Skip to content
Home » எலான் மஸ்க் #24- ஸ்பேஸ் எக்ஸ் உதயம்

எலான் மஸ்க் #24- ஸ்பேஸ் எக்ஸ் உதயம்

ஸ்பேஸ் எக்ஸ் உதயம்

‘குறைந்த செலவில் ராக்கெட் தயாரிக்கப் போகிறாரா?’ மஸ்க்கின் திட்டத்தைக் கேட்ட ஜுப்ரின் சத்தமாகச் சிரித்தார். மஸ்க், கேன்டரல், கிரிஃபின் மூவரும் மாஸ்கோவில் இருந்து கிளம்பி அமெரிக்காவை அடைந்த அதே வேகத்தில் மஸ்க்கின் புதிய திட்டம் குறித்த அறிவிப்பும் விண்வெளி ஆர்வலர்கள் மத்தியில் சென்றடைந்தது. அவருடைய புதிய திட்டத்தைக் கேட்டு ராபர்ட் ஜுப்ரின் மட்டுமல்ல, விண்வெளித்துறை சார்ந்து இயங்கும் அத்தனை பேரும் நகைக்கவே செய்தனர்.

இது அங்கிருந்தவர்களுக்குப் புதிதான விஷயமல்ல. வருடம் வருடம் இப்படி ஒரு பணக்காரர் கிளம்பி வந்துவிடுவார். நான் பணம் செலவழிக்கிறேன், நீங்கள் உங்கள் அறிவை முதலீடு செய்யுங்கள். நாம் இணைந்து விண்வெளியில் கொடி நாட்டுவோம் எனத் திட்டங்கள் தொடங்கும். ஓரிரு வருடங்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் போகும். பிறகு திடீரெனப் பணக்கார ஆசாமிக்குப் போர் அடித்துவிடும். அவர் கடையைச் சாத்திவிட்டுச் சென்றுவிடுவார். விஞ்ஞானிகள் நடுரோட்டில் நிற்பார்கள். இது வழக்கம்தான்.

மஸ்க்கும் முதலில் எலிகளைச் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புகிறேன் என்றார். பிறகு செடி நடப்போகிறேன் என உளறினார். இப்போது குறைந்த விலை ராக்கெட்டுகளை விண்ணில் ஏவப்போகிறேன் என பினாத்துகிறாரா? எப்படியும் இந்தத் திட்டத்தையும் சிறிது நாட்களில் துடைத்துக் குப்பையில் போட்டுவிட்டு வேறு ஏதாவது வேலையைப் பார்க்கப் போய்விடுவார். இவரை நம்பி நாம் உழைப்பை வீணாக்க வேண்டாம் என விஞ்ஞானிகள் மத்தியில் பேச்சு அடிப்படத் தொடங்கியது.

அங்கிருந்தவர்கள் அனைவரும் மஸ்க் தொடங்க இருக்கும் புதிய ராக்கெட் நிறுவனம் எப்படிப் படுதோல்வியைச் சந்திக்கப்போகிறது எனத் தொலைநோக்குப் பார்வையுடன் விவாதம் செய்து கொண்டிருந்தபோதே, மஸ்க், தான் வெற்றிபெறுவதற்கு ஒரே ஒரு காரணம் வலுவாக இருப்பதாக நம்பினார். அந்த காரணத்தின் பெயர்தான் டாம் முல்லர்.

டாம் முல்லர் அமெரிக்காவில் உள்ள இதாகோ மாகாணத்தில் ஒரு சிறிய நகரத்தில் பிறந்தவர். மஸ்க்கைப்போல இவரும் சிறுவயதில் இருந்தே ஸ்டார் ட்ரெக் உள்ளிட்ட அறிவியல் புனைவுக் கதைகளைப் படித்துவிட்டு, விண்வெளிமீது தீராத காதல் கொண்டவர். சிறுவனாக இருக்கும்போதே எந்த ஓர் இயந்திரமாக இருந்தாலும், அவற்றை முழுதாகக் கழற்றி மாட்டிவிடும் திறமையை முல்லர் கொண்டிருந்தார்.

வளரும் பருவத்தில் ராக்கெட் தயாரிப்பில் ஈர்ப்பு வர, சிறுவர்கள் விளையாடும் ராக்கெட்டுகளின் உதிரிப் பாகங்களை வாங்கி, அவற்றைத் தானாகவே உருவாக்கினார். பின் பன்னிரண்டு வயது இருக்கும்போது, விளையாட்டாக ஒரு விண்கலனை உருவாக்கி, அதை தான் உருவாக்கி வைத்திருக்கும் ராக்கெட்டுடன் இணைத்துக் காற்றில் ஏவினார். குறிப்பாக அது சரியாகத் தரையிறங்கும்படியும் அவற்றை உருவாக்கி இருந்ததுதான் அவருடைய சிறப்பு.

பள்ளியில் நடக்கும் அறிவியல் கண்காட்சிக்காகத் தன்னுடைய தந்தையின் oxy acetylene வெல்டிங் இயந்திரத்தை எடுத்து, ராக்கெட் எஞ்சினின் மூலப்படிவத்தை (Prototype) செய்து முடித்தார். அவற்றைச் சிறப்பாக இயங்கவைத்து மாநில அளவில் பல பரிசுகளையும் வென்றார். சர்வதேசப் போட்டி ஒன்றிலும் கூட அவருக்கு இதன்மூலம் பள்ளிப்பருவத்திலேயே கலந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்தது.

அதன்பிறகு கல்லூரியில் இணைந்து பொறியியல் படிப்பை முடித்தார். கல்லூரி முடித்தவுடனேயே அவருக்கு ஹியூஸ் விமானம் நிறுவனத்தில் செயற்கைக்கோள் தயாரிக்கும் குழுவில் பணி கிடைத்தது. அதன்பிறகு டிஆர்டபிள்யூ (TRW Inc) எனும் மற்றொரு புகழ் பெற்ற நிறுவனத்தில் சேர்ந்தார்.

1980களில் அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன், அமெரிக்காவைத் தாக்க வரும் அணு ஆயுதங்களைத் தடுப்பதற்கு வேண்டி, ராக்கெட் ஆயுதங்களை உருவாக்கும் ஸ்டார் வார்ஸ் திட்டத்தை அமல்படுத்தினார். அந்தத் திட்டத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு முல்லருக்குக் கிடைத்தது. தனக்கு இருந்த திறமையைப் பயன்படுத்திய முல்லர், பல்வேறு ராக்கெட் சாதனங்களை உருவாக்கினார். குறிப்பாக திரவ ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜனில் இயங்கும் TR 106 என்ற இயந்திரத்தை மேற்பார்வையிடும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது.

சிறு வயதில் இருந்தே ராக்கெட்டின் மீது ஆர்வம் கொண்ட முல்லர், ஆய்வுக்குழுவில் பணியாற்றும் தன்னைப் போலவே ஆர்வமிக்க மற்ற ராக்கெட் விரும்பிகளை அழைத்துச் சென்று பக்கத்தில் இருக்கும் மொஜாவே பாலைவனத்தில் ராக்கெட்டுகளை ஏவி சோதனை செய்வார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் முல்லர் செய்யும் சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமான முடிவுகளையே கொண்டு வந்தது. ஆனால் அவரது தலைமை அதிகாரிகள் முல்லர் மீது பொறாமை கொண்டு அவரது நடவடிக்கைகளுக்குத் தடை போட்டனர்.

முல்லரின் முக்கிய சாதனை என்னவென்றால், அவர் தன்போக்கில் உருவாக்கிய 80 பவுண்ட் எடையுள்ள ஒரு ராக்கெட் எஞ்சின், 13,000 பவுண்ட் எடையுள்ள பொருளை உந்தித் தள்ளக்கூடிய ஆற்றலை வெளிப்படுத்தியதுதான். இந்தச் சாதனை அவருக்கு மிகப்பெரிய திரவ எரிபொருள் ராக்கெட் இயந்திரத்தை உருவாக்கிய கத்துக்குட்டி விஞ்ஞானி என்ற பெயரைப் பெற்றுத் தந்தது.

நிற்கும்போதும் நடக்கும்போதும் தூங்கும்போதும்கூட ராக்கெட் பற்றிய சிந்தனையிலேயே உழன்ற முல்லர், ஜான் கார்வே என்ற மற்றொரு ராக்கெட் நிபுணருடன் சுற்றத் தொடங்கினார். ஜான் கார்வே மிகப்பெரிய நிறுவனத்தில் இருந்து தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, சொந்தமாகப் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தியபடி ராக்கெட் தயாரிக்கும் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார். அவரது ராக்கெட் தயாரிப்புத் தொழிற்சாலை (உண்மையில் தொழிற்சாலை அளவுக்குப் பெரிய அமைப்பு எல்லாம் அங்கு இல்லை. மூன்று மெக்கானிக் ஷாப்பை இணைத்து உருவாக்கிய இடம்போலத்தான் அது இருந்தது) ஹண்டிங்டன் கடற்கரையில் இருந்தது.

ராக்கெட்டில் ஈடுபாடு கொண்ட டாம் முல்லரும் ஹார்வியுடன் இணைந்துகொண்டார். இருவரும் பணிமனை ஒன்றை வாடகைக்கு எடுத்து 80 பவுண்ட் எடையுள்ள ராக்கெட் ஒன்றைத் தயாரிப்பதற்கு விளையாட்டாக ஆலோசித்து வந்தனர். அப்போதுதான் ஹார்விக்குக் கேன்டரலிடம் இருந்து அழைப்பு வந்தது. ‘எலான் மஸ்க் என்ற பணக்காரர் உங்கள் பணிமனையைப் பார்வையிட வந்துகொண்டிருக்கிறார்’.

ஹார்விக்குப் பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை. எலான் மஸ்க் என்ற திடீர் பணக்காரர் ஒருவர் ராக்கெட்டுகள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருவதாகவும், அவர் நமது தொழிற்சாலையைக் காண வந்துகொண்டிருப்பதாகவும் ஹார்வி, முல்லரிடம் தெரிவித்தார்.

பணக்காரர் வருவார் என்றவுடன், ஆடம்பரமாகக் காரில் பத்து, பதினைந்து உதவியாளர்களைக் கூட்டிக்கொண்டு வருவார் என்றுதான் ஹார்வி எண்ணி இருந்தார். ஆனால் மஸ்க், கருப்பு கலர் ஜாக்கெட் அணிந்துகொண்டு கர்ப்பமான தனது மனைவியையும் கூட்டிக்கொண்டு வந்து இறங்கினார். இருவரிடமும் தன்னை அறிமுகம் செய்துகொண்டு அங்கிருக்கும் ராக்கெட்டுகளைச் சுற்றிப்பார்க்கத் தொடங்கினார்.

அப்போது சோதனைக்காக வைக்கப்பட்டிருந்த 30 அடி உயர திரவ எரிபொருள் ராக்கெட்டை வானில் ஏவிக்காட்டினார் ஹார்வி. அந்த ராக்கெட் வெற்றியடையவில்லை. ஏவும் நிலையிலேயே வெடித்துவிட்டது. ஆனால் அந்தச் சம்பவம் மஸ்க்கிற்குப் பெரிய திறப்பாக இருந்தது. ஹான் ஹார்வி என்ற நபர் கிடைக்கும் கைக்காசுகளை வைத்தும், சராசரி இயந்திரங்களைப் பயன்படுத்தியும் 30 அடிக்கு ஒரு திரவ எரிபொருள் ராக்கெட்டைக் கட்டமைக்கிறார் என்றார். இதில் உண்மையிலேயே பெரிய அளவு முதலீடு செய்து, சிறந்த அணிகளைத் திரட்டி, கடினமான உழைப்பைச் செலுத்தினால் எத்தனை பெரிய சாதனைகளைச் செய்யலாம் என மஸ்க்கிற்குத் தோன்றியது.

ஹார்வியின் சோதனைக்கூடத்தைப் பார்வையிட வந்த மஸ்க்கிற்கு, முல்லர் பற்றியும் கேன்டரல் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அவருடைய ராக்கெட் வடிவமைப்புச் சாதனைகள்பற்றி முன்னரே அறிந்து வைத்திருந்த மஸ்க், அங்கிருந்த முல்லரிடம் பேசத் தொடங்கினார். முதன்முறையாக மஸ்க்கைப் பார்த்தவுடன் மற்றவர்களைப்போலவே முல்லருக்கும் அவர்மீது நம்பிக்கை வரவில்லை. ஆனால் கேன்டரலே பரிந்துரைத்தார் என்பதால்தான் அவர் பேசினார். முல்லர், தான் வடிவமைத்து இருந்த 80 பவுண்ட் ராக்கெட்டை எஞ்சினை மஸ்க்கிடம் காட்டினார். மஸ்க்கோ முல்லரைக் கேள்விகளால் துளைத்தார்,

‘இந்த இயந்திரத்தால் எவ்வளவு உந்துவிசையை உருவாக்க முடியும்?’

முல்லர் அதற்குப் பதிலளித்தார்.

‘இதைவிடப் பெரிய ராக்கெட்டுகளில் நீங்கள் பணியாற்றி இருக்கிறீர்களா?’ இது மஸ்க்.

‘நான் TRW நிறுவனத்திற்காக 6.60 லட்சம் பவுண்ட் உந்துவிசையை உருவாக்கும் ராக்கெட் எஞ்சினில் வேலை செய்திருக்கிறேன். எனக்கு அந்த எஞ்சினைப்பற்றி ஒவ்வொரு அங்குலமும் தெரியும்!’

‘அத்தனை பெரிய எஞ்சினை உருவாக்க எவ்வளவு செலவாகும்?’

‘TRW நிறுவனம் அதை 12 மில்லியன் டாலர்களுக்கு உருவாக்கியது.’

‘நீங்களாக இருந்தால் அதை எத்தனை செலவில் உருவாக்கி இருப்பீர்கள்?’

இங்குதான் மில்லருக்கு மஸ்க்கின் கேள்விகளில் அடங்கி இருந்த சூட்சுமமே புரிந்தது. ராக்கெட் உருவாக்கம் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கவில்லை. எல்லாவற்றையும் ஏற்கெனவே தெரிந்து வைத்துக்கொண்டு, அவர் தனக்கு இருக்கும் அறிவை ஆழம் பார்த்துக்கொண்டிருக்கிறார். குறிப்பாக தன்னை ஏதோ ஒரு நோக்கத்திற்காக நேர்காணல் செய்துகொண்டிருக்கிறார் என முல்லருக்கு விளங்கியது. முல்லரும் மஸ்க்கும் பல மணி நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

அவர்கள் சந்திப்பு அடுத்த வாரமும் தொடர்ந்தது. இந்தமுறை முல்லர், மஸ்க்கை தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று ஆலோசனை நடத்தினார். மஸ்க்கிற்கு முல்லருடன் பேசும்போதே தெரிந்துவிட்டது. நாம் உண்மையிலேயே ராக்கெட் தயாரிப்பில் பழம் தின்று கொட்டை போட்ட ஆசாமியைத்தான் கண்டறிந்துள்ளோம். இவர்தான் நம்மையும் நமது ராக்கெட்டுகளையும் உயரத்திற்கு அழைத்துச் செல்லப்போகிறார்.

அதன்பிறகு அவர்கள் சந்திப்பு அடிக்கடி நிகழ்ந்தது. மஸ்க், முல்லரைத் தனது விண்வெளித்துறை சார்ந்த நண்பர்களுக்கும் அறிமுகம் செய்துவைத்தார். அவர்களுடைய அணுகுமுறையால் முல்லரும் ஈர்க்கப்பட்டார். முல்லரை இதுபோலவே ஏற்கெனவே சில பணக்காரர்கள் அணுகியிருக்கின்றனர். ஆனால் அவர்களுடைய திட்டமும் அணுகுமுறையும் முட்டாள்தனமாக இருக்கும்.

ஆனால் அவர்களைப் போல இல்லாமல் மஸ்க்கிற்குத் தாம் என்ன செய்கிறோம் என்பது தெளிவாகத் தெரிந்திருந்தது. ஒவ்வொரு சந்திப்பின்போதும் தனது திட்டத்திற்கு வெறுமனே ஆமாம் சாமி போடுபவர்களையும், காரணம் இல்லாமல் மறுப்புத் தெரிவிப்பவர்களையும் கொஞ்சமாகக் களையெடுத்தார். சொல்லப்போனால் செழுமைப்படுத்தினார். இறுதியாக மிகவும் அறிவார்ந்த, அனுபவம் வாய்ந்த தனது திட்டத்தில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்ட பொறியாளர்களை மட்டும் மஸ்க் வைத்திருந்தார்.

முல்லர், மஸ்க்கிற்குப் பல விதங்களில் ராக்கெட் பற்றிய ஞானத்தை வழங்கினார். புதிய, குறைந்த விலை ராக்கெட்டுகளுக்கு ஆகும் செலவுகள் என்ன? அவற்றின் செயல்திறன் என்னவாக இருக்கும் உள்ளிட்ட பல விஷயங்களை அவர்கள் ஆலோசித்தனர். கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய திட்டம் செம்மைப்படுத்தப்பட்டது.

போயிங், லாக்ஹீட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏவும் ராக்கெட்டுகளைப் போலவோ, ரஷ்யர்கள் உள்ளிட்ட உலக நாடுகள் விண்ணில் செலுத்தும் ராக்கெட்டுகளைப் போலவோ தனது ராக்கெட் ஒரு டிரக் அளவு பெரிய செயற்கைக்கோள்களை விண்ணுக்குக் கொண்டு செல்லாது. அதற்குப் பதில் குறைந்த எடையுள்ள செயற்கைக்கோள்களையும் எலக்ட்ரானிக் சாதனங்களையும் விண்ணிற்கு ஏந்திச் செல்லும்.

அப்போது விண்வெளித்துறையில் புதிய மாற்றங்கள் நடைபெற்று வந்தது. கணினி மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக சிறிய அளவிலான செயற்கைக்கோள்கள் மற்றும் கணினிமயமாக்கப்பட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் உருவாக்கப்பட்டு வந்தன. அவற்றை விண்வெளிக்குக் கொண்டு செல்வது என்றால் செலவு கையைக் கடித்தது. இவர்களைக் குறிவைத்துத்தான் மஸ்க் தன் திட்டத்தையே உருவாக்கினார்.

‘குறைந்த விலையில், குறுகிய இடைவெளியில் தொடர்ந்து ராக்கெட்டுகளை ஏவி, அவர்கள் தயாரிக்கும் சாதனங்களைப் பழுதடையாமல் விண்வெளிக்குக் கொண்டு சென்றால் புதிய சந்தை ஒன்று திறக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு நிகழும்போது விண்வெளியின் புதிய யுகத்தின் முன்னோடியாக நான்தான் இருப்பேன்’ என மஸ்க் கூறினார்.

ஆனால் எடுத்தோம் கவிழ்த்தோம் என முழுமையாக அவர் அதில் இறங்கிவிடவில்லை. இந்தச் சம்பவங்கள் எல்லாம் நடைபெற்று வந்தபோது மஸ்க் பேபாலின் இறுதி அத்தியாயத்தில் இருந்தார். பேபால் முழுமையாகப் பொது நிறுவனமாக மாறி இருந்தது. அதன் சந்தை மதிப்பு 55 சதவிகிதம் உயர்ந்ததைத் தொடர்ந்து பேபாலை இ-பே நிறுவனம் வாங்க விரும்புவதை மஸ்க் தெரிந்துகொண்டார். இதனால் மஸ்க்கின் சந்தை மதிப்பும் சில மில்லியன்களில் இருந்து பல நூறு மில்லியன்களாக உயர்ந்தது.

2002ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பேபாலில் இருந்து தன்னுடைய ஈடுபாடுகளை விலக்கி கொஞ்சம் கொஞ்சமாக முழுநேர வணிக விண்வெளி நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்கிற முனைப்பில் இறங்கினார் மஸ்க். தனக்கு உறுதுணையாக, கேன்டரல், கிரிஃபின், முல்லர், கிரிஸ்தாம்சன் (இவர் போயிங் நிறுவனத்தில் விண்வெளிப் பொறியாளராக இருந்தவர்) ஆகியோரை அழைத்தார். நான் புதிய விண்வெளி நிறுவனம் தொடங்க விரும்புகிறேன். நீங்கள் வருகிறீர்கள் என்றால் உடனே வேலையைத் தொடங்குவோம் என்றார்.

இப்படித்தான் 2002ம் ஆண்டு ஜூன் மாதம் ஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் டெக்னாலஜி எனப்படும் ஸ்பேஸ் எக்ஸ் உதயமானது.

(தொடரும்)

பகிர:
nv-author-image

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *