உங்களிடம் ஒரு கேள்வி. எலான் மஸ்க்கை முதன்முதலில் உங்களுக்கு எப்போது, எப்படித் தெரியும்? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இன்று எலான் மஸ்க் என்றால் பெரும்பாலும் எல்லோருக்கும் தெரியும். அவர் செய்யும் சேஷ்டைகள் அப்படி. அவர் மீது விழும் ஊடக வெளிச்சமும் அதிகம். ஆனால், சிறிது காலம் பின்னோக்கிச் சென்றால் 2007ஆம் ஆண்டுக்கு முன்பு எலான் மஸ்க் என்று ஒருவர் இருக்கிறார் என்பதே பலருக்குத் தெரியாது. அவரது துறை சார்ந்து இயங்கும் மக்கள், தொழில்முனைவோர் உள்ளிட்ட சிலருக்கு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம். ஆனால் சாதாரண வெகுஜன மக்களுக்கு, குறிப்பாக, அமெரிக்காவைத் தாண்டிய பிற நாடுகளில் உள்ளவர்களுக்கு அவரைத் தெரியவே தெரியாது. பில்கேட்ஸ் போலவோ, ஸ்டீவ் ஜாப்ஸ் போலவோ அவர் நாடுகள் தாண்டிச் சென்றடையவில்லை.
2007ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் அவரது புகழ் பட்டித் தொட்டியெங்கும் பரவத் தொடங்கியது. அதற்குக் காரணம் ஒரு காமிக் புத்தகக் கதாபாத்திரம். ஆம், மார்வெல் காமிக்ஸ் புத்தகங்கள், திரைப்படங்களில் வரும் டோனி ஸ்டார்க் என்கிற அயர்ன்மேன் கதாபாத்திரம். அயர்ன்மேன் கதாபாத்திரம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்தக் கதாபாத்திரம் பிறவி புத்திஜீவியாக இருக்கும். பல தலைமுறைகளுக்குப் பணம் வைத்திருக்கும். தொழில்நுட்பங்களில் புகுந்து விளையாடும். நிறையத் திமிர், ஆடம்பரத்தைத் தனது குணாதிசயமாகக் கொண்டிருக்கும். ஆனால் உலகை மாற்ற வேண்டும் எனக் கனவு காணும். பல்வேறு சாதனைகளைத் தனது அடையாளங்களாக்க விரும்பும். இன்றும் கூட சமூக வலைத்தளங்களில் எலான் மஸ்க்தான் நிஜ உலக டோனி ஸ்டார்க் என்று ஒப்பிடப்பட்ட நிறைய பதிவுகள் வருவதைப் பார்க்கலாம். இவ்வளவு ஏன் அயர்ன் மேன் 2 திரைப்படத்தில்கூட எலான் மஸ்க் நடித்திருப்பார். 2018ஆம் ஆண்டு ‘தி ரியல் லைஃப் அயர்ன் மேன்’ என்று எலான் மஸ்க்கைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றுகூட வெளியானது. இதன்பிறகுதான் அவர் உலகம் முழுவதும் வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டார்.
2007ஆம் ஆண்டு தொடக்கத்தில் லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்தில் அயர்ன் மேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருந்தது. அயர்ன்மேன் பணக்காரர், ராக்கெட் தொழில்நுட்பங்களில் நிபுணர் என்பதால் அவரது அலுவலகத்தை உருவாக்குவதற்காக முன்னாள் தொழில் அதிபரும் விண்வெளி நிறுவன ஒப்பந்தக்காரருமான ஹாவர்ட் ஹூக்ஸின் அலுவலகம் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது. அந்த இடத்திற்கு அயர்மேனில் டோனி ஸ்டார்க்காக நடிக்க இருந்த நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர் வருகை தந்தார். அந்த இடம் பல சாதனைகளைப் புரிந்துவிட்டு மறைந்த மிகப்பெரிய ஆளுமையின் நினைவுகளைத் தாங்கி நின்றது. ராபர்ட் டவுனி ஜூனியர் மெய் சிலிர்த்துப் போனார். கிட்டத்தட்ட அவர் நடிக்க ஏற்றுக்கொண்ட கதாபாத்திரமும் அதேபோன்றதுதான். பிரமாண்டக் கனவுகளைக் கண்ட, விமானத்துறையை உலுக்கிப்போட்ட, எல்லாவற்றையும் தனக்கென உரிய பாணியில் செய்த ஹாவர்ட்டைப் பற்றி ராபர்ட் டவுனி படித்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் அவருக்கு எலான் மஸ்க் பற்றி நண்பர்கள் மூலம் தெரிய வந்தது. ஹாவர்ட் மறைந்துவிட்டார். ஆனால் எலான் மஸ்க் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவரது அலுவலகம் வெறும் 10 மைல்கள் தூரத்தில்தான் இருக்கிறது என்று அவரது நண்பர்கள் சொன்னார்கள். மஸ்க் தனது சொந்த முயற்சியால் ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி, உலகை மாற்றி வருகிறார் என்று கேள்விப்பட்டவுடன் அவரைப் பார்ப்பதற்கு ராபர்ட் டவுனிக்கு ஆர்வம் மேலிட்டது. உடனே கிளம்பிவிட்டார்.
அங்கே ராபர்ட் டவுனி கண்ட காட்சிகள் அவரை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. ஸ்பேஸ் எக்ஸ் அலுவலகம் பார்ப்பதற்கு அத்தனைக் கவர்ச்சிகரமாக இருந்தது. ஊழியர்கள் உற்சாகமாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். பிரமாண்ட ராக்கெட்டுகள் அலுவலகத்தில் ஆங்காங்கே நின்றுகொண்டிருந்தன. இத்தனை நாட்கள் ஸ்பேஸ் எக்ஸ் பற்றித் தெரியாமல் இருந்துவிட்டோமே என்று ராபர்ட் டவுனி ஆச்சரியப்பட்டார். ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் உலக நாடுகளுக்கு இணையாக ராக்கெட்டுகளைத் தயாரிக்கிறதா என்று வாய் பிளந்தார். அங்குள்ள ஊழியர்களிடம் மஸ்க்கைப் பற்றிக் கேட்டறிந்தார். மஸ்க்கின் அறிவாற்றல், விநோதச் செயல்பாடுகள் குறித்து அங்கே உள்ளவர்கள் சொன்ன கதைகள் அவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தை டவுனிக்கு ஏற்படுத்தியது.
தன்னுடைய டோனி ஸ்டார்க் கதாபாத்திரத்தைத் திரையில் கொண்டு வருவதற்கு மஸ்க்கின் ஆளுமையை உள்வாங்க வேண்டும் என டவுனி விரும்பினார். அவருடன் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்தார். மஸ்க்கின் தோற்றமே டவுனியை வசீகரித்தது. உயரமான, சுறுசுறுப்பான, எப்போதும் அறிவார்ந்த உரையாடல்களைத் தொடங்கும் மஸ்க்கை டவுனிக்குப் பிடித்துப்போனது. அவருடைய திறமைகளை, திட்டங்களைக் கேட்டறிந்தார். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா ஆகியவற்றின் செயல்பாடுகளைத் தெரிந்துகொண்டார். டெஸ்லாவின் ரோட்ஸ்டர் தயாரிப்புப் பணிகளை நேரில் சென்று பார்த்தார். அவருக்கு, தான் நடிக்க இருக்கும் டோனி ஸ்டார்க் கதாபாத்திரத்தை நேரில் காண்பதுபோலவே இருந்தது. மஸ்க்கின் பாசாங்கு இல்லாத, இயல்பான விநோதத்தனம் அவரைக் கவர்ந்தது. குறிப்பாக யதார்த்தத்தைத் தாண்டிய சில லட்சியங்களுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட மஸ்க்கின் குணாதிசயமும் அவரை ஈர்த்தது. இனியும் தாமதிக்க டவுனி விரும்பவில்லை.
நேராக அயர்ன்மேன் தயாரிப்பு நிறுவனத்திடம் சென்ற அவர், அப்படத்தின் இயக்குநரைச் சந்தித்து டோனி ஸ்டார்க் கதாபாத்திரத்தின் வீட்டில் எலான் மஸ்க் தயாரித்து வரும் டெஸ்லா ரோட்ஸ்டர் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன, ஒன்று, டோனி ஸ்டார்க் ஆடம்பர விஷயங்களை விரும்பும் கதாபாத்திரம் என்பதால் விற்பனைக்கு வருவதற்கு முன்பே டெஸ்லாவின் ரோட்ஸ்டரை அது வாங்கிவிட்டது என்பதைக் காட்டுவதற்காக. இரண்டாவது, ஸ்டார்க் கதாபாத்திரத்தின் மூலம் எலான் மஸ்க்குக்கு அவர் தர இருந்த மரியாதை. ஸ்டார்க்கின் தனி அறையில் டெஸ்லா கார் இடம்பெறுவதன் மூலம் அந்தக் கதாபாத்திரத்திற்கும், டவுனிக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையே ஒரு உணர்வுப்பூர்வமான பிணைப்பை உண்டாக்க டவுனி விரும்பினார். ஒருவேளை டோனிஸ்டார்க் நிஜ உலகில் யாருடனாவது நட்பாக இருக்க விரும்பினால் அது எலான் மஸ்க்காகத்தான் இருக்கும். இருவரும் சேர்ந்தால் பல சாகசங்களைச் செய்து முடிப்பார்கள் என்றார்.
அவர் விரும்பியதுபோலவே திரைப்படத்தில் டெஸ்லா ரோட்ஸ்டர் இடம்பெற்றது. 2008ஆம் ஆண்டு அயர்மேன் வெளியாகி வசூலில் பட்டையைக் கிளப்பியது. உலகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அந்தப் படம் குறித்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில், டோனி ஸ்டார்க் கதாபாத்திரத்தை திரையில் கொண்டு வருவதற்கு உண்மையில் ஊக்கமளித்தது எலான் மஸ்க் என்ற நபர்தான் என்று அத்திரைப்படத்தின் இயக்குநர் ஃபவ்ரேவு தெரிவித்தார். அவ்வளவுதான், ஹாலிவுட் உலகமே யார் இந்த மஸ்க் எனத் தேடத் தொடங்கியது. காமிக்ஸ் ரசிகர்கள், திரைப்பட ரசிகர்கள் எல்லோரும் மஸ்க்கைப் பற்றித் தேடத் தொடங்கினர். அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என அறிய விரும்பினர். ஊடகங்கள், பத்திரிகைகள் எல்லாம் எலான் மஸ்க், டோனி ஸ்டார்க்குக்கு இடையே இருக்கும் 10 பொருத்தங்கள் என்பது போன்ற தலைப்புகளில் கட்டுரைகளைப் பிரசுரித்தன. இணையத்தில் எலான் மஸ்க்கைப் பற்றி ஏகப்பட்ட காணொளிகள் வெளியாகின. எலான் மஸ்க் வாழ்க்கையில் இந்த விஷயம் பல்வேறு விதங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது. எலான் மஸ்க்கின் பிம்பம் பொதுமக்கள் மத்தியில் நாடுகள் தாண்டிப் பிரபலம் அடையத் தொடங்கியது. அவரைப் பேபால் இணை நிறுவனர் என்று மட்டுமே அறிந்து வந்த உலகம், தற்போது டெஸ்லா, ஸ்பேஸ் எஸ்குக்குப் பின்னால் இருக்கும் பணக்காரர் என்ற அந்தஸ்தை வழங்கத் தொடங்கியது. அயர்ன் மேன் மூலமாக அவர் அடைந்த புகழ் உண்மையில் கொஞ்சம் நஞ்சம் அல்ல. அவரும் அதை விரும்பத் தொடங்கினார். மஸ்க்குக்குத் தன்னுடைய பிம்பம் உயர்வது பிடித்திருந்தது. அதன்மூலம் ஏற்படும் செருக்கு அவரைப் பித்துப் பிடிக்க வைத்தது. அதனால் தனது பிம்பத்தை ஊதிப் பெரிதாக்கும் வேலையில் மஸ்க் இறங்கினார்.
ஹாலிவுட்டில் தன்னுடைய பெயர் எட்டுத்திசையும் ஒலிக்க வேண்டும் என நினைத்த மஸ்க், பெரும் படைப்பாளிகள், இயக்குநர்கள், இசைத் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் ஆகியோரை அடிக்கடிச் சந்தித்தார். அவர்கள் தங்கும் பகுதியில் வீடு ஒன்றை வாங்கி மனைவி ஜஸ்டினுடன் குடியேறினார். தன்னுடைய சகாக்களுடன் இணைந்து ‘Thank You for Smoking’ என்கிற ஹாலிவுட் படத்தையும் தயாரித்தார். அந்தப் படத்தில் வேலைக்காரனாகவும் நடித்தார். தனது தனியார் விமானத்தை அந்தப் படத்தில் காட்டினார். படமும் ஹிட்டானது. கொஞ்சம் கொஞ்சமாக ஹாலிவுட்டின் பிரத்யேக வாழ்க்கையில் ஈடுபடத் தொடங்கினார். ஹாலிவுட் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்றார். தன்னை டோனி ஸ்டார்க்காகவே விருந்துகளில் உருவகப்படுத்தினார். தான் 90 சதவிகிதம் பொறியாளர் என்றும், 10 சதவிகிதம் காதல் மன்னன் என்றும் பேட்டியளித்தார். ஹாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களான லியனர்டோ டி காப்ரியோ, பாரிஸ் ஹில்டன் போன்றவர்களுக்கு விருந்து வைத்து அவர்களுடன் நட்பு மேற்கொண்டார். கூகுளின் இணை நிறுவனர் லேரி பேஜ், உலகப் பணக்காரர்களில் ஒருவரான ரிச்சர்ட் பிரான்ஸனின் தனியார் கரீபியன் தீவில் திருமணம் செய்தபோது, அங்கே அழகுப்பெண்கள் சூழ நடுவில் அமர்ந்து மஸ்க் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இப்படித் தன்னைப் பணக்காரராக, காதல் மன்னனாக, முக்கிய ஆளுமையாக விளம்பரப்படுத்தியபடி இருந்தார்.
மஸ்க்குடன் அவருடைய மனைவி ஜஸ்டீனும் இந்த ஆடம்பரங்களை அனுபவித்தார். ஜஸ்டீன் ஏற்கெனவே மாயாஜாலக் கதைகளை எழுதும் எழுத்தாளர் என்பதால், மஸ்க்கின் புகழைப் பயன்படுத்தி தானும் பெயர் பெற விரும்பினார். அவர் மஸ்க்குடனான தனது திருமண வாழ்க்கையை அவ்வளவு துல்லியங்களுடன் இணையத்தில் எழுதத் தொடங்கினார். பெண் காமிக்ஸ் கதாபாத்திரங்களில் மஸ்க்குக்கு யாருடன் டேட்டிங் செல்லப் பிடிக்கும் என்ற ஒரு கட்டுரையை எழுதினார். நடிகர் லியனார்டோ டி காப்ரியோ இலவசமாக ரோட்ஸ்டர் காரைக் கேட்டு மஸ்க்கிடம் கெஞ்சியதாக எழுதினார். இப்படியே மஸ்க்கின் அந்தரங்க வாழ்க்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக ஜஸ்டீன் வெளிக் கொண்டு வந்தார். ஆனால் பிரபலங்களின் பெயர் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக அவர்களுக்குப் புனைவுப் பெயர் வைத்துக்கொண்டார். கிட்டத்தட்ட கிசுகிசு பாணியில் அந்தக் கட்டுரைகள் அமைந்தன.
மஸ்க் அப்போது புகழ் வெளிச்சத்தில் இருந்ததால், அவரைப் பற்றி வெளியாகும் கட்டுரைகளை மக்கள் தேடித்தேடி வாசித்தனர். ஜஸ்டீனின் இணையதளம் லட்சக் கணக்கான வாசகர்களால் தேடப்பட்டது. குறிப்பாக மஸ்க்கின் அந்தரங்க வாழ்க்கையைத் தெரிந்துகொள்ளப் பலர் ஆர்வம் காட்டினர். முதலில் மஸ்க்கின் விநோத குணாதிசயங்களைப் பற்றி எழுதிய ஜஸ்டீன் கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய அந்தரங்கச் சமாச்சாரங்களுக்குள் நுழையத் தொடங்கினார். மஸ்க்குக்கும் சில முக்கிய ஆளுமைகளுக்கும் இடையே இருந்த பிரச்னைகள், மஸ்க் அவர்களைப் பற்றி வீட்டில் எப்படித் தரக்குறைவாகப் பேசுவார் என்பதை எல்லாம் புட்டுப்புட்டு வைத்தார். இதன் தொடர்ச்சியாகக் குளியலறையில், படுக்கையறையில் மஸ்க்கின் நடவடிக்கைகள் குறித்தும் கட்டுரைகள் வெளி வந்தன. மனைவியின் நடவடிக்கைகளில் பெரிதும் கவனம் செலுத்தாத மஸ்க், இந்த விஷயங்களைக் கவனிக்கத் தவறிவிட்டார். ஆனால் அதுவே அவரது தனிப்பட்ட வாழ்க்கையை நரகத்திற்குள் இட்டுச் செல்லும் பாதையாக உருவாக்கிக் கொடுத்தது.
(தொடரும்)