Skip to content
Home » எலான் மஸ்க் #20 – வானத்தை அடையவேண்டும்

எலான் மஸ்க் #20 – வானத்தை அடையவேண்டும்

Mice to Mars

மார்ஸ் சொசைட்டியில் இருந்த விஞ்ஞானிகளுக்கு எலான் மஸ்க்கைப் பிடித்துப்போனது. அவர் மற்ற பணக்காரரைப்போல ஏதோ பொழுதுபோக்கிற்காக விண்வெளியில் ஆர்வம் காட்டுபவர் இல்லை என அவர்கள் புரிந்துகொண்டனர்.

மஸ்க் குறித்து அங்கிருந்த விஞ்ஞானிகள் கூறும்போது, ‘எலான் மஸ்க்கிற்கு விண்வெளி குறித்து அவ்வளவாகத் தெரியவில்லை. ஆனால் அவருக்கு அறிவியல் மனம் இருந்தது. அறிவியல் புரிதல் இருந்தது. விண்வெளிக்குச் செல்வது ஏதோ விளையாட்டுத்தனம் கிடையாது என்பதில் அவர் தெளிவாக இருந்தார். அறிவியல் பார்வையுடன்தான் அவர் விண்வெளிப் பயணத்தை அணுகினார். செவ்வாய் கிரகத்திற்குச் செல்ல என்ன திட்டமிடப்பட்டிருக்கிறது. அதன் முக்கியத்துவம் என்ன என்பதை அறிவதற்கு அவர் ஆவலாக இருந்தார்’ என்றே கூறினர்.

மார்ஸ் சொசைட்டி தொடர்ந்து நடத்தி வந்த நிகழ்வுகளில் மஸ்க்கிற்கு விண்வெளித்துறை சார்ந்த முக்கிய ஆளுமைகளின் அறிமுகம் கிடைத்தது. ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், நாசாவில் கோள் அறிவியல் (Planetary Science) துறையில் விஞ்ஞானியாக இருக்கும் கரோல் ஸ்டோக்கர் உள்ளிட்ட பலர் மஸ்க்கிடம் தாமாகவே வந்து உரையாடினர். அங்கிருந்த அனைவருக்கும் மஸ்க்கிடம் பேசுவதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருந்தது – அதுதான் நிதி.

ஜேம்ஸ் காமரூன் தான் இயக்க இருந்த புதிய திரைப்படத்தின் கதையைச் சொல்லி, தயாரிக்கும்படிக் கேட்டுக்கொண்டிருந்தார். ராபர்ட் ஜுப்ரீனோ மார்ஸ் சொசைட்டி திட்டங்களுக்கு வேண்டிய பெரிய நிதியை மஸ்க்கிடம் இருந்து பெறுவதற்காக அளவிளாவிக்கொண்டிருந்தார்.

மஸ்க்கோ எல்லோருடைய கோரிக்கைக்கும் மெளனமாக சம்மதம் தெரிவித்துக்கொண்டே, தான் அளிக்கப்போகும் நிதிக்குப் பதிலாக விண்வெளிப் பயணம் குறித்த திட்டங்களையும், அதைச் சாதிப்பதற்குத் தேவையான மனிதர்களின் தொடர்புகளையும் சம்பாதிப்பதில் ஈடுபாடு காட்டிக்கொண்டிருந்தார். ராபர்ட் ஜுப்ரினிடம் பேசி அந்த அமைப்பின் இயக்குநர்கள் குழுவில் இணைந்துகொண்டார். அவர்களது ஆராய்ச்சிக்கு மேலும் 10 லட்சம் டாலர்களை நிதியாக வழங்கினார்.

விண்வெளித் திட்டத்தில் ஈடுபாடு காட்டிக்கொண்டே அதுவரை செய்த வணிகங்களில் எல்லாம் மஸ்க் கவனம் செலுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டது அவரை நம்பி முதலீடு செய்த நண்பர்களுக்குக் கவலையை ஏற்படுத்தியது. என்ன இவர், இணையம், தொழில்நுட்பம் எனச் சிந்தித்துக்கொண்டிருந்தவர், இப்போது விண்வெளி, செவ்வாய் கிரகம் என பிதற்றிக்கொண்டிருக்கிறாரே? இந்தத் துறையில் எல்லாம் பணம் பண்ண முடியுமா? விமான நிறுவனத்தை உருவாக்கி ராணுவத்திற்கோ, பொதுமக்கள் சேவைக்கோ விமானங்களைத் தயாரித்து விற்பதில் பிரச்னை இல்லை. ஆனால் செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் திட்டம் எல்லாம் சாத்தியமா என மஸ்க்கின் காதுபடவே பேசத் தொடங்கினர்.

ஆனால் மஸ்க் அவர்களுடைய பேச்சைப் பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. தனது சிறுவயது லட்சியமான விண்வெளிக்குச் செல்லும் கனவை நிஜமாக்குவதில் ஆர்வம் காட்டி வந்தார். ஆனால் ஒரு சில மாதங்களிலேயே மஸ்க்கின் விண்வெளிக் கனவு அவருக்கு உயிர் வாழ்தலின் நோக்கமாகவே மாறும் அளவிற்கு ஒரு சம்பவம் நடைபெற்றது.

பேபாலில் தன்னுடைய இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருந்த மஸ்க், ஜஸ்டீனுடன் பிரேசில் நாட்டிற்குச் சுற்றுப்பயணம் சென்றுவிட்டுத் திரும்பினார். வீட்டிற்கு வந்தவுடனேயே நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் விழுந்துவிட்டார். என்ன ஆனது என்று யாருக்கும் தெரியவில்லை.

ஜஸ்டீனும் மஸ்க்கை ஒவ்வொரு மருத்துவராக அழைத்துக்கொண்டு சென்றார். அவர்களால் இவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. அவர்களும் ஏதேதோ பரிசோதனை செய்து, மருந்துகளைக் கொடுத்துப் பார்த்தனர். பயனில்லை. மஸ்க்கின் உடல் மெலிந்துகொண்டே வந்தது. கிட்டத்தட்ட ஒரு சில வாரங்களில் 20 கிலோ எடை குறைந்து, எலும்பும் தோலுமாக மாறிப்போனார் மஸ்க். யாருக்கும் அவர் மீண்டும் எழுந்து நடப்பார் என்று நம்பிக்கையே இல்லை.

அப்போது எதேச்சையாக மஸ்க் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வந்த ரத்தப் பரிசோதனை நிபுணர் ஒருவர், மஸ்க்கிற்கு மலேரியாதான் பாதித்திருக்கிறது என தன் அனுபவத்தின் மூலம் பார்த்த மாத்திரத்திலேயே சொல்லிவிட்டார். பிறகுதான் மருத்துவர்களுக்கே ஒரு தெளிவு கிடைத்தது.

மஸ்க்கைத் தாக்கி இருந்தது மலேரியாவில் கொடூர வகையான ‘ஃபால்சிபரும் மலேரியா’ என்ற நோய். அந்தக் காலத்தில் பெரும்பாலான மலேரியா மரணங்களுக்கு அந்த ஃபால்சிபரும் மலேரியாதான் காரணமாக இருந்தது. அப்போதே மஸ்க்கின் நிலைமை மோசமாக இருந்ததை உணர்ந்த மருத்துவர்கள் மலேரியாவிற்கு வேண்டிய மருந்துகளைக் கொடுக்க ஏற்பாடு செய்தனர். ஒருநாள் தாமதமாகி இருந்தால்கூட மஸ்க்கைக் காப்பாற்றி இருக்க முடியாது என்றே அத்தனை மருத்துவர்களும் அவரது உடல்நிலை குறித்துத் தெரிவித்தனர்.

பத்து நாட்கள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்த மஸ்க்கிற்கு ஒருவழியாக நம்பிக்கை துளிர்விடத் தொடங்கியது. ஆனாலும் மருத்துவச் சிகிச்சை தொடர்ந்து கொடுக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகே அவர் முழுமையாகக் குணமடைந்து எழுந்து நடக்கத் தொடங்கினார்.

மரணத்தின் வாயிலைத் தொட்டுவிட்டு வந்த மஸ்க்கிற்கு வாழ்வில் ஏதாவது உருப்படியாகச் செய்ய வேண்டும் எனத் தோன்றியது. அதுநாள்வரை தான் வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமற்றதாகத் தோன்றியது. தன் பெயர் நீடித்து நிற்கக்கூடிய மிகப்பெரிய லட்சியம் ஒன்றை நிறைவேற்றிக்காட்ட வேண்டும் என முடிவுக்கு வந்தார். தான் தேர்வு செய்துள்ள விண்வெளித் துறையை விட வேறு எதுவும் தனக்குப் பெயர் வாங்கித்தரப் போவதில்லை எனப் புரிந்துகொண்டார். அன்றிலிருந்து தன்னுடைய முழு கவனத்தையும் விண்வெளித் துறையை நோக்கியே செலுத்தினார்.

மஸ்க் விண்வெளித்துறையில் முழு மனதுடன் காலடி எடுத்து வைத்த நாட்களில் அமெரிக்காவில் விண்வெளி சம்பந்தமான ஆய்வுகள் தொடர்பான மோகம் மக்களிடையே குறைந்துதான் இருந்தது. சோவியத் காலத்தில் போட்டிப்போட்டுக்கொண்டு விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கா, சோவியத்தின் சிதறலுக்குப்பின் விண்வெளி ஆய்வுக்கான நிதியைக் குறைத்துவிட்டுப் பிற தொழில்நுட்பங்கள் சார்ந்து தனது கவனத்தைச் செலுத்தத் தொடங்கி இருந்தது.

அரசு கவனம் செலுத்தாததால் பொதுமக்களுக்கும் விண்வெளி மீதான ஆர்வம் சிதையத் தொடங்கி இருந்தது. ஒரு சாதாரணக் குடிமகனுக்கு விண்வெளி ஆய்வு என்பது நேர விரயமாகத் தோன்றியது. வெட்டிச் செலவு செய்து ஒன்றுமில்லாத விஷயத்தைப் பற்றி ஆராய்ந்து நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதே அப்போது பெரும்பாலோனோர் எண்ணமாக இருந்தது. இத்தகைய சிதைந்துபோன ஆர்வத்தை மீட்டெடுத்து உத்வேகம் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மஸ்க் விண்வெளித்துறையில் குதித்தார்.

விண்வெளிப் பயணம் என்பது சாத்தியமானது என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும். பெருந்திரளான மக்களுக்கு அறிவியல் மீதும், அண்டத்தை மனிதன் வெற்றிகொள்வதன் மீதும் பற்றை ஏற்படுத்த வேண்டும். நாளைய விண்வெளி தொழில்நுட்பம் மக்களுக்குப் பயன் தரக்கூடியது என்று அவர்களது சிந்தனையை மாற்றி எழுத வேண்டும் என நினைத்தார்.

ஒருநாள் மஸ்க் நாசாவின் இணையதளம் குறித்து கறாரான விமர்சனம் ஒன்றைப் பத்திரிகைகளில் வெளியிட்டார். ‘நான் நாசாவின் இணையதளத்தில் உலாவியபோது செவ்வாய் கிரகத்தை ஆராய்வது குறித்த புதிய திட்டம் எதுவும் அவர்களிடம் இல்லை என்பதை அறிந்தேன். அமெரிக்கா என்ற நாட்டின் ஆன்மாவே புதுமைதான். மனித இனத்தின் ஆழ்மன விருப்பமானத் தேடலின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதுதான் அமெரிக்கா என்ற தேசம். அந்தத் தேடலையே குறிக்கோளாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நாசாவிடம் செவ்வாய் கிரகம் குறித்து அக்கறை இருப்பதாகவே தெரியவில்லை. அமெரிக்காவின் தொலைந்துபோன ஆன்மாவைத் தேடியெடுத்து, மனித குலத்திற்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதே எனது நோக்கம்’ என அந்த விமர்சனத்தில் மஸ்க் குறிப்பிட்டிருந்தார்.

அந்த நேரத்தில் மஸ்க்கின் சிந்தனை மார்ஸ் சொசைட்டியையும் தாண்டிச் சென்றிருந்தது. மார்ஸ் சொசைட்டி செயல்படுத்தி வந்த ஆய்வுகளில் மஸ்க்குக்கு மனம் செல்லவில்லை. மார்ஸ் சொசைட்டி விஞ்ஞானிகள் எல்லோரையும் மஸ்க் மிகப்பெரிய நட்சத்திர விடுதி ஒன்றுக்கு அழைப்பு விடுத்தார். அங்கே தனது புதிய விண்வெளித் திட்டம் குறித்து உரையாற்றினார்.

பூமியின் அருகிலேயே செவ்வாய் கிரகம் போன்ற ஒரு சூழலை உருவாக்கி அங்கே எலிகளை இனப்பெருக்கம் செய்ய வைப்பது வீணான வேலை. அதற்குப் பதில், எலிகளை ஏன் செவ்வாய் கிரகத்திற்கே அனுப்பக்கூடாது என சக விஞ்ஞானிகளிடம் கேட்டார். பலரும் அவரது திட்டத்திற்கு மறுப்பு தெரிவித்தனர். மஸ்க்கின் திட்டத்தில் உள்ள சிக்கல்கள் மற்றும் சவால்களை விளக்கினர்.

முதலில் எலிகளைச் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றால் அதற்கென்று விண்கலனை உருவாக்க வேண்டும். அந்த விண்கலன் செவ்வாய் கிரகத்தை அடைந்து, மீண்டும் பூமிக்குத் திரும்புவதற்கு சில மாதங்கள் எடுத்துக்கொள்ளும். அதற்கு ஆகவேண்டிய வேலைகளுக்கு எல்லாம் தோராயமாக 1.5 கோடி டாலர்கள் செலவாகும்.

இத்தனைக்கும் எலிகளைச் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி விட்டு திரும்பி அழைத்து வரும்போது அவை உயிருடன் இருக்குமா என்றும் தெரியாது. அவ்வாறு இருக்காவிட்டால் மக்கள் நம்மை முட்டாள்கள் என நினைத்துவிடுவர். அதனால் முதலில் எலிகளைப் பூமியின் சுற்றுப்பாதையிலேயே சுழல விடுவோம். பிறகு செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவதைப் பற்றிச் சிந்திப்போம் என மார்ஸ் சொசைட்டி பதிலளித்தது.

மார்ஸ் சொசைட்டியின் மென்மையான அணுகுமுறை மஸ்க்கிற்கு ஒத்துவரவில்லை. தனது சகாக்களையெல்லாம் அழைத்துத் தெளிவாகவே சொல்லிவிட்டார். ‘என்னுடைய திட்டம் ‘Mice to Mars’ எனப்படும் எலிகளைச் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் திட்டம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் கூறுங்கள். அதற்கான திட்டத்தை உருவாக்குங்கள். எலிகளைச் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப முடியாதா? குறைந்தபட்சம் அதற்கு இணையான வேறு திட்டத்தையாவது உருவாக்குங்கள்’ எனக் கூறினார்.

மஸ்க்கின் திட்டம் யதார்த்தத்திற்கு ஒத்துவராது என மார்ஸ் சொசைட்டி ஒதுங்கிக்கொண்டது. இனி இவர்களுடன் இருப்பது வேலைக்கு ஆகாது என மஸ்க்கும் புரிந்துகொண்டார். உடனேயே மார்ஸ் சொசைட்டி அமைப்பில் இருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். ‘The Life to Mars’ என்ற புதிய அமைப்பைத் தொடங்கினார். அந்த அமைப்பின் மூலம் தன்னுடைய விஞ்ஞானி நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

‘2 கோடி டாலர்கள். இதுதான் நான் வழங்கப்போகும் நிதி. இந்த நிதியில் சாத்தியமாகக்கூடிய பெரிய திட்டம் ஒன்றை உருவாக்குங்கள். நாம் உருவாக்கப்போகும் திட்டம் பிரமாண்டமாக இருக்க வேண்டும். சோர்ந்து போயிருக்கும் மனித இனம் வியந்து பார்க்க வேண்டும். நம்முடைய செயல்பாடுகள் உலகத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டும். மக்கள் மீண்டும் செவ்வாய் கிரகத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்க வேண்டும். மனித இனத்தால் எதையெல்லாம் செய்ய முடியும் என்பதை நாம் எல்லோருக்கும் காட்ட வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

 

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *