Skip to content
Home » எலான் மஸ்க் #32 – டெஸ்லாவின் உதயம்

எலான் மஸ்க் #32 – டெஸ்லாவின் உதயம்

மார்டின் எபர்ஹார்டும் மார்க் டார்பெனிங்கும்

மண்டேலா விளைவுபற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு நிகழ்வு நடைபெறாமலேயே அது நடந்ததாகப் பெரும்பாலான மக்களால் நம்பப்படும் அறியாமையை ‘மண்டேலா விளைவு’ என அழைக்கிறோம். இப்போது ஏன் சம்பந்தமில்லாமல் அறிவியல் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன் என யோசிக்கிறீர்களா? இப்போது உங்களிடம் ஒரு கேள்வி. டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தை உருவாக்கியது யார்? எலான் மஸ்க் என்பதுதான் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். ஆனால் அது தவறு. இதுதான் மண்டேலா விளைவு.

உண்மையில், டெஸ்லா மோட்டார்ஸ் மஸ்க்கால் உருவாக்கப்பட்டது அல்ல. நாம் சென்ற பகுதியில் பார்த்த ஸ்ட்ராபெல்லும் அதை உருவாக்கவில்லை. அந்த நிறுவனத்தை உருவாக்கியது அமெரிக்காவின் தலைசிறந்த பொறியாளர்களில் இருவரான மார்டின் எபர்ஹார்டும் மார்க் டார்பெனிங்கும்.

டெஸ்லா மோட்டார்ஸ் மிகப்பெரிய நிறுவனமாக உருவானதற்குப் பின்னணியில் பல்வேறு நிகழ்வுகள் உண்டு. அதில் ஏசி புரோபல்ஷன் என்ற மின்சாரக் கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு முக்கியப் பங்குண்டு. பொதுவாக அதிர்ஷ்டம் ஒருமுறைதான் கதவைத் தட்டும் என்று சொல்வார்கள். ஆனால் ஏசி புரோபல்ஷனுக்கு இரண்டுமுறைக் கதவைத் தட்டியது. முதல்முறை தட்டியது எலான் மஸ்க். இரண்டாவது முறை தட்டியது எபர்ஹார்டு. ஆனால், இரண்டு முறையும் கதவு திறக்கப்படாததால் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டிய அந்த நிறுவனம் இன்று பத்தோடு பதினொன்றாக விழுந்து கிடக்கிறது.

ஏசி புரோபல்ஷன், 1992ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட முன்னணி மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமாகும். பயணிகள் கார்களில் இருந்து, பந்தயங்களில் பங்கேற்கும் கார்கள் வரை பலதரப்பட்ட வாகனங்களை அந்த நிறுவனம் தயாரித்து வந்தது. அந்நிறுவனத்தின் விலை மதிப்புமிக்கக் கார் என்றால் அது டிஜீரோ (tZero) என அறியப்பட்ட ஒருவகைக் கார்தான். பார்ப்பதற்குச் சிறிய அளவில் இருந்தாலும் அதிவேகத்தில் இயங்கக்கூடிய அந்தக் கார், வெறும் 4.9 விநாடிகளில் பூஜ்ஜியத்தில் இருந்து 60 மைல்கள் வேகத்தை எட்டக்கூடியது.

ஸ்ட்ராபெல் முதன்முதலில் மஸ்க்கைச் சந்தித்து, மின்சாரக் காரை தயாரிப்பதற்கான நிதியைப் பெற்றவுடன், ஏசி புரோபல்ஷன் நிறுவனத்திடம்தான் சென்றார். அவர், அந்நிறுவனத்திடம் ஏற்கெனவே பல ஆண்டுகள் தொடர்பில் இருந்தவர். அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் அவருக்கு நண்பர்கள். அந்நிறுவனத்தின் தலைவர்கூட ஸ்ட்ராபெல்லுக்கு நெருக்கமானவர். அதனால் புதிதாக ஒரு காரை உருவாக்குவதற்குப் பதிலாக, ஏசி புரோபல்ஷனின் சிறந்த காரான டிஜீரோவை எடுத்து, அதில் சில மாற்றங்கள் செய்தால் என்ன என்று ஸ்ட்ராபெலுக்குத் தோன்றியது. இதற்காக அந்த நிறுவனத்திடம் பேசி டிஜீரோவை எடுத்துச் சென்று மஸ்க்கிடம் காட்டினார்.

டிஜீரோவின் ஆற்றலில் மஸ்க் விழுந்துவிட்டார். எரிபொருள் எஞ்ஜின்கள் கொண்ட கார்களுக்கு இணையான வேகத்தை மின்சாரக் கார்களில் பெற முடியும் என்பது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. பார்ப்பதற்குப் பொம்மைக் காரைப் போலத் தோன்றும் டிஜீரோவை, ஸ்ட்ராபெல்லின் உதவியுடன் மேம்படுத்தி ஒரு நல்ல வாகனமாக உருவாக்கி மக்களிடம் கொண்டு சென்றால், மின்சாரக் கார்கள் மீதான கண்ணோட்டமே மாறிவிடும் என அவருக்குத் தோன்றியது.

இதனால் மஸ்க் தொடர்ந்து ஏசி புரோபல்ஷன் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்திவந்தார். ஆனால் அவர்களுக்கு மஸ்க் முன்வைக்கும் திட்டங்கள் எதிலும் ஈடுபாடு இல்லை. உண்மையில், அவர்களுக்கு வணிக ரீதியாக தங்களுடைய நிறுவனத்தை முன்னேற்ற வேண்டும் என்பதிலேயே ஆர்வம் இல்லாமல் இருந்தது. எப்படியாவது தாங்கள் புதிதாகத் தயாரித்துள்ள இபாக்ஸ் எனப்படும் காரை மஸ்க்கிடம் விற்றுவிட வேண்டும் என்பதில் மட்டும் முனைப்பாக இருந்தனர். இத்தனைக்கும் அந்த இபாக்ஸ் கார் பார்ப்பதற்கும் நன்றாக இல்லை, அதன் செயல்பாடும் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை.இதனால் எரிச்சலடைந்த மஸ்க், இனி பேசிப் பலனில்லை என நினைத்து அந்நிறுவனத்தைத் தொடர்புகொள்வதையே நிறுத்திவிட்டார். ஸ்ட்ராபெல்லை அழைத்து வேறு ஏதாவது ஒரு திட்டத்தை உருவாக்கும்படிச் சொல்லிவிட்டு நகர்ந்துகொண்டார்.

இந்தச் சம்பவங்கள் நடைபெற்று வந்த அதே சமயத்தில், அமெரிக்காவின் வடக்கு கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மார்ட்டின் எபர்ஹார்ட், மார்க் டார்பனிங் என்கின்ற இரண்டு பொறியாளர்கள் நுவோ மீடியா என்கிற நிறுவனத்தைத் தொடங்கி, மின் புத்தகங்களை வாசிக்க உதவும் கருவிகளை உருவாக்கி விற்றுவந்தனர். ஆனால் அன்றைய காலக்கட்டத்தில் அந்தக் கருவிகளுக்குப் பெரிய வரவேற்பு இல்லை. அதனால் தங்கள் நிறுவனத்தை வந்த விலைக்கு விற்றுவிட்டு, அடுத்ததாக என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தனர்.

இருவருக்கும் எலக்ட்ரானிக் பொருள்கள் தயாரிப்பதில் ஆர்வமும் அனுபவமும் இருந்தது. அதனால் முதலில் பேட்டரியில் இயங்கக்கூடிய விவசாய இயந்திரங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டனர். பின்பு, மென்பொருள் உதவியுடன் நீர் மேலாண்மையை மேற்கொள்ளும் கருவிகளை உருவாக்கலாம் என யோசித்தனர். ஆனால் இந்தத் திட்டங்கள் எதுவும் அவர்களின் மனதிற்கு உகந்ததாக இல்லை. அதிலும் எபர்ஹார்ட், சமூக மாற்றத்தில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். அடுத்ததாக தான் உருவாக்கப்போகும் தயாரிப்பு உலக அளவில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்து வந்த நேரத்தில், ஏன் பேட்டரிகளில் இயங்கும் மின்சாரக் கார்களை உருவாக்கக்கூடாது என அவருக்குத் தோன்றியது.

இதற்கு அப்போது அமெரிக்காவில் இருந்த அரசியல் சூழல் முக்கியக் காரணமாக இருந்தது. 1930ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்டான்டெர்ட் ஆயில் ஆஃப் கலிஃபோர்னியா நிறுவனத்தில் பணிபுரியும் நிலவியலாளர் ஒருவர், சவுதி அரேபியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில், வணிக நோக்கில் பயன்படுத்தக்கூடிய கச்சா எண்ணெய் மிகுதியாக இருப்பதை முதன்முதலில் கண்டறிந்தார். அதன்பின், இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான சூழலில், தொழில் வளர்ச்சிக்கும் உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கும் கச்சா எண்ணெய் வணிகத்தைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வது அவசியம் என அமெரிக்கா உணர்ந்தது. இதனால் எண்ணெய் வளம் செழிக்கும் மத்திய கிழக்கு நாடுகளுடன் தொடர்ந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் மோதலில் ஈடுபட்டு வந்தது. குறிப்பாக 90களில் கச்சா எண்ணெய்யை முன்வைத்து பல்வேறு பிரச்னைகள் அமெரிக்காவுக்கு ஏற்பட்டன. இதனால் உள்நாட்டு அரசியலிலும் பல குழப்பங்கள் நிகழ்ந்தன.

இதனைக் கூர்ந்து கவனித்து வந்த எபர்ஹார்ட், கச்சா எண்ணெய் விஷயத்தில் அமெரிக்கா மத்தியக் கிழக்கை சார்ந்திருக்கக்கூடாது என்னும் நிலைப்பாட்டில் இருந்தார். அவ்வாறான சூழல் உருவாக வேண்டும் என்றால் கச்சா எண்ணெய்க்குப் பதில் மாற்று எரிபொருளைத் தேட வேண்டும் என அவர் கருதினார். இதே சமயத்தில், கச்சா எண்ணெய் பயன்பாட்டு அதிகரிப்பால் புவி வெப்பமாகி வருவதாக சுற்றுச்சுழல் சார்ந்த பார்வை ஒன்றும் ஏற்படத் தொடங்கியிருந்தது. இந்த இரண்டு காரணிகளையும் கருத்தில் கொண்ட எபர்ஹார்ட், அமெரிக்காவையும் சுற்றுச்சூழலையும் காப்பாற்ற வேண்டும் என்றால் கச்சா எண்ணெய் நுகர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும், மின்சாரத்தில் / லித்தியம் பேட்டரியில் இயங்கக்கூடிய கார்களை உருவாக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.

முதலில் கச்சா எண்ணெய் எரிபொருளுக்கு மாற்றாக ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலங்களைப் பயன்படுத்தலாமா என யோசித்தார். ஆனால் அந்தத் தொழில்நுட்பத்தில் பல போதாமைகள் இருந்தன. வேறு என்ன வழி இருக்கிறது எனச் சிந்தித்த சமயத்தில்தான் அவருக்கு நாம் ஏற்கெனவே பார்த்த ஏசி புரோபல்ஷன் நிறுவனம் பற்றித் தெரியவந்தது. அப்படி ஒரு நிறுவனம் இருப்பதையே அவர் இணையத்தில் உலாவியபோதுதான் எதேச்சையாகத் தெரிந்துகொண்டார். அவர்கள் உருவாக்கும் கார்கள் குறித்துத் தெரிய வந்தவுடன், நேராக அந்நிறுவனம் இருந்த இடத்திற்கே சென்றுவிட்டார்.

ஏசி புரோபல்ஷனிடம் லித்தியம் பேட்டரியில் இயங்கக்கூடிய கார்களை உருவாக்க முடியுமா என விசாரித்தார். 5000 டாலர்கள் கொடுத்தால் அவர் எதிர்பார்க்கும் வகையில் ஒரு காரை தயாரித்துத் தருவதாக அந்நிறுவனம் கூறியது. புதிய கார் வாங்குவதற்கு தான் இங்கு வரவில்லை எனக் கூறிய அவர், தன்னிடம் இருக்கும் திட்டங்களை முன்வைத்தார். லித்தியம் அயான் பேட்டரிகள் மூலம் நீங்கள் உருவாக்கும் கார்களை இன்னும் கொஞ்சம் மேம்படுத்தினால் எதிர்காலத்தையே மாற்றக்கூடிய வகையில் தொழிற்புரட்சியை ஏற்படுத்தலாம் என அந்நிறுவனத்தின் தலைவரிடமும் நிறுவனரிடமும் பேசிப்பார்த்தார். ஆனால் அப்போதும் அந்த நிறுவனம் வணிக யோசனைகளைக் கேட்கும் நிலையில் இல்லை. எலான் மஸ்க்கின் திட்டங்களை எப்படி நிராகரித்ததோ, அதேபோல எபர்ஹார்டின் யோசனைகளையும் புறக்கணித்தது. இதனால் கடுப்பான அவர், புதிய நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, லித்தியம் அயான் பேட்டரிகளால் இயங்கும் கார்களைத் தாமே உருவாக்கும் முடிவுக்கு வந்தார்.

முதலில் எந்த வகையான கார்களை உருவாக்கினால் அது மக்களுக்குப் பயன் தரும் வகையில் அமையும் எனச் சோதிக்கத் தொடங்கினார். ஏற்கெனவே சந்தையில் இருந்த சில மின்சாரக் கார்களின் மாதிரிகளை எடுத்து, அவற்றின் பாகங்களை மாற்றும்போது, அவற்றின் தோற்றமும் செயல்பாடும் எப்படியெல்லாம் மேம்படும் எனக் கணினியில் மென்பொருட்களின் உதவியுடன் ஆராயத் தொடங்கினார். முதலில் கார்களின் எடைகளை மாற்றிப் பார்த்தார். பிறகு பேட்டரிகளின் எண்ணிக்கையை உயர்த்தினார். அடுத்ததாக, சக்கரங்களையும் கார்களின் உடல் அமைப்பையும் மாற்றினார். பிறகு ஒவ்வொரு மாதிரிகளிலும் எத்தனை பேட்டரிகளைப் பொருத்தினால், தான் விரும்பிய ஆற்றலைப் பெற முடியும் எனச் சோதனை செய்தார். இந்தச் சோதனைகளில் டிரக்குகள் போன்ற அதிக எடை வாகனங்களை உருவாக்குவதைவிட, எஸ்.யு.வி ரகக் கார்களை உருவாக்குவது நல்ல பயனைத் தரும் என அவருக்குப் புரிந்தது.

குறிப்பாக லித்தியம் அயான் பேட்டரித் தொழில்நுட்பம், குறைந்த எடை கொண்ட, அதீத ஆற்றல் படைத்த பந்தயக் கார்களை உருவாக்குவதற்குத் திறப்பாக அமையும் என உணர்ந்துகொண்டார். பந்தய ரகக் கார்கள் அதீத வேகத்தைத் தரும். அதேசமயம் இயக்குபவர்களுக்கு உற்சாக அனுபவத்தையும் வழங்கும். அந்த வகைக் கார்களில் மக்கள் எதிர்பார்ப்பதை விட நல்ல மைலேஜ்ஜையும் தரலாம் என எண்ணினார்.

எபர்ஹார்ட் இதை ஆராய்ந்துகொண்டிருந்த அதே சமயம், அவரது நண்பரான டார்பெனிங், மின்சாரக் கார்கள் தயாரிப்பின் வணிகப் பக்கங்களை ஆராய்ந்துகொண்டிருந்தார். மின்சாரக் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் சமூகப் பின்புலத்தில் யாராக இருக்கிறார்கள் எனத் தேடத் தொடங்கினார். அப்போது அவருக்கு இரண்டு விஷயங்கள் புலப்பட்டன.

ஒன்று, வசதி படைத்த மக்கள் மட்டுமே மின்சாரக் கார்களை விரும்பி வாங்குகிறார்கள் என்பது தெரியவந்தது. சந்தையில் அப்போது இருந்த டோயோட்டா பிரியஸ் எனப்படும் கலப்பு எஞ்ஜின் வகைக் காரும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் உருவாக்கிய ஈவி1 என்ற மின்சாரக் காரும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இரண்டையும் வைத்து அவற்றை வாங்கும் நபர்களின் வருமானத்தை ஆராய்ந்ததில், ஆண்டுக்கு 2 லட்சம் டாலர்கள் வருமானம் ஈட்டும் செல்வந்தர்கள் மட்டுமே அந்த வாகனங்களை வாங்குகிறார்கள் எனத் தெரிந்துகொண்டார்.

இரண்டாவதாக அவ்வாறு வாங்குவதற்குக் காரணம் அவர்களுடைய சமூக அந்தஸ்தை உயர்த்திக் காட்டுவதற்குத்தான் என்பதும் தெரியவந்தது. அமெரிக்காவில் லெக்சஸ், பிஎம்டபிள்யூ, கேடிலாக் உள்ளிட்ட உயர்தரக் கார்களை வாங்கும் அதே நபர்கள்தான் மின்சாரம், கலப்பு ரகக் கார்களையும் அதிகம் வாங்கினர். மின்சாரக் கார்கள் அவர்களின் அந்தஸ்தின் குறியீடாகக் கருதப்பட்டது. இதனை அறிந்துகொண்ட எபர்ஹார்டும் டார்பனிங்கும் ஆடம்பர மின்சாரக் கார்களைத் தயாரிக்கலாம் என முடிவு செய்தனர்.

ஜூலை 1, 2003ல் இருவரும் இணைந்து தங்களது புதிய மின்சாரக் கார் நிறுவனத்தைத் தொடங்கினர். அந்த நிறுவனத்திற்கு ‘டெஸ்லா மோட்டார்ஸ்’ எனப் பெயர் சூட்டப்பட்டது. மின்சார மோட்டார்களைக் கண்டுபிடித்த முன்னோடிகளில் ஒருவரும் மிக முக்கிய ஆளுமையுமான நிகோலா டெஸ்லாவை கௌரவப்படுத்தும் வகையில் அந்தப் பெயர் வைக்கப்பட்டது. கலிஃபோர்னியாவில் உள்ள மென்லோ பார்க் பகுதியில், வாடகைக்கு எடுக்கப்பட்ட 2 அறைகள் மட்டுமே கொண்ட சிறிய அலுவலகம் ஒன்றில் அந்நிறுவனம் தொடங்கப்பட்டது.

(தொடரும்)

பகிர:
nv-author-image

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *