Skip to content
Home » எலான் மஸ்க் #35 – பிரச்னைகளின் தொடக்கப்புள்ளி

எலான் மஸ்க் #35 – பிரச்னைகளின் தொடக்கப்புள்ளி

எலான் மஸ்க்

டெஸ்லாவைப் பற்றிய நியூயார்க் டைம்ஸ் கட்டுரையில் தன்னுடைய பெயர் இடம் பெறவில்லை என்பதற்காக மஸ்க் ஏன் கோபமடைந்தார் என்பதை எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். டெஸ்லா அறிமுகம் செய்த ரோட்ஸ்டர் கார்கள் இரண்டும் வாகன உலகின் சூப்பர் ஸ்டார்களாகப் பார்க்கப்பட்டன. மின்சாரக் கார்களை விரும்புபவர்கள் ஆகட்டும், வெறுப்பவர்களாகட்டும் இரு தரப்பில் இருந்தும் அதைப்பற்றிய பேச்சுதான் அமெரிக்கா முழுவதும் அடிப்பட்டுக் கொண்டிருந்தது. ரோட்ஸ்டரின் தோற்றமும் வேகமும் செல்வந்தர்களை வாங்கத் தூண்டின. இந்தப் புகழுக்கெல்லாம் காரணமான தன்னுடைய பெயர் ஓரிடத்திலும்கூட கட்டுரையில் குறிப்பிடப்படவில்லையே என்பதுதான் அவரது கோபம்.

சிலிகான் பள்ளத்தாக்கின் பணி கலாச்சாரத்தின் பாதிப்பால் உருவான ஒரு நிறுவனம் தனக்கு அச்சுறுத்தலாக மாறி இருப்பதை முதன்முதலில் டிட்ராய்ட் உணர்ந்துகொண்டது. சான்டா மோனிகா நிகழ்வுக்குப் பிறகு கலிஃபோர்னியாவில் பெப்பிள் பீச் கார் கண்காட்சி என்ற ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்வில் டெஸ்லாக் காரை இடம்பெறச் செய்வதற்காக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அந்த நிறுவனத்திடம் வந்து உண்மையாகவே கெஞ்சினர். வழக்கமாக, கார்களைக் காட்சிக்கு வைப்பவர்கள்தான் பணம் செலுத்த வேண்டும். ஆனால், நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் ஒரு பைசாகூட வாங்காமல், தங்கள் பணத்தை டெஸ்லாவுக்குக் கொடுத்து பெப்பிள் பீச் நிகழ்வுக்கு ரோட்ஸ்டர்களைக் கொண்டு வந்தனர். அந்த அளவுக்கு அந்தக் காரை பார்ப்பதற்குப் பணக்காரர்கள் கூடினர். நிகழ்வுக்கு வந்த பலர், அதன் கவர்ச்சியில் மயங்கி, அதே இடத்தில் 1 லட்சம் டாலர்களுக்கு செக் எழுதிக்கொடுத்து முன்பதிவு செய்தனர். அந்த அளவுக்கு ரோட்ஸ்டரின் மவுசு கூடிக்கொண்டிருந்தது.

மேற்கூறியதுபோன்ற நிகழ்வுகளால் மட்டும் டெஸ்லாவுக்குப் பல லட்சம் டாலர்கள் குவிந்தன. முதலீட்டாளர்கள், சினிமா நட்சத்திரங்கள் எனப் போட்டிப் போட்டுக்கொண்டு முன்பதிவு செய்தனர். டெஸ்லாவின் காத்திருப்புப் பட்டியலில் இணைவது அவர்களுக்குப் பெருமை வாய்ந்த ஒன்றாக இருந்தது. சிலிகான் பள்ளத்தாக்கில் இருந்த சில செல்வந்தர்கள், நேரடியாக டெஸ்லா அலுவலகத்திற்குள்ளேயே நுழைந்து ரோட்ஸ்டரை இயக்கிப் பார்க்க வேண்டும் எனக் கேட்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால் ரோட்ஸ்டரை வாங்குவதற்கு முன்பதிவு செய்தால் மட்டுமே அதை இயக்கலாம் எனக்கூறி அதிலும் டெஸ்லா கல்லா கட்டியது. டெஸ்லா உறுப்பினர் குழு ஒன்று தொடங்கப்பட்டு, 1 லட்சம் டாலர்களுக்கு உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. அதிலும் பலர் இணைந்தனர். இதில் இணைபவர்களுக்கு ரோட்ஸ்டர் விற்பனைக்கு வந்தவுடன் சேவை தொடர்பான அம்சங்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

வெறும் கவர்ச்சியில் மட்டுமல்ல தொழில்நுட்பங்களைக் கையாள்வதிலும் டெஸ்லா முன்னேறிக் கொண்டிருந்தது. தங்களுடைய காரில் எந்த வகையில் எல்லாம் சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முடியுமோ அத்தனையும் டெஸ்லா செய்தது. அதிநவீனக் கணினித் தொழில்நுட்பங்களை வாகனத்துறை ஜாம்பவான்களுக்கு எதிராக டெஸ்லா களமிறக்கியது. பொதுவாக விபத்துக்கள் ஏற்படும்போது தங்களது கார்கள் அதை எவ்வாறு கையாள்கின்றன எனச் சோதனைகள் செய்வது கார் நிறுவனங்களின் வழக்கம்.

விபத்து ஏற்படும்போது ஓட்டுநர்களுக்கு எந்த வகையில் பாதிப்பு ஏற்படும் என்பதைச் சோதனையிலேயே கண்டறிந்து, கார்களில் பாதுகாப்பு அம்சங்களை அதற்கு ஏற்றாற்போல மாற்றி அமைப்பர். இதனை Crash Testing என்று அழைப்பர். இந்தச் சோதனையை மேற்கொள்வதற்கு அதிகம் செலவாகும். ஆனால் டெஸ்லா, தொழில்நுட்பங்களின் உதவியுடன் பெரிய நிறுவனங்களுக்கு இணையாக இந்தச் சோதனைகளை மேற்கொண்டது.

வரிசையாக அடுக்கப்பட்டிருந்த அதிவேகக் கேமராக்களும், மற்ற சென்சார் தொழில்நுட்பங்களும் விபத்து ஏற்படும்போது ரோட்ஸ்டரில் என்ன நடக்கிறது என்பதைத் துல்லியமாகப் படம் பிடித்து மாற்றங்களைச் செய்ய உதவின. அதுமட்டுமில்லாமல், நாட்கள் செல்லச் செல்ல, கார்கள் இல்லாமலேயே இந்தச் சோதனைகள் செய்யப்பட்டன. கணினியின் உதவியுடன் ஒப்புருவாக்கம் (Simulation) செய்யப்பட்டு, உண்மையான கார்களைக் கொண்டு வந்து பாழாக்காமல் அத்தகைய சோதனைகளை டெஸ்லா சாதித்தது. இதனால் பல ஆயிரம் டாலர்கள் மிச்சமாகின. அதேபோல டெஸ்லா கார்களின் நிலைப்புத்தன்மையை ஆராய்வதற்குக் கற்களால் ஆன சாலைகளைத் தங்கள் அலுவலகம் அருகிலேயே செயற்கையாக உருவாக்கி சோதனைச் செய்தனர்.

இத்தகைய சோதனைகள் விரைவாகவும் செலவில்லாமலும் நடைபெற்றன என்பதுதான் டெஸ்லாவின் மிகப் பெரிய பலம். இதற்குச் சிலிகான் பள்ளத்தாக்கு அணுகுமுறைதான் உதவியதாக அங்குள்ள ஊழியர்களே ஒப்புக்கொள்கின்றனர். உதாரணமாக, வழுக்கக்கூடிய சாலைகளில் கார்களின் பிரேக் அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறியச் சோதனை மேற்கொள்வார்கள். பொதுவாகக் கார் நிறுவனங்கள் இதற்கான சோதனைகளை ஆர்டிக் பிரதேசத்திற்கு அருகில் உள்ள வடக்கு ஸ்வீடனில், உறைந்த பனிக்கட்டிகளின் மீது கார்களை இயக்கி மேற்கொள்கின்றன. கார்கள் மூன்று, நான்கு நாளைக்குத் தொடர்ந்து ஐஸ் பாதையில் இயக்கப்படும். பிறகு அதிலிருந்து கிடைக்கும் தரவுகளை எடுத்துக்கொண்டு பொறியாளர்கள் அமெரிக்காவுக்குத் திரும்புவர்.

இந்தத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் எனப் பல வாரங்களுக்கு ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும். இறுதியாக முடிவு எட்டப்பட்டவுடன், அந்த மாற்றங்களைச் செய்து, மீண்டும் காரைச் சோதிக்க ஸ்வீடனுக்கு எடுத்துச் செல்வர். கிட்டத்தட்ட பனிக்காலம் முடியும் வரை இந்தச் சோதனைகள் நடைபெறும். இதனால் ஏகப்பட்ட நேர விரயம், நிதி விரயம் ஏற்படும். இதற்கு இடையில் கார்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு இவர்கள்தான் பொறுப்பு, அவர்கள்தான் பொறுப்பு எனக் குற்றச்சாட்டுகளை வீசி விளையாடி, அதிலும் சில காலம் கழியும். பி.எம்.டபிள்யூ நிறுவனம் கூட இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் டெஸ்லா இந்தத் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வேலைகளில் எல்லாம் ஈடுபடவில்லை.

ஸ்வீடனுக்குக் காரை எடுத்துச் செல்லும்போதே தேவையான அத்தனை நபர்களையும் டெஸ்லா உடன் அனுப்பி வைத்தது. அதே இடத்தில் அமர்ந்து கார்களை இயக்கிப் பார்த்து, தரவுகளை ஆராய்ந்து, உடனுக்குடன் மாற்றங்கள் செய்யப்பட்டன. டெஸ்லா ஊழியர்கள் களத்தில் இறங்கி எல்லா வேலைகளையும் செய்தனர். அதேபோல கடும் குளிரில் எஞ்ஜின்கள் எப்படி இயங்குகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள, உறைநிலை வெப்பம் கொண்ட சிறப்பு அறைச் சோதனைக்கூடங்கள் இருக்கின்றன. இங்கே சோதனை செய்தால் மணிக்கு இத்தனை டாலர்கள் என ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டியது வரும். இந்தச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் டெஸ்லா ஒரு திட்டம் வைத்திருந்தது.

ஐஸ்கிரிம் டிரக் ஒன்றை வாடகைக்கு எடுத்து வந்த டெஸ்லா பொறியாளர்கள், அதில் குளிர் சாதனங்களைப் பொருத்தி, கடும் குளிருக்கான சீதோஷ்ணத்தைக் கொண்டு வந்து சோதனை செய்தனர். இப்படியாக டெஸ்லாவின் ஒவ்வொரு சாதனையும் டிட்ராய்ட்டுக்குச் சோதனையாக மாறி வந்தது. அவர்கள் விளம்பரங்கள் மூலம் டெஸ்லாவை எந்த அளவுக்கு மட்டம் தட்டலாம் என்பதில் மட்டும்தான் கவனமாக இருந்தனர். ஆனால் டெஸ்லாவோ அவர்களைக் கண்டுகொள்ளாமல் தங்களுடைய திட்டமிட்ட உழைப்பால் முன்னேறிக்கொண்டிருந்தது.

டெஸ்லாவின் தொடக்க ஆண்டுகளில் எபர்ஹார்ட்தான் அதன் மூளையாகச் செயல்பட்டார். முக்கிய முடிவுகளை, உடனடி முடிவுகளை எடுப்பது எல்லாம் அவர்தான். அவருடைய அணுகுமுறை ஒரு திட்டத்தைத் தீட்டுவது, அதை உடனே செயல்படுத்துவது, அது தோல்வி அடையும் பட்சத்தில் உடனே வேறு திட்டத்திற்கு மாறுவது என்றிருந்தது. தோல்விகள் வந்தாலும் அது உடனடியாக ஏற்படும் பட்சத்தில், அதை நினைத்துக் கவலைப்படாமல் அடுத்த திட்டத்தைத் தீட்டலாம் என்பதில்தான் எபர்ஹார்ட் உறுதியாக இருந்தார். இதனால் டெஸ்லாவால் தன்னுடைய தவறுகளை உடனடியாகத் திருத்தி, முன்னேற முடிந்தது. ஆனால் எபர்ஹார்டின் முடிவுகளுக்கு இடையூறாக இருந்தது எலான் மஸ்க்தான்.

ரோட்ஸ்டர் கார் தயாரிப்பின்போது எலான் மஸ்க் ஏகப்பட்ட மாற்றங்களை முன்மொழிந்தார். இதனாலேயே கால தாமதம் ஏற்பட்டு கார் விற்பனைக்கு வராமல் இன்னும் தயாரிப்பு நிலையிலேயே இருப்பதாக எபர்ஹார்ட் கருதினார். மஸ்க்கோ, ரோட்ஸ்டர் காரைச் சொகுசாக மாற்றுவதற்கு என்னென்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனையையும் செய்துகொண்டிருந்தார். முதலில் சீட்டுகளை மாற்ற அறிவுறுத்தினார். பிறகு, கதவுகளை மாற்ற வேண்டும் என்றார். காரின் உடலை கார்பன் ஃபைபரில் வடிவமைக்க வேண்டும், கார் கதவுகளைத் தொட்டவுடனேயே தானாக எஞ்ஜின்கள் இயங்கும் வகையில் எலக்ட்ரானிக் சென்சார்கள் வைக்க வேண்டும் எனத் தினம் தினம் புதிய மாற்றங்களைச் செய்துகொண்டே இருந்தார்.

இந்த மாற்றங்கள்தான் டெஸ்லாவைத் தாமதப்படுத்துகிறது என மஸ்க்கின் மீது எபர்ஹார்ட் குற்றம்சாட்டத் தொடங்கினார். பல பொறியாளர்களும் எபர்ஹார்ட் சொல்வதுதான் சரி என்றனர். ஆனால் மஸ்க்கோ அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவே இல்லை. காரை வடிவமைப்பது மட்டுமே உங்கள் வேலை. எப்படி வடிவமைத்தால் அது மக்களைப் போய்ச் சேரும் என உங்களுக்குத் தெரியாது. நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள் எனச் சொல்லிவிட்டார்.

2007ஆம் ஆண்டு. டெஸ்லா அப்போது 260 ஊழியர்கள் கொண்ட நிறுவனமாக வளர்ந்து இருந்தது. யாரும் சாதிக்க முடியாததை டெஸ்லா சாதித்து வந்தது. இதுவரை உலகம் கண்டிராத அதிவேகமான, அழகான மின்சாரக் கார்கள் சமூகத்தை ஆளப்போகின்றன. இந்தக் கார்கள் எதிர்காலத்தின் தொடக்கப்புள்ளி. நம் குழந்தைகள், இன்று நாம் பயன்படுத்தும் கார்களை அறிந்ததே கிடையாது எனும் அளவிற்கு மாற்றம் வரப்போகிறது என எபர்ஹார்ட் தனது ஊழியர்களிடம் உற்சாக உரையாற்றினார். ஏற்கெனவே முன் பதிவாளர்கள் அனைவருக்கும் முன்வடிவ மாதிரி கார்கள் பிடித்துப்போய்விட்டன. ஒரு சில மாற்றங்கள்தான் பாக்கி, அதைச் செய்துவிட்டால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியதுதான் என்றார். ஆனால் அடுத்தடுத்து அவர் சந்தித்த பிரச்னைகள், வெற்றிகரமான ஒரு நிறுவனத்தைத் திவாலாகும் நிலைக்கே அழைத்துச் சென்றது!

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *