Skip to content
Home » எலான் மஸ்க் #38 – திரும்பிய பக்கமெல்லாம் அடி

எலான் மஸ்க் #38 – திரும்பிய பக்கமெல்லாம் அடி

எலான் மஸ்க்

டெஸ்லாவில் நேரடிக் கட்டளைகளை மஸ்க்கே பிறப்பிக்கத் தொடங்கினார். அவரது மேற்பார்வையில் டெஸ்லா புதிய உத்வேகம் பெற்றது. இதுவரை முதலீட்டாளர் என்ற மஸ்கை மட்டும் பார்த்து வந்த டெஸ்லா ஊழியர்கள், நிர்வாகத்தில் அவரது அதிரடி நடவடிக்கைகளைத் தரிசிக்கத் தொடங்கினர். முதல் வேலையாக டெஸ்லாவின் பணிக் கலாச்சாரம் மாற்றி அமைக்கப்பட்டது. ஸ்பேஸ்எக்ஸ் ஊழியர்களைப்போல இனி டெஸ்லா ஊழியர்களும் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும் என்றார் மஸ்க். ரோட்ஸ்டர் விற்பனைக்கு வரும் வரை சனிக்கிழமையும் கிடையாது, ஞாயிற்றுக்கிழமையும் கிடையாது. விடுமுறை தேவைப்பட்டால் வேலையில் இருந்து வெளியேறிவிடலாம். இரவு வந்தால் அலுவலக மேஜைக்கு அடியில் விரிக்கப்பட்டுள்ள கம்பளத்திலே உறங்கி எழுந்து வேலையைப் பார்க்கலாம் என்றார்.

மஸ்க்கின் இந்த அடாவடி நடவடிக்கைகளுக்குப் பழக்கப்படாத ஊழியர்கள் சிலர், ‘நாங்கள் கார்களை உருவாக்க ஏற்கெனவே கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறோம். எங்களுக்குக் கொஞ்சம் ஓய்வு தேவை. நாங்கள் வீட்டிற்குச் சென்று குடும்பத்தினரைப் பார்க்க வேண்டாமா?’ என்றனர்.

‘ஓ அப்படியா. ஒன்றும் பிரச்னையில்லை. நீங்கள் ஓய்வு முடிந்து திரும்பும்போது நிறுவனம் திவாலாகி இருக்கும். அதனால் விடுமுறைக்குச் செல்பவர்கள் வேறு வேலையைப் பார்த்துக்கொண்டு அப்படியே கிளம்பிவிடுங்கள்’ என்று சொல்லிவிட்டார்.

கிட்டத்தட்ட ராணுவ ஆட்சியைப் போன்ற சூழல் அலுவலகத்தில் ஏற்படத் தொடங்கியது. ஊழியர்கள் தினமும் 16 மணி நேரத்துக்கும் மேல் உழைத்தனர். ஒவ்வொரு வியாழனும் அனைவரும் சரியாகக் காலை 7 மணிக்கு அலுவலகத்தில் கூட வேண்டும். கிடைமட்ட ஊழியரில் இருந்து அதிகாரிகள் வரை அனைவருக்கும் மஸ்க் வகுப்பெடுத்தார். ‘முதலில் எல்லோரும் நாம் என்னென்னப் பொருள்களை வாங்குகிறோம் என்று நினைவு வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் பொருள்களை வாங்குவதற்கு எவ்வளவு செலவாகிறது என்று பாருங்கள். அதே பொருள்களை எப்படிக் குறைந்த விலையில் அடித்துப் பேசி வாங்கலாம் என ஆலோசியுங்கள். உங்களுக்குச் சொல்ல வருவது ஒன்றுதான். உங்கள் அனைவருக்குமே நிதிப் பொறுப்பு இருக்கிறது. நீங்கள் நிதி விஷயங்களைத் தெரிந்துகொண்டால்தான் ஏற்படும் செலவீனங்களைக் குறைக்க முடியும்’ என்றார். ஒவ்வொரு மாதமும் பொருள்களுக்கு ஆக வேண்டிய செலவு திட்டமிடப்பட்டது, பகுப்பாய்வு செய்யப்பட்டது. 6500 டாலர்கள் விலையுள்ள ஒரு பொருளை 3800 டாலர்களுக்கு எப்படி வாங்க வேண்டும் என மஸ்க்கைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொண்டனர்.

ஒவ்வொருவருக்கும் தனித்தனி இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. இலக்குகளை அடையாதவர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர். காரணம் சொல்பவர்கள் உடனே வெளியேற்றப்பட்டனர். ‘நீங்கள் எதற்கு முன்னுரிமை வழங்கப்போகிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள். உங்கள் வேலையா? உங்கள் குடும்பமா? நாம் உலகத்தை மாற்றிக்கொண்டிருக்கிறோம். வரலாற்றை மாற்றுகிறோம். நீங்களும் அதில் முழு மனதுடன் ஈடுபட்டால் மட்டுமே பலன் கிடைக்கும். விருப்பமில்லையா வெளியேறி விடுங்கள்’ மஸ்கின் நாவில் இருந்து வந்த வார்த்தைகள் தீ சுடுவதைப்போல இருந்தன. ஆனால் எதையும் நேருக்கு நேராகவே அவர் பேச விரும்பினார். மறைத்துப் பேசி, பூசி மெழுக அவர் விரும்பவில்லை.

டெஸ்லா மீது மக்களுக்கு ஏற்பட்டிருந்த களங்கங்களைச் சரி செய்வதற்கான முயற்சிகளிலும் இறங்கினார். ஊடகங்களை அழைத்துப் பேட்டிகள் அளித்தார். ‘விற்பனைத் தேதி தள்ளிப்போவது இதுதான் கடைசி முறை. 2008ஆம் ஆண்டு உங்களது இல்லங்களில் ரோட்ஸ்டர் கார்கள் நிற்கும். அடுத்ததாக ஒயிட் ஸ்டார் எனப்படும் மலிவு விலைக் கார் ஒன்று 50,000 டாலர்களுக்கு விற்பனைக்கு வரத் தயாராக இருக்கிறது. நிர்வாகத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டெஸ்லாவின் எதிர்காலம் இப்போது தெளிவாகவும் பிரகாசமாகவும் இருக்கிறது. அடுத்த ஆண்டு அட்டகாசமான ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றை நீங்கள் காண்பீர்கள். அதை ஓட்டிப்பார்க்க வேண்டும் என்ற ஆசையில் வரிசையில் நிற்கப்போகிறீர்கள். அந்தக் காரும் ஏற்கெனவே லண்டனில் உருவாகி ஏற்றுமதிக்குத் தயாராகவுள்ளது’ என்றார். மஸ்க் சொல்வது உண்மையா பொய்யா என்று யாரும் யோசிக்க விரும்பவில்லை. அவர் சொன்ன வார்த்தைகளை அப்படியே நம்பினர்.

முன்பதிவு செய்துவிட்டுக் கார்கள் கிடைக்காமல் கோபத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களைச் சமாதானம் செய்வதற்காகப் பெரிய அரங்குகளில் விருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அங்கே அவர்களுடைய பிரச்னைகள் கேட்கப்பட்டுத் தீர்வுகள் உறுதியளிக்கப்பட்டன. டெஸ்லா கார்களுக்கு என்று ஷோரூம்கள் இல்லாமல் இருந்தன. இப்போது புதிய ஷோரூம்கள் திறக்கப்பட்டு அங்கு கார்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. மக்கள் சந்திப்பில் மஸ்க்கும் பங்கேற்றார். அவர் நேரடியாகவே மக்களுடன் உரையாடினார். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அவருக்கு தான் உருவாக்கும் கார்கள் மீது மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது. அவற்றை அவர் அவ்வளவு நேசித்தார். அதனால் யாராவது குற்றம் குறைகூறிக்கொண்டு வந்தால் அவர்களை நிற்க வைத்து பாடம் எடுக்கத் தொடங்கினார். அவரது வார்த்தைகளில் நம்பிக்கை மிளிர்ந்தது. டெஸ்லா குறித்துச் சிலாகித்துப் பேசும் அவரது தோரணையில் புகார் அளிக்க வந்த மக்கள் தங்கள் குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற்றுவிடுவர். நிறைய வாடிக்கையாளர்களுக்கு ரோட்ஸ்டர் கார்கள் தாமதமாவதுதான் பிரச்னையாக இருந்தது. மற்றபடி அவர்களுக்கு அதன் வடிவமைப்பில் பிரச்னைகள் இல்லை. அதனால் புதிய காலக்கெடு உறுதி அளிக்கப்பட்டதுமே அவர்கள் திருப்தி அடைந்தனர். மஸ்க்கை ஒருமுறை சந்தித்துப் பேசியவுடனேயே அவர்களது எதிர்மறை அணுகுமுறையை மாற்றிக்கொண்டனர். முன்பதிவு செய்த பணத்தை வாங்கிக்கொண்டு கிளம்பிவிடலாம் என நினைத்து வந்தவர்கள், மனம் நிறைந்து அலுவலகத்தில் இருந்து வெளியேறினர்.

இணையத்தில் டெஸ்லா குறித்து வெளிவந்துகொண்டிருந்த தவறான செய்திகளையும் மஸ்க் அகற்றும் வேலையில் இறங்கினார். தினமும் கூகுள் இணையதளத்துக்குச் சென்று டெஸ்லா குறித்து என்னென்ன செய்திகள் வந்திருக்கிறது எனத் தேடுவார். அதில் ஏதாவது ஒரு செய்தி, நிறுவனத்துக்கு எதிரான பார்வையைக் கொண்டிருந்தால் உடனே அதனைச் சரி செய்வதற்கு அவர்களுடைய மார்க்கெட்டிங் அணிக்கு உத்தரவு பறக்கும். ஒன்று பத்திரிகையாளர்கள் நல்ல முறையில் சரிக்கட்டப்படுவார்கள். அல்லது, அவர்கள் மீது அவதூறுகள் விழும். எப்படியும் டெஸ்லா குறித்த எதிர்மறைச் செய்தி நீக்கப்பட்டுவிடும்.

அலுவலகத்திலோ வேலை ஓய்வே இல்லாமல் நடைபெற்றுக்கொண்டிருந்தது. மஸ்க்குடன் சந்திப்பு நடைபெறுகிறது என்றால், இன்று யார் அவரிடம் அடி வாங்கி ரத்தக்களரியாகப் போகிறார்கள் என்று ஊழியர்களுக்குள்ளேயே விளையாட்டாக விவாதங்கள் எழுந்தன. மஸ்க்கின் அணுகுமுறை குறித்து டெஸ்லா ஊழியர்கள் கூறிய விஷயங்கள் சுவாரஸ்யமானவை, ‘ஒரு விஷயத்தை இப்படிச் செய்வதுதான் வழக்கம் எனச் சொன்னால் அவருக்குப் பிடிக்காது. உடனே உங்களை அறையில் இருந்து வெளியே விரட்டிவிடுவார். தொடர்ந்து வித்தியாசமான யோசனைகளை எதிர்பார்த்துக்கொண்டே இருப்பார். அறைகுறை வாதங்களை அவரிடம் முன்னெடுக்க முடியாது. அவரது பார்வை தெளிவானதாக இருக்கும். உங்கள் பதில்களும் தெளிவானதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் உங்களை அவமானப்படுத்துவார். நீங்கள் அவரது கிடுக்கிப்பிடிகளுக்குத் தாக்குப்பிடித்து விட்டீர்கள் என்றால் உங்கள் மேல் நம்பிக்கை வைத்துவிடுவார். அவருடைய முழு நன்மதிப்பையும் பெறுவதற்கு நீங்களும் அவரைப்போலப் பைத்தியமாக இருக்க வேண்டும். இந்த விதி நிறுவனத்தில் பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் தெரியும். ஒவ்வொருவரும் அவருடைய சட்டதிட்டங்களைப் புரிந்துகொண்டனர்’ என்கின்றனர்.

அதேபோல, ‘ஒரு விஷயத்தை அடைவதற்கு நீங்கள் எந்த வழிமுறையைப் பின்பற்றுகிறீர்கள் என்பது பற்றி மஸ்க்குக்கு அக்கறை கிடையாது. அது சாத்தியமா சாத்தியமில்லாததா என்று சிந்திக்கவும் மாட்டார். அவருக்கு வேலை முடிய வேண்டும். அதற்காக நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவர் உங்களைக் கூர்ந்து கவனிப்பார். கேள்விகள் எழுப்புவார். நீங்கள் முன்வைக்கும் கருத்துக்களை அடி ஆழம் வரை சென்று புரிந்துகொள்ள விரும்புவார். வேலை முடிந்துவிட்டது என்றால் நீங்கள் சொன்ன வழி நல்ல வழிதான் என்று ஒப்புக்கொள்வார் அவ்வளவுதான்’ என்கின்றனர்.

மஸ்க்கின் சட்ட திட்டங்களால் ஒருபக்கம் வேலைகள் துரித வேகத்தில் நடைபெற்றாலும், சில ஊழியர்களால் அவர் கொடுக்கும் சிரமங்களைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்களால் சுதந்திரமாக ஒரு கருத்தைக்கூட முன் வைக்க முடியாமல் இருந்தது. எபர்ஹார்ட் கிளம்பியவுடன் டார்பனிங்குக்கும் டெஸ்லாவின் சூழல் பிடிக்கவில்லை. உடலை வருத்தி, ஆன்மாவை எரித்து ஒரு காரை உருவாக்க அவர் விரும்பவில்லை. இதனால் எபர்ஹார்ட்டைத் தொடர்ந்து டார்பனிங்கும் நிறுவனத்தை விட்டு வெளியேறினார். வேறு சிலருக்கோ மின்சாரக் கார்கள்தான் பிரச்னையாகத் தோன்றியது. அதற்குப் பதில் எரிபொருள் கார்களையே தயாரிக்கலாம் என மஸ்க்குக்கு ஆலோசனை சொல்லி வாங்கிக்கட்டிக்கொண்டு வெளியேறினர். சூழல் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் மஸ்க்கின் மீது நம்பிக்கை வைத்திருந்த சிலர் அங்கேயே இருந்தனர்.

பல ஆளுமைகள் டெஸ்லாவில் இருந்து விலகியது அந்த நிறுவனத்திற்கு முதலில் பின்னடைவை ஏற்படுத்தினாலும், இழப்பை ஈடு செய்வதற்குப் புதிய திறமைசாலிகள் வந்து சேர்ந்தனர். அந்நிறுவனத்தின் பெயரைக் கேட்டவுடனேயே விருப்பம் தெரிவித்துப் பல புத்திஜீவிகள் அந்நிறுவனத்தில் இணைந்தனர். இதில் பலர் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றியவர்களும் அடங்குவர். உண்மையில் அவர்கள்தான் ரோட்ஸ்டரை விற்பனைக்குக் கொண்டு வருவதில் இருந்த கடைசிக் கட்டச் சிக்கல்களைக் கண்டறிந்து நீக்குவதற்கு வழி அமைத்துக் கொடுத்தனர். ரோட்ஸ்டரை மக்களிடம் எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்று புரிந்து வைத்திருந்தனர். ஆனால் அப்போது டெஸ்லாவில் வேறு ஒரு பிரச்னை பூதாகரமாகிக் கொண்டிருந்தது. அதுதான் நிதிப் பிரச்சனை. 2008ஆம் ஆண்டு தொடங்கியவுடன் டெஸ்லா தன்னுடைய பெரும்பான்மை நிதியை எல்லாம் செலவழித்து இருந்தது. புதிதாகச் செலவு செய்யப் பணம் இல்லை. 2004இல் உருவாக்கப்பட்ட திட்டத்தில் ரோட்ஸ்டரைத் தயாரிக்க 25 மில்லியன் டாலர்கள் செலவாகும் எனச் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் 2008இல் அதன் உற்பத்திச் செலவு 140 மில்லியன் டாலர்களாக அதிகரித்து இருந்தது. இந்த நிதிப் பற்றாக்குறையை எப்படிச் சரி செய்வது என்பது பெரிய கேள்வியாக இருந்தது.

சாதாரண நாட்களாக இருந்திருந்தால் முதலீட்டாளர்களை அழைத்துப் பேசி மேலும் கொஞ்சம் நிதியைத் திரட்டி இருக்கலாம். ஆனால் அது சாதாரணச் சூழல் அல்ல. அசாதாரணமான நிலை. அதுதான் 2008இல் உருவாகி இருந்த மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி நிலை. 1930களுக்குப் பிறகு உலகம் பார்த்த பெரும் பொருளாதார மந்த நிலை. அப்படி ஒன்றை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த பெரும் நிறுவனங்களே இந்த நெருக்கடியில் சிக்கி திவாலாகும் நிலையில் இருந்தன. டெஸ்லா எல்லாம் எம்மாத்திரம்? இப்படி ஒரு சூழலில் முதலீட்டாளர்களைச் சமாதானம் செய்து சில லட்சம் டாலர்களைப் பெற முடியுமா? யாராக இருந்தாலும் இந்தச் சூழலில் ஒன்றுக்கும் ஆகாத ஒரு நிறுவனத்தை நம்பிப் பணம் கொடுக்க முன் வர மாட்டார்கள்.

மஸ்க்குக்கு இந்த நிலை பெரும் சவாலாக இருந்தது. அப்போது கார் நிறுவனங்கள் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் அவரை அச்சுறுத்துவதாகவே இருந்தன. மிகப்பெரிய மின்சாரக் கார் நிறுவனத்தை நடத்த அவர் முதலீடு செய்து இருக்கிறார். இப்போது திவாலாகும் நிலையில் உள்ள அந்த நிறுவனத்தைக் காப்பாற்ற முதலீட்டை எதிர்பார்க்கிறார். ஆனால் நிலைமையோ படுமோசமாக இருக்கிறது. மாபெரும் பொருளாதார மந்த நிலை வந்துவிட்டது. பொதுமக்களில் ஒருவர் கூட கார் வாங்க விரும்பவில்லை. பிறகு எப்படி முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்வார்கள்? இதுதான் மஸ்க்குக்கு ஏற்பட்ட சிக்கல். டெஸ்லா அழிவை நோக்கிச் செல்வதை அந்தச் சூழல் தெளிவாகக் காட்டியது.

இப்படி டெஸ்லாதான் வீழ்ந்து கிடக்கிறது என்றால், ஸ்பேஸ் எக்ஸும் அப்போது மிகப்பெரிய சிக்கல் ஒன்றில் இருந்தது. அவருடைய தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையோ அதல பாதாளத்தில் கிடந்தது. இப்படித் திரும்பிய பக்கமெல்லாம் அடி. ஒரு மனிதர் என்னதான் பண்ணுவார்? தன்னுடைய ஆன்மாவை விற்று வாழ்க்கையைக் காப்பாற்ற வேண்டிய சூழல். மஸ்க் உடைந்துபோய் இருந்தார். நம்பிக்கை அனைத்தையும் இழந்திருந்தார். வேறு யாராக இருந்தாலும் அப்படிப்பட்ட ஒரு சூழலில் ஒன்று பைத்தியம் பிடித்திருக்கும். இல்லை, தற்கொலை செய்திருப்பார்கள். ஆனால், மஸ்க் என்ன செய்தார் தெரியுமா?

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *