Skip to content
Home » எலான் மஸ்க் #26 – உயரமும் வீழ்ச்சியும்

எலான் மஸ்க் #26 – உயரமும் வீழ்ச்சியும்

எலான் மஸ்க்

கடினமான கால அளவை நிர்ணயித்து ஊழியர்களை வேலை வாங்கத் தொடங்கியவுடனேயே, உள்ளுக்குள் இருந்தவர்கள் மஸ்க்கிற்கு எதிராக அணி திரளத் தொடங்கினர். இது மஸ்க்கிற்கும் புரிந்தது. இந்த எதிர்ப்பை வளர விடாமல் ஆரம்பத்திலேயே அணைத்துவிட வேண்டும் எனப் புரிந்துகொண்டார். தன் ஊழியர்கள் அனைவரையும் அழைத்தார். ‘என்னதான் கடினமான சூழலாக இருந்தாலும் தன் கனவை நம்பி சாத்தியமில்லா பயணத்தில் உடன் வர ஒப்புகொண்ட உங்களுக்கு 2 வருடங்களுக்கு வேலை பாதுகாப்பை உறுதி செய்கிறேன்’ என அறிவித்தார். என்ன பிரச்னை வந்தாலும் அவர்களை வேலையில் இருந்து நீக்க மாட்டேன் எனச் சத்தியம் செய்தார். இது ஓரளவிற்கு ஊழியர்களுக்கு ஆசுவாசத்தை வழங்கியது.

ஸ்பேஸ் எக்ஸ் இரண்டு வகையில் மஸ்க்கிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக இருந்தது. ஒன்று எலான் மஸ்க் சிறுவயதில் கண்ட கனவு, தற்போது நிஜமாகி, நிறுவனமாக உருமாறி நிற்கிறது. இரண்டாவது, இது முழுக்க, முழுக்க மஸ்க் மட்டுமே சொந்தம் கொண்டாடும் வகையில் உருவாகிய நிறுவனம். ஜிப்2 போலவோ, பேபால் போலவோ மூன்றாம் நபர் யாரும் வந்து அவரது பதவியையோ, அதிகாரத்தையோ தட்டிப் பறிக்க முடியாது. உரிமை கொண்டாட முடியாது. அதற்கான தயாரிப்பிலும் மஸ்க் ஆரம்பம் முதலே கவனம் செலுத்தி வந்தார். அதனால்தான் தனக்கு எவ்வளவுக்கு எவ்வளவு நிதி கிடைக்கிறதோ அத்தனையையும் ஸ்பேஸ் எக்ஸ்ஸில் முதலீடு செய்தார். அந்நிறுவனத்தின் அதிக பங்குகளுக்கு உரிமை கொள்வதன் மூலம், அதனைத் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொண்டார்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை ஒரே ஒரு சவால்தான் அதன் முன் இருந்தது. அந்நிறுவனம் தன்னுடைய திட்டங்களைத் தெளிவாக வைத்திருந்தாலும் ஒரு ராக்கெட்டைக்கூட இன்னும் தயாரிக்கவில்லை என்பதுதான் பிரச்னை. குறைந்த செலவில் ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்புவது என்பது, கேட்பதற்கு எவ்வளவு இனிமையாக இருக்கிறதோ அதே அளவு எளிமையானது கிடையாது. குறிப்பாக அரசாங்க நிதி இல்லாமல், தனிப்பட்ட நபர் ஒருவரால் சிறப்பாக செயலாற்றும் ராக்கெட்டுகளை உருவாக்க முடியும் என்பதை யாரும் நிரூபித்ததில்லை. அமெரிக்கா மற்றும் சோவியத் அரசாங்கங்கள் தயாரித்த பல ராக்கெட்டுகளே மண்ணைக் கவ்வியுள்ளன. வானில் ஏவப்படும் நேரத்தில் பல்வேறு விபத்துகளைச் சந்தித்துள்ளன. 1957 முதல் 1966 வரை அமெரிக்கா மட்டும் 400க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வானில் ஏவும் முயற்சியில் வெடித்துச் சிதற வைத்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் பறந்துகொண்டிருக்கும்போதே பற்றி எரிந்து நாசமாகியுள்ளன. வழக்கமாக விண்வெளிக்கு ஏவப்படும் ராக்கெட்டுகள் அதற்கு என்றே பிரத்தியேகமாக உருவாக்கியதாக இருக்காது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைக் கொஞ்சம் பட்டி டிங்கரிங் வேலை செய்து ராக்கெட்டாக மாற்றி இருப்பார்கள். இதற்காக அரசாங்கம் கோடிக்கணக்கான டாலர்களைச் செலவழித்திருக்கும். பல கட்ட சோதனைகள் மற்றும் தவறுகள் எல்லாம் ஏற்பட்டு, இறுதியாக ராக்கெட் விண்ணில் ஏவப்படும்.

ஸ்பேஸ் எக்ஸிற்கு ஒரே ஓர் அனுகூலம் மட்டும் இருந்தது. அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் நிபுணர்கள் போயிங், TRW உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில், விண்வெளித் திட்டங்களில் பணியாற்றியவர்கள். ஆதி முதல் அந்தம் வரை ராக்கெட்டுகள் இயங்கும் வித்தைகளை அறிந்தவர்கள். அவர்கள் ஏற்கெனவே பல தவறுகளில் இருந்து பாடத்தை கற்றுக்கொண்டுதான் இங்கே வந்திருக்கிறார்கள். இருந்தாலும் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம், தான் செலவழித்து ஏவும் ஒவ்வொரு ராக்கெட்டிலும் கூடுதல் அக்கறை செலுத்தித்தான் ஆக வேண்டும். காரணம் நிதி. ஃபால்கான் 1 ராக்கெட்டை ஏவுவதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இரண்டு, மூன்று வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதன்பின்னும் ராக்கெட் ஏவுவதில் பிரச்னை இருந்தால், அந்நிறுவனத்தை நம்பி யாரும் முதலீடு செய்ய முன் வர மாட்டார்கள். நிறுவனத்தை மூடிவிட வேண்டியதுதான். அந்நிறுவனத்தின் தலைமை பொறுப்பு ஒன்றில் இருந்த, ராக்கெட்டுகளை வடிவமைக்கும் டாம் முல்லர் ஸ்பேஸ், எலான் மஸ்க்கைக் கூப்பிட்டு உறுதியாகச் சொன்னார்.

‘நான் TRW-ல் பணியாற்றி இருக்கிறேன். அங்கே ராக்கெட்டுகளைத் தயாரிக்க கோடிக்கணக்கான டாலர்களில் அரசாங்க நிதியும், எறும்பைப்போல ஓய்வில்லாமல் வேலை செய்ய ஆயிரக்கணக்கான ஊழியர்களும் இருப்பார்கள். ஆனால் இங்கே நம்மிடம் இருப்பதோ குறைந்த அளவு வளம். நாம் குறைந்த விலை ராக்கெட்டை உருவாக்கப்போகிறோம். அதுவும் மிகச்சிறிய அணியை வைத்துக்கொண்டு. இதை நம்மால் செய்யவே முடியாது என்பதைத்தான் சக ராக்கெட் நிறுவனங்கள் நினைக்கின்றன. இவற்றை நாம் செயல்படுத்திக் காட்டிவிட்டோம் என்றால் நமக்கு கிடைக்கப்போகும் அதிர்ஷ்டத்தை யாராலும் தடுக்க முடியாது!’

2002ம் ஆண்டு ஜூலை மாதம் இபே நிறுவனம் பேபால் நிறுவனத்தை 150 கோடி டாலர்களுக்கு வாங்க முன்வந்தது. இந்த ஒப்பந்தத்தால் பெரும் தொகையைப் பெற்ற மஸ்க், 10 கோடி டாலர்களுக்கும் அதிகமான தொகையை ஸ்பேஸ் எக்ஸில் முதலீடு செய்தார்.

ஸ்பேஸ் எக்ஸ் குறித்த செய்தி கொஞ்சம், கொஞ்சமாக அமெரிக்கா முழுவதும் பரவியது. முதலில் விண்வெளி ஆர்வலர்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் குறித்துக் கேள்விப்பட்டனர். அவர்களுக்கு மஸ்க் குறைந்த காலத்தில் ஃபால்கன் 1 ராக்கெட்டைத் தயார் செய்வேன் என சவடால் விட்டுக்கொண்டு திரிவதுபற்றியெல்லாம் கவலையில்லை. அது சாத்தியமா என்பது குறித்தும் அக்கறை இல்லை. அவர்களுக்குத் திடீரென்று விண்வெளித்துறையில் முளைத்திருக்கும் நபர் குறைந்த விலையில் ராக்கெட் தயாரிக்கும் திட்டத்தை வைத்திருக்கிறாரே என்ற விஷயம் மட்டும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அமெரிக்க ராணுவத்திலும் எலான் மஸ்க் குறித்த பேச்சு அடிப்படத் தொடங்கியது. எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தைத் தொடங்கிய அதே நேரத்தில்தான் ராணுவ உயர் அதிகாரிகள் சிலர், அமெரிக்க ராணுவத்தை விண்வெளி மயமாக்க வேண்டும் எனக் குரல் கொடுத்து வந்தனர். விண்வெளியில் ஏவப்படும் செயற்கைக்கோள் மூலம் தரையில் இருக்கும் ஆயுதங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதும், திடீரென்று ஏதாவது ஒரு பிரச்னை வெடித்துவிட்டால், நிலையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள அமெரிக்க ராணுவம் விண்வெளியிலும் ஆதிக்கம் செலுத்தவேண்டும் எனக் கூறி வந்தனர். ஆனால் நீண்ட நாட்களாக இது சாத்தியமில்லாத ஒன்றாகவே இருந்து வந்தது. காரணம், ராணுவ நோக்கத்திற்காகச் செயற்கைக்கோளை வடிவமைத்து, அதை ராக்கெட்டில் அனுப்புவதற்குக் குறைந்தது 10 ஆண்டுகளாக எடுக்கும் சூழல் இருந்தது. அதற்காக ஏற்படும் செலவுகளை ஆராய்ந்த அமெரிக்க ராணுவம், புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்தாமலேயே வைத்திருந்தது. ராணுவத்திற்குத் தேவை மிகக் குறைவான செலவு பிடிக்கும், சிறிய அளவிலான செயற்கைக்கோள்கள். அவற்றை மென்பொருள்களின் உதவியுடன் மாற்றி அமைக்கும் தன்மையில் உருவாக்க வேண்டும். குறைந்த காலப் பயன்பாட்டு செயற்கைக்கோள்களாக இருந்தாலும் சரி, ஒரு செயற்கைக்கோள் வேலை செய்யாவிட்டால், இன்னொன்றை உருவாக்கி உடனேயே விண்வெளிக்கு அனுப்பக்கூடிய வகையில் இருக்க வேண்டும். இதுபோன்ற அமைப்பை உருவாக்கிவிட்டால் அவை நிச்சயம் அமெரிக்க ராணுவத்தையே மாற்றி அமைத்துவிடும் என்பதுதான் அமெரிக்காவின் எண்ணம். விண்வெளியை மட்டும் நாம் கைப்பற்றிவிட்டால் நிலம், நீர், ஆகாயம்போல நினைத்த நேரத்தில் விண்வெளியையும் நாம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விடலாம் என ராணுவம் கருதியது.

அப்போதைய அமெரிக்கப் பாதுகாப்புத்துறையின் தலைமை ஆலோசகராக பீட் வோர்டன் என்பவர் இருந்தார். இவர் அமெரிக்க விமானப்படையில் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்றவர். மேற்சொன்ன அமெரிக்க விண்வெளி ராணுவத் திட்டத்தைக் குறித்து வோர்டன் பல துறை நிபுணர்களைச் சந்தித்துப் பேசினார். பல நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆனால் அவர் எதிர்பார்த்த குறைந்த விலை நவீனத் தொழில்நுட்பத்தை எந்த நிறுவனமும் வழங்க முன்வரவில்லை. அப்போதுதான் அவருக்கு மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பற்றித் தெரிய வந்தது. நேராகச் சென்று மஸ்க்கைச் சந்தித்துப் பேசினார்.

மஸ்க்கை ஒருமுறை சந்தித்தவுடனேயே வோர்டன் திகைத்துவிட்டார். இதுவரை தான் சந்தித்த விண்வெளி நிறுவனங்களுக்கு அமெரிக்காவை விண்வெளிப் பாதுகாப்பில் முதன்மையான நாடாக மாற்ற வேண்டும் என்ற கனவு இருந்தது. ஆனால் கனவை நனவாக்கும் திறன் இல்லை. மஸ்க்கிடம் பேச்சு மட்டுமில்லாமல் சரியான செயல் திட்டமும் இருக்கிறது. மஸ்க் கனவு காண்பதில் வானுயர பறந்தாலும், அவருடைய கால் நிதானமாக நிலத்திலேயே இருக்கிறது. தனது லட்சியங்களுக்கான அடித்தளத்தை நிலத்தில் ஆழமாகப் பதித்த பிறகுதான் அவர் பறப்பதற்கான வேலைகளைத் தொடங்கியுள்ளார் என்பதைப் புரிந்துகொண்டார்.

மஸ்க்கைச் சந்தித்தபின் அவரைப் பாராட்டி வெளிப்படையாகவே பேசத் தொடங்கிவிட்டார். ‘நான் பல விற்பனர்களைச் சந்தித்துப் பேசியுள்ளேன். அவர்களது லட்சியங்கள் யதார்த்தத்திற்கு ஒத்துவராததாக இருக்கும். ஆனால் எலான் மஸ்க் வித்தியாசமானவர். அவருக்குத் தொலைநோக்குப் பார்வை இருந்தது. ராக்கெட் தொழில்நுட்பத்தை நன்கு புரிந்து வைத்திருக்கிறார். அவருடன் பயணிப்பதில் நிச்சயம் அமெரிக்க ராணுவத்திற்குப் பலனைத் தரும்’ எனப் பாராட்டினார்

இது ஒருபுறம் இருக்க விஞ்ஞானிகளும் மஸ்க்கின் நிறுவனத்தைத் தங்கள் நோக்கத்திற்காக எப்படி பயன்படுத்திக்கொள்ளலாம் என ஆலோசிக்கத் தொடங்கினர். ஸ்பேஸ் எக்ஸின் மலிவான மற்றும் வேகமான அணுகுமுறை விஞ்ஞானிகளுக்குத் தங்களது பரிசோதனைச் சாதனங்களைத் தேவைப்படும் நேரத்தில் விண்வெளிக்கு அனுப்பி, அதன் தரவுகளைத் தொடர்ச்சியாகப் பெறுவதற்கு வசதி வாய்ப்புகளை உருவாக்கித் தருவதாக இருந்தது. அதனால் அவர்களும் ஸ்பேஸ் எக்ஸ் புகழ் பாடத் தொடங்கினர். இவர்களைத் தவிர மருத்துவம் மற்றும் நுகர்வுப் பொருள்களை (Consumer Goods) தயாரிக்கும் துறையினருக்கும் விண்வெளி மீது ஆர்வம் தொற்றிக்கொண்டது. குறிப்பாக நுகர்பொருள் நிறுவனங்கள் தங்கள் பொருள்களை விண்வெளிக்கு எடுத்துச் சென்று, அவற்றின் மீது புவி ஈர்ப்பு சக்தி இல்லாத வெளி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினர்.

இத்தகைய நிகழ்வுகள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மதிப்பைப் பல மடங்கு உயர்த்தியது. அமெரிக்க ராணுவ அதிகாரிகளே மஸ்க்கைச் சந்தித்துப் பேசுகிறார்கள் என்றால் ஸ்பேஸ் எக்ஸ்தான் நாளைய அமெரிக்காவின் அடையாளம் என்று ஊடகங்கள் புகழ்ந்து தள்ளின. மஸ்க்கின் செல்வாக்கு வளர்ந்துகொண்டே வந்தது. அரசாங்க உயர் அதிகாரிகளே மஸ்க்கைச் சந்தித்து ஆலோசனை கேட்கும் அளவிற்கு அவர் முன்னேறிக்கொண்டிருந்தார். இதைப் பயன்படுத்திப் பிற நிறுவனங்கள் மீதும் அதிகாரம் செலுத்தத் தொடங்கினார்.

எந்த உயரத்திற்கும் ஒரு எல்லை இருக்கும் அல்லவா? குறைந்த நாட்களில் உட்சபட்ச வளர்ச்சியை அடைந்திருந்த மஸ்க்கின் மனநிலை உடைந்து பாதாளத்தில் விழுவது போன்ற ஒரு நிகழ்வு நடந்தது. அவர் அடைந்த வளர்ச்சி எதுவும் ஒரு பொருட்டே இல்லை என்பதைச் செவிட்டில் அறைந்து உறைக்க வைக்கும் சம்பவமாக அது இருந்தது. எலான் மஸ்க்கின் மனைவி ஜஸ்டின், தனது முதல் குழந்தையான நெவாடா அலக்சாண்டர் மஸ்க்கை ஈன்றெடுத்தார். மஸ்க் ஆனந்தத்தில் திளைத்தார். தொழிலும் முன்னேறுகிறது. மகனும் பிறந்துவிட்டான். ஆகாயத்தில் பறக்கத் தொடங்கினார் மஸ்க். ஆனால் அந்த மகிழ்ச்சி அத்தனை நாட்கள் நிலைத்திருக்கவில்லை. இபே நிறுவனத்துடன் ஒப்பந்தம் முடிந்த ஒரு சில நாட்களில், 10 வாரக் குழந்தையாக இருந்த நெவாடா மஸ்க், இறந்துபோனான்.

எலான் மஸ்க்கும், ஜஸ்டீனும் மகனைத் தூங்க வைப்பதற்காகத் தோளில் போட்டுத் தட்டிக்கொடுத்தனர். பிறகு படுக்க வைத்துவிட்டுச் சென்றுவிட்டனர். அவர்கள் மீண்டும் வந்து பார்த்தபொழுது குழந்தையின் மூச்சு நின்று போயிருந்தது. மருத்துவர்கள் வந்து பார்த்தபோது, ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தையின் மூளை செயலிழந்திருந்தது. குழந்தை கோமாவிற்குச் சென்றிருந்தது. மூன்று நாட்கள் மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் குழந்தையைச் சேர்த்துக் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தனர். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. இனியும் குழந்தை பிழைக்கும் என்ற நம்பிக்கை அவர்களை விட்டுப் போனது. இறுதியாக ஜஸ்டீன் குழந்தையைத் தன் கையில் ஏந்தி உச்சி முகர்ந்தபோது, குழந்தை அவரது கையிலேயே உயிரை விட்டிருந்தது. எலான் மஸ்க் உடைந்து போனார்.

(தொடரும்)

பகிர:
nv-author-image

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *