எலான் மஸ்க்குக்குக் குடும்ப பிரச்னைகள் கொஞ்சம் கொஞ்சமாகச் சரியாகத் தொடங்கி இருந்த நேரம், புதிய பிரச்னை உதயமானது. மஸ்க்கிடம் கையில் இருந்த பணம் எல்லாம் காற்றில் கரைந்துகொண்டிருந்தது. ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா இரு நிறுவனங்களிலும் நிதிப் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கி இருந்தது. குறைந்தது ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கவாவது நிதி வேண்டும் அல்லவா? அதற்குக்கூட இன்னும் சில மாதங்களில் வழியில்லாமல் போய்விடும் சூழல். இரு நிறுவனங்களும் பிழைத்திருக்க யாராவது உதவி செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இரண்டில் ஒன்றாவது, ஓரளவுக்காவது லாபம் ஈட்டினால்கூட முதலீட்டாளர்களைப் பிடித்து, தைரியமாக நிதி கேட்டு விடலாம். ஆனால், இதுவரை போடப்பட்ட முதலுக்கே என்ன வழி என்று தெரியவில்லை. எந்த முகத்தை வைத்துக்கொண்டு யாரிடம் உதவி கேட்பது? என்ன செய்வது எனத் தெரியாமல் மஸ்க் விழித்துக்கொண்டிருந்தார்.
ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 1 ராக்கெட்டையே இன்னும் விண்ணில் ஏவாமல் இருந்த நாட்கள் அவை. ஸ்பேஸ் எக்ஸ் ஊழியர்கள் குவாஜ் தீவில் கூடாரம் அடித்துத் தங்கி இருந்தனர். மற்ற நிறுவனங்களாக இருந்திருந்தால் ஃபால்கன் 1ஐ எப்படியாவது விண்வெளிக்கு அனுப்பிவிட்டுத்தான் மற்ற வேலைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்ற முனைப்பில் இருந்திருப்பார்கள். ஆனால், மஸ்க்கோ ஃபால்கன் 1ஐ ஏவுவதற்காகச் சில பொறியாளர்களைக் குவாஜ்ஜுக்கு அனுப்பிவிட்டு, அமெரிக்காவில் இருந்த மற்றொரு குழுவை ஃபால்கன் 9 ராக்கெட்டைத் தயாரிக்கச் சொல்லிவிட்டார்.
அப்போதுதான் ஃபால்கன் 1இன் மூன்றாவது முயற்சி தோல்வி அடைந்திருந்த சமயம். தீவில் இருந்த ஸ்பேக்ஸ் எக்ஸ் ஊழியர்கள் உடைந்து போய் இருந்தனர். பெரிய மனிதர்கள் அழுது பார்க்க முடியாது. ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் ஊழியர்கள் அன்று கண்ணீர் விட்டு அழுதனர். கடும் உழைப்பின் காரணமாக அவர்களது உடல் வலுவிழந்திருந்தது. உள்ளமும் சோர்வடைந்திருந்தது. மஸ்க் அங்கிருந்த ஊழியர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
‘ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. பயப்படாதீர்கள். எல்லாம் சரியாகிவிடும். நாம் இதைச் செய்யத்தான் போகிறோம். என்ன தவறு நடந்தது என்பதைப் புரிந்துகொண்டு, அதைச் சரி செய்யத் தொடங்குங்கள்.’
அடுத்தாக ஊடகங்களைச் சந்தித்து நான்காவது முயற்சியை விரைவில் மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார். அதுவும் ஒருவேளை தோல்வி அடைந்தால் ஐந்து, ஆறாவது முயற்சிகளுக்கான தேதிகளையும் தான் திட்டமிட்டுள்ளதாகச் சொன்னார். வெளியில் திடமாகப் பேசினாலும், உள்ளுக்குள் அவரும் கலங்கித்தான் போயிருந்தார். மூன்று முயற்சிகள் தோல்வி. ஒவ்வொரு பிரச்னையையும் சரி செய்யும்போதும், புதிய பிரச்னை முளைக்கிறது. இன்னும் எத்தனை நாட்களுக்குத் தாக்குப் பிடிப்பது? இன்னும் ஒருமுறைதான் முயற்சி செய்யலாம். அதற்குமேல் முடியாது. 100 மில்லியன் டாலர்களை ஸ்பேஸ் எக்ஸில் முதலீடு செய்திருக்கிறேன். மிச்சமிருக்கும் நிதியையும் வீணடிக்க முடியுமா? இன்னொரு பக்கம் டெஸ்லாவின் தலைவலி வேறு. இனிமேல் கொடுப்பதற்கு எதுவும் இல்லை. ஸ்பேஸ் எக்ஸ் இருக்கப்போகிறதா, அழியப்போகிறதா என்று தீர்மானிப்பதற்கு இன்னும் ஒரே ஒரு முயற்சிதான் பாக்கி இருக்கிறது என்று நினைத்துக்கொண்டார்.
இந்தச் சூழலில்தான் திடீர் திட்டமாக ஃபால்கன் 9 ராக்கெட்டைத் தயாரிக்க அவர் உத்தரவிட்டிருந்தார். ஃபால்கன் 9 என்பது ஒன்பது எஞ்ஜின்கள் கொண்டு இயங்கும் ராக்கெட் அமைப்பு. கடும் உழைப்பைக் கோரும் திட்டம். முதல் ராக்கெட்டே வெற்றியை எட்டிப்பிடிக்க முடியாத சூழலில், மீதமிருக்கும் நிதியை ஃபால்கன் 9ஐ நம்பிக் கொட்டுவது சரியான முடிவல்ல. அமெரிக்காவின் புகழ்பெற்ற விண்வெளி நிறுவனங்கள் மஸ்க்கின் திட்டம் முட்டாள்தனமானது என நகையாடின. ஊடகங்கள் ஸ்பேஸ் எக்ஸின் தோல்விகளைக் கிண்டலடித்துக் கட்டுரைகள் பிரசுரித்தன. ஸ்பேஸ்எக்ஸின் ஊழியர்களே மஸ்க்கின் முடிவு சரியானது இல்லை எனப் பேசத் தொடங்கினர்..
ஒன்பது எஞ்ஜின் ராக்கெட் என்பது சாதாரண விஷயமல்ல. அதிக நிதியும் பணியாட்களும் அதற்குத் தேவை. இந்தக் கட்டத்தில் இப்படியொரு திட்டத்தை முன்மொழிந்ததற்கு அவசியம் என்ன என மேல்மட்ட உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் மஸ்க் உறுதியாக இருந்தார். முதல் ராக்கெட் ஏவப்படாமலேயே கூட போகலாம். ஆனால் ஃபால்கன் 9 ராக்கெட்டை நாம் இப்போதே உருவாக்கத் தொடங்க வேண்டும். இந்த ராக்கெட்டை வைத்துத்தான் நாசாவின் ஒப்பந்தங்களை நம்மால் கைப்பற்ற முடியும் என்றார்.
ஜூலை 30ஆம் தேதி அவர்கள் எதிர்பார்த்ததை விடவும் விரைவாகவே ஃபால்கன் 9 ராக்கெட்டின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. ஒன்பது எஞ்ஜின்களும் ஒருமித்த நிலையில் இயங்க, 8.50 லட்சம் பவுண்டுகள் எடையுள்ள உந்துசக்தி ராக்கெட்டில் இருந்து வெளிப்பட்டது. ஸ்பேஸ் எக்ஸ் ஊழியர்கள் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அடுத்த சில நாட்களிலேயே ஃபால்கன் 1ஐ நான்காவது முறையாக ஏவுவதற்கான வேலைகள் முடுக்கிவிடப்பட்டன.
யாரெல்லாம் பணியைத் தாமதப்படுத்துகிறார்களோ அவர்களை எல்லாம் மஸ்க் திட்டித் தீர்த்தார். ஊழியர்கள் தினசரி இரண்டுமுறை என்ன நடக்கிறது என்று மஸ்க்குக்குத் தகவல் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். பாத்ரூமில் குளித்துக்கொண்டிருக்கும்போது திடீரென்று போன் செய்து என்ன வேலை நடக்கிறது என்று கேட்பார். நடுசாமத்தில் தூக்கத்தில் போன் செய்து ஊழியர்களைத் திட்டுவார். அனைவருக்கும் கம்பி மேல் நடக்கும் கதையாக இருந்தது. அடுத்த மாதத்தில் அந்த நான்காவது முயற்சி நடைபெற்றது. ஸ்பேஸ் எக்ஸ் ஊழியர்கள் இடைவெளியே இல்லாமல் 6 வாரங்களாக உழைத்துக்கொண்டிருந்தனர். சிலர் மாதக் கணக்காகக் குடும்பத்தைவிட்டுத் தீவில் குடியேறி, பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த ஒரு முயற்சியை விட்டால் எல்லாருடைய கனவுகளும், வேலைகளும் சிதறிவிடும் என அனைவருக்குமே தெரிந்து இருந்தது. அவர்கள் நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாக நான்காம் முயற்சி அரங்கேறியது.
செப்டம்பர் 28ஆம் தேதி, பிற்பகல் வேளையில் ஃபால்கன் 1 வெற்றிகரமாக விண்ணில் பறந்தது. அங்கிருந்த அனைவருமே உணர்ச்சிப் பொங்க உடைந்து அழுதனர். மஸ்க் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வெளியேறி தொழிற்சாலைக்குள் நுழைந்தார். அங்கிருந்த அனைவரும் கரகோஷம் எழுப்பி அவருக்கு வரவேற்பு அளித்தனர். ராக்கெட் ஏவுதல் என்பதை அதுவரை சில நாடுகள் மட்டுமே செய்திருந்தன. விண்வெளிக் கனவு என்பது நாடுகளுக்கு உரியதாகவே இருந்து வந்துள்ளது. முதன்முறையாக ஒரு தனியார் நிறுவனம் அந்த விண்வெளிக் கனவைத் தனக்குரியதாக்கி, அதை நனவாக்கியும் காட்டியிருந்தது. ஃபால்கன் 1இன் வெற்றி, மஸ்க்குக்கு இழந்த நம்பிக்கையை மீண்டும் துளிர்விட வைத்தது. இதுதான் முதல் படி. இன்னும் செய்ய வேண்டிய சாதனைகள் நிறைய இருக்கிறது. ஃபால்கன் 1இன் வெற்றி ஃபால்கன் 9 முயற்சிக்கும், வேறு சில லட்சியத் திட்டங்களுக்கும் வழிவகுத்துக் கொடுத்தது.
ஃபால்கன் 9 ராக்கெட்டின் வேலைகள் நடந்துகொண்டிருந்த அதே சமயத்தில் புதிய சாதனம் ஒன்றை உருவாக்கும் முயற்சியிலும் ஸ்பேஸ் எக்ஸ் இறங்கியிருந்தது. அதன் பெயர் ‘டிராகன் கேப்சியூல்’. டிராகன் கேப்சியூல் ஒரு விண்வெளிப் போக்குவரத்துச் சாதனம். இந்த இயந்திரத்தின் மூலம் நாம் வேண்டிய பொருள்களைச் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி வைக்கலாம். ஏன், விரைவில் மனிதர்களைக்கூட இந்த இயந்திரத்தின் மூலம் விண்வெளிக்கு அழைத்துச் செல்ல முடியும் என்றார் மஸ்க்.
ஃபால்கன் 9, டிராகன் கேப்சியூல் இரண்டையும் தொடர்ந்து செயல்படுத்துவதற்குச் சிறப்பான திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இருந்தாலும், அவற்றை வடிவமைப்பதற்குத் தனித்தனியாக 100 கோடிகளுக்கு மேல் செலவாகும் என கணக்கிடப்பட்டது. என்ன செய்வது? இரண்டையுமே குறைந்த நிதியில் உருவாக்குவதற்கு ஏதாவது ஒரு வழியைக் கண்டுபிடியுங்கள் என ஊழியர்களைக் களத்தில் இறக்கினார் மஸ்க். ஏராளமான புதிய திறமைசாலிகள் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இடம் பற்றாக்குறையால் பெரிய இடத்துக்கு ஸ்பேஸ் எக்ஸ் அலுவலகம் மாற்றப்பட்டது.
ஸ்பேஸ் எக்ஸின் முயற்சிகளைப் பார்த்து மலேசிய அரசாங்கம் தனது செயற்கைக்கோளை விண்வெளிக்கு எடுத்துச் செல்ல அந்நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டது. ஆனால் அதற்கான நிதி 2009ஆம் ஆண்டு நடுப்பகுதி வரை விடுவிக்கப்படாது என அந்த அரசாங்கம் சொல்லிவிட்டது. நிதி கிடைத்தால் ஃபால்கன் 9ஐ தயாரித்து விடலாம் என்று எதிர்பார்ப்பில் இருந்த ஸ்பேஸ் எக்ஸுக்கு இது பெருத்த ஏமாற்றம். இந்தச் சூழலில் கையில் இருந்த பணத்தையும் ஸ்பேஸ் எக்ஸ் செலவழித்து இருந்தது. இறுதியில், ஊழியர்களுக்குக் சம்பளம் தருவதற்குக்கூட நிதி இல்லாத நிலைமை.
ஸ்பேஸ் எக்ஸின் நிலை இவ்வாறு இருக்கையில், டெஸ்லாவின் திண்டாட்டம் ஊடகங்களுக்குக் கொண்டாட்டமாக இருந்தது. தினசரி டெஸ்லாவின் நிதி நிலைமை குறித்த விமர்சனங்கள் செய்தித்தாள்களில் இடம் பெற்றன. வாகனங்கள் பற்றி எழுதும் பிரபல இணையதளம் ஒன்று ‘டெஸ்லாவின் இறுதி நாட்களை நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம்’ என்று எழுதியது. வேறு சில ஊடகங்கள் மஸ்க்குக்கு டெஸ்லா நிர்வாகத்துடன் இருந்த பிரச்னைகளைப் பூதாகரமாக்கின. ‘மஸ்க் டெஸ்லாவின் உண்மையான நிறுவனர் கிடையாது. அவர் வெறும் பணம் படைத்த ஆசாமி. தனது அதிகாரப் பலத்தால் எபர்ஹார்ட் என்ற உண்மையான தலைவரிடம் இருந்து டெஸ்லாவை அபகரித்துக்கொண்டார்’ என்று கட்டுரைகள் வெளியாகின. டாப் கியர் என்ற பிரிட்டிஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் டெஸ்லாவின் ரோட்ஸ்டர் கார் கண்டந்துண்டமாகச் சிதைத்துப் படம் பிடிக்கப்பட்டது. சோதனையில் அந்தக் கார் எவ்வளவு மோசமாக இயங்குகிறது பாருங்கள் என வீடியோ வெளியானது. டெஸ்லாவின் இறப்பு குறித்துத் தினசரி 50 கட்டுரைகளாவது வெளியானது என்று மஸ்க் அந்த நாட்களை நினைவுகூருகிறார்.
இது ஒருபுறமிருக்க, டெஸ்லாவில் இருந்து வெளியேறி இருந்த எபர்ஹார்ட், இணையதளம் ஒன்றைத் தொடங்கி அதில் டெஸ்லா தயாரிப்புகள் அனைத்தையும் விமர்சனம் செய்யத் தொடங்கினார். டெஸ்லாவின் வாடிக்கையாளர்களாக இருப்பதன் சாதக, பாதகங்கள் என்று சில தரவுகளை வெளியிட்டு கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
இந்தச் சமயத்தில் டெஸ்லாவின் தலைமைச் செயலதிகாரியாக இருந்த ட்ரோரி பதவி விலகி இருந்தார். மஸ்க்கே அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார். நிதிப் பற்றாக்குறையை சரி செய்யும் முயற்சியில் அவர் பல ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கினார். அந்த ஊழியர்கள் மஸ்க்கின் மீது கடுப்பில் இருந்தனர். அவருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். இவர்களைத் தூண்டி விட்ட ஊடகங்கள் மஸ்க் குறித்த புகார்களை அவர்களிடம் இருந்து சேகரித்து, பிரசுரித்தன. இதன் தொடர்ச்சியாக டெஸ்லாவில் பணியாற்றிக்கொண்டிருந்த ஊழியர் ஒருவரையே பத்திரிகை ஒன்று விலைக்கு வாங்கியது. அவரிடம் இருந்து ரகசியமாக டெஸ்லா நிர்வாகத்தின் உள்ளே நடக்கும் பிரச்னைகளைக் கேட்டறிந்து அவற்றுடன் சில அவதூறுகளையும் இணைத்துப் பரப்பியது.
அந்த ஊழியர் மஸ்க் குறித்து இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுக்களைப் பரப்பினார். நிதி நெருக்கடியால் டெஸ்லாவின் அலுவலகம் ஒன்று மூடப்பட்டு விட்டதாகவும், நிறுவனத்தின் வங்கியில் 90 லட்சம் டாலர்களே மிச்சம் உள்ளதாகவும் வாக்குமூலம் அளித்தார். இதுவரை ரோட்ஸ்டரை வாங்குவதற்கு 1200 முன்பதிவுகள் நடைபெற்றுள்ளன. அதில் வெறும் 50 பேருக்கு மட்டுமே கார்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள பல கோடி டாலர்களை மஸ்க் தன் சொந்த விஷயங்களுக்குச் செலவழித்துவிட்டார் என எழுதினார்.
‘எனது நிறுவனம் மக்களை ஏமாற்றும் திருட்டுச் செயல்களில் ஈடுபடுவதை என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியாததால் நானே சாட்சியாக மாறி இருக்கிறேன். எனது வாடிக்கையாளர்களின் நலனுக்காகவே இப்படிச் செய்கிறேன். எனக்கு வாடிக்கையாளர்கள்தான் கடவுள்கள். அவர்களையே நான் பணியாற்றும் நிறுவனம் ஏமாற்றுவது மோசமானது’ என்று கூறினார்.
டெஸ்லா குறித்து இப்படியாக வெளியான அவதூறுகளைப் பொறுக்க முடியாமல் மஸ்க் தலையைப் பிய்த்துக்கொண்டார். தன்னை வேண்டுமென்றே எல்லோரும் கட்டம் கட்டுவதாகக் கதறினார். (பின்னால் தனது ஊழியர்களின் மின்னஞ்சல்களை ரகசியமாக உளவு பார்த்து அந்த ஊழியரைப் பிடித்துவிட்டார்.)
‘என்னைக் குற்றம்சாட்டி எல்லோரும் களிப்படைகிறார்கள். ஒருபக்கம் வங்கிகள் என்னை வெறுக்கின்றன. சில பணக்காரர்கள் என்னை வெறுக்கிறார்கள். என் முன்னாள் மனைவி என்னை வெறுத்து அவதூறு பரப்புகிறார். இணையத்தைத் திறந்தாலே என்னைப் பற்றியும், டெஸ்லா பற்றியும், ஸ்பேஸ் எக்ஸ் பற்றியும் ஏதாவது பொய்க்குற்றச்சாட்டு இடம்பெறுகிறது. என்னை இந்த விஷயங்கள் காயப்படுத்துகின்றன. இதுபோன்ற சூழல் ஒருவருக்கு வாழ்க்கையில் ஏற்பட்டால் அவருக்கே அவர் மீதே சந்தேகம் வந்துவிடும். அவரது வாழ்க்கை சரியாகத்தான் போகிறதா என்று கேள்வி எழும். என்னால் இந்த மோசமான நிலையில் இருந்து வெளி வர முடியுமா எனத் தெரியவில்லை. எல்லாமே முடிந்துவிட்டது என்பதுபோல தோன்றுகிறது. இனி என்னால் மீளவே முடியாது’ என்று பேட்டியளித்தார்.
அவ்வளவுதான் டெஸ்லாவில் எல்லாம் முடிந்துவிட்டதாக அனைவரும் கருதினர். மஸ்க்கின் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக நினைத்தனர். உள்ளுக்குள் பல காயங்கள் இருந்தாலும் போராடும் குணம் அவரை விட்டுச் சென்றுவிடவில்லை. இறுதி நொடி வரை மோதிப் பார்த்துவிடலாம் என மஸ்க் முடிவு செய்தார். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் பிரச்னைகளைத் தீவிரமாகப் பரிசீலிக்கத் தொடங்கினார். என்ன செய்து இந்தச் சிக்கல்களைச் சரி செய்யலாம் எனச் சிந்தித்தார். முதலில், ஊடகங்களைச் சரி கட்ட வேண்டும். ஊடகங்களின் செய்திகளுக்குக் காது கொடுக்கக்கூடாது. நாம் ஒன்றை நிரூபித்துக் காட்டிவிட்டால் ஊடகங்கள் தானாகவே வாயை மூடிக்கொள்ளும். இன்று நம்மை இகழ்ந்து பேசும் ஊடகங்கள் அப்போது நமது சாதனைகளைப் பரப்புரை செய்யும். அதனால் அவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார். ஊடகங்களின் செய்திகளுக்குப் பதிலடி கொடுப்பதை நிறுத்தினார்.
இரண்டாவது, நிதிப் பிரச்னையைச் சரி செய்வது. இதுதான் அவருக்கு அதிகம் கவலை கொடுத்தது. அப்போதைய சூழலில் இரண்டு நிறுவனங்களும் அழிவின் விளிம்பில் இருந்தன. மரணிக்கும் தறுவாயில் இருக்கும் இரண்டு குழந்தைகளில் எதனைக் காப்பாற்றுவது என்று தேர்ந்தெடுக்கும் தாயின் நிலையில்தான் மஸ்க் இருந்தார். என்னிடம் இருக்கும் கொஞ்சம் நிதியைக் கொண்டு இரண்டில் ஒரு நிறுவனத்தை மட்டுமே பிழைக்க வைக்க முடியும். ஒன்று ஸ்பேஸ் எக்ஸ், இல்லையென்றால் டெஸ்லா. நிதியை இரண்டாகப் பிரித்து இரு நிறுவனங்களிலும் செலவிடலாம். ஆனால் அந்த நிதி போதுமானதாக இருக்காது. இதனால் விரைவில் இரண்டு நிறுவனங்களுமே இறந்துவிடும். ஒருவேளை என்னிடம் இருக்கும் நிதியை இரண்டில் ஏதாவது ஒரு நிறுவனத்தில் மட்டும் முதலீடு செய்தால், எதில் முதலீடு செய்கிறேனோ அந்த நிறுவனத்தைக் காப்பாற்றும் வாய்ப்பு பெரிதாக அதிகரிக்கும். ஆனால் இன்னொரு நிறுவனத்தின் இறப்பு உறுதியாகிவிடும். இப்போது என்ன செய்வது? யாரைக் காப்பாற்றுவது? ஸ்பேஸ் எக்ஸா? டெஸ்லாவா? மஸ்க் தடுமாறினார்.
இந்த விஷயம் பற்றித் தனக்கு வேண்டியவர்கள் எல்லோரிடமும் அவர் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த தருணத்தில்தான் உலக பொருளாதாரத் தேக்க நிலை உருவாகி இருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான மோசமான உலகளாவிய பொருளாதாரச் சூழலாக அது அமைந்தது. 2008ஆம் ஆண்டு முடிவுக்கு வரும் வேளையில் மஸ்க்கிடம் மிச்சமிருந்த நிதியும் முடிவுக்கு வந்தது. இருந்த பணம் அத்தனையும் செலவாகி விட்டது. அடுத்தது என்ன? ‘இரு நிறுவனங்களையும் இழுத்து மூடுவதுதான்’ என்றன ஊடகங்கள்.
(தொடரும்)

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.com