Skip to content
Home » எலான் மஸ்க் #21 – செவ்வாய் கிரகச் சோலை

எலான் மஸ்க் #21 – செவ்வாய் கிரகச் சோலை

செவ்வாய் கிரகச் சோலை

2 கோடி டாலர்கள். இதுதான் மஸ்க் நிர்ணயித்த திட்ட நிதி. இந்தத் தொகைக்குள் செவ்வாய் கிரகம் குறித்த சிறந்த விண்வெளி திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதுதான் அவர் இட்ட கட்டளை. விண்வெளித்துறை ஆய்வுகளைப் பொறுத்தவரை இது ஒன்றும் அத்தனை பெரிய தொகை இல்லைதான். ஆனால் அதுவரை செவ்வாய் கிரகம் குறித்து அரசாங்கமே ஆர்வம் காட்டாத நிலையில், ஒரு பணக்காரர் தாமாக முன்வந்து செவ்வாய் கிரகம் குறித்து ஆய்வு செய்ய இத்தனை கோடிகளைக் கொடுக்கிறார் என்பதே அங்கிருந்த விஞ்ஞானிகளுக்கு உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருந்தது.

செவ்வாய் கிரக ஆய்வு தொடர்பாக மஸ்க் கூட்டியிருந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள, தானியங்கி விண்கலங்கள் குறித்து ஆய்வு செய்யும் நாசாவின் ஜெட் ப்ரொபல்ஷன் சோதனைக்கூடத்தில் (JPL) பணியாற்றிய பல விஞ்ஞானிகள் கூடி இருந்தனர். திரைப்பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனும் அவருடைய கணக்குக்கு தனக்குத் தெரிந்த சில மேதைகளை அழைத்து வந்திருந்தார்.

இவர்களைத் தவிர அங்கு வருகை புரிந்திருந்த விஞ்ஞானிகளில் முக்கியமானவர்தான் மைக்கேல் கிரிஃபின். விண்வெளிப் பொறியியலில் பட்டம் பெற்றவர் இவர். இதைத்தவிர மின்னணுப் பொறியியல், குடிசார் பொறியியல் மற்றும் பயன்முறை இயற்பியல் (Applied Physics) எனப் பல்வேறு துறைகளிலும் பட்டம் பெற்றிருந்தார். அமெரிக்காவின் உளவு நிறுவனமான சிஐஏவின் கீழ் இயங்கும் நிதி நிறுவனமான ஐக்யூடி (In-Q-Tel), நாசா, ஜேபிஎல் உள்ளிட்டவற்றில் பணிபுரிந்தவர்.

விண்கலன்களும் செயற்கைக்கோள்களும் உருவாக்கும் நிறுவனமான ஆர்பிட்டல் சயின்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தலைமைத் தொழில்நுட்பப் பிரிவு அதிகாரியாகவும் மேலாளராகவும் பணிபுரிந்தவர். (பிறகு நாசாவின் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர்.) உண்மையில் அப்போதைய அமெரிக்காவில் விண்வெளிக்குப் பூமியில் இருந்து எதையாவது அனுப்ப வேண்டும் என்றால் அதற்கு கிரிஃபினைத் தவிர வேறு யாருக்கும் இந்தப் பூமியிலேயே அனுபவம் கிடையாது என்றுதான் பேசி வந்தனர். இவர்தான் மஸ்க்கின் விண்வெளித் திட்டங்களை ஆராய்ந்து பின்னாளில் அதற்கு மூளையாகச் செயல்பட ஒப்புக்கொண்டார்.

இவ்வாறு அங்கிருந்த விஞ்ஞானிகள் கூடி செவ்வாய் கிரகம் பற்றிய ஆய்வுத் திட்டம் ஒன்றை ஆலோசனை செய்தனர். முதலில் வழக்கம்போல் எலிகளை விண்வெளிக்கு அனுப்புவது என்று ஆரம்பித்த ஆலோசனை, பல எண்ணங்களின் ஊடாக செறிவூட்டப்பட்டு இறுதியில் புதிய திட்டத்திற்கான வடிவத்தை வந்தடைந்தது. அதுதான் ‘Mars Oasis’ எனப்படும், செவ்வாய் கிரகத்தில் சோலையை உருவாக்குவதற்கான திட்டம்.

செவ்வாய் கிரகச் சோலையின் திட்டம் இதுதான். கண்ணாடிப் பெட்டிகளைக் கொண்டு தானியங்கி இயந்திரங்களின் மூலம் இயங்கும் பசுமை இல்ல வாயுக்கள் (நமது வளிமண்டலத்தில் காணப்படும் வாயுக்கள்) கொண்ட அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். அவற்றை ராக்கெட் மூலம் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப வேண்டும். அந்த அமைப்பின் உட்புறத்தில் வளர்ச்சி அறைகளை (Growth Chambers) கட்டமைத்து அதில் செடிகளை வளர்க்க வேண்டும்.

அவ்வப்போது ரோபோட்டுகள் மூலம் செவ்வாய் கிரக நிலத்தில் இருந்து மண்களை எடுத்துச் சென்று அதைச் செடி வளர்ப்பிற்குப் பயன்படுத்த வேண்டும். இந்தக் கட்டமைப்பின் மூலம் செவ்வாய் கிரகத்தின் முதல் ஆக்சிஜனை உற்பத்தி செய்யலாம் என்பதுதான் விஞ்ஞானிகளின் எண்ணம். மஸ்க்கிற்கு இந்தத் திட்டம் பிடித்துப்போனது. தன் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் பிரம்மாண்டதாகவும் சாத்தியக்கூறுகள் கொண்டதாகவும் தெரிந்தது.

இந்தத் திட்டத்தை விளம்பரப்படுத்துவதற்காக அவருக்கு வேறு சில யோசனைகளும் தோன்றியது. செவ்வாய் கிரகத்தில் வளர்க்கப்படும் இந்தச் செடிகளை வீடியோ எடுத்துப் பூமிக்கு அனுப்பினால் என்ன? மக்கள் செடிகள் வளர்வதைப் பார்க்கும்போது புதிய நம்பிக்கை தோன்றும். மேலும் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கும் வீட்டில் வளர்ப்பதற்காகச் செடிகள் வழங்க வேண்டும். அவர்கள் தங்கள் செடிகளின் வளர்ச்சியை செவ்வாய் கிரகத்தில் வளரும் செடிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.

செவ்வாய் கிரகத்தில் வளரும் செடிகள் நம் பூமியில் வளரும் செடிகளைவிட இரண்டு மடங்கு வேகத்தில் வளர்வதைப் பார்க்கும்போது, அந்த மாணவர்களுக்கு செவ்வாய் ஒன்றும் நமக்கு அந்நியமான நிலம் இல்லை என்பது தோன்றும். நாமும் அங்கு சென்று குடியேற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இந்த எண்ணத்தை மக்களின் சிந்தனையில் விதைப்பதுதான் மஸ்க்கின் திட்டமாக இருந்தது.

உடனே இந்தத் திட்டம் குறித்த ஆய்வுகளைத் தொடங்குங்கள் என மஸ்க் பச்சைக்கொடி காட்டினார். மஸ்க்கின் உற்சாகமும், அவரது திட்டமும் விண்வெளித்துறையில் எந்த ஒரு உபயோகமான ஆய்வும் நடைபெறாது என அவநம்பிக்கையில் இருந்த விஞ்ஞானிகளுக்கே உத்வேகத்தை அளித்தது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் இந்தத் திட்டத்தில் தீவிரமாக இறங்கும்போதுதான் இதில் இருக்கும் சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் புலப்படத் தொடங்கின.

முதல் பிரச்னை நிதி. 2 கோடி டாலர்களில் இருந்து 3 கோடி டாலர்கள் மட்டுமே இந்தத் திட்டத்திற்காக நான் செலவிடுவேன் என எலான் மஸ்க் உறுதியாக இருந்தார். ஆனால் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட்டுகளை அனுப்புவதற்கே இந்தத் தொகை முழுவதும் செலவாகி, கூடுதல் தொகையும் தேவைப்படும் என விஞ்ஞானிகள் புரிந்துகொண்டனர். குறைந்தது 20 கோடி டாலர்களாவது செலவாகும் என அவர்களுக்குத் தோன்றியது.

ஆனால் மஸ்க்கிடம் இந்த விஷயத்தைச் சொல்வதற்கு அவர்களுக்குத் தயக்கமாக இருந்தது. விண்வெளி என்பது ஒரு கனவு. அதை நிஜமாக்க நாம் கொடுக்க வேண்டிய விலை கொஞ்சம் அதிகம்தான். ஆனால் திட்டத்தின் ஆரம்பத்திலேயே எலான் மஸ்க் போன்ற ஒரு நபரிடம் இந்த உண்மையை சுட்டிக்காட்டுவது மொத்தத் திட்டத்தையும் கொன்றுவிடும் என அவர்கள் அஞ்சினர்.

சரி, அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என நினைத்த விஞ்ஞானிகளுக்கு பொருளாதாரச் சிக்கலுடன் பொறியியல் சிக்கலும் இருப்பது தெரியவந்தது. செவ்வாய் கிரகத்திற்கு நாம் அனுப்பப்போகும் கண்ணாடிப் பெட்டிகள் கொண்ட வளிமண்டல அமைப்பு, செடிகள் உயிருடன் இருப்பதற்குப் போதுமான வெப்பம் உடையதாக இருக்க வேண்டும். இந்த வெப்பத்தைத் தொடர்ந்து வழங்க முடியுமா என்று அவர்களுக்குக் கேள்வி எழுந்தது.

இதைத்தவிர செவ்வாய் கிரகத்தில் இருந்து மண்ணை எடுத்து வந்து வளிமண்டல அமைப்புக்குள் சேர்ப்பது கடினமானது மட்டும் அல்ல. ஆபத்தானதும் கூட எனத் தோன்றியது. ஏனென்றால் செடிகள் வளரும் பசுமை வாயு இல்ல சூழல், செவ்வாய் கிரகத்தின் வளிமண்டல சூழலுக்குள் திறந்துவிடப்படும்போது அது செடிகளுக்கு விஷமாகவும் அமையலாம் எனக் கருதினர்.

இதற்கு பதில் ஊட்டச்சத்துக்கள் மிக்க சிலிகான் ஜெல்லில் செடிகளை வளர்க்கலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டது. ஆனால் இது மக்களை ஏமாற்றுவதுபோல இருக்கும். அதுமட்டுமில்லாமல் மொத்த திட்டத்தின் நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது என்ற பதில்களும் வந்தன.

ஒரு சில விஞ்ஞானிகள் செவ்வாய் நிலத்தின் மண்ணை எடுத்து சுத்திகரித்து, சில தனிமங்களைச் சேர்த்து அதில் கடினமான சூழலிலும் வளரும் ஒரு வகைக் கடுகுச் செடிகளை வளர்க்கலாம் என ஆலோசனை வழங்கினர். ஆனால் ஒருவேளை அதில் செடி வளராவிட்டால், இறந்துபோகப்போவது சோலையில் உள்ள செடிகள் மட்டுமல்ல, மக்களின் நம்பிக்கையும்தான் எனத் தோன்றியது. தொடக்கத்தில் நிலவிய உத்வேகம் நிறைந்த சூழல், ஒரு சில நாட்களிலேயே மறைந்து கனத்த மெளனங்கள் மட்டுமே அங்கு நிலைபெற்று இருந்தன.

செவ்வாய் கிரகத்தில் செடிகளை வளர்ப்பது மட்டும் அவர்களது திட்டமல்ல, அதன்மூலம் மக்களின் நம்பிக்கையையும் வளர்த்தெடுப்பதும்தான் அவர்களது நோக்கம். அதில்தான் சிக்கலே இருக்கிறது. செடிகள் கருகினால் கூட மீண்டும் ஆய்வு செய்து வளர்வதற்கான சூழலை உருவாக்கலாம். மக்களின் நம்பிக்கை குலைந்தால் அவற்றை மீண்டும் கட்டமைப்பது கடினம்.

ஒரே முயற்சியில் திட்டத்தை வெற்றி பெற வைக்க வேண்டும். மஸ்க் எப்படியாவது இந்தத் திட்டம் வெற்றி பெறும் என உறுதியாக இருக்கிறார். ஆனால் வேறு வழியில்லை. நிலைமை மோசமானதற்குப் பின் திட்டத்தில் இருந்து பின் வாங்குவதற்குப் பதில், ஆரம்பத்திலேயே புரிந்துகொண்டு இந்தத் திட்டத்தைக் கைவிடுவது உத்தமம். மஸ்க்கிடம் சொல்லித்தான் ஆக வேண்டும் என முடிவுக்கு வந்தனர்.

இதுவரை ஆய்வு செய்து கண்டுகொண்ட சிக்கல்கள் எல்லாவற்றையும் அவர்கள் மஸ்க்கிடம் எடுத்துரைத்தனர். ஆனால் அவர்களுடைய கருத்துகளையெல்லாம் கேட்ட மஸ்க் அலட்டிக்கொண்டதாகவே தெரியவில்லை. அந்தக் குழுவிலேயே இருந்த சில சிறந்த விஞ்ஞானிகளை அவர் அழைத்தார்.

நீங்கள் சொல்வது எல்லாம் உண்மைதான். பொருளாதார ரீதியாகவும், பொறியியல் ரீதியாகவும் இந்தத் திட்டத்திற்கு பல பிரச்னைகள் இருக்கின்றனதான். ஆனால் எனக்கு அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. நீங்கள் எல்லாம் சிறந்த புத்திஜீவிகள் என்பதால்தான் உங்களை அழைத்தேன். நாம் எதிர்கொள்ளும் சவால்களைச் சரி செய்வதற்கான வழியைக் கண்டுபிடிப்பதுதான் உங்களுடைய வேலையே தவிர, இப்படித் துவண்டு போய் நிற்பது அல்ல. நீங்கள் உங்களுக்குள் பேசி செடிகளை வளர்ப்பதற்கான இயந்திரங்களின் வடிவமைப்பை உருவாக்குங்கள். குறைந்த விலையில் ராக்கெட்டுகளை வாங்கும் பிரச்னையை நான் பார்த்துக்கொள்கிறேன் என அனுப்பி வைத்தார்.

ஏதோ நம்பிக்கை அளிக்க வேண்டும் என்பதற்காக அப்படிச் சொல்லவில்லை மஸ்க். தாம் நிர்ணயித்த தொகையில் விண்வெளிக்கு ராக்கெட்டுகளை அனுப்புவது சாத்தியமில்லாதது என்பது அவருக்கும் தெரியும். ஆனால் அதை சாத்தியப்படுத்திவிட வேண்டும் என்பதுதான் அவரது நோக்கமாக இருந்தது. அவ்வாறு செய்துவிட்டால் குறைந்த விலையில் விண்வெளிப் பயணத்தைச் சாத்தியப்படுத்திய முதல் நபர் நானாகத்தான் இருப்பேன். இந்த உலகமே என்னை நினைவு வைத்துக்கொள்ளும் என எண்ணினார்.

குறைந்த விலையில் ராக்கெட்டுகளை வாங்குவதற்கான ஒரு யோசனை முன்னமே மஸ்க்கிடம் இருந்தது. அதில் கொஞ்சம் சட்ட ரீதியான பிரச்னைகளும் இருந்தன. அதனால் அதைப்பற்றி அவர் யாரிடமும் பேசவில்லை. தேவையென்றால் பார்த்துக்கொள்ளலாம் என்றுதான் இருந்தார். ஆனால் அதற்கான நேரம் இப்போது வந்துவிட்டது. குறைந்த விலை ராக்கெட்டுகள் எங்கு கிடைக்கும் என்பது அவருக்குத் தெரியும். ஆனால் அதை வாங்குவதில்தான் சிக்கல் இருக்கிறது. காரணம் அதற்காக அவர் தேர்ந்தெடுத்த இடம் ரஷ்யா. அதாவது முன்னாள் சோவியத் ஒன்றியம்.

சோவியத் ஒன்றியத்தின் சிதைவுக்குப் பின் தனி நாடான ரஷ்யா, அமெரிக்காவுடனான விண்வெளி போட்டியில் இருந்து விலகிக்கொண்டது. ஆனால் அதற்குமுன் பனிப்போர் காலக்கட்டத்தில் அவர்கள் உருவாக்கிய ஏகப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ராக்கெட்டுகள் கேட்பாரற்ற நிலையில் குவிந்து கிடந்தன.

இந்த ராக்கெட்டுகளை எப்படியாவது அடித்துப் பேசி குறைந்த விலையில் வாங்கிவிட்டால், அவற்றை விண்வெளியில் ஏவுவதற்குப் பயன்படுத்தலாம் என்பதுதான் மஸ்க்கின் திட்டம். ஆனால் இது ரஷ்ய அரசு சம்பந்தப்பட்ட விஷயம். அமெரிக்காவில் இருந்து ஒரு தொழிலதிபர் சென்று ரஷ்ய அரசிடம் பேசி இந்த ராக்கெட்டுகளை பெற்று விட முடியுமா? சாத்தியமே இல்லாத காரியமல்லவா?

ஆனால் சாத்தியமற்றதை நிகழ்த்துவதில்தான் மஸ்க் பெயர் பெற்றவர். அதற்கு ஏற்றாற்போல் அதற்கான வழியையும் அவர் கண்டுபிடித்தார். குறைந்த விலையில் ராக்கெட்டுகளைப் பெறுவதற்கான திறவுக்கோல் ஜிம் கேன்ட்ரல் என்ற நபரிடம் இருந்தது. ஜிம் கேன்டரல் ஓர் அமெரிக்கர். உளவாளி எனப் பட்டம் குத்தப்பட்டு ரஷ்ய அரசாங்கத்தால் 1996ம் ஆண்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டவர். அதேசமயம் அமெரிக்காவிலும் ரஷ்யாவின் உளவாளி எனத் தூற்றப்பட்டவர். இனி ரஷ்யாவிற்குச் செல்லவே கூடாது என்ற தீர்மானத்தில் இருந்தவரைத்தான் மஸ்க் தனது ரஷ்ய திட்டத்திற்காகத் தேர்ந்தெடுத்தார்.

யார் இந்த கேன்டரல்? எதற்காக மஸ்க் இவரைத் தேர்ந்தெடுத்தார் என்பதில்தான் மஸ்க்கின் வணிக சூட்சமமே இருக்கிறது. மஸ்க் கேட்ரலை தேர்ந்தெடுத்ததற்கான பின்னணியும், அவரை அணுகிய விதமும் மிகவும் சுவாரஸ்யமானது!

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *