மிகப் பெரிய ஆளுமைகளுக்கு இருக்கக்கூடிய பிரச்னைகளே இதுதான். அவர்களின் ஒவ்வொரு அசைவும் ஊடகங்களால் கண்காணிக்கப்படும். தூங்கி எழுவதில் இருந்து, படுக்கைக்குச் செல்லும் வரை ரகசியக் கண்கள் அவர்களை உற்றுநோக்கியபடி இருக்கும். ஏதாவது ஒரு அசைவு தெரிந்தால்போதும் செய்தி காட்டுத் தீயாய் பரவி விடும். இணைய உலகத்தில் சாதாரண நிலையில் இருப்பவர்களுக்கே இந்த நிலைமை என்றால், எலான் மஸ்க் போன்ற ஒரு நபர் கிடைத்தால் ஊடகங்கள் சும்மா இருக்குமா? முதலில் எல்லாம் நல்லபடியாகத்தான் தொடங்கியது. அவரது வெற்றிக் கதைகளை ஊடகங்கள், பத்திரிகைகள் பிரசுரித்து வந்தன. இணையதளங்கள் தொடங்கியதன் மூலம் பணக்காரரானவர், லாபகரமான பேபால் நிறுவனத்தை உருவாக்கியவர் என்று அவர் மீது வீசப்பட்ட ஊடக ஒளி பிரகாசமாக மிளிரிக்கொண்டிருந்தது.
மஸ்க்கின் வெற்றிக்குப் பின் இருக்கும் தெரியாத பக்கங்கள், அவரது விசித்திரக் குணநலன்கள், அவர் மேற்கொண்ட சாகசங்கள் என ஊடகங்கள் எழுதித் தள்ளின. அவருடைய பெயர், காணும் திசையெல்லாம் தென்பட்டது. ஸ்பேஸ் எக்ஸில் தயாரிக்கப்படும் விண்வெளிச் சாதனங்களுக்கு, ராக்கெட்டுகளுக்கு அவர் செலவிடும் தொகை, மின்சாரக் கார்கள் மீது அவருக்கு இருக்கும் அளவில்லாக் காதல், எல்லோரையும் வசீகரிக்கும் தோற்றம், அனைத்தையும் துச்சமென நினைக்கும் தைரியம், வாய் பிளக்க வைக்கும் அறிவாற்றல் ஆகிய ஒவ்வொன்றும் செய்திகளாகின.
பிரிட்டிஷ் பத்திரிகை ஒன்று அவரிடம் இருக்கும் கார்கள் அத்தனையையும் பட்டியலிட்டு ஒரு கட்டுரை எழுதி இருந்தது. மற்றொரு ஊடகம் அவரிடம் சோவியத் விமானம் இருப்பதாக எழுதியது. சிலிகான் பள்ளத்தாக்கு நிறுவனங்கள் குறித்து எழுதும் பத்திரிகையாளர்கள் டெஸ்லாவின் ஒவ்வொரு அசைவையும் செய்திகளாக மாற்றிக்கொண்டிருந்தனர். மற்றொருபுறம் ஸ்பேஸ் எக்ஸ் என்கிற இளம் கன்று, போயிங், லாக்ஹீட், நாசா ஆகிய விண்வெளி நிறுவனங்களைத் தூக்கிப் பந்தாடுவதாகச் செய்திகள் வெளியாகின. இப்படியே மஸ்க்கின் செல்வாக்கு உயரம் சென்றுகொண்டே இருந்தது. ஆனால், உயரப் பறப்பவர்கள் கீழே இறங்கித்தானே வந்தாக வேண்டும்? அதுமட்டுமில்லாமல் உயரப் பறப்பது என்பது ஒரு திறன். உயரப் பறக்கத் தெரிந்தவர்கள், தரை இறங்கவும் தெரிந்திருக்க வேண்டும். அதற்கான திட்டம் இல்லாமல் பறந்தால் கீழே விழ வேண்டியதுதான். இதுதான் மஸ்க்குக்கும் நடந்தது.
இரண்டு விஷயங்கள் மஸ்க்கின் புகழைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டன. ஒன்று, அவரது தொழில்.
பொதுப் பார்வையில் மஸ்க்கின் பிம்பம் வளர, வளர அவரது தொழில்கள் சரிய ஆரம்பித்தன. வீழ்ச்சியடைந்து வரும் நிறுவனங்களின் வளர்ச்சியைக் குறித்து மஸ்க் கவலைகொள்ளத் தொடங்கினார். அப்போதுதான் ஸ்பேஸ் எக்ஸின் ஃபால்கன் 1 ராக்கெட்டின் இரண்டாவது முயற்சி தோல்வி அடைந்திருந்தது. அடுத்த முயற்சியைத் தொடங்குவதற்கு இடையில் ஏகப்பட்ட சிக்கல்கள் முளைத்தன. இன்னொரு பக்கம் டெஸ்லாவில் இருந்து வரும் அறிக்கைகள் கவலையளிக்கக்கூடியதாக இருந்தன. ரோட்ஸ்டர் தயாரிப்பு திணறிக் கொண்டிருந்தது. மஸ்க் தனது சொத்துக்களில் இருந்து 200 மில்லியன் டாலர்களுக்கு மேல் செலவழித்து இரு நிறுவனங்களையும் நடத்திக் கொண்டிருந்தார். ஆனால் இரு நிறுவனங்களும் அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்து அவருக்குத் தலைவலியை ஏற்படுத்தி வந்தன. ராக்கெட் பறக்கவும், ரோட்ஸ்டர் இயங்கவும் ஏற்பட்ட தாமதம் ஊடகங்களில் எதிர்மறையாகப் பிரதிபலிக்கத் தொடங்கியது.
அதுவரை மஸ்க்கின் வெற்றிக் கதைகளை மட்டுமே எழுதி வந்த ஊடகங்கள் இப்போது அவருக்கு எதிரான செய்திகளில் கவனம் செலுத்தத் தொடங்கின. ஒவ்வொரு முறை ரோட்ஸ்டர் வெளியாகத் தாமதமாகும்போதும் மஸ்க்கின் புகழும் பாதிப்படைந்தது. அவரால் சொன்ன தேதியில் கார்களையோ, ராக்கெட்டுகளையோ வெளிக் கொண்டு வர முடியாது என்று சொல்லப்பட்டது. ஒரு மாதம் முன்பு மஸ்க்கின் பெருமைகளைத் தீட்டியிருந்த பத்திரிகை ஒன்று, அவருக்கு எதிராகக் கட்டுரைகளை எழுதிக் குவித்தது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை டெஸ்லாவின் டிரான்ஸ்மிஷன் தோல்வி பற்றிப் பெரிய கட்டுரை ஒன்றைப் பிரசுரித்தது. வாகனம் தொடர்பான இணையதளங்கள், ரோட்ஸ்டர் விற்பனைக்கே வராது என ஆருடம் கூறின. சில இணையதளங்கள் மஸ்க்கின் பழைய வரலாற்றைத் தோண்டியெடுத்தன.
ஜிப்2, பேபால் நிறுவனங்களில் மஸ்க் தலைமைச் செயலதிகாரிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது மீண்டும் பேசப்பட்டது. ஓவன் தாமஸ் என்ற பத்திரிகையாளர், மஸ்க்கின் மீது தனிப்பட்ட தாக்குதல்களை நடத்தினார்.
‘மஸ்க் ஏமாற்றுவதில் விற்பன்னர். ரோட்ஸ்டர் தாமதமாவதற்கு அவரே முழுக் காரணம். மற்றவர்களின் பணத்தை வீணடிப்பதைப் பற்றி மஸ்க்குக்குக் கவலை கிடையாது. தன் சிறு வயதுக் கனவை எல்லாம் நனவாக்க வேண்டும் என்று யதார்த்தம் புரியாமல் ஆடுகிறார். அவருடைய பிடிவாதம் எல்லோருக்கும் நஷ்டம்’ என்றார்.
டெஸ்லாவைச் சுட்டிக்காட்டிய ஓவன் தாமஸ், 2007ஆம் ஆண்டில் தோல்வி அடைந்த தொழில்நுட்ப நிறுவனங்களிலேயே டெஸ்லா நம்பர் 1 இடத்தைப் பிடித்திருக்கிறது எனக் கிண்டலடித்து இருந்தார். ரோட்ஸ்டர் காரைக் குப்பை என்று கிழித்துத் தள்ளினார்.
2008ஆம் ஆண்டு தொடங்கியபோது மஸ்க்குடைய நிறுவனங்கள் சந்தித்த சிக்கல்கள் பூதாகரமாகின. டெஸ்லாவில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்னைகளால் அந்நிறுவனம் ரோட்ஸ்டர் தயாரிப்பை முதலில் இருந்து தொடங்க வேண்டியதாக இருந்தது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமோ தனது ஊழியர்களை குவாஜலின் தீவுக்கு அனுப்பி ஃபால்கான் 1 ராக்கெட்டை ஏவுவதற்குப் பாடுபட்டுக்கொண்டிருந்தது. இந்த இரண்டு நிகழ்வுகளும் மஸ்க்கின் வங்கியில் இருந்த பணத்தைச் சக்கையாகப் பிழிந்துகொண்டிருந்தன.
மஸ்க், காற்றில் கரையும் பணத்துக்குக் கடிவாளம் போட விரும்பினார். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்கள் என்னென்ன செலவுகள் செய்கின்றன என்று ஆராயத் தொடங்கினார். வீண் செலவுகளைத் தடுக்கும் பணிகளில் இறங்கினார். தனது ஊழியர்களுக்கு ஒரு பொருளை எப்படி அடித்துப்பேசி வாங்க வேண்டும் எனப் பாடம் எடுத்தார். வெளியே இருந்து வாங்கும் செலவுகளைக் குறைப்பதற்குத் தேவையான பொருள்களை அந்தந்த நிறுவனங்களையே உருவாக்கச் சொன்னார். இதுபோன்ற கட்டுப்பெட்டித் தனங்களால் ஊழியர்கள் கூடுகள் பொறுப்புகளைச் சுமக்க வேண்டியதாக இருந்தது. அது அவர்களின் தலையில் சுமையாக விடிந்தது.
தினம் தினம் புதிய திட்டங்கள் தீட்டப்பட்டு உத்தரவுகள் பறந்தன. ஊழியர்கள் இதனால் நெருக்கடிகளுக்கு உள்ளாகினர். எலான் மஸ்க்கும் நேரம் காலம் பார்க்காமல் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடப் பணியாற்றிக்கொண்டிருந்தார். ஸ்பேஸ் எக்ஸ் தொடங்கியபோது அந்நிறுவனம் 10 ஆண்டுகளில் தினமும் பத்து மில்லியன் டாலர்களைச் சம்பாதிக்கும் என மதிப்பிட்டிருந்தார். ஆனால், முதற்கட்ட இலக்கையே அந்த நிறுவனம் அடைய முடியாமல் தவித்தது. ஒவ்வொரு நாளும் பணிகள் தாமதமாகும்போதும் ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவாகின. மஸ்க்குக்குத் தனிப்பட்ட வாழ்விலும் பொருளாதாரச் சிக்கல் ஏற்படத் தொடங்கி இருந்தது. பணத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அவர் தனக்குப் பரிசாக வந்த மெக்லரென் காரை விற்றிருந்தார். சொந்த விமானத்தில் பயணம் செய்வதையும் தவிர்த்தார்.
ஒரு பக்கம் தொழில்ரீதியாக அடி என்றால் மற்றொருபுறம் அவரது குடும்ப வாழ்க்கையும் சீர்குலையத் தொடங்கியது. 2006ஆம் ஆண்டிலேயே குடும்பப் பிரச்னை தொடங்கிவிட்டது. அந்த ஆண்டில் ஜஸ்டீனுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தன. குழந்தைப் பிறப்புக்குப் பின்னான உடல் நலப் பிரச்னைகளால், மன அழுத்தத்தால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்குக் கணவரின் அரவணைப்புத் தேவைப்பட்டது. அதை மஸ்க் வழங்காதபோது அது திருமண உறவில் விரிசல் ஏற்படுத்தத் தொடங்கியது. மஸ்க்கும் முழு நேரமாக அலுவலகமே கதி என்று கிடந்ததால் அவர் ஜஸ்டீனிடம் மனம் விட்டுப் பேசுவதற்குக்கூட நேரம் செலவிடவில்லை.
ஜஸ்டீனுக்கோ மஸ்க்கைக் கேள்வி கேட்கவும் முடியவில்லை. தன்னுடைய கவலைகளை, அழுத்தத்தை யாரிடமாவது சொல்லி ஆறுதல் அடையவும் தெரியவில்லை. சொந்தக் கவலைகளில் இருந்து மனதைத் திசைத் திருப்புவதற்காகத்தான் அவர் வலைத்தளத்தில் எழுதத் தொடங்கினார். அதன்மூலம் கிடைத்த புகழ் தற்காலிகமாக அவருக்கு ஆறுதல் அளித்தது. முதலில் மஸ்க்கின் பெருமைகளை மட்டுமே எழுதி வந்த அவர் கொஞ்சம் கொஞ்சமாக அவரது அந்தரங்க வாழ்க்கைக்குச் சென்று, பின் மஸ்க்குடனான பிரச்னைகளையும் எழுதத் தொடங்கினார்.
‘மஸ்க்குக்கு மனைவியை எப்படிக் காதலிக்க வேண்டும் என்பது தெரியாது. அவரிடம் எப்படி அன்பைப் பரிமாற வேண்டும் எனத் தெரியாது. ஒரு அணிகலனைப்போல அவர் தேவைப்படும்போது என்னை உடுத்திக்கொண்டு கழற்றி வைக்கிறார். எனக்கு வெளி விஷயங்கள் தெரியாது என்பதுபோல நடத்துகிறார். நான் ஒரு நாவலாசிரியர் என்பதையும் அவர் மதிப்பதில்லை. கணவனுக்குச் சமமான உரிமை கொண்டவர் என்பதையும் அவர் கவனத்தில் கொள்ளவில்லை’ என ஜஸ்டீன் மஸ்க்குடனான பிரச்னையைக் குறித்து முதன்முதலில் எழுதினார்.
இதன்பின் மஸ்க் தன்னிடம் நடந்துகொள்ளும் முறைகள் குறித்துப் பதிவிடத் தொடங்கினார். செல்வந்தர்கள், பிரபலங்களுடன் உரையாடும்போது தன்னை மட்டம் தட்டுவதுபோலப் பேசுவது, தன்னுடைய திறமைகளை எள்ளி நகையாடுவது எனப் பல்வேறு குற்றச்சாட்டுக்களை அவர் அடுக்கிக்கொண்டே சென்றார். மஸ்க்கின் அந்தரங்க வாழ்க்கை குறித்துத் தேடி வந்த ஊடகங்களுக்கு ஜஸ்டீனின் எழுத்துக்கள் கச்சாப் பொருளாகின. இன்னும் வேறு ஏதாவது தகவல்கள் கிடைக்கின்றனவா எனத் தோண்டத் தொடங்கின. தன்னுடைய பெயர் ஊடகங்களில் தவறாகச் சித்தரிக்கப்படுவதைக் கவனித்த பின்தான் தன் மனைவி எழுதுவதையே மஸ்க் கண்டுகொண்டார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படத் தோன்றியது. அலுவலகங்களில் இருந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் ஜஸ்டினுடைய நடவடிக்கைகள் அவரைக் கோபம் கொள்ளச் செய்தன. வீட்டில் நேரம் செலவிடுவதையே மஸ்க் தவிர்க்க ஆரம்பித்தார். தனது குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்குப் பணிப் பெண்களை நியமித்தார். லாஸ் ஏஞ்சலெஸில் சில நாட்கள், சான் பிரான்ஸிஸ்கோவில் சில நாட்கள் என மாதம் முழுவதும் அலுவலகத்திலேயே கிடந்தார்.
இது ஜஸ்டீனுக்கு இன்னும் வேதனையைக் கூட்டியது. அவருக்கு ஒரு மாற்றம் தேவைப்பட்டது. ஒரு பொம்மை மனைவியைப்போல மஸ்க் தன்னை வைத்திருப்பதாக அவர் கருதினார். கல்லூரி நாட்களில் இருவரும் காதலிக்கத் தொடங்கிய புதிதில் இருந்த எலான் மஸ்க்கை மீண்டும் காண வேண்டும் என ஏங்கினார். தொடக்கக் காலத்தில் இருவருக்குள்ளேயும் இருந்த அன்பு, பரிமாற்றம் நீர்த்துப்போய் அவர்களது வாழ்க்கையே அழுத்தங்களுக்கு மத்தியில் உழல்வதாக இருந்தது. தனது வங்கித் தொகையைக்கூட மனைவியிடம் பகிர்ந்துகொள்வதை மஸ்க் நிறுத்தியிருந்தார்.
‘எங்களது குடும்பத்துக்கு ஆகும் செலவு என்ன என்பதைக்கூட எனக்குத் தெரியாமல் மஸ்க் மறைக்கிறார்’ என்று ஜஸ்டீன் புலம்ப ஆரம்பித்தார். அவரது வங்கிக்கணக்கில் இருந்த தொகை அத்தனையும் நிறுவனங்களுக்காகச் செலவழிக்கப்பட்டு வந்ததை மஸ்க் மனைவியிடம் சொல்லவில்லை.
அந்த நாட்களில் தனது நெருங்கிய நண்பரான ஆண்டனியோ கிராசியஸ் என்பவரிடம் மட்டும் மஸ்க் தனது வேதனைகளைப் பகிர்ந்து இருக்கிறார்.
‘எனக்கும் ஜஸ்டினுக்குமான உறவு கடினமாகிவிட்டது. ஆனாலும் நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம். எனது நிறுவனங்களும் மோசமான நிதிச் சிக்கலைச் சந்தித்து வருகின்றன. நான் என்னுடைய கடைசி டாலர் வரை நிறுவனங்களுக்காகச் செலவிடுவேன். பணம் இல்லாத நிலையில் என் வீட்டை விற்றுவிட்டு, ஜஸ்டீனின் பெற்றோர் இருக்கும் வீட்டின் நிலவறையில் குடியேறிவிடுவேன்’ என்று சொல்லியிருக்கிறார். தனது எதிர்காலம் என்னவாகுமோ என்று பயத்தில் அழுதிருக்கிறார்.
ஆனால் ஜூன் 16, 2008ஆம் தேதி ஜஸ்டீனுடனான அவரது உறவு முடிவுக்கு வந்தது. எலான் மஸ்க் ஜஸ்டீனிடம் விவாகரத்து வேண்டி விண்ணப்பித்தார்.
ஜஸ்டீனுக்கு மஸ்க்குடன் பிரச்னைகள் இருந்தாலும் அவருக்கு விவாகரத்து பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை. மஸ்க் மீண்டும் பழைய ஆளாக மாறி வந்து தம்முடன் இணக்கமாக வாழ வேண்டும் என்றுதான் அவர் விரும்பினார். அதனால் ஒவ்வொருமுறை பிரச்னைகள் எழும்போதும் அவர் பேசித் தீர்த்துக்கொள்வதற்குத்தான் முயற்சி செய்தார். திருமணப் பந்தத்தை மீண்டும் வலுவூட்டுவதற்காக மூன்று முறை கவுன்சிலிங் எல்லாம் சென்றுள்ளார். ஆனால் மஸ்க்குக்கு அந்த உறவை மேலும் தொடர்வதில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை. தொழிலில் அவர் எடுக்கும் முடிவுகளைப்போல வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்ற எண்ணத்திலேயே அவர் விவாகரத்தையும் அணுகினார்.
ஒரு நாள் இரவு மஸ்க், ஜஸ்டீனை அழைத்தார். ‘நம்மிடம் இரண்டு தேர்வுகள் இருக்கின்றன. ஒன்று, இன்றைக்கே நாம் எல்லாப் பிரச்னைகளையும் சரி செய்தாக வேண்டும். இல்லையென்றால் நாளையே விவாகரத்து செய்ய வேண்டும்’ என்றார்.
மஸ்க் பிரச்னைகளைப் பேசித் தீர்க்க விரும்புகிறார் என்று ஜஸ்டீன் நம்பிக்கையாக இருந்தார். மறுநாள் காலையில் ஜஸ்டீனிடம் சென்று என்ன முடிவு செய்திருக்கிறாய் எனக் கேட்டார் மஸ்க். ‘விவாகரத்துக்குச் செல்லும் அளவுக்கு நான் யோசிக்கவில்லை. நாம் மேலும் சில வாரங்களுக்கு விவாகரத்து முயற்சியைத் தள்ளிப்போடுவோம். பிரச்னைகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வோம்’ என்றார் ஜஸ்டின்.
மஸ்க்கும் தலையாட்டிவிட்டு ஜஸ்டீனின் தலையை வருடிக்கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். சரி, பிரச்னைகள் எல்லாம் முடிந்துவிட்டன என்று நினைத்த ஜஸ்டின், அன்று மாலை கடைக்குச் சென்றார். தேவையானவற்றை வாங்கிவிட்டு, கிரெடிட் கார்டை நீட்டினார். கிரெடிட் கார்ட்டை வாங்கிய கடைக்காரர் அதைப் பயன்படுத்தியபோது கார்ட் செல்லாது எனக் காட்டியது. மீண்டும் முயற்சித்தார். அதே தகவல். என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்தபோதுதான் ஜஸ்டீனுக்கு ஒரு வழக்கறிஞரிடம் இருந்து அழைப்பு வந்தது.
‘உங்கள் கணவர் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருக்கிறார். உங்களுக்கு வழங்கி வந்த அத்தனை வசதிகளையும் அவர் நிறுத்தச் சொல்லிவிட்டார். உங்கள் கிரெடிட் கார்டுக்கான அனுமதியையும் ரத்து செய்துவிட்டார்’ என்று சொல்லப்பட்டது. அப்போதுதான் தன்னுடைய கணவர் விவாகரத்துக்கு முடிவெடுத்து விட்டார் என்பதே ஜஸ்டீனுக்குத் தெரிந்தது. ஒருமுறை முடிவெடுத்துவிட்டால் அவ்வளவுதான். இனி பேசிப் பயனில்லை என்று ஜஸ்டீனுக்குப் புரிந்துவிட்டது. தனது விவாகரத்துக் குறித்துச் சிறு சிறு குறிப்புகளை வலைத்தளத்தில் வெளியிடத் தொடங்கினார்.
‘எந்த ஒரு பிரபலமும் தனது ஆசைகளை மற்றவர்களுக்காக விட்டுக்கொடுக்க விரும்புவதில்லை. விட்டுக் கொடுப்பவர்கள் பிரபலமாக இருப்பதில்லை’ என்று முதலில் எழுதினார். அடுத்த சில பதிவுகளில் தான் குடியேறுவதற்கு வீடு ஒன்றைத் தேடிக்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். பிறகு, தன்னுடைய வாழ்க்கையில் திருப்பங்களும், நாடகத்தனமான நிகழ்வுகளும் அரங்கேறிவிட்டதாக எழுதினார். இறுதியாக, வெளிப்படையாக, தனக்கு மஸ்க் விவாகரத்து வழங்கிவிட்டதாகக் கூறிவிட்டார்.
‘எங்கள் வாழ்க்கை நன்றாகச் சென்றுகொண்டிருந்தது. நாங்கள் சிறு வயதிலேயே திருமணம் செய்துகொண்டோம். எங்களால் முடிந்த அளவு எங்கள் வாழ்க்கையை எடுத்துச் சென்றோம். ஆனால் இப்போது எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது’ எனக் குறிப்பிட்டார்.
ஊடகங்களும் மஸ்க்கைப் பின் தொடர்ந்தன. மஸ்க் இருபது வயது நடிகை ஒருவரைக் காதலித்து வருவதாகக் கிசுகிசுக்கள் கிளம்பின. ஜஸ்டீனும் இதை உறுதி செய்து, அந்த நடிகைதான் மஸ்க்கை இரண்டாவது திருமணம் செய்துகொள்ளப்போவதாகப் பேட்டியளித்தார். தங்கள் திருமணம் எப்படி வீழ்ச்சியைச் சந்தித்தது என விவரித்தார். விவாகரத்து விஷயங்களில் இருவரும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைப் பற்றிப் பேசினார்.
அதுவரை மஸ்க்கைச் சாகசக்காரராக மட்டுமே பார்த்து வந்த பொதுமக்களுக்கு அவருடைய வேறொரு முகத்தைக் காண்பதற்கு ஜஸ்டினின் மூலம் வழி கிடைத்தது. ஊடகங்கள் அவரது விவாகரத்துச் செய்திகளை ஊதிப் பெரிதாக்கின. பிரபலங்களின் விவாகரத்து தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று மஸ்க்குக்கு எதிரான கருத்துகளை ஜஸ்டீன் பேசத் தொடங்கினார். செய்தித்தாள்களில் வானிலை அறிக்கை, பங்குச்சந்தைகள் வருவதுபோல மஸ்க்கின் விவாகரத்து தொடர்பான செய்திகளும் தினசரி இடம்பெற்றன.
மஸ்க்குக்கும் ஜஸ்டீனுக்கும் இடையே எழுந்த பிரச்னைகளை, ‘நீதிக்கான போராட்டம்’ என்ற வகையில் ஊடகங்கள் வெளியிட்டன. திருமணத்துக்குப் பிறகு மஸ்க்கிடம் இருந்து ஜஸ்டீனுக்குக் கிடைக்கப்போகும் ஜீவனாம்சம் தொகை எவ்வளவு என நேரலையில் விவாதங்கள் நடத்தின. ஜஸ்டீனும் தனக்கு வேண்டிய தொகையை வலைத்தளங்களில் குறிப்பிட்டார்.
‘இப்போது நாங்கள் குடியிருக்கும் வீட்டை எனக்கு வழங்க வேண்டும். ஜீவனாம்சம் தொகை, குழந்தைகள் வளர்ப்புக்கு ஒரு தொகை என 6 மில்லியன் டாலர்கள் வேண்டும். மஸ்க்கின் டெஸ்லா பங்குகளில் 10 சதவிகிதம், ஸ்பேஸ் எக்ஸ் பங்குகளில் 5 சதவிகிதம், ரோட்ஸ்டர் விற்பனைக்கு வந்தவுடன் அதில் ஒரு கார் வேண்டும்’ எனக் குறிப்பிட்டு இருந்தார். மஸ்க் இதனைத் தர முடியாது என மறுக்கவே, ஊடகங்கள் அதையும் எழுதிப் பெரிதாக்கின. பொதுமக்கள் ஜஸ்டீனுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவிக்கத் தொடங்கினர். இவ்வளவு பெரிய பணக்காரர் அவரது மனைவி கேட்கும் இத்தனைச் சிறிய வேண்டுகோளைக் கூடவா பரிசீலிக்க முடியாது எனச் சமூக வலைத்தளங்களில் கிழிக்கத் தொடங்கினர். ஜஸ்டீனுடனான தனிப்பட்ட பிரச்னை மஸ்க்கின் பொது பிம்பத்தை வெகுவாகப் பாதித்தது. அந்தப் பாதிப்பு அவரது நிறுவனங்கள் சந்தித்து வரும் பிரச்னையிலும் எதிரொலிக்கத் தொடங்கியது. அவர் திட்டமிட்டு கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கி இருந்த பிம்பங்கள் சுக்குநூறாக உடையத் தொடங்கின.
ஜஸ்டீன் கேட்பதை மஸ்க் நினைத்திருந்தால் கொடுக்கச் சம்மதித்து இருக்கலாம். ஆனால் சிக்கல் என்னவென்றால் அவரிடமுள்ள சொத்துக்கள் எதுவும் பணமாக இல்லை. எல்லா மதிப்பும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸின் பங்குகளாக இருந்தன. அப்போது அந்த நிறுவனங்களின் நிதிச் சிக்கல்களுக்கு மத்தியில் அத்தகைய தொகையை அவரால் வழங்க முடியுமா என்று தெரியாமல் இருந்தது. ஜஸ்டீன் வழக்குத் தொடர்ந்தார். சில மாதங்கள் வழக்கு நடைபெற்றது. இறுதியில் ஜஸ்டீனுக்கு அவரது வீட்டை வழங்குவதாக மஸ்க் ஒப்புக்கொண்டார். அத்துடன் 2 மில்லியன் தொகை, மாதம் 80,000 டாலர்கள் ஜீவனாம்சம், 17 ஆண்டுகளுக்குக் குழந்தைகளை வளர்ப்பதற்கான ஆதரவு, இறுதியாக ஒரு டெஸ்லா ரோட்ஸ்டர் காரை வழங்குவதாக முடிவானது.
திருமண முறிவுக்குப் பின்பும்கூட மஸ்க்கைப் பற்றி ஜஸ்டீன் தனது வலைத்தளத்தில் தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் இருந்தார். தனது குழந்தைகளைப் பற்றிப் பேசும்போது, மஸ்க் அவர்களுக்குச் சிறிதும் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவில்லை எனக் குற்றம்சாட்டுகிறார்.
‘எலான் மஸ்க் ஒரு கடுமையான மனிதர். அவர் கடினமான வாழ்க்கைச் சூழலில் வளர்ந்தவர். அந்தச் சூழல்தான் தனக்கு ஆளுமையை வழங்கியதாக நம்புகிறார். அத்தகைய ஆபத்தான சூழல்களைச் சந்திக்கும் நபர்களே உலகை வெற்றிகொள்ள முடியும் என்கிறார். அதனால் எங்களுடைய குழந்தைகளைக்கூட வசதியாக வளர்க்க அவர் விரும்பவில்லை. செல்லம் கொடுக்கப்பட்டு வசதி வாய்ப்புடன் வளரும் குழந்தைகள் போராடும் குணத்தைப் பெற மாட்டார்கள் எனக் கூறி அவர்களிடம் கடுமையாகவே நடந்துகொள்கிறார்’ என்கிறார் ஜஸ்டீன்.
இன்றும்கூட ஜஸ்டின் மஸ்க்கைப் பற்றி பேசும்போது, அவர்களுக்கு இடையே இருந்த காதல் மறைந்ததை நினைத்து வேதனைப்படுவதாகச் சொல்கிறார். மஸ்க் பல விஷயங்களைத் தன்னிடம் இருந்து மறைத்ததாகவும், தன்னை வெற்றிகொள்ள வேண்டிய எதிரியைப்போல நடத்தியதாகவும் குறிப்பிட்டார்.
‘எங்களுக்கு இடையில் யுத்தமே நடைபெற்றுக்கொண்டிருந்தது. மஸ்க்குக்கு எதிராக யுத்தம் செய்ய முயன்றால் நீங்கள் பேரழிவைச் சந்திக்க வேண்டியது இருக்கும். அதுதான் எனக்கு நடந்தது’ என்கிறார் ஜஸ்டீன்.
(தொடரும்)