Skip to content
Home » எலான் மஸ்க் #43 – மீட்சிப் படலம்

எலான் மஸ்க் #43 – மீட்சிப் படலம்

எலான் மஸ்க்

2009 ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை வாகன உற்பத்தித்துறையை எந்தளவுக்கு வீழ்ச்சியடைய வைத்தது என்பதைச் சொல்லித் தெரிய வைக்க வேண்டியதில்லை. உண்பதற்கு உணவு, உடுத்துவதற்கு உடை உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைக்கே மக்கள் திண்டாடி வந்த நிலையில் சொகுசாகப் பயணம் செய்ய கார் ஒன்றுதான் கேடா என்ன? 2008இல் தொடங்கி 2010ஆம் ஆண்டு வரை இந்தப் பாதிப்பு தொடர்ந்தது. இந்தச் சூழலில் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா ஆகிய இரு நிறுவனங்களும் நிதியை இழந்து திண்டாடின. மஸ்க்கோ பித்துப் பிடித்ததுபோல சுற்றிக்கொண்டிருந்தார்.

மஸ்க்கின் நிலைமை அவரது மனைவிக்குக் கவலை அளித்தது. ‘உண்மையில் என்ன நடக்கிறது என்றே எனக்குத் தெரியவில்லை. தனது மனதுக்குள் நிகழும் போராட்டங்களை அவர் எப்போதும் சொல்ல மாட்டார். எப்போதாவது சில விஷயங்களைப் பகிர்வார். பல சமயங்களில் எதையும் சொல்லாமல் மனதுக்குள் குமுறிக்கொள்வார். ஒழுங்காகச் சாப்பிட மாட்டார். வீட்டிற்கும் வரமாட்டார். வீட்டிற்கு வரும் நாட்களில் திடீரென்று இரவுகளில் அலறிக்கொண்டு எழுவார். கேட்டால் கெட்ட கனவு என்பார். போதுமான தூக்கம் இல்லாமல் மஸ்க்கின் உடல்நிலை மோசமாகிக்கொண்டிருந்தது. எங்கே மாரடைப்பு வந்து இறந்துவிடுவாரோ என்றுகூட நான் அஞ்சினேன். நம்பிக்கை முழுவதையும் இழந்து வாழ்க்கையின் விளிம்பில் மஸ்க் நின்று கொண்டிருந்தார். ஒரு காவிய நாயகனின் வீழ்ச்சியைப்போல அவரது வாழ்க்கை முடிவுக்கு வருவதாக எனக்குத் தோன்றியது’ என அந்தக் காலகட்டத்தில் மஸ்க் அனுபவித்த வேதனைகளை ரைலி குறிப்பிடுகிறார்.

மஸ்க், தனக்கு வேண்டியவர்களிடம் ஏதாவது பணம் இருந்தால் கொடுத்து உதவும்படிக் கேட்டிருந்தார். ரைலியின் பெற்றோர் இங்கிலாந்தில் உள்ள சொந்த வீட்டை அடமானம் வைத்து கொஞ்சம் பணத்தை ஏற்பாடு செய்து கொடுத்தனர். அவருடைய நண்பர்கள் சில ஆயிரங்களைக் கடனாக வழங்கினர். சொந்த விமானத்தில் பயணம் செய்வதை மஸ்க் விட்டிருந்தார். ஏன் விமானத்தையே விற்றுவிடலாம் என்ற முடிவுக்கும் வந்திருந்தார்.

மாதத்துக்கு 40 லட்சம் டாலர்கள் செலவாகிக்கொண்டிருந்தது. டெஸ்லாவைக் காப்பாற்றப் பெரும் தொகை தேவைப்பட்டது. முதலீட்டாளர்கள், நண்பர்களிடம் பேசி மாதம் மாதம் ஊழியர்களுக்கு மட்டும் வருமானம் சரியாகச் செல்வதற்கு ஏதோ வழிவகை செய்திருந்தார். வேண்டியவர்களிடம் எல்லாம் கடன் கேட்டார். நண்பர்கள் மூலமாக அவர்களது நண்பர்களையும் தொடர்புகொண்டு உதவி வேண்டினார். ‘யாராவது ஒருவரால் எனக்கு உதவ முடியும் என்று தெரிந்தால்கூட கூச்சமே இல்லாமல் அவர்களைச் சந்தித்து உதவி கேட்டேன்’ என மஸ்க்கே சொல்கிறார். ஆபத்துக்குப் பாவமில்லை என்ற நிலையில்தான் அவர் இருந்தார்.

இந்த நிலையிலும் கூடச் சிலர் மஸ்க்கின் மீது நம்பிக்கை வைத்து உதவ முன் வந்தனர். அவருக்கு நெருக்கமானவர்களுக்கு அவர் மீது இன்னமும் நம்பிக்கை எஞ்சி இருந்தது. எப்படியும் பிரச்னைகளைக் களைவதற்கு அவர் வழி கண்டுபிடிப்பார் என்று உறுதியாக இருந்தனர்.

மஸ்க்கின் நண்பர் பில் லீ 20 லட்சம் டாலர்களை டெஸ்லாவில் முதலீடு செய்ய முன் வந்தார். அவருடைய மற்றொரு நண்பரான செர்கி பிரின் 5 லட்சம் டாலர்களை முதலீடு செய்தார். ஆச்சரியமூட்டும் வகையில் சில டெஸ்லா ஊழியர்களே அவர்களிடம் இருந்த பணத்தைக் கொடுத்து நிறுவனத்தை நடத்த உதவி புரிந்தனர். தனது சகோதரர் கிம்பலிடமும் மஸ்க் உதவி கேட்டிருந்தார். பொருளாதாரத் தேக்க நிலையால் அவர் ஏற்கெனவே பல லட்சம் டாலர்களை இழந்திருந்த நிலையில், தன்னிடம் இருந்த கொஞ்சம் தொகையையும் அவர் டெஸ்லாவுக்காகக் கொடுத்தார். ரோட்ஸ்டர் வாங்குவதற்காக முன்பதிவு செய்திருந்த பொதுமக்களின் பணத்தையும் மஸ்க் செலவு செய்யத் தொடங்கினார். ஆனால் இது எதுவுமே அவருக்குப் பெரிதாக உதவியதுபோல தெரியவில்லை. மற்றவர்களின் நிதியைக் கையாண்டு நிறுவனத்தை நடத்தியதற்காகச் சிறையில் அடைக்கப்படலாம் என்ற சூழலும் உருவாகி இருந்தது. ஆனால், நல்லவேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை.

டெஸ்லாவின் நிலை இதுவென்றால், மற்றொருபுறம் ஸ்பேக்ஸ் எக்ஸும் தவித்துக்கொண்டிருந்தது. அவர் எதிர்பார்த்திருந்த நிதி மலேசிய அரசிடம் இருந்து இன்னும் வந்து சேரவில்லை. எப்போது வரும் என்ற தேதியையும் அரசாங்கம் தெரிவிக்கவில்லை. வேறு வழி இல்லை என்று தெரிந்தவுடன், ஸ்பேஸ் எக்ஸை மீட்பதற்கான நிதி திரட்டலிலும் மஸ்க் இறங்கினார். ஸ்பேஸ் எக்ஸின் ஃபால்கன் 9, டிராகன் கேப்சியூல் திட்டங்களைப் பிரசாரம் செய்யத் தொடங்கினார். அமெரிக்கா மட்டுமல்ல உலகத்தின் எந்த மூலையில் உள்ள அரசாங்கங்கள் வேண்டுமானாலும் தங்களைத் தொடர்புகொள்ளலாம். எங்களால் குறைந்த விலைக்கு அவர்களுக்கு வேண்டிய விண்வெளிச் சேவைகள் செய்து தரப்படும் என விளம்பரப்படுத்தினார். எப்படியாவது யாராவது உதவி செய்ய முன் வரமாட்டார்களா என்பதுதான் அவருடைய எதிர்பார்ப்பாக இருந்தது. அப்போதுதான் அந்தச் செய்தி அவரிடம் வந்து சேர்ந்தது. யாரும் எதிர்பார்க்காத சூழலில் கீழே விழுந்துகொண்டிருந்த மஸ்க்கைக் கை தூக்கிப் பிடித்து நிறுத்திய செய்தி அது.

பூமியின் தாழ்வட்டப் பாதையில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சில சாதனங்களை எடுத்துச் செல்வதற்கான ஒப்பந்ததாரர் ஒருவரை நாசா தேடிக்கொண்டிருப்பதாகவும், அதற்கான ஏலம் நடத்தப்பட உள்ளதாகவும், இந்த ஏலத்தில் வெற்றிபெறும் நிறுவனங்களுக்கு 100 கோடி டாலர்களுக்கும் மேல் முதலீடு செய்ய நாசா தயாராக இருப்பதாகவும் அந்தச் செய்தி சொன்னது. இத்தனைக்கும் இந்தச் செய்தியின் உண்மைத்தன்மை கூட அப்போது யாருக்கும் தெரியவில்லை. விண்வெளித் துறையில் இருக்கும் யாரோ ஒரு சில நண்பர்கள் மூலம் அந்தச் செய்தி மஸ்க்கை எட்டியது.

அவ்வளவுதான் இதற்காகத்தான் காத்துக்கொண்டிருந்தேன் என்பதுபோல மஸ்க் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார். நிதிப் பிரச்னைகளை எல்லாம் தீர்ப்பதற்கு இந்த ஓர் ஒப்பந்தத்தைக் கைப்பற்றினால்போதும் என நிம்மதிப் பெருமூச்சு விட்டார். 100 கோடி டாலர்கள் போதும். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் இரண்டையும் காப்பாற்றி விடலாம். இருக்கும் கடன்களை அடைத்து விடலாம். எப்படியாவது இந்தத் தகவல் உண்மையானதாக இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் அவரது கவலையாக இருந்தது. நாசாவிற்குள் தனக்குத் தெரிந்த அதிகாரிகளைத் தொடர்புகொண்டு விசாரித்தார். வந்த செய்தி உண்மை என்றுதான் தோன்றியது. அறிவிப்பு வெளியாகும் தேதி தெரியவில்லை. ஆனால் அறிவிப்பு வெளியாகும் என்பது மட்டும் உறுதியாகத் தெரிந்தது. உடனேயே என்ன செய்து இந்த ஒப்பந்தத்தைக் கைப்பற்றலாம் என்று ஆலோசிக்கத் தொடங்கினார்.

100 கோடி டாலர் ஒப்பந்தம் சும்மாவா? அமெரிக்காவின் முன்னணி விண்வெளி நிறுவனங்களான போயிங், லாக்ஹீட் மார்ட்டின் உள்ளிட்ட பல நிறுவனங்கள் நிச்சயம் போட்டியில் பங்கேற்கும். அவர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ்ஸால் போட்டியிட முடியுமா? ஏலத்தில் பங்கேற்க வேண்டும் என்றால் ஒரு சில தகுதிகளை அந்த நிறுவனம் பெற்றிருக்க வேண்டும். அந்தத் தகுதிகள் ஸ்பேஸ் எக்ஸிடம் இருக்கிறதா? நாசா வெளியிடும் ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்களின் பட்டியலிலாவது ஸ்பேஸ் எக்ஸ் இடம்பெறுமா என்பதுதான் எல்லாருடைய கேள்வியாகவும் இருந்தது. அதிர்ஷ்டவசமாக ஸ்பேஸ் எக்ஸின் ஃபால்கன் 1இன் வெற்றி அந்த நிறுவனத்தையும் போட்டியில் பங்கேற்க வழிவகை செய்திருந்தது. அதனால் தைரியமாக ஸ்பேஸ் எக்ஸ் களத்தில் குதித்தது. பெரிய நிறுவனங்களுக்கு அனுபவமும், தொடர்பும் இருக்கிறது. ஆனால் அவற்றைக் கண்டு அஞ்சினால் வேலைக்கு ஆகாது. எப்படியாவது சரியான திட்டங்களை வகுத்து, பெரும் நிறுவனங்களை வீழ்த்தி நாசாவின் ஒப்பந்தத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று நினைத்தார் மஸ்க்.

வாஷிங்டனில் தனக்குத் தெரிந்த அதிகாரிகளிடம் எல்லாம் பேசினார். என்ன செய்ய வேண்டும் என்று கேட்டறிந்தார். மற்ற நிறுவனங்களுடன் சேர்ந்து ஸ்பேஸ் எக்ஸையும் முக்கிய நிறுவனமாக வெளிக்காட்டும் வகையில் தனக்குத் தெரிந்த தொடர்புகளை எல்லாம் வைத்து அந்நிறுவனத்தை முதன்மைப்படுத்தினார். தனக்கு இருந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி, முக்கியப் பிரமுகர்களை எல்லாம் சந்தித்து, தங்களால் நாசா நினைக்கும் வேலையைச் செய்து முடிக்க முடியும் என நம்பிக்கையை உருவாக்கினார்

நாசாவின் ஒப்பந்ததைக் கைப்பற்றும் திட்டம் ஒருபக்கம் செயலாக்கத்தில் இருந்த அதே நேரத்தில், திவாலாகும் நிலையில் இருந்த டெஸ்லாவை மீட்பதற்கு இறுதிக் கட்ட முதலீடுகளை ஈர்க்கும் செயலிலும் அவர் இறங்கினார். தனக்குத் தெரிந்த முதலீட்டாளர்களை மீண்டும் சந்தித்துப் பேசினார். முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காகத் தன்னிடம் வங்கியில் இருந்த மொத்த தொகையையும் டெஸ்லாவில் முதலீடு செய்தார். ஸ்பேஸ் எக்ஸின் பெயரில் கடன் வாங்குவதற்கு ஏற்கெனவே நாசாவிடம் விண்ணப்பித்து இருந்தார். அதிர்ஷ்டவசமாக அந்தக் கடனுக்கு அனுமதி கிடைத்தது. அதில் ஒரு குறிப்பிட்ட தொகையையும் டெஸ்லாவில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்தார்.

மஸ்க்கின் உறவினர்கள் வழி சில உதவியும் அவருக்கு வந்து சேர்ந்தது. மஸ்க்கின் தந்தை வழி சகோதரர்கள் சிலர் சோலார் சிட்டி என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர். அதிலும் மஸ்க்குக்குப் பங்குகள் இருந்தன. அவற்றில் சிலவற்றை விற்று, சில தொகையைத் தேற்றி, அதையும் டெஸ்லாவிற்கு வழங்கினார். அதேபோல எவர் ட்ரீம் என்ற கணினித் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனம் ஒன்றையும் அந்தச் சகோதரர்கள் நடத்தி வந்தனர். அதிலும் சில முதலீடுகளை மஸ்க் செய்திருந்தார். அந்த நிறுவனத்தை அப்போது டெல் நிறுவனம் வாங்குவதற்கு முன் வந்தது. இதன்மூலம் சுமார் 15 மில்லியன் டாலர்கள் மஸ்க்குக்குக் கிடைத்தது. இதையும் டெஸ்லாவில் கொட்டினார்.

இப்படியாக 20 லட்சம் டாலர்களை மஸ்க் முதலீடு செய்ததைப் பார்த்துவிட்டு டெஸ்லாவின் அப்போதைய முதலீட்டாளர்கள் சிலர் மேலும் சில தொகையைத் தருவதற்குத் தைரியமாக முன் வந்தனர். அதற்கான சந்திப்பு ஒரு சில நாட்களில் நடைபெற இருந்தது. எப்படியும் முதலீடு கிடைத்து விடும் என்ற சூழல்தான் நிலவியது. ஆனால் அதற்கு முட்டுக்கட்டை போடுவதுபோல ஒரு நிறுவனம், மஸ்க்கிடம் ஆடு புலி ஆட்டம் ஆட முயற்சித்தது. வேண்டேஜ் பாயிண்ட் கேபிடல் பார்ட்னர்ஸ் என்ற அந்த நிறுவனம் ஏற்கெனவே டெஸ்லாவில் முதலீடு செய்திருந்தது. இப்போது முதலீடு கிடைக்காமல் போனால் டெஸ்லா திவாலாகிவிடும் என்று தெரிந்துகொண்ட அந்த நிறுவனம், டெஸ்லாவை திவால் அடைய வைத்து அதைக் கைப்பற்றுவதற்காகப் புதிய பிரச்னை ஒன்றை எழுப்பியது.

முதலீட்டுச் சந்திப்பு நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் மஸ்க்கைத் தொடர்புகொண்ட அந்த நிறுவனம் ஒப்பந்தம் போடுவதில் புதிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. அதனால் சந்திப்பை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கூறியது. இது என்ன புதிய பிரச்னை என குழம்பிய மஸ்க், காரணம் கேட்டு வேண்டேஜ் பாயிண்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆலன் சால்ஸ்மேன் என்பவருக்கு போன் செய்தார். அவரிடம் பேசிய சால்மேன், ‘டெஸ்லாவின் எதிர்காலத் திட்டங்கள் எங்களுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை. உங்கள் நிர்வாகம் மீது எங்களது இயக்குநர்கள் குழுவுக்கு மதிப்புக் குறைந்துவிட்டது. அதனால் முதலீடு தொடர்பாகப் புதிய நிபந்தனைகளை அவர்கள் முன்வைக்கின்றனர். நாம் அதைப் பற்றி ஆலோசனை செய்துவிட்டு பிறகு ஒப்பந்தக் கூட்டத்தைக் கூட்டுவோம்’ என்றார்.

மஸ்க்குக்குத் ஆத்திரம் தாங்க முடியவில்லை. ஆனால் பொறுமையாக இருந்தார். அவர்கள் சொல்வதுபோல பேசித் தீர்த்தபின் ஒப்பந்தம் செய்யலாம். ஆனால் அதற்குள் நிறுவனம் கையை விட்டுப் போய்விடும். அதனால் பிரச்னையை விரைவாக முடிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். அதற்காகத் தான் அனுபவித்து வந்த சலுகைகளையும் விட்டுக் கொடுக்க முன் வந்தார். ‘டெஸ்லா ஒப்பந்தத்தின் மூலம் எனக்குக் கிடைக்க இருக்கும் பலன்களையும் நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள். எனக்கு இப்போது அவசரமாகப் பணம் தேவைப்படுகிறது. உங்களுடைய புதிய நிபந்தனைகள் என்ன என்பதை நாம் பிறகு ஆலோசித்து மாற்றங்கள் செய்யலாம். ஒன்று எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள். இல்லை என்றால் இந்த முதலீட்டுக் கூட்டத்தை நடத்துவதற்காவது அனுமதி தாருங்கள். சில நாட்கள் தாமதித்தாலும் என் நிறுவனம் திவாலாகி விடும். கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள்’ மஸ்க் கெஞ்சாத குறையாகக் கேட்டார்.

ஆனால் ஆலன், மஸ்க்கின் பேச்சுக்குச் செவி சாய்க்கவில்லை. அவர் நாட்களைத் தட்டிக்கழிக்கும் நோக்கத்தில் மஸ்க்கை ஓரிரு வாரங்கள் கழித்துத் தங்களுடைய அலுவலகத்துக்கு வந்து இயக்குநர்கள் குழுவுடன் பேசுங்கள் என அழைப்பு விடுத்தார். மஸ்க் தாமதிக்க விரும்பவில்லை. அடுத்த வாரம் வரை காத்திருக்க வேண்டாம். நாளையே சந்திப்போம் என்றார். ஆனால் ,அதையும் ஆலன் ஏற்கவில்லை. தங்கள் நிறுவனத்துக்கு வேறு நிகழ்ச்சிகள் இருப்பதாகச் சந்திப்பை ஒத்திப்போட முயற்சி செய்தார்.

மஸ்க் கடுப்பானார். ‘பணத்துக்காக என்னைக் காலில் விழுந்து கெஞ்சும்படி ஆலன் அழைக்கிறார். ஆனால், நான் அவ்வாறு செய்ய மாட்டேன்’ என்று கத்தினார்.

மஸ்க்குக்குக்கு அவர் தன்னிடம் ஆட்டம் ஆடுகிறார் என்று புரிந்துவிட்டது. வேண்டேஜ் பாயிண்ட் எப்படியும் இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்த விடாது என்றும் விளங்கியது. ‘டெஸ்லாவைத் திவாலாக்க வேண்டேஜ் பாயிண்ட் முயற்சி செய்கிறது. சில தகிடுத் தத்தங்களைச் செய்து என்னைத் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து அகற்றிவிட்டு, டெஸ்லாவின் பங்குகளைக் கைப்பற்றி அதன் உரிமையாளராக மாறுவதற்கு முயற்சி செய்கிறது. ஒருவேளை வேண்டேஜ் பாயிண்ட் டெஸ்லாவைக் கைப்பற்றினால் அதைத் தொடர்ந்து நடத்தாது. ஒன்று, டிட்ராயிட்டில் உள்ள ஏதாவது ஒரு பெரிய கார் நிறுவனத்திடம் நல்ல விலைக்கு விற்றுவிடும். இல்லை என்றால், மின்சாரக் கார் தயாரிப்பை நிறுத்திவிட்டு, டெஸ்லாவின் தனித்தன்மை வாய்ந்த இயக்கத்தொடரையும், பேட்டரிகளையும் மட்டும் விற்பனை செய்யும். இரண்டுமே என்னுடைய நீண்ட காலக் கனவுகளுக்கு எதிரானது’ என்று கர்ஜித்தார்.

மற்ற முதலீட்டாளர்களுக்கும் வேண்டேஜ் பாயிண்ட் நிறுவனம் மஸ்க்கின் கழுத்தை நெரிக்க முயற்சிப்பது நன்றாகவே புரிந்தது. அந்த நிறுவனம் ஏற்கெனவே இதுபோன்று பின் வாசல் வழி நுழைந்து பல ஆட்சிக் கவிழ்ப்புகளைச் செய்த நிறுவனம்தான். ஆனால் இந்த முறை அதற்குத் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என மஸ்க் முடிவு செய்தார். யாருக்கும் எதுவும் சொல்லாமல் அவர் திடீரென துணிச்சலான காரியம் ஒன்றில் ஈடுபடத் தயாரானார்.

முதலீட்டாளர்கள் சந்திப்பு தொடங்கியது. அன்றைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பு, முதலீடுகளை ஈர்க்கும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. அதனால் வேண்டேஜ் பாயிண்ட் தைரியமாக மஸ்க்குக்கு எதிராகக் கேள்விகளை எழுப்புவதற்குத் தயாராகி இருந்தது. டெஸ்லாவில் முதலீடு செய்திருக்கும் முன்னணி நிறுவனம் ஒன்று கேள்வி எழுப்பினால் அதற்கு மற்ற நிறுவனங்களும் செவி சாய்க்கும். அதனால் அன்றைக்கு ஒப்பந்தம் கையெழுத்தாவதில் தடை ஏற்படும். டெஸ்லாவுக்கு நிதி கிடைப்பதும் தாமதமாகும். அவ்வாறு நடக்கும்பட்சத்தில் அந்நிறுவனம் திவாலாகிவிடும். இதுதான் வேண்டேஜ் பாயிண்ட்டின் திட்டமாக இருந்தது.

ஆனால், கூட்டம் தொடங்கியவுடன் உரையாற்றிய மஸ்க், நான் உங்களிடம் முதலீடுகளை எதிர்பார்க்கவில்லை. எனக்குக் கடன்தான் வேண்டும் என ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். இப்படி ஒரு திருப்பத்தை வேண்டேஜ் பாயிண்ட் எதிர்பார்க்கவில்லை. காரணம், வேண்டேஜ் பாயிண்ட் நிறுவனம் வென்சூர் கேப்பிடல்ஸ் வகை நிறுவனம். அந்த வகை நிறுவனங்களின் சட்ட திட்டங்கள் கடன் ஒப்பந்தங்களில் தலையிடும் வகையில் வடிவமைக்கப்படாமல் இருந்தது. இதனால் அந்தக் கூட்டத்தில் மஸ்க்குக்கு எதிராக வேண்டேஜ் பாயிண்ட் நிறுவனத்தால் எதுவும் செய்ய முடியவில்லை. தங்களுக்கு வேண்டியவர்களை வைத்து ஏதாவது செய்யலாம் என்றால் அதற்கும் போதுமான அவகாசம் கிடைக்கவில்லை. அதனால் வேண்டேஜ் பாயிண்ட்டின் கைகள் கட்டப்பட்டன. இதைத்தான் மஸ்க்கும் எதிர்பார்த்தார்.

இப்போது அங்குக் கூடியிருந்த முதலீட்டாளர்களைப் பார்த்த மஸ்க், ‘நீங்கள் டெஸ்லாவில் முதலீடு செய்ய வேண்டாம். என்னுடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்குக் கடன் கொடுங்கள். எனக்கு 4 கோடி டாலர்கள் கடன் வேண்டும். அந்தத் தொகையை என் பெயரிலேயே டெஸ்லாவில் முதலீடு செய்கிறேன்’ என அங்கேயே அறிவித்தார். இப்படி ஒரு நிகழ்வை அங்கு வந்தவர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. பொருளாதார நெருக்கடியில் எல்லா நிறுவனங்களும் விழித்துக்கொண்டிருந்த நிலையில், நீங்கள் முதலீடு செய்ய வேண்டாம். நல்ல வட்டிக்குக் கடன் கொடுத்தால் போதும் என்று ஒருவர் கேட்டால் நிதி நிறுவனங்கள் சும்மாவா இருக்கும்? எல்லா நிறுவனங்களுமே போட்டிப் போட்டுக்கொண்டு கடன் கொடுக்க முன் வந்தன. கிறிஸ்துமஸ்க்கு முதல் நாளன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. டெஸ்லா திவாலாகும் நிலையில் இருந்து மீட்கப்பட்டது. மஸ்க்கிடம் வெறும் சில ஆயிரம் டாலர்களே எஞ்சி இருந்தன. தன்னிடம் இருந்த 12 மில்லியன் டாலர்களையும், முதலீட்டு நிறுவனங்கள் கொடுத்த கடனையும் டெஸ்லாவில் மொத்தமாக முதலீடு செய்து அந்நிறுவனத்தைக் காப்பாற்றினார்.

அடுத்ததாக ஸ்பேஸ் எக்ஸ்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாசாவின் ஒப்பந்தத்தை நம்பியே பிழைக்குமா, இறக்குமா என்ற நிலையில் இருந்தது. மஸ்க் உள்ளிட்ட அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகள் அனைவரும் ஒருவிதப் பதற்ற நிலையிலேயே இருந்தனர். ஊடகங்கள் ஸ்பேஸ் எக்ஸுக்கு எதிரான மனநிலையை உருவாக்கி இருந்தன. அதனால் நாசாவுக்கு ஸ்பேஸ் எக்ஸின் மீது நம்பிக்கை இல்லை என்றும், அதனால் ஒப்பந்தப் போட்டியில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் வெளியேறிவிட்டதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

ஸ்பேஸ் எக்ஸின் நிறுவனர்களில் ஒருவரான மைக்கேல் கிரிஃபின்தான் அப்போதைய நாசாவின் தலைவராக இருந்தார். அவர்தான் இந்த ஒப்பந்தத்தை முடிவு செய்யும் குழுவின் தலைவராகவும் இருந்தார். ஆனால் அப்போது அவருக்கும் மஸ்க்குக்கும் இடையே பனிப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மஸ்க்கின் அதிரடித் திட்டங்கள், ஆவேசப் பேச்சுகள் அத்தனையும் ஏமாற்று வேலை எனக்கூறி வந்த அவர், மஸ்க்கின் நடவடிக்கைகளை நியாயமற்றது என்றும் விமர்சித்து வந்தார். இதனால் நிச்சயம் இந்த ஒப்பந்தம் ஸ்பேஸ் எக்ஸுக்குக் கிடைக்காது என்றே அனைவரும் முடிவு செய்திருந்தனர். மஸ்க்கே கூட ஸ்பேஸ் எக்ஸின் எதிர்காலம் அவ்வளவுதான் என முடிவு செய்துவிட்டார்.

ஆனால், டிசம்பர் 23, 2008 அந்த அதிர்ச்சிச் செய்தி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு வந்து சேர்ந்தது.

‘மிஸ்டர் மஸ்க்! நாசா உங்களுடன் ஒப்பந்தமிடுவதற்குச் சம்மதம் தெரிவித்திருக்கிறது. இந்தத் தேதியில் நீங்கள் நாசாவின் அலுவலகத்துக்கு வந்து உங்கள் திட்டங்களை எங்களுக்கு விளக்க வேண்டும்’ என்றது அந்தச் செய்தி. உண்மையில் எலான் மஸ்க்கே இதனை நம்பவில்லை. அவர் எவ்வளவோ முயற்சி செய்தும் இறுதி நேரத்தில் தனக்கு அந்த ஒப்பந்தம் கிடைக்காது என்றே நினைக்கத் தொடங்கி இருந்தார். ஆனால், திடீர் திருப்பமாக இந்த ஒப்பந்தம் அவர்களது கைகளுக்கு வந்து சேர்ந்தது.

இதற்குக் காரணம், மைக்கேல் கிரிஃபின் ஸ்பேஸ் எக்ஸுக்கு எதிராக இருந்தாலும் நாசாவுக்கு உள்ளே இருந்த பெரும்பாலான அதிகாரிகள் ஸ்பேஸ் எக்ஸுக்கு ஆதரவாகவே நின்றனர். அதனால் சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சாதனங்களை எடுத்துச் செல்வதற்கு ஸ்பேஸ் எக்ஸ் தேர்வு செய்யப்பட்டது. மைக்கேல் கிரிஃபின் இந்த ஒப்பந்தத்துக்குச் சம்மதித்ததற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. தனது பெயர் விண்வெளி வரலாற்றில் நிலைத்திருப்பதற்காகப் பல்வேறு முயற்சிகளை அவர் மேற்கொண்டு வந்தார். அதில் ஒரு முயற்சியாக மிகப்பெரிய விண்கலம் ஒன்றையும் உருவாக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்தார். அப்போது இருந்த நிலைமையில் அவர் எதிர்பார்க்கும் தொழில்நுட்பங்களைத் தயாரிக்கும் நிலையில் வேறு எந்த நிறுவனங்களும் இல்லை. ஸ்பேஸ் எக்ஸைத் தவிர.

அது மட்டுமில்லாமல் அப்போதைய அதிபர் ஜார்ஜு புஷ்ஷால் நாசாவின் தலைவராக நியமிக்கப்பட்ட கிரிஃபின், 2008இல் ஒபாமா அலை அடிக்கத் தொடங்கியபோது வரப்போகும் தேர்தலில் தன்னுடைய ஆதரவாளர்கள் பதவியை இழந்தால் நாசாவின் தலைவராக நீடிக்க முடியாது என்று புரிந்துகொண்டார். அதனால் தனது பதவிக்காலம் முடிவதற்குள் தனது பெயர் நிலைத்திருக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த அவர், ஸ்பேஸ் எக்ஸிற்குக் தனது ஆதரவுக் கரங்களை நீட்டுவது மூலம் அமெரிக்காவின் எதிர்கால விண்வெளிச் சாதனைகளுக்குத் தொடக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்தவர் என்று பெருமையைப் பெறுவோம் என நம்பியதால் அவர் ஒப்பந்தத்திற்குச் சம்மதித்தார் என்றும் சொல்லப்படுகிறது. எது எப்படியோ ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு நாசாவின் ஒப்பந்தம் மூலம் 106 கோடி டாலர்கள் கிடைத்தது.

இதனால் குஷியான எலான் மஸ்க் 2014ஆம் ஆண்டு கொடுத்த பேட்டியொன்றில், தனது நிறுவனத்தைத் திவாலாகும் நிலையில் இருந்து காப்பாற்றிய மகாராஜன் மைக்கேல் கிரிஃபின்தான் என்று சொல்லிவிட்டார். அதனால் அதற்குமேல் அந்த ஒப்பந்தத்துக்கு மைக்கேல் கிரிஃபின்தான் காரணமா என்று நாம் யோசிக்க வேண்டாம்.

நாசாவின் செய்தி அவரைச் சென்றடைந்தபோது மஸ்க் தனது சகோதரர் கிம்பலுடன் இருந்தார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களுக்கான நிதி கைகளுக்கு வந்தடைந்தவுடன் அவர் உடைந்தே அழுதுவிட்டார். பல கனவுகளுடன் உருவாக்கப்பட்டிருந்த ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் நிதிப் பற்றாக்குறையால் தன் கண் முன்னே சிதைவதை அவரால் பார்க்க முடியாமல் இருந்தது. தனக்கு உதவ ஒருவர் கூட இல்லையா என்ற கேள்வியைத்தான் மனமுடைந்து அவர் எல்லோர் முன்னிலையிலும் முன்வைத்தார். ஆனால் அவருடைய கேள்விக்கு யாரும் எதிர்பாராத தருணத்தில் நாசா பதிலளித்தது. அதனால் ஸ்பேஸ் எக்ஸ்ஸும் மீட்கப்பட்டது. இரண்டு குழந்தைகளில் யாரைக் காப்பாற்றுவது என்று தவித்தவருக்கு இரண்டையும் காப்பாற்றிக் கொடுத்தது காலம். அதற்கான நன்றியைத்தான் கண்ணீரின் மூலம் அவர் சமர்ப்பித்தார்.

உண்மையில் காலம் மட்டுமல்ல, அவரது விடா முயற்சிகளும்தான் அழிவின் விளிம்பில் இருந்த இரு நிறுவனங்களையும் காப்பாற்றிக் கரை சேர்த்தது. இன்றும்கூட தான் சந்தித்த மோசமான காலகட்டம் என்றால் அது 2008தான் என எல்லாப் பேட்டிகளிலும் மஸ்க் தெரிவிக்கிறார். மஸ்க்கின் குணநலன் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள நாம் 2008இன் காலக்கட்டத்தை எடுத்துப் பார்த்தாலே போதும் என்கின்றனர் அவரது நெருங்கிய நண்பர்கள். ஒன்றுமே இல்லாமல் அமெரிக்காவுக்கு வந்த ஒருவர், தான் முதலில் தொடங்கிய இரு நிறுவனங்களில் இருந்தும் துரத்தப்பட்ட ஒருவர், ஊடகங்களால் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளான ஒருவர், வாழ்க்கையே அழிந்துபோகும் நிலையில் இருந்த ஒருவர், எப்படி எல்லாவற்றையும் மீட்டெடுத்தார் என்ற பாடத்தைத்தான் அவரது வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது. அதுதான் மஸ்க் என்ற ஆளுமையை மற்றவர்கள் மெய்சிலிர்த்துப் பார்க்கும்படி வைத்திருக்கிறது.

எல்லாமும் சிறப்பாக அமைந்த சூழலில் ஒருவர் எப்படி உயர்ந்தார் என்பது அவரது ஆளுமையை வெளிக்கொணராது. எதுவும் வாய்க்காத அவநம்பிக்கைச் சூழலில் ஒருவர் எப்படி நிலைத்து இருந்தார் என்பதுதான் அவரது ஆளுமையை, மன திடத்தை, மன உறுதியை வெளிக்காட்டும். 2008இல் மஸ்க் இருந்ததுபோன்ற ஓர் அழுத்தத்தில் மற்றவர்கள் இருந்திருந்தால் அவர்கள் எடுக்கும் முடிவுகள் நிச்சயமாக நாசகரமானதாகவே இருந்திருக்கும். மஸ்க்கும் உணர்ச்சி கொப்பளிக்கும் மனநிலையைக் கொண்டவர்தான். ஆனால், அவர் எடுத்த முடிவுகள் தெளிவானதாகவும், நீண்ட காலத்தைக் கருத்தில் கொண்டே இருந்தது. எவ்வளவுக்கு எவ்வளவு நிலைமை அவரை வாட்டியதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவரது வலிமை வெளிப்பட்டது. முன்பே அவர் கூறியதுபோல, வலிகளைத் தாங்கும் அவரது பண்பே அவருக்கு வெற்றியைக் கொண்டு வந்து சேர்த்தது.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *