Skip to content
Home » எலான் மஸ்க் #19 – விண்வெளிக் கனவு

எலான் மஸ்க் #19 – விண்வெளிக் கனவு

விண்வெளிக் கனவு

2001ம் ஆண்டு ஜூன் மாதம் இருபத்தி எட்டாம் தேதி, எலான் மஸ்க் தனது முப்பதாவது வயதில் அடியெடுத்து வைத்தார். அதே மாதத்தில்தான் எக்ஸ் டாட் காமில் மஸ்க் தனது தலைமைச் செயலதிகாரிப் பதவியை இழந்திருந்தார். அதனுடைய பெயர் பேபால் என மாற்றப்பட்டபோது அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார். இப்போது முப்பதாவது வயதை அடைந்தது அவருக்குள் கலக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

நேராகத் தன் மனைவியிடம் சென்று, ‘எனக்கு சிலிகான் பள்ளத்தாக்குப் பிடிக்கவில்லை. நாம் இங்கிருந்து வெளியேறி லாஸ் ஏஞ்செலஸ் செல்ல வேண்டும்!’ எனக் கூறினார். ஜஸ்டீனுக்கு எதுவும் புரியவில்லை. திடீர் திடீரென அதிரடித் திட்டங்களை தீட்டுவதுதான் மஸ்க்கின் பாணி. ஆனால் இப்போதே இந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்கு என்ன அவசியம் வந்துவிட்டது? ‘பேபால் நன்றாக வளர்ந்துகொண்டிருக்கிறது. அந்நிறுவனத்தின் அதிகப் பங்குகளை வைத்திருப்பதும் நீங்கள்தான். எல்லாவற்றையும் உதறிவிட்டு லாஸ் ஏஞ்செலஸ் செல்வதற்கு அவசியம் என்ன?’ என்று ஜஸ்டின் மஸ்க்கிடம் கேட்டார்.

உண்மையில் அப்போதே வெளியேற வேண்டும் என்ற எண்ணம் மஸ்க்கிற்கு இல்லை. ஆனால் சிலிகான் பள்ளத்தாக்கை விட்டுச் சென்றுவிட வேண்டும் என்ற சிந்தனை மட்டும் அவரது மனதில் குடிகொண்டிருந்தது. சிலிகான் பள்ளத்தாக்கின் சூழல் அப்போது மாறி இருந்தது. இணையம் சார்ந்த தொழில்நுட்பத்தை வைத்துப் பல கனவுகளைக் கண்டவர் அவர். ஆனால் இப்போது அந்தக் கனவில் நெருடல் ஏற்பட்டுவிட்டது.

தினமும் காலையிலேயே அலுவலகம் சென்று, நாள் முழுவதும் கணினியின் முன்பு அமர்ந்து கணினிமொழி பேசிவிட்டு, இரவு பதினோறு மணிக்கு வீடு திரும்புவது அவருக்கு அலுத்துவிட்டது. இணையம் என்ற அற்புதத்தை வைத்து அவர் உருவாக்கி வைத்திருந்த கனவுகள் ஜிப்2, பேபால் நிறுவனங்கள் மூலம் நிஜமாகிவிட்டன. ஆனால் இப்போது சிலிகான் பள்ளத்தாக்கே ஏதோ எலிகள் கெட்டுப்போன உணவுகளுக்குச் சண்டையிடும் குப்பைக்களம் போன்று மாறிவிட்டது. இந்த மூச்சிறைக்கும் சூழலில் இருந்து வெளி வரவேண்டும் என்பது மட்டும்தான் அவருக்கு மனதில் நிலைகொண்டிருந்தது.

மஸ்க் தன் மனைவியை அழைத்து விஷயத்தைக் கூறினார். ‘நான் இன்னும் குழந்தை கிடையாது. இந்த குண்டுச் சட்டியை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைக்கிறேன். நாம் அமெரிக்காவின் தென் பகுதியான லாஸ் ஏஞ்செலஸ்ஸிற்குச் செல்வோம். அங்கு ஒரு வீட்டை விலைக்கு வாங்கி, குடும்ப வாழ்க்கையை புதிதாகத் தொடங்குவோம். இனி இந்த இடத்தில் நான் இருக்க விரும்பவில்லை. நீ என்ன நினைக்கிறாய்?’ எனக் கேட்டார். ஜஸ்டீன் எதுவும் சொல்லவில்லை. எடுத்த முடிவை மாற்றுபவரா அவர்? ஜஸ்டீனும் உடனே சம்மதித்தார். பேபாலை இபேயிடம் விற்பதற்கான ஆலோசனை நடந்துகொண்டிருந்தபோதே அந்த அழகிய குடும்பம் லாஸ் ஏஞ்செல்ஸுக்குக் குடி பெயர்ந்தது.

உண்மையில் பணிச் சூழல் பிடிக்காத எண்ணத்தில் மட்டும் அவர் லாஸ் ஏஞ்செலஸ் பகுதிக்கு இடம்பெயரவில்லை. அதற்கு வேறு ஒரு காரணம் இருக்க வேண்டும் என ஜஸ்டின் கருதினார். உண்மையில் ஓய்வெடுக்கும் எண்ணம் எல்லாம் மஸ்க்குக்கு வந்ததே இல்லை, எங்கே அதிரடிகள் இருக்கிறதோ, எங்கே சாகசங்கள் இருக்கிறதோ அங்கே இருக்க விரும்புபவர் மஸ்க். இப்போது இங்கே குடியேறியதும் கூட அடுத்த கட்ட திட்டத்திற்குத்தான் இருக்கும் எனக் கருதினார். உண்மையில் ஜஸ்டீன் நினைத்ததுபோலத்தான் மஸ்க்கும் செய்திருந்தார்.

சிலிகான் பள்ளத்தாக்கின் சிறுபிள்ளைகள் விளையாட்டு அவருக்குப் பிடிக்கவில்லை. அந்த இடத்தை விட்டுவிட்டு பெரிய லட்சியம் ஒன்றை நோக்கிச் செல்ல வேண்டும் என எண்ணினார். இன்னும் பெரியதை நோக்கிச் செல்ல அவர் ஆயத்தமானார். அவருடைய பிரம்மாண்டக் கனவுகளுக்குத் தீனி போடும் இடமாக லாஸ் ஏஞ்செலஸ் இருந்தது. அதுதான் அவர் சிறுவயதில் இருந்தே கண்டு வந்த விண்வெளிக் கனவு!

பேபால் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மஸ்க் மீண்டும் தனது சிறுவயதுக் கனவுகளுக்குள் பயணம் செய்யத்தொடங்கினார். விண்வெளிப் பயணமும், ராக்கெட் எஞ்ஜின்களும் அவரது எண்ணங்களை எந்நேரமும் ஆக்கிரமித்து இருந்தன. ஒருமுறை பேபால் நிறுவனத்தின் வெற்றியைக் கொண்டாடுவதற்கு உயர்மட்ட அதிகாரிகள் அனைவரும் லாஸ் வேகாஸில் உள்ள ஒரு விடுதியில் கூடி இருந்தனர். அங்கு அனைவரும் குடித்துக் கும்மாளமிட்டுக்கொண்டிருக்க, எலான் மஸ்க் மட்டும் சோவியத் நாட்டில் இருந்து வெளியான ராக்கெட் தயாரிப்புக் குறித்தப் புத்தகம் ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தார். அந்த விடுதியில் இருந்து வெளியேறும்போது ‘நான் இங்கிருந்து வெளியேறப்போகிறேன். உலகை மாற்றப்போகிறேன்’ என்று நண்பர்களிடம் கூறினார். உண்மையில் அவர் சொன்னபடிதான் செய்திருந்தார்.

அதற்காக அவர் ஏனோதானோ என்றெல்லாம் இடம் மாறிவிடவில்லை. எலான் மஸ்க், லாஸ் ஏஞ்செலஸை தேர்ந்தெடுத்ததற்கும் முக்கியக் காரணமும் இருந்தது. விண்வெளி சார்ந்த துறைகளுக்குப் பெயர்போன இடமாக லாஸ் ஏஞ்செலஸ்தான் இருந்தது. தென் கலிபோர்னியாவின் மிதமான காலநிலை விண்வெளித்துறை வளர்ச்சிக்குச் சாதகமாக இருந்தது. 1920களில் ‘லாக்ஹீட் ஏர்கிராஃப்ட்’ என்ற நிறுவனம் ஹாலிவுட்டில் கடையைத் திறந்ததில் இருந்து அந்த இடம் விண்வெளி நிறுவனங்களின் சந்தையாகவே மாறிவிட்டிருந்தது. ஹூகஸ் ஏர்கிராஃப்ட், நாசா, போயிங், மிரியாட், அமெரிக்க விமானப்படை என அடுத்தத்த பெரிய நிறுவனங்கள் லாஸ் ஏஞ்சலிஸில் தங்களது கட்டுமானங்களைத் தொடங்கி விண்வெளி, வானியல் குறித்த ஆய்வுகளைச் செய்து வந்தன.

புதிய புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி விண்வெளி சார்ந்த அதி நவீனத் தொழில்நுட்பங்களை உருவாக்கி வந்தன. வணிகம் மற்றும் ராணுவ ரீதியான விமான வேலைப்பாடுகளுக்கு அந்த நகரம் மையமாகத் திகழ்ந்து வந்தது. இந்த விஷயங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டுதான் மஸ்க் அங்கு குடியேறினார். விண்வெளி துறைக்குள் காலடி எடுத்து வைக்க தனக்கு அனுமதி கிடைக்க வேண்டும் என்றால் அந்த இடத்தில் இருப்பதுதான் அவருக்கு சரியெனத் தோன்றியது.

அதுமட்டுமில்லாமல் விண்வெளித் துறையில் பெரிதாகச் சாதிக்க வேண்டும் என்ற கனவு மஸ்க்கிற்கு இருந்தாலும் எப்படித் தொடங்க வேண்டும், எங்கிருந்து தொடங்க வேண்டும், குறிப்பாக அந்தத் துறையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற புரிதல் அப்போது மஸ்க்கிற்குச் சுத்தமாக இல்லை. அதனால் விண்வெளித் துறை சார்ந்த உயர்ந்த சிந்தனையாளர்கள் இருக்கும் இடத்தில் நாமும் இருந்தாலாவது ஏதாவது ஒரு யோசனை நமக்கு உதிக்கலாம் என்ற எண்ணத்தில்தான் அவர் அங்கு குடியேறினார். அவர் நினைத்ததுபோலவே விண்வெளிச் சமூகத்தினருடனான தொடர்பும் எதேச்சையாக மஸ்க்கிற்கு வந்து சேர்ந்தது.

அப்போது லாஸ் ஏஞ்சலஸில் மார்ஸ் சொசைட்டி (Mars Society) என்ற அமைப்பு இயங்கி வந்தது. அந்த அமைப்பில் விண்வெளித் துறை சார்ந்த சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனக் குழுவினர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருந்து வந்தனர். செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து, அதில் குடியேறுவதுதான் அந்த அமைப்பின் நோக்கம்.

அதற்கான பரிசோதனைகளைச் செய்வதற்கு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து அதற்கு நிதி திரட்டும் வேலையில் அந்தக் குழு ஈடுபட்டிருந்தது. அதில் கலந்துகொள்ள 500 டாலர்கள் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்து அப்பகுதியில் இருந்த முக்கியஸ்தர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு இருந்தன.

நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு சில நாட்களுக்கு முன் மார்ஸ் சொசைட்டி குழுவின் தலைவரான ராபர்ட் ஜுப்ரினுக்கு கடிதம் ஒன்று வந்தது. பிரித்துப் பார்த்த ராபர்ட்டுக்கு இன்ப அதிர்ச்சி. அதில் மார்ஸ் சொசைட்டி குழுவின் செயல்பாடுகளைப் பாராட்டி 5000 டாலர்களுக்கான காசோலை இணைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் ஆச்சரியம் கலந்த குழப்பம். யார் நம் அமைப்பிற்கு இத்தனை பெரிய நிதியுதவியை வழங்கியது என்ற கேள்வி எழுந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக நிதியுதவி அளித்தவரின் பெயர் எலான் மஸ்க் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

யார் இந்த எலான் மஸ்க். அப்படி ஒருவரை யாரும் அழைத்ததாக நினைவிலேயே இல்லையே? எதற்காக யாரும் கேட்காமல் 5000 டாலர்களை அவர் தூக்கிக் கொடுத்திருக்கிறார். குழப்பத்தில் இருந்தவர்கள் யார் இந்த மஸ்க் என தேடத் தொடங்கினர். விசாரித்ததில் அவர் ஒரு செல்வந்தர் என்பது மட்டும் அவர்களுக்குத் தெரிய வந்தது.

ராபர்ட் ஜுப்ரின் உடனேயே மஸ்க்கிற்கு ஒரு கடிதம் எழுதினார். உங்கள் பங்களிப்பு எங்களுக்குக் கிடைத்தது. எங்களது நெஞ்சார்ந்த நன்றி. என்னுடன் ஒரு கப் காப்பி சாப்பிட வாருங்கள். எங்களிடம் இருக்கும் திட்டங்களை எல்லாம் உங்களுக்கு விவரிக்கிறேன் என அதில் எழுதியிருந்தார். அதற்குப்பின் அந்த நிகழ்ச்சியின்போது ஜுப்ரினும் மஸ்க்கும் சந்தித்தனர்.

மஸ்க் அவரிடம் மார்ஸ் சொசைட்டியின் நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தார். ஜுப்ரின் அவரிடம் ஆர்டிக் பிரதேசத்தில் கட்டியுள்ள ஆய்வகம் குறித்து விவரித்தார். செவ்வாய் கிரகத்தில் உள்ள சூழலை பூமியில் கொண்டு வரும் அடிப்படையில் அந்த ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் டிரான்ஸ் லைஃப் மிஷன் (Translife Mission) என்ற பணித்திட்டத்தையும் செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்.

‘டிரான்ஸ்லைஃப் மிஷனின் பணித்திட்டமா? அப்படியென்றால் என்ன?’ என்று வினவினார் மஸ்க்.

‘இயந்திர கூடு (Capsule) ஒன்றை உருவாக்கி அதைப் பூமியின் சுற்றுப்பாதையில் சுழல வைக்கப்போகிறோம். அவ்வாறு சுழல்வதால் பூமியின் ஈர்ப்புச் சக்தியில் மூன்றில் ஒரு பங்குதான் அதில் கிடைக்கும். இதனால் செவ்வாய் கிரகத்தில் உள்ள புவி ஈர்ப்புச் சக்தி போன்ற சூழல் அங்கு உருவாகும்’ என ஜுப்ரின் பதிலளித்தார்.

‘அந்த இயந்திர கூட்டில் பயணம் செய்யப்போவது மனிதர்களா?’ என மஸ்க் அடுத்த கேள்வியை வீசினார்.

‘இல்லை. அந்த கூட்டை இயக்கப்போவது எலிகள்.’

‘எலிகளா?’

‘ஆம். எலிகள்தான்.’

‘எலிகளை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவதுதான் உங்கள் திட்டமா?’

‘இல்லை. எலிகளை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவது மட்டும் எங்கள் திட்டமில்லை. அவற்றை அங்கு உயிர் வாழவைத்து, இனப்பெருக்கம் செய்ய வைப்பதுதான் எங்கள் திட்டம். செவ்வாய் கிரகத்தில் இனப்பெருக்கத்தின் மூலம் உயிர்களைக் கொண்டு வருவதுதான் நமது திட்டம்’ என்றார் ஜுப்ரின்.

மஸ்க் வெறும் புன்னகையை உதிர்த்ததன் மூலம் தானும் அந்தத் திட்டத்தில் இணைந்துவிட்டதாக அறிவித்தார்.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *