2003ஆம் ஆண்டில் அமெரிக்காவில் கார் நிறுவனம் தொடங்க நினைத்த அனைவரையுமே தயங்க வைத்த ஒரே விஷயம், அந்நாட்டில் கடைசியாகக் கார் நிறுவனம் தொடங்கி வெற்றிபெற்ற ஒரே நிறுவனம் கிரைஸ்லர்தான். அந்த நிறுவனமும் 1925ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கப்பட்டது. அதற்கு அடுத்த 78 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட எந்த ஒரு கார் நிறுவனமும் சொல்லிக்கொள்ளும் வளர்ச்சியை எட்டவில்லை.
இதற்குக் காரணம் ஒரு சின்னத் துணுக்கில் இருந்து தொடங்கி ஒரு காரை வடிவமைப்பது, உருவாக்குவது என்பது சவாலான விஷயம். முதலில் கார் நிறுவனம் தொடங்க எக்கச்சக்க முதலீடுகள் வேண்டும். இரண்டாவது, சந்தையில் இருக்கும் மற்றக் கார்களை அலசி ஆராய்ந்து அவற்றைத் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு வெவ்வேறு மாடல்களில் வகைவகையான கார்களை உருவாக்க வேண்டும். அதிலும் டெஸ்லா, மின்சாரக் கார் நிறுவனம் என்பதால், எரிபொருள் கார்களுக்கு நிகரான வடிவமைப்பை இந்தக் கார்கள் கொண்டிருக்க வேண்டும். காரணம், அப்போது இருந்த மின்சாரக் கார்கள் அனைத்தும் பொம்மைக் கார்கள் என்று சொல்லும் வகையில்தான் இருந்தன. இதைவிட எபர்ஹார்டையும் டார்பனிங்கையும் பயமுறுத்தியது கார்களையும் அது சார்ந்த பாகங்களையும் தயாரிக்கக்கூடிய தொழிற்சாலையை உருவாக்குவது.
இரு மேதாவிகளும் மோட்டார் வாகனத்துறை குறித்து ஆய்வு செய்ததில், பெரும்பாலான ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள், கார்களை அவர்களே உருவாக்குவதில்லை எனத் தெரியவந்தது. மூலப்பொருள்களில் இருந்து பாகங்களை உருவாக்கி, கார்களை வடிவமைத்து, அந்தக் கார்களை நாட்டின் ஒரு மூலையில் இருந்து வேறொரு மூலைக்கு எடுத்துச் சென்று விற்பது எல்லாம் ஹென்றி போர்டின் காலத்திலேயே வழக்கொழிந்து போய்விட்டது.
பிஎம்டபிள்யூ காரில் நாம் பிரமித்துப் பார்க்கும் இருக்கைகளோ, கண்ணாடிகளோ அவர்கள் உருவாக்குவதில்லை. பெரிய கார் நிறுவனங்கள், எஞ்ஜின்கள் தொடர்பான ஆய்வுகள், சந்தைப்படுத்துதல், இறுதியாகப் பாகங்களை ஒன்றிணைக்கும் வேலையை மட்டும்தான் செய்கின்றன. மற்ற வேலைகளை எல்லாம் மாற்று நிறுவனங்கள்தான் செய்துவந்தன என்பது அவர்களுக்குத் தெரிய வந்தது. இதனால் கார் முழுவதையும் தங்கள் நிறுவனத்திலேயே உருவாக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தை அவர்கள் மாற்றிக் கொண்டனர்.
டெஸ்லாவின் ஆரம்பக் கால கார்களை உருவாக்குவதற்கு அவர்கள் வைத்திருந்த திட்டம் எளிமையானது. முதற்கட்டமாக, நாம் ஏற்கெனவே பார்த்த ஏசி புரோபல்ஷன் நிறுவனத்தின் டிஜீரோ வாகனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சில தொழில்நுட்பங்களை எடுத்து டெஸ்லாவில் பயன்படுத்தத் திட்டமிட்டனர். அதற்காக அந்நிறுவனத்திடம் உரிமம் பெற வேண்டி விண்ணப்பித்தனர். அடுத்ததாகக் காரின் உடல் பாகங்களைப் புதிதாக உருவாக்காமல் ஏற்கெனவே சந்தையில் இருந்த லோட்டஸ் எலைஸ் சேஷிஸ் என்ற ஆங்கிலக் கார் தயாரிப்பு நிறுவனம் உற்பத்தி செய்திருந்த கார்களின் உடலைப் பயன்படுத்தலாம் எனத் திட்டமிட்டனர். அதிலும் 1996ஆம் ஆண்டு லோட்டஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய இரண்டு கதவுகள் கொண்ட எலைஸ் கார் செல்வந்தர்களைக் கவரும் வகையில் இருந்தது. அதனால் அவற்றையே வாங்கிப் பயன்படுத்த டெஸ்லா முடிவு செய்தது.
கார் விற்பனையைப் பொறுத்தவரை டெஸ்லா குழு நிறைய கார் விநியோகஸ்தர்களைச் சந்தித்துப் பேசியது. ஆனால் அவர்களுடனான உடன்படிக்கை சரிவராததால், மூன்றாம் நபர்கள் மூலம் விற்காமல் நேரடியாகவே விற்பனை மேற்கொள்ள முடிவு செய்தது. இப்படியாகக் கார் தயாரிப்பு, விற்பனை குறித்த ஓர் அடிப்படை திட்டத்தைத் தயாரித்தவுடன் அவர்களுக்கு அடுத்த சவாலாகக் காத்திருந்தது, முதலீட்டாளர்களைப் பிடிப்பது.
மின்சார வாகனங்கள் மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை வர வேண்டும் என நினைத்த எபர்ஹார்டும் டார்பனிங்கும் டிஜீரோ கார் ஒன்றை விலைக்கு வாங்கி, முதலீட்டாளர்களைச் சந்திக்க எடுத்துச் சென்றனர். அந்த முதலீட்டாளர்கள் அனைவருக்கும் ஃபெராரியை விட அதிக வேகத்தை எட்டும் டிஜீரோவைப் பிடித்திருந்தது. ஆனால் தோற்றத்தில் பொம்மைக் காரைப்போல இருக்கும் இதைப்போன்ற கார்களை உருவாக்கினால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா எனச் சந்தேகம் எழுப்பினர். பலர் தயங்கிப் பின் வாங்கினாலும், அந்தச் சமயத்தில் இரண்டு நிறுவனங்கள் மட்டும் டெஸ்லாவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள முன்வந்தன.
ஒன்று, காம்பஸ் டெக்னாலஜி பார்ட்னர்ஸ், மற்றொன்று எஸ்.டி.எல். வென்சர்ஸ். இதில் காம்பஸ் டெக்னாலஜி நிறுவனம் ஏற்கெனவே எபர்ஹார்டு, டார்பனிங் நடத்திய நுவோ மீடியாவில் முதலீடு செய்திருந்த நிறுவனம். அதனால் அவர்கள் மேல் உள்ள நம்பிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு முதலீடு செய்தது. ஆனாலும் இந்த முதலீடுகள் போதுமானதாக இல்லை. டெஸ்லா தொழிற்சாலையைத் தொடங்கி முன்வடிவ வாகனத்தை (Prototype) தயாரிப்பதற்கே மேலும் 70 லட்சம் டாலர்கள் தேவைப்பட்டன. ஒரு முன்மாதிரி வாகனத்தை உருவாக்கிவிட்டால் அதைக் காட்டியே இரண்டாவது கட்ட முதலீடுகளைப் பெறலாம் என இருவரும் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இவர்களை நம்பி அத்தனை பெரிய தொகையைத் தருவதற்கு யார் முன் வருவார்? இங்கேதான் எலான் மஸ்க் வருகிறார்.
எபர்ஹார்டுக்கும் டார்பனிங்குக்கும் ஏற்கெனவே எலான் மஸ்க்கின் பெயர் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. இருவரும் அவரைச் சில ஆண்டுகளுக்கு முன்பே ஸ்டான்போர்ட் நடத்திய மார்ஸ் சொசைட்டி கலந்தாய்வில் சந்தித்து இருந்தனர். அங்கே எலிகளைச் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் திட்டம் குறித்து அவர் உரையாடியதையும் கேட்டிருந்தனர். வித்தியாசமான யோசனைகளை முன்வைக்கும் அவர், நிச்சயம் நம் மின்சாரக் கார் திட்டத்தையும் அங்கீகரிப்பார் என அவர்களுக்குத் தோன்றியது. ஆனாலும் ஏதோ ஒரு தயக்கம் காரணமாக இருவரும் அவரை அணுகாமல் இருந்தனர்.
இந்தச் சமயத்தில் ஏசி புரோபல்ஷனில் பணியாற்றிய அவர்களுடைய நண்பர் ஒருவர், எலான் மஸ்க் மின்சாரக் கார் துறையில் முதலீடு செய்வதற்குச் சிறந்த திட்டங்களைத் தேடிக்கொண்டிருப்பதாக இருவரையும் அழைத்துக் கூறினார். அவ்வளவுதான், இதற்காகத்தான் காத்திருந்தோம் என்பதுபோல இருவரும் அடுத்த விமானத்தைப் பிடித்து எலான் மஸ்க்கைச் சந்திப்பதற்காக லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்திற்குப் பறந்துவிட்டனர்.
வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை. இரண்டே முறைதான் மஸ்க் அவர்களைச் சந்தித்தார். முதன்முறை டார்பனிங் மட்டும் மஸ்க்கைச் சந்தித்து உரையாடினார். அவரிடம் டெஸ்லாவின் பொருளாதாரத் திட்டம் குறித்து மஸ்க் கேட்டறிந்தார். அடுத்தமுறை டார்பனிங்குடன் எபர்ஹார்டும் கலந்துகொண்டார். இருவருடனும் சிறிது நேரம் பேசிய மஸ்க், டெஸ்லாவில் முதலீடு செய்வதற்குச் சம்மதம் தெரிவித்தார்.
முழுதாக 65 லட்சம் டாலர்களை முதலீடு செய்ததன்மூலம் டெஸ்லாவின் அதிகபட்ச பங்குதாரராகவும் தலைவராகவும் ஆனார் எலான் மஸ்க்.
எலான் மஸ்க்கை முதலீட்டாளராகப் பிடித்ததில் எபர்ஹர்டுக்கும் டார்பனிங்கிற்கும் கட்டற்ற மகிழ்ச்சி. மற்ற முதலீட்டாளர்களுடன் அவர்கள் இணைந்து பணியாற்றுவதில் ஒரு சிக்கல் இருந்தது. மற்றவர்களுக்கு இவர்கள் தயாரிக்கும் இயந்திரங்களின் மீது எந்த விருப்பமும் இல்லை. அது லாபம் தருகிறதா இல்லையா என்பது மட்டுமே அவர்களுடைய கேள்வியாக இருந்தது. ஆனால் மஸ்க்கோ அடிப்படையில் பொறியியல் வல்லுநர் என்பதால், அவருக்கு இருவரும் எதை உருவாக்கப் போகிறார்கள் என்ற ஆர்வம் இருந்தது இருவருக்கும் நம்பிக்கை அளித்தது.
எபர்ஹார்டுடன் பேசும்போது தானும் அமெரிக்காவை மத்திய கிழக்கு நாடுகளின் கச்சா எண்ணெய் அடிமைத்தனங்களில் இருந்து மீட்க நினைப்பதாக மஸ்க் தெரிவித்தார். அவ்வளவுதான், ஏதோ சொர்க்கத்தில் இருந்த இறங்கி வந்த தேவதையைப்போல இருவரும் மஸ்க்கை நினைத்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘மஸ்க் வானில் இருந்து இறங்கி வந்த முதலீட்டுத் தேவதை. முதலீட்டின் மூலம் உலகை மாற்றும் பார்வையைக் கொண்டவர்கள் மிகவும் சொற்பம். மஸ்க்குக்கு இந்த முதலீடு வெறும் பொருளாதார நலன் சார்ந்தது மட்டுமல்ல. அமெரிக்காவின் ஆற்றல் சமன்பாட்டை மாற்றுவதற்கு அவர் முன்னெடுப்பைத் தொடங்கி இருக்கிறார்’ என்றனர்.
இதன்பின், மஸ்க் டெஸ்லா நிறுவனத்தை நேரில் சென்று பார்வையிட்டார். வெளியே வந்தவுடன் முதல் வேலையாக ஸ்ட்ராபெல்லை அழைத்த அவர், டெஸ்லா குழுவினரைச் சந்திக்க அறிவுறுத்தினார். டெஸ்லாவை நேரில் சென்று பார்த்த ஸ்ட்ராபெல்லுக்கு இன்பம் கலந்த அதிர்ச்சி. முதலாவதாக, தான் மட்டுமே யோசித்து வந்த ஒரு திட்டத்தை வேறு இரண்டு பேர் சேர்ந்து நிறுவனமாக்கும் அளவிற்குக் கொண்டு சென்றுள்ளனர் என்பது அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இரண்டாவது தன்னைப் போலவே சிந்திக்கும் இருவரைக் கண்டுகொண்டது அவரை மகிழ்ச்சி அடைய வைத்தது. நேராக எபர்ஹார்டின் அறைக்குச் சென்ற ஸ்ட்ராபெல், டெஸ்லா எதிர்பார்க்கும் பேட்டரி தொகுப்பைத் தான் உருவாக்கி வருவதாகச் சொன்னார். இதற்கான நிதி உதவியை எலான் மஸ்க்தான் அளிப்பதாகவும் கூறினார். இதைக் கேட்ட எபெர்ஹார்ட், அங்கேயே அவரைப் பணிக்கு அமர்த்தி ஆண்டுக்கு 95,000 டாலர் சம்பளம் வழங்கவும் ஒப்புக்கொண்டார். இப்படியாக டெஸ்லாவின் உயர்மட்டக்குழு உருவானது.
(தொடரும்)