Skip to content
Home » எலான் மஸ்க் #25 – புதிய இலக்கு

எலான் மஸ்க் #25 – புதிய இலக்கு

புதிய இலக்கு

2002ம் ஆண்டு ஜூன் மாதம், மிக எளிமையான பின்னணியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. லாஸ் ஏஞ்சலெஸ் நகரத்தின் புறநகர்ப் பகுதியில் கைவிடப்பட்ட தொழிற்சாலை ஒன்றில் அந்த அலுவலகம் நிறுவப்பட்டது. விண்வெளி நிறுவனம் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்பது மஸ்க்கின் சிறிய வயதுக் கனவு என்பதால், அந்த அலுவலகத்தின் கட்டமைப்பு ஒவ்வொன்றும் மஸ்க்கின் மேற்பார்வையிலேயே வடிவமைக்கப்பட்டது. முதல் வாரத்தில் அலுவலகத்திற்குத் தேவையான லேப்டாப்கள், பிரிண்டர்கள், மேஜைகள் எல்லாம் டிரக்கில் கொண்டு வரப்பட்டு இறக்கப்பட்டன. அங்கிருந்த கடைநிலைப் பணியாளர்களுடன் எலான் மஸ்க்கும் இணைந்துகொண்டு டிரக்கில் இருந்து பொருள்களை இறக்கி வைப்பது, அவற்றைச் சரி பார்ப்பது, தேவையான உதவிகளைச் செய்வது என ஆவலுடன் ஓடி ஆடிக்கொண்டிருந்தார்.

அலுவலகம் முழுவதும் பளபளக்கும் வகையில் வெள்ளை நிற பெயின்ட் அடிக்கப்பட்டது. ராக்கெட் தொழிற்சாலை பார்ப்பதற்குச் சுத்தமாகவும், பணியாளர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதற்காக வெண்மை நிறத்தை அவர் தேர்ந்தெடுத்தார். வெளிப்புறத் தோற்றத்தைத் தாண்டி, பிற அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் இல்லாத மாற்றம் ஒன்றும் ஸ்பேஸ் எக்ஸ் அலுவலகத்தில் அமல்படுத்தப்பட்டது. அது, மூளையை முதலீடாக்கி உழைப்பவர்களையும், உடலை வருத்தி உழைப்பவர்களையும் ஒரே இடத்தில் சந்திக்க வைக்கும் திட்டம். மஸ்க்கின் நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக அமெரிக்காவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் எனக் கருதப்படும் ஐவி லீக்கில் இருந்து பட்டம் பெற்றுப் பல கணினிப் பொறியாளர்கள், ராக்கெட் இயந்திரங்களை வடிவமைக்கும் பொறியியலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களை ராக்கெட்டுகளுக்குத் தேவையான ஹார்ட்வேர் பாகங்களை உருவாக்கும் வெல்டர்கள், மெஷினிஸ்டுகளுடன் இணைந்து பணியாற்றும் வகையில் மஸ்க் ஏற்பாடு செய்திருந்தார்.

ஸ்பேஸ் எக்ஸின் இந்த அணுகுமுறை, விண்வெளி நிறுவனங்களின் பழமையான தொழிற்சாலை அமைப்பை உடைப்பதாக இருந்தது. அதற்கு முன் இருந்த நிறுவனங்களின் தொழிற்சாலைகளில் ஒவ்வொரு குழுவும், ஒவ்வொரு இடத்தில் இருந்து பணியாற்றும். கணினிப் பொறியாளர்கள் குழு அமைந்திருக்கும் இடத்தில் இருந்து குறைந்தது ஆயிரம் கிலோ மீட்டர்கள் தொலைவில்தான் இயந்திரவியல் நிபுணர்கள் பணியாற்றிக் கொண்டிருப்பார்கள். இதனால் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதும், திட்டமிடுவதும் கடினமாக இருக்கும். தொழிற்சாலைகளின் வாடகைச் செலவு, பணியாட்கள் கூலிச் செலவைக் குறைப்பதற்காக இதுபோன்ற அமைப்பு பின்பற்றப்பட்டு வந்தது. மஸ்க் இந்த அமைப்பையே முற்றிலுமாக மாற்றி, ஒவ்வொருவரும் மற்றவர்களை எளிதாக அணுகும் வகையில் ஒரே தொழிற்சாலையின் கீழ் அனைவரையும் கொண்டு வந்தார்.

அலுவலகம் தொடங்கியாயிற்று, பணியாட்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர். அடுத்தது என்ன? ஸ்பேஸ் எக்ஸ் அலுவலகத்தில் பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் தனது திட்டம் என்ன என்பதைத் தெரிந்திருக்க வேண்டும் என்பதில் மஸ்க் உறுதியாக இருந்தார். அதனால் அத்தனைப் பிரிவுகளிலும் பணியாற்றும் பணியாட்களை அழைத்து, தன்னுடைய திட்டம் என்ன என்பதை அவர்களுக்கு விளக்கினார்.

நம் நிறுவனத்தின் ஒரே லட்சியம் விண்வெளித்துறையின் சவுத்வெஸ்ட் விமான நிறுவனமாக வருவதுதான் என கூறினார். சவுத்வெஸ்ட் விமான நிறுவனம் என்பது அமெரிக்காவில் பொதுமக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் விமானப் பயணத்தைச் சாத்தியப்படுத்திய ஒரு நிறுவனமாகும். அதை எடுத்துக்காட்டாக வைத்துத்தான் தம் திட்டத்தை ஊழியர்களுக்குப் புரிய வைத்தார்.

சவுத் வெஸ்ட் விமான நிறுவனம், விமானச் சேவையில் பின்பற்றும் அதே மந்திரத்தைத்தான் விண்வெளிச் சேவையில் நாம் செய்யப்போகிறோம். ஸ்பேஸ் எக்ஸில் ராக்கெட் எஞ்ஜின்களை நாமே தயாரிப்போம், ராக்கெட்டுகளுக்குத் தேவையான பிற பாகங்கள் ஒப்பந்தங்கள் மூலம் பிற நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படும். நம்முடைய சக போட்டியாளர்களிடம் இருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டுவதற்கு நாம் செய்யவேண்டியது, ஸ்பேஸ் எக்ஸால் சிறப்பு வாய்ந்த, குறைந்த விலை எஞ்ஜின்களை உருவாக்க முடியும். அதுமட்டுமின்றி பிறரைவிட வேகமாகவும் ராக்கெட்டுகளை உருவாக்கி சந்தைக்குக் கொண்டு வர முடியும் என்பதை நிரூபிப்பதுதான் என்றார். இதற்கு ஏற்றாற்போல் தொழிற்சாலையில் பின்பற்றப்படும் உற்பத்தி முறை மாற்றி அமைக்கப்படும் எனக் கூறினார்.

இதுமட்டுமல்லாமல், நகரும் ராக்கெட் ஏவுதளங்களை உருவாக்கவேண்டும் என்ற திட்டத்தையும் மஸ்க் முன்மொழிந்தார். நகரும் ராக்கெட் ஏவுதளங்கள் பயன்பாட்டிற்கு வந்தால் ராக்கெட்டுகளை ஏவுவதற்கான போக்குவரத்துச் செலவு குறையும். யாருக்காவது ராக்கெட் ஏவ வேண்டும் என்றால், அந்த நிறுவனம் இருக்கும் இடத்திற்கு அருகாமையிலேயே ஒரு இடத்தைத் தேர்வு செய்து, ஏவு தளத்தை ஒரு சில மணி நேரங்களில் கட்டமைத்து, அங்கிருந்தே ராக்கெட்டுகளை ஏவ முடியும். இதற்கான சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன. இந்தத் திட்டங்களை நாம் சிறப்பாகச் செயல்படுத்தினாலே போதும், ஒரு மாதத்தில் பல முறை ராக்கெட்டுகளை ஏவி, ஒவ்வொரு முறையும் வருமானம் பார்க்கலாம். இதனால் அரசாங்க நிதியை மட்டுமே சார்ந்து இயங்கும் மிகப்பெரிய ஒப்பந்ததாரராக நாம் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. சிட்டுக்குருவிகளைப்போலச் சிறகடித்துப் பறந்து விண்வெளியில் வட்டமிடலாம் எனக் கூறி முடித்தார்.

உண்மையில், மஸ்க்கின் திட்டம் தெளிவானதாக இருந்தது. தனக்குப் போட்டியாகவுள்ள நிறுவனங்களை எல்லாம் பக்கத்திலேயே நெருங்கவிடாத அளவிற்கு ஒரு செயல்திட்டத்தை உருவாக்கிவிட்டுத்தான் அவர் தொழிலிலேயே இறங்கினார். விண்வெளித்துறை ஐம்பது வருடங்களாக எந்த ஒரு மாற்றமும் அடையாமல் இருப்பதாக மஸ்க் கருதினார். விண்வெளித்துறையில் இயங்கும் நிறுவனங்களிடையே போட்டி குறைவாகவே இருந்தது. மேலும், அந்நிறுவனங்கள் அதிகச் செலவில், அதிகபட்சச் செயல்திறனை வெளிப்படுத்தும் ராக்கெட்டுகளை உருவாக்குவதில்தான் முனைப்பு காட்டி வந்தன. எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், ஒவ்வொருமுறையும் வெளியில் பயணம் செய்வதற்கு விலை உயர்ந்த ஃபெராரி காரைத்தான் உருவாக்க வேண்டும் என அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் ஃபெராரி கார்களில் மட்டும்தான் பயணம் செய்ய முடியுமா என்ன? குறைந்த விலையில் உருவாக்கப்படும் ஹோண்டா ரக கார்களில் கூடப் பயணம் செய்யலாம் இல்லையா? அதையேதான் ராக்கெட் தொழில்நுட்பத்திலும் தாம் செய்ய வேண்டும் என முடிவெடுத்திருந்தார் மஸ்க்.

ஸ்பேஸ் எக்ஸில் நவீன ராக்கெட்டுகளைத் தயாரிப்பதற்கு சிலிகான் பள்ளத்தாக்கு அனுபவமும் எலான் மஸ்க்கிற்குக் கைகொடுத்தது. கணினி மற்றும் ஆன்லைன் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களில் தான் பயின்ற சில தொழில் உத்திகளை ஸ்பேஸ் எக்ஸில் அவர் செயல்படுத்தினார். ஸ்பேஸ் எக்ஸ் தொழிற்சாலையின் உட்கட்டமைப்பை நவீன கணினிமயப்படுத்தினார். கணினித் தொழில்நுட்பம் மற்றும் மூலப்பொருள்கள் பயன்பாட்டில் ஏற்படும் முன்னேற்றங்களை உடனுக்குடன் அவதானித்து அவற்றை பல ஆண்டுகளாக வழமையில் இருக்கும் ஏற்பாடுகளுக்கு மாற்றாகக் கொண்டு வந்தார். அமெரிக்காவில் மட்டுமல்ல உலக அளவிலேயே ராக்கெட்டுகள் இயங்குமுறையை நவீனப்படுத்தியதில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முன்னோடியாக இருந்தது. ராக்கெட் வணிகத்தின் புதிய திறப்பை ஸ்பேஸ் எக்ஸ் அமெரிக்காவிற்கு உலக அளவில் ஏற்படுத்திக்கொடுத்தது.

ஸ்பேஸ் எக்ஸ் லாப நோக்கத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கும் ஒரு தனியார் நிறுவனம் என்பதால், அரசாங்க ஒப்பந்ததாரர்களிடம் வழக்கமாக இருந்த பொருள்களை விரயம் செய்தல் என்ற எண்ணமே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ஊழியர்களிடம் இல்லை. அதேபோல் வீண் செலவுகளை தவிர்ப்பதற்கு என்றே தனிக் குழு அமைத்து அவற்றைத் தனது நேரடி மேற்பார்வையின் கீழ் மஸ்க் இயங்க வைத்தார்.

ஸ்பேஸ் எக்ஸ் மூலம் ஏவப்பட இருந்த முதல் ராக்கெட்டுக்கு ஃபால்கான் 1 (Falcon 1) என மஸ்க் பெயரிட்டார். இந்தப் பெயர், மஸ்க் சிறுவயதில் பார்த்து வளர்ந்த ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தில் வரும் விண்கப்பலின் பெயர். மேலும் அப்படத்தில் அந்த விண்கப்பல் சிறப்பான எதிர்காலத்தைக் கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும். அதே அடையாளத்தைத் தனது முதல் ராக்கெட்டும் பெற்றிருக்க வேண்டும் என்பதற்காக ஃபால்கான் என்ற பெயரை மஸ்க் தேர்ந்தெடுத்தார். பெயர் மட்டும் வைத்தால் போதுமா? தனது ராக்கெட் எத்தகைய திறன் கொண்டது என உலகிற்குக் காட்ட வேண்டாமா? அதற்கான ஒரு செயல்திட்டமும் மஸ்க்கிடம் இருந்தது.

அந்தச் சமயத்தில் 550 பவுண்ட் எடை கொண்ட பொருள்களை விண்வெளிக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றால் குறைந்தது 3 கோடி டாலர்கள் செலவு பிடிக்கும். ஆனால் ஃபால்கான் 1 ராக்கெட் மூலம் 1400 பவுண்ட் எடையுள்ள பொருள்களை வெறும் 69 லட்சம் டாலர்கள் செலவில் நான் விண்வெளிக்கு அனுப்புவேன் என அறிவிப்பு ஒன்றை மஸ்க் வெளியிட்டார். இந்த அறிவிப்பு அந்த காலக்கட்டத்தில் விண்வெளி ஆர்வலர்கள் அனைவருக்கும் திகைப்பை ஏற்படுத்தியது. மஸ்க் சொல்லும் விஷயம் சாத்தியமே இல்லை என அவர்கள் ஸ்பேஸ் எக்ஸிற்கு எதிராக விமர்சனங்களை அடுக்கத் தொடங்கினர். மஸ்க் வாய்சவடால் விட்டுக்கொண்டிருக்கிறார். எந்த ஒரு கொம்பனாலும் நிகழ்த்தவே முடியாத சாத்தியம் அது என பேட்டிக் கொடுக்கத் தொடங்கினர். வழக்கம்போல அவர்களது பேச்சு பலர் மத்தியில் கவனத்தைப் பெற்று, பொதுமக்களின் செவிகளுக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்பற்றிய விளம்பரமாக அமைந்தது.

ஆனால் மஸ்க் விளையாட்டிற்காக அவ்வாறு சொல்லவில்லை, தான் சத்தியம் செய்ததை நிறைவேற்றிக் காட்டுவேன் என்ற அதீத லட்சியத்தை உருவாக்கிக்கொண்டு, சில கெடுபிடியான கால அளவுகளை நிர்ணயித்தார். அவர் நிர்ணயித்த இலக்குப்படி ஸ்பேஸ் எக்ஸின் முதல் எஞ்ஜின் 2003ம் ஆண்டு மே மாதத்திற்குள் முடிந்திருக்க வேண்டும், இரண்டாவது எஞ்ஜின் ஜூன் மாதம் நிறைவடைய வேண்டும். ராக்கெட்டின் உடல் ஜூலை மாதத்தில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். இவை அனைத்தும் ஆகஸ்டு மாதத்தில் ஒன்றிணைக்கப்பட்டு முழு ராக்கெட்டாக உருமாறி இருக்கவேண்டும். ஏவுதளத்தைச் செப்டம்பரில் உருவாக்கி, முதல் ராக்கெட்டை அதே வருடத்தில் நவம்பர் மாதத்தில் ஏவி விட வேண்டும் என்ற முனைப்பில் செயல்படத் தொடங்கினார். மஸ்க்கைப் பொறுத்தவரை இது செய்து முடித்து விடக்கூடிய ஒன்றுதான். அதற்கான தர்க்கரீதியான தகவல்கள் அவரிடம் இருந்தன. ஆனால் அந்தப் பணியைச் செய்ய உழைப்பில் ஈடுபட வேண்டியது சாதாரண ஊழியர்கள் அல்லவா? மஸ்க் நிர்ணயித்த இலக்குப்படி ஒவ்வொரு ஊழியரும் வேலை நேரத்திற்கும் அதிகமான உழைப்பில் ஈடுபட வேண்டும். ஓய்வு என்பதை நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. ஊழியர்களின் விடுமுறை, மனநிலை, தனிப்பட்ட வாழ்க்கை எதுவும் மஸ்க்கிற்குப் பொருட்டாகத் தெரியவில்லை. ஒரு ராக்கெட்டை உருவாக்க எத்தனை நாட்கள் எடுக்கும் என ஒரு பேச்சுக்குக்கூட அவர் ஊழியர்களிடம் கேட்கவில்லை. தான் நினைத்ததைச் செய்தாக வேண்டும் எனக் கறாராக இருந்தார். இதனால் மஸ்க்கிடம் தினம் தினம் போராடுவதே ஊழியர்களுக்குப் பெரும் பணிச்சுமையாக முடிந்தது.

தொடரும்

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *