2001ஆம் ஆண்டு கோடைக்கால இரவு. ஜிம் கேன்டரல் தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருடைய செல்போனுக்கு ஓர் அழைப்பு வந்தது. எடுத்துப் பேசினார்.
‘பேசுவது யார் ஜிம் கேன்டரலா?’ செல்போனின் மறுபக்கத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது.
‘ஆம். நீங்கள் யார்?’
செல்போனின் அந்தப் பக்கத்தில் இருந்து பேசியவர் மூச்சே விடாமல் தனக்கு என்ன வேண்டும் என்பதைக் கடகடவென்று சொல்லி முடித்தார்.
‘என் பெயர் எலான் மஸ்க். நான் ஒரு பணக்காரர். நான்தான் பேபால், ஜிப்2 நிறுவனங்களை நிறுவியவர். நான் நினைத்தால் மாய் டைஸ் காக்டெயில் பானத்தைக் குடித்துக்கொண்டு உலகத்தில் ஏதாவது ஒரு கடற்கரையில் என்னுடைய எஞ்சிய வாழ்நாளை மகிழ்ச்சியாகக் களிக்க முடியும். அவ்வளவு பணம் என்னிடம் இருக்கிறது.
‘ஆனால் எனக்கு பெரிய கடமை ஒன்று இருக்கிறது. மனித இனம் நிலைத்திருக்க வேண்டும் என்றால் கிரகங்களுக்கு இடையே பயணித்து உயிர்வாழ வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு உருவாகி இருக்கிறது. அவர்களுக்கு உதவுவதற்காகத்தான் நான் இருக்கிறேன். என்னுடைய பணத்தை வைத்து மனித இனத்திற்காக ஏதாவது செய்ய விரும்புகிறேன். அதற்காக எனக்கு ரஷ்ய நாட்டின் ராக்கெட்டுகள் தேவைப்படுகிறது. அதனால்தான் நான் உங்களை அழைக்கிறேன்!’
பேசி முடித்தது அந்தக் குரல்.
கேன்டரலுக்கு எதுவும் புரியவில்லை. யார் இந்த நபர், என்னுடைய தொலைப்பேசி எண் எப்படி அவருக்குத் தெரியும்? ஏதோ கிரகம் விட்டுக் கிரகம் பயணிக்கும் மனித இனம் என உளறுகிறார். அதற்காக உதவப்போகிறேன் என்று பிதற்றுகிறார். என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறார்?
இதையெல்லாம் கேட்பதற்கு கேன்டரலுக்கு முட்டாள்தனமாகத் தோன்றியது. மஸ்க்கின் பெயர் கூட போனில் அவருக்குச் சரியாகக் கேட்கவில்லை. எலான் மஸ்க் என்பதற்குப் பதில் ‘அயன்’ மஸ்க் என நினைத்துக்கொண்டார்.
‘இங்கே பாருங்கள் அயன் மஸ்க், நீங்கள் தவறான நபரைத் தொடர்புகொண்டிருக்கிறீர்கள். நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்றே எனக்குப் புரியவில்லை. சமூகத்தில் மரியாதையான நபரான என்னைத் திரும்பவும் அழைக்காதீர்கள்’ எனக் கூறிவிட்டு போனைத் துண்டித்துவிட்டார்.
ஒரு பிரச்னையால் ரஷ்யாவில் இருந்து தப்பி வந்த கேன்டரல் மீண்டும் அங்குச் செல்லக்கூடாது என உறுதியாக இருந்தார். ஆனால் அவரை அதே இடத்திற்கு மீண்டும் அழைத்து அந்தக் குரல் வற்புறுத்துகிறது. கேன்டரல் வீட்டிற்குச் சென்று காரை நிறுத்தியவுடன், மீண்டும் அவருடைய செல்போனுக்கு அழைப்பு வந்தது. அழைத்தது அதே அயன் மஸ்க்.
ரஷ்யர்களிடம் ராக்கெட்டுகளை வாங்க வேண்டும் என முடிவுக்கு வந்த மஸ்க், முதலில் தேர்ந்தெடுத்தது இந்த ஜிம் கேன்டரலைத்தான். ஏன் அவர் ஜிம் கேன்டரலைத் தேர்ந்தெடுத்தார்? யார் அவருக்கு ஜிம் கேன்டரலுடைய தொலைபேசி எண்ணைக் கொடுத்தது?
மஸ்க்கிற்கு எப்போதும் திறமைசாலிகளைக் கண்டறியும் திறன் இருந்தது. அப்படித்தான் அவர் தலைமறைவாகி இருந்த கேன்டரலையும் கண்டறிந்தார். மஸ்க்கிற்கு எப்படிக் கேன்டரலின் தொடர்பு கிடைத்தது என்பதை அறிவதற்கு முன், யார் இந்தக் கேன்டரல் எனத் தெரிந்துகொள்வோம்.
விண்வெளி ஆய்வில், குறிப்பாகச் செவ்வாய் கிரகம் குறித்த ஆய்வில் உலக அளவில் இருக்கும் மிகச்சிறந்த நிபுணர்களில் ஒருவர்தான் ஜிம் கேன்டரல். 1960ம் ஆண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள சிறிய ஊர் ஒன்றில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். 15 வயதில் கார்ல் சாகன் இயற்றிய ஆவணப்படம் ஒன்றைப் பார்த்துவிட்டு, இயற்பியல் மற்றும் விண்வெளித் துறையில் ஆர்வம் வர, பொறியியல் சார்ந்த படிப்பில் சேர்ந்தார். பின் நாசா நடத்தி வந்த பயிற்சி வகுப்பிலும் இணைந்து விண்வெளி குறித்த பாடங்களைக் கற்றறிந்தார். பின்னர், நாசாவின் செவ்வாய் கிரகத்திற்குப் பலூன் அனுப்பும் திட்டத்தில் இணைந்து பணியாற்றினார்.
அப்போது செவ்வாய் கிரகத்திற்கு பலூன் அனுப்பும் திட்டத்தில் நாசா மட்டுமல்ல, பிரான்ஸ் நாட்டின் விண்வெளி ஆய்வு மையமும் (CNES) ஈடுபட்டு வந்தது. பிரான்ஸுடன் கூட்டாகச் செயல்பட்டு வந்த மற்றொரு நாடு அமெரிக்காவின் எதிரியும், விண்வெளி ஆய்வுகளில் உலகின் முன்னோடியுமான சோவியத் ஒன்றியம்.
அதனால் செவ்வாய் கிரகத்திற்குப் பலூன்களை விடும் திட்டத்தில், சோவியத்தின் ராக்கெட்டுகளைப் பயன்படுத்துவதற்கு பிரான்ஸ் திட்டமிட்டிருந்தது. தான் பணியாற்றும் அதே திட்டத்தில் அமெரிக்காவும் ஈடுபட்டு வருவதை அறிந்துகொண்ட பிரான்ஸ், தங்களுடன் அமெரிக்காவையும் இணைத்துக்கொள்ள சோவியத்திடம் கோரிக்கை வைத்தது.
அது 1980ம் ஆண்டு. அமெரிக்க சோவியத் பனிப்போர் உச்சத்தில் இருந்த சமயம். ஆனால், விண்வெளித்துறையில் புதிய சாத்தியங்களை நிகழ்த்த பிற நாடுகளின் நட்பு முக்கியம் என்று கருதிய சோவியத், அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றச் சம்மதம் தெரிவித்தது.
விஞ்ஞானி காரல் சாகன் தலைமையில் பொதுமக்களின் நிதியுடன் இயங்கி வந்த அமெரிக்காவின் தி பிளானட்டரி சொசைட்டி அமைப்பு, சோவியத் அமெரிக்கா விண்வெளி இணைப்பைச் சாத்தியப்படுத்தியது. (இந்த இணைப்புதான் சர்வதேச விண்வெளி நிலையம் உருவாவதற்கும் பின்னாளில் மஸ்க் நிறுவிய ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் உருவாவதற்கும் வித்திட்டது.)
அந்தச் சமயத்தில் நாசாவின் ஜேபிஎல் அமைப்பில் பணியாற்றி வந்த கேன்டரல், செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பை ஆராய்வதற்கு 30 அடி நீளத்தில் டைட்டானியம் உலோகத்தைக் கொண்டு பாம்பு ஒன்றை உருவாக்கி இருந்தார். இதைப் பார்த்த பிரெஞ்சு விண்வெளி அமைப்பு, செவ்வாய் கிரகத்தில் ஊர்ந்து செல்லும் வாகனங்களை வடிவமைக்கும் பணியில் கேன்டரலையும் இணைத்துக்கொண்டது. இதனால் சோவியத் விஞ்ஞானிகளுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கேன்டரலுக்குக் கிடைத்தது. அதுவரை சோவியத் என்பது தனது எதிரி என்ற வெறுப்புப் பிரசாரத்தையே கேட்டு வளர்ந்திருந்த கேன்டரலுக்கு, முதன்முதலாக சோவியத் விஞ்ஞானிகளுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. அதன்மூலம் ஆழமான நட்பும் அமைந்தது.
0
அவருடைய பணி நன்றாகச் சென்றுகொண்டிருந்த சமயத்தில்தான், அடுத்தடுத்த இரண்டு அரசியல் நிகழ்வுகள் அவரது வாழ்வையே மாற்றிப் போட்டது. ஒன்று ஈராக்கின் மீதான அமெரிக்கப் படையெடுப்பு. அமெரிக்காவின் வளைகுடாப் போர், விஞ்ஞானிகளுக்கு விண்வெளி ஆய்வுகளுக்கான நிதி கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்தியது. இருப்பினும் அவர்களுடைய செவ்வாய் கிரக ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருந்தன. அதன்பின் நிகழ்ந்த மற்றொரு நிகழ்வுதான் ஒட்டுமொத்தத் திட்டத்தையும் குலைத்துப்போட்டது.
அந்த நிகழ்வு கேன்டரலை மட்டுமல்ல உலகத்தின் தலைவிதியையே மாற்றியமைத்தது. அதுதான் சோவியத் ஒன்றியத்தின் சிதைவு. 1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று சோவியத்தின் கீதம் கடைசியாக வானொலியில் பாடப்படுவதைக் கேட்ட கேன்டரல், அத்துடன் நிதி நிறுத்தப்படுவதால் செவ்வாய் கிரக திட்டமும் முடிவுக்கு வந்ததை தொலைபேசியின் மூலம் அறிந்துகொண்டார். 1992ஆம் ஆண்டு வேலையை இழந்த அவர், தனது தாய்நாடான அமெரிக்கா திரும்பினார்.
மீண்டும் அமெரிக்கா திரும்பிய அவரை, அவருக்குச் சோவியத் விஞ்ஞானிகளுடன் இருந்த பிணைப்பைக் காரணம் காட்டி அமெரிக்க விண்வெளி நிறுவனங்கள் பணியில் சேர்த்துக்கொள்ள மறுத்தன.
அமெரிக்காவில் விண்வெளி ஆயுதங்களைத் தயாரித்து வந்த மார்டின் மரியிட்டா (பின்னாளில் லாக்ஹீட் மார்டின் (Lockheed Martin) எனப் பெயர் மாற்றப்பட்டது) என்ற நிறுவனத்தில் இணைவது கேன்டரலுக்கு விருப்பமாக இருந்தது.
காரணம், அதன் நிர்வாகிகளில் ஒருவரான ராபர்ட் ஜுப்ரின், மார்ஸ் டிரெக்ட் (Mars Direct) என்ற திட்டத்தில் பணியாற்றி வந்தார். அந்தத் திட்டம் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்கு முன்னோடியாக, சிறப்பு வாகனங்களை அனுப்பும் திட்டம். செவ்வாய் கிரக வாகனங்களை வடிவமைப்பதில் தனக்கு அனுபவம் இருந்ததால் அந்த நிறுவனத்தில் வேலை கிடைத்துவிடும் என கேன்டரல் நம்பினார். அதற்காக ஜுப்ரினையும் நேரில் சந்தித்துப் பேசினார். ஆனால் ஜுப்ரினும்கூட கேன்டரலை சோவியத் உளவாளிபோல நடத்தி, வேலை தர மறுத்துவிட்டார்.
பணி கிடைக்காமல் விரக்தியில் இருந்த கேன்டரலுக்கு ஒருவழியாக அவர் இருந்த பகுதியிலேயே அமைந்திருந்த உத்தா மாநிலப் பல்கலைக்கழகத்தின் (Utah State University) விண்வெளிப் பரிசோதனைக் கூடத்தில் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது. அங்கிருந்த ஆய்வாளர்களில் ஒருவரான முனைவர் ரெட் என்பவர், கேன்டரலை, அமெரிக்காவின் பாதுகாப்புப் புலனாய்வு நிறுவனத்திற்கு (Defence Intelligence Agency) அழைத்துச் சென்றார்.
சரி, ராக்கெட்டுகள் தயாரிக்கும் வேலையைத்தான் அவர்கள் தரப்போகிறார்கள் என நினைத்த கேன்டரலுக்கு மீண்டும் ரகசிய உளவாளிப் பணி வழங்கப்பட்டது. சோவியத் ராஜ்ஜியத்தின் சிதைவுக்குப் பின் அந்நாட்டில் இருந்த அதி புத்திசாலி அணு ஆயுத விஞ்ஞானிகள் எல்லாம் வறுமையின் காரணமாக தங்கள் அறிவையும், தாங்கள் உருவாக்கிய சாதனங்களையும் ரகசியமாக வட கொரியாவிற்கும் இரானிற்கும் விற்று வருவதாக அமெரிக்காவுக்குத் தகவல் கிடைத்தது. இந்தத் திட்டத்தைக் குலைக்க வேண்டும் என்றால் சோவியத் பற்றி நன்கு அறிந்த நபர் ஒருவர் அமெரிக்க உளவு அமைப்புக்குத் தேவை என்பதால் அவர்கள் கேன்டரலைத் தேர்வு செய்தனர்.
தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் கேன்டரல் அமெரிக்காவுக்கும் மாஸ்கோவிற்கும் இடையே தொடர்ந்து பயணம் மேற்கொண்டபடியே இருந்தார். அங்கிருந்த விஞ்ஞானிகளுடன் தனக்கு இருந்த தொடர்பைப் பயன்படுத்தி அணு ஆயுதத் தொழில்நுட்பங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் பிற ஆயுதங்களை வாங்கி அமெரிக்காவிற்கு ரகசியமாகக் கொண்டு வந்தார்.
1996ஆம் ஆண்டு இதுபோன்ற ஒரு திட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவருடைய உளவு வேலை ரஷ்ய அரசுக்குத் தெரிய வர, அவர்கள் கேன்டரலைப் பிடித்து வீட்டுச் சிறையில் அடைத்தனர். இரண்டு வாரம் வீட்டுச் சிறையில் இருந்த கேன்டரல் தப்பிக்க வழியில்லாமல், நிச்சயம் இறந்துவிடுவோம் என்றே நினைத்துவிட்டார். அந்தத் தருணத்தில்தான் அப்போதைய அமெரிக்கத் துணை அதிபராக இருந்த ஆல்பெர்ட் அர்னால்டு கோர் ஜூனியர், இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு கேன்டரலைக் காப்பாற்றி அமெரிக்கா அழைத்து வந்தார்.
இனி ரஷ்ய விஞ்ஞானிகளுடன் தொடர்பே கூடாது, ரஷ்யாவிற்கு மீண்டும் தன் வாழ்நாளில் செல்லவே கூடாது என்று திட்டவட்டமாக அமெரிக்காவில் சுற்றிக் கொண்டிருந்தவரைத்தான் எலான் மஸ்க் தொடர்புகொண்டு, தன்னுடைய திட்டத்திற்கு மலிவு விலை ராக்கெட்டுகளை வாங்க ரஷ்யா சென்று வர வேண்டும் என அழைத்தார்.
சரி, மஸ்க்கிற்கு எப்படி கேன்டரலின் தொடர்பு கிடைத்தது? கேன்டரலை மார்டின் மரியிட்டா நிறுவனத்தின் நிர்வாகி ராபர்ட் ஜுப்ரின் சோவியத் உளவாளிபோல நடத்தினார் என்று பார்த்தோம் இல்லையா? அதே ராபர்ட் ஜுப்ரின்தான் பின்னாளில் மஸ்க்கின் தொடர்பில் இருந்த மார்ஸ் சொசைட்டியை நிறுவியவர். செவ்வாய் கிரகத் திட்டத்திற்காகக் குறைந்த விலையில் ராக்கெட் வேண்டும் என மஸ்க் ராபர்ட் ஜுப்ரினிடம் கேட்டபோது, அவர் சொன்ன முதல் பெயர் ஜிம் கேன்டரல்தான். அவருடைய தொலைபேசி எண்ணையும் கொடுத்து மஸ்கை தொடர்புகொள்ளச் சொன்னார். இப்படியாக மஸ்க் கேன்டரலைத் தொடர்புகொண்டு தன் திட்டத்தைக் கூறி முடித்தார்.
முதலில் இந்தத் திட்டத்தை மறுத்த கேன்டரலை, மஸ்க் விடாமல் தொடர்புகொண்டு தொல்லை செய்துகொண்டே இருந்தார். தொடர்ந்து தொந்தரவு தரும் இந்த மாஸ்க் யார் என்பதை கேண்டரல் தேடிப் படித்துத் தெரிந்துகொண்டார். இருப்பினும் ஆரம்ப நாட்களில் இருவருக்கும், ஒருவர் மேல் ஒருவருக்கு நம்பிக்கை வரவே இல்லை. ஆனால் பின்னாளில் இருவரும் ஒன்றிணைந்து ரஷ்யாவில் சாகசப் பயணங்களை மேற்கொண்டதும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தைத் தொடங்கியதும் ஒரு பிரமிக்க வைக்கும் வரலாறு.
(தொடரும்)