடன் கொஞ்சம் கூட தாமதிக்காத மஸ்க், அடுத்த விமானத்தை பிடித்து பாலோ ஆல்டோவில் உள்ள தனது அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தார். அவர் வருவதற்குள் அனைத்தும் மாறி இருந்தது.
இந்த முறை மஸ்க்கின் கருத்து எதையும் நிர்வாகக் குழு கேட்பதாக இல்லை. மஸ்க்கும் தொடர்ந்து பலவிதமாகச் சண்டையிட்டார். நிர்வாகக்குழுவிடம் சென்று பீட்டர் தியலை தலைமைச் செயல் அதிகாரியாக நியமித்தது தவறு என எடுத்துரைத்தார். நிர்வாகக் குழு ஏன் தன் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என வாதாடினார்.
‘இங்கே பாருங்கள். எனக்குத் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்க வேண்டும் என்பது எல்லாம் ஆசை கிடையாது. ஆனால் இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்குச் சில பல முக்கியமான விஷயங்கள் நடைபெற வேண்டியது இருக்கிறது. முக்கிய முடிவுகளை எடுத்தாக வேண்டியது இருக்கிறது. நான் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்காவிட்டால் அந்தத் திட்டங்கள் எதையும் செயல்படுத்த முடியாது. அதனால் எனக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்புத் தாருங்கள்’ என மன்றாடினார்.
ஆனால் நிர்வாகக் குழு, தான் எடுத்த முடிவில் விடாப்பிடியாக இருந்தது. முடியவே முடியாது என மறுத்துவிட்டது. அடுத்ததாக மஸ்க், பீட்டர் தியலிடம்கூட சென்று தனிப்பட்ட முறையில் பேசிப்பார்த்தார். அவரும் விட்டுக்கொடுப்பதாக இல்லை. ‘நீங்கள் கூறும் திட்டங்களை நானே தலைமைச் செயலதிகாரியாக இருந்து நிறைவேற்றுகிறேன். நீங்கள் இப்போது ஒதுங்கிக்கொண்டு எனக்கு வழி விடுங்கள்’ எனக் கறாராகச் சொல்லிவிட்டார்.
அவ்வளவுதான் இதற்கு மேல் என்ன செய்தாலும் பயனில்லை, பெரும்பான்மையான நிர்வாகக் குழு உறுப்பினர்களும், ஊழியர்களும் பீட்டர் தியலுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்கள். அதனால் எப்படியும் தான் மீண்டும் பதவிக்கு வர முடியாது என்பதை மஸ்க் உணர்ந்துகொண்டார். இதனால் உலகம் என்ன அழிந்தாவிட்டது என நினைத்துக்கொண்டு வாக்குவாதம் செய்வதையும் நிறுத்திவிட்டார்.
ஆனாலும் மஸ்க்கிடம் இருந்த பதவி ரகசியமாக, குறுக்கு வழியில் பறிக்கப்பட்டது ஒரு கோழைத்தமான செயல் என அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டுதான் இருந்தனர். அவர்களது வாயை அடைக்க வேண்டிய நிர்பந்தம் பீட்டர் தியலுக்கு ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் எக்ஸ் டாட் காம் நிறுவனத்தின் அதிகப் பங்குகளையும் மஸ்க்தான் வைத்திருந்தார் என்பதால் அவருக்கும் ஏதாவது ஒரு முக்கியப் பொறுப்பை தர வேண்டிய கட்டாயமும் இருந்தது. என்ன செய்வது என பீட்டர் யோசித்தார். திடீரென்று மஸ்க்கிற்குத் தலைமை ஆலோசகர் என்ற பதவியை வழங்கிவிட்டார். அதாவது மஸ்க்கினால் இனி நிறுவனத்தின் போக்குக் குறித்து ஆலோசனை மட்டுமே வழங்கமுடியும். முடிவு எடுக்கும் சக்தி அவருக்குக் கிடையாது என்பதை ஒரு பதவியை வழங்கியது மூலம் பீட்டர் உணர்த்தி விட்டார். மஸ்க்கும் கிடைத்தப் பதவியைக் கெளரவமாக ஏற்றுக்கொண்டார்.
2001-ஆம் ஆண்டு ஜூன் மாதம். எக்ஸ் டாட் காமில் மஸ்க்கின் அதிகாரம் மங்கத்தொடங்கியது. அந்நிறுவனம் முழுமையாக பீட்டர் தியலின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அதே மாதத்தில் தியல் ‘எக்ஸ் டாட் காம்’ என்ற அந்த நிறுவனத்தின் பெயரை ‘பேபால்’ என முழுமையாக மாற்றினார். மஸ்க்கினால் எதுவுமே செய்யமுடியவில்லை. அமைதியாக நிகழும் மாற்றங்களை பார்த்துக்கொண்டிருந்தார். பீட்டரின் தலைமையில் உண்மையிலேயே நிறுவனம் அதன் பிரச்னைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சரி செய்யத்தொடங்கியிருந்தது. வளர்ச்சியை நோக்கி செல்லத் தொடங்கியது.
உள்ளுக்குள் ஏகப்பட்ட பிரச்னைகள் இருந்தாலும் பேபால் மேலும் வளரும் என்பதை மஸ்க் கணித்திருந்தார். அதனால் அதில் தொடர்ந்து முதலீடு செய்பவராகவும், அதிகப் பங்குகளை வைத்திருப்பவராகவும் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநாட்டியே வந்தார். தன்னிடம் இருந்து பதவி பிடுங்கப்பட்டது குறித்த காழ்ப்புணர்ச்சி சிறிது காலம் இருந்தாலும், பீட்டரின் கைக்குள் நிறுவனம் வளர்ந்து வருவதைப் பார்த்து, அவருக்கு வெளிப்படையாகவே ஆதரவு தரவும் மஸ்க் முன் வந்தார். பீட்டரை அந்நிறுவனத்தின் இளவரசன் என்றும் அறிவித்தார். (மறைமுகமாக நான்தான் அந்த நிறுவனத்தின் அரசன் என்பதைச் சொல்லாமல் சொன்னார்.)
அடுத்த ஒரு சில மாதங்களிலேயே மஸ்க்கின் இரண்டாவது இணைய நிறுவனமும் ஒருவழியாக விற்கப்படும் முடிவுக்கு வந்தது. பேபாலின் வளர்ச்சியைக் கண்ட இபே (eBay), அந்நிறுவனத்தை வாங்க முன் வந்தது. பேபாலில் இருந்தவர்களும் எப்படியாவது நல்ல விலைக்கு நிறுவனத்தைத் தள்ளிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். தொடர்ந்து விலை பேரம் நடத்தப்பட்டது. ஆனால் இந்தத் திட்டத்திற்கு மஸ்க் தொடக்கம் முதலே தனது எதிர்ப்பைத் தெரிவித்து வந்தார். பேபால் இப்போது வருடத்திற்கு 240 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டி வருகிறது. அதற்கு இன்னும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. இப்போதைக்கு அதை விற்கும் முடிவைக் கைவிடுங்கள். நிறுவனத்தைப் பொது நிறுவனமாக அறிவித்து, பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்கலாம் என ஆலோசனை கூறினார். ஆனால் பேபாலின் தலைமை அதைக் கேட்பதாக இல்லை. மஸ்க்கின் யோசனையை உதாசீனப்படுத்திவிட்டு இபேயிடம் விற்கும் முடிவை எடுத்துவிட்டது.
2002ம் வருடம் ஜூலை மாதம், இபே நிறுவனம் பேபாலை 1.5 பில்லியன் டாலர்களுக்கு வாங்க முன் வந்தது. அனைவருக்கும் இந்தத் தொகையில் திருப்தி. அழுத்தம் காரணமாக வேறு வழியில்லாமல் மஸ்க்கும் இந்த ஒப்பந்தத்திற்குச் சம்மதம் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் மஸ்க்கிற்கு 250 மில்லியன் டாலர் தொகை கிடைத்தது. வரி எல்லாம் போக கையில் 180 மில்லியன் டாலர் மிஞ்சியது. ஜிப்2வில் கிடைத்த 22 மில்லியன் டாலர்களை விட எட்டு மடங்கு அதிகத் தொகை. மஸ்க்கின் கனவிற்குக் கிடைத்தத் தொகை. ஆனால் இதில் மஸ்க்கிற்கு ஓரளவு மட்டுமே திருப்தி இருந்தது. அவர் கூறியதுபோல அந்த நிறுவனத்தை விற்காமல் இருந்திருந்தாலோ, அல்லது வேறு முதலீடுகளை ஈர்த்திருந்தாலோ அந்நிறுவனத்தை இன்னும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றிருக்கலாம் என்பதுதான் அவர் எண்ணம். அது ஓரளவுக்கு உண்மையாகவும் இருந்தது. 2014ம் ஆண்டு வாக்கில் பேபால் நிறுவனம் சுமார் 15.30 கோடி வாடிக்கையாளர்களைத் தன் வசம் வைத்திருந்தது. அதன் சந்தை மதிப்பு சுமார் 32 பில்லியன் டாலர்களாக இருந்தது. பேபாலைத் தொடர்ந்து உருவான ஸ்கொயர், ஸ்டிரைப், சிம்பிள் உள்ளிட்ட ஆன்லைன் வங்கி நிறுவனங்களால் பேபாலின் பக்கத்தில் கூட நிற்க முடியவில்லை. தனிக்காட்டு ராஜாவாக மஸ்க் கனவு கண்ட பேபால் வலம் வந்தது.
ஆனால் அப்போது இருந்த சிந்தனையோட்டத்தின்படி இணையம் சார்ந்தத் தொழிலைத் தொடங்கும் தொழிலதிபர்கள், ஒரு நிறுவனம் நல்ல வளர்ச்சி அடைந்தவுடன் அதை வேறு ஒரு பெரிய நிறுவனத்திற்கு விற்றுவிட்டு அடுத்த நிறுவனத்தைத் தொடங்குவதில்தான் கவனம் செலுத்தினர் என்பதால், பேபாலும் இபேயிடம் விற்கப்பட்டது.
எலான் மஸ்க்கின் வாழ்க்கையில், பேபால் பகுதி ஜிப்2வை விட சவால்கள் வாய்ந்ததாக இருந்தது. சங்கடங்கள் நிறைந்ததாக அமைந்தது. பேபால் விற்கப்பட்டதற்குப் பின் அவர் சந்தித்த மனரீதியான தொந்தரவுகள் ஏராளம். குறிப்பாக எலான் மஸ்க் என்பவர் ஒரு விளம்பரப்பிரியர் என்று ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். விளம்பரங்கள் மூலம் தன் ஆளுமை குறித்த பிம்பத்தைக் கட்டமைத்துவந்த அவர், அதே விளம்பரங்கள் மூலம் சரிவையும் சந்திக்கத் தொடங்கினார். ஊடகங்கள் முதன்முதலில் எலான் மஸ்க்கிற்கு எதிராகச் செயல்படத் தொடங்கியிருந்தன. காரணம், பேபால் கன்ஃபினிட்டியாக இருந்தபோதிலிருந்து அதில் வேலை பார்த்து வந்த எரிக் ஜாக்சன் என்ற ஊழியர் எழுதிய ஒரு புத்தகம்.
The Paypal Wars: Battles with eBay, the Media, the Mafia, and the Rest of Planet Earth என்ற புத்தகத்தை எரிக் ஜாக்சன் 2004ம் ஆண்டு வெளியிட்டார். பேபால் நிறுவனம் உருவான கதை குறித்த அந்தப் புத்தகத்தில் மஸ்க் ஒரு சர்வாதிகாரிபோல, கொடியவர்போல காட்டப்பட்டிருந்தார். அவருடைய முடிவுகள் அனைத்தும் நிறுவனத்தைச் சரிவுக்கு அழைத்து சென்றதுபோலவும், பீட்டர் தியலும், லெவ்சினும் அதை மீட்ட சேவகர்கள் போலவும் அந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. அந்தப் புத்தகத்தில் இடம்பெற்ற மஸ்க்கிற்கு எதிரானக் கருத்துகளை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்க, இறுதியில், பேபால் நிறுவனத்தின் இணை நிறுவனர் என்ற அந்தஸ்தை மஸ்க்கிற்குத் தர வேண்டுமா என்ற கேள்வி ஒலிக்கத்தொடங்கியது.
விளம்பரங்கள் மூலம் தன்னுடைய ஆளுமையைக் கட்டமைத்து வந்த மஸ்க்கிற்கு, இந்த எதிர்மறை விளம்பரங்கள் பெரும் இடியைப் போல விழுந்தன. சிலிகான் பள்ளத்தாக்கில் மஸ்க்கின் ஆளுமையைக் கேள்வி கேட்கும் குரல்களும் எழும்பத்தொடங்கின. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, ஒரு கட்டத்தில் உடைந்தேபோய்விட்டார் மஸ்க். இது எப்படி நியாயம்? நான் கண்ட கனவு, நான் தொடங்கிய நிறுவனம். இதுவரை யாரும் செய்யாத இணைய தொழில்நுட்பம் சார்ந்த புரட்சி; இன்று பல பில்லியன் மதிப்புகளுக்கு வளர்ந்திருக்கிறது. இப்போது அதன் வரலாற்றில் இருந்து என் பெயரை நீக்குவதா?
தனக்கு எதிராக எழுதப்பட்ட புத்தகத்திற்குப் பதிலடி கொடுக்க விரும்பினார் மஸ்க். 2200 வார்த்தைகளில் மிகப்பெரிய மின்னஞ்சல் ஒன்றைத் தயார் செய்தார். அதில் பேபால் வார் புத்தகத்தை எழுதிய ஜாக்சனை கழுதை என்று நேரடியாகவே திட்டினார். மேலும், தான் தான் பேபால் நிறுவனத்தின் உண்மையான இணை நிறுவனர் என்பதை நிரூபிக்க ஏழு ஆதாரங்களையும் அடுக்கினார். முதலில் என்னிடம்தான் பேபால் நிறுவனத்தின் அதிகப்படியான பங்குகள் இருந்தது. நான்தான் அந்நிறுவனத்தின் தலைசிறந்த திறமையாளர்களைப் பணிக்கு அமர்த்தியவன். அந்நிறுவனத்தின் வெற்றிகரமான திட்டங்கள் எல்லாம் என்னால் வடிவமைக்கப்பட்டவை. வெறும் 60 ஊழியர்களுடன் இருந்த பேபாலை ஆயிரம் ஊழியர்களுக்கு உயர்த்திய சாதனையும் என்னுடையதுதான். இவ்வாறு தன் சாதனைகளைப் பட்டியலிட்டு அந்த மின்னஞ்சலை அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பினார்.
ஒரு சாதாரண விமர்சனத்தை எலான் மஸ்க் போன்ற ஓர் ஆளுமை ஏன் ஆபத்தாக உணர வேண்டும் என்ற கேள்வி அனைவருக்கும் எழலாம். மஸ்க் விமர்சனங்களை மதிப்பவர். ஆனால் அவதூறுகளைச் சாதாரணமாக எடுத்துக்கொள்பவர் அல்ல. விளம்பரங்களும், மக்கள் தொடர்பும் எந்த அளவிற்கு ஒரு தனிமனிதனை, ஒரு நிறுவனத்தை வளர்ச்சியின் உச்சத்திற்குக் கொண்டு செல்லும் எனக் கண்கூடாக உணர்ந்தவர். அதனால் அவரைக் குறித்து ஒரு தவறான தகவல் வெளியில் வருகிறது என்றால் அதைச் சரி செய்யும் வரை ஓயமாட்டார். அவரைப் பற்றி குறை கூறுபவர்கள், வெளிப்படையான குற்றச்சாட்டுகளை வைப்பதில்லை. காரணம் தன்னை பற்றிய ஒரு குற்றச்சாட்டு ஆவணப்படுத்தப்பட்டால் கூட அந்தக் கூற்றை கூறிய நபர் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்து, அவரையோ, அவரது தொழிலையோ முடிவுக்கே கொண்டு வந்துவிடுவார் மஸ்க்.
மஸ்க்கின் மீது பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், பேபாலைப் பொறுத்தவரை அவர் செய்தது அசுரத்தனமான ஒரு சாதனை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். ஜிப்2, பேபால் இரண்டு நிறுவனங்களிலும் மஸ்க்கின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம். மஸ்க்கிற்கு மக்களின் போக்கை உணரும் திறன் இருந்தது. இணையம் என்ற தொழில்நுட்பம் அமெரிக்காவில் பொதுமக்களுக்கு அறிமுகமானபோதே வணிகத்தில் அதன் அனைத்துச் சாத்தியங்களையும், தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் கணித்தவர் அவர். மற்றவர்கள் இணையத்தின் பலன்களை ஆராயத்தொடங்கியபோது, அதை வைத்து மிக வலுவான ஒரு வணிகத் திட்டத்தையே மஸ்க் உருவாக்கி வைத்திருந்தார். பெரும்பான்மையான நிறுவனங்கள் இணையதளத்தைத் தொடங்கியபோது, எலான் மஸ்கோ எதிர்காலத்திற்குப் பயன் தரும் இணைய கோப்புகள், இணைய வரைப்படங்கள் ஆகியவற்றை உருவாக்கத் தொடங்கி இருந்தார். மக்களுக்கு அமேசான், இபே போன்ற ஆன்லைன் வணிகத் தளங்கள் பயன்பாட்டுக்கு வந்த காலத்தில் ஆன்லைனில் வங்கியையே தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்தி முடித்தவர் மஸ்க்.
நாம் முன்னரே பார்த்ததுபோல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஒற்றைப் பரிமாணத்தோடு அணுகாமல் அதை மனித உளவியலோடு ஒப்பிட்டு அதன் சாத்தியங்களை உணர்ந்தவர் மஸ்க். மனித உளவியலை அடிப்படையாகக் கொண்டே தனது விளம்பரம், தொழில்நுட்பம், சேவை திட்டங்களை அவர் வடிவமைத்தார். பிற தொழிலதிபர்களை விட ஒரு கட்டம் முன்னே சென்று ஊடகங்களைத் தனக்கு ஏற்றவாறு வளைத்து நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டார். அதனால்தான் அவரால் தன் நிறுவனத்தைப் பத்தோடு பதினொன்று என்று மறைந்துபோகச் செய்யாமல், ஒரு குறிப்பிட்டத் துறையின் முதன்மை நிறுவனமாகக் கொண்டு வர முடிந்தது.
இணையம் பரவலாகத் தொடங்கியபோது சிலிகான் பள்ளத்தாக்கில் காளான்களைப்போல தினம் தினம் முளைத்துவந்த பெரும்பாலான நிறுவனங்கள் ஒரு கட்டத்தில் காணாமல் போகின. திவாலாகின. ஆனால் மஸ்க்கின் பேபால் இன்றும் இணையம் சார்ந்த பரிவர்த்தனையை மேற்கொள்ளும் நிறுவனமாக நிலைத்து நிற்கிறது. செப்டம்பர் 9/11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கப் பங்குச்சந்தைகள் ஆட்டங்கண்டபோது பேபால் தனது பங்குகளைப் பொதுவெளிக்குத் திறந்துவிட்டு சாதனை படைத்தது.
இன்னும் சொல்லப்போனால் அமெரிக்காவில் ‘பேபால் மாஃபியா’ என்ற பதம் புழக்கத்தில் உண்டு. பேபால் நிறுவனம் சிலிகான் பள்ளத்தாக்கு வரலாற்றிலேயே யாரும் கண்டிராத அளவு வணிக நிபுணர்களையும், பொறியியல் புத்தி ஜீவிகளையும் தன் வசம் கொண்டிருந்தது. எலான் மஸ்க்கும், பீட்டர் தியலும் அதி புத்திசாலிப் பொறியியலாளர்களைத் தேடி அழைத்து வந்து பேபாலில் இணைத்தனர். இன்று வீடியோ உலகின் ஜாம்பவனாக இருக்கும் யூடியூப்பை நிறுவிய ஸ்டீவ் சென், சேட் ஹர்லி, ஜாவெத் கரிம் ஆகிய மூன்று பேரும் பேபால் நண்பர்கள். பேபாலில் ஒன்றாக இணைந்து பணியாற்றியவர்கள். தொழில்நுட்பத் துறையில் ஆதிக்கம் செலுத்திய பலண்டிர் டெக்னாலஜிஸ், யெல்ப் ஆகிய நிறுவனங்களின் நிறுவனர்களும் பேபாலில் தங்களது பணி வாழ்க்கையைத் தொடங்கியவர்கள்தான். அதேபோல் ரெய்ட் ஹோஃப்மேன், பீட்டர் தியல், போத்தா உள்ளிட்ட அமெரிக்காவின் தலைசிறந்த முதலீட்டாளர்கள் பேபாலில் இருந்து உருவானவர்கள்.
இன்று பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடிக்க அமெரிக்காவின் உளவு நிறுவனங்களான சி.ஐ.ஏவும், எஃப்.பி.ஐயும் பயன்படுத்தும் மென்பொருட்களும், திட்ட வழிமுறைகளும் ஆன்லைன் மோசடியைத் தடுக்க பேபால் ஊழியர்களால் உருவாக்கப்பட்டவை. உலக அளவில் பெரிய வங்கிகள் கூட பேபாலின் மென்பொருளைத்தான் பயன்படுத்தி இணையக் குற்றங்களைத் தடுக்கிறது. இவ்வாறு பேபால் உருவாக்கிய ஆளுமைகள்தான் இன்று சிலிகான் பள்ளத்தாக்கையே ஆள்கின்றனர். அமெரிக்கப் பொருளாதாரத்தின் பெரும் பகுதியையே தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திற்கும் இந்த ஆளுமைகளைத்தான் ‘பேபால் மாஃபியா’ என அழைக்கின்றனர். இந்த மாஃபியா கூட்டணியில் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான மனிதர் யார் என்றால் அது எலான் மஸ்க்தான்.
மஸ்க்கைக் குறித்துப் பிற ஆளுமைகள் கூறுவது ஒன்றைத்தான். அவருடைய லட்சியங்கள் அபத்தமாக இருப்பதாகத் தோன்றலாம். ஆனால் அந்த அபத்த லட்சியங்களுக்குப் போதுமான அவகாசத்தை வழங்கினால் அதையும் சாதனையாக மாற்றக்கூடியவர் மஸ்க். யதார்த்தத்தைக் குறித்த அவரது புரிதல் எப்போதும் மற்றவரை விட வித்தியாசமாகவே இருந்து வந்திருக்கிறது. அதற்காக அவருடைய அனைத்து நடவடிக்கைகளும் சரியான வழியில்தான் சென்றதா என்றால் இல்லை. அவர் தனது சொந்த லாபத்திற்காக மனிதர்களைத் தவறான வழியில் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இன்றும் எழுகின்றன. ஒன்றுமே இல்லாத விஷயத்தை ஊதிப் பெரிதாக்கி, பின் அதைப் போட்டு உடைப்பவர் அவர். ஆனால் அவர் செய்யும் வித்தைகள் தன்னுடைய நிறுவனத்திற்கு லாபகரமான விளைவுகளைக் கொண்டு வருவதால்தான் அவர் இன்றும் போற்றப்பட்டு வருகிறார்.
(தொடரும்)