அடுத்த சில நாட்களுக்கு எலான் மஸ்க் தனது மகனின் இறப்பு பற்றி யாரிடமும் பேசவில்லை. தன் மனைவி ஜஸ்டீனையும் பேசவிடவில்லை. ஆனால் அவரது நடவடிக்கைகளில் இயல்பான உத்வேகம் இல்லாமல் காணப்பட்டார். தன் மனைவியை அழைத்து யாரிடமும் குழந்தை இறப்பைப்பற்றி பேசி அழக்கூடாது எனக் கட்டளையிட்டார். இது ஜஸ்டீனுக்குப் புரியவில்லை. எப்படித் துக்கத்தை மனதிற்குள்ளேயே வைத்திருக்க முடியும்? யாரிடமாவது பகிர்ந்தால்தானே மனதில் உள்ள பாரம் குறையும்? எத்தனை நாட்கள் இப்படி யாரிடமும் பேசாமல் இருப்பது?
குழந்தையைப்பற்றி ஜஸ்டீன் பேசும்போதெல்லாம், ‘ஏன் கழிவிரக்கம் கொண்டு அடுத்தவரையும் உன்மேல் இரக்கப்பட வைக்கிறாய்?’ என மஸ்க் கேட்டார். இதனால் ஜஸ்டீனும் சில நாட்களில் தன் மகன் பற்றி பேசுவதை நிறுத்திவிட்டார்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு திடீரென ஒருநாள் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குத் திரும்பிய எலான் மஸ்க், தனது மனைவியைக் கருத்தரிப்பு மையத்திற்கு அழைத்துச் சென்றார். ஜஸ்டீனுக்கு ஒன்றும் புரியவில்லை, இதைப்பற்றி மஸ்க் இதற்குமுன் பேசியதுகூட இல்லை. அதுமட்டும் இல்லாமல் முதல் மகன் இறந்து சில வாரங்கள்தான் கடந்து இருக்கிறது. அதற்குள் ஏன் இந்த மனிதர் இப்படிச் செய்கிறார் எனக் கேள்வி எழுந்தது. இதைப்பற்றி மஸ்க்கிடம் கேட்டபோது, நமக்குக் குழந்தைகள் வேண்டும் என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் மீண்டும் மீண்டும் அவர் சொல்லிக்கொண்டிருந்தார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து குழந்தைகள் எலான் மஸ்க் – ஜஸ்டீன் தம்பதிக்குப் பிறந்தன. முதல் பிரசவத்தில் இரண்டு குழந்தைகள், அடுத்த முறை மூன்று குழந்தைகள். எலான் மஸ்க் ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையானார். என்றோ ஒருநாள் பேசிக்கொண்டிருந்தபோதுதான் மஸ்க் மனம் திறந்தார். ‘ஒரு குழந்தையை இழந்த துக்கத்தைப் போக்குவதற்கே ஐந்து குழந்தைகளைப் பெற்றிருக்கிறோம். வாழ்க்கையில் எந்த ஒரு சூழலில் இருந்தாலும் அவர்களுக்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என்றார்.
இந்தச் சம்பவம் குறித்து ஜஸ்டீன் சொல்வது ஒன்றைத்தான், ‘சிறு வயதில் இருந்தே தனக்குத் துன்பம் வரும்போதெல்லாம் மஸ்க் யாரிடமும் எதையும் பேசுவதில்லை. வேதனையின் உச்சத்தில் இருந்தபோது கூட அவர் எதையும் பகிர மாட்டார். அவருக்கென்றே ஒன்றிரண்டு நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் மட்டும் எப்போதாவது எதையாவது சொல்வது உண்டு. மற்ற நேரங்களில் நான் அவருடைய நடவடிக்கைகளை வைத்துத்தான் அவர் மனதிற்குள் என்ன நினைக்கிறார் என்பதை உணர்வேன். வெளிப்படையாக துக்கப்படுவதில் ஒரு பயனும் இல்லை என்பதுதான் அவரது முடிவு’ என்கிறார்.
தன் குழந்தையின் மரணம் குறித்து எலான் மஸ்க் சொல்லும்போது, ‘ஒரு துன்பத்தைப் பற்றி பேசும்போது அது எனக்கு மேலும் வேதனையைக் கூட்டும். வேதனையிலேயே மூழ்கி இருப்பது எனக்கு வேண்டாம் என ஒதுங்குகிறேன். என் எதிர்காலத்திற்கும் அது நல்லது எதையும் செய்யப்போவதில்லை. ஒரு இறப்பு ஏற்படும்போது என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை. வேறு குழந்தைகளும், கடமைகளும் உண்டானால் முதல் குழந்தையின் இறப்பைக் கடந்துவிட முடியும் என நினைத்தேன். இப்போது ஐந்து குழந்தைகள் இருப்பதால் என்னால் அந்தச் சம்பவத்தைப் பற்றிச் சிந்திக்கக்கூட நேரம் போதவில்லை’ என்கிறார்.
நெவாடா இறந்த ஆரம்ப நாட்களில் அதில் இருந்து தன் கவனத்தை வேறு திசைகளில் திருப்புவதற்காக எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் பணிகளில் தன்னைத் தீவிரப்படுத்திக்கொண்டார். தன் நிறுவனத்தின் லட்சியங்களை விரிவு செய்யும் வேலையில் இறங்கினார். ஆனால் அங்கே இருந்த சூழல் அவருக்கு மேலும் நம்பிக்கையை இழக்கச் செய்தது. ராக்கெட் எஞ்ஜினை மட்டும் ஸ்பேஸ் எக்ஸில் தயாரித்து விட்டு மற்ற பாகங்களை வெவ்வேறு நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தத்தில் வாங்குவதுதான் அவரது திட்டம். ஆனால் அந்த ஒப்பந்ததாரர்கள் வேண்டியதற்கும் அதிகமாகப் பணத்தைப் பெற்றுக்கொண்டு, வேலையை ஆமை வேகத்தில் செய்தனர். கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்தில் முதல் ராக்கெட்டை ஏவி விட வேண்டும் என்பது மஸ்க்கின் கணக்கு. இதைத் திட்டமிட்டுத்தான் அவர் வெளிப்படையாக சவால் எல்லாம் விட்டு வந்தார். ஆனால் இப்போது வேலை செல்லும் வேகத்தைப் பார்த்தால் அது முடியாது என்பதுபோல் தோன்றியது. அதனால் ஸ்பேஸ் எக்ஸின் இணையதளத்தில் இதுகுறித்த விளக்கம் ஒன்றையும் வெளியிட்டார்.
‘விண்ணில் ராக்கெட் ஏவுவது சாதாரண விஷயமில்லை. நாங்கள் அப்போலோவில் இருந்து X-34 ஃபாஸ்ட்டிராக் வரை இதற்கு முன் உள்ள அனைத்து ராக்கெட் திட்டங்களையும் ஆராய்ந்து எங்கள் திட்டத்தைச் செதுக்கி வருகிறோம். ஸ்பேஸ்எக்ஸ் எந்த ஒரு நிறுவனத்தின் உதவியும் இல்லாமலேயே முழு ஃபால்கான் ராக்கெட்டையும் உருவாக்கி வருகிறது. இரண்டு எஞ்ஜின்கள், டர்போ பம்புகள், கிரையோஜெனிக் டேங்க் அமைப்பு, வழிகாட்டு அமைவு என அனைத்தையும் நாங்களே தயாரிக்கிறோம். இத்தனைக் கடுமையான பணிகள் முதலீடுகளையும் கோருகிறது. ஆனால் குறைந்த செலவில் விண்வெளி என்ற திட்டத்தை அடைவதற்கு வேறு எந்தக் குறுக்கு வழியும் கிடையாது’ என விளம்பரப்படுத்தினார்.
ராக்கெட் தயாரிக்கும் பணி ஒரு பக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்க, மற்றொரு பக்கம் ஸ்பேஸ் எக்ஸில் பணியாளர்களைச் சேர்க்கும் பணியும் துரித வேகத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. மஸ்க் தன் அலுவலகத்தின் உள்கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் எல்லாம் அனுபவம் வாய்ந்த, வயதில் மூத்தவர்களாக இருக்க வேண்டும். கீழே பணியாற்றுபவர்கள் எல்லாம் இளம் சாதனையாளர்களாக இருக்க வேண்டும்.
இதே திட்டத்தைப் பின்பற்றித்தான் ஆட்களைப் பணியில் சேர்த்தார். மேல் அடுக்கு நிர்வாகிகள் அனைவரும் நட்சத்திர அந்தஸ்து பெற்றவர்களாக இருந்தனர். முதலில் முல்லர் இருந்தார். அவருடைய மேற்பார்வையில்தான் இரண்டு ஃபால்கன் எஞ்ஜின்களின் வடிவமைப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தது. அடுத்ததாக கிரிஸ் தாம்ஸன் – போயிங் நிறுவனத்தில் டெல்டா, டைட்டன் ராக்கெட்டுகளை உருவாக்கியவர். ஸ்பேஸ் எக்ஸில் அவர் துணைத் தலைவர். அடுத்ததாக உலகின் முன்னணி ராக்கெட் பரிசோதனை நிபுணர்களில் ஒருவர் என்று பெயர் பெற்ற டிம் பஸ்ஸா. மூத்த பொறியாளராக நாசாவின் ஜேபிஎல்லில் பணியாற்றிய ஸ்டீவ் ஜான்சன். இப்படி அனைவருமே சாதனையாளர்கள்.
மறுபக்கத்தில் சாதாரண ஊழியர்கள் எல்லோரும் இளைஞர்கள். ஆனால் தங்கள் துறையில் அதிகப்படியான சாதனை படைத்தவர்கள். இவர்களை மஸ்க் தேர்ந்தெடுத்த விதமே வித்தியாசமானது. அமெரிக்காவின் தலைசிறந்த கல்லூரிகளின் பட்டியலை முதலில் மஸ்க் தயாரித்தார். பின் அதில் எந்தக் கல்லூரிகளில் எல்லாம் விண்வெளித்துறை சார்ந்த பாடங்கள் இருக்கிறது என ஆராய்ந்தார். அவர்களைத் தொடர்புகொண்டு, உங்கள் வகுப்பில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களைத் தாருங்கள் எனக் கேட்டு வாங்கினார். பின் அந்த மாணவர்கள் தங்கியிருந்த விடுதிக்கே போன் செய்து, அவர்களிடம் பேசிவிட்டு அப்போதே பணிக்கு அமர்த்துவார்.
ஒருமுறை மைக்கேல் கோலோனோ என்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக மாணவருக்கு மஸ்க் போன் செய்தார். மைக்கேல் எடுத்துப் பேசியதும், ‘நான் எலான் மஸ்க், ராக்கெட் கம்பெனி வைத்திருக்கிறேன். உங்களை போனிலேயே நேர்காணல் செய்யப்போகிறேன். உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்’ என்றார். அந்த மாணவரோ யாரோ கேரோ செய்து தன்னிடம் விளையாடுகிறார்கள் என நினைத்து போனை கட் செய்துவிட்டார். வீட்டிற்குச் சென்று இணையத்தில் தேடியபோதுதான் உண்மையிலேயே எலான் மஸ்க் என்ற ஒருவர் இருக்கிறார் என்றும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் குறித்தும் அவருக்குத் தெரியவந்தது. அதில் இருந்த தொடர்பு எண்ணை எடுத்து உடனேயே அந்த மாணவர் ஸ்பேஸ் எக்ஸிற்கு போன் செய்தபோது, ‘நீங்கள் கல்லூரியில் தயாரித்த விண்வெளி சார்ந்த திட்டங்களை எல்லாம் பார்த்தோம். எங்களுக்குப் பிடித்திருந்தது. உங்களை ஏற்கெனவே பணிக்கு அமர்த்திவிட்டோம். இந்தத் தேதியில் வந்து சேர்ந்துகொள்ளுங்கள்’ என்றனர்.
விண்வெளித்துறையில் அதீத ஈடுபாடு கொண்ட இளைஞர்களை மஸ்க் தேர்ந்தெடுத்துப் பணியில் அமர்த்தினார். ஸ்பேஸ் எக்ஸ் வருவதற்கு முன் ஒரு விண்வெளி நிறுவனத்தில் பணியில் சேருவது என்பது எளிது கிடையாது. உங்களுக்கு எவ்வளவு திறமைகள் இருந்தாலும் முதலில் ஏதாவது ஓர் அரசாங்க ஒப்பந்ததாரரை அணுகி அவர்கள் அமைப்பில் உறுப்பினராக வேண்டும். பின் அவர்களுடைய சடங்கு சம்பிரதாயங்களை எல்லாம் பின்பற்றிக் காத்திருந்தால்தான் பெரிய பொறுப்புகளில் உங்களுக்கு வேலை கிடைக்கும். ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் வந்தவுடன், விண்வெளியில் ஆர்வமுள்ள இளைஞர்கள் கல்லூரியை முடித்தவுடன் முதலில் செல்லக்கூடிய இடமாக அந்நிறுவனம் இருந்தது. உனக்கு ராக்கெட் வடிவமைப்பில் விருப்பமா, விண்வெளி வீரராக வேண்டுமா? இந்தா வேலை என ஸ்பேஸ் எக்ஸ் வாரிக் கொடுத்தது. அந்நிறுவனம் தொடங்கி முதல் ஒரு வருடத்தில் மட்டும் வாரத்திற்கு ஒன்றிரண்டு பேர் ஸ்பேஸ் எக்ஸில் பணியாளர்களாக இணைந்துகொண்டிருந்தனர். அலுவலகத்தில் இடமே இல்லாத நிலைக்குச் சென்றது. புதிதாக ஒருவர் பணியில் சேருகிறார் என்றால் அவர் தனக்கான இருக்கையையும், கணினியையும் முதலில் தேடிக் கண்டெடுக்க வேண்டும். இல்லையென்றால் வேறு யாராவது பயன்படுத்த எடுத்துச் சென்றுவிடுவார்கள். இத்தனைக்கும் ஸ்பேஸ் எக்ஸில் பணி நேரமும் அதிகம். பன்னிரண்டு மணி நேரம் வேலை நேரம். ஆனாலும் இளைஞர்கள் உற்சாகத்துடன் பணியாற்றி வந்தனர்.
ஸ்பேஸ் எக்ஸின் தொடக்கத்தில் பெண் பணியாளர்கள் குறைவாகவே இருந்தனர். குவைன் ஷாட்வெல் என்ற ஒரு பெண்மணி, விண்வெளித் துறையில் அனுபவம் வாய்ந்தவர். ஸ்பேஸ் எக்ஸின் முதல் விற்பனையாளராகச் சேர்ந்தார். ஆனால் அடுத்தடுத்த வருடங்களில் பல சாதனைகளைச் செய்து நிறுவனத்தின் தலைவராகவே உயர்ந்தார். ஒரு கட்டத்தில் எலான் மஸ்க்கின் வலதுகரமாகவே ஆனார். இன்று ஸ்பேஸ் எக்ஸின் முதன்மை நடவடிக்கை அதிகாரியும் (Chief Operational Officer) அவர்தான். அதேபோல மற்றொரு பெண்ணும் ஸ்பேஸ் எக்ஸில் முக்கியமானவர். அவர் பெயர் மேரி பெத் ப்ரவுன். மஸ்க்கின் விசுவாசமான உதவியாளர். அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பதுபோல, மேரி பெத் பிரவுன் இல்லாமல் ஸ்பேஸ் எக்ஸில் ஓர் அணுவும் அசையாது. ஸ்பேஸ் எக்ஸின் பணிக்கலாசாரத்தை கட்டமைத்தவரும் அவர்தான்.
(தொடரும்)