மஸ்க்கின் அந்தரங்க வாழ்க்கை சிக்கலானது. அவருக்கு இதுவரை பத்துக் குழந்தைகள் இருக்கின்றனர். உலகை வெற்றிகொள்வதுதான் அவரது நோக்கம் என்றாலும்கூட இல்லற வாழ்க்கையிலும் சமரசம் செய்துகொள்ளாதவர். காதலால் ஏற்பட்ட வலியை மற்றொரு காதல்தான் போக்கும் என்பதுபோல ஜஸ்டீனுடனான மண முறிவை மற்றொரு திருமணம் மூலம்தான் அவர் சரி செய்துகொண்டார். எலான் மஸ்க்கின் முதல் மனைவியைவிட இரண்டாவது மனைவிதான் பிரபலமானவர். காரணம், அவர் ஒரு நடிகை. ஆம், எலான் மஸ்க் ஒரு நடிகையுடன் சுற்றுவதாக ஊடகங்கள் கிசுகிசுத்ததல்லவா அதே நடிகைதான். அந்த நடிகையைச் சந்தித்துக் காதல் கொண்டதையும் நாம் சுருக்கமாகப் பார்த்துவிடலாம்.
ஜூன் 2008 வாக்கில் எலான் மஸ்க் ஜஸ்டீனுக்கு எதிராக விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தார். குடும்பம், தொழில் இரண்டும் தடுமாறிக்கொண்டிருந்ததை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உடைந்துபோன அவர் தன்னுடைய நண்பர் பில் லீ என்பவரது வீட்டில்தான் தங்கி இருந்தார். பில் லீயும் ஒரு தொழிலதிபர்தான். எலான் மஸ்க்கின் நெருங்கிய நண்பர். மஸ்க் தனது ஆத்ம விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு நெருக்கமானவர். பில் லீக்கு எலான் மஸ்க்கின் அப்போதைய நிலை கவலை அளித்தது. இப்படியே இருந்தால் எங்கே மன அழுத்தத்தில் விபரீதமாகச் செய்துகொள்ளப்போகிறார் என்று லீ பயந்துவிட்டார். ஏதாவது செய்து மஸ்க்கின் கவனத்தைத் திசை திருப்ப வேண்டும் என முடிவு செய்தார். மஸ்க்கைக் கூட்டிக்கொண்டு நாடு நாடாகச் சுற்றினார். அந்தச் சுற்றுப்பயணங்கள் வணிகம், பொழுதுபோக்கு என இரண்டு நோக்கங்களுக்காகவும் இருந்தன. அந்தப் பயணத்தில் அவர்கள் லண்டன் நகரத்துக்கும் சென்றனர். அங்குதான் அவர் நடிகை தலுலா ரைலியைச் சந்தித்தார்.
லண்டனில் ஒரு மோசமான இரவில் மஸ்க்கும், அவரது நண்பர் லீயும் விஸ்கி மிஸ்ட் என்ற விடுதிக்குச் சென்றனர். அது பணக்காரர்கள் மட்டுமே கூடும் விடுதி. நடனம், குடி, கூத்து என எல்லாமும் அங்கே கிடைக்கும். மஸ்க்குக்கு அந்த வகையில் பொழுதுபோக்குவதில் விருப்பமில்லை. லீயின் கட்டாயத்தின் பேரில்தான் சென்றார். பத்து நிமிடங்களில் அங்கிருந்து கிளம்பிவிட வேண்டும் என்று பேசி முடிவு செய்துவிட்டுத்தான் அவருடன் வர ஒப்புக்கொண்டார். அந்த விடுதியில் இருந்த லீயின் நண்பர் இருவரையும் வி.ஐ.பி. அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கே மஸ்க்குடன் நேரம் செலவிடுவதற்காகத் தனது தோழிகள் சிலரையும் வரவழைத்திருந்தார். அவர்களில் ஒருவராக வந்தவர்தான் தலுலா ரைலி. ரைலியைப் பார்த்தவுடனேயே அவரது அழகில் மஸ்க் விழுந்துவிட்டார்.
ரைலி மஸ்க்குக்கு அருகே அமர்ந்துகொண்டார். மஸ்க் ஏற்கெனவே ரைலியைத் தனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் ஒன்றில் பார்த்திருக்கிறார். அந்தப் படத்தில் நடித்ததன் மூலம்தான் ரைலி பிரபலமாகி இருந்தார். இதைச் சட்டென்று நினைவுகூர்ந்த மஸ்க் அவருடன் திரைப்படம் குறித்துப் பேசத் தொடங்கினார். கொஞ்சம் கொஞ்சமாக மஸ்க்கின் முகத்தில் குடிகொண்டிருந்த மென்சோகம் கரைந்து புன்னகை மலர்ந்தது. அவருடைய பேச்சு திரைப்படங்களில் இருந்து தொழில் குறித்து மாறியது. தன் சட்டைப்பையில் இருந்து செல்போனை எடுத்த மஸ்க், அதில் இருந்த ஃபால்கன் 1 ராக்கெட்டையும், டெஸ்லாவின் ரோஸ்டர் காரின் புகைப்படத்தையும் காட்டினார். அதைப் பார்த்தவுடன் அந்தச் சாதனங்களை உருவாக்கிய நிறுவனத்தில் பொறியாளராக மஸ்க் பணியாற்றி வருகிறார்போல என ரைலி நினைத்துக்கொண்டார். இல்லை, அந்த நிறுவனங்களை உருவாக்கியதே நான்தான் என மஸ்க் அறிமுகம் செய்துகொண்டார்.
நேரம் கடந்தது. மஸ்க் வேறு எதைப்பற்றியும் பேசவில்லை. முழுக்க முழுக்க தான் உருவாக்கி வரும் ராக்கெட்டுகளையும், கார்களையும் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். மஸ்க்குடன் பேசும்போது ரைலி ஒன்றைத் தெரிந்துகொண்டார். இவர் இதுவரை எந்த நடிகைகளையும் சந்தித்து உரையாடியது கிடையாதுபோல என்று. ரைலியிடம் பேசும்போது மஸ்க்கின் கைகள் நடுங்கின. இதைக் கவனித்த ரைலி சிரித்துவிட்டார். ரைலி உண்மையில் யதார்த்தமானவர். அதனால் மஸ்க்கிடம் நடிகை என்ற எந்த பந்தாவும் இல்லாமல் நன்றாகவே பேசினார். மஸ்க் பணம் படைத்தவர் என்பதை மனதில் கொண்டு ரைலி பேசவில்லை. இதனால் அவருடைய நடத்தையும் மஸ்க்கைக் கவர்ந்தது. ரைலியின் தோற்றமும் உரையாடலும் அவரை ஈர்த்தது. சில மாதங்களில் முதன்முறையாகத் தான் மகிழ்ச்சியாக இருப்பதாக மஸ்க் உணர்ந்தார். அங்கு நடைபெற்ற சம்பவம் ஒன்று ரைலியின் கவனத்தை ஈர்த்தது. மஸ்க்கின் மீதான நன்மதிப்பையும் கூட்டியது.
இருவரும் உரையாடிக்கொண்டிருந்தபோது லீயின் நண்பர் வேறு சில அழகான பெண்களையும் அங்கே அழைத்திருந்தார். அவர்கள் விளம்பரங்களில் நடிக்கும் கவர்ச்சி மாடல்கள். அவர்களையும் மஸ்க்குக்கு அறிமுகம் செய்துவைத்தார். ஆனால் மஸ்க்குக்கு அவர்கள் மேல் கவனம் செல்லவே இல்லை. அந்தப் பெண்களிடம் மரியாதைக்கு ‘ஹெலோ’ என்று ஒற்றை வார்த்தையை மட்டும் உதிர்த்துவிட்டு மீண்டும் ரைலியிடம் வந்து அமர்ந்து பேசத் தொடங்கினார். அப்போதுதான் அவர் பெண்களிடம் பிதற்றுபவர் அல்ல. ஆழமான உரையாடல்களை விரும்புபவர் என்று ரைலிக்குப் புரிந்தது. இப்போது மஸ்க்கின் கைகள் ரைலியைத் தொட்டுப்பேசின. இருவரும் கிளம்பும்போது மறுநாள் இரவு உணவுக்குத் தன்னுடன் வருவதற்குச் சம்மதமா என்று மஸ்க் வினவினார். ரைலியும் சம்மதித்தார்.
ரைலியின் பின்னணியைப் பார்க்க வேண்டும் என்றால் அவர் இங்கிலாந்தின் கிராமம் ஒன்றில் வளர்ந்தவர். படிப்பில் கெட்டிக்காரர். மஸ்க்கைச் சந்திக்கும் ஒரு வாரத்துக்கு முன் வரை தனது பெற்றோருடன்தான் தங்கியிருந்தார். அவரது பெற்றோர்கள் பாரம்பரியத்தில் நம்பிக்கைக் கொண்டவர்கள். மிகவும் கண்டிப்பானவர்கள். ஆனால், மஸ்க்கைச் சந்தித்தவுடன் அவரைப் பற்றித் தனது குடும்பத்துக்கு ரைலி தெரியப்படுத்தினார். ரைலியின் தந்தை பிரிட்டனில் தேசியப் புலனாய்வுத்துறையில் தலைவராக இருந்தவர். மஸ்க்கைப் பற்றி அவர் கேள்விப்பட்டது கிடையாது. தன் பெண் ஓர் இளைஞனைப் பற்றிப் பேசுகிறாளே என்றவுடனேயே அவரைப்பற்றி தெரிந்துகொள்வதற்காக விசாரணையைத் தொடங்கினார். பெரிதாக முயற்சிக்கவில்லை. இணையத்தில் அடித்தவுடனேயே அவருக்கு மஸ்க்கின் முழு வரலாறும் தெரிந்துவிட்டது. தன்னுடைய மகள் திருமணமாகி விவகாரத்து வழக்கில் சிக்கியுள்ள ஓர் உலகப் பணக்காரரைக் காதலிப்பதாகப் புரிந்துகொண்டார். அவருக்கு ஐந்து குழந்தைகள் இருப்பதும் தெரிந்தது. இந்த ஆளிடம் தனது மகள் ஏமாந்துவிட்டாளே என்றும் அவருக்கு ஆத்திரமாக வந்தது. ரைலிக்குப் போன் செய்து மஸ்க்கைப் பற்றி அத்தனையையும் கூறினார். திருமணம் ஆனதைக் கூட மறைத்துவிட்டு அவர் உன்னிடம் நடிப்பதாகக் குற்றம் சாட்டினார். ரைலி கொஞ்சம் உஷாரானார். என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்று இரவு உணவுக்குச் சென்றார்.
இருவரும் மீண்டும் உரையாடத் தொடங்கினர். பேசத் தொடங்கி சில நிமிடங்கள்தான் ஆகியிருக்கும், ரைலி கேட்பதற்கு முன் மஸ்க்கே தனக்கு விவாகரத்து நடைபெற்று வருவதாகவும், ஐந்து குழந்தைகள் இருப்பதாகவும் சொல்லிவிட்டார். மஸ்க்கின் இந்த வெளிப்படைத்தன்மை ரைலியை உண்மையில் பெரிதாக ஈர்த்துவிட்டது. ரைலிக்கு அங்கேயே காதல் மலர்ந்தது. மறுநாள் மதியமும் இரவும் இருவரும் ஒன்றாக உணவருந்தினர். ஓவியக் கண்காட்சிக்குச் சென்றனர். மாலையில் மஸ்க் லண்டனில் இருந்து கிளம்பி அமெரிக்கா சென்றார். அலுவலக நெருக்கடிகளுக்கு மத்தியில்கூட அடுத்த இரண்டு வாரங்களுக்குத் தினமும் ரைலியுடன் போனில், இமெயிலில் பேசி வந்தார். பிறகு ரைலியையும் அமெரிக்கா வரச் செய்தார். ஐந்து நாட்கள் இருவரும் கலிபோர்னியாவில் விலை மலிவான விடுதியில் சிறிய அறை எடுத்துத் தங்கினர். பெரும் பணக்காரர் இப்படி மலிவான அறையில் தங்கி இருக்கிறாரே என ரைலிக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்போது தன்னுடைய தொழில் பிரச்சனைகள் அனைத்தையும் ரைலியிடம் மஸ்க் தெரிவித்துவிட்டார். ‘இப்போது நான் அழிவின் விளிம்பில் இருக்கிறேன். அடுத்தது என்ன நடக்கும் என்பதுகூட எனக்குத் தெரியாது. இப்போது இருக்கும் சூழலில் என்னை நீ திருமணம் செய்துகொள்வாயா?’ எனக் கேட்டுவிட்டார்.
‘நீ என்னை விட்டுச் செல்வதை நான் விரும்பவில்லை. நான் இதை விளையாட்டுக்குச் சொல்லவில்லை. உன்னிடம் புரோபோஸ் செய்யும்போது அளிப்பதற்காக மோதிரம் கூட இல்லை’ என்றார்.
ரைலிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. மஸ்க்கின் வெளிப்படைத் தன்மை அவருக்குப் பிடித்திருந்தது. அதனால் பணம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. ‘திருமணமா? அதையும் செய்துதான் பார்ப்போமே’ என்று சம்மதம் சொல்லிவிட்டார். திருமணத்திற்குச் சம்மதித்தபோது ரைலிக்கு வெறும் இருபத்து இரண்டு வயதுதான்.
ரைலி ஏற்கெனவே கட்டுப்பாடான குடும்பத்தில் பிறந்தவர் என்று பார்த்தோம். அதுவரை தனது பெற்றோருக்குக் கவலை தரக்கூடிய எதையுமே ரைலி செய்ததில்லை. கல்லூரியில் முதல் மாணவி, நடிப்பில் கெட்டிக்காரி, அடுத்தவரை மரியாதையுடன் நடத்தக்கூடியவர், உயரிய பண்புகளைக் கொண்டவர். ஆனால் இது எதைப்பற்றியும் யோசிக்காமல் அந்த விடுதி அறையில் தன்னைவிட 14 வயது அதிகமுடைய, ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையான ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதற்கு ஒப்புக்கொண்டார். அதைத் தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
ரைலியின் தாய் உடைந்து அழுதுவிட்டார். ஆனால் ரைலிக்குத் தான் செய்வதில் தவறு இருப்பதாகத் தோன்றவில்லை. மஸ்க்கைத் திருமணம் செய்வது விநோதமாகவும் தெரியவில்லை. திருமணம், விவாகரத்து என்பது வெறும் சடங்கு என்ற தெளிவான புரிதல் அவருக்கு இருந்தது. அதே சமயம் தன்னுடைய பெற்றோரின் விருப்பத்தையும் அவர் கண்டுகொள்ளாமல் இல்லை. அன்றிரவே இங்கிலாந்துக்குப் பறந்து சென்ற அவர், தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு, பெற்றோரையும் அழைத்துக்கொண்டு அமெரிக்கா வந்து சேர்ந்தார். தன் தந்தையை மஸ்க்கைச் சந்திக்க அழைத்துச் சென்றார். இருவரும் சிறிது நேரம் உரையாடினர். அந்தச் சந்திப்பிலேயே தன் மகளின் திருமணத்துக்குத் தந்தை சம்மதம் தெரிவித்தார். அந்தச் சமயத்தில் மஸ்க்குக்குச் சொந்த வீடு கூட இல்லை. தனது நண்பர் ஒருவரின் வீட்டில் இருவரும் வாழ்க்கையைத் தொடங்க இருந்தனர். அந்த வீட்டின் மொட்டை மாடிக்கு ரைலியை அழைத்துச் சென்ற மஸ்க் தானே பார்த்துப் பார்த்து வடிவமைத்த வைர மோதிரத்தை நீட்டினார்.
‘என்னை ஏற்றுக்கொள்வது கடினமான பாதையைத் தேர்ந்தெடுப்பதற்குச் சமம். உனக்கு விருப்பமா?’ என்றார். ஒரு சாகச பயணத்துக்கு நானும் தயார் என மஸ்க்கின் விண்ணப்பத்தை ரைலி ஏற்றார்.
(தொடரும்)