ஏற்கெனவே பலர் கடந்து வந்த பாதையில் நடந்து செல்வது சுலபம். ஆனால் இதற்குமுன் யாரும் துணிந்திராத ஓரிடத்தில் வழியைக் கண்டறிந்து, பாதை அமைத்து முதல் தடத்தைப் பதிப்பது கடினம். வழியில் நாம் ஏராளமான தடைகளைச் சந்திக்க நேரிடும். வழித்தவறிப் போகவும் செய்யலாம். ஒருகட்டத்தில் நாம் பயணத்தையே பாதியிலேயே நிறுத்திவிட்டு வந்த வழியிலேயே திரும்பி சென்றுவிடுவோமா என்று தளரும் நிலைக்குக்கூட சென்றுவிடலாம். ஆனால் மனதில் உறுதியுடன் தொடர்ந்து முன்னேறினால் மட்டுமே புதிய இடத்தைக் கண்டறியமுடியும். புதிய சாத்தியங்களை அவதானிக்க முடியும். புதிய திறப்புகளை ஏற்படுத்த முடியும்.
இந்த நிலைதான் ஸ்பேஸ்எக்ஸிற்கு தொடக்கத்தில் இருந்தது. என்னதான் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப அறிஞர்கள், பொறியாளர்கள் எல்லோரும் இருந்தாலும், குறைந்த விலையுள்ள அதிநவீன ராக்கெட் என்பது இதற்குமுன் யாரும் செய்ய முன்வராத முயற்சி. அதிக நேரத்தை, கடும் உழைப்பை கோரும் முயற்சி. அந்த முயற்சியைக் கையில் எடுத்து எலான் மஸ்கும், அவரது ஊழியர்களும் பல நெருக்கடிகளைச் சந்திக்க நேர்ந்தது.
ஸ்பேஸ்எக்ஸின் முதல் பணித்திட்டம் எரிவாயு ஜெனரேட்டரை உருவாக்கி சோதனை செய்வது. முல்லர், பஸ்ஸா மற்றும் வேறு சில இளம் பொறியாளர்கள் இணைந்து இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தனர். லாஸ் ஏஞ்சலஸில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் அலுவலகத்தில் இந்த ஜெனரேட்டர்கள் உருவாக்கப்பட்டு, 370 கிலோ மீட்டர்கள் பயணம் செய்து மொஜாவே பாலைவனத்தில் சோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த மொஜாவே பாலைவனம் ஏற்கனவே பல்வேறு விண்வெளி நிறுவனங்களுக்குச் சோதனைக்கூடமாக இருந்தது. அதனால் ஏதாவது உதவி வேண்டுமானாலும்கூட அக்கம்பக்கத்தில் கேட்டுக்கொள்ளலாம் என்பதுதான் மஸ்கின் திட்டம்.
அதேபோல ஜெனரேட்டர்களைச் சோதனை செய்வதற்கான கட்டுமானங்கள் அங்கு ஏற்கனவே சோதனையில் ஈடுபட்டு வந்த XCOR நிறுவனத்திடம் இருந்து வாடகைக்கு வாங்கப்பட்டது. முதல் சோதனை சரியாக காலை 11 மணிக்கு தொடங்கியது. அந்த ஜெனரேட்டர் சரியாக 90 விநாடிகளுக்குதான் இயங்கி இருக்க வேண்டும். திடீரென கரும்புகை ஜெனரேட்டரில் இருந்து எழுந்து வானம் முழுவதும் சூழ்ந்தது. அருகே இருந்த விமான நிலையத்தில் இருந்து இதைக் கவனித்த சில அதிகாரிகள் ஏதோ விபத்து ஏற்பட்டுவிட்டதோ என நினைத்துப் பதறியடித்து ஓடிவந்தனர். அருகே வந்து பார்த்தால் ஜெனரேட்டர் சோதனை சொதப்பிவிட்டதாகத் தெரிந்தது.
வேண்டிய அளவுக்கு அதிகமான எரிபொருள் வெளியேறியதால் ஏற்பட்ட பிரச்சனை இது. விமான நிலைய அதிகாரிகளும் XCOR நிறுவன ஊழியர்களும் சூழலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர உதவி செய்தனர். பின் அடுத்த சோதனையை மறுநாள் வைத்துகொள்ளும்படி அறிவுறுத்தினர்.
இங்குதான் ஸ்பேஸ் எக்ஸ் ஊழியர்களின் தீர்க்கமான தொடர் முயற்சி வெளியே தெரிய வந்தது. பஸ்ஸா இரண்டு டிரக்குகளை ஏற்பாடு செய்து உடனே எரிபொருட்களை எடுத்து வந்து, அடுத்த சில மணி நேரங்களிலேயே மறுசோதனைக்கு ஏற்பாடு செய்தார். இதற்குமுன் இருந்த நிறுவனங்கள் நாளுக்கு ஒரு பரிசோதனை என்ற அளவிலேயே இயங்கி வந்தன. ஆனால் ஸ்பேஸ்எக்ஸ் ஒரு நாளிலேயே இரண்டு, மூன்று முறை சோதனைகளை நிகழ்த்தத் தொடங்கியது. அடுத்த இரண்டு வாரத்தில் எரிவாயு ஜெனரேட்டர்களும் ஸ்பேஸ் எக்ஸ் ஊழியர்கள் எதிர்பார்த்ததுபோலவே இயங்கத் தொடங்கிவிட்டன.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு தனியாக ஒரு சோதனைக்கூடம் இருந்தால் வசதியாக இருக்கும் எனத் தோன்றியது. நாடு முழுவதும் அவர்கள் சல்லடையிட்டுத் தேடியதில் டெக்ஸாஸ் அருகே உள்ள மெக்கிரகர் என்ற பகுதியில் 300 ஏக்கர் அளவிலான பரிசோதனை தளம் ஒன்று ஆதரவற்று கிடப்பது தெரியவந்தது. இந்த இடத்தில்தான் அமெரிக்க ராணுவம் பல்வேறு ராக்கெட் சோதனைகளை இதற்குமுன் நடத்தி இருந்தது. பின் ஆண்ட்ரூ பீல் என்ற பெரும் செல்வந்தர் ஒருவர் அந்த இடத்தை வாங்கி தனது விண்வெளி நிறுவனத்திற்கு ஏற்றவாறு உட்கட்டமைப்பை உருவாக்கினார்.
ஆனால் அவருக்கு அரசுடன் ஏற்பட்ட சில பிரச்சனைகளாலும், பொருளாதார சிக்கல்களாலும் தன் ராக்கெட் ஏவும் திட்டத்தை பாதியில் விட நேர்ந்தது. இப்போது பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் இருந்த அந்த இடம் யாரும் பயன்படுத்தாமலேயே இருந்தது. இதனால் அந்தத் தளத்தை வந்த விலைக்கு விற்றுவிட்டு சென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் ஆட்கள் தேடிகொண்டிருந்தார். அந்த நேரத்தில்தான் எலான் மஸ்க் அந்த இடத்தை குறைந்த விலையில் அடித்துப்பேசி வாங்கிவிட்டார்.
இதைத் தொடர்ந்து என்ஜின்கள் கட்டமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது. ஃபால்கன் 1-ஐ இயக்க இரண்டு என்ஜின்கள் வேண்டும். முதல் என்ஜினின் பெயர் மெர்லின், இரண்டாவது என்ஜினின் பெயர் கெஸ்ட்ரல் (இரண்டும் அமெரிக்காவில் பரவலாக வாழும் பருந்து இனங்கள்). மெர்லின் என்ஜின் ஃபால்கன் ராக்கெட்டை பூமியில் இருந்து உந்தி வானிற்கு எடுத்து செல்லும், கெஸ்ட்ரல் அங்கிருந்து ராக்கெட்டுக்கு தேவையான ஆற்றலை வழங்கி அவற்றை விண்ணில் பயணப்பட உதவி செய்யும். இதுதான் அவர்களின் திட்டம்.
இதில் எந்தப் பாகங்களை ஸ்பேஸ் எக்ஸில் உருவாக்க வேண்டும், எவற்றை வெளியே வேறு தொழிற்சாலைகளில் இருந்து வாங்க வேண்டும் என்பதை முல்லரும், ஹோல்மேன் என்ற இளம் பொறியாளரும் முடிவு செய்தனர். இதில் ஹொல்மேன் என்பவர் 23 வயதே நிரம்பிய இளம் பொறியாளர். போயிங்கில் பணியாற்றிவிட்டுப் பாதியில் வெளியேறி ஸ்பேஸ்எக்ஸில் சேர்ந்தவர். அவரது திறமைகளைப் பார்த்து வியந்து சிறிது நாட்களிலேயே பல முக்கிய பதவிகளை மஸ்க் அவரிடம் ஒப்படைத்தார்.
ஸ்பேஸ்எக்ஸ் தொழிற்சாலையிலேயே தயாரிக்க வேண்டிய என்ஜின் பாகங்களை முல்லர் தன் பொறுப்பில் எடுத்துகொண்டார். வெளியே பாகங்களை வாங்கும் பணி ஹோல்மேனிடம் வழங்கப்பட்டது. ஹோல்மேன் ஒவ்வொரு தொழிற்சாலையாக ஏறி, இறங்கி அங்கிருப்பவர்களிடம் பேசி, எந்தெந்த பாகங்களை எங்கே வாங்கலாம் என முடிவு செய்வார். பின் அவர்களிடம் இந்தத் தேதியில் சரியாக பாகங்களை டெலிவரி செய்ய வேண்டும் என வலியுறுத்துவார்.
பெரும்பாலும் ஸ்பேஸ்எக்ஸ் நிர்ணயித்திருக்கும் கால இலக்கு என்பது மிகவும் குறுகியதாக இருக்கும். அந்தக் குறுகிய காலத்தில் ஒரு பாகத்தை தொடக்கத்தில் இருந்து உருவாக்குவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கும். அதனால் பெரும்பாலும் தொழிற்சாலைகள் ஸ்பேஸ்எக்ஸின் ஒப்பந்தத்தை மறுத்துவிடும். இல்லையென்றால் ஏற்கனவே வேறு ஏதாவது இயந்திரங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு பாகத்தை எடுத்து, அதை ஸ்பேஸ்எக்ஸின் தேவைக்கு ஏற்ப பட்டி டிங்கரிங் செய்து மாற்றம் செய்து தரும். சில நேரங்களில் ஹோல்மேனும்கூட ஏதாவது கார் உதிரி பாகங்களை வாங்கிவந்து அவற்றை ராக்கெட்டுக்கு தேவையான வகையில் மாற்றி அமைப்பார்.
ஒருவழியாக ஸ்பேஸ்எக்ஸின் முதல் என்ஜின் தயாரானபோது சோதனை செய்ய அங்கிருந்த முக்கிய வல்லுநர்கள் டெக்சாஸில் அமைந்துள்ள சோதனைக்கூடத்திற்கு எடுத்துச் சென்றனர். இந்தச் சோதனை வெற்றிகரமாக முடிந்தால் வெறும் சிறிய குழுவான ஸ்பேஸ்எக்ஸ் ஊழியர்கள் தேசத்தின் சக்தி வாய்ந்த விண்வெளி நிறுவனங்களுக்கு நிகரான ஓர் ஆற்றல் வாய்ந்த என்ஜினை உருவாக்கி இருக்கிறார்கள் என்ற புகழ் உலகம் எங்கும் பரவும். இதனைக் கொண்டாட வேண்டாமா? இதற்கு என்றே தனியாக செலவு செய்து சில மதுபாட்டில்களையும் அவர்கள் வாங்கிச் சென்றனர். இவர்கள் நிகழ்த்தப்போகும் சாதனைக்கு தன்னால் முடிந்த சிறிய பங்களிப்பை தர வேண்டும் என கருதிய மஸ்க், அவர்கள் பயணம் செய்ய தன் சொந்த விமானத்தையே வழங்கினார். ஆறு பேர் அந்த விமானத்தில் அமரலாம். ஒருவர் கழிப்பறையில் அமர்ந்து பயணம் செய்யலாம் என்று சொல்லிதான் அவர் அனுப்பி வைத்தார். அவர்களும் அப்படியேதான் செய்தனர்.
வல்லுநர்கள் சோதனைக்கூடத்தை அடைந்தனர். சோதனைக்கூடத்தில் என்ஜின்கள் பொருத்தப்பட்டன. ராக்கெட் என்ஜின்கள் இரண்டு வகையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். ஒன்று வெர்டிக்கள் சோதனை. இதில் என்ஜின்கள் செங்குத்தாக நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்படும். இந்தமுறை தற்போது கிட்டத்தட்ட வழக்கொழிந்து விட்டது. மற்றொரு வகை ஹரிசான்டல் சோதனை. இதில் என்ஜின்கள் கிடைமட்டமாக வைக்கப்பட்டு சோதனை செய்யப்படும். தற்போது செயல்பாட்டில் இருக்கும் நவீன சோதனை முறை இதுதான்.
ஆனால் ஸ்பேஸ்எக்ஸ் இரண்டு வகை சோதனைகளையும் செய்ய திட்டமிட்டது. என்ஜின்கள் சோதனைக்கூடத்தில் பொருத்தப்பட்டன. பின் அவற்றில் இருந்து தரவுகளை சேகரிக்க சென்சார்கள் அமைக்கப்பட்டன. இவற்றைக் கண்காணிக்க சில கேமராக்கள், கணினித்திரைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. பொறியாளர்கள் என்ஜினில் இருந்து வெளியாகும் வெப்பத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்க, பதுங்குக்குழி போன்ற அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
அவ்வளவுதான், சோதனை தொடங்கியது. ராக்கெட் என்ஜின் இயங்கத் தொடங்கியது. என்ஜினில் இருந்து தீ ஜுவாலை புறப்பட்டு வெளிவந்தது. பின் சில நொடிகளிலேயே அதில் இருந்து கரும்புகை வெளியேறத் தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களில் பெரும் சத்தம் ஒன்று எழும்பியது. எங்கே வெடிவிபத்து ஏற்பட்டுவிடுமோ என அவர்கள் அஞ்சி நடுங்கிய நிலையில், என்ஜின் தன் இயக்கத்தை நிறுத்தியது. அங்கிருந்தவர்களுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டது என்பது மட்டும் தெரிந்தது. அவர்கள் சிறிது நேரம் கழித்து மீண்டும் என்ஜினை இயக்கியபோது எதுவும் செயல்படவில்லை. முதல் சோதனை தோல்வி என அங்கிருந்தவர்களுக்கு விளங்கியது. எல்லோரும் புறப்பட்டுச் சென்றனர். மஸ்கிடம் அவர்கள் நடந்ததை விவரித்தபோது, அவர் எதுவும் சொல்லவில்லை. அமைதியாக அடுத்தமுறை பார்த்துகொள்ளலாம் என கூறிவிட்டு நகர்ந்தார்.
மஸ்க் என்ன நினைக்கிறார் என்பது யாருக்கும் புரியவில்லை. ஆனால் முல்லருக்கு மட்டும் ஒன்று புரிந்தது. மஸ்க் நம்மிடம் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். ஆனால் நாம் அவரை ஏமாற்றிவிட்டோம். அடுத்தமுறை எந்தத் தவறும் நிகழாமல் இருக்க நாமே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என நினைத்தார். நேராக மஸ்கிடம் சென்று, இப்போதுதான் என்ஜின் தயாரிப்பின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம். அவற்றைத் தவறில்லாமல் செயல்படுத்த ஒருசில மாதங்களாவது ஆகும். அதற்கான கால அவகாசத்தை வழங்க வேண்டும் என கோரினார்.
மஸ்கும் போதுமான நேரத்தை எடுத்துகொள்ளுங்கள் எனச் சொல்லிவிட்டார். அடுத்ததாக முல்லர் ஹோல்மேனை தனியாக அழைத்தார். நாளையில் இருந்து மீண்டும் சோதனைகளை தொடங்குவோம். எவ்வளவு உழைப்பை வழங்க முடியுமோ வழங்குவோம். இந்த என்ஜின்களை எப்படியாவது வெற்றிபெற வைக்க வேண்டும். முதலில் என்ன தவறு நடந்தது எனக் கண்டுபிடிக்க வேண்டும் என கட்டளையிட்டார்.
என்ஜின் பணிகள் அவர்கள் நினைத்ததுபோல சுலபமாக இருக்கவில்லை. கெஸ்ட்ரல், மெர்லின் இரு என்ஜின்களும் ஏகப்பட்ட பிரச்சனைகளைக் கொண்டு வந்தன. இரண்டுக்கும் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. முதலில் கேஸ்ட்ரலை வழிக்கு கொண்டுவருவோம் என அவர்கள் இலக்கு நிர்ணயித்தனர்.
அடுத்த சில மாதங்களுக்கு ஸ்பேஸ்எக்ஸ் ஊழியர்கள் காலை எட்டு மணிக்கே சோதனைக்கூடத்திற்கு கிளம்பிச் சென்றனர். அங்கு கேஸ்ட்ரல் என்ஜினை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தினர். தினமும் பன்னிரண்டு மணி நேரம் நடைபெறும் இடைவிடாத சோதனைகளுக்குப் பிறகு அங்கிருக்கும் அனைவரும் புறப்பட்டு சென்று அருகில் இருக்கும் உணவகத்தில் உணவருந்திவிட்டு வீட்டிற்குச் செல்வர்.
முல்லர் சோதனைகள் மூலம் கிடைக்கும் தரவுகளை ஆராய்ந்தார். என்ஜின் இயங்கும்போது சில பாகங்கள் அதீத வெப்பத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் பிரச்சனையை ஏற்படுத்துகின்றன என்பதைப் புரிந்துக்கொண்டார். அதன்பின் சோதனைகளின்போது எந்தெந்த பாகங்களில் தவறுகள் நிகழ்கின்றதோ அதற்கு மாற்றாக புதிய பாகங்கள் அல்லது மாற்றுப் பாகங்களை வாங்குவதற்கு கலிபோர்னியாவில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் அலுவலகத்திற்கு போன் செய்து உத்தரவிடுவார். அங்கிருப்பவர்கள் உடனேயே புதிய பாகங்களை வாங்கி டெக்சாஸ் சோதனைக்கூடத்திற்கு அனுப்புவர். பின் புதிய பாகங்களை பொருத்தி முல்லரும், ஹோல்மேனும் என்ஜினைச் சோதனை செய்வார்கள்.
ஒருகட்டத்தில் டெக்சாஸில் இருந்த ஊழியர்களே இயந்திரம் ஒன்றை வாங்கி வந்து, முல்லருக்குத் தேவையான வகையில் உதிரி பாகங்களை மாற்றம் செய்யத் தொடங்கினர். கொஞ்சம் கொஞ்சமாக கெஸ்ட்ரல் வழிக்கு வந்தது. மோசமான நிலையில் இருந்து இப்போது சிறந்த வகையில் அந்த என்ஜின் இயங்கத் தொடங்கியது. ஒரு நாயைப் பழக்குவதுபோல நான் ஒரு இயந்திரத்தை பழக்கி இருக்கிறேன் என்று முல்லர் இதுபற்றிச் சொல்லுவார்.
டெக்சாஸில் முல்லருடன் பணியாற்றியவர்களும் என்ஜின் தயாரிப்பில் தங்களது திறனை மேம்படுத்திக் கொண்டனர். ஆரம்பத்தில் தடுமாறியவர்களுக்கு இப்போது வெறும் மூன்று நாட்களுக்குள் சோதனைகளுக்கு உட்படுத்தும் வகையில் வெற்றிக்கரமாக ஒரு என்ஜினை எப்படித் தயாரிக்க வேண்டும் என்ற வித்தை விளங்கியது. அதேபோல் அந்த என்ஜினை இயக்குவதற்கு வேண்டிய மென்பொருட்களையும் அவர்களால் வடிவமைக்க முடிந்தது. ஒரே இரவில் அவர்களால் என்ஜினுக்குத் தேவையான டர்போ பம்பை உருவாக்கிவிட்டு, அடுத்த இரவே என்ஜினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக மென்பொருட்களிலும் மாற்றம் செய்ய முடிந்தது. இந்தப் பணிகளில் முல்லரின் வலதுகரம் போல ஹோல்மேன் செயல்பட்டார்.
கெஸ்ட்ரல் என்ஜின் வழிக்கு வந்தாலும், மெர்லின் இன்னும் முரண்டுபிடித்துக் கொண்டுதான் இருந்தது. விண்வெளியில் பாய வேண்டும் என்றால் மெர்லின் 180 விநாடிகளுக்கு இடைவிடாமல் எரிய வேண்டும். ஆனால் சோதனைக்கூடத்தில் மெர்லின் வெறும் அரை விநாடிகளுக்கு குறைவான நேரத்திலேயே அணைந்துகொண்டிருந்தது. மேலும் அந்த என்ஜினில் ஏற்பட்ட அதிகப்படியான அதிர்வும் பிரச்சனையாக இருந்தது. சில நேரங்களில் இயங்கிக் கொண்டிருக்கும்போதே என்ஜின் பாகங்கள் உடைந்துவிடும். சில நேரங்களில் வேறு ஏதாவது மாற்றம் செய்ய வேண்டியது வரும்.
முதலில் அந்த என்ஜினில் அலுமினியம் உலோகம் பயன்பட்டது. ஆனால் அவற்றால் அதீத வெப்பத்தை தாங்க முடியவில்லை என்பதால் இன்கோனல் (Inconel) எனப்படும் கலப்பு உலோகம் மாற்றப்பட்டது. ஒருமுறை என்ஜின் இயங்கும்போது எரிபொருள் குழாய் திறக்க தவறியதால் மொத்த என்ஜினும் வெடித்து சிதறியது. அடுத்தமுறை சோதனை செய்தபோது என்ஜின்கள் இணைக்கப்பட்டிருக்கும் நிறுத்தம் மொத்தமாக பற்றி எரிந்தது. ஒவ்வொருமுறை சொதப்பும்போது முல்லர் அல்லது பஸ்ஸா இருவரில் யாராவது ஒருவர் எலான் மஸ்கிற்கு போன் செய்து அன்றைய தினம் நடந்த அவலங்களை விவரிப்பர். எலான் மஸ்க் எதுவும் சொல்லாமல் அமைதியாக கேட்டுக்கொண்டிருப்பார்.
ஒருமுறை இவ்வாறு ஒரு சோதனை நடைபெற்றபோது, இரண்டு என்ஜின்கள் ஒரே நாளில் வெடித்துச் சிதறின. இது முல்லருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. உடனே அவர் மஸ்கிற்கு போன் செய்தார். ‘என்னால் இன்னொரு என்ஜினை உருவாக்கி இப்போதே சோதனை செய்ய முடியும். ஆனால் எனக்கு கடும் விரக்தியாக இருக்கிறது. சோர்வாக இருக்கிறது. பைத்தியமே பிடித்துவிடும்போல தோன்றுகிறது. என்னால் இதை செய்ய முடியாது. ஏற்கனவே இன்று போதுமான பொருட்களை வீணடித்துவிட்டேன். இனியும் என்னால் முடியாது’ என போனில் கத்திவிட்டார்.
ஆனால் மஸ்க் இவை அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு, ‘பரவாயில்லை. ஒன்றும் பிரச்சனை இல்லை. நாளை நாம் மீண்டும் முயற்சி செய்வோம்’ என ஆறுதல்படுத்தினார். வேறு ஒருநாள் இது குறித்து வேறு சில ஊழியர்களிடம் முல்லர் பேசும்போதுதான் தெரிந்தது. அன்றைக்கு முல்லர் குரலில் தெரிந்த வேதனையைக் கண்டு மஸ்கிற்கு அழுகையே வந்துவிட்டது என்று. ஆனாலும் புதிய முயற்சிகளில் தனது ஊழியர்கள் சோர்ந்துவிடக்கூடாது என்பதால் அவர்களிடம் ஒருவார்த்தைக்கூட கடினமான சொற்களை பயன்படுத்தாமல் அமைதியாகவே இருந்தார்.
மஸ்கால் தோல்விகளைத் தாங்கிகொள்ள முடியும். ஆனால் காரணங்களைப் பொறுத்துகொள்ள முடியாது. ஒருவிஷயம் சொதப்புகிறது என்றால் அதனை எப்படி நிவர்த்தி செய்வது என்ற தெளிவான திட்டத்தை ஒருவர் உருவாக்கி இருக்க வேண்டும். அந்தத் திட்டம் செயல்படுகிறதா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் ஒன்றும் புரியாமல் அவரிடம் விழித்துக்கொண்டிருக்கக்கூடாது. இல்லையென்றால் கோரத் தாண்டவம் ஆடிவிடுவார் மஸ்க்.
நாம் ஏற்கனவே ஹோல்மேன் குறித்து பார்த்தோம். அவரது திறமைகளை கண்டு பல்வேறு முக்கிய பதவிகளை மஸ்க் வழங்கினார் என்றும் தெரிந்துக்கொண்டோம். இப்படிப்பட்டவரையே மஸ்க் ஒருமுறை திட்டித் தீர்த்துவிட்டார். ஒருமுறை ஏதோ ஒரு தவறு நடந்துவிட்டது. மஸ்க் ஹோல்மேனை அழைத்து என்ன பிரச்சனை என்று கேட்டார். ஹோல்மேனும் விவரித்தார். இந்தப் பிரச்சனையை சரி செய்வதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என மஸ்க் கேட்டிருக்கிறார். அதற்கு ஹோல்மேனால் உடனடியாகப் பதில் சொல்ல முடியவில்லை. தடுமாறி இருக்கிறார். உடனே மஸ்க் அவரைப் பிடித்து வாங்கிவிட்டார்.
‘உனக்கு ஒரு பிரச்சனையைச் சரி செய்ய எத்தனை நாட்கள் ஆக வேண்டும் எனச் சரியாகத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு பிரச்சனை ஏற்படுகிறது என்றால் அதுகுறித்த அத்தனை தகவல்களையும் நீ தெரிந்துவைத்திருக்க வேண்டாமா? இப்படிதான் முழிப்பாயா? உன்னை நம்பி எத்தனை பேர் பணி செய்கிறார்கள் எனத் தெரியுமா? இங்கிருந்து உடனே கிளம்பிவிடு’ என கத்திவிட்டார். அதன்பின் எந்த பிரச்சனை என்றாலும் ஹோல்மேன் அது குறித்த மொத்த தகவல்களையும் சேகரித்துக்கொண்டுதான் மஸ்கைக் காணச் செல்வார்.
இப்படியாக பல்வேறு பிரச்சனைகளில் இருந்து கற்று வந்த பாடத்தால் அந்த நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக எழுந்து நிற்கத் தொடங்கியது. 2002ஆம் ஆண்டு வெற்று அறைகளுடன் தொடங்கப்பட்ட நிறுவனம், ஒரு வருடத்தில் உண்மையான ராக்கெட் தொழிற்சாலையாகவே உருமாறியது. பலதரப்பட்ட அனுபவப் பாடங்களை ராக்கெட் தயாரிப்பு பணிகள் அங்குள்ள ஊழியர்களுக்குச் சொல்லிக்கொடுத்தது.
அடுத்த சில மாதங்களில் கெஸ்ட்ரலை தொடர்ந்து மெர்லினும் முல்லரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. மெர்லின், கெஸ்ட்ரல் இரு என்ஜின்களும் எந்தக் கோளாறும் இல்லாமல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வெற்றிக்கண்டன. அதன்பின் ராக்கெட்டின் உடலுடன் அந்த என்ஜின்களை பொருத்தும் பணி ஆரம்பமானது. ராக்கெட்டைத் தொழிற்சாலைக்குள்ளேயே எந்த பாதிப்பும் ஏற்படாமல் எடுத்துச் செல்ல தண்டவாளங்கள் அமைக்கப்பட்டன. இதைவிட முக்கியமாக ராக்கெட் மூலம் விண்வெளிக்குக் கருவிகளைப் பத்திரமாக சுமந்து செல்வதற்கான பகுதியும் உருவாக்கப்பட்டது. மொத்தத்தில் ஃபால்கன் 1 ராக்கெட் முடியும் நிலைக்கு வந்தது.
2004ம் ஆண்டு தொடக்கத்தில் வாண்டன்பெர்க் விமானப்படை தளத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸின் முதல் ராக்கெட்டான ஃபால்கன் 1-ஐ விண்ணில் ஏவுவதற்கு எலான் தேதி குறித்தார். அந்த ராக்கெட்டில் பாதுகாப்புத்துறையின் TacSat -1 என்ற செயற்கைக் கோளை விண்ணிற்கு எடுத்துச் செல்வது திட்டம். தேதி நெருங்க நெருங்க ஊழியர்கள் தினமும் பன்னிரண்டு மணி நேரம் வரைக்கூட பணியாற்றத் தொடங்கினர். வாரத்திற்கு ஆறு நாட்களும் கடுமையாகப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. சிலர் அதிகாலையில் அலுவலகம் வந்து, இரவில் வீடு திரும்புவது எல்லாம் வாடிக்கையானது. எல்லா வேலைகளும் முடியும் தருவாயில் இருந்தது.
ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் குறையாக இருப்பதாக மஸ்க் நினைத்தார். ஒரு கார் வாங்குவதற்கே அத்தனை விளம்பரம் செய்தோம். இன்று ராக்கெட்டையே விண்ணில் ஏவப்போகிறோம். விட்டுவிடுவோமா? மஸ்கின் சாகச உள்ளுணர்வு கொதித்தெழுந்தது. நாட்டு மக்களுக்குத் தன் நிறுவனம் உருவாக்கிய ராக்கெட்டை பெருமையின் அடையாளமாக முன்நிறுத்த வேண்டும் என மஸ்க் நினைத்தார். அமெரிக்கா முழுவதும் ஸ்பேஸ்எக்ஸ் குறித்தே பேச வேண்டும் என கருதினார்.
2003ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஃபால்கன் 1 ராக்கெட்டின் முன்மாதிரியை மக்கள் முன் அறிமுகம் செய்ய முடிவு செய்தார். ஏழு மாடி உயரம் கொண்ட ராக்கெட்டை வாகனத்தில் வைத்து நாடு முழுவதும் கொண்டு செல்ல திட்டம் தீட்டினார். ராக்கெட்டை ஏவுவதற்கான நடமாடும் இயங்குதளத்தை விமானத்துறை தலைமையகம் முன்பு காட்சிப்படுத்தத் தயார் செய்தார்.
ஒரு பத்திரிகை, ஊடகம் விடாமல் அனைவரையும் அழைத்து, உலகின் முதல் நவீன, திறன்வாய்ந்த, மலிவு விலை ராக்கெட் தயாராகிவிட்டது எனப் பேட்டியளித்தார். இத்துடன் சேர்ந்து அவர் வெளியிட்ட மற்றுமொரு அறிவிப்பு, ஒட்டுமொத்த ஸ்பேஸ்எக்ஸ் ஊழியர்களையும் ஆத்திரத்தின் உச்சத்திற்கே அழைத்து சென்றது. இன்னும் ஃபால்கன் 1 ராக்கெட்டே வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டிருக்காத நிலையில், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஃபால்கன் 5 என்ற ஐந்து என்ஜின்கள் கொண்ட ராக்கெட்டை தயாரித்து வருவதாகவும், அவற்றையும் விரைவில் மக்கள் முன் அறிமுகம் செய்யப்போவதாகவும் ஒரு பெரிய அணுகுண்டைத் தூக்கி வீசினார்.
(தொடரும்)